Friday, September 10, 2010

சமத்துவ மயானமும் மஞ்சள் கண்ணாடி கலைஞரும்

 தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் வேலூர்
மாவட்ட அமைப்பாளர் தோழர் குபேந்திரன் செப்டம்பர்
ஒன்பது அன்று மாநிலக்குழு முடிவின்படி அனைத்து
நகராட்சிகளிலும் மின் மயானம் அமைக்க வேண்டும்,
கிராமப்பகுதிகளில் சமத்துவ மயானங்கள் அமைக்க
வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்
எனவும் அதற்காக ஒரு பிரசுரமும் காவல்துறை
அனுமதிக்கான கடிதமும் தயார் செய்யுங்கள் என்று
கூறினார்.

ஒரு வினாடி இது என்ன கோரிக்கை என்று யோசித்தேன்.
இது  தொலைநோக்குப் பார்வையுடனான அற்புதமான ஒரு
கோரிக்கை என்பது அடுத்த கணம் புரிந்தது. தமிழகத்தின்
பல ஜாதி மோதல்களுக்கும் தீண்டாமைக் கொடுமைகளுக்கும்
மையக் காரணியாக மயானங்களே இருந்து வருகிறது. தலித்
மக்கள் இறந்து போனால் புதைப்பதற்கோ எரிப்பதற்கோ
இன்னமும் மயானங்கள் இல்லாத நிலை பல  கிராமங்களில்
உள்ளது. அப்படி இருக்கும் மயானங்களுக்கு பாதை மறுக்கப்படும்
நிலையும் உள்ளது.

நம் வாழ்வில் காணா  சமரசம் உலாவும் இடமே என மயானங்கள்
பற்றி பாடப்பட்ட பாடல் பொய்யாகிப் போய் பல்லாண்டுகள் ஆகி
விட்டது. ஜாதிக்கொரு சுடுகாடு என்பதுதான் இன்றைய யதார்த்தம்.
கிராமங்கள் மட்டுமல்ல நாகரீகம் வளர்ந்ததாக சொல்லப்படும்
நகரங்களில் கூட இதுதான் நிலை.

தலித் மக்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களில் மயான
உரிமை மறுக்கப்படுவதும் ஒரு முக்கியமான வகை. உயிருடன்
இருக்கும் ஒரு தலித் இறந்து போனால் அவரது சடலம்
ஆதிக்க சாதி மக்கள் வசிக்கும் தெருக்களின் வழியாக
எடுத்துச்செல்ல அனுமதி கிடையாது. சடலத்தை தெருவில்
வைத்து எத்தனையோ மோதல்கள் நடந்திருக்கின்றன.

பெரம்பலூர் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் இது போன்ற
தடை இருந்த காரணத்தால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த
ஒரு பெரியவரை அவர் இறந்து விட்டால் பல கிலோ மீட்டர்கள்
சுற்ற வேண்டியிருக்கும் என்பதால் உயிருடன் இருக்கும்போதே
சுடுகாட்டிற்கு அழைத்துச்சென்ற அவலம் குறித்து ஒரு
கூட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர்
தோழர் சம்பத் சொன்னதும் நினைவிற்கு வருகின்றது.

நகர்ப்புற விரிவாக்கத்தால் சுடுகாடுகளையும் மனை போட்டு
விற்பதும் தலித் மக்களின் சுடுகாடுகள் ஆக்கிரமிக்கப்படுவதும்
அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த சூழலில்
நகர்ப்புறங்களில் மின் மயானம், கிராமப்புற ஜாதிவாரி
மயானங்களை மாற்றி சமத்துவ மயானம் என்ற கோரிக்கை
பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவும்.

தமிழக அரசு இதனை ஏற்று அமுல்படுத்துவது மாநிலத்திற்கு
நல்லது. ஆனால் தமிழக அரசு இக்கோரிக்கையை எப்படி
அணுகும்? வழக்கம் போல் இவர்களுக்கு இதேதான் வேலை
என்று ஒதுக்கித்தள்ளுமா? அல்லது மீண்டும் கம்யூனிஸ்டுகள்
போர்க்களம் புகுந்து விட்டார்கள், தடியடிக்கு தயாராகுங்கள்
என காவல்துறைக்கு ஆணையிடுமா?

மார்க்சிஸ்டுகள் மீது காழ்ப்புணர்வு என்ற மஞ்சள் கண்ணாடி
அணிந்திருப்பதால் கலைஞருக்கு எல்லாமே தவறாகத்தான்
தெரிகிறது. மஞ்சள் துண்டு அணியத் தொடங்கியதும் அவரது
பகுத்தறிவுப்பார்வை மங்கத்தொடங்கியது.  மஞ்சள் கண்ணாடி
அவரை பதட்டமடையச்செய்கிறது.

சற்று நிதானமாக சிந்தித்தால் இக்கோரிக்கை எத்தனை
நன்மைகளை உருவாக்கும் என்பது புரியும். பகுத்தறிவுப்
பகலவன், சமத்துவப் பெரியார், அம்பேத்கார் சுடர் என்று
அழைக்கப்படும் முதல்வர் என்ன செய்யப் போகிறார்?

(கிராம மயானமும் சென்னை மின் மயானமும்)

No comments:

Post a Comment