Saturday, April 2, 2011

வரலாற்றை திசை திருப்பாதீர், கலைஞர் அவர்களே ! இறந்து போன உங்கள் சகோதரர்களே மன்னிக்க மாட்டார்கள்!

அதிகார துஷ்பிரயோகமும்  பணப்பட்டுவாடாவும் செய்ய முடியாத 
கோபத்தில் கொந்தளிக்கிற திமுக தலைவர்  தமிழகத்தில்  அறிவிக்கப்படாத  அவசர நிலை  நிலவுகின்றது, அந்தக்காலத்து 
அவசர நிலையையே சந்தித்தவர்கள்  நாங்கள்  என்று கர்ஜித்த அடுத்த 
கணமே, பக்கத்தில்  ஈ.வி. கே.எஸ். இளங்கோவன்  இருப்பதை உணர்ந்து 
அவசர நிலை கொடுமைகளுக்கு கீழ் நிலை அதிகாரிகள்தான் காரணம், 
இந்திரா காந்தி அல்ல என்ற பொருளில் பல்டியடித்துள்ளார். 

அவருக்கு  கீழே கொடுக்கப்பட்டுள்ள பல பத்திகளை அர்ப்பணிக்கிறேன். 
" உலகத்தின் மிகப்புகழ் வாய்ந்த மாபெரும் ஜனநாயக நாடாகக் கருதப்பட்டு வந்த இந்தியத்திருநாட்டில்  அண்மைக்காலமாக ஆளும் காங்கிரசார் கடைபிடிக்கும் போக்கும், பிரதமர் இந்திரா காந்தியார் அவர்கள்  நடைமுறைப்படுத்தும்  காரியங்களும் ஜனநாயக ஒளியை 
அறவே அழித்து நாட்டை  சர்வாதிகார பேரிருள் ஆழ்த்தும் வண்ணம் 
அமைந்து வருவது கண்டு, திமு கழக செயற்குழு தனது வேதனையை 
தெரிவித்துக் கொள்கிறது" 
" இன்றைக்கு நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற நிலைமைகளைக் கண்டு இந்திய நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட பெரிய தலைவர்கள் தங்களுடைய வயதான காலத்தில் - ' தங்களுடைய பேரப்பிள்ளைகள் சுதந்திர இந்தியாவில் எல்லாவிதமான உரிமைகளோடும் உலவுவார்கள்' 
என்று எண்ணிக் கொண்டிருந்த பழைய காலத்து  தேசியவாதிகள் - கண் கலங்கும் காட்சியைக் காண்கிறோம். இந்தக்காட்சி இருக்கலாமா? "

" ஜனநாயகத்தை இனி காத்திட இயலுமா என்ற கவலையிலேயே காந்தி பிறந்த நாளிலேயே அவர் வழி நின்று பணியாற்றிய கர்ம வீரர் மறைந்து விட்டார்." 

" அரசியல்வாதிகளை கைது செய்ய வேண்டும், கடத்தல்காரர்களையும் கள்ளச்சாராய பெரும் வியாபாரிகளையும் கைது செய்யக்கூடாது என்ற மத்திய இந்திரா அரசின் உத்தரவு சமூக விரோதிகளை அடக்கவே 'எமர்ஜன்சி' கொண்டு வரப்பட்டது  என்ற இந்திரா காந்தியின் வாதத்தை வலுவிழக்கச்செய்தது என்பதையும்  நிருபர்களிடம் விளக்கினேன்."

" விடுவார்களா மாறனை?  1975 ல் நெருக்கடி நிலைப பிரகடனப்படுத்தியதை ஒட்டி திமுக தனது எதிர்ப்பினை தீர்மானம் மூலம் வெளிப்படுத்தியபோது  - முரசொலி இதழில் 'இட்லராகிறார் இந்திரா '
என்ற கார்ட்டூனை  வெளியிட்டவராயிறீ மாறன்! அந்த கார்ட்டூன் அமெரிக்கா முதலிய வெளிநாட்டு வார ஏடுகளில் கூட பிரசுரிக்கப்பட்டு 
இந்திராவின் சர்வாதிகாரத்தை  தமிழகம் வன்மையாகக் கண்டிக்கிறது என்பதற்கு சான்று காட்டி எழுதப்பட்டதே: அதனால் மாறனை மிசாச்சட்டம்  விட்டு விடுமா? "

" எதிரியை கைகால்களை கட்டிப்போட்டு விட்டு அவன் நெஞ்சிலும் முதுகிலும் மாறி மாறி குத்துவது போல ஒரு அநியாயாமான  
போராட்டத்தை  அன்றைக்கு மத்திய அரசும் மாநில கவர்னர்  அரசும்
அவற்றுக்கு பக்க பலமாக பிரச்சார பீரங்கிகளும் நடத்தின. "

"  ' சர்வாதிகாரம்' என்று முழங்கினேன்! இளமுருகு அவர்களும் மற்றவர்களும் "வீழ்க" என்று விண்முட்ட முழங்கினார்கள் "

" அனைத்து நாடுகளில் இந்தியாவின் நெருக்கடி காலச்சர்வாதிகாரம் பற்றி விமர்சிக்கப்படுகிற நிலைமை பரவலாகப் பெருகிற்று. அந்த நிலை, பிரதமர் இந்திரா காந்தியின் மீது உலகின் வெறுப்பை அதிகரிப்பதாக இருந்தது."

இவையெல்லாம் வேறு  யாரும்  சொல்லவில்லை கலைஞர் அவர்களே. 

தேசம்  போச்சு!, தேசம் போச்சு! என்று தெம்பும் குரலில் பெருந்தலைவர் காமராசர் கலங்கித் துடித்தாரே, அந்த நெருக்கடி நிலை பற்றித்தான் 
விவரிக்கிறது இந்த தொடர் கட்டுரை நூல்  என்ற பெருமிதத்தோடு 
தாங்கள் எழுதியுள்ள  நெருக்கடி நெருப்பாறு நூலின் 
பகுதிகள்தான். 
இந்திரா காந்தியின் மருமகளோடு கூட்டணி வைத்திருப்பதால் வரலாற்றை  திசை திருப்ப நினைக்காதீர்!  உங்களின் இழி செயலை 
நீங்கள் இந்நூலை காணிக்கை செலுத்தியுள்ள சிட்டிபாபு, சாத்தூர் 
பாலகிருஷ்ணன் ஆகியோர் மன்னிக்க மாட்டார்கள்.


No comments:

Post a Comment