Friday, August 30, 2013

இந்த முரண்பாடுகள்தான் இந்தியாவோ?

வரும் செப்டம்பர் முதல் நாள் எங்கள் எல்.ஐ.சி யின் உதய தினம்.
அதற்காக ஒரு சுற்றறிக்கை தயார் செய்து கொண்டிருந்தபோது
எழுதப்பட்ட வாசகங்கள் கீழே உள்ளது.



ஆடை அணிகலன்கள் உள்ளிட்டு எண்ணற்ற நுகர்வோர் பொருட்களில் அன்னிய தயாரிப்புக்களை வாங்குவதில் மோகம் கொண்ட இந்திய மக்கள், இன்சூரன்ஸ் என்று வரும்போது மட்டும் அன்னியக் கம்பெனிகளை ஒதுக்கி வைத்து எல்.ஐ.சி யை நாடுகிறார்கள் என்றால் அது எல்.ஐ.சி யின் அனைத்து பிரிவு ஊழியர்கள், அதிகாரிகள், முகவர்கள் ஆகியோரின் அர்ப்பணிப்பு மிக்க சேவையால்தான் என்பது வெள்ளிடை மலை.
  
அப்போதுதான் வேறு பல முரண்பாடுகளும் இந்தியாவில் நிலவிக்
கொண்டிருப்பதை உணர முடிந்தது.

பல  தமிழக நிறுவனங்களில் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில்
திமுக, அதிமுக சங்கங்களுக்கு வாக்களிக்கும் தொழிலாளர்கள்
தங்களின் கூட்டுறவு சொசைட்டி, கூட்டுறவு வங்கித் தேர்தலில்
மட்டும் சி.ஐ.டி.யு வேட்பாளர்களுக்கு வாக்களிப்பார்கள்.

வெளிநாட்டில் வேலை செய்யும் பையனுக்கு பெண் கொடுக்க
ஆசைப்படுவார்கள். ஆனால் வெளிநாட்டுக்காரனுக்கு
பெண் தர மாட்டார்கள்.

தியேட்டர், தனியார் வங்கிகளில் வரிசைகளில் அமைதியாக
நிற்பார்கள். அரசு வங்கிகள், அரசு அலுவலகங்களில் சத்தம்
போட்டு தங்களின் உரிமைகளை நிலை நாட்டுவார்கள்.

தொலைக்காட்சி தொடர்களில் வரும் பெண்கள் கண்ணீர்
வடிக்கும்போது சேர்ந்து அழுவார்கள். ஆனால் நிஜத்தில்
அப்படி சிரமப்படுவதை பார்க்கும்போது கண்டும் காணாமல்
ஒதுங்கி விடுவார்கள்.

இந்த காலப் பசங்க எப்ப பாரு பேஸ்புக், நெட்டுனு பொழுதை
வேஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்காங்க என்று திட்டிக் கொண்டே

புதிதாக என்ன ஸ்டேட்டஸ் போடலாம் என்று 
யோசித்துக் கொண்டிருப்பார்கள்.

என்னை மாதிரி

பின் குறிப்பு : இது பெரும்பாலானவர்களை குறிப்பது. ஆகவே
நான் அப்படியெல்லாம் இல்லை என்ற பின்னூட்டங்களை
தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.


Thursday, August 29, 2013

கடவுள் பெயரைச் சொன்னால் கட்டுப்பாடுகள் கிடையாதா?

வேலூர் மாநகரத்தில்  ஃப்ளெக்ஸ் பேனர்கள் வைப்பதற்கு இரண்டு 
ஆண்டுகளாக சில கட்டுப்பாடுகள் உள்ளது. பேனரின் வரைபடத்தோடு
முதலில் நெடுஞ்சாலைத் துறையின் அனுமதி பெற்று பிறகு 
சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் அனுமதியை வாங்கி இவற்றை
மாநகராட்சி அலுவலகத்தில் காண்பித்து  இருநூற்று ஐம்பது ரூபாய்
ஒரு பேனருக்கு கட்டி, அந்த ரசீதை ஸ்கேன் செய்து அதையும் அந்த
பேனரில் இணைத்த பின்புதான் பேனர் கட்ட முடியும்.

