Thursday, March 22, 2012

பகத்சிங்கின் சிறைப் போராட்டமும் சில அரிய ஆவணங்களும்.





நூல்  அறிமுகம்

நூல்                          : பகத்சிங்கின் சிறைப் போராட்டமும்
                                 சில அரிய ஆவணங்களும்.

ஆசிரியர்                      : சமன்லால்

தமிழில்                       : எஸ்.சம்பத்

வெளியீடு                     : கீழைக்காற்று வெளியீட்டகம்
                                 சென்னை – 2.

விலை                         : ரூபாய் 15.00

ஒரு நாயைக் கொல்வதாக இருந்தால் கூட விசாரணை செய்வோம் என்று ஜம்பம் பேசிய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் முகத்திரையை கிழிக்கிறது இந்த சிறிய நூல்.

“ கேளாக் காதினரை கேட்க வைப்பதற்காக “ என்று தொடங்கும் பிரசுரத்தோடு நாடாளுமன்றத்தில் வெடி குண்டு வீசியதற்காக சிறையில் அடைக்கப்பட்ட மாவீரன் பகத்சிங், தனது வழக்கை எதிர் கொள்வதற்காக தனக்குள்ள உரிமைகளை நிலை நாட்ட நீதி மன்றங்களுக்கு எழுதிய 12 கடிதங்களின் தொகுப்பே இந்த நூல்.

அவரது வழக்கறிஞரும் சிறையிலடைக்கப்பட்டதால் புதிய வழக்கறிஞரை தேர்வு செய்ய தனது தந்தையை சந்திக்க அனுமதிக்க வேண்டும், வழக்கறிஞரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்ற கடிதங்கள் அவரால் அனுப்பப்படுகின்றன. எந்த ஒரு கடிதத்திலும் அவர் “ சட்டத்தின்படி  எனக்குள்ள உரிமை, அதை காவல்துறையோ, சிறைத்துறையோ பறிக்க அனுமதிக்க முடியாது “ என்ற தொனியே அக்கடிதங்களில் உள்ளதே தவிர, அவர் என்றும் நீதிபதிகளின் கருணையை நாடியதில்லை என்பது  நமக்கு எழுச்சியூட்டும் செய்தி.

அப்ரூவராக மாறிய ஒருவர், பகத்சிங் மற்றும் அவரது தோழர்களைப் பற்றி அபாண்டமாக குற்றம் சுமத்திய போது குற்றம் சுமத்தப்பட்ட ஒரு இளைய தோழர் அந்த அப்ரூவர் மீது செருப்பை வீசியெறிகின்றார். இச்செயலை நாங்கள் ஏற்கவில்லை என்று எழுதும் போது பகத்சிங்கின் உயர்ந்த குணம் தெரிய வருகின்றது. நீதிபதிகள் முன்னிலையிலே பகத்சிங்கும் அவரது தோழர்களும் பல முறை தாக்கப்பட்டனர் என்பதும் இந்த நூல் நமக்கு தெரிவிக்கிற ஒரு செய்தி. 

தனது நீண்ட, நெடிய ஆயுளில் அஹிம்சையை போதித்த காந்தியடிகள் உண்ணாவிரதம் இருந்த நாட்களை விட இளம் வயதில் தூக்கு மேடையை தழுவிய, பயங்கரவாதி என முத்திரை தரப்பட்ட பகத்சிங் கூடுதல் நாட்கள்  உண்ணா விரதம் இருந்துள்ளார் என்பது ஒரு ஆச்சரியமான செய்தி. அவசியம் படிக்க வேண்டிய ஒரு நூல் இது.
( மார்ச் 23 – பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவு நாள் )

No comments:

Post a Comment