Monday, December 2, 2013

சிண்டு முடிக்க முயல்கிறார் சுகி சிவம்



மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை என்பது போல சர்ச்சை தானாகவே தேடி வருகிறது. பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் திரு சுகி சிவம் தின மலர் ஆன்மீக மலரில் எழுதியுள்ள ஒரு கட்டுரையில் எல்.ஐ.சி நிறுவனம், அதன் ஊழியர்கள், தொழிற்சங்கம் ஆகியவற்றின் மீது குறிப்பாகவும் வங்கி, பொதுத்துறை ஊழியர் சங்கங்கள் மீது  பொதுவாகவும் சேற்றை வாரி இறைக்கும் ஒரு நச்சுப் பிரச்சாரத்தை செய்துள்ளார்.

எருமை மாட்டின் வாலை முறுக்கி அதை நகர்த்துவது போல பலரை வேலை வாங்க வைக்க வேண்டியுள்ளது என்பதில் தொடங்குகிற அவரது வக்கிர எழுத்து அக்கட்டுரை முழுதும் வியாபித்துள்ளது. ஊழியர்களை நேரடியாக தாக்குங்கள் என்று வாடிக்கையாளர்களை வன்முறைக்கு தூண்டுகிறார். முகவர்களுக்கு பயிலரங்கு எடுப்பதாக சொல்கிற அவர் அக்கட்டுரையில் முகவர்களுக்கும் ஊழியர்களுக்கும் சிண்டு முடிய முயற்சி செய்கிறார்.

எல்.ஐ.சி எனும் மகத்தான நிறுவனம் இந்தியப் பொருளாதாரத்தின் நாடித் துடிப்பாக தொடர்ந்து மக்களின் நம்பிக்கையோடு செயல்பட்டு வருகின்றது. அந்த நிறுவனத்தின் தொடர்ந்த. நீடித்த வெற்றிக்கு அக்குடும்பத்தின் உறுப்பினர்களான ஊழியர்கள், வளர்ச்சி அதிகாரிகள், அதிகாரிகள், முகவர்கள் என அனைத்து பிரிவினரும் ஒற்றுமையாக கரம் கோர்த்து செயல்பட்டு வருவதுதான். இதிலே யாருடைய பாத்திரத்தையும் யாராலும் குறைத்து மதிப்பிட முடியாது. உடலின் அத்தனை பாகங்களும் முறையாக செயல்பட்டால் மட்டுமே மனிதன் உயிர் வாழ முடியும். அது எல்லா நிறுவனங்களுக்கும் பொருந்தும். அப்படியிருக்க ஊழியர்கள் பாலிசிதாரர்களுக்கு பணம் சேர அலட்டிக் கொள்வதே இல்லை என்று அபாண்டமாக அளந்து விடுகிறார்.

கடந்த நிதியாண்டில் மட்டும் எல்.ஐ.சி நிறுவனம் பாலிசிதாரர்களுக்கு முதிர்வு, இறப்பு கேட்புரிமங்களாக, பாலிசி கடன் மற்றும் சரண்டராக ஒரு லட்சத்து முப்பத்தி ஆறாயிரத்து இருநூற்று எண்பத்தி ஒன்பது கோடி ரூபாய் பட்டுவாடா செய்துள்ளது.  ஒரு கோடியே எண்பத்து மூன்று லட்சம் பாலிசிதாரர்களுக்கு கேட்புரிமத் தொகையை வழங்கியது. உலகில் வேறு எந்த காப்பீட்டு நிறுவனத்திலும் பார்க்க முடியாத சாதனை இது. விண்ணிலிருந்து குதித்த தேவதை மந்திரக்கோல் உயர்த்தியா இது நடந்தது? அர்ப்பணிப்பு உணர்வு மிக்க ஊழியர்களின் கடுமையான உழைப்பு மட்டுமே இதை சாத்தியமாக்கியது.

இந்த உழைப்பை சுகி சிவம் கொச்சைப் படுத்தலாமா?

