Thursday, December 26, 2013

சுனாமி நினைவலைகள்



சுனாமி நிவாரணப்பணியில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க உறுப்பினர்களின் பணி மகத்தானது. நான் வலைப்பக்கம் எழுதத் தொடங்கிய புதிதில் சுனாமி நிவாரணப்பணிகள் குறித்த அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்களேன் என்று எங்கள் தென் மண்டலப் பொதுச் செயலாளர் தோழர் கே.சுவாமிநாதன் கூற அவற்றை தொடராக எழுதத் தொடங்கினேன். மூன்று நாட்கள் கூட எழுதவில்லை. சிறப்பான பணி செய்தார் என்று ஒரு தோழரின் பெயரை குறிப்பிட வேறு ஒரு மனிதர் ஏதோ தான் இருட்டடிப்பு செய்யப்படுவதாக தவறாக புரிந்து கொண்டு தடித்த வார்த்தைகளில் பின்னூட்டம் போட வெறுத்துப் போய் அத்தொடர் எழுதுவதையே நிறுத்தி விட்டேன்.

யாரோ ஒருவரின்  மோசமான அணுகுமுறைக்காக அப்படி செய்திருக்க வேண்டுமா என்ற கேள்வி மனதில் அவ்வப்போது வந்து கொண்டே இருக்கும்.

கடந்தாண்டு எங்கள் சங்கத்தின் வெள்ளி விழா ஆண்டை ஒட்டி வேலூர் கோட்டத்தின் இருபத்தி ஐந்து ஆண்டு வரலாற்றை தொகுத்த போது சுனாமி நிவாரணப்பணிகள் குறித்து விரிவாக எழுதினேன். அந்த புத்தகத்தில் எழுதப்பட்டதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அது எங்கள் சங்க உறுப்பினர்களுக்காக எழுதப்பட்டது. நீங்களும் படிக்கக் கூடியதாகவே இருக்கும் என்று நம்புகிறேன். 



ஆர்ப்பரித்த ஆழிப் பேரலை, ஆதரவாய் உயர்ந்த கரங்கள்

26.12.2004 – யாராலும் மறக்க முடியாத ஒரு நாள். தமிழகம் மற்றும் புதுவை இயற்கையின் சீற்றத்தை கண்டு அதிர்ச்சியில் நிலை குலைந்து போன நாள். இந்தோனேசியாவில் ஏற்பட்ட நில நடுக்கம், இந்திய கடற்கரையை தாக்கிய நாள். இதுநாள் வரை காணாத பேரழிவையும் பெருந்துயரத்தையும் அளித்த நாள். மனிதர்கள் மனதில் இன்னும் ஈரம் ஒட்டிக் கொண்டுதான் உள்ளது என்பதையும் நிரூபித்த நாள்.

சுனாமி – இந்த பெயரையே, அது வந்து தாக்கும்வரை நாம் அறிந்ததில்லை. அன்று காலை கடல் அலை மலையாய் எழுந்து வந்து சில வினாடிகள் அமைதியாய் நின்று உள்ளே சென்றது. உள்ளே செல்கையில் அதன் ஆக்ரோஷத்திற்கு மனிதர்கள், படகுகள், வீடுகள், வீட்டில் உள்ள பொருட்கள், மரங்கள், அங்கே இருந்த வாகனங்கள் என்று எதுவும் தப்பவில்லை.

என்ன நடந்தது என்றே யாருக்கும் புரியவில்லை, கடல் சீற்றம், கடல் கொந்தளிப்பு, கடல் ஊருக்குள் புகுந்தது என்று என்னன்னெவோ சொல்லப்பட்டது. பிறகுதான் இதற்கு பெயர் சுனாமி என்று சொல்லப்பட்டது. ஜப்பானிய மொழியால் அழைக்கப்பட்ட சுனாமி தமிழகம் முழுதும் மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தியிருந்தது.

சென்னை தொடங்கி முக்கடலும் சங்கமிக்கும் குமரி வரை தென் தமிழகக் கடற்கரை எங்கும் சுனாமியின் தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர், தாய் தந்தையை இழந்த குழந்தைகள், குழந்தைகளை இழந்த பெற்றோர், குடும்பத்தில் ஒருவரையோ இருவரையோ பலி கொடுத்த சோக நிகழ்வுகள் என காணும் இடமெல்லாம் கண்ணீர் காட்சிகள்தான்.

தனித்தனியாய் சடலங்களை அடக்கம் செய்ய முடியாமல் பெரிதாக ஒரு குழி வெட்டி அதிலே பல சடலங்களை போட்டு புதைப்பது என்று நடந்தது. இதயக்கனி என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றதால் எம்.ஜி.ஆர் திட்டு என்று பெயர் மாறிய சிறிய அழகிய தீவுக் கிராமமே சிதிலமடைந்து போனது. அந்த ஊரே ஒரு மயானமாகிப் போனது.

