Thursday, January 20, 2011

பீர், பெட்ரோல், வெங்காயம்

இப்போது வந்த ஒரு சுவாரஸ்யமான குறுஞ்செய்தி 

அவசியமான பொருள், வசதிக்கான பொருள்,  ஆடம்பரப் பொருள் என 
மூன்று  பொருட்களுமே  இன்று ஒரே விலையில்தான் விற்கப்படுகின்றது. 

ஒரு கிலோ வெங்காயம், ஒரு லிட்டர் பெட்ரோல், ஒரு பாட்டில் பீர் 
என மூன்றுமே இப்போது 65  ரூபாய்தான். 

ஒரு வேளை இதற்காக மன்மோகன் பெருமைப்பட்டுக் கொள்வாரோ?

கைத்தறித் துணிகளும் காத்திருந்த பெண்மணியும்

நேற்று புதுவை, கடலூர், பண்ருட்டி ஆகிய ஊர்களுக்கு சங்கப் பணியாக சென்று வந்தேன். அப்போது வேலூர் திருவண்ணாமலை
நெடுஞ்சாலையில் புது மல்லவாடியில் இருந்த தொழுநோய் மறு
வாழ்வு இல்லத்தைப் பார்த்தபோது நெஞ்சில் ஏற்பட்ட நினைவுகளை
பகிர்ந்து கொள்வதே இப்பதிவின் நோக்கம். 

அது ஜெயலலிதா ஆட்சிக்காலம். இப்போது போல அப்போதும் கைத்தறி
நெசவாளர்கள் நெருக்கடியில் சிக்கியிருந்த நேரம்.  இலவச வேட்டி சேலை  திட்டத்தை ரத்து செய்திருந்தது நெசவாளர்களின் நெருக்கடியை  அதிகரித்து கஞ்சித்தொட்டி வைக்கும் நிலைக்கு
கொண்டு போயிருந்தது.

அப்போது எங்கள் சங்கத்தலைமை ஒரு அறைகூவல் விடுத்தது. கைத்தறித் துணிகளை கொள்முதல் செய்து ஏழை மக்களுக்கு
வழங்குவது என்பதே அந்த முடிவு. எப்போதும் போல் இந்த
அறைகூவலும் சங்கத்தோழர்களால் உற்சாகமாக வரவேற்கப்பட்டது.
நிதியை வாரி வழங்கினார்கள். தமிழகம் முழுதும் சில லட்சம் ரூபாய்
மதிப்பில் கைத்தறித் துணிகள் வாங்கி வழங்கப்பட்டது. எங்களது
வேலூர் கோட்டத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் வசூலானதாக
நினைவு.

வேலூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, புதுச்சேரி ஆகிய
பகுதிகள் அடங்கியது வேலூர் கோட்டம் என்பதால் மாவட்டத்திற்கு
ஒரு மையத்தில்  துணிகள் வழங்குவது என்று முடிவெடுத்தோம்.
இச்செய்தி அறிந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள
புது மல்லவாடி அரசு மறு வாழ்வு இல்லத்திலிருந்து தொடர்பு
கொண்டார்கள். அங்கே 400 பேர் உள்ளதாகவும் அரசு வழங்கும்
வேட்டி சேலை வராததால் இந்த உதவி கிடைத்தால் பொங்கலுக்கு
அங்கே உள்ளவர்கள் புது ஆடைகள் அணிய முடியும் என்று கடிதம்
எழுதியிருந்தார்கள். 

அதன்படி அங்கே ஆடைகள் வழங்குவது என்று முடிவெடுத்தோம்.
வேலூரில் சைதாப்பேட்டை பகுதியிலும் கடலூரில் ஒரு கிராமத்திலும் ( சட்டென்று பெயர் நினைவுக்கு வரவில்லை. வானமாதேவி என்று நினைக்கிறேன்)  ஒரு பொதுக்கூட்டம் நடத்தி
துணிகள் வழங்கப்பட்டது. அரசின் கொள்கைகளை விமரிசிக்கும்
வாய்ப்பாக அக்கூட்டம் பயன்படுத்தப்பட்டது. வேலூரில் பங்கேற்ற
சுதந்திரப்போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கட்சியின் குடியாத்தம்
தொகுதி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான தோழர்
கே.ஆர்.சுந்தரம் அவர்களின் அன்றைய உரை சிம்ம கர்ஜனை
என்றே சொல்ல வேண்டும்.

