Wednesday, April 6, 2011

மாநில அரசு ஊழியர்களுக்கு எதிராக மத்தியரசு ஊழியர்களா?

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து  தேர்தல் ஆணையம் நுண் 
பார்வையாளர்களை (Micro Observer) நியமித்து  வருகின்றது.  தேர்தல் 
பணிகளை  செய்வது  மாநில அரசு ஊழியர்கள்  என்றால்  நுண் 
பார்வையாளர்கள்  மத்தியரசு, பொதுத்துறை நிறுவன, அரசுடமை வங்கி 
ஊழியர்கள். பதட்டம் நிறைந்த  வாக்குச்சாவடிகளில்  இந்த நுண் பார்வையாளர்கள்  நியமிக்கப்படுகின்றனர்.  கூடுதல்  கண்காணிப்பு  என்பது நுண் பார்வையாளர்களை  நியமிப்பதற்கான நோக்கமாக  இருக்கலாம். 

ஆனால்  பயிற்சி வகுப்புக்களில்  சொல்லப்படுவது  வேறு  மாதிரியாக 
உள்ளது.  "தவறுகள்  நடக்காமல்  பார்த்துக் கொள்வது உங்கள் பொறுப்பு. 
தவறுகள்  நடக்காமல் இருந்தால்  உங்களுக்கான  அவசியமே  இருக்காது. 
உங்களது  அறிக்கை மிகவும் முக்கியமானது.  அதன் அடிப்படையில்  
தவறு செய்யும்  தேர்தல் அலுவலர் மீது  நடவடிக்கை  எடுக்கப்படும். 
உங்கள் அறிக்கையின் மூலம்  மறு தேர்தல் கூட ஒரு வாக்குச்சாவடியில் 
நடத்த முடியும் " 

இப்படியெல்லாம்  சொல்கிற போது  அந்த நுண் பார்வையாளர்களுக்கு 
இயல்பாகவே  ஒரு வேகம் வந்து விடுகின்றது. ஓஹோ இத்தனை நாள் 
தேர்தல் சரியாகவே  நடக்கவில்லையா,  அதற்காகத்தான்  நம்மை 
நியமித்துள்ளார்களா? பார்ப்போம்  ஒரு கை  என்ற எண்ணம் தானாகவே 
வந்து விடுகின்றது. 
இந்த எண்ணம்  மாநில அரசு ஊழியர்களை சந்தேகக் கண்ணோடு பார்க்க 
வைக்கும்.  வேலை செய்வது நாம், நம்மை கண்காணிக்க இவர்கள் யார்? 
என்ன தெரியும் இவர்களுக்கு  என்ற எரிச்சல் மாநில அரசு ஊழியர்களுக்கு
வந்தால்  அதுவும் நியாயமாகவே  இருக்கும். 
ஒன்று பட்டு போராட வேண்டிய ஊழியர்கள் மனதளவில் கூட முரண்பட்டு  நிற்க அனுமதிக்கக்கூடாது.  அவரவர் வரையறை  என்ன 
என்பதை  சங்கத்தலைவர்கள்  தங்கள்  உறுப்பினர்களுக்கு விளக்கி 
தேர்தல் பணிக்கு அனுப்புவது நலம். 
 

No comments:

Post a Comment