உயிரைப் பணயம் வைத்து கடலுக்குச் சென்று மீன் பிடித்து மற்றவர்கள் சுவையாய் உணவு உண்ண வழி வகுத்த மீனவக் குடும்பங்கள் சுனாமியால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டார்கள். கடற்கரையை ஒட்டியிருந்ததால் அவர்களின் வீடுகளும் உடமைகளும் பறி போயின. உயிரிழப்புக்களுக்கும் குறைவில்லை. எல்.ஐ.சி குடும்பத்தில் கூட நாகையில் ஏ.ஏ.ஓ வாக பணியாற்றிய திருமதி சூடாமணி என்பவரது குடும்பத்தில் அவரது குழந்தைகள் உட்பட ஆறு பேர் இறந்து போயினர். வேலூர் கோட்ட முன்னாள் தலைவர் தோழர் ஆர்.ஜெகதீசன் அவர்களின் குடும்பத்திலும் இருவர் கல்பாக்கத்தில் சுனாமிக்கு பலியானார்கள்.

மீண்டும் அலை வந்து தாக்குமோ என்ற அச்சத்தோடு, கடற்கரையிலிருந்து விலகி எல்லோரும் ஓடி வந்து கொண்டிருக்கையில் இடதுசாரி இயக்கங்கள், தொழிற்சங்க இயக்கங்கள் ஆகிய அமைப்புக்களின் தோழர்கள் மட்டும் கடற்கரையை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி உதவி செய்வது என்ற நோக்கத்தில் அவர்கள் மட்டும் தைரியமாக கடற்கரைக்கு சென்றார்கள்.

அப்படிச் சென்றவர்களில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தோழர்களும் உண்டு. கடலூர், புதுவை, சிதம்பரம் ஆகிய கிளைகளின் பொறுப்பாளர்கள் தோழர்கள் சி.வெங்கடேசன், எஸ்.ஜெயஸ்ரீ, ஆர்.எம்.ராம்ஜி, பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும் சங்க உணர்விலிருந்து ஓய்வு பெறாத மூத்த தோழர் புதுவை ஆர்.பாலசுப்ரமணியன் ஆகியோர் அப்படி கடற்கரையை நோக்கி சென்ற முக்கியமான தோழர்கள்.

மிகவும் மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது, நம்மால் இயன்ற பணியை நாம் செய்ய வேண்டிய முக்கியமான தருணம் இது என புதுச்சேரி, கடலூர் கிளைத் தோழர்கள் தகவல் தெரிவித்தனர். புதுவை கிளைத் தோழர்கள் உடனடியாக புதுவை பல்கலைக் கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நிவாரண முகாமில் தங்கியிருந்தவர்களுக்கு ஆயிரம் பாக்கெட் பிரட்டுக்களை வாங்கி அளித்தார்கள்.

அன்று மாலை வேலூர் மையத்தில் இருந்த கோட்டச்சங்க நிர்வாகிகள் கூடி நிவாரணப்பணியில் நாம் ஈடுபட வேண்டும். நிவாரண உதவியாக ஒவ்வொரு தோழரும்  ரூபாய் நூறு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பது முடிவு செய்து  கையால் எழுதிய சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது. மறுநாள் கோட்டச்சங்கப் பொறுப்பாளர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. அன்றைய சூழலில் பாதிப்பு பற்றிய முழுமையான நிலைமை புரியாததால்தான் நூறு ரூபாய் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அது போதாது என்பது பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்ற பிறகுதான் புரிந்தது.

அகில இந்தியப் பொதுச்செயலாளர் தோழர் கே.வேணுகோபால் அவர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நமது தோழர்கள் யாராவது பாதிக்கப் பட்டுள்ளார்களா என்று விசாரித்து, நிவாரணப் பணிகளில் நாமும் முழுமையாக ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தினார். கோட்ட நிர்வாகத்தோடு பேசி அவர்களையும்  நிவாரணப்  பணியில் ஈடுபட வையுங்கள் என்றும் ஆலோசனை வழங்கினார்.