புதுவையில் ஒரு முதியோர் இல்லத்தில் துணிகள் வழங்கினோம்.
விழுப்புரம் மாவட்டத்தில் வேட்டவலத்தில் உள்ள ஒரு தொழு நோய்
மறுவாழ்வு இல்லத்தில் வழங்குவது என்றும் திட்டமிட்டிருந்தோம்.
ஒரு சனிக்கிழமை புதுமல்லவாடி சென்று விட்டு பிறகு வேட்டவலம்
செல்வது என்பது பயணத்திட்டம்.

புதுமல்லவாடி இல்லத்துவாசிகளுடைய குழந்தைகள் பலரும் அங்கே
இருப்பதாக தெரிந்ததும் அந்த விபரங்களை கேட்டு  வயதிற்கு ஏற்றார் 
போல ஆயத்த ஆடைகளும் வாங்கிக் கொண்டு புறப்பட்டோம். அதிலே 
ஒரே  ஒரு  மாணவிக்கு  மட்டும்  அளவு போதவில்லை.  அந்தப் பெண்ணின் முகமும்  அந்தப் பெண்ணின் தாயின் முகமும் மிகவும் 
வாடி விட்டது. வேட்டவலம் போய்விட்டு திருவண்ணாமலையில் 
இருந்து இந்த வழியாகத்தான்  வேலூர் திரும்புவோம்.  ஆகவே  திருவண்ணாமலையில்  புது  உடை வாங்கி  வரும் போது   தந்து விட்டுப்போகின்றோம்   என்றோம். 

ஆனால்   வேட்டவலம் போய் திருவண்ணாமலை வருகின்ற போது
எங்களுக்கு மறந்து விட்டது. ஆனால் திருவண்ணாமலையில் பணி
செய்யும் எங்கள் கோட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் தோழர்
பிளாரன்ஸ் லிடியா மறக்கவில்லை. தோழர் அந்தப் பெண்ணுக்கு துணி வாங்க வேண்டாமா என்று அதட்டல் போட்டு அவரது
பெண்ணிற்கு தேர்ந்தெடுப்பது போல ஒரு சுடிதாரை வாங்கிக்
கொடுத்தார்.

மீண்டும் நாங்கள் புதுமல்லவாடி இல்லத்தை அடைந்தபோது இரவு
மணி ஒன்பது இருக்கும். வீதியில் விளக்குகள் இல்லாமல் இருள்
சூழ்ந்திருந்தது. இல்லத்து வாயிலருகில் வாகனத்தை நிறுத்தியவுடன்
ஒரு உருவம் அந்த இருளில் ஒடி வந்தது. அந்த மாணவியின் தாய்தான்  அது. நீங்க நிச்சயமா வருவீங்கன்னு தெரியும் அதனாலதான்
வாசலிலேயே உக்காந்திருக்கேன் என்று அந்தப் பெண்மணி
சொன்னபோது மெய்சிலிர்த்துப்போனது. நல்ல வேலையாக அந்தப்
பெண்மணியின் நம்பிக்கையை காப்பாற்றி விட்டோம் என்ற
உணர்வோடு தோழர் லிடியாவிற்கு மனதில் நன்றி சொல்லி விட்டு
வேலூர் புறப்பட்டோம். மறக்க முடியாத ஒரு அனுபவம் அது.




Friday, January 14, 2011

இன்சூரன்ஸ் செய்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை

ஆயுள் காப்பீடு  செய்ய  விரும்புகின்றீர்களா?  டை  கட்டிய  லாப்டாப்
கம்ப்யூட்டர்  உடன் நுனி நாக்கு ஆங்கிலம்  பேசும்  தனியார்  இன்சூரன்ஸ்
ஆசாமிகளின்  மயக்கும்  மொழிகளில்   மயங்கி  அவர்களின்  நிறுவனத்தில்
பாலிசி  எடுப்பதற்கு  முன்பாக  கீழே  உள்ள  பட்டியலை  ஒரு முறை
பாருங்கள்.  இருபத்தி இரண்டு தனியார்  ஆயுள் காப்பீட்டு  நிறுவங்களின்
லாப நஷ்ட கணக்கை   இன்சூரன்ஸ் கட்டுப்பாட்டு மற்றும்  வளர்ச்சி
ஆணையம்  வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தை  பார்த்து  முடிவெடுங்கள்.