ஜூன் மாதம் எங்கள் கோட்ட மாநாடு நடைபெற்றபோது இந்த பேனர்
அனுமதிக்காகவே ஒரு குழுவே போட்டு விட்டோம். நிகழ்ச்சிக்கு
மூன்று நாட்கள் முன்பாகத்தான் பேனர் அமைக்க வேண்டும். 
நிகழ்ச்சி முடிந்த மறு நாளே எடுத்து விட வேண்டும் என்ற
கட்டுப்பாடுகளும் உண்டு.

அதே போல ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளுக்கும் அனுமதி 
வாங்குவதற்குள் உயிர் போய் விடும். ஜனநாயகத்திற்கு அரசு
கொடுக்கும் மரியாதை அவ்வளவுதான்.

கலைஞர் பிறந்த நாளுக்காக திமுக வினர் அனுமதி பெறாமல்
வைத்த பேனர்களைக் கூட இந்த ஆண்டு அகற்றி விட்டார்கள்.

ஆனால் இந்த கெடுபிடிகள் எல்லாம் ஆளும்கட்சிக்கு
பொருந்தாது என்பது சின்னக் குழந்தைக்குக் கூட தெரியும்.

ஆளும் கட்சி மட்டுமல்ல கடவுள் பெயரைச் சொன்னாலும்
கட்டுப்பாடுகள் கிடையாது என்ற புதிய நிலைமை இப்போது
தோன்றியுள்ளது.

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஒரு ஜாதிய அமைப்பு
ஏராளமான பேனர்களை இன்று நிறுவியுள்ளது. ஆனால் 
ஒன்றில் கூட அனுமதி பெற்றதற்கான ரசீது கிடையவே
கிடையாது. 

அதே போல சில நாட்கள் முன்பாக ராகவேந்திரர் கோவில்
திருவிழா நடந்தது. அப்போது பதினைந்து நாட்கள் அனுமதி
பெறப்படாத பேனர்களை வேலூர் முழுதும் பார்க்க முடிந்தது.

சட்டம் ஒழுங்கு எல்லாம் சட்டத்தை மதிப்பவர்களுக்கு
மட்டும்தான் போல. 

இது என்ன அரசு?
இது என்ன நிர்வாகம்?
 

Wednesday, August 28, 2013

மீனை ஒழுங்காக பொறிக்கத் தெரியாதா? ஒரு நீதிபதியின் அராஜகம்

கீழே தரப்பட்டுள்ள இடை நீக்க ஆணையை பாருங்கள்.

வள்ளியூரில் உள்ள நீதிபதி, தனக்கு கீழே உள்ள ஊழியர்
தனது சொந்த வேலையை செய்ய மறுத்ததால், மீனை
ஒழுங்காக சுத்தம் செய்து பொறிக்காததால் இடை நீக்கம்
செய்துள்ளார்.


என்ன ஒரு அராஜகம் இது.

நீதிமன்ற ஊழியர்கள் நீதிமன்றத்தில் வேலை செய்ய 
வேண்டியவர்களா ? இல்லை நீதிபதியின் வீட்டில்
வேலை செய்ய வேண்டியவர்களா?

மீனை சரியாக பொறிக்கவில்லை என்று அதை 
அனைத்து ஊழியர்கள் மத்தியிலும் காண்பித்து
அதற்காக இடை நீக்கம் செய்வாராம்.

இவர் வழங்கும் தீர்ப்புக்கள் எந்த லட்சணத்தில்
இருக்கும் என்பது அந்த நீதி தேவதைக்கே 
வெளிச்சம்...

எத்தனையோ நீதிபதிகள் மீது இப்போது 
முறைகேடுகளுக்காக நடவடிக்கைகள் பாய்கிறது.

இவரும் அப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட
வேண்டியவர்தான். அப்படி நடவடிக்கை எடுத்தால்
அதற்காகவும் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை
புறக்கணிப்பார்களா?

பின் குறிப்பு : இந்த ஆணையை நான் இன்றுதான்
முக நூலில் பார்த்தேன். அந்த அப்பாவி ஊழியரின்
இன்றைய நிலை என்ன என்பதை அறிந்தவர்கள்
யாராவது சொல்லுங்களேன்.

Tuesday, August 27, 2013

“ராமனை வைத்து அரசியல் பண்ணாதீர்கள்.”

