அமரன் - வெளியான முதல் நாளே மதிய வேளை காட்சியில் பார்த்த படம். இரண்டு அச்சங்களுடன்தான் படத்துக்கு சென்றேன்.
வீர தீர செயலுக்காக வழங்கப்படும் அசோகச் சக்கரா விருதை இறப்பிற்குப் பின் பெற்ற மேஜர் முகுந்த் வரதராஜனின் கதை என்பதால் பழைய விஜயகாந்த், அர்ஜூன் படங்கள் போல ஓவர் டோஸாக தனி நபர் சாகசத்தை முன்னிறுத்தி ஒட்டு மொத்த காஷ்மீர் மக்களையும் இந்தியாவிற்கு எதிரானவர்களாக சித்தரிப்பாவர்களோ என்பது முதல் அச்சம்.
இரண்டாவது அச்சம் ? கடைசியில் சொல்கிறேன்.
பிழைகளை முதலில் சொல்லி விட்டு திரைப்படம் பற்றிய அனுபவத்தை பிறகு எழுதுகிறேன்.
காஷ்மீர் பிரச்சினை பற்றி சிவகார்த்திகேயனிடம் சுருக்கமாக ராகுல் போஸ் (விஸ்வரூபம் படத்து வில்லன், இப்படத்தில் ராணுவ கர்னல்) சொல்லும் போது காஷ்மீரை இந்தியாவை இணைக்க காஷ்மீர் மன்னர் ஹரிசிங் முதலில் விரும்பவில்லை, பாகிஸ்தான் படையெடுத்த போது வேறு வழியில்லாமல் நேருவோடு பேசினார் என்று சரியாக சொன்னாலும் காஷ்மீர் மக்களின் தலைவர் ஷேக் அப்துல்லா இந்தியாவுடன்தான் இணைய வேண்டும் என்று வற்புறுத்தினார் என்பது விடுபட்டு விட்டது.
சாலையில் நிற்கும் பெண்களின் கணவர்களோ அல்லது சகோதரர்களோ அல்லது தந்தைகளோ தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள் அல்லது தீவிரவாதிகளாக மாறினார்கள் என்று சொல்கிறார். காணாமல் போன வாலிபர்களில் பலரும் ராணுவத்தால் கூட்டிச் செல்லப்பட்டவர்களும் அடக்கம் என்ற யதார்த்தம் சொல்லப்படவில்லை.
வி.பி.சிங் காலத்தின் உள்துறை அமைச்சர் முப்தி முகமது சையதின் மகள் ரூபையா சையது கடத்தப்பட்டு தீவிரவாதிகள் விடுவிக்கப்பட்ட பின்புதான் பிரச்சினை தீவிரமானது என்று சொல்லப்படுகிறது. காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தபோது இந்தியா அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் அலட்சியப்படுத்தப்பட்டதல்லவா பிரச்சினையின் வேர்!
காஷ்மீரில் மக்களின் ஆயுதமாக கற்கள் மாறியது என்பது உண்மை. வேறு ஆயுதங்கள் இல்லாமல் பல சமயம் தற்காப்பிற்காகவும் பயன்படுகிறது. ஆனால் தீவிரவாதிகளை பாதுகாக்க மட்டுமே கற்கள் வீசப்படுவது போல படத்தில் காண்பிக்கப்படுகிறது.
இவை படத்தின் பிழைகள்.
இனி படத்தின் அனுபவத்திற்கு வருகிறேன்.
ராணுவ
முகாம் ஒன்றின் மீதான ஒரு தாக்குதலோடு தொடங்கும் படத்தில் சிவகார்த்திகேயன் அடிபட்டு
முகமெங்கும் ரத்தம். ஆனால் அது உண்மையான ரத்தமில்லை என்று அறியும் அவரது சகாக்கள் திகைத்து
நிற்க தாக்குதலே உண்மையில்லை என்றும் அந்த
குழு செய்த தவறுகளையும் அவர் பட்டியல் இடுவார். அப்போதிலிருந்து வரை இறுதி வரை படம்
விறுவிறுப்பாகவே செல்லும்.