Profit/LossName of the Profit/Loss
For the YearCompanyFor the Full Term up to
2008-092009-102008-092009-10
-779.7257.97ICICI PRUDENTIAL-3776.46-3518.49
-393.02-20.92MAX NEW YORK-1002.75-1023.67
-702.14-435.49BIRLA SUNLIFE-1592.01-2027.5
-194.5-136.77ING VYASA-912.15-1048.92
-495.05-344.71AVIYA-1162.55-1507.26
-502.96-275.19HDFC STANDARD-1191.31-1466.5
-565.24-400.01TATA AIG-1209.85-1609.86
-1084.91-283.79RELIANCE-2390.08-2673.87
14.3469.22KOTAK LIFE-324.34-255.12
-70.68542.28BAJAJ ALLIANZ-560.58-18.3
14.5225.06MET LIFE-129.68-104.62
-26.31276.45SBI LIFE-21.58254.87
-18.1536.2SAHARA LIFE-28.737.47
8.11-18.06SHRIRAM LIFE25.367.3
-417.48-478.17BHARTI AXA-739.9-1218.07
-255.94-356.87FUTURE GENERALI-289.55-646.42
-110.23-104.95IDBI FORTIS-135.76-240.71
4.083.82RELIANCE AEGON-23.79-19.97
-202.07-246.16CANARA-230.87-477.03
-44.46-93.29DLF-44.46-137.75
-18.58-21.41SUDI-19.65-41.06
NEW-52.04INDIA FIRSTNEW-52.04
-5840.37-2056.83-15760.7-17817.52
LIC OF INDIA
957.351060.72841272.91117416.18











பத்து வருடம்  ஆனபின்பும்  இன்னமும்  நஷ்டத்திலேயே  செயல்படும் 





தனியார் கம்பெனிகளா ? லாபகரமாக  வலிமையாக  உள்ள  எல்.ஐ.சி யா?  எல்.ஐ.சி யின் லாபம் என்பது  கூட  ஐந்து கோடி  முதலீடு  






செய்த  அரசுக்கு  அளித்த  லாபப் பங்குத்தொகை  மட்டும்தான். 













நல்ல முடிவு  எடுங்கள் - அது நாட்டுக்கும் உங்கள் வீட்டுக்கும் நல்லது. 































































































































Wednesday, January 12, 2011

கோடிகளுக்கு மாற்றாக ராடியா, ராசா, கல்மாடி

 இந்திய அரசு மிக முக்கிய முடிவொன்று எடுத்துள்ளதாம். இன்னும்
எத்தனை நாட்கள் ஆயிரம்  கோடி. பத்தாயிரம் கோடி,  லட்சம் கோடி 
என்ற வார்த்தைகளைப்     பயன்படுத்துவது என்ற கேள்வி
எழுந்துள்ளதால் புதிய வார்த்தைகளை பயன்படுத்த
முடிவெடுத்துள்ளதாம்.  இனி எதற்கு எத்தனை பூஜ்ஜியம் என்று
யாரும் சிரமப்பட வேண்டாம்

கீழே உள்ள பட்டியலைப் பார்க்கவும்

மதிப்பு                                       புதிய நாணயத்தின் பெயர்  

ஆயிரம் கோடி                                ராடியா
பத்தாயிரம் கோடி                         கல்மாடி
ஒரு லட்சம் கோடி                        ராசா

எப்படி பயன்படுத்துவது ?

இந்தியர்கள் சுவிஸ் வங்கியில் பதுக்கியுள்ள பணம் 150 லட்சம் கோடி
என்றால் 150 ராசா பதுக்க்ப்பட்டுள்ளது என்று இனிமேல் எழுத வேண்டும்.

முகேஷ் அம்பானி கட்டியுள்ள மாளிகையின் மதிப்பு இரண்டு ராடியா.

தமிழக அரசுக்கு (ஆட்சியாளர்கள் ஒதுக்குவதற்காக) மத்திய அரசு
ஒதுக்கியுள்ள தொகை ஒரு கல்மாடி

இந்திய முதலாளிகள் அரசு வங்கிகளிடம் கடன் வாங்கி திருப்பித்
தராமல் ஏமாற்றியுள்ள தொகை ஒரு ராசா.