தீக்கதிர் பொறுப்பாசிரியர் தோழர் அ.குமரேசன், தனது முகநூல்
சுவரில் எழுதியுள்ள அருமையான கட்டுரை. 

ராமனை வைத்து அரசியல் செய்யாதே என்று ராமன் என்ற 
பெயருடைய நானே எழுதுவது சுவையாக உள்ளதல்லவா?

என் பெற்றோர் சூட்டிய பெயர் ராமன் என்பதால் இதிகாச ராமனை
நான் போற்ற வேண்டுமா என்ன? அல்லது இதிகாச ராமனை
யாராவது தூற்றினால் அது என்னை பாதிக்குமா என்ன?

என்னை தூற்ற வேண்டும் என்று நினைக்கிற சிலர் இதிகாச
ராமனை தூற்றினால் அது அவனுக்கு பொருந்துமா என்ன?

என்ன குழப்பமாக உள்ளதா?

குழப்பத்தை விட்டு விட்டு கட்டுரையை படியுங்கள்


“ராமனை வைத்து அரசியல் பண்ணாதீர்கள்.”


- அ.குமரேசன்

அயோத்தி நகரத்தைச் சேர்ந்த சாதுக்கள் விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) தலைவர்களுக்கு இப்படி வலியுறுத்தியிருக்கிறார்கள்.

விஎச்பி அமைப்பினர் அயோத்தியில் சவுராஸி கோஸ் பரிக்ரமா என்ற பெயரில் அயோத்தியில் ஞாயிறன்று (ஆகஸ்ட் 25) தொடங்கவிருந்த பாத யாத்திரை திட்டத்தை இந்த சாமியார்களும் கோவில் பூசாரிகளும் கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள். அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்ட அரசு அனுமதிக்க வேண்டும் என்பது இந்த பரிக்ரமாவின் ஒரு கோரிக்கை.

மசூதிக்குள் முன்பு “சுயம்புவாக” தனது சிலையை உதிக்க வைத்த பகவான் ராமனால் தனக்கொரு கோவிலையும் சுயம்புவாக எழ வைக்க முடியாதா? எதற்காக அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்து அதற்கொரு பரிக்ரமா? அட ராமா!

பாரம்பரியமாக இப்படிப்பட்ட பரிக்ரமா நிகழ்ச்சிகள் ஏப்ரல், மே மாதங்களில்தான் நடைபெறும். திடீரென ஒரு புதிய பெயரில் ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் இதை நடத்தத் திட்டமிட்டதற்கு வழிபாடு சார்ந்த போலிக்காரணங்களைச் சொல்லிக்கொள்கிறார்கள். உண்மை நோக்கம் விரைவில் வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாக இந்து மக்களிடையே மதவெறி உணர்வைத் தூண்டிவிடுவதே. மோடி மூளைச்சலவைப் பிரச்சாரம் உள்ளிட்ட உத்திகள் எதுவும் எதிர்பார்த்த பலனைத் தராது என்பது புரிந்துவிட்டதால், இப்படியொரு மதவாதப் பாதையில் பரிக்ரமா நடத்தும் திட்டம்.

செப்டம்பர் 13 வரை நடைபெற இருந்த இந்த யாத்திரைக்குத் தேர்ந்தெடுக்கப்பட் ஏழு மாவட்டங்கள் இஸ்லாமிய மக்கள் மிகுதியாக வாழும் பகுதிகள். இதற்கு மேலும் இவர்களது சூழ்ச்சித்திட்டத்திற்கு சாட்சியம் வேண்டுமா?

ஒவ்வொரு ஆண்டும் பரிக்ரமா ஏற்பாடு செய்கிற குழுவின் தலைவரான மஹந்த் ஞான்தாஸ், “நான் 10 வயதிலிருந்து பரிக்ரமாவில் பங்கேற்று வருகிறேன். ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமியில் தொடங்கி பைசாக் நவமியில் பரிக்கரமா முடியும். இந்த ஆண்டு அதை சாதுக்கள் சரியான நேரத்தில் ஏற்கெனவே நடத்திவிட்டார்கள்,” என்று கூறியிருக்கிறார்.