மேஜர்
முகுந்த் வரதராஜனின் ராணுவ வாழ்க்கை, சொந்த வாழ்க்கை இரண்டும் சமச்சீரான விகிதத்தில்
கலந்து தரப்பட்டுள்ளது. சாய் பல்லவியுடனான காதல், அதில் வரும் பிரச்சினைகள், இந்து
முறைப்படியும் கிறிஸ்துவ முறைப்படியும் முடியும் திருமணங்கள், ராணுவப் பணி காரணமாக
குடும்பத்தை பார்க்க முடியாமல் இருப்பது என்பது ஒரு பகுதி என்றால் ஜெய்ஷ்.இ.முகமது
கமாண்டர் அல்தாப் பாபாவை சுற்றி வளைத்தும் பிடிக்க முடியாதது, பின்பு இன்னொரு ஆபரேஷனில்
சுட்டுக் கொல்வது, கமாண்டர் பொறுப்பை ஏற்கும் ஆசிஃப் வானியின் தாக்குதல், இறுதித் தாக்குதல்
என்று இன்னொரு பகுதி செல்லும்.
கொல்லப்பட்ட
ராணுவ அதிகாரியின் கதை என்பதால் “எனக்கு என்ன ஆனாலும், இறந்தே போனாலும் அழக்கூடாது”
என்று சிவகார்த்திகேயன் மனைவியிடம் உறுதிமொழி
கேட்கும் போதே கிளைமேக்ஸில் சாய்பல்லவிக்கு நடிப்பதற்கான பெரிய ஸ்கோப் உள்ளது என்பது
தெரிந்து விடுகிறது.
ஆசிஃப்
வானியை பிடிப்பதற்கான ஆபரேஷனில் சிவகார்த்திகேயனும் அவரது சகாவும் ஆசிப் வானியின் தாக்குதலில்
கொல்லப்பட இவர்களின் தாக்குதல்களில் ஆசிப் வானியும் கொல்லப்பட முகுந்த் வரதராஜனுக்கு
இறப்புக்குப் பிந்தைய அசோக சக்கரா விருது தரப்படுகிறது,
தாக்குதல்கள் பில்ட் அப் இல்லாமல் , இயல்பாக இருப்பது ஒரு நல்ல அம்சம்.
முகுந்த்
வரதராஜன் பாத்திரத்தில் சிவ கார்த்திகேயன் கச்சிதமாக பொருந்துகிறார். அவரது திரை வாழ்வில்
அவருக்கு இது முக்கியமான திரைப்படமாக இருக்கும்.
படத்தில்
மிகச் சிறப்பான திறமையை வெளிப்படுத்தியவர் சாய் பல்லவி என்றுதான் சொல்ல வேண்டும். சிவ
கார்த்திகேயன் காதலை வெளிப்படுத்தும் நேரத்தில் சேட்டன் என்றழைத்து என் அம்மா, அப்பாவை
சேட்டன் என்றுதான் சொல்வார் என்ற குறும்பாக இருக்கட்டும், பட்டாளத்துக்காரனுக்கு கல்யாணம்
செய்து தர மாட்டேன் என்று அப்பா பிடிவாதம் பிடிக்கையில் காண்பிக்கும் சோகம், “முகுந்து”
என்றழைக்கும் நேசம், பிரிவின் துயரை சொல்வதும் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கையில்
தாக்குதல் நடக்க மறுமுனையில் கேட்கும் குண்டு சத்தங்களை கேட்டு பதறுவதும் ஐ யம் ஃபைன்
என்று முகுந்த் சொல்கையில் வெடித்து அழுவதும் மரணச் செய்தி கேட்டதும் அழுகையை கட்டுப்படுத்திக்
கொள்வதாக இருக்கட்டும் அசத்துகிறார் சாய் பல்லவி. அடுத்த தேசிய விருது அவரை தேடி வர
வேண்டும்.
பின்னணி
இசை சிறப்பாக உள்ளது. பாடல்கள் ஏனோ என்னை ஈர்க்கவில்லை, வயதானது கூட காரணமாக இருக்கலாம்.
மரணத்துக்கு பிந்தைய காட்சிகள் எல்லாம் மிகவும் இயல்பாக நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக
அமைந்திருந்தது.
சில
பிழைகள் இருந்தாலும் பார்க்க வேண்டிய படம்தான்.
பிகு:
இரண்டாவது அச்சம் என்னவென்று சொல்லவில்லையே என்று உங்கள் மனதின் குரல் ஒலிப்பது எனக்கு
கேட்கிறது. இப்பதிவுக்கான படத்தை கூகிளில் தேடுகையில் இதோ கீழே உள்ள படமும் கிடைத்தது.
ஆமாம்.
கார்த்திக் நடித்த அந்த மரண மொக்கை படமான “அமரன்” படத்தை முதல் நாளே பார்த்து நொந்தது
நினைவுக்கு வந்தது. அந்த மொக்கை படத்தின் பெயரில் இந்த படமும் வருகிறதே, எப்படி இருக்குமோ
என்பதுதான் இரண்டாவது அச்சம்.