ஜகன் மோகன் ரெட்டியின் சொத்து மதிப்பு நான்கு கல்மாடி

ரொம்பவும் சுலபமாக இருக்குல்ல !
மத்திய அரசுக்கு ஒரே ஒரு ஆலோசனை

நூறு கோடி மட்டும் என்ன பாவம் செய்தது. அதற்கும் ஒரு பெயர்
சூட்டலாமே.  நூறு கோடி ருபாயை ராஜீவ் என அழைக்கலாம்.
(போபோர்ஸ் ஊழல் தொகை வெறும் 65 கோடி ரூபாய்தானே ) 

Sunday, January 9, 2011

ஐயோ கண்ணைக் கட்டுதே! தாங்க முடியலடா சாமி!

ஊழல் நீதிபதி ராமசாமிக்கு எதிரான பதவி பறிப்பு தீர்மானம்
நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது அவருக்கு ஆதரவாக
ஒரு வழக்கறிஞராக  தோன்றி  ராமசாமி  போன்ற ஒரு புனிதரே 
கிடையாது என வாதாடியவர்  இன்றைய  தொலைதொடர்பு 
அமைச்சர் கபில் சிபல்.  புத்திசாலித்தனமான வக்கீலான அவர் 
மனித வள மேம்பாட்டு அமைச்சராக  இருந்த போது  வெளி நாட்டு
பல்கலைக் கழகங்களுக்கு நடைபாவாடை விரித்தவர். அப்போது
பத்தாம் வகுப்பிற்கு தேர்வு வேண்டுமா, வேண்டாமா என்ற
சர்ச்சையை அவர் கிளப்பி விட எல்லோரும் அதைப்பற்றியே
பேசிக் கொண்டிருக்க அன்னியப் பல்கலைக் கழகங்கள் நுழைவு
என்ற பிரச்சினையே அமுங்கி விட்டது.

அந்த வக்கீலின் புத்திசாலித்தனத்தை அண்ணன் இப்போது
ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில் காண்பித்திருக்கிறார்.  எல்லாம்
ஒழுங்காகத்தான் உள்ளது, தலைமை தணிக்கை அதிகாரிக்குத்
தான் அறிவே இல்லை என கூறியுள்ளார்.  1 ,76 ,௦௦௦ 000  கோடி 
ரூபாய் இழப்பெல்லாம் இல்லை. குறைவு  என்று  வாதாடினால்
கூட ஏற்றுக் கொள்ளலாமா என யோசிக்கலாம். இவரோ ஒரு 
பைசா கூட இழப்பே  கிடையாது  என தடாலடியாக போடுகின்றார்.

2009 ம்   வருடத்து மதிப்பை வைத்து கணக்கிடலாமா என
கேட்டாரே ஒரு கேள்வி. ஐயா 2009 ம் வருடத்தின் மதிப்பை
2007  விற்பனைக்கு கணக்கிடாதே என்று சொல்வது நியாயமாக
இருந்தால் 2001 ல் நிர்ணயம் செய்த தொகைக்கே 2007 ல்
விற்றது மட்டும் எப்படி சரியாக இருக்கும்?

ஸ்பெக்ட்ரம் வாங்கிய நிறுவனங்கள் வாங்கிய இரண்டே
மாதங்களில் அதை விற்று பல மடங்கு லாபம் பார்த்தது
முறைகேடு இல்லையா?

வக்கீல் ஐயாவிற்கு இரண்டே கேள்விகள்

எந்த தவறுமே இல்லையென்றால் வெறும் எதிர்க்கட்சிகள்
நிர்ப்பந்தத்திற்காக மட்டுமே அ.ராசாவை ராஜினாமா
செய்ய வைத்தீர்களா? நீங்கள் தொலைதொடர்பு அமைச்சர்
பதவிக்கு வந்திருக்க வேண்டிய அவசியமே  இருக்காதே.

எந்த தவறுமே இல்லையென்றால்  எதிர்க்கட்சிகள் வைக்கும்
கோரிக்கையான நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணையை
மறுப்பது ஏன்?

கொசுறுக் கேள்விகள் ; எந்த தவறுமே இல்லையென்றால்  
எதற்கு சி.பி.ஐ. ரெய்டுகள். ஊழலை மறைக்கவா?  தொலைத்தொடர்பு
துறையை நிர்வகிப்பது பெரு முதலாளிகள்தானாமே, நீங்கள்
எல்லாமே வெறும் டம்மி தான்.

