Wednesday, February 28, 2018

சங்கரராமனிடம் மன்னிப்பு - வாய்ப்பில்லை




ஜயேந்திர சரஸ்வதி மரணம் தொடர்பாக “உங்களுக்காக சங்கரராமன் காத்திருப்பார். இப்போதாவது அவரிடம் மன்னிப்பு கேளுங்கள்” என்ற ரீதியில் சில பதிவுகளை பார்க்க நேரிட்டது.

பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம் போன்றவற்றின் மீது எனக்கு கொஞ்சமும் நம்பிக்கை கிடையாது.

அவையெல்லாம் உண்டு என்று கற்பனையாகக் கருதிக் கொண்டால் கூட  அந்த அடிப்படையில்

 “கோயில்களிலும் மடங்களிலும் நடைபெறுகிற ஊழல்கள், முறைகேடுகள் ஆகியவை களையப் படவேண்டும் என்று குரல் கொடுத்ததற்காக” கொல்லப்பட்ட சங்கரராமனும்

“சங்கர ராமன் குரலை ஒடுக்க கொலையாளிகளை அனுப்பி சாட்சிகளின் தடுமாற்றத்தால் விடுதலையான” ஜெயேந்திர சரஸ்வதியும்

சொர்க்கமோ, நரகமோ ஒரே இடத்தில் இருப்பதற்கான, சந்திப்பதற்கான ( ஒரு வேளை சொர்க்க, நரக ஒதுக்கீடு ஊழல் இல்லாமல் செய்யப்படுமானால்) வாய்ப்பு அறவே இல்லை.

எனவே ஜெயேந்திரர் சங்கரராமனிடம் மன்னிப்பு கேட்பதற்கான வாய்ப்பும் சுத்தமாக இல்லை.

ஸ்ரீதேவி - கோபுரத்திலிருந்து ???????



ஒரு சில மணி நேரங்களுக்குள் ஒருவரை கோபுரத்திலிருந்து குப்பைத் தொட்டிக்கு தள்ள முடியும் என்றால் அதற்கு சமீபத்திய உதாரணம் ஸ்ரீதேவிதான்.

அவர் இறந்த செய்தி வந்ததும் வருத்தப்பட்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பலர், அவர் வயிற்றில் மது இருந்தது என்ற தகவல் வந்ததும் அப்படியே பல்டி அடித்து நக்கலடிக்க துவங்கி விட்டனர்.

மட்டையான மயில்
குடி நாட்டிற்கும் மட்டுமல்ல, மயிலுக்கும் கேடு,
குளியல் தொட்டிக்கு பாதுகாப்பு,
துபாய் போகலாமா என்று மனைவியைக் கேட்ட கணவன்

என்று சமூக வலைத்தளம் மீண்டும் மீம்சூழ் உலகாக மாறி விட்டது.

எத்தனையோ தலைவர்கள், கலைஞர்கள், பிரபலங்கள் மதுப் பழக்கத்திற்கு ஆட்பட்டவர்கள். அவர்களின் இறப்பிற்கு மதுப் பழக்கமே காரணமாகவும் இருந்திருக்கிறது. ஆனால் அப்போதெல்லாம் யாருமே அவர்களின் மதுப்பழக்கத்தை நக்கல் அடித்து பேசியது கிடையாது. அது பற்றியெல்லாம் உபதேசம் செய்ததும் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் தண்ணியடிப்பது பற்றி பெருமையாக எழுதுபவர்களும் கூட இருக்கத்தான் செய்கிறார்கள். 

மதுப்பழக்கமோ அல்லது வேறு எந்த கெட்ட பழக்கமோ அது ஆண், பெண் இருவருக்குமே பாதிப்பை உருவாக்கக் கூடியது. நிறுத்தப்பட வேண்டியதுதான்.

எந்த ஒரு ஒழுக்கமும் இரு பாலருக்கும் பொதுவானதுதான். ஆனால் அதை பெண்களுக்கு மட்டும் போதிப்பது 

அப்பட்டமான ஆணாதிக்க மனோபாவம்தான்.

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அது பலருடைய மனதிலிருந்து வெளிப்படத்தான் செய்கிறது என்பதைத்தான் இச்சம்பவமும் உணர்த்துகிறது. 





Tuesday, February 27, 2018

காவிரி - கோதாவரி. கட்காரி- கண்றாவி



மோடியின் மந்திரியான நிதின் கட்காரி நேற்று சென்னையில் அளித்த பேட்டியில்

"காவிரி நதி நீர் மேலாண்மை வாரியத்தை அவ்வளவு சுலபமாக விரைவில் அமைக்க முடியாது. கர்னாடகமும் தமிழகமும் என் கண்கள். இரண்டையும் பாதுகாக்க வேண்டும்.

ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவு செய்து கோதாவரியையும் காவிரியையும் இணைத்து அதன் மூலம் தமிழகத்திற்கு தண்ணீர் தருவேன்"

உடனடியாக காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதி மன்ற ஆணையை முடியாது என்று சொல்கிற நிதின் கட்காரி மீது அவமதிப்பு வழக்கு தொடுக்க வேண்டும்.

தேர்தல் வரப் போகிற கர்னாடகத்தின் கண்ணில் வெண்ணெய் வைப்பதற்காக தமிழகத்தின் கண்களில் வைக்க சுண்ணாம்பு தயாராகிறது.

காவிரி - கோதாவரி இணைப்பு என்பதெல்லாம் நடைமுறைச் சாத்தியம் இல்லாதது.

ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவழிக்கப்படுவதற்கு வாய்ப்பு உண்டு. அது அம்பானி, அதானி என்று ஏதாவது முதலாளியின் கஜானாவுக்குச் செல்லும். 

அதில் ஒரு பகுதி கட்காரியின் பைக்கும் செல்லும்

மூன்று முக்கிய பிரச்சினைகள் மீது . . .


தமிழகத்தின் மூன்று முக்கியமான பிரச்சினைகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

நன்றி - தீக்கதிர் 27.02.2018


தலித் சிறுவன் கொலையை திசை திருப்பும் காவல்துறை
உரிய முறையில் விசாரணை நடத்த சிபிஎம் வலியுறுத்தல்

சென்னை,பிப். 26-

விழுப்புரம் மாவட்டத்தில் தலித் சிறுவன் கொலையை திசை திருப்பி குற்றவாளிகள் தப்பிச் செல்வதற்கு காவல்துறையே உடந்தையாக இருப்பதாகவும் இந்த வழக்கை உரிய முறையில் விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

விழுப்புரம் மாவட்டம் திருக் கோவிலூர் வட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் சமீப காலங்களில், தலித் குடும்பங்கள் மீது கொலை வெறித் தாக்குதல், பாலியல் துன்புறுத்தல், கொலை என பல்வேறு அராஜக நடவடிக்கைகள் ஆதிக்க சக்திகளால் நடத்தப்பட்டு வருகின்றன. மேற் கண்ட இதுபோன்ற சம்பவங்கள் குறித்து விசாரித்து உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அரகண்ட நல்லூர் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்டக்குழு சார்பில் காவல் துறையை கண்டித்து பல்வேறு இயக்கங்கள் நடத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் எந்த நடவடிக்கையும் இல்லை.

