Monday, June 7, 2010

அயோக்கியத்தனம் என்பது மென்மையான வார்த்தை






அயோக்கியத்தனம் என்பது மென்மையான வார்த்தை

நெஞ்சு பொறுக்கவில்லை இந்த நிலை கெட்ட    தீர்ப்பை    படிக்கையிலே. 25 வருடங்கள் கடந்த பின்பு இப்படி ஒரு தீர்ப்பு! போபால் விஷ வாயு விபத்திற்குக் காரணமான யூனியன் கார்பைட் கம்பெனிக்கு வெறும் ஐந்து லட்சம் ருபாய் அபராதம், எட்டு பேருக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை. அந்தப் பட்டியலில் அமெரிக்க முதலாளி வாரன் ஆண்டர்சன் பெயரே இல்லை. அந்த நீதிபதி  மன்மோகனை விட மிகப்பெரிய அமெரிக்க விசுவாசி போலும்.  அந்த எட்டு பெரும் கூட இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் பிணையில் வெளியே வந்து விட்டனர்.

15 ,000  பேர் உயிரைக்குடித்து பல லட்சம் மக்களை முடமாக்கி இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்குப்பின்னும் இன்னமும் நடைப்பிணமாய்  அலைய விட்டுள்ளது யூனியன் கார்பைட் கம்பெனி. அதற்கு இன்று பரிசு கொடுத்துள்ளது போபால் நீதிமன்றம். நீதியின் பெயரால், சட்டத்தின் பெயரால் புரிந்துள்ள
 அராஜகம் இது. எங்களுக்கு நியாயம் வேண்டும் என்ற பாதிக்கப்பட்ட மக்களின் 
குரல் எப்படி மத்தியஅரசின் செவிகளை எட்டவில்லையோ அது போல் நீதி மன்றத்தின்
 காதுகளுக்கும்  கேட்கவில்லை. கண்கள் மறைக்கப்பட்ட நீதி தேவதையின் செவிகளும் அடைக்கப்பட்டிருந்ததோ, அதனால்தான் சாமானிய மக்களின் மரண ஓலம் கேட்கவில்லையோ!  470 மில்லியன் டாலர் வாங்கி அத்தோடு கைகழுவிக் கொண்ட மத்தியரசு அதனையும் கூட பாதிக்கப்பட்ட ஆறு லட்சம் மக்களுக்கு முறையாக அளிக்கவில்லை. இந்தப் பணத்தில் எத்தனை அரசியல்வாதிகள், அதிகாரிகள் தங்களது எதிர்காலத் தலைமுறையின் வளமான வாழ்வை உறுதி செய்து கொண்டார்களோ?

இதனை அயோக்கியத்தனம் என்றோ மோசடி என்றோ அழைப்பது மென்மையாகவே இருக்கும். இந்த தீர்ப்பிற்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டம் என்பது அவசியம்.

இன்னொரு முக்கியமான விஷயமும் உள்ளது. போபால் லட்சணமே இப்படி என்றால் நாளை அணு விபத்து ஏற்பட்டால்?

இப்படி யாரும் கேட்கக்கூடாது என்பதற்காகவே அணுசக்தி பொறுப்பு மசோதாவை நிறைவேற்றத் துடிக்கிறது மத்தியரசு. என்னவொரு தொலைநோக்குப் பார்வை!  திட்டமிட்ட படுகொலை நிகழ்த்த துடிக்கிறது அரசு,

அய்யா  கோடீஸ்வர எம்.பிக்களே, ஒரு    வேளை   உங்களுக்கு மனசாட்சி இருந்தால் அன்று ஒரு நாள் மட்டுமாவது நாடாளுமன்றம் போய் எதிர்த்து ஒட்டு போடுங்களேன்! இந்த வேண்டுகோளைக்கூட  அண்ணன் அழகிரியிடம் முன்வைக்க பயமாயுள்ளது.



  


No comments:

Post a Comment