Thursday, January 6, 2011

இரான், பாகிஸ்தான், இந்தியா - நோ நோ , துர்க்மேனிஸ்தான். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா - ஹி ஹி ஹி

அமெரிக்க அடிமையான மன்மோகன் அரசு செய்துள்ள  ஒரு
தேச துரோக செயல், வெளிச்சத்திற்கே வராமல் போயுள்ளது.  
டிசம்பர் 11 அன்று  துர்க்மேனிஸ்தானில்  இருந்து ஆப்கான்,
பாகிஸ்தான் வழியாக இயற்கை எரிவாயுவை கொண்டு
வரும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
முன்பு இரானிலிருந்து பாகிஸ்தான் வழியாக இயற்கை
எரிவாயு கொண்டு வரும் திட்டத்திற்கான பேச்சுவார்த்தை
முடிந்து ஒப்பந்தம் கையெழுத்தாகும் நேரம் அமெரிக்க
மிரட்டல் காரணமாக அத்திட்டமே கைவிடப்பட்டது.
அத்திட்டத்திற்காக வாதாடிய மணிசங்கர் ஐயர் பதவியும்
பறி போனது.  பாகிஸ்தான் வழியாக குழாயில் எரிவாயு
வருவது அவ்வளவு பாதுகாப்பானது அல்ல என்று அப்போது
மன்மோகன் அரசு விளக்கம் சொன்னது.

இப்போதும் பாகிஸ்தான் வழியாகத்தான் எரிவாயு
வரப்போகின்றது.  இப்போது மட்டும் பாகிஸ்தான் மிகவும்
பாதுகாப்பான நாடாக மாறி விட்டதா?  ஆப்கானிஸ்தான்
வழியாக வருவது மட்டும் பாதுகாப்பானதா? நாளொரு
கலவரம், பொழுதொரு குண்டு வெடிப்பு என்று கொஞ்சம்
கூட அமைதியே இல்லாத பகுதி ஆப்கானிஸ்தான் தானே.
அதிலும் பல முறை இந்தியர்களையும் இந்திய
தூதரகத்தையும் குறி வைத்து தாக்குதல் நடக்கும்போது 
இந்தியாவிற்கான எரிவாயு குழாய்களை  மட்டும் விட்டு 
வைப்பார்களா? 

இன்னும் இரண்டு  விஷயங்கள்  வேறு உள்ளது.  இரானில்
இருந்து குழாய் மூலம் வரும் திட்டத்திற்கான செலவினத்தை
விட துர்க்மேனிஸ்தான் திட்டத்திற்கு கூடுதலாக அழ
வேண்டும்.  இரானை விட கூடுதல் விலைக்குத்தான்
துர்க்மேனிஸ்தான் எரிவாயுவை இந்தியாவிற்கு விற்க
உள்ளது. இந்த கூடுதல் நிதிச்சுமை நம் தலையில்தான்
விடியப்போகின்றது.  இதைத்தவிர நம் மானமிகு,
மாண்புமிகுக் களின் ஊழல்கள் வேறு இருக்கிறது.

ஆக சிறிது கூட பாதுகாப்பே  இல்லாத  ஒரு திட்டத்தை 
அமெரிக்க விருப்பத்திற்காக மட்டுமே நிறைவேற்றப் 
பார்க்கிறது, அதுவும் கூடுதல்  செலவில். அதுவும் 
முழுமையாக நிறைவேறுமா அல்லது சேது சமுத்திர
திட்டம் போல்  எள்ளாகுமா  என்ற உத்தரவாதம் 
இல்லாத ஒரு திட்டத்திற்கு. 

இவர்களை தேசத்துரோகிகள் என்று சொல்லாமல் 
வேறெப்படி  அழைப்பது?   

Wednesday, January 5, 2011

சல்மான்கான் வீடே இப்படியென்றால்?

110  கோடி ரூபாயில் சல்மான்கான் கட்டியுள்ள புது வீட்டைப் பாருங்கள்.இதுவே இப்படி என்றால் 1800 கோடி ரூபாயில் முகேஷ் அம்பானி  கட்டியுள்ள வீடு எப்படி இருக்கும்?   ஒரு புறத்தில்
இது போன்ற ஆடம்பரங்களின் உச்சகட்டம். அதே நேரம்
பெரும்பான்மையான  இந்தியர்கள் சாலையோரத்திலும்
மழை நீர் ஒழுகும் குடிசைகளில் வாழ்வைக் கடத்தும்
வேதனைக்கு இன்னமும் விடியலில்லை. முகேஷ் அம்பானி
வீட்டு கிரகப் பிரவேசத்துக்குச  சென்ற  அரசியல்வாதிகள் 
இந்த முரண்பாடு பற்றி ஒரு வினாடியாவது  சிந்தித்திருப்பார்களா? 