இதனைத் தொடர்ந்து, தற்போது திருக்கோவிலூர் அருகேயுள்ள வெள்ளம்புத்தூர் கிராமத்தில் வசித்து வந்த தலித் குடும்பத்தை சார்ந்த ஆராயி(40), அவரது மகள் தனம் (15), மற்றும் மகன் சமையன் (10) ஆகியோர் மீது மர்ம நபர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், சிறுவன் சமையன் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டான். சமையன் உடலிலும், கழுத்திலும் வெட்டு உள்ளதாக கூறப் படுகிறது. உயிருக்குப் போராடிய நிலையில் ஆராயியையும், அவரது மகள் தனத்தையும் முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர். அங்கு ஆக்ஸிஜன் இல்லாத நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆராயிக்கும் தனத்திற்கும் தலையிலும் உடலிலும், பலத்த காயங்கள் உள் ளன. தனத்திற்கு கழுத்து எலும்பு உடைந்துள்ளதாக தெரிகிறது.இச்சம்பவம், ஆராயின் மகள் தனத்தின் மீதான பாலியல் வன் கொடுமையாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, தலித் சிறுவன் படுகொலை மற்றும் அவரது தாய் மற்றும் சகோதரி ஆகியோர் கொலை வெறித்தாக்குதலுக்குள்ளாக்கப் பட்டதற்கு காரணமானவர்களை காவல்துறை உடனடியாக கைது செய்து, குற்றவாளிகளுக்கு சட்டப் படி தண்டனை பெற்றுத்தரவேண்டும்.

 மருத்துவமனையில் உள்ள ஆராயி மற்றும் அவரது மகள் தனம் ஆகியோருக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்றும் அவரது குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
தலித் குடும்பங்களை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்க!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம், அத்தியூர் திருக்கை கிராமத்தில், இருவேறு சமூகத்தை சார்ந்த வாலிபரும், இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதனால், அப்பெண் அந்த இளைஞருடன் திருமணம் செய்துகொள்ளும் நோக் கத்தோடு ஊரைவிட்டு சென்றுள் ளார். பெண்ணின் வீட்டார் தேடிச் சென்று பெண்ணை அழைத்து வந்துவிட்டனர்.இதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் சாதியைச் சேர்ந்த 200 பேர் பயங்கர ஆயுதங்களுடன், தலித் குடியிருப்புகளுக்குள் புகுந்து, 60க்கும் மேற்பட்ட தலித் குடும்பங் களை தாக்கியுள்ளனர். பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதாரம் ஆகியுள்ளன. இதனால் தலித் குடும்பங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற் குழு வன்மையாக கண்டிக்கிறது.பாதிக்கப்பட்ட மக்கள் கிராமங்களுக்கு திரும்ப முடியாத நிலை உள்ளது. எனவே, தலித் குடும்பங்கள் மீது தாக்குதல் நடத்திய ஆதிக்க சக்திகள் மீது வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். உடமைகளை இழந்து தவிக்கும் தலித் மக்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்க வேண்டும். தலித் மக்களின் குடியிருப்புகளுக்கு உரிய பாதுகாப்புகளை வழங்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொடர்ந்து வரும் தலித் மக்கள் மீதான தாக்குதல் களை தடுத்து நிறுத்திட உரிய நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள் வதன் மூலம், இத்தகைய மோசமான நிலைக்கு முடிவு கட்ட அனைத்து ஜனநாயக சக்திகளும் குரல் கொடுக்க வேண்டுமென மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் கே.பாலகிருஷ்ணன் தெரிவித் துள்ளார்.

ஐஐடி விழாவில் சமஸ்கிருதப் பாடல்
கே. பாலகிருஷ்ணன் கண்டனம்


சென்னை, பிப். 26-
சென்னை ஐஐடி விழாவில் சமஸ்கிருதப் பாடல் பாடப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:சென்னையில் உள்ள மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) திங்களன்று காலை நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதுடன், “மகாகணபதிம்” என்ற சமஸ்கிருதப் பாடல் இசைக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சர்கள் நிதின் கட்காரி, பொன். ராதாகிருஷ்ணன் உட்பட அனைவரும் எழுந்து நின்றுள்ளனர். 

பொதுவாக, தமிழகத்தில் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் இசைக்கப்படுவதும், மத்திய அரசு நிறுவனங்களில் தேசிய கீதத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கப்படுவதுதான் நடைமுறையாக இருந்து வருகிறது. ஆனால், இவை இரண்டும் இல்லாமல் சென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெற்ற அரசு விழாவில் சமஸ்கிருத பாடல் இசைக்கப்பட்டுள்ளது என்பது மிகவும் அதிர்ச்சியளிப்பது மட்டுமல்ல, கண்டனத்திற்கும் உரியது.அரசு விழாவில் ஒரு குறிப்பிட்ட மதத்தினுடைய பாடல் இசைக்கப்படுவது என்பது மதச்சார்பின்மைக்கு விடப்பட்ட சவாலாகும். மேலும் இது சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழி திணிப்பினுடைய இன்னொரு வடிவமாகும். உயர்கல்வி நிறுவனத்தில் உள்ள பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்திய பாஜக அமைச்சர்களின் விருப்பத்திற்கு அடிபணிந்து செயல்படுவது மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது. பாஜக ஆட்சியாளர்களின் இத்தகைய சமஸ்கிருத திணிப்பு மற்றும் மதவாதப் போக்கினை இனியும் தமிழ்நாட்டில் அனுமதிக்காத வண்ணம் அனைவரும் குரலெழுப்பிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

கருணை இல்லத்தில் பகீர் மர்மங்கள்
விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர்க! சிபிஎம்

சென்னை,பிப்.26-
பாலேஸ்வரம் ஆதரவற்றோர் கருணை இல்லம் மீது விசாரணைநடத்தி உண்மையை வெளிக்கொணரவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை:காஞ்சிபுரம் மாவட்டம், உத்திர மேரூர் வட்டம், பாலேஸ்வரத்தில் உள்ள ஆதரவற்றோர் கருணை இல்லத்தில், விதிமீறல்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகள் உள்ளதாக தொடர்ந்து பத்திரிகை களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில், வேனில் ஒரு மூதாட்டியும், ஒரு முதியவரும் இருந்ததுடன், காய்கறி மூட்டைகளிடையே ஒரு சடலமும்இருந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள்அந்த வேனை சாலவாக்கம் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ள தாகவும் செய்திகள் வெளிவந்துள் ளன. இது குறித்து அரசு அதிகாரிகள் குழு இந்த கருணை இல்லத்தை ஆய்வு செய்ததில், பல விதிமீறல்கள் கண்டறி யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 

2017 நவம்பர் மாதத்துடன் அரசு அனுமதி முடிந்து விட்டதாகத் தெரிகிறது. இந்த கருணை இல்லத்தில் இறப்பவர்களின் சடலத்தை சுவற்றில் அமைத்துள்ள சிறு, சிறு பெட்டிகள் போன்ற பிணவறைகளில் வைத்து சிமெண்ட் பூசி அடக்கம் செய்யப் படும் வினோத நடைமுறை பின்பற்றப்படுவது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.இக்கருணை இல்லத்தில் 350 பேர் வரை தங்கவைத்திருப்பதாகத் தெரிகிறது. இங்கு இறப்பவர்கள் குறித்த விவரங்களும் காவல்துறை க்கோ, சமூகநலத்துறைக்கோ தெரிவிப்பதில்லை எனவும் கூறுகின்ற னர். இங்கு மர்மமான முறையில்சடலங்கள் அடக்கம் செய்யப்படுவ தால், சடலத்தில் மிஞ்சும் எலும்புகள் விற்பனைக்காக கடத்தப்படுகிறதோ என்ற சந்தேகமும் நிலவுகிறது. 

