நிஷா , பிஜ்லி, அய்லா, லைலா.... அடுத்து பாண்டு!
அடுத்த புயல் எப்போது தாக்கும் என்று தெரியாது. ஆனால் அது எப்போது வருவதாக இருந்தாலும் அதன் பெயர் நிச்சயம் மாறப்போவதில்லை. அதன் பெயர் பாண்டு! முன்பெல்லாம் புயல் தாக்கினால் அந்த புயலுக்கு எந்தப் பெயரும் இருக்காது. ஆனால் இப்போது அப்படியில்லை மிக அழகான பெயர்களில் அவை நமக்கு அறிமுகமாகின்றன.
உலக வானிலை அமைப்பு , ஐக்கிய நாடுகள் ஆசிய பசிபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் இவை இரண்டும் சேர்ந்து குறிப்பிட்ட விதிமுறைப்படி தான் இந்த பெயர்களைச் சூட்டும் நடைமுறையைக் கொண்டு வந்துள்ளனவாம். இதன்படி இந்தியப் பெருங்கடலின் வடபுலத்தில் அமைந்துள்ள வங்க
தேசம், இந்தியா, மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய எட்டு நாடுகளும் வரிசைப்படி 64 பெயர்களைத் தேர்ந்தெடுத்து வைத்திருக்கின்றனவாம். அதன்படி தான் பெயர் சூட்டப்படுகிறது.
தற்போது ஆந்திராவைத் தாக்கிய புயலுக்கு 'லைலா' எனப் பெயர் சூட்டியது பாகிஸ்தானாம்! இந்த இந்தியப் பெருங்கடலின் வடபுலத்து நாடுகளில் அடுத்தபடியாக வீசப்போகும் புயலுக்கும் பெயர் தயாராக உள்ளது. அதன் பெயர் பாண்டு! இது இலங்கை வழங்கிய பெயர். அதற்கு அடுத்ததாக வரப்போகும் புயலுக்கு வைக்கப்பட்டிருக்கும் பெயர் பெட். இந்தப் பெயரை வைத்தது தாய்லாந்து. உலக வானிலை அமைப்பு பரிந்துரைத்த பட்டியல் படி இந்த பெயர்களை அடையாளப்படுத்துவதாக இந்திய வானிலைத் துறை புயல்கள் பிரிவு இயக்குநர் எம்.மொகபத்ரா கூறியுள்ளார்.
பாதிப்பைச் சந்திக்க இருப்போருக்கு எளிதில் சென்று சேரும் வண்ணம் இது போல் பெயர் சூட்ட வேண்டும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே ஐ.நா. முடிவு செய்திருக்கிறது. அதன்படி தான் இந்த நடைÓறை தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன்படி கடந்த காலங்களில் தாக்கிய புயல்களுக்கு பெயர் வைத்த நாடுகளைக் கொஞ்சம் தெரிந்துகொள்வோமே! நிஷா (வங்கதேசம்), பிஜ்லி (இந்தியா), அய்லா (மாலத்தீவு), பூயான் (மியான்மர்), வார்ட் (ஓமன்).உலக அளவில் 1970ம் ஆண்டு முதலே இந்த பெயர் வைக்கும் நடைமுறை இருந்தாலும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்த நடைமுறை 2000வது ஆண்டு முதல் தான் பின்பற்றப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். எல்லாம் சரி, எளிமைக்காக இத்தகைய பெயர்களைச் சூட்டுவதாகச் சொல்கிறார்கள். ஆனால் புயல்களுக்கு பெரும்பாலும் பெண்கள் பெயரையே சூட்டுவது ஏன்? பேரழிவு ஏற்படுத்தும் புயல்களுக்கு பெண்களின் பெயரைச் சூட்டுவது அவர்கள் ஆங்கார குணம் கொண்டவர்கள் என்ற மனப்பாங்கை ஏற்படுத்தத்தானோ?
ஹூம், எதிலெல்லாம் பெண்ணடிமைத்தன, ஆணாதிக்கத்தை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கிறது பாருங்கள்! இத்தகைய பெயர் சூட்டும் பேர்வழிகள் புயலைவிட மோசமானவர்கள் என்றுதான் படுகிறது.
நன்றி - தீக்கதிர்
No comments:
Post a Comment