Thursday, March 31, 2016

உத்தமரானார் குமாரசாமி




பாறைகளிடையே செடிகள் துளிர்க்கும்.
இது இயற்கையின் விளையாட்டு.

பதுக்கிய பாறைகள்
நீதியை அசைக்கும்
நிதியின் விளையாட்டு இது.

ஒரு பிடி ஊழல் சோற்றில்
பூசணிகள் அல்ல,
கிரானைட் மலைகளே
மறைந்து போகும்.

நரபலிக் கறையை
காந்தி நோட்டுக்கள்
சுத்தம் செய்யும்.

ஆள்பவரும் ஆண்டவரும்
பண பக்தி மேலோங்கி
மௌன விரதமிருக்க,
இரு கோடுகள் தத்துவத்தால்
குமாரசாமியை
உத்தமராக்கியது
மேலூர் மகேந்திர ஜாலம்,
நேர்மையின் முகத்தில்
கரி பூசி.

இனி என்ன . . .
நீதி தேவன் துணை கொண்டு
இயற்கையைச் சுரண்டு,
விதிகளை மீறு,
துணை நிற்கும் அரசை
இன்னும் ஏமாற்று,
எல்லாவற்றையும் கொள்ளையடி,
பார்ப்பவரை, கேட்பவரை
வெட்டிக் கொல்லு!

காசுள்ள பக்கம்
சாயும் தராசுக்கள்
கண்ணியவான் என
போற்றித் துதிக்கையில்
கவலைதான் ஏனோ?

Wednesday, March 30, 2016

விதம் விதமாய், அழகழகாய். . .

கேரளப் பயணத்தில் நாங்கள் சென்ற முக்கியமான இடம் ஆலப்புழை. அங்கே ஒரு நாள் படகு வீட்டில் தங்கினோம். 

அப்போது நாங்கள் பார்த்த ஏராளமான படகு வீடுகளின் படங்கள் இங்கே.

தமிழகத்திலும் ராமேஸ்வரம் போன்ற இடங்களில் இது போல முயற்சி செய்யலாமே!

































 

Tuesday, March 29, 2016

17695 ல் பத்து



இந்திய திரை இசை அடையாளங்களில் ஒருவரான திருமதி பி.சுசீலா அவர்களுக்கு 17,695 பாடல்களை பாடியதற்காக கின்னஸ் விருது வழங்கப் பட்டுள்ளது பெருமிதம் தரும் செய்தியாகும்.



அதனை கொண்டாடும் பொருட்டு அந்த 17,695 ல் பத்து பாடல்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

மாலைப் பொழுதின்   மயக்கத்திலே கனவு வராதவர் யாராதவது உண்டா?


நாளை மட்டுமல்ல,   இக்குரல் கேட்க ஒவ்வொரு நாளுமே நிலா வரும்?

எத்தனை ராமன் என்று எண்ணிச் சொல்லுங்களேன்

இப்படி ஒரு பாடல் கேட்க மன்னவன் வராமல் இருக்க முடியுமா? 

உங்களை கேட்டால்  என்ன பாடச் சொல்வீர்கள்?

துள்ளலாய் பாட   இவருக்கும் இல்லை கட்டுப்பாடு?

மாது மட்டுமல்ல நாமும்தான் மயங்குவோம்.

பாடலைக் கேட்க  நீங்களும் வருவீர்கள் அங்கும் இங்கும்

இசை ரசிகர்கள் எல்லோருமே  இவருக்கு  சொந்தம்தான் பந்தம்தான்

இந்த தொகுப்போடு நிறுத்தாதே என்று மனது கட்டளையிடுகிறது. நாளையும் தொடர்வேன்
 

கடவுளைத் தாண்டியும் வாழ்க்கை





சில தினங்கள் முன்பாக இணையத்தில் பார்த்த புகைப்படங்கள் இவை.

தாஜ்மஹால் பார்க்க ஆக்ரா செல்கையில் உங்களுக்கான பேக்கேஜ் டூரில் மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோயிலும் பிருந்தாவனமும் இடம் பெற்றிருக்கும்.

இரு முறை அங்கே செல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பிருந்தாவனம் என்றதும் நான் கூட மைசூரில் உள்ள பிருந்தாவனம் பூங்கா போன்ற ஒரு பூங்கா என்று நினைத்திருந்தேன். ஆனால் உள்ளே நுழைந்ததுதாம் மிகப் பெரிய அதிர்ச்சி கிடைத்தது.

வாச மலர்கள் பூத்துக் குலுங்கும் பூங்கா அல்ல அது. இனி வாழ்க்கையே கூடாது என்று சபிக்கப்பட்டவர்களின் முகாம் அது. கணவனை இழந்தவர்கள் அங்கே குடும்பத்தால் கொண்டு தள்ளப்படுகிறார்கள். பஜனை பாடிக் கொண்டுதான் அவர்கள் மிச்சமிருக்கும் வாழ்க்கையை கழிக்கப்பட வேண்டும் என்பது  அந்தப் பெண்கள் மீது சமூகம் திணித்த சோகம்.

