Thursday, October 26, 2023

ஒரு ஸ்டேஷன், மூன்று காட்சி

 


ஞாயிறு இரவு மகனை ரயிலேற்ற காட்பாடி ரயில் நிலையம் சென்றிருந்தேன். அப்போது பார்த்த மூன்று காட்சிகள்,

விசாரணை கவுண்டரில் ஒருவர் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். இரவு 9.15 மணிக்கு சென்னையில் புறப்படும் காவிரி எக்ஸ்பிரஸை தவற விட்டதாகவும் தான் முன் பதிவு செய்திருந்த அதே பெர்த்தை காட்பாடியில் கொடுக்க வேண்டும் என்று அவர் சொல்ல, சென்னையில் நீங்கள் ஏறாத காரணத்தால் அந்த பெர்த்தை வேறு யாருக்காவது கொடுத்திருப்பார்கள், உங்கள் டிக்கெட் ரத்து செய்யப்பட்டதாக கருதப்படும் என்று ரயில்வே ஊழியர் சொல்ல விவாதம் போய்க் கொண்டே இருந்தது. அப்போது மணி இரவு 11.00

9.15 மணிக்கு சென்னையில் புறப்பட்ட ட்ரெயினை தவற விட்ட அந்த பயணி எப்படி ஒன்றே முக்கால் மணி நேரத்தில் காட்பாடி ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தார் என்று புரியவே இல்லை. காரில் வருவதெல்லாம் இன்றைய சாலை நிலவரத்தில் வாய்ப்பே இல்லை. ஒரு வேளை ஹெலிகாப்டரில் வந்திருப்பாரோ? அது எப்படி என்று புரியவே இல்லை.

என் மகன் சென்ற திருப்பதி சாம்ராஜ் நகர் எக்ஸ்பிரஸில் லக்கேஜ் ஏற்றுவதற்கான பெட்டியில் மட்டும் குறைந்தது இருபது பேர் இருந்திருப்பார்கள். ரயில்வே ஆட்கள் அவர்களை கீழே இறக்கி முன்பதிவு செய்யப்படாத பெட்டிக்கு போகும் படி விரட்டிக் கொண்டிருந்தார்கள். 

இரண்டாம் வகுப்பு பெட்டிகளையும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளையும் குறைத்ததன் விளைவு. ரயில்கள் தனியாருக்கு செல்ல செல்ல நிலைமை இன்னும் மோசமாகும்.

ஐந்தாவது பிளாட்பார்மிலிருந்து நான் வந்து கொண்டிருக்க சேலம், கரூர் வழியாக பழனி செல்லும் ட்ரெயின் முதல் பிளாட்பார்மிற்கு வரும் என்ற அறிவிப்பு வந்ததும் பல பயணிகள் அப்படியே இறங்கி தண்டவாளத்தை கடக்க எனக்கோ மிகவும் பதற்றமாக இருந்தது. 

காரணம் அதற்கு முந்தைய நாள் நாளிதழில் படித்த செய்தி.

"ஆம்பூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற சகோதரிகள் இருவர் ரயிலில் அடிபட்டு மரணம்"

 அப்படி என்னதான் அவசரம்! அடுத்த ட்ரெயினை பிடிக்க காத்திருக்கலாமே!

No comments:

Post a Comment