இறக்கும் தருவாயில் உள்ள முதி யோர்களுக்கான கருணை இல்லம் என்ற பெயரில் செயல்பட்டாலும், இங்கு 4, 5 வயது குழந்தைகள் முதல்அனைத்துமட்ட வயதினரும் தங்க வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்து புகார் அளித்தவர்கள் மீதே காவல்துறை வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.எனவே, தமிழக அரசு இதில் உடனடியாக தலையிட்டு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தி உண்மைகளை வெளிக் கொணர வேண்டும். விசாரணை அறிக்கை அடிப்படையில் கருணை இல்லநிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்றும், இத்தனை முறைகேடுகளுடன் கருணை இல்லம் செயல்பட அனுமதித்த சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டுமென்றும், சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்பப் பெறுவதுடன் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Monday, February 26, 2018

தளபதியின் வேலை அல்ல இது . . .




யார் பேச வேண்டுமோ, அவர்கள் பேசுவதில்லை.
யார் பேசக் கூடாதோ, அவர்கள் பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.


மோடியின் நான்காண்டு ஆட்சியின் சீரழிவுகளில்  இதுவும் ஒன்று.

மூன்று மூத்த அதிகாரிகளை புறம்தள்ளி முறைகேடாக இந்திய ராணுவத்தின் தளபதியானவர் பிபின்  ராவத்.

மோடியின் கண்ணசைவிற்கு ஏற்ப செயல்படுகிற,
சீருடை அணிந்த காவியாக

மாறிவிட்ட அவர் அவ்வப்போது ஏதாவது அபத்தமாக உளறி வாங்கிக் கொள்வார். வாய்ச்சொல் வீரரான ராவத்தின் சமீபத்திய அறிக்கை ஒன்று எரிச்சலை ஊட்டியது.

“அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி அஸ்ஸாமில் பாரதீய ஜனதா கட்சியை விட மிக வேகமாக வளர்கிறது. இது கவலையளிக்கிறது”

எந்த மாநிலத்தில் எந்த கட்சி, எந்த கட்சியை விட வேகமாக வளர்ந்தால் இவருக்கு என்ன பிரச்சினை?

பாஜகவை விட வேகமாக வளர்வது பற்றி கருத்து சொல்ல இவரென்ன பாஜக உறுப்பினரா என்ன?

அக்கட்சி மீது ராவத்திற்கு ஏன் கோபம்>

வேறொன்றுமில்லை

அந்த கட்சி சில இஸ்லாமிய அமைப்புக்களை இணைத்து உருவாக்கப்பட்டது. அதனால்தான் சராசரி காவிகளைப் போல ராவத்தும் பேசியுள்ளார்.

அவரிடம் அழுத்தமாக நாம் சொல்ல வேண்டியது ஒரு கருத்தைத்தான்.

இதெல்லாம் உங்கள் வேலை இல்லை.

உங்களுக்கு முன்பாக தளபதியாக இருந்து இப்போது மத்திய இணை அமைச்சராக உள்ள வி.கே.சிங் போல நீங்களும் எதிர்காலத்தில் அமைச்சரானால் அப்போது இந்த வசனங்களையெல்லாம் அடித்து விடவும்.

ஓ! அப்படி அமைச்சராகத்தான் இந்த அடித்தளமோ?

Sunday, February 25, 2018

யார்தான் ரசிக்கவில்லை மயிலை!!!!



காதலன் கண் முன்னே மாண்டு போக, அதற்குக் காரணமானவனின் தந்தையை திருமணம் செய்து கொண்டு "போடா கண்ணா போ" என்று அவனை அலட்சியமாக டீல் செய்த அந்த "மூன்று முடிச்சுக்கள்" நாயகியை

சப்பாணியை கோபால கிருஷ்ணனாக மாற்றிய மயிலை

தவறானவனிடம் மாட்டிக் கொண்டு தப்பிக்க தடுமாறிய "காயத்ரி"  மற்றும் "சிகப்பு ரோஜாக்கள்" கதாநாயகிகளை

குழந்தையின் மன நிலையில் சுப்பிரமணிக்கு பொட்டு வைக்க இங்க் பாட்டிலை உடைத்த "மூன்றாம் பிறை" விஜியை

தாயைக் கொன்ற தந்தையை வெறுப்போடு பார்த்து இறுதியில் பாசத்தை உணர்ந்த "கவரி மான்" மகளை

ஜானியின் "பாடகி"

அடுத்த வாரிசு "இளவரசி"

வறுமையின் நிறம் சிவப்பு, வாழ்வே மாயம், ப்ரியா, குரு, கல்யாணராமன், மீண்டும் கோகிலா

என்று பல திரைப்படங்களில் நானும்  நீங்களும் ரசித்த ஸ்ரீதேவி
இப்போது இல்லை என்பது வருத்தமளிக்கிறது. 

ஆம். அவரை யார்தான் ரசிக்காமல் இருந்திருப்பார்கள் !

அவருக்கு என் அஞ்சலி

என்றென்றும் மனதில் நிற்கும் சில பாடல்கள் அவர் நினைவாக













Saturday, February 24, 2018

ஜெ சிலை. ஆணியே . . .

ஜெயலலிதாவிற்கு வைக்கப்பட்டுள்ள சிலையைப் பார்க்கையில் ஃப்ரண்ட்ஸ் படத்து வடிவேல் காமெடி காட்சிதான் நினைவுக்கு வருகிறது.



இவர்கள் சிலை வைத்திருக்கவே வேண்டாம். 

ஜகத்தினை அழிக்கும் நேரமிது!




தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடப்பட்ட தேசத்தில்தான்

ஒரு கிலோ அரிசியை களவாடியதாக குற்றம் சுமத்தப்பட்டு மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு இளைஞன் அடித்தே கொல்லப்பட்டிருக்கிறான்.

கொன்றவர்களை விலங்குகள் என்று சொல்லி தூற்றியுள்ளார்கள். அது விலங்குகளுக்கு செய்யப்படுகிற இழிவு.

ஏனென்றால் எந்த விலங்குகளும் தாங்கள் வேட்டையாடுவதை கொண்டாடி செல்பி எடுத்து மகிழ்ந்ததில்லை.

உண்மையில் அந்த கொலைகாரர்கள்தான் மன நிலை தவறியவர்கள். நாகரீகம் வளர்ச்சியடைந்து விட்டது என்பதை பொய்யாக்கியவர்கள். உச்சபட்ச தண்டனையான மரண தண்டனைக்கு தகுதியானவர்கள்.

பதினோராயிரம் கோடி ரூபாயை கொள்ளையடித்தவன் ஆணவத்தோடு பேட்டி கொடுக்கையில்தான் மதுவிற்கு மரணம் நிகழ்ந்துள்ளது.

உணவுக்கு வழி இல்லாத தனி ஒரு மனிதன் கொல்லப்படும் வேளையில் எதற்கு ஒரு உலகம்?

மனசாட்சி மறத்துப் போய், மனித நேயம் மறந்து போய், மனித உணர்வுகள் மறைந்து போன நிலையில் இனியும் இந்த உலகம் தேவையா என்ன?

நாளை ஒருவரை ஒருவர் அடித்துக் கொல்வதும் அதை புகைப்படம் எடுத்து பெருமை பேசும் நடைமுறைதான் உருவாகும் என்றால் இந்த உலகத்தை இன்றே அழித்து விடலாமே?



Friday, February 23, 2018

எச்.ராசா, எந்த மோடியின் இந்தியா இது?