Tuesday, January 4, 2011

2010 ம் ஆண்டிற்கான சிறப்பு விருதுகள்

ஐயா, முதலிலேயே  சொல்லி விடுகிறேன், 
இது என்  கற்பனை இல்லை. 
மின் அஞ்சலில் வந்தது.
நன்றாக இருந்ததால் இங்கே 
பதிவிட்டுள்ளேன்.
நான் பெற்ற இன்பம் 
பெருக இந்த வையகமும் 
என்ற  எண்ணத்தோடு. 

இதனைக் கற்பனை செய்த
ஒரிஜினல் யாரோ 
அவருக்கு என் 
பாராட்டுக்கள் 

(காபிரைட் கேஸ்  எல்லாம் 
போடாதீங்க) 













இதிலே சானியா மிர்சா எதுக்குன்னுதான் புரியல



எதைப் பற்றியும் கவலைப்படாமல்
வெந்ததைத தின்று விதி வந்தால்
செத்துப் போக காத்திருக்கும்
நமக்கான விருது.

Saturday, January 1, 2011

புத்தாண்டுக் கொண்டாட்டமா? மரணத்திற்கான அழைப்பிதழா?

நேற்று  இரவு எட்டரை மணிக்கு இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு
வர முடியவில்லை. பல்வேறு வாகனங்கள் வேகம் வேகமாக கடந்ததும்
வாகனங்கள்  கடக்கும்  வேகத்திலேயே மதுவின் நெடியும் சேர்ந்து 
கடந்ததும்   நாமாவது  சற்று   நிதானமாக  செல்வோம்  என்றாலும்
அதனையும்  கூட  சில  இளைஞர்கள்  கிண்டலாக  பேசி விட்டுப்போனார்கள்.

இன்று தமிழக இளைஞர்கள்   குடிப்பது  என்பது  அதிகரித்தே  வருகின்றது.
குடித்து விட்டு  வாகனங்களை  ஓட்டுவது  என்பதும் நடக்கிறது.   இதனால் 
அவர்களது  உயிருக்கு  ஆபத்து  என்பது  மட்டுமே  அல்ல, தொடர்பே 
இல்லாதவர்கள்  உயிருக்குக் கூட  ஆபத்து.   மிதமான  வேகத்தில் 
வண்டி ஒட்டி வந்த  என் மீது  யாரோ  ஒருவன்  மோதிச்செல்ல  எட்டு 
மாதங்கள்  ஆனா பின்பும்  என்னால்  சரியாக  நடந்திட முடியவில்லை. 
வலியோடுதான் படியேற  வேண்டியுள்ளது.  

எப்போது  தமிழக அரசு நேரடியாக  மதுபானங்களை  விற்கத்
தொடங்கியதோ  அப்போதுதான்  தொடங்கியது  கேடு. மறைவாக ,
ரகசியமாக  குடிப்பதற்குப் பதிலாக  பலரும்   வெளிப்படையாக
 குடிக்க ஆரம்பித்தது அப்போதுதான்.  கட்டுப்பாடுகள் அகன்ற
நிலை அரசுக்கு லாபத்தை அள்ளிக் கொடுத்தது. அரசும்
தீபாவளி, பொங்கல், புத்தாண்டு என்றால் இலக்குகள் வைத்து
விற்பனையை பெருக்குகின்றது.

இன்று இளைஞர்களுக்கும்  மதுபானம் பருக ஏதாவது சாக்கு 
தேவைப்படுகின்றது.  கொண்டாட்டங்கள்  என்றால் தண்ணி 
அடிப்பதுதான்  என்ற கலாசாரத்தை  சினிமாவும் டிவியும் வேறு
வழி காட்டி விட்டது.  