வயதான மூதாட்டிகள் முதல் இளம் பெண்கள் வரை அங்கே இருந்தார்கள். வாய்கள் பாடல்களை உச்சரித்துக் கொண்டிருந்தாலும், கைகள் தாளமிட்டுக் கொண்டிருந்தாலும் முகத்தில் என்னமோ துயரமும் விரக்தியும் நிரந்தரமாய் குடி கொண்டிருந்தது. நமக்கு புரியாத மொழியில் பாடல் அமைந்திருந்தாலும் அது அளித்த உணர்வு என்னமோ வருத்தம்தான். 

இரண்டாவது முறை உள்ளே செல்ல மனதில் துணிவு இல்லாமல் வெளியே நின்று விட்டாலும் சோக கீதம் வெளியே வந்தும் தாக்கியது.

எல்லோரையும் போல் குடும்பத்தோடு இணைந்து வாழ வேண்டும் என்ற விருப்பம் இருந்ததோ  இல்லையோ என்று நமக்கு தெரியாது. ஆனால் கணவனை இழந்தவர்கள்  கடவுளை மட்டும் நினைத்தால் போதும் என்ற சிந்தனையுடையவர்கள்தான் அந்த பெண்களை இங்கே தள்ளி இருக்க வேண்டும்.

வசந்தத்தை தொலைத்த அந்த பெண்களுக்கும் உணர்வு உண்டு என்பதை ப்ரிந்து கொண்ட  யாரோ ஒரு  நல்ல மனிதர் கடந்த இரண்டு வருடங்களாக ஹோலி பண்டிகையை கொண்டாட ஏற்பாடு செய்துள்ளார். 

மீண்டும் அந்த புகைப்படங்களை பாருங்கள். 

அந்த பெண்களின் முகங்களில் எத்தனை மலர்ச்சி! எவ்வளவு மகிழ்ச்சி!
இத்தனை நாட்களாய் ஒளிந்திருந்த உற்சாகம் எப்படி பீறிட்டு கிளம்புகிறது என்பதை கவனியுங்கள்.

இது ஒரு நாள் உற்சாகமாக, ஒரு நாள் உற்சவமாக இல்லாமல் என்றென்றும் தொடரட்டும்.  அவர்கள் வாழ்க்கை என்றென்றும் வண்ணமயமாய்  ஒளிரட்டும். 

கணவனை இழப்பதால் வாழ்க்கையையே இழக்க வேண்டிய அவசியம் இல்லை. கடவுளை வணங்குவது மட்டுமல்ல வாழ்க்கை  என்பதையும்  இந்த சமூகமும் உணர்ந்து கொள்ளட்டும்.

 

Monday, March 28, 2016

சுஜாதா சொன்னது சரிதான்




நேற்று என் புத்தக அலமாரியை சுத்தம் செய்கையில் மதன் எழுதிய "வந்தார்கள், வென்றார்கள்" கண்ணில் பட்டது. ஏற்கனவே இரண்டு முறை படித்திருந்தாலும் ஒரு சில செய்திகளை உறுதிப்படுத்திக் கொள்ள மீண்டும் படிக்கத் தொடங்கினேன். இன்று சென்னை வேறு போக வேண்டியிருந்ததால் பயணத்தின் போது முழுமையாய் படித்தும் முடித்து விட்டேன்.

இந்தியாவின் பல நூற்றாண்டு வரலாற்றை இவ்வளவு எளிமையாகவும் சுவையாகவும் யாரும்  எழுதியதும் கிடையாது. வரலாறு என்பதற்காக கடுமையான மொழியும் கிடையாது. இன்றைய வழக்கத்தில் இருக்கும் மொழி நடையிலேயே எழுதியிருப்பதுதான் இந்த நூலின் சிறப்பு. 

"இம்மாதிரி யாராவது சரித்திரப்பாடம் எழுதியிருந்தால் நான் சரித்திரத்தில் நூற்றுக்கு நூறு வாங்கியிருப்பேன்" என்று முன்னுரையில் சுஜாதா எழுதியிருப்பார். 

அது நூற்றுக்கு நூறு சரி.

இது போல இயற்பியல் நூல் எளிமையாக இருந்திருந்தால் நான் கூட பனிரெண்டாம் வகுப்பில் அந்த பாடத்தில் ஏற்கனவே வாங்கியதை விட அதிகமான மதிப்பெண்கள் வாங்கியிருப்பேன். 

ஆனால் அது அவ்வளவு சுலபமானது அல்ல என்பதை இன்று படிக்கத் தொடங்கிய இன்னொரு நூல் உணர்த்துகிறது. அது பற்றி படித்து முடித்ததும் எழுதுவேன். 

