இந்தோனேஷியாவில் தற்போது நிகழ்ந்த சுனாமி தாக்குதல்கள் 2004 ல் தமிழகத்தின்
கடற்கரையை தாக்கிய சுனாமி, அப்போது நாங்கள் செய்த நிவாரணப்பணிகள் பற்றிய
நினைவுகளை கிளறி விட்டது. கற்பனை செய்ய முடியாத அந்த பேரழிவு மனித
நேயம் இன்னமும் உயிர்ப்போடு உள்ளது என்பதையும் நிரூபித்தது.
அந்த ஆண்டு சி.ஐ.டி.யு சங்கம் வெண்மணி நினைவு தினத்தை ஒட்டி மாநிலம் தழுவிய ஒரு பிரச்சார நடைப்பயண இயக்கத்தை நடத்தி வெண்மணி செல்வதாக
திட்டமிட்டிருந்தார்கள். இப்பயணத்தில் நீயும் வருகின்றாயா என்று சி.ஐ.டி.யு வின்
வேலூர் மாவட்டச்செயலாளர் தோழர் காசிநாதன் கேட்டார். ஆனால் அப்பயணம்
புறப்பட்ட நாளில்தான் பதவி உயர்வு முடிவுகள் வர வேண்டிய நாள். அதன் பின்பு
பதவி உயர்வு பெற்றவர்களுக்கான பணியமர்த்தல் குறித்து நிர்வாகத்துடன் பேசி
முடிவு செய்ய வேண்டியிருக்கும் என்பதால் அப்பயணத்தில் இணைய வாய்ப்பில்லை
என்று கூறி விட்டேன். ஆனால் அது வரை வெண்மணி சென்றதில்லை என்பதால்
எப்படியாவது அந்த ஆண்டு செல்ல வேண்டும் என்ற வேகம் மட்டும் உருவானது.
பொறுப்பாளர்கள் கலந்து பேசினோம். பதவி உயர்வு பணியமர்த்தல் வேலை 22 தேதிக்குள் முடிந்து விடும். எனவே 24 அன்று புறப்படுவது, அதனை ஒரு சிறு
இயக்கமாக நடத்துவது என்றும் முடிவெடுத்தோம். 24 காலையில் கோட்ட அலுவலகத்தில் ஒரு கூட்டம். சுதந்திரப் போராட்ட வீரரும் குடியாத்தம் தொகுதியின்
முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான தோழர் கே.ஆர்.சுந்தரம் எழுச்சி மிக்க ஒரு
உரையாற்றி பயணத்தை துவக்கி வைத்தார். தோழர் கே.ஆர்.எஸ் அவர்கள் இறுதியாக
பங்கேற்ற எங்கள் சங்க நிகழ்வு அதுதான்.
எங்களின் தற்போதைய தென் மண்டல பொதுச்செயலாளரும் அன்றைய துணைத்
தலைவருமான தோழர் கே.சுவாமிநாதனும் எங்களோடு வந்திருந்தார். போளூர்,
திருவண்ணாமலை, விழுப்புரம், பண்ருட்டி, கடலூர், புதுவை ஆகிய மையங்களில்
ஊழியர் கூட்டம் நடத்தி விட்டு நள்ளிரவு திருவாரூர் சென்றோம்.
மறுநாள் வெண்மணி சென்று தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு ( வெண்மணி அனுபவங்கள் பற்றி தனியாக விரிவாக எழுதிட வேண்டும்) வேலூர் திரும்பும் வழியில் பூம்புகார் சென்றிருந்தோம். கடற்கரை அருகே இருந்த மீனவர் குடியிருப்பைப் பார்த்து புயல் வந்தால் இவர்களின் நிலை என்ன ஆகும் என்றெல்லாம் பேசிக்கொண்டோம். வேளாங்கண்ணி செல்லலாமா என்று ஒரு தோழர் கேட்ட போது மறுநாள் செயற்குழு என்று முன்னரே முடிவெடுத்து கடிதம் அனுப்பியிருந்ததால் நேரமாகும் என்று அவர்
விருப்பத்தை நிராகரித்து நாகை, புதுவை வழியாக திரும்பிக் கொண்டிருந்தோம்.
கடைசியில் விழுப்புரத்தில் வாகனம் பழுதானதால் சரி செய்ய தாமதமானதால்
செயற்குழுவை ஒத்தி வைக்க நேரிட்டது ஒரு தனிக்கதை.
வீட்டிற்கு வரும்போது காலை இரண்டு மணி இருக்கும். எட்டரை மணிக்கு தொலைபேசி உறக்கத்தை கலைத்தது. திருவண்ணாமலையில் இருந்த கோட்டத்
துணைத்தலைவர் தோழர் அழகுதுரை கலவரத்தோடு பேசினார். தோழரே டி.வி
பார்த்தீர்களா, நேற்று நாம் சென்ற இடங்கள் எல்லாம் இன்று அழிந்து போயிருக்கிறது என்று. கடல் சீற்றம் என்று மட்டுமே அப்போது தொலைக்காட்சியில் சொல்லிக் கொண்டிருந்தார்கள், பாதிப்பு பற்றிய சரியான புரிதல் யாருக்கும் இல்லை. அடுத்த
தொலைபேசி வேளாங்கண்ணி செல்லலாம் என்ற தோழரிடமிருந்து. ஒரு வேளை
நாம் அங்கே சென்று தங்கியிருந்தால் நம் நிலைமை என்னவாகியிருகுமோ என்ற
கேள்வியே இருவர் மனதிலும் மேலோங்கியிருந்தது.
