Saturday, October 2, 2010

கிராமத்து வரவேற்பு - சரியான கலக்கல்

பணியில் சேர்ந்த இருபத்தி ஐந்து  ஆண்டுகளில்  எத்தனையோ
தோழர்கள் பணி நிறைவு பெற்றுள்ளனர். பொதுவாக தோழர்கள்
ஒய்வு பெறும் நாளன்று பாராட்டு விழாக் கூட்டம் நடக்கும். நல்ல
வார்த்தைகள் பேசி நினைவுப்பரிசு அளித்து வீடு வரை கொண்டு
போய்விடுவோம். வீடு வரை செல்லும் தோழர்களின் எண்ணிக்கை
ஒய்வு பெறும் தோழர்களைப் பொறுத்து  மாறும். அவர்களது
வீட்டில் அளிக்கும் சிற்றுண்டியை சாப்பிட்டு விட்டு அரை மணி
நேரம் அல்லது ஒரு மணி நேரத்தில் திரும்பி விடுவோம். இதுதான்
வழக்கமான நடைமுறை.

நேற்று முன்தினம் ராமதாஸ் என்ற தோழர் ஒய்வு பெற்றார்.
வாட்ச்மேனாக பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரர். அவருக்கும்
அலுவலகத்தில் நிர்வாகம் சார்பாக ஒரு விழா. அன்று ஒரு மூத்த
அதிகாரி ஒருவரும் ஒய்வு பெற்றதால் வெளிச்சம் என்னவோ அவர்
மீதே அதிகமாக இருந்தது.பின்பு அவர் பணியாற்றிய எங்களது
பிரிவில் ஒரு விழா. அலுவலக நேரம் முடிந்த பின்பு   சங்கத்தின்
சார்பில்  ஒரு  விழா. அங்கே உண்மையான உணர்வுகள்
பகிரப்பட்டு அவரது ஊருக்குப் புறப்பட்டோம்.

அப்போது அயோத்தி ஆலமரத்தடி தீர்ப்பு வந்திருக்கவில்லை.
அதனால் பெண் தோழர்கள் வீட்டிற்கு புறப்பட ஆண்கள் மட்டும்
ஒரு வேனிலும் இரண்டு சக்கர வாகனங்களிலும் புறப்பட்டோம்.
போகும் வழியெல்லாம் போலீஸ் படை, எவனாவது மாட்டினால்
அடித்து நொறுக்கும் வெறியோடு.

அவரது கிராமத்து எல்லை நெருங்கியபோது  ஆச்சர்யம் தொடங்கியது.
பேண்டு முழக்கத்தோடு கிராமத்து மக்களும் உறவினர்களும்
காத்திருந்தனர். அங்கேயே அவருக்கு மாலை, சால்வை எல்லாம் போட்டு
மோதிரம் அணிவித்து  உறவினர்கள் கௌரவிக்க பேரக்குழந்தைகள்
பூங்கொத்து அளித்தன. அவரது வீடு வரை ஊர்வலமாகவே அழைத்து
வரப்பட்டார்.

வீட்டில் நுழையும் முன்பு ஒரு பிரம்மாண்ட ஆளுயர மாலை அணிவிக்க,
பட்டாசின் சத்தத்தை மேளத்தின் முழக்கம் மூழ்கடித்தது. அவரது வீட்டு
மாடியில் நான்காவது கூட்டம். அங்கே அலுவலகத் தோழர்கள்  அனைவருக்கும்
கதராடை அணிவிக்கப்பட்டது. திருமண விருந்து போல அனைவருக்கும்
சிறப்பான விருந்து அளிக்கப்பட்டது.

எனது இருபத்தி ஐந்து ஆண்டு பணிக்காலத்தில்  ஒய்வு பெற்று வீடு திரும்பும்
ஒரு தோழருக்கு இப்படி ஒரு வரவேற்பளிப்பு அளிக்கப்பட்டு நான்
பார்த்ததில்லை.  இதிலே முக்கியமாய் சொல்ல வேண்டிய விஷயம்,
தோழர் ராமதாசிற்கு மகன்கள் கிடையாது. இரு மகள்கள்தான். அத்தனை
ஏற்பாடுகளையும் ஆசையாய் செய்திருந்தது அவரது  மறுமகன்கள்தான்.

பாசத்தை பரிமாறிக் கொண்ட அந்த வரவேற்பு என்றென்றும்
நினைவில் நிலைத்திருக்கும்.

 

2 comments:

  1. திரு,ராமதாஸ் அனைவரிடமும் ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் நல்ல மனிதராக இருந்தார்.அவர் பரிமாறிக்கொண்டது பாசம்....!
    அதிகாரியிடம் மற்றவர்கள் பரிமாறிக்கொண்டது வேஷம்...!

    கேஎஸ்ஆர்.
    -- ஏ.கே.ம்.,

    ReplyDelete
  2. மிகவும் சரியான வார்த்தை

    ReplyDelete