Sunday, March 27, 2016

ஓநாய்களின் ஆபாசக் கூச்சல்




முதல்வன் படத்தில் ஒரு காட்சி வரும்.

நாற்காலி பறிபோன சூழலில் ரகுவரன் எதிர்க்கட்சித் தலைவரைப் பார்த்து "ஒன்று நாங்கள் ஆட்சியில் இருக்க வேண்டும். இல்லையென்றால் நீங்கள் இருக்க வேண்டும். நம் இருவரைத் தவிர மூன்றாவதாக இன்னொரு ஆள் வரக்கூடாது" என்பார்.

திமுக, அதிமுக மட்டுமே மாறி மாறி ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்த காட்சி மாறுவதற்கான நம்பிக்கை ரேகை மெல்லமாக தென்படுகிறது.  மக்களுக்கான பிரச்சினைகளுக்காக பல போராட்டங்களில் ஒன்றாக களம் கண்ட நான்கு  கட்சிகள் பின்பு மக்கள் நலக் கூட்டணியாக உருவெடுத்தது. ஒரு பொதுத்திட்டத்தின் அடிப்படையில் தேர்தலை சந்திக்க முடிவெடுக்கிறது.

ஊழல்களில் ஊறிப் போன, குட்டி முதலாளித்துவ கட்சிகளாக மாறி இருக்கிற இரு கழகங்களின் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் வராமல் இருக்க வியூகம் அமைக்கிறது. தேமுதிக வுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்கிறது மக்கள் நலக்கூட்டணி.  

தேமுதிக வை தங்கள் வசம் இணைக்க வேண்டும் என்று பிரம்மப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்த திமுகவால் இதனை ஏற்கவே முடியவில்லை. பழம் நழுவி தங்களிடம் வந்து விடும் என்று கண்டிருந்த கனவு கானல் நீராகிப் போய் விட்டது.  தாங்கள் சுவைக்கத் துடித்த பழம் என்பதால் பழத்தை பழிக்க முடியவில்லை. இப்பழம் புளிக்கும் என்று நரியாய் ஓலமிட முடியவில்லை. அதன் ருசி தெரிந்ததால்தானே இத்தனை காலம் ஏங்கிக் கொண்டிருந்தார்கள்!

அதனால் பழம் எங்கே சென்றதோ, அவர்களை சபிக்கத் தொடங்கி விட்டார்கள். ஆபாச வார்த்தைகளில் அர்ச்சிக்க தொடங்கி விட்டார்கள். கம்யூனிஸ்டுகளை வளரவிடாமல் பார்த்துக் கொண்டேன் என்று சொன்னவரின் கட்சியினர், இன்று கம்யூனிஸ்டுகள் தடம் மாறலாமா என்று கேட்கிறார்கள்.  இப்போது செல்வதுதான் சரியான பாதை என்று சொன்னால் பதில் கிடையாது, வருவது எசப்பாட்டுதான். 

ஆளும் கட்சியின் பி அணி என்று ஒரு கோயபல்ஸ் பொய்யை கூச்சமே இல்லாமல் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். ஆளுகிற ஜெயலலிதா மீது இவர்கள் வெண்சாமரம் வீசுவது போல மென்மையாய் விமர்சனங்களை முன்வைக்க, கடும் புயலாய் கண்டன இயக்கங்களை நடத்தி வந்தது, வருவது மக்கள் நலக் கூட்டணி என்ற சிறு உண்மை இவர்களின் கருப்புக் கண்ணாடிக்கு தெரியவே இல்லை.

ஊழலில் ஒன்று
அதிகார துஷ்பிரயோகத்தில் ஒன்று
மத்தியரசுக்கு நடைபாவாடை பிரிப்பதில் ஒன்று
பெரு முதலாளிகளுக்கு சேவகம் செய்வதில் ஒன்று
ஏழை மக்கள் பிரச்சினைகளில் காட்டும் அலட்சியத்தில் ஒன்று
ஜாதிய ஆணவத்திற்கு இசைந்து போவதிலும் ஒன்று

என திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் அனைந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும்  எந்த வேறுபாடும் கிடையாது. 

வாக்காளர்களுக்கு காசு கொடுத்து வளைக்கப்பார்ப்பத்திலும் இரு கழகங்களுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. 

ஆளும் கட்சி மீது மக்களுக்கு உள்ள வெறுப்பு தனக்கு சாதகமாக இருக்கும் என்று அதிகாரப் பசியோடு  நம்பிக் கொண்டிருந்த உடன்பிறப்புக்கள் தங்களின் கற்பனைக் கோட்டை சரிவதைக் கண்டு சமூக வலைத்தளங்களில் ஆபாசக் கூச்சலிடுகின்றனர். அவர்கள் கட்டவிழுத்து விடும் பொய் மூட்டைகளும்  நாகரீகமற்ற வார்த்தைகளும் அவர்களின் தரம் தாழ்ந்து கொண்டே இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

தேர்தல் சமயத்தில் கூட ஜெயலலிதாவை எதிர்க்க திராணியற்றவர்கள் என்பதையும் அம்பலப்படுத்திக் கொண்டே இருக்கின்றனர். அதுவே அவர்களை மக்களிடத்திலிருந்து அன்னியப்படுத்திக் கொண்டிருக்கின்றன. 