“இது மத நல்லிணக்கத்தைச் சீர்குலைத்து தேர்தல் வாக்குகளைத் திரட்டுகிற முயற்சிதான்,”, என்கிறார் மஹந்த் ஜூகல் கிஷோர் சாஸ்திரி. இவர் விஎச்பி அமைப்பின் செயலாளராக இருந்து பின்னர் அதிலிருந்து விலகியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

“கடந்த 20 ஆண்டுகளில் விஎச்பி மக்கள் ஆதரவை இழந்துவிட்டது. சிலர் மட்டுமே அதன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்கள். அதன் இந்த மதவெறித் திட்டத்திற்கு அயோத்தி மக்கள் ஒத்துழைக்கவில்லை. அவர்களைப் பாராட்டியாக வேண்டும்,” என்றும் அவர் கூறியிருக்கிறார்.

“சில சுயநல சக்திகள் சாதுக்களைப் பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கின்றன. அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பு அளிக்கப்போகிறதோ அதைத்தான் நாங்கள் மதிப்போம், பின்பற்றுவோம்,” என்று ராம ஜென்மபூமி அமைப்பின் தலைமைப் பூசாரி மஹந்த் சத்யேந்திரா தாஸ் கூறியுள்ளார். அரசு நிர்வாகம் பரிக்ரமா யாத்திரையைத் தடுத்து நிறுத்தியதையும் இந்த சாமியார்கள் வரவேற்றிருக்கிறார்கள்.

1992ல் இதே போன்று நடந்த ரதயாத்திரை, அதையொட்டி அரங்கேற்றப்பட்ட கொடூரமான வன்முறைகளையும், இன்றளவும் அயோத்தியில் கோவில் கட்டுவது தொடர்பாகக் கிளறிவிடப்படும் பதற்ற நிலைமைகளையும் மறக்க முடியுமா? பாஜக கூட்டணி மத்திய ஆட்சியதிகாரத்திற்கு வர முடிந்ததில் இந்த மதவாத அடையாள அரசியலுக்குப் பெரும் பங்குண்டு.

பகுத்தறிவாளர்களுக்குக் கடவுளும் இல்லை, மதமும் இல்லை. ஆனால் மக்களின் தனிப்பட்ட நம்பிக்கைகளை மதிக்கிறோம். அந்த நம்பிக்கைகளை வெறியாக மாற்றும் சூதுகளை எதிர்க்கிறோம் - எந்த மதமாக இருந்தாலும்.

ஆன்மீகப் போர்வை போர்த்திய அரசியல் சூழ்ச்சிகளை, எங்கள் வீட்டிற்கு இன்று காலையில் கூழ் கொடுத்துச் சென்ற எதிர்த்தெரு படவட்டம்மன் கோவில் பக்தர்களும், சென்ற வாரம் ரமலான் கஞ்சி கொடுத்தனுப்பிய பக்கத்துத்தெரு ரஹமத் மசூதி அன்பர்களும், கிறிஸ்துமஸ் கேக் அனுப்ப இருக்கிற தேவாலய சகோதரர்களும் முறியடிப்பார்கள்.

Sunday, August 25, 2013

அரசு ஊழியர்கள் என்றால் ஏன் இப்படி ஒரு இளக்காரம்?

எங்கள் சத்துவாச்சாரி பகுதி முழுமைக்குமாக ஆதார் அட்டை 
வழங்குவதற்கான முகாம் கடந்த ஒரு வாரமாக நடந்து 
கொண்டிருக்கிறது. 

ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து அந்தப் பணி முடிந்தது.
வரிசையில் காத்திருக்கும்போது அப்பப்பா எவ்வளவு
அனுபவங்கள்!

தங்களுக்கு மட்டுமே முக்கிய வேலைகள் உள்ளது, மற்ற
அனைவரும் வெட்டியானவர்கள், தங்களுக்கு முன்னுரிமை
அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பெரும்பாலானவர்களுக்கு
உள்ளது என்பதை நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது. தனியார்
வங்கிகளிலோ அல்லது நவநாகரீக மால்களில் பில்கள்
போடும்போதோ இந்த கனவான்கள்  எந்தவித முனகலும்
இல்லாமல் பொறுமை காப்பவர்கள் என்பது வேறு விஷயம்.

மக்கட்தொகை கணக்கெடுப்பின்போது கொடுக்கப்பட்ட 