செந்தொண்டர்களுக்கு பயந்து ஷூவை கழட்டி வீசி விட்டு புறமுதுகிட்டு ஓடிப் போன ஏ.டி.எஸ்.பி நாக.செல்வரத்தினத்தை இரும்புக்கரம் கொண்டு கம்யூனிஸ்டுகளை அடக்கியதாக பாராட்டி வாழ்த்து சொல்லிய எச்.ராசாவுக்கு இந்த வடிவேலு படத்தை அர்ப்பணிக்கிறேன்.



அந்த பதிவிலே அந்த மிருகம் வேறு சிலவற்றையும் பிதற்றியுள்ளது.

கம்யூனிஸ்டுகள் ஊர்வலம் போக இது ஒன்றும் கியூபாவோ சைனாவோ இல்லை. மோடியின் இந்தியா.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இந்தியாவில் அரசியல் சாசனப்படி அங்கீகரிக்கப்பட்ட ஒரு தேசியக் கட்சி. கேரளம், திரிபுரா ஆகிய இரண்டு மாநிலங்களில் ஆட்சியில் உள்ள கட்சி. பல லட்சம்  உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சி. அக்கட்சி பேரணி நடத்தக் கூடாது என்று சொல்வது திமிர். ஆணவம். சாரணர் தேர்தலில் வெறும் 52 வாக்குகள் வாங்கிய இந்த ஜென்மத்திற்கு கம்யூனிஸ்டுகள் பற்றி வாய் திறக்க என்ன அருகதை உள்ளது? தூத்துக்குடி சாலைகள் என்ன இவரது அப்பாவும் சீனியர் புரோகிதரின் பிழைப்பைப் பறித்த அம்மாவாசை ஹரிஹரன் போட்டதா என்ன?

இது மோடியின்  இந்தியாவாம்?

இந்திய வாக்காளர்களின் 33 % இளிச்சவாய்த்தனமாக ஆதரித்ததால் பிரதமராக உலகம் சுற்றிக் கொண்டிருக்கிறாரே அந்த நரேந்திர மோடியின் இந்தியாவா?

ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜி உதவி செய்ததால் இந்தியாவை விட்டு ஓடிப் போன கிரிக்கெட் மோசடி லலித் மோடியின் இந்தியாவா?

பதினோராயிரம் கோடியை விழுங்கி விட்டு ஸ்விட்சர்லாந்து நாட்டி டாவோஸ் நகரில்  முதல் மோடியோடு போட்டோவுக்கு போஸ் கொடுத்த நீரவ் மோடியின் இந்தியாவா?

மூன்று மோடிகளும் கேடிகள்.


ஓடிப் போன போலீஸிற்கு ஒரு பாட்டு

ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ!

செ.முத்துக்கண்ணன்,
செந்தொண்டர் படைத் தலைவர், சிபிஐ(எம்)


“கற்றுக்கொள், பிரச்சாரம் செய், ஸ்தாபனமாக்கு” - என்றார் ஜெர்மனி தொழிலாளி வர்க்கத்தின் முன்னணி தலைவர் வில்லியம் லீப் னெஹ்ட். 

அத்தகைய மகத்தானவர்களின் வார்த்தைகளைத் தாங்கி உழைக்கும் மக்களின் உரிமை போராட்டத்தின் திட்டமிடும் திருவிழாவாக பேரெழுச்சியோடு நடந்தேறியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு.மாநாட்டின் நிறைவாக மாநிலம் முழுவதும் இருந்து, பயிற்சி பெற்ற இளம் தோழர்களின் செந்தொண்டர் அணிவகுப்பு நடைபெற்றது. அணிவகுப்பு பிப்ரவரி 20 செவ்வாயன்று மதியம் 3.30 மணிக்கு, கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கொடியசைத்து துவக்கி வைக்க மிடுக்கோடு நடைபோடத் துவங்கியது.

மாவட்ட வாரியாக தோழர்கள் அணி, அணியாக நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட கட்டுப்பாட்டோடு, ராணுவ மிடுக்கோடு கம்பீர அணிவகுப்பை நடத்தினார்கள். அமைதியான முறையில் ஆனால் அதிர வைக்கும் நடையோடு நடந்த அந்த இளம் தோழர்களைக் கண்ட போது, தொப்பை வளர்த்த சில காவலர்களுக்கு கோபம் பிறீட்டு கிளம்பியுள்ளது. ‘மக்களின் நண்பன்’ என்று காவல் நிலையங்களில் எழுதி வைத்துவிட்டு எப்போதும் மக்களின் விரோதியாக செயல்படுவதையே வாடிக்கையாக கொண்டவர்களோ - என சந்தேகப்படும்படியான நபர்களாக அங்கே தமிழக காவல்துறையின் கறுப்பு ஆடுகள் சிலர் நடந்து கொண்டனர். 

அமைதியாக நடந்த செந்தொண்டர் அணிவகுப்பினை சீர்குலைக்கும் நோக்கோடு காத்திருந்த அந்த கண்கொத்திப் பாம்புகளுக்கு சிறு வாய்ப்பு ஏற்பட்டது. பேரணிக்கு இடையூறாக இரண்டு சக்கர வாகன ஓட்டி ஒருவரும், நான்கு சக்கர வாகனத்தில் வந்த ஒருவரும் செல்ல முற்படும்போது, கண்ணியமிக்க செந்தொண்டர்களின் அணிவகுப்பை சாலையோரத்தில் இருந்து பார்வையிட்டுக் கொண்டிருந்த மாணவர் அமைப்பின் தலைவர்களில் ஒருவர், சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளிடம், சில நிமிடங்கள் பொறுங்கள்; அணிவகுப்பின் இந்தக் குழு நகர்ந்தவுடன் நீங்கள் செல்லலாம் என பவ்வியமாகச் சொல்லி புரிய வைத்துள்ளார்.



அப்போது வந்த காவல்துறையின் இளம் ஆய்வாளரும் நிலைமையைப் புரிந்து கொண்டு ஓரமாக நகர்ந்துகொண்டார்.ஆனால் தன்னை சினிமா கதாநாயகனாக நினைத்துக் கொண்ட காவல் உயர் அதிகாரியான உதவி காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் என்பவர், கண்ணுக்கு கறுப்புக் கண்ணாடி, காதில் மாட்டிக்கொள்ள ப்ளுடூத், கையில் காப்பு வளையம் என நிழல் ‘ஹீரோவாக’ வந்து, அங்கே என்ன நடந்தது என்று தெரியாமல் வில்லத்தனத்தில் ஈடுபட்டார். சினிமா பாணியில் கையால் மாணவர் சங்கத் தலைவரைத் தாக்க முற்படும் போது உடன் வந்த அடிவருடி காவலர்களும் தங்கள் பங்கிற்கு தாக்க ஆரம்பித்துள்ளனர். 

இதனைக் கண்ணுற்ற, செந்தொண்டர் அணியில் வந்த இளம் தோழர்கள் நியாயம் கேட்டு, தாக்குதலை தடுக்க சென்றுள்ளனர். அப்போது, மேற்படி ஹீரோ செல்வநாகரத்தினம் அந்த இடத்தில் ஓட்டல் முன்பு போடப்பட்டிருந்த விறகுக் கட்டைகள் மற்றும் சென்ட்ரிங் பலகைகளை உருவி எடுத்து தாக்க ஆரம்பித்து, தனது காவலர்களையும் விறகு கட்டைகளை எடுத்து தாக்க சொல்லியுள்ளார். 