மாற்றம் நிகழும். 

மாற்றத்திற்கான விதை மக்கள் நலக்கூட்டணி உருவாக்கியது. 

Saturday, March 26, 2016

களிமண் குழந்தைகள் - அழகு

வாட்ஸப்பில் வந்த படங்கள் இவை








தத்ரூபமான இந்த சின்னஞ்ச்சிறு சிலைகள் களி மண்ணால் செய்யப் பட்டவை. 

இந்த சிலைகளை செய்தவர் கேமிலி ஏலன் என்ற கலைஞர். 




இவர்தான் அவர்

இவங்க தேச பக்தர்ங்களாம்டோய்!!!!!!




மேலே உள்ள படத்தை பாருங்கள். அதிலே ஹிந்தியிலே வட்டம் போட்டுள்ளதை கவனியுங்கள். 

சுதந்திரப் போராட்ட புரட்சி வீரர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோருக்கு மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸ் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி அது.

பகத்சிங்கின் படத்தை போட்டு அங்கே சுகதேவ் என்று எழுதியுள்ளார்கள். பக்கத்திலே இன்னொரு பகத்சிங்கின் படமும் உள்ளது. சுதந்திரப் போராட்டத்தை காட்டிக் கொடுத்த துரோகிகளுக்கு உண்மையான போராளிகளைப் பற்றி என்ன தெரியும்?

ஏதோ ஒன்றுக்கு செக்கிற்கும் சிவ லிங்கத்திற்கும் வித்தியாசம் தெரியாது என்ற பழமொழி உங்களுக்கு நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பு கிடையாது. 

காவி டவுசர் பட்னாவிஸ்தான் காரணம்
 

Friday, March 25, 2016

செருப்பில் தெரிவது மோடியின் முகம்




ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் தோழர் கண்ணையா குமார் மீது  செருப்பை வீசி தங்களின்  அசிங்க குணத்தை அம்பலமாக்கிக் கொண்டு  நிற்கிறது காவிப்படை. 

பதினைந்து லட்ச ரூபாய் மோசடி தொடங்கி ஒவ்வொரு விஷயத்திலும் தகரத் தொடங்கிய  மோடியின் பிம்பம்  டெல்லி தேர்தலிலும் பீகார்  தேர்தலிலும் நொறுங்கிப் போனது.

மோடியின் வீழ்ச்சியை  விரைவு படுத்துவதால் கண்ணையாகுமார் மீது உச்சகட்ட வெறுப்பில் இருக்கிறது நயவஞ்சகர்களின் கூட்டம். அதனால்தான் செருப்பை எரிந்து கோபத்தை தணித்துக் கொள்ள முயற்சிக்கிறது.

அந்த செருப்பில் தெரிவது ஐம்பத்தி ஆறு இஞ்ச் கொண்ட சக்திமான் மோடி அல்ல. பலவீனமாகிப் போன தோல்வி பயத்தில் துடிக்கிற  மோடியின் முகம்.

தங்கள் அநாகரீக செயல்கள் மூலம் இவர்கள்தான் பாரத மாதாவை துகிலுறிந்து கொண்டிருக்கிறார்கள்.

இன்று செருப்பை வீசிய இந்த படுபாவிகள் நாளை கண்ணையாகுமாரை கொலை செய்யக் கூட தயங்க மாட்டார்கள். எனவே அவர் எச்சரிக்கையாக இருந்திட வேண்டும். 

பின் குறிப்பு : காவி டவுசர் அனானிகள் கண்டிப்பாக ஆபாச கமெண்டுகளை எழுதி அவர்களின் தரத்தை நிரூபித்துக் கொள்வார்கள். ஒரு சில அதிமேதாவிகள்  பதிவுக்கு தொடர்பே இல்லாமல் கம்யூனிஸ்டுகள் மீது விஷத்தையும் கக்குவார்கள். வாங்க மச்சான்களா! வந்து வாந்தியெடுங்க!!
 

Thursday, March 24, 2016

பணிந்து போ.. இல்லையென்றால்



 
எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மாத இதழான இன்சூரன்ஸ் வொர்க்கர் மார்ச் 2016 இதழின் தலையங்கத்தின் தமிழாக்கத்தை கீழே அளித்துள்ளேன். 

இந்த தலையங்கத்தோடு ரோஹித் வெமுலாவின் கடிதம், கண்ணையா குமார் நிகழ்த்திய உரை, எஸ்.எல்.ரொகாடாவின் கவிதை, தோழர் விஜயசங்கர் அவர்களின் கவிதை ஆகியவற்றை தொகுத்து எங்கள் சங்கத்தோழர்களுக்காக "நாமிருக்கும் நாடு" என்ற தலைப்பில் ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளோம். 