கடந்தாண்டு  எங்கள்  அலுவலகத்தில்  இரவுப் பணிக்கு வந்த
வாட்ச்மேன் தோழருக்கு  மாரடைப்பு வர  அப்போது  அலுவலகத்தில் 
இருந்த  இரண்டு நல்ல உள்ளம் படைத்த  அதிகாரிகள்  அவரை  
உடனே  சி.எம்.சி  மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று  அனுமதித்து
எனக்கும்  தகவல்  அளித்தார்கள்.  நானும்  மருத்துவமனைக்கு சென்று
செய்ய வேண்டிய  பணிகளை  செய்து கொண்டிருந்தேன்.  அவசரப் 
பிரிவுக்கு பக்கத்தில்  உள்ள  கவுண்டரில்  பணம் கட்டிக் கொண்டிருந்த
போது  விபத்தில்  சிக்கிய  ஒரு கல்லூரி  மாணவனை கொண்டு 
வந்தார்கள். 

சில நிமிடங்களுக்குள்ளாக  சர் சர் என்று கிட்டத்தட்ட பத்து பைக்குகள், 
எல்லாமே அப்பாச்சி, பல்சர் போன்ற விலை அதிகமான வண்டிகள். 
இருபது மாணவர்கள். பணம் கட்ட வேண்டும்  என்று சொன்னால் 
அவரவர் பர்சை எடுக்கின்றனர். எல்லாமே ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள்.
மாணவர்களிடம் பணம் மட்டும் இல்லை, அத்தனை பேர் மூச்சுக் 
காற்றிலும் ஆல்கஹால் வாசனைதான்.  விபத்தில் சிக்கிய
மாணவனும் அந்த கொண்டாட்டத்தில் நிதானம் இழந்து வண்டி
ஓட்டியவன்தான்.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக  தி.மு.க  வேலூரில்  ஒரு மண்டல
மாநாடு நடத்தியது.  அதிலே பங்கேற்க  தோழர் என்.வரதராஜன் 
வந்திருந்தார்.  அவருக்கு  ஒரு நல்ல விடுதியில்  அறை  ஏற்பாடு 
செய்து கொடுத்திருந்தனர்.  அப்போது நாங்கள்  ஒரு கையெழுத்து 
இயக்கம் நடத்திக் கொண்டிருந்தோம்.  தோழர் என்.வி யிடம் 
கையெழுத்து  வாங்க  அங்கே சென்றால், அந்த விடுதி முழுதுமே 
ஆல்கஹால் வாசத்தால்  ஆக்கிரமிப்பு  செய்யப்பட்டிருந்தது. 

பின்பு அவரோடு  அந்த மாநாடு சென்றால்  அடுத்த அதிர்ச்சி. 
மாநாட்டுப் பந்தலில்  எதோ வேர்கடலை விற்பது போல 
சர்வசாதாரணமாக  கூடைகளில்  குவார்ட்டர் பாட்டில்கள் வைத்து 
விற்றுக் கொண்டிருந்தார்கள்.  இது வரை நான் கலந்து கொண்ட எந்த
அமைப்பின் மாநாட்டிலும் பார்க்காத காட்சி  அது. 

அடுத்த அதிர்ச்சி இரவு கிடைத்தது.  தோழர் என்.வி. க்கு இட்லி வாங்கிக் 
கொண்டு விடுதிக்கு வருமாறு சொன்னார்கள்.  அதன்படி நானும் 
வாங்கிக் கொண்டு வரவேற்பறையில்  காத்திருந்தபோது  மாநாடு 
முடிந்து இன்றைய  மூன்று  அமைச்சர் பெருமக்கள் ( பெயர்கள்
வேண்டாம் எனக்கு உயிர் மேல் ஆசை இருக்கிறது. இன்னும் சில
கடமைகளும் இருக்கிறது)  வந்தனர். அவர்களும்  ஆல்கஹாலின்  ஆக்கிரமிப்பில்தான்   இருந்தார்கள்.  மேடையில் உள்ள போதே அருந்தினார்களா இல்லை வழியில் காரில் சாப்பிட்டார்களா  என்று
தெரியவில்லை.

இன்றைக்கு மது அருந்துவது ஒரு தவறு. அதனால் ஏற்படும்
விளைவுகள் மிகவும் மோசமானது  என்ற உணர்வே இல்லை.
அதை உருவாக்க வேண்டியது ஒரு உடனடிக்கடமை.  சாராய
வியாபாரத்தில் சாம்ராஜ்யங்களை கட்டியுள்ள கழகங்கள் அதை
செய்யாது. வாலிபர் சங்கம்  போன்ற அமைப்புக்கள்  இதிலே கூடுதல்
கவனம்  செலுத்தினால்  ஒரு மாற்றத்தை  நிச்சயம் உருவாக்க முடியும்.