தாக்கிய அந்த காவலர்களுக்கு தெரியாது யாரை தாக்குகிறோம் என்று...தமிழகத்தில் சுனாமி தாக்கியபோதும், வர்தா, ஒக்கி புயல்கள் தாக்கியபோதும், மழை வெள்ளம், வறட்சி காலங்களில் தமிழகம் தாக்குண்டபோது களத்தில் பணியாற்றியவர்களின் வாரிசுகள் என்று!கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களோடு சேர்ந்து மக்களுக்கு விரோதமாக கூட்டுக் களவாணித்தனத்தில் ஈடுபட்ட காவல்துறைக்கு தெரியாது... அணிவகுப்பில் வந்தவர்கள் கள்ளச்சாராய வியாபாரிகளுக்கும் போதைக்கும் எதிரான போராட்டத்தில் வீரமரணமடைந்த சோமு, செம்பு, அமல்ராஜ், கோபி, சந்துரு, ஆனந்தன், குமார், லீலாவதி போன்ற ஒப்பற்ற தியாகிகளின் வாரிசுகள் என்று! 

இப்போது ஓலமிடுகிறதே தமிழக காவல்துறை, பொறுமை காத்திருக்கலாம் என்று... என்ன பொறுமை, யாருக்குப் பொறுமை...?அடி வாங்கியவர்களைப் பார்த்து, அத்துமீறிய காவல் கூட்டம் பொறுமை - பொறுமை என்று ஓயாமல் உபதேசம் செய்கிறார்கள். பொறுமையாய் காத்திருந்த காலத்தில் என்னசெய்தார்கள்... மன்னிப்புக்கேட்பதாக நாடகம் ஆடிவிட்டு, அடிபட்ட தோழர்கள் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளார்கள். உலகை அழிக்க நினைத்து கடைசியில் செங்கொடியின் மீது கை வைத்துப் பார்த்தான் அயோக்கியன் ஹிட்லர்; அவன் துவக்கிய யுத்தத்தை அவனது கோட்டையிலேயே முடித்து செங்கொடியை ஏற்றிய சரித்திரம் படைத்தது செம்படை என்ற வரலாற்றை அறியாதவர்கள் காவல்துறையின் இந்த புல்லுருவிகள். 

உலகமே கொந்தளிப்பில், முதல் உலகப்போருக்கான முஸ்தீபில் இருந்த தருணத்தில் கூட யுத்தத்திற்கு எதிரான சமாதான முழக்கத்தை பிரகடனப்படுத்தியவர்கள் லெனின் தலைமையிலான கம்யூனிஸ்ட்டுகள். இந்த வரலாறு செந்தொண்டர்களுக்குத் தெரியும் என்பதால் உண்மையில் தூத்துக்குடியில் சட்டம் - ஒழுங்கைப் பாதுகாத்ததோடு மட்டுமல்ல, காவல்துறையினரையும் பாதுகாத்தது செம்படையே! 

இளம்செந்தொண்டர்களுக்கு இருந்த அந்த உயர்ந்த மனிதாபிமானம், மனிதநேயம் கூட வயதான அந்த காவலர்களுக்கு சொல்லிக்கொடுக்கப்படாதது இந்த முதலாளித்துவ சமூக அமைப்பு முறையின் கொடூரத்தை தோலுரித்துக் காட்டியது.செந்தொண்டர் ஒருவரை சுற்றி வளைத்து தாக்கியபோதும், வேடிக்கை பார்த்த 4 வயதுக் குழந்தையின் மீது ஒரு காவலர் வீசிய மரக்கட்டை தாக்குதலில் மண்டை உடைந்ததும் கண்ட அந்த இடத்தில் இருந்த பெண்கள் ஆண்களுக்காக காத்திருக்கவில்லை. காக்கிச்சட்டை போட்டவர்களா நீங்கள்; இவ்வளவு பெரிய எண்ணிகையில் வந்தவர்களை உங்களால் என்ன செய்ய முடியும் என்று காவலர்களிடம் நியாயம் கேட்டு முழக்கங்களையும், உரிமைக்குரலையும் உயர்த்திய போது காவல்துறைக்கு புரிந்திருக்கும் நாம் கைவைத்தது தேன்கூட்டில் என்று!

அடிக்க அடிக்க அடிவாங்க நாங்கள் தவறு செய்யவில்லை; உரிமைக்கான பிரகடனம் வெளியிட ஊர்வலமாய் வந்தவர்கள் நாங்கள்; அரசியல் உணர்வுள்ள தொழிலாளர்கள் அடிதடி போராட்டம் நடத்தக்கூடாது என 1899 அன்றே தோழர் லெனின் எங்களுக்கு போதித்திருக்கிறார்; இனி ஒரு அடி விழுந்தாலும் பொறுக்க மாட்டோம் என்று இளம் தோழர்கள் எச்சரித்த போது காவல்துறை அடங்கியிருக்க வேண்டும். ஆனால் அடாவடியைத் தொடர்ந்த காரணத்தால், அதை நிறுத்த அவர்களின் கையில் இருந்த விறகுக் கட்டைகளை பறிமுதல் செய்ய வேண்டிய கட்டாயம் செந்தொண்டர்களுக்கு ஏற்பட்டது. 

இப்போதும் உரக்கச் சொல்கிறோம், தமிழகக் காவல்துறைக்கு... 

கம்யூனிஸ்ட்டுகள் மக்களுக்காக மட்டுமல்ல, இந்த சமூகத்தை அனைவருக்குமானதாக மாற்றி அமைக்க விரும்புபவர்கள். மகத்தான மனிதநேயத்திற்கு சொந்தக்காரர்கள். எனவேதான் காவல்துறையின் சதித்திட்டத்தை முறியடித்து அமைதியை நிலை நாட்டினார்கள். தூத்துக்குடியை அமைதியாக அனைவரும் நேசிக்கும் பூமியாக காவல்துறையின் தாக்குதலுக்குப் பின்னும் பாதுகாத்தார்கள். 

செல்வ நாகரத்தினம் போன்ற அதிகாரிகளுக்குச் சொல்வோம்... 

பாவேந்தரின் மொழியில் சொல்வோம்...

ஆடுகின்றாய் உலகப்பா! 
யோசித்துப்பார்!    ஆர்ப்பாட்டக் காரர்இதை ஒப்பாரப்பா!தேடப்பா ஒருவழியை என்று சொன்னேன்.   
செகத்தப்பன் யோசித்துச் சித்தம் சோர்ந்தான்,
ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர்   உதையப்பர் ஆகிவிட்டால், ஓர்நொடிக்குள் ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர்ஆய்விடுவார் உணரப்பாநீ!


நன்றி - தீக்கதிர் 23.02.2018

Thursday, February 22, 2018

“மய்யத்தில் அவர்” அதிர்ச்சியில்லை, ஆதங்கம்தான் . . .




மக்கள் நீதி மய்யத்தின் மேடையில் தோழர் பாரதி கிருஷ்ணகுமாரைப் பார்த்த தகவலை சில தோழர்கள் குறுஞ்செய்தி வாயிலாகவும் ஒருவர் தொலைபேசி வாயிலாகவும் கூறினார். எங்கள் வேலூர் கோட்டச் சங்க மேடைகளில் பல முறை அவரை பயன்படுத்தியதால் வந்த தகவல் அது.