தோழர் ஸ்ரீரசா தனது ஓவியத்தை நூலின் முகப்பிற்கு பயன்படுத்த அனுமதித்தார். எங்கள் கோட்டச்சங்கம் சார்பாக நடைபெற்ற டாக்டர் அம்பேத்கர் 125 வது பிறந்தநாள் விழா சிறப்புக் கருத்தரங்கில் எங்கள் தென் மண்டலப் பொதுச்செயலாளர் தோழர் டி.செந்தில்குமார் வெளியிட மூத்த தோழர்கள் சி.ஞானசேகரன், மற்றும் மங்கள் கௌரி செல்வி முதல் பிரதிகளை பெற்றுக் கொண்டனர்.


பணிந்து போ.. இல்லையென்றால் – ஒரு மிரட்டல் செய்தி

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தலைவர் கண்ணையா குமாரின் கைதும் அவர் மீது பதியப்பட்டுள்ள தேசத்துரோகக் குற்றமும் அரசியல் மாற்றுக்கருத்துக்கள் இரக்கமின்றி நசுக்கப்படும், ஆளும் வர்க்கத்திற்கு எதிரான குரல்கள் வன்முறை மூலம் மௌனமாக்கப்படும் என்று விடுக்கப்பட்டுள்ள ஒரு மிரட்டல் செய்தி.

ஜேஎன்யு பிரச்சினை என்பது ஒரு தனித்த நிகழ்வல்ல. பெரும்பான்மை கருத்தோட்டங்களை அப்படியே குருட்டுத்தனமாக ஏற்காமல் கேள்வி எழுப்புவதற்கான வெளி உடைய பல்கலைக்கழகங்களை தங்களின் ஆதிக்கத்திற்கு உட்படுத்த இந்துத்துவ சக்திகள் மேற்கொள்ளூம் திட்டமிட்ட சதிகளின் அங்கமே. இந்த இலக்கோடுதான் இந்துத்துவா சக்திகளின் கருத்தோட்டத்திற்கு நெருக்கமான, வளைந்து கொடுக்கும் தன்மையுள்ள துணை வேந்தர்களை  பல்கலைக்கழகங்களில் திணித்துக் கொண்டிருக்கின்றனர். காவி நிறம் அளிப்பதற்காக வரலாறு மாற்றி எழுதப்படுகிறது. பல்கலைக்கழக வளாகங்களில் இந்துத்துவா கருத்தோட்டங்களுக்கு ஒத்து வராதவர்களோடு மோதுவதற்காகவே பாஜகவின் மாணவர் பிரிவான ஏபிவிபி க்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுகிறது. திறனற்ற ஒரு  நடிகரை பாரம்பரியமிக்க பூனா திரைப்படக் கல்லூரியின் தலைவராக்கியது, அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தை சென்னை ஐ.ஐ.டி யில் தடைசெய்தது, ரோஹித் வெமுலாவின் துரதிர்ஷ்டவசமான மரணத்திற்கு காரணமான ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக நிகழ்வுகள் ஆகியவையெல்லாம் இந்துத்துவா சதிகளை எதிர்க்கிற மாணவர்களை அடக்குவதற்கான முயற்சிகளே.

இந்தியாவின் முதன்மையான பல்கலைக்கழகமான ஜேஎன்யு பல்வேறு  தளங்களில் பல்வேறு சிறப்பான ஆளுமைகளை உருவாக்கியுள்ளது. வெறும் பயிற்சிக்கூடம் என்ற அளவில் தன்னைக் குறுக்கிக் கொள்ள அது எப்போதுமே மறுத்துள்ளது. பன்முகத்தன்மையையும் பன்முகக் கருத்தோட்டங்களையும் கொண்டாடி வரும் ஜேஎன்யு ஜனநாயகத்தை பாதுகாக்கிற, ஜனநாயக உரிமைகளை விரிவு படுத்துகின்ற போராட்டங்களிலும் முன்னணியில் உள்ளது. அப்படிப்பட்ட ஒரு பல்கலைக்கழகம் இந்துத்துவ சக்திகளின் கண்களுக்கு எப்போதுமே எரிச்சலைத்தான் தந்துள்ளது. எனவேதான் அங்கே நடைபெற்ற ஒரு நிகழ்வில் சொற்பமான ஒரு மாணவர் கூட்டத்தால், இந்திய எதிர்ப்பு முழக்கங்கள் எழுப்பப்பட்டதாக குற்றம் சொல்லப்பட்டதை பயன்படுத்தி, அது நம்முடைய கண்டனத்துக்கும் உரியது கூட, காவல்துறையைக் கொண்டு ஒட்டு மொத்த மாணவர் இயக்கத்தின் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது. ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் நடந்தது போன்ற அதே பாணியில்தான் இங்கேயும் நடைபெற்றது. ஏ.பி.வி.பி புகார் சொல்கிறது. எம்.பி க்கள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்கிறார்கள். பல்கலைக்கழக நிர்வாகம் விசாரித்து குற்றம் நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயத்தில் மத்திய அமைச்சர்கள் தலையிடுகிறார்கள்.