27.04.2004 காலையில் கோட்ட அலுவலகத்தில் அஞ்சலிக் கூட்டம் நடத்தி நிவாரண உதவிக்கான வேண்டுகோள் வைக்கப்பட்ட போதே பல தோழர்கள் அப்போதே ஐநூறு, ஆயிரம் என நிதி உதவி அள்ளித் தந்தார்கள். குளிர் காலமாக இருப்பதால் போர்வைக்கான அவசியம் உள்ளது. நிலைமையைப் பயன்படுத்திக் கொண்டு இரு மடங்கு விலையில் இங்கே விற்கிறார்கள், எனவே வேலூரிலிருந்தே போர்வை, வேட்டி, சேலை போன்றவற்றை வாங்கி வந்தால் அதிகமானவர்களுக்கு உதவ முடியும் என்று புதுவைத் தோழர்கள் சொன்னார்கள். அதன்படி வேலூரில் பல பொருட்கள் வாங்கப்பட்டது. வேலூர் சாரதி மாளிகையில் இருந்த நடைபாதை வியாபாரிகள் நமது நோக்கம் என்ன என்பது தெரிந்தவுடன் கிட்டத்தட்ட  குழந்தைகளுக்கான  இருபத்தி ஐந்து ஆயத்த ஆடைகளை இலவசமாக வழங்கினார்கள். நாம் போர்வைகள் வாங்கியது ஹரியானா ஹாண்ட்லூம் என்ற சீக்கியரின் கடையில். அவர் போர்வைகளுக்கு கூடுதல் தள்ளுபடி அளித்தது மட்டுமல்லாமல், எனது பங்காக அந்த மக்களிடம் சேருங்கள் என்று இருபத்தி ஐந்து சால்வைகளையும் அளித்தார்.

கோட்டச்சங்கப் பொறுப்பாளர்கள் தோழர்கள் ஏ.நாராயணன், எஸ்.ராமன், எம்.தசரதன், எஸ்.ரமேஷ்பாபு, எஸ்.பழனிராஜ் ஆகியோர் அன்று புதுவை நோக்கிப் புறப்பட்டார்கள். புதுவை சென்றடைய இரவு ஏழு மணியாகி விட்டதால் இந்த நேரத்தில் கடற்கரைப் பக்கமோ, அல்லது நிவாரண முகாம்களுக்கோ செல்வது உசிதமல்ல, காலை செல்லலாம் என்றும் காரைக்கால் பகுதிக்கும் உதவிகள் தேவைப்படுகின்றது. அதற்கு ஏதேனும் ஏற்பாடுகள் செய்தால் உதவிகரமாக இருக்கும் என்றும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை பிரதேசச் செயலாளர் தோழர் வி.பெருமாள் அறிவுறுத்தினார். நமது புதுவைத் தோழர்களும் அங்கிருந்தனர்.

மறுநாள் காலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் என்.வரதராஜன் அவர்கள் தலைமையில் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய ஒரு குழு சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்திருந்தார்கள். நாமும் அவர்களோடு இணைந்து கொண்டோம். பிள்ளைச்சாவடி, காளாம்பட்டு போன்ற கடற்கரை கிராமங்களில் நாம் கொண்டு போயிருந்த பொருட்களை அவர்கள் மூலமாக வழங்கினோம்.

கடல் அலைகளின் ஓசையை உறவுகளை, உடமைகளை இழந்தவர்களின் துயரக்குரல் அமுங்கச் செய்தது. எத்திசை நோக்கினும் அங்கே கண்ணீர் மல்க இருந்தவர்களைத்தான் பார்க்க முடிந்தது. நிவாரண முகாம் அமைந்திருந்த புதுவைப் பல்கலைக்கழக வளாகத்திலும்  அழுகுரல் ஒலித்துக் கொண்டே இருந்தது. காணாமல் போன குழந்தையை முள் செடிகளுக்கிடையே சடலமாகக் கண்டு அதை அடக்கம் செய்து விட்டு அப்போதுதான் திரும்பிருந்த ஒரு தாயின் கதறல் இப்போதும் நெஞ்சில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.

தோழர் கே.வேணுகோபால் அவர்களின் அறிவுறுத்தல்படி கோட்ட நிர்வாகத்தோடு பேசியதில் நிர்வாகமும் அவர்களால் இயன்ற உதவியை செய்வதாக உறுதியளித்தது. புதுவை, கடலூர், மற்றும் சிதம்பரம் கிளைகளில் நிர்வாகம் கிட்டத்தட்ட ஒரு வார காலத்திற்கு உணவுப் பாக்கெட்டுகளை வழங்கியது. ஒவ்வொரு கிளையும் ஒவ்வொரு நாளும் சுமார் ஆயிரம் பேருக்கு உணவு வழங்கியது என்பது பாராட்டத்தக்கது.