வாடிக்கையாளர்களை மனிதனாகக் கூட மதிக்க தொழிற்சங்கம் கற்றுக் கொடுக்கவில்லை என்று  அடுத்த அம்பை வீசுகிறார். முப்பது கோடி தனி நபர் காப்பீடு பாலிசிகளையும் பதினோரு கோடி குழுக்காப்பீட்டு பாலிசிகளையும் கொண்டிருக்கிற தன்னிகரற்ற நிறுவனமாக எல்.ஐ.சி விளங்குகிறது. மதியாதார் தலை வாசல் மிதியாதே என்ற ஔவைப் பாட்டியின் அறிவுரை கேட்டு வளர்ந்த இந்திய மக்கள், தங்களை மதிக்காத ஊழியர்கள் கொண்ட ஒரு நிறுவனத்தில் தொடர்ந்து முதலீடு செய்வார்களா என்ன?

எண்பத்தி ஐந்து சதவிகித இன்சூரன்ஸ் ஊழியர்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற அமைப்பு எங்களது  அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம். எங்களது அமைப்பின் அகில இந்தியப் பொதுச்செயலாளராக இருபத்தி ஆறு ஆண்டுகள் எங்களை வழி நடத்திய மகத்தான தலைவர் தோழர் சரோஜ் சவுத்ரி “ காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை நிறுவனத்திற்கு நாணயமான உழைப்பை வழங்குபவர் மட்டுமே இந்த சங்கத்தின் உறுப்பினராக இருக்க முடியும்” என்பதை எங்களுக்கு போதித்தவர். இன்றுள்ள பணிச்சுமையில் அலுவலக நேரம் கடந்தும் பல மணி நேரம் உழைக்கிற ஊழியர்களாகவே நாங்கள் மாறியுள்ளோம்.

இன்சூரன்ஸ் துறையில் தனியாரை அனுமதிக்கும் பரிந்துரை அளிக்கப்பட்ட போது “ உங்கள் மேஜையில் உங்கள் பணிகளை செம்மையாக செய்வதன் மூலம் பாலிசிதாரர்களை வென்றெடுப்பதில்தான் தனியார்மயத்திற்கு எதிரான போராட்டமே துவங்குகிறது” என்று அப்போதைய பொதுச்செயலாளர் தோழர் என்.எம்.சுந்தரம் வழிகாட்டினார். பாலிசிதாரர் சேவையை சிறப்பாக செய்கின்ற காரணத்தால் மட்டுமே தனியார்மயத்திற்கு எதிராக 1999 லியே எங்களால் இத்தேசத்து மக்களிடமிருந்து ஒரு கோடியே ஐம்பத்தி ஐந்து லட்சம் கையெழுத்துக்களை பெற முடிந்தது. மக்களின் சேமிப்பை சர்வ தேச நிதி மூலதனம் கொத்திச் செல்லக் கூடாது என்று தொடர்ந்து மக்கள் மத்தியில் இப்போதும் பிரச்சார இயக்கங்கள் நடத்திக் கொண்டிருக்கிறோம். அந்த தைரியம் எங்கிருந்து வந்தது? மக்களும் ஆதரவு அளிக்கிறார்களே! அது எங்கள் மீது அவர்களுக்கு இருக்கிற மதிப்பினால்தானே! வாடிக்கையாளர்களை  அச்சுறுத்தினால் இவை எல்லாம் நடக்குமா என்ன?

ஊழியர்களின் பணியை மதிப்பீடு செய்வதற்கு கருவி பொருத்தி அதன் அடிப்படையில் போனஸ் வழங்கப்பட வேண்டும் என்று ஆலோசனை சொல்கிற திரு சுகி சிவம் அவர்களுக்கு ஒரு செய்தியை பணிவோடு தெரிவிக்க விரும்புகிறேன். மத்திய அரசின் போனஸ் சட்ட வரம்புகள் படி எல்.ஐ.சி மற்றும் வங்கி ஊழியர்களில் நூற்றுக்கு 99.9 % ஊழியர்கள் போனஸ் என்பதைப் பார்த்தே பல ஆண்டுகள் ஆகி விட்டது. சென்ற ஆண்டு நான்காம் பிரிவு ஊழியர்களாக பணி நியமனம் செய்யப்பட்ட சார் பணியாளர்கள் கூட இந்த ஆண்டு போனஸ் பெறவில்லை.  