ஜேஎன்யு பல்கலைக்கழக விவகாரத்தில் பாரத மாதாவை இழிவு படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனித வள அமைச்சர் மட்டும் கோரவில்லை. ஜேஎன்யுவில் உள்ள தேச விரோத சக்திகள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சரும் முடிவு செய்கிறார். பாகிஸ்தான் தீவிரவாதி ஹஸீஸ் சையதோடு மாணவர்களை தொடர்பு படுத்துகிற ஒரு போலி ட்விட்டர் செய்தியை அடிப்படையாகக் கொண்டு உள்துறை அமைச்சர் செயல்பட்டார் என்பது வெட்கக்கேடு. எந்த விதமான விசாரணையுமின்றி காவல்துறை பல்கலைக் கழகத்தில் நுழைந்து சோதனை போடுகிறது. ஜனநாயகபூர்வமாக தேர்ந்தெடுக்கப் பட்ட மாணவர் சங்கத் தலைவர் கண்ணையா குமாரை கைது செய்கிறது. தேசத்துரோகக் குற்றம் சுமத்துகிறது. டெல்லியிலும் பீகாரிலும் மதரீதியாக அணி திரட்ட நடைபெற்ற முயற்சி தோற்றுப் போனதால் அரசியல் உள்நோக்கத்தோடு இத்தருணத்தை தேசியவாதம் குறித்த விவாதத்திற்கு இந்துத்துவ சக்திகள்  பயன்படுத்திக் கொண்டன. யார் தேச பக்தர்கள், தேச விரோதிகள் என்று முத்திரை குத்தும் முழு அதிகாரத்தை இந்துத்துவ சக்திகளுக்கு (அதிலே ஏபிவிபியும் சில ரௌடி வழக்கறிஞர்களும் அடக்கம்) மத்தியரசு அளித்து விட்டது.

இதிலே இன்னொரு பெரிய வெட்கக்கேடு என்னவென்றால் பல முன்னணி தொலைக்காட்சி சேனல்கள் இந்துத்துவ செயல்திட்டத்திற்கு தங்களை அப்படியே சமர்ப்பித்துக் கொண்டு விட்டார்கள். டைம்ஸ்நவ் சேனல் தனது நிகழ்ச்சிக்கு “ஒரே குரல், ஒரு இந்தியா” என்று பெயர் கொடுத்தது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் “ஒரு தேசம், ஒரு மொழி, ஒரு கலாச்சாரம்” முழக்கம் போலவே இதுவும் ஒலிக்கிறதல்லவா! இன்னொரு சேனலான நியூஸ் எக்ஸ் தனது நிகழ்ச்சிக்கு “அப்சல் லீகிற்கு எதிராக போராடும் இந்தியா” என்று தலைப்பு கொடுக்கிறது. நீதிமன்றங்களையும் நீதித்துறையையும் செயலற்றதாக மாற்றக் கூடிய விதத்தில் ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர்கள் தேசத்துரோகிகள் என்று ஸ்தாபிக்கிற விசாரணையையே ஊடகங்கள் வெறித்தனமாக மேற்கொள்கிறன. இது இந்திய அரசியல் சாசனத்தின் மீது இவர்கள் தொடுக்கிற பலத்த தாக்குதல். ஜனநாயகத்தை வளர்த்தெடுக்கிற, மேம்படுத்துகிற பல விதமான குரல்களும் விவாதங்களும்தான் இந்தியாவின் அழகு என்ற எளிய உண்மையை டைம்ஸ் நவ் உணர்ந்து கொள்ளட்டும். அரசு நடவடிக்கையை எதிர்க்கிற அனைவரையும் தேசத்துரோகிகளாக நிறுவுகிற முயற்சிதான் தன் நிகழ்ச்சியின் தலைப்பு என்பதை நியூஸ் எக்ஸ் அறிந்து கொள்ளட்டும். நியூஸ் எக்ஸ் கண்டறிந்துள்ள அடிப்படைகளின்படி பெரும்பான்மையான இந்தியர்கள் தேசத்துரோகிகளே. கைது செய்யப்பட்ட மாணவர் தலைவர், இந்திய எதிர்ப்பு முழக்கமிட்டார் என்று காண்பிக்க, போலியாக தயாரிக்கப்பட்ட வீடியோக்களை பயன்படுத்தியுள்ளனர் என்பது மிகவும் எரிச்சலை ஊட்டுகிறது. நெறியற்ற செயல் இது!



