Sunday, December 22, 2024

நல்லா மதிக்கிறீங்கடா அண்ணல் அம்பேத்கரை!

 


பில்லா ரங்கா இரிமினல் கூட்டாளிகளில் இளைய கூட்டாளி அமித்ஷா, அண்ணல் அம்பேத்கரை இழிவு படுத்தி பேசியதற்கு முட்டுக் கொடுக்கும் பெரிய கூட்டாளி மோடி, தாங்கள் அண்ணல் அம்பேத்கரை மிகவும் மதிப்பதாக கூவிக் கொண்டே இருக்கிறார்.

அவர்கள் மதிக்கிற லட்சணம் என்ன என்பதை மக்களவை சபாநாயகருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் எழுதிய கடிதம் அம்பலப் படுத்துகிறது.

இந்திய அரசியல் சாசனத்தின் 75 வது ஆண்டுக்காக வெளியிட்ட காலண்டரிலேயே அவர் படத்தை வெளியிடப் பிடிக்காத நீங்களா அவரை மதிக்கிறீர்கள்.

கடுப்படிக்கும் காமெடியை நிறுத்தவும் மோடி





இந்திய அரசமைப்பு சட்டத்தின் 75 ஆவது ஆண்டை கொண்டாடும் விதமாக மக்களவை செயலகம் வெளியிட்டுள்ள சிறப்பு காலண்டரில் காந்தி மற்றும் அம்பேத்கரின் படமோ பெயரோ இல்லை.
இது வரலாற்றைத் திரிக்கும் திட்டமிட்ட செயலாகும்.
இந்த காலண்டர்கள் திரும்பப்பெற வேண்டும்.
இந்த செயலுக்காக மக்களவை செயலகம் மன்னிப்பு கோர வேண்டும். இது குறித்து மக்களவை தலைவருக்கு நான் எழுதியுள்ள கடிதம்…

மாண்புமிகு ஓம் பிர்லா
மக்களவை சபாநாயகர் அவர்கள்.
வணக்கம்.
நேற்றைய தினம் மக்களவை செயலகத்திலிருந்து 2025 ஆம் ஆண்டுக்கான மாதாந்திர நாட்காட்டி உங்களின் கடிதத்துடன் எங்களுக்கு அனுப்பிவைக்கப் பட்டது.
இந்திய அரசமைப்பு சட்டத்தின் 75 ஆவது ஆண்டை கொண்டாடுவதன் வெளிப்பாடாகவும், அரசியல் சட்டத்தின் வரலாற்றுப் பயணத்தை நினைவு கூறும் விதமாகவும் இந்த மாதாந்திர நாட்காட்டி உருவாக்கப்பட்டுள்ளதாக நீங்கள் எழுதியுள்ளீர்கள்.
ஆனால் நீங்கள் அனுப்பிவைத்துள்ள மாதாந்திர நாட்காட்டி பெரும் அதிர்ச்சியை தருவதாக உள்ளது.
இந்திய அரசியல் சட்ட வரலாற்றுப் பயணத்தை நினைவு கூறும் இந்த நாட்காட்டியில் தேசத்தந்தை அண்ணல் காந்தியாரின் படமோ, அரசியல் சட்ட வரைவுக்குழுவின் தலைவர் அண்ணல் அம்பேத்கரின் படமோ இல்லை.
இந்த இருபெரும் ஆளுமைகளின் பங்களிப்பை மறைக்க ஒவ்வொரு நாளும் ஒன்றிய அரசு முயற்சி செய்து வருகிறது.
நாடாளுமன்ற கட்டிடத்தின் முன்புறமிருந்த அண்ணல் காந்தியார், அண்ணல் அம்பேத்கர் இருவரின் சிலையையும் அகற்றி நாடாளுமன்ற கட்டிடத்தின் பின் புறம் கொண்டுபோய் வைத்துள்ளீர்கள்.
இப்பொழுது இந்திய அரசியல் சட்டத்தின் 75 ஆவது ஆண்டை கொண்டாடுவதன் அடையாளமாக சிறப்பு மாதாந்திர நாட்காட்டியை வெளியிட்டு அதில் இரு பெரும்
தலைவர்களின் படங்களோ, பெயர்களோ இல்லாமல் அச்சிட்டுள்ளீர்கள்.
இந்த காலெண்டரில் அரசியல் சாசனத்தை வரைந்த ஓவியர்கள், கையெழுத்து பிரதியாளர்கள் படங்களும் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. அவர்களின் பங்களிப்பு போற்றத்தக்கது, அங்கீகரிக்கப்பட வேண்டியது. ஆனால் அரசியல் சாசனத்தின் வரைவு குழு தலைவராக இருந்து பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே அதற்கு வடிவம் தந்த அண்ணல் அம்பேத்கரின் பெயர், படம் எப்படி விடுபட முடியும்?
இந்திய விடுதலைப் போராட்டத்தை ஓர் வெகுமக்கள் இயக்கமாக மாற்றிய தேசத்தந்தை காந்தியாரின் பெயரும் படமும் எப்படி விடுபட முடியும்? இது வரலாற்றை திரிக்கும் திட்டமிட்ட செயலாகும்; நவீன இந்தியாவை உருவாக்குவதில் இவ்விரு பேராளுமைகள் நல்கிய அரும் பங்களிப்பை அவமதிக்கும் செயலாகும்.
ஏற்கனவே அண்ணல் அம்பேத்கர் பற்றி மாண்புமிகு உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் வெளியிட்ட கருத்துக்கள் கோடானு கோடி மக்களின் மனதை புண்படுத்தி உள்ளது. தற்போது இந்த காலண்டர் மேலும் மக்கள் உணர்வுகளை ரணமாக்க கூடியதாகும் என அஞ்சுகிறேன். பெரும் காயத்தை மக்கள் மனதில் இது உருவாக்கும்.
உங்களின் இந்த செயல் இந்திய அரசியல் சாசன வரலாற்றின் உருவாக்கத்தை மேன்மைப் படுத்துவதாக இல்லை. மாறாக உங்களின் எண்ணம் அதற்கு நேர் எதிராக செயல் பட்டிருக்கிறது.
ஆகவே இந்த காலண்டரை திரும்பப்பெற்று தேசத்தந்தை காந்தியார், அண்ணல் அம்பேத்கர் ஆகிய இரு ஆளுமைகளுக்கும் உரிய இடம் தருகிற புதிய காலண்டரை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
சு. வெங்கடேசன் எம் பி.

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. மக்கள் பசி பட்டினியை போக்க அநாகரீகமாக கமெண்ட் போட்ட அந்த திருட்டு அனாமதேயம் தான் என்ன செய்தது என்று தன் அடையாளத்துடன் சொல்லுமா? எச்சிற்கையால் காக்கையைக் கூட ஓட்ட தெரியாதவர்களுக்கு மக்கள் போராளிகள் மீது பொறாமை

      Delete