Saturday, July 29, 2017

ஒல்லியான உருவம் . . .வலிமையான ஒலி




தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளரும் அனைந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் தலைவருமான தோழர் ஆர்.முத்துசுந்தரம் அவர்களின் மறைவு மிகுந்த துயரமளிக்கிறது. 

ஒல்லியான உருவம் கொண்டவர். ஆனால் அவரது உரைகளோ வலிமையாக இருக்கும். நேரடியான பழக்கம் கிடையாது ஆனாலும் பல முறை அவரது உரையைக் கேட்டுள்ளேன். வேலூர் சிப்பாய் புரட்சியை ஒட்டி தமுஎகச ஏற்பாடு செய்த கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை இன்னும் மனதில் உள்ளது.

தோழர் ஆர்.எம்.எஸ் அவர்களுக்கு வீர வணக்கம்.

எங்கள் தென் மண்டல துணைத் தலைவர் தோழர் கே.சுவாமிநாதன் அவர்கள் பதிவு செய்திருந்த அஞ்சலிச் செய்தியை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்

 
தோழர் முத்துசுந்தரம் மறைவு

இனிமை, எளிமையுடன் வலம் வந்த பண்பட்ட தலைவர் தோழர் முத்துசுந்தரம் அவர்களை 30 ஆண்டுகளாக அறிவேன். அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் தலைவராக உழைப்பால், உணர்வு மிக்க செயல்பாட்டால் உயர்ந்தவர். 

அவரை முதல் முதலில் 1988 ல் இராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் பள்ளியில் ஓர் கருத்தரங்க சிறப்புரையாளராக வந்திருந்தபோது சந்தித்தேன். அருவி போன்ற நடை . அவருக்காகவே வந்த கூட்டமும் அதிகம். அதில் மூட்டா பார்த்தசாரதி, நிசார் அகமது ஆகிய தலைவர்களும் பேசினார்கள். மூவரின் பேச்சுகளும் பல நாள் பேசப்பட்டது. அது நான் பார்வையாளனாக இருந்த கூட்டம். 

நானும் அவரும் 1997 ல் சிவகங்கை அரண்மனை முன்பு சுதந்திர பொன்விழா திறந்த வெளி கருத்தரங்கில் பேசினோம். நான் பேசி முடித்தவுடன் என்னை பாராட்டிய விதம் என்னை நெகிழச் செய்தது. அவர் பாராட்டிய அளவுக்கு என்னுடைய பேச்சு தகுதி உடையதாக அன்று அமைந்தததா என்ற கேள்வி என் மனதில் இருந்தது. ஆனால் புதியவர்களை தட்டிக் கொடுத்து ஊக்குவிக்க வேண்டும் என்கிற தலைமைப் பண்பின் வெளிப்பாடு அது. இது அவரோடு ஒரே மேடையில் நானும் இருக்கிற வாய்ப்பு கிடைத்தபோது. 

2016 ல் ஈரோடு அனைத்து தொழிற்சங்க கருத்தரங்கம் ஒன்றில் தோழர் ஆதவன் தீட்சண்யாவும் நானும் பேசினோம். தோழர் முத்து சுந்தரம் ஓர் அகில இந்தியத் தலைவர். ஆனால் அவர் வருகை தந்து பார்வையாளராக அமர்ந்து கேட்டார். என்ன எளிமை, அடக்கம்! நிறைகுடங்கள் தழும்புவதில்லை என்பதை நேரில் கண்டேன். 

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க வைரவிழா மாநாடு டெல்லியில் நடைபெற்ற போது பொது மாநாட்டில் பேச அழைக்கப்பட்டிருந்தார். 

அவருக்கு விமானப் பயணம் ஏற்பாடு செய்வதாக கூறினேன். நீங்களெல்லாம் எதில்?என்று கேட்டார். அதற்குப் பிறகு எங்களிடம் சொல்லாமலே முன்பதிவு செய்துகொண்டார்.


நாங்கள் பயணித்த அதே தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் சாதாரண இரண்டாம் வகுப்பில் வந்தார். பக்க மேல் படுக்கையில் ஏறி படுத்துக் கொண்டார்.  உடன் வந்த அனைத்து தோழர்களும் அவரின் எளிமையால் ஈர்க்கப்பட்டனர். 


நிறைய வாசிப்பவர். ஈகோ இல்லாமல் உரையாடுபவர். குழந்தை போன்று தோழமையில் கரைந்து போகிறவர். ஆனால் போராட்ட உறுதி எனும்போது அவரின் போர்க் குணம் நீர்க்கவே செய்யாது. 

முத்து சுந்தரம் அவர்களே! உங்கள் பேச்சு மட்டுமல்ல, உங்களின் வாழ்க்கையும் எங்களுக்கு நிறையக் கற்றுக்கொடுத்திருக்கிறது. எப்படி உங்கள் மறைவை ஈடு கடடப்போகிறோம்! 

க. சுவாமிநாதன்.
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்.

No comments:

Post a Comment