இந்துத்துவ கருத்தோட்டங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிற மாணவர்கள் உள்ள பல்கலைக்கழகங்கள் மீது சமூக வலைத்தளங்களில் ஒரு நச்சுப் பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கிறது. ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் போராடும் பெண்களை “விபச்சாரிகள்” என ஹரியானாவைச் சேர்ந்த ஒரு பாஜக தலைவர் வசை பாடுகிறார். பாஜக எம்.பி சந்தன் மித்ரா “ஜேஎன்யு வை இழுத்து மூடுங்கள்” என்று கோரிக்கை வைக்கிறார். ஓய்வு பெற்ற  சர்வ வல்லமை படைத்த ஓர் உயரதிகாரி மோகன் தாஸ் பை “மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல் அரசியலில் நாட்டம் செலுத்தினால், அப்படிப்பட்ட தீவிரவாத, பழமையான இடதுசாரி வாத மாணவர்களுக்கு அரசு வரி செலுத்துவோரின் பணத்திலிருந்து மானியம் கொடுத்து செலவு செய்ய வேண்டியதில்லை” என்று அறிவுரை கூறுகிறார்.

இந்த இரண்டு அறிக்கைகளுமே செல்வந்தர்களின் அராஜகத்தையும் ஏழைகள் மீது அவர்கள் கொண்டுள்ள வெறுப்பையும் அம்பலப்படுத்துகிறது. உலகிலேயே மிக மோசமான முறையில் இந்தியாவில்தான் கல்வி வணிகமயமாக்கப்பட்டு சமூகத்தின் ஏழை, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எட்டாததாக மாற்றப்பட்டு வருகிறது. ஜேஎன்யுவை மூட வேண்டும் என்பது எதிர்கருத்துக்கள் மீதான அராஜகமான எதிர்வினை மட்டுமல்ல, கல்வித்துறையில் தனியாரை மேலும் மேலும் ஊக்குவிக்கும் முயற்சியாகும். கல்வியில் மானியம் அளிப்பதன் மூலம் செல்வந்தர்கள் ஏதோ ஏழைகளுக்கு  மிகப் பெரிய கருணை காட்டுவது போன்ற தோற்றத்தை அந்த உயரதிகாரி உருவாக்கப்பார்க்கிறார். யார் உண்மையாக வரி செலுத்துகிறார்கள் என்று அவரிடமிருந்து அறிய நாம் விரும்புகிறோம். ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் நேரடியாகவோ மறைமுகமாகவோ வரி செலுததுகிறார்கள்தானே!  இந்தியா என்ன செல்வந்தர்களின் முடியாட்சி நடைபெறுகின்ற நாடா என்ன? இந்தியாவின் எந்த வளத்தின் மீதும் ஏழை மக்களுக்கு உரிமையே கிடையாதா? வரி செலுத்துவோரின் பணத்தால் உருவாக்கப்பட்ட, தேசியமயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளின் பணத்தை கொள்ளையடித்த ஏழை முதலாளிகள் பற்றி என்ன சொல்வார்கள்? அந்த உயரதிகாரி தனது வக்கிர சிந்தனை மூலம் அடிப்படை பொருளாதார புரிதலையே தலைகீழாக மாற்ற யத்தனிக்கிறார்.

கண்ணையா குமார் கேட்டதும் கிட்டத்தட்ட இதையேதான். அவர் வறுமையிலிருந்து விடுதலை வேண்டும் என்று கோரினார். நிலப் பிரபுத்துவத்திலிருந்து விடுதலை, முதலாளித்துவத்திலிருந்து விடுதலை, சுரண்டலிலிருந்து விடுதலை, ஜாதிய ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை வேண்டும் என்று கேட்டார். அந்த ஓய்வு பெற்ற உயரதிகாரி, டெல்லி போலீஸ் கமிஷனர் மற்றும் அது போன்ற கூட்டத்திற்கு இவை அபாயகரமான முழக்கங்களாக, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியின் மீது அவ நம்பிக்கையை உருவாக்கும் முழக்கங்களாக தோன்றுகிறது. ஆகவே அவை தேசத்துரோக முழக்கமாக தெரிகிறது. செல்வந்தர்களின் நலனை பாதுகாக்கிற நவீன தாராளமயமாக்கலை எதிர்ப்பதால் அவை தேசத் துரோக முழக்கமாக மாறுகிறது. பெரும்பான்மையான மக்களுக்கு அடிப்படை வசதிகள் மறுக்கப்படுகையில் இந்திய மக்கட்தொகையில் ஒரு சதவிகிதம் உள்ளவர்களே எல்லா வளங்களையும் அனுபவிப்பதை ஆட்சேபிப்பதால் அவை தேசத்துரோக முழக்கமாக மாறுகிறது. பெரும்பான்மை கருத்துக்களுக்கு மாறான கருத்துக்களை உடையவர்களை தேசத்துரோகிகள் என்று வசை பாடுவது இன்று புதிய நாகரீகமாக மாறி வருகிறது. உங்களது உணவுப் பழக்கம், ஆடைக் கலாச்சாரம் ஆகியவற்றுக்குக்கூட நீங்கள் தேசியவாதிகளின் சோதனைகளில் தேர்ச்சி பெற வேண்டும். அவை இந்துத்துவப் படை நிர்ணயம் செய்ததோடு ஒத்து வரவில்லையென்றால் நீங்கள் தேசத்துரோகியாக முத்திரை குத்தப்படுவீர்கள். மூட்டை முடிச்சுக்களோடு அண்டை நாட்டிற்குச் செல்ல உங்களுக்கு உத்தரவு வழங்கப்படும்.