எங்கள் கோட்டச் சங்க மாநாடுகளின் ஒரு பகுதியான “மக்கள் ஒற்றுமை கலை விழா” வில் உரை வீச்சுக்கு யாரை அழைப்பது என்ற விவாதம் வருகையில் பி,கே வை அழைக்கலாமே என்று ஆலோசனை வருவதும், வேண்டாமே தோழர் என நான் மென்மையாய் மறுப்பதும் ஒரு ஏழெட்டு வருடங்களாக நடந்து கொண்டே இருக்கிறது.

ஏன்?

கொஞ்சம் பின்னோக்கி போகிறேன்.

1998 ம் வருடம் அது. இந்தியன் வங்கி ஊழியர் சங்கத்தின் தமிழ் மாநில மாநாடு வேலூரில் நடைபெற்றது. மாநாட்டின் ஒரு பகுதியாக வேலூர் கோட்டை மைதானத்தில் கலை இரவு நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் புதுகை பூபாளம் குழுவின் கலை நிகழ்ச்சிகள், ஞான.ராஜசேகரன் இயக்கி இசை ஞானியின் இசையில் வெளி வந்த குறும்படம் “ஒரு கண், ஒரு பார்வை” இவற்றோடு இரண்டு உரை வீச்சுக்கள். தோழர் பாரதி கிருஷ்ணகுமார் மற்றும் தோழர் நந்தலாலா.

இருவரின் உரைகளையும் முதல் முறையாக கேட்கும் வாய்ப்பு அப்போதுதான் கிடைத்தது. மெய் சிலிர்த்துப் போனேன். பரவசமடைந்தேன் இப்படி எந்த வார்த்தைகளை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.  மூன்று இணைச்செயலாளர்கள் மட்டும் அந்த கலை இரவில் கலந்து கொண்டிருந்தோம். நான், தோழர் ஏ.நாராயணன், தோழர் வி.ஆர்.ராதாகிருஷ்ணன்.  அந்த வருடம் முதல் முறையாக எங்கள் கோட்ட மாநாடு வேலூருக்கு அப்பால் புதுவையில் நடைபெறுவதாக இருந்தது. நாமும் ஏன் கலை இரவு நடத்தக்கூடாது என்று மூவரும் விவாதித்து தலைவர், பொதுச்செயலாளரிடம் அனுமதி வாங்கி விடலாம் என்ற நம்பிக்கையோடு தோழர் பாரதி கிருஷ்ணகுமார், தோழர் நந்தலாலா இருவரிடமும் பேசி அவர்களின் நாட்களை உறுதி செய்தோம்.

பொறுப்பாளர்கள் கூட்டத்தில் ஒப்புதலும் கிடைத்தது. புதுவையில் நடைபெற்ற கலை இரவில் தோழர் நந்தலாலா பேச தொடங்குகிற வரை தோழர் பி.கே வரவில்லை. சரி, அவர் வரவில்லை போல என்று ஏமாற்றத்துடன் மனதைத் தேற்றிக் கொண்ட நேரத்தில் வந்தார். இடி முழக்கமாய் அமைந்த அவரது உரையில் மயங்கிய எம் தோழர்கள் உடனடியாய் அவரது ரசிகர்கள் ஆனார்கள்.

அதற்குப் பிறகு ஒரு வருடம் விட்டு ஒரு வருடம் என்று அவர் எங்கள் கலை விழா மேடையில் முழங்குவார். அந்த சமயத்தில்தான் அவர் வெண்மணி சம்பவத்தை “ராமையாவின் குடிசை” என்று ஆவணப்படத்தை தயாரித்தார்.  நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிகளுக்கான தொகையை எங்கள் கோட்டத் தோழர்களிடம் வெளியீட்டிற்கு முன்பே பெற்று அனுப்பினோம். தோழர்கள் என்.சங்கரய்யா, என்.வரதராஜன், ஜி.ராமகிருஷ்ணன், கமலஹாசன், இயக்குனர்கள் பாரதிராஜா, பாலு மகேந்திரா, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்ட வெளியீட்டு விழாவில் நானும் தோழர் ஏ.நாராயணனும் அதற்காக மட்டுமே சென்னை சென்று கலந்து கொண்டோம்.

“ராமையாவின் குடிசை” யின் தாக்கத்தால் வெளியீட்டு விழா முடிந்த இரண்டு மாதங்களிலேயே நடைபெற்ற மகளிர் மாநாட்டில் உரையாற்ற அவரை அழைத்திருந்தோம். எப்போதும் போல சிறப்பாக பேசினார். அதன் பின்புதான் அதிர்ச்சியே.

மாநாடு முடிந்த பின் அவர் கேட்ட பயணச் செலவுக்கான தொகை என்பது அது வரை அவர் பெற்றுக் கொண்டிருந்த தொகை போல பல மடங்கு அதிகம் என்பது மட்டுமல்ல, அதிலே அவர் மிகவும் கறாராக இருந்தார். இது நாள் வரை நாங்கள் பார்த்திருந்த தோழர் பி.கே இவர் இல்லை என்ற அதிர்ச்சியிலிருந்து வெளி வர பல நாட்கள் ஆனது.  

இடைப்பட்ட காலத்தில் அவர் “ராமையாவின் குடிசை” யை விற்பதற்காக கூடுதல் பிரதிகள் அனுப்பியிருந்தார். ஆனால் அவை அனைத்தையும் விற்க இயலவில்லை. ஏனென்றால் முன்பே அதனை விரிவாக எங்கள் தோழர்களிடம் எடுத்துப் போயிருந்தோம். அதற்கு வேறு கடிந்து கொண்டார். தோழமை உணர்வு என்பது மங்கிப் போய் வணிகம் என்பது மேலோங்கியிருந்தது என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது.

அதற்குப் பிறகும் கூட தோழர்களின் விருப்பத்திற்கு முன்னுரிமை அளித்து இரண்டு முறை அவரை அழைத்தோம். ஒரு முறை ஒப்புக் கொண்டு அழைப்பிதழ் அச்சடிக்கும் வேளையில் முடியவில்லை என்று மறுத்து விட்டார். இன்னொரு வருடம் அழைப்பிதழைப் பெற்ற பின்பு அந்த தேதியில் வேறு நிகழ்ச்சி உள்ளதை மறந்து தேதி கொடுத்ததாக கூறி விட்டார்.

அதன் பின்புதான் அவரை அழைத்து ஏன் தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்க வேண்டும் என்று அழைப்பதில்லை.

எனக்குத் தெரிந்து அவர் பல வருடங்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலோ  அல்லது தமுஎகச அமைப்பிலோ  உறுப்பினராக இல்லை, இருப்பினும் தமுஎகச மேடைகளில் பேசிக் கொண்டிருந்தார். வேலூர் சிப்பாய் புரட்சியை முன்னிட்டு வேலூர் தமுஎகச நடத்திய ஒரு நிகழ்வில் அவர் பேசியது கிட்டத்தட்ட “அரைத்த மாவுதான்”. புதிதாய் எதுவுமில்லை.  

இந்த வருடம் வெண்மணி சென்று விட்டு வெண்மணி ஆர்ச் அருகில் மற்ற தோழர்கள் வருவதற்காக காத்திருந்த போது அங்கிருந்து ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்த அவர் கை காண்பித்து விட்டு போனார். இது நாள் வரை அவர் மேடைகளில் பேசிக் கொண்டிருந்த விஷயங்களுக்குத்தான் “Bye” சொல்லி விட்டு போயுள்ளார் என்பது அப்போது தெரியவில்லை.

அமைப்பில் பல வருடங்களாக இல்லாத ஒருவர் வேறு ஒரு அமைப்பில் இணைந்தது குறித்து கொஞ்சம் கூட அதிர்ச்சியாகவே இல்லை.

