Saturday, June 22, 2013

அழிவிலிருந்து பாடம் கற்கத் தவறினால் அழிவுகள் தொடரும்

 http://static.ibnlive.in.com/ibnlive/pix/sitepix/06_2013/uttarakhand_floods_rains.jpg


 http://static.sify.com/cms/image//miep4ebjjbf.jpg



 http://static.ibnlive.in.com/ibnlive/pix/sitepix/06_2013/uttarakhand-floods-three-including-indore-bjp-leader-killed_210613021720.jpg

 http://img.amarujala.com/2013/06/17/floods-hit-uttarakhand-51bea40c2b8ba_g.jpg

 http://d2yhexj5rb8c94.cloudfront.net/sites/default/files/styles/sliderimage_crop/public/mediaimages/gallery/2013/Jun/India%20Floods_Kand%20(1).jpg

மீண்டும் ஒரு பேரழிவு நிகழ்ந்திருக்கிறது. இயற்கையின் வலிமை மீண்டும் வெளிப்பட்டுள்ளது. மனிதர்களின் பேராசைக்கு இயற்கையை
பலி கொடுக்க நினைத்தால் இயற்கை தனது ஆக்ரோஷத்தையும்
ஆவேசத்தையும் பதிலாய் கொடுக்கும் என்பதும் நிரூபணமாகியுள்ளது.

உத்தர்காண்ட் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது பெருந்துயரம். வெள்ளப்
பெருக்கிலும் நிலச்சரிவிலும் பல நூறு மனிதர்கள் இறந்துள்ளதாய்
இதுவரை வந்துள்ள தகவல்கள் தெரிவிக்கிறது. ஆற்றிலே அடித்துப்
செல்லப்பட்டவர்கள், இடிபாடுகளில் சிக்கித் தவிப்பவர்கள் , 
உணவின்றி, நீரின்றி பட்டினியில் பரிதவிப்பவர்கள், இவர்களில்
எத்தனை பேர் உயிரோடு வரப் போகிறார்கள், சடலங்களாக மீட்கப்
படப் போகின்றார்கள் என்பது இன்னும் தெரியாது.

கட்டிடங்கள் சீட்டுக்கட்டு மாளிகைகளாக சரிவதையும், வாகனங்கள்
மலைப்பாதைகளில் உருண்டோடுவதையும் திரைப்படக் காட்சிகளில்
பார்க்கும் போதே பதறும் உள்ளங்கள், உண்மைச் சம்பவங்களாய்
தொலைக்காட்சியில் பார்ப்பவர்களின் உள்ளம் ஒரு கணம் உரைந்து
போயிருக்கும்.

இயற்கையின்  சீற்றம் ஏன் நிகழ்ந்தது.

மனிதனின் தவறு, பேராசை, அரசுகளின் அலட்சியம், லஞ்ச ஊழல்,
பன்னாட்டுக் கம்பெனிகளின் லாப வெறி என்று பல காரணங்களை
அடுக்கிக் கொண்டே போக முடியும்.

மலைகளை உடைப்பது, வெடிகுண்டு வைத்து பாறைகளை தகர்ப்பது,
ஆற்றின் கரைகளை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டுவது, பல நூறு
வருட பழமையான மரங்களை வெட்டி பணப்பயிர்கள் வளர்ப்பது,
ஆற்றின் பாதையை திருப்பி விடுவது,  என்று ஏராளமான தவறுகள்
எங்கெங்கும் நடந்து கொண்டிருக்கிறது.

உத்தர்கண்ட் மாநிலத்தில் சில ஆண்டுகள் முன்பு நிகழ்ந்த நில
நடுக்கங்கள் மூலம் இயற்கை அன்னை அளித்த எச்சரிக்கையை
அலட்சியப்படுத்தியதன் விளைவு இன்றைய பேரழிவிற்கும்
பெரும் துயரத்துக்கும் முக்கியக் காரணம். உத்தர்கண்ட் மாநில
அரசின்  பொறுப்பற்ற தன்மையும் மிக முக்கியக் காரணம்.

இமயமலைப் பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க
வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தும் அதை ஏற்க அந்த
மாநில அரசு மறுத்து வருகிறது. 

