Thursday, January 6, 2011

இரான், பாகிஸ்தான், இந்தியா - நோ நோ , துர்க்மேனிஸ்தான். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா - ஹி ஹி ஹி

அமெரிக்க அடிமையான மன்மோகன் அரசு செய்துள்ள  ஒரு
தேச துரோக செயல், வெளிச்சத்திற்கே வராமல் போயுள்ளது.  
டிசம்பர் 11 அன்று  துர்க்மேனிஸ்தானில்  இருந்து ஆப்கான்,
பாகிஸ்தான் வழியாக இயற்கை எரிவாயுவை கொண்டு
வரும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
முன்பு இரானிலிருந்து பாகிஸ்தான் வழியாக இயற்கை
எரிவாயு கொண்டு வரும் திட்டத்திற்கான பேச்சுவார்த்தை
முடிந்து ஒப்பந்தம் கையெழுத்தாகும் நேரம் அமெரிக்க
மிரட்டல் காரணமாக அத்திட்டமே கைவிடப்பட்டது.
அத்திட்டத்திற்காக வாதாடிய மணிசங்கர் ஐயர் பதவியும்
பறி போனது.  பாகிஸ்தான் வழியாக குழாயில் எரிவாயு
வருவது அவ்வளவு பாதுகாப்பானது அல்ல என்று அப்போது
மன்மோகன் அரசு விளக்கம் சொன்னது.

இப்போதும் பாகிஸ்தான் வழியாகத்தான் எரிவாயு
வரப்போகின்றது.  இப்போது மட்டும் பாகிஸ்தான் மிகவும்
பாதுகாப்பான நாடாக மாறி விட்டதா?  ஆப்கானிஸ்தான்
வழியாக வருவது மட்டும் பாதுகாப்பானதா? நாளொரு
கலவரம், பொழுதொரு குண்டு வெடிப்பு என்று கொஞ்சம்
கூட அமைதியே இல்லாத பகுதி ஆப்கானிஸ்தான் தானே.
அதிலும் பல முறை இந்தியர்களையும் இந்திய
தூதரகத்தையும் குறி வைத்து தாக்குதல் நடக்கும்போது 
இந்தியாவிற்கான எரிவாயு குழாய்களை  மட்டும் விட்டு 
வைப்பார்களா? 

இன்னும் இரண்டு  விஷயங்கள்  வேறு உள்ளது.  இரானில்
இருந்து குழாய் மூலம் வரும் திட்டத்திற்கான செலவினத்தை
விட துர்க்மேனிஸ்தான் திட்டத்திற்கு கூடுதலாக அழ
வேண்டும்.  இரானை விட கூடுதல் விலைக்குத்தான்
துர்க்மேனிஸ்தான் எரிவாயுவை இந்தியாவிற்கு விற்க
உள்ளது. இந்த கூடுதல் நிதிச்சுமை நம் தலையில்தான்
விடியப்போகின்றது.  இதைத்தவிர நம் மானமிகு,
மாண்புமிகுக் களின் ஊழல்கள் வேறு இருக்கிறது.

ஆக சிறிது கூட பாதுகாப்பே  இல்லாத  ஒரு திட்டத்தை 
அமெரிக்க விருப்பத்திற்காக மட்டுமே நிறைவேற்றப் 
பார்க்கிறது, அதுவும் கூடுதல்  செலவில். அதுவும் 
முழுமையாக நிறைவேறுமா அல்லது சேது சமுத்திர
திட்டம் போல்  எள்ளாகுமா  என்ற உத்தரவாதம் 
இல்லாத ஒரு திட்டத்திற்கு. 

இவர்களை தேசத்துரோகிகள் என்று சொல்லாமல் 
வேறெப்படி  அழைப்பது?   

No comments:

Post a Comment