எல்.ஐ.சி ஊழியர்களின் அர்ப்பணிப்பு உணர்வையும் லஞ்ச லாவயண்மற்ற சேவையையும் அறிந்து கொள்ள வேண்டுமென்றால் 12.12.2011 அன்றைய மக்களவை நடவடிக்கைக் குறிப்புக்களை இணையத்தில் சென்று படித்துப் பாருங்கள். எப்போதுமே கலவர பூமியாய் காட்சியளிக்கும் நாடாளுமன்றத்தில் அன்று மட்டும் அபூர்வமான கருத்தொற்றுமை நிலவியது. எல்.ஐ.சி சட்ட திருத்த மசோதாவின் மீது அன்று நடைபெற்ற விவாதத்தில் அன்று பேசிய எல்லா உறுப்பினர்களுமே கட்சி வேறுபாடு இல்லாமல் எல்.ஐ.சி நிறுவனத்தின் சிறப்பை பேசினார்கள். ஊழியர்கள், முகவர்களின் அர்ப்பணிப்பை பாராட்டினார்கள். எல்.ஐ.சி என்றுமே ஒரு பொதுத்துறை நிறுவனமாக மட்டுமே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

மத்திய அரசின் உலகமயக் கொள்கைகள் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க முயல்கின்றன. அதற்கு எதிராக தொடர்ந்து போராடி காவல் அரணாக திகழ்வது தொழிற்சங்கங்களே. தங்களின் பொருளாதாரப் பிரச்சினைகளாக நடத்திய வேலை நிறுத்தங்களை விட நிறுவனத்தை பாதுகாப்பதற்காகவும் மக்கள் பிரச்சினைகளுக்காகவும் நடத்திய வேலை நிறுத்தங்கள்தான் அதிகம்.

1986 ல் நான் பணியில் சேர்ந்தேன். இதுவரை 28 ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டங்களும் இரு இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டங்களும் நடந்துள்ளன. இந்த 32 நாட்களில் எட்டு ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டங்கள் மட்டுமே பென்ஷன், ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைக்காக நடந்தவை. மற்ற வேலை நிறுத்தங்கள் எல்லாமே மக்கள் நலன், தேச நலன் சார்ந்த கோரிக்கைகளுக்காகவே நடைபெற்றவை.

அப்படி மக்கள் நலனுக்காக போராட்ட களத்தில் முன்னணிப்படையாக திகழும் ஊழியர்களை களங்கப் படுத்த திரு சுகி சிவத்திற்கு எப்படித்தான் மனது வந்ததோ? நிறுவனத்தின் சுவர்களைத் தாண்டி மக்கள் மத்தியில் மக்களுக்கான கோரிக்கைகளுக்காக போராடுகின்ற பரிணாமத்தை இந்திய தொழிற்சங்க இயக்கம் என்றோ அடைந்து விட்டது.

குஜராத் நிலநடுக்கம், சுனாமி, தானே புயல், உத்தர்கண்ட் வெள்ளம் என்று நாட்டின் எந்த பகுதியில் இயற்கையின் சீற்றம் சேதங்களை உருவாக்கினாலும் உடனடியாக உதவிக்கரம் நீட்டும் அமைப்பு எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் என்று பெருமிதத்தோடு சொல்ல முடியும். வாடிக்கையாளர் பற்றி கவலைப்படாத ஊழியர்களா துயரத்தில் தவிக்கும் மக்களுக்கு தங்களின் மாத ஊதியத்திலிருந்து ஒரு பகுதியை அள்ளித் தருவார்கள்! குஜராத் மாநிலம் பூஜ் மாவட்டத்தில் ஒரு கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மனையும் சுனாமியால் பாதிக்கப் பட்ட கடலூர் மாவட்டம் கிள்ளையிலும் நாகை மாவட்டம் புதுப்பேட்டையிலும் கட்டப்பட்ட சமுதாயக் கூடங்கள், கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ஆழிக்கல்லில் கட்டப்பட்ட பள்ளிக் கட்டிடம், இன்னும் ஒடிஷாவிலும் கர்னாடக மாநிலம் ரெய்ச்சூர் மாவட்டத்திலும் கட்டப்பட்ட சமுதாயக் கூடங்கள் இன்சூரன்ஸ் ஊழியர்கள் மக்களை எவ்வாறு நேசிக்கிறார்கள் என்பதற்கான அடையாளச் சின்னங்கள். இந்த ஊழியர்கள் வாடிக்கையாளர்களை அச்சுறுத்தும் புலித் தோலை அணிந்துள்ளார்கள் என்று வாய் கூசாமல் கதைக்கிறார் சுகி சிவம்.

ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக செயல்படும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அங்கமாக பல போராட்டங்களில் ஈடுபடுகிறோம். விளிம்பு நிலை மக்களின் மக்களின் மேம்பாட்டிற்காக, அவர்கள் பணி நியமனத் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்காக தமிழகத்தில் இருபது மையங்களில் செயல்படும் டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையங்களில் பனிரெண்டு மையங்களை பொறுப்பேற்று நடத்தி வருவது எங்கள் சங்கம்தான்.

பல்வேறு தேர்வுகளுக்கு தொடர்ந்து பயிற்சி வகுப்புக்களை எடுப்பது எங்கள் சங்க உறுப்பினர்கள்தான். சில பயிற்சியாளர்கள், பேச்சாளர்களைப் போல கூலிக்கு மாரடிக்காமல் உண்மையான அர்ப்பணிப்பு உணர்வோடு மாலை வேளைகளிலும் ஞாயிறு விடுமுறைகளிலும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

இன்சூரன்ஸ்துறை தனியாருக்கு திறந்து விடப்பட்டு பதிமூன்று வருடங்கள் ஆன பின்பும் இன்சூரன்ஸ் சந்தையின் தலைவராக புது வணிகத்தில் பிரிமிய வருமானத்தில் 73 % பாலிசிகள் எண்ணிக்கையில் 80 % கொண்டு திகழ்வது எல்.ஐ.சி. அன்னிய மூலதன வரம்பை 49 % ஆக உயர்த்த வேண்டும் என்ற பன்னாட்டுக் கம்பெனிகளின் கட்டளையை அமுலாக்க முடியாமல் ஒன்பது வருடங்களாக தடுத்து வருவதும் எங்களின் போராட்டமே. தங்களின் நோக்கம் நிறைவேறாத காரணத்தால் வெறுப்புற்ற பன்னாட்டுக் கம்பெனிகளின் கோபத்தின் வடிகாலாக, அவர்களின் வாடகைக் குரலாக திரு சுகி சிவம் பயன்பட்டுள்ளாரா என்ற ஐயம் தோன்றுவதை தவிர்க்க இயலவில்லை.

செய்யும் தொழிலே தெய்வம் என்பதை முழுமையாக உணர்ந்து நடப்பவர்கள் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள். தெய்வத்தின் பெயரால் தொழில் செய்பவர்கள் அவர்களை நிந்தனை செய்யலாமா?




4 comments:

  1. ஒரு ஊரில் முட்டாள் ஒருவன் இருந்தான். ஆனால் அந்த முட்டாள் தன்னை புத்திசாலி என எல்லோரையும் நம்ப வைத்தான்.
    அதுதான் சுகி சிவம்

    ReplyDelete
  2. I just want to convey one thing, comrade. this fellow thinks him as a genius person. he thinks that he is the master of all subjects. what a fool he is. i also heard his statement in sun tv but while watching the tv electricity failure stopped me watching more in detail. dont waste your valuable time to explain our sacrifices to this fellow's statement. his words are just a nonsense

    ReplyDelete
  3. yaaruyyaa muttaal.. ?! naakkai adakki pesu. enga ayyaavaippaththi solla unakkennayya yokkiyathai..

    ReplyDelete
  4. ஐயா இரண்டாவது அனானி, உங்க ஐயாவுக்கு எங்கள பத்தி பேச என்ன அருகதை இருக்கு. அவர முதல்ல நாக்க அடக்கிப் பேச சொல்லுங்க.. இப்படி கோழையா வந்து கமெண்ட் போடறதுதான் உங்க ஐயாவோட சீடனோட லட்சணமா? அவருக்கே மெயில் அனுப்பியிருக்கேன், தெரியுமா

    ReplyDelete