புதுவையிலிருந்த மூத்த தோழர் ஆர்.பி.எஸ் (தற்போது இவர் மறைந்து விட்டார்) அடுத்து பேசினார். பலரையும் அரசு புதுவைப் பலகலைக்கழகத்தில் தங்க வைத்துள்ளார்கள். ஏராளமான குழந்தைகள் உள்ளனர். அவர்களின் உணவிற்கான
ஏற்பாடு எதுவும் இல்லை என்று கூறிய அவரே பிரெட் பாக்கெட்டுகள் வாங்கி தரலாம் என்று யோசிக்கிறோம் என்றார். தாராளமாக செய்யுங்கள், பணத்தைப்பற்றி கவலை
வேண்டாம் ஏதாவது ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்றேன். 1000 பிரெட் பாக்கெட் வாங்கி பல்கலைக்கழகத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டபோது நேரம் 11 .30
அன்று மாலையே வேலூரிலிருந்த பொறுப்பாளர்கள் அவசரமாகக் கூடி நம்மால்
இயன்ற நிவாரணப் பணிகளை மேற்கொள்வது என்று முடிவெடுத்து தங்களால்
இயன்ற பங்களிப்பை அளிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை உறுப்பினர்களுக்கு
கையால் எழுதிய சுற்றறிக்கை மூலம் அன்றே அனுப்பினோம். மறுநாள் பாதிக்கப்
பட்ட பகுதிகளுக்கு நேரில் செல்வது என்றும் முடிவெடுத்தோம். இதற்கிடையில் எங்கள் அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் கே.வேணுகோபால் ஹைதராபாத்
நகரிலிருந்து தொலைபேசியில் அழைத்தார். நம் ஊழியர்கள் யாருக்காவது ஏதேனும்
பாதிப்பு உள்ளதா என்று அக்கறையோடு விசாரித்த அவர் நிவாரணப் பணிகளில்
நாம் முழுமையாக ஈடுபட வேண்டும் என்றும் நிர்வாகத்தையும் இப்பணியில்
இணையுங்கள் என்றும் அவர் வழி காட்டினார். அதன் படி கோட்ட மேலாளரிடம் பேச உணவளிக்கும் பணியில் எல்.ஐ.சி நிர்வாகம் தன்னை இணைத்துக் கொண்டது.
மீண்டும் தோழர் ஆர்.பி.எஸ் தகவல் அளித்தார். மாற்று உடை கூட இல்லாத நிலையில் பலர் உள்ளனர். குளிர் காலமாக உள்ளதால் போர்வைக்கான தேவை
அதிகமாக உள்ளது. அதே நேரம் அங்கே உள்ள கடைகள் கூடுதல் விலைக்கு விற்க
ஆரம்பித்து விட்டதால் வேலூரிலிருந்தே போர்வைகள் வாங்கி வந்தால் சரியாக
இருக்கும் என்றும் கூறினார்.
மறுநாள் கோட்ட அலுவலகத்தில் ஒரு அஞ்சலிக்கூட்டம் நடத்தி பங்களிப்பிற்கான
அறைகூவலையும் அளித்தோம். பல தோழர்கள் அதிலும் பெரும்பாலும் மகளிர்
தோழர்கள் அப்போதே தங்கள் கையில் இருந்த பணத்தை அளித்தார்கள். வங்கியில்
இருந்தும் பணத்தை எடுத்துக் கொண்டு கடைப்பக்கம் வந்து போர்வை, லுங்கி, புடவை போன்ற பொருட்களை வாங்கினோம். எங்கள் நோக்கம் அறிந்து மிகவும்
குறைவான விலைக்கே அளித்தார்கள். ஹரியானா ஹாண்ட்லூம் என்ற ஒரு சர்தார்ஜியின் கடையின் உரிமையாளரான சீக்கியப் பெரியவர் கடைசியாக ஒரு
25 சால்வைகளை கட்டிக் கொடுத்து இது எனது காணிக்கையாக இருக்கட்டும் என்று
தூய தமிழில் கூறினார். அப்பகுதி நடை பாதை வியாபாரிகள் குழந்தைகளுக்கான
ஆயத்த ஆடைகளை மிகவும் சொற்பமான விலைக்கு தந்தார்கள்.
டாடா சுமோ வாகனத்தின் மேற்கூரை முழுவதுமும் பின்பக்கம் முழுவதும்
பொருட்களை நிரப்பி நாங்கள் நால்வர் (நான், தோழர்கள் நாராயணன், தசரதன்,
ரமேஷ் பாபு ) புதுவை நோக்கி புறப்பட்டோம். அன்று புதுவை சென்று விட்டு
மறுநாள் கடலூர் சிதம்பரம் பார்த்து விட்டு திரும்புவது எங்களது திட்டம்.
சுனாமி தாக்கிய பகுதிகளை நோக்கிய பயணம் அவ்வளவு சுலபமாக முடியப்போவதில்லை என்று அப்போது நாங்கள் அறிந்திருக்கவில்லை.
நினைவலைகள் அவ்வளவு சீக்கிரம் ஓயாது
parattugal thozhargale ungalin pathivu arimai parattugal
ReplyDeletepolurdhayanithi
parattugal
ReplyDeletepolurdhayanithi