புதுவையின் பாதிப்புக்களை பார்க்கும் போதே மற்ற பகுதிகளின் பாதிப்புக்கள் எப்படி இருக்கும் என்பதையும் நாம் இன்னும் அதிகமாக உதவ வேண்டிய அவசியம் உள்ளது என்பதையும் உணர முடிந்தது. அதனால் நூறு ரூபாய் என்பதற்குப் பதிலாக ஒவ்வொரு தோழரும் ஒரு நாள் ஊதியம் தாருங்கள் என்று வேண்டுகோள் விடுக்கும் புதிய சுற்றறிக்கை புதுவையிலேயே தயார் செய்யப்பட்டு அங்கிருந்தே அனைத்து கிளைகளுக்கும் அனுப்பப்பட்டது.

காரைக்கால் பகுதிக்கு மறுநாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் ஒரு குழு செல்வதாக இருந்தது. கோட்டச்சங்கத்தின் மாநாடு சில வாரங்களுக்கு முன்புதான் புதுச்சேரியில் நடந்து முடிந்திருந்ததால் மாநாட்டு நிதி கைவசம் இருந்தது. அதைக் கொண்டு காரைக்கால் பகுதிக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு அந்த குழுவோடு தோழர்கள் ஆர்.பி.எஸ், வி.நாகராஜன், ராம்ஜி ஆகியோர் காரைக்கால் விரைந்தனர்.

புதுவையிலிருந்து புறப்பட்டு கடலூர் நகரத்துக்கு அருகில் இருந்த சில பகுதிகளுக்குச் சென்று விட்டு இறுதியாக அன்றிரவு கிள்ளை சென்றோம். மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்களும் அப்போது கிள்ளை வந்திருந்தனர். நம்மிடம் எஞ்சியிருந்த ஆடைகளை அங்கே உள்ள மக்களுக்கு அளிப்பதற்கு சென்ற போது அங்கிருந்த ஜன நெரிசலில் சிக்கிக் கொண்டு வெளியே வருவதே மிகவும் கடினமாக இருந்தது.


6 comments:

  1. சுனாமியால் பாதிக்கபட்ட மக்களின் துயரங்களை அப்படியே கொண்டுவந்திருக்கீர்கள்.

    ReplyDelete
  2. தொடர்ந்து என்னைப்பற்றிய செய்திகளை பார்க்கப்பார்க்க
    உனக்கு வெறி ஏறியிருக்கும் என்று நான் நினைத்திருந்தது
    இந்த பதிவைப் பார்க்கும் போது உறுதியாகிவிட்டது.
    கேமராவை தூக்கிக்கொண்டு அலையும் விளம்பரப்பிரியன் நீ
    இப்படி எழுதுவதில் ஆச்சரியம் இல்லை. என்னை வம்புக்கு
    இழுத்துக்கொண்டே இருக்கிறாய். ஒரு நாள் சட்டையை
    கிழித்துக்கொண்டு அலையப்போகிறாய். அதையும் படம்
    எடுத்து போகிற நிலைக்கு போகப்போகிறாய்.
    இப்பவே சகுனி நடை...!

    ReplyDelete
  3. நான் பிரசுரிக்க மாட்டேன் என்ற தைரியத்தில் பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது. யாரைப் பார்த்தும் பொறாமைப்படும் நிலையில் நான் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன். என்னை நம்பி கெட்டவர்கள் யாருமில்லை, நம்பாமல் கெட்டவர்கள்தான் உண்டு என்ற எம்.ஜி.ஆர் வசனம் நினைவிற்கு வருகிறது. காமாலைக் கண் கொண்டு பார்ப்பவர்களுக்கு எல்லாமே மஞ்சளாகத் தெரியும்.

    விபத்தில் சிக்கி கால் பாதிக்கப்பட்டு சற்று விந்தி நடப்பவன் நான். இதில் எனக்கு ஒன்றும் கௌரவக் குறைச்சல் கிடையாது. இந்த உடல் ஊனத்தை சகுனி நடை என்று கிண்டல் செய்து தங்களின் தரம் என்ன என்பதை நிரூபித்ததற்கு நன்றி.

    ReplyDelete
  4. இந்த முறை சுனாமி அனுபவங்கள் பற்றி எழுதுவதை நிறுத்த மாட்டேன். முழுமையாக எழுதுவேன்

    ReplyDelete
  5. இந்த தொடர் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க வரலாறு எனும் புத்தகத்தில் தாங்கள் எழுதியபோது அதனை கணினியில் அச்சு கோர்த்த போது தொடரை முழுமையாக படித்த பின்பே அச்சு கோர்த்தேன். அந்த அளவுக்கு என்னை மிக ஆழமாய் பாதித்த தொடர் என்றால் மிகையல்ல. மேக கணினியில் அச்சு கோர்க்கும் பணியும் என்னிடம் வருமா? வாய்ப்பு தருவீர்கள் என நம்புகிறேன் !

    ReplyDelete
  6. Highly idiotic comment by mr.ramji.

    ReplyDelete