வளர்ச்சி பாதிக்கும் என்பது அது சொல்லும் ஒரு காரணம். அது
மக்களுக்கான வளர்ச்சி அல்ல, சுற்றுலாவிற்காகவும் ஆன்மீகப் 
பயணத்திற்காகவும் வரும் பக்தர்களை மூலதனமாக்கி காசு பார்க்க,
பெரிய சுற்றுலா விடுதிகளை கட்ட நினைக்கும் பெரும் செல்வந்தர்கள்,
பன்னாட்டுக் கம்பெனிகளின் வளர்ச்சி மீதுள்ள அதிக அக்கறை அது.

இந்த பேரழிவு அந்தப்பகுதியில் இயல்பு வாழ்க்கை திரும்ப 
பல்லாண்டுகள் பிடிக்கும் என்ற நிலைமையைத் தான் உருவாக்கி
உள்ளது. லாப வெறியால் வாழ்விழந்து தவிப்பது என்னமோ ஏழை
மக்கள்தான்.

இந்த அழிவில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்களில் 
ஆன்மீகப் பயணம் வந்த பக்தர்களும் அடக்கம். கார்ப்பரேட் 
சாமியார்களின் வருகை கைலாச யாத்திரை, மானசரோவர்
யாத்திரை போன்ற யாத்திரைகள் அதிகமாவதற்கு ஒரு காரணம்.
காசி, கயா என்று நடந்த பேக்கேஜ் டூர்கள் இப்போது விரிவடைந்து
விட்டது. அமர்நாத் யாத்திரைக்கு அதிகக் கூட்டத்தை சேர்ப்பதில் சங் பரிவார அரசியலும் இணைந்தே இருக்கிறது.

இறைவன்  தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்று
புராணம் சொல்லியது.  உன் உள்ளத்திலேயே இறைவன் இருப்பதாய்
தமிழ் இலக்கியம் சொல்லியது. ஏழைகளின் சிரிப்பில் இறைவன்
உள்ளதாய் தமிழக அரசியல் சொல்லியது.

ஆனால் தொலைதூர பயணம் சென்றால் மட்டுமே பிறப்பின் பயனை
அடையலாம் என்று உருவாக்கப்பட்ட கருத்தாக்கத்திற்கு இரையான
மக்கள் இன்று எப்போது வீடு திரும்புவோம் என்று ஏங்கிக் கொண்டு
இருக்கிறார்கள்.

மனிதனுக்கும் இயற்கைக்கும் நடக்கும்  மோதலில் எப்போதுமே
வெல்லப் போவது இயற்கைதான்.

இதை உணர்ந்து பொறுப்பாய் நடந்து கொண்டால் அழிவுகள் நிற்கும்.

இல்லையென்றால்

இந்தியாவின் வடக்கு எல்லையாய் ஒரு காலத்தில் இமய மலை 
இருந்தது என்று எதிர்கால மாணவர்கள் பாடப்புத்தகத்தில்
படிப்பார்கள்.

1 comment:

  1. //உத்தர்கண்ட் மாநிலத்தில் சில ஆண்டுகள் முன்பு நிகழ்ந்த நில நடுக்கங்கள் மூலம் இயற்கை அன்னை அளித்த எச்சரிக்கையை
    அலட்சியப்படுத்தியதன் விளைவு இன்றைய பேரழிவிற்கும் பெரும் துயரத்துக்கும் முக்கியக் காரணம்//
    உண்மை
    //ஆனால் தொலைதூர பயணம் சென்றால் மட்டுமே பிறப்பின் பயனை அடையலாம் என்று உருவாக்கப்பட்ட கருத்தாக்கத்திற்கு இரையானமக்கள்..//
    விமானம் ஏறி தொலைதூர பயணம் சென்றால் மட்டுமே பிறப்பின் பயனை அடையலாம் என்று உருவாக்கப்பட்ட கருத்தாக்கத்திற்கு ஏற்ப பலர் செய்படுவதினால் தொலைதூர பயணம் சென்றால் மட்டுமே பிறப்பின் பயனை அடையலாம் என்று நம்புபவர்கள் மக்களிடையே அதிகமாகின்றனர்.

    ReplyDelete