இது ஒரு அபாயகரமான சூழல். அதிர்ஷ்டவசமாக ஜேஎன்யு பிரச்சினை மாணவ சமுதாயத்தை ஒன்று படுத்தியுள்ளது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள முதன்மையான கல்வி நிறுவனங்களின் மாணவர்களும் ஆசிரியப் பெருமக்களும் ஜேஎன்யு மாணவர்களுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை பல்வேறு தளங்களில் செயல்படும் முற்போக்கு ஆளுமைகள் கண்டித்துள்ளனர். மாணவர்கள் மீது அதி வேகமாக செயல்பட்ட அதே நேரத்தில் நீதிமன்ற வளாகத்தில் வன்முறையில் ஈடுபட்ட ரௌடி வழக்கறிஞர்களை கண்டு கொள்ளாமலும் இருந்த டெல்லி போலீஸ் கமிஷனரின் பாரபட்சமான நடவடிக்கை குறித்தும் தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்றமே “இது ஒரு அசாதாரணமான சூழல்” என்று சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டது.

அரசியல் சாசனத்தையும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாப்பதற்காக நடைபெறும் இந்தப் போராட்டத்தை தொழிற்சங்க இயக்கம் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டு மட்டும் இருக்க முடியாது. இந்திய எதிர்ப்பு இயக்கம் எதையும் நம்மால் ஆதரிக்க முடியாது. அதை திட்டவட்டமாக நாம் கண்டிக்கிறோம். ஆனால் இந்தியர்களின் தேச பக்தியின் வரையறை என்பதை இந்துத்துவ சக்திகள் கண்டிப்பாக தீர்மானிக்க முடியாது. தேச பக்தியின் எல்லைகள் எது என்று இந்துத்துவ சக்திகள் வரையறுத்துள்ளதை நாம் எதிர்க்க வேண்டும்.

ஆம், நாமும் வறுமையிலிருந்து, வேலையின்மையிலிருந்து, மத வெறியிலிருந்து, ஜாதிய ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை கோருகிறோம். அரை நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ சமூக அமைப்பில் இது தேசத்துரோகம் என்றால் பின் எது தேசியம் என்பது நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. நேர்மையான, சமமான, அனைவருக்கும் இணக்கமான ஒரு சமூக அமைப்பு வேண்டுமெனக் கோருவது தேசத்துரோகமென்றால் பின் எது தேச பக்தி என்பது நமக்கு புரியவில்லை.

இந்துத்துவ சக்திகள் தங்களின் செயல்திட்டத்தில் வெற்றி பெற வேண்டுமானால் அவர்களால் மாணவர்களை அடக்கினால் மட்டும் போதாது. இந்திய மக்கட்தொகையில் பெரும்பான்மையாக இருக்கிற தொழிலாளர்களையும் அடக்கியாக வேண்டும்.   நவீன தாராளமயமாக்கல், சீர்குலைவு சக்திகளால் தொழிற்சங்க இயக்கமும் தாக்குதலுக்கு உள்ளாகும் என்பதில் ஐயமே வேண்டாம். அதற்கான சமிக்ஞைகள் இப்போதே தெளிவாகத் தெரிகிறது. இந்துத்துவ சக்திகளின் தாக்குகளிலிருந்து இந்தியாவை, அதன் அரசியல் சாசனத்தை, அதன் பன்முக மரபுகளைப் பாதுகாக்க தொழிற்சங்க இயக்கம் எழ வேண்டும்.

இந்தியாவின் ஒற்றுமை என்பது இந்தியாவின் எல்லைகளை பாதுகாப்பது மட்டுமல்ல, இந்திய மக்களின் ஒற்றுமையை பாதுகாப்பதும் கூடத்தான் என்பதை இந்திய தொழிற்சங்க இயக்கம் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். இப்போரில் மாணவர்கள் இணைந்து விட்டார்கள். இப்போரில் தொழிலாளர்களும் கூட இணைந்தாக வேண்டும். இப்போர் கடுமையானதாகவும் நீண்டதாகவும்தான் அமையும். ஆனாலும் இப்போரில் நாம்தான் வெற்றி காண வேண்டும், இந்தியாவை பாதுகாக்க, அதன் உயரிய மாண்பையும் பன்முகத் தன்மையையும் பாதுகாக்க.