என்ன? இது நாள் வரை பேசிய இடதுசாரித் தத்துவங்களுக்குப் பதிலாக “மய்யக் கொள்கைகளை” பேசப் போகிறாரே என்ற ஆதங்கம்தான் உள்ளது.

அரசியலில் இதெல்லாம் சகஜம்தானோ?



ஏனோ மய்யமா தோனுச்சு !!!!!

ஐந்து வருடத்திற்கு முன்பு எழுதிய கவிதை. மீள் பதிவு செய்ய வேண்டுமென்று ஏனோ மய்யமாக தோன்றியது. வேறு எந்த மய்யத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.



நடு நிலைமை நியாயமில்லை


இந்தப் பக்கம்,
அந்தப் பக்கம்
எங்கும் செல்லாமல்
நடுவில் நின்றால்
சாலையிலும் ஆபத்து
வாழ்க்கையிலும் ஆபத்து

நாணயத்திற்கும்
இரண்டு பக்கம்,
பூ உண்டு,
தலை உண்டு,
நடுப்பக்கம்
எங்கே உண்டு?

உண்மை உண்டு,
பொய் உண்டு,
இரண்டிற்கும் நடுவினிலே
வேறு என்ன உண்டு.?

நியாயத்தின் பக்கமா?
அநியாயத்தின் பக்கமா?
இங்கே எங்கு வரும்
நடுவில் ஒரு பக்கம்?

மதில் மேல்
நிற்கும் பூனை கூட
ஏதாவது ஒரு பக்கம்
குதித்தே தீரும்.

நல்லவராய்
முகம் காட்ட
நடுநிலைமை
என்று சொன்னால்
கோழைதான் என்று நம்மை
கண்ணாடி காண்பிக்கும்.

சரியான பக்கம் நின்றால்
சரித்திரத்தில் புகழ் உண்டு,
தவறான பக்கத்திற்கு
மோசமான இடம் கூட
கண்டிப்பாய் கிடைத்து விடும்.
நடுநிலைமை நாடகம்தான்
நடுத்தெருவில் நிற்க வைத்து
விபத்தை உண்டாக்கும்
நமக்கும்,
நாளை தேசத்திற்கும் கூட.

Wednesday, February 21, 2018

ரீப்பர் கட்டை போலீஸின் கழண்ட ஷூ



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில  இருபத்தி இரண்டாவது பொது மாநாடு  நேற்று தூத்துக்குடியில் நடைபெற்றது. மாநாட்டுப் பொதுக்கூட்டத்திற்கு முன்பாக செந்தொண்டர்கள் அணி வகுப்பு நடைபெற்றது. ஆயிரக் கணக்கான தொண்டர்கள் கட்டுக்கோப்பாக  செங்கடலாக திரண்டது அங்கே இருந்த காக்கி/காவி ஏ.டி.எஸ்.பி நாக.செல்வரத்தினத்திற்கு எரிச்சல் தாங்க முடியவில்லை போல.

தேவையே இல்லாமல் செந்தொண்டர்களோடு வம்பிழுத்து தடியடி நடத்தியுள்ளார். சாதாரண தடியடி இல்லை. அந்த இடத்தில் அவர்கள் தயாராக வைத்திருந்த ரீப்பர் கட்டைகள் கொண்டு  நடத்திய தாக்குதலில் ஒரு சின்னக்குழந்தை உட்பட ஐந்தாறு பேர் கடுமையான காயத்திற்கு ஆளாகியுள்ளனர்.

ஆனால் பொங்கி எழுந்த செந்தொண்டர்கள் முன்பு காக்கிகளின் அராஜகம் எடுபடவில்லை. செல்வ. நாகரத்தினம் உட்பட அங்கே இருந்த காக்கிகள் துண்டைக் காணவில்லை, துணியைக் காணவில்லை என்று ஓட்டம் எடுத்துள்ளனர்.

வேகமாய் ஓடி தப்பிக்க வேண்டுமென்பதற்காக ஏ.டி.எஸ்.பி செல்வ.நாகரத்தினம் ஷூக்களை கழட்டி எரிந்து விட்டு ஓடி உள்ளார்.

அந்த ஷூவை பாதுகாப்பாக வைத்துள்ளதாகவும் அவர் எப்போது வேண்டுமானாலும் வந்து பெற்றுக் கொள்ளலாம் என்று தூத்துக்குடி தோழர்கள் அறிவித்துள்ளனர்.

அவரிடம் தர வேண்டாம்.

அது ஒரு நினைவுச் சின்னம்.

செங்கொடி இயக்கத்தினரோடு மோதினால் அவர்கள் வாங்கிக் கொண்டே இருக்க மாட்டார்கள், எதிர்வினையும் செய்வார்கள் என்பதை காக்கிகளுக்கும் அவர்களைத் தூண்டி விடுகிற எச்.ராசா போன்ற காவிகளுக்கும் எச்சரிக்கை அளிக்கிற சின்னம். 

இன்று ஷூவை கழட்டி விட்டு ஓடியவர்கள் மீது நாளை அதுவே ஆயுதமாக பிரயோகிக்கப்படும் என்பதையும் அவர்கள் உணர்ந்து ஒழுங்காக இருக்கட்டும்.


இப் படம் நேற்றே கடைசியா?



அவர் தொலைக்காட்சி விவாதத்திற்கு வந்தால் அவர் என்ன பேசப் போகிறார் என்பது யாருக்குமே முக்கியம் கிடையாது. ஏனென்றால் அவர் பேசுவது எல்லாமே அபத்தம்தான். அன்றைய தினம் அவருக்கு என்ன அடைமொழி கொடுக்கப் போகிறார்கள் என்பதுதான் அனைவரும் எதிர்பார்க்கிற விஷயம்.

தொலைக்காட்சி ஊடகங்களின் கற்பனைத் திறனுக்கு அடையாளம்தான் அவருக்கு அன்றாடம் அளிக்கிற அடைமொழிகள்.

பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து அவர் நீக்கப்பட்டது தொலைக்காட்சிகளுக்கும் மீம் கிரியேட்டர்களுக்கும்தான் மிகப் பெரிய இழப்பு.

இன்னொரு கைப்பிள்ளை இனி எப்போது கிடைப்பாரோ?



ஒட்டு வேலை - முன்பே சொன்ன கார்ட்டூன்



மோடி சொன்னதால்தான் தான் எடப்பாடியுடன் இணைந்ததாகவும் துணை முதல்வராக பொறுப்பேற்றதாகவும் ஓ.பி.எஸ் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

மோடியால்தான் அந்த ஒட்டு வேலை நடந்தது என்பதை ஹிந்து இதழின் கார்ட்டூனிஸ்ட் திரு சுரேந்திரா அப்போதே நச்சென்று கார்ட்டூனாக சொல்லி இருந்தார்.

அந்த கார்ட்டூன் கீழே.



மோடி அப்படி ஓ.பி.எஸ்ஸிடம் சொன்னாரா என்று எனக்கு தெரியாது என்று தெரியாது என்று அப்பாவித்தனமாக எடுபிடி சொல்லியுள்ளதைப் படிக்கையில் எனக்கு

இந்த காட்சிதான் நினைவுக்கு வந்தது


Tuesday, February 20, 2018

களப் போராளியின் பணி சிறக்கட்டும்



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தமிழ் மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அருமைத் தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.

சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலைய அராஜகப் பேர்வழிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்தது,

சிதம்பரம் நகரையே அச்சுறுத்தி வந்த வாண்டையார் குடும்ப அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது

ஆகியவை அவரது உறுதியைச் சொல்லும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளராக, தலைவராக,

சிதம்பரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக அவர் ஆற்றிய பணிகளும் நடத்திய போராட்டங்களும் அபாரமானது. 

மூன்றாண்டுகளுக்கு முன்பு கடலூர் மாவட்டம் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது மக்களுக்காக அவர் சுழன்று பணியாற்றியதையும் மெத்தனமாக இருந்த அதிகாரிகளை கடுமையாக சாடியதையும் பக்கத்தில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

கொண்ட கொள்கைகளில் பாறை போன்ற உறுதியாக இருந்தாலும் இளகிய நெஞ்சம் கொண்டவர் என்பதையும் எங்கள் தோழர் சி.வெங்கடேசன் அவர்களின் மறைவின் போது இரங்கல் கூட்டத்தில் கதறி அழுதார் என்பதையும் நினைவில் கொள்கிறேன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தமிழகத்தில் புதிய சிகரங்களுக்கு எடுத்துச் செல்ல மனமார்ந்த வாழ்த்துக்கள். 

பி.கு : மேலே உள்ள படத்தில் கீழே உள்ள படங்கள் சிதம்பரத்தில் நடைபெற்ற எங்கள் கோட்டச்சங்க மாநாட்டின் போது எடுக்கப்பட்டவை.



வடிவேலு எனும் தீர்க்கதரிசி



ஒரு ரவுடியின் பிறந்தநாளைக் கொண்டாடியதால் சேலம் மாவட்டத்தில் ஒரு காவல்துறை ஆய்வாளர் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளாராம். அவரை ஏன் பணி இடை நீக்கம் செய்யாமல்  வெறுமனே இட மாற்றம் செய்தார்கள் என்ற் கேள்வி ஒரு புறம் இருக்க



எல்லாவிதமான சூழ்நிலைகளுக்கும் வடிவேலுவின் படக் காட்சிகள் பொருந்துவதைப் பார்த்தால் அவர் ஒரு தீர்க்கதரிசி என்று  நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள்


Monday, February 19, 2018

காமுகனைக் காக்க தேசியக் கொடியை தூக்கு !!!!



காஷ்மீர் மாநிலத்தில் பாஜக தேசியக் கொடியை கையில் உயர்த்தியபடி ஒரு பேரணியை நடத்தியுள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் நடைபெறும் ராணுவ அத்து மீறல்களுக்கு எதிராகவா?

எல்லை தாண்டி பயங்கரவாதிகள் வருவதை தடுக்க முடியாத கையாலாகத தனத்தை கண்டித்தா?

காஷ்மீர் மாநிலத்துக்கென எந்த சலுகைகளும் மத்திய பட்ஜெட்டில் இல்லையே, அதை விமர்சித்தா?

இல்லை காஷ்மீர் மக்களின் ஒற்றுமையை வலியுறுத்திய அமைதி ஊர்வலமா?

நோ, நோ, நோ

இதையெல்லாம் பாஜகவிடமிருந்து நீங்களும் எதிர்பார்க்க மாட்டீர்கள் என்பது எனக்கும் தெரியும்.

ஆனால் இந்த தேசியக்கொடி ஊர்வலம் எதற்கு என்பதை அறிந்தால் நீங்கள் கொஞ்சம் அதிர்ச்சியடைய வாய்ப்பு இருக்கிறது.

காதுவா மாவட்டத்தில் காஸனா என்ற கிராமத்தில் ஆசியா என்ற நாடோடி இனப்பெண் ஜனவரி மாதம் காணாமல் போகிறாள். அவளைக் கண்டுபிடிக்க காவல் துறையிடம் முறையிடுகிறார்கள். மக்களிடம் கொந்தளிப்பு ஏற்பட்ட பின்பு அப்பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப் படுகிறது. அப்பெண் பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டே கொல்லப்பட்டுள்ளாள் என்பதும் தெரிய வருகிறது.

நீண்ட விசாரணைக்குப் பிறகே குற்றவாளியைக் கண்டு பிடித்து கைது செய்துள்ளனர்.

குற்றவாளியை கைது செய்த பின் போராட்டம் எதற்கு என்பதுதானே உங்கள் கேள்வி.

இங்கேதான் ஒரு ட்விஸ்ட் வருகிறது.

கைது செய்யப்பட்ட குற்றவாளி வேறு யாருமில்லை.

காஸனா கிராமத்தை உள்ளடக்கிய ஹிராநகர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் கஜூரியா என்ற உத்தம புத்திரன்.

அந்த உத்தம புத்திரனை விடுதலை செய்ய வேண்டுமென்றுதான் பாஜக அதன் மாநிலச் செயலாளர் விஜய் சர்மா என்ற இன்னொரு உத்தமனின் தலைமையில் பேரணி நடத்தியுள்ளது.


பாலியல் வன் கொடுமை செய்தவனை காத்திட  எல்லாம் உயர்த்தும் அளவிற்கு பாஜக தேசியக் கொடியை மதிக்கிறது. 

எத்தனை நீதிபதிகள் இப்படி சொல்வார்கள்?



நேற்று பத்திரிக்கையில் பார்த்த செய்தி



உச்ச நீதிமன்றத்தில் உள்ள பிரச்சினைகளுக்காக  மற்ற மூன்று நீதிபதிகளோடு நான் இணைந்ததற்கு நான் ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்தவன் என்று சிலர் பழி சொல்கிறார்கள். நான் நீதிபதியாக பொறுப்பேற்கையில் நான் ஒரு அரசியல் கட்சியில் இணைந்திருந்ததை தெரிவித்திருந்தேன்.  நீதிபதியான பின்பு அந்த இணைப்பை முழுமையாக துண்டித்து விட்டேன். ஏனென்றால் அப்படி இருப்பது என் பொறுப்புக்களை, கடமைகளை நிறைவேற்ற தடையாக இருக்கும். என் மீது பழி போட்டவர்களால் தங்களுக்கும் எந்த அரசியல் கட்சிக்கும் தொடர்பே கிடையாது என்று சொல்ல முடியுமா?

இன்னும் நான்கு மாதங்களில் ஓய்வு பெற்ற பின்பு, நான் வேறு எந்த பணிக்கும் செல்ல மாட்டேன் என்று இங்கே பகிரங்கமாக கூறுகிறேன்.  ஏதாவது வாய்ப்பு தாருங்கள் என்று அரசிடமோ அல்லது வேறு யாரிடமோ கெஞ்சிக் கொண்டிருக்க  மாட்டேன். இந்த மாவட்டத்திலேயே நிம்மதியாக ஓய்வுக் காலத்தைக் கழிப்பேன்.

விஜயவாடாவில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில்  உச்சநீதிமன்ற நீதிபதி சேலமேஸ்வர் பேசியதன் தமிழாக்கம்தான்  மேலே உள்ளது.

அந்த ஆணையம், இந்த ஆணையம், போதாக்குறைக்கு ஆளுனர் பதவி என்று ஆசையைத் தூண்ட ஆயிரம் வாய்ப்புக்கள் உள்ள நிலையில்

எத்தனை நீதிபதிகள் இப்படி சொல்வார்கள்?

அப்படி சொன்னால் எவ்வளவு நன்றாக இருக்கும் !!!

பி.கு ; நீண்ட காலமாக ட்ராப்டிலேயே இருந்தது என்றாலும் அவசியம் பகிர்ந்து கொள்ள வேண்டிய செய்தி என்பதால் இப்போது பகிர்ந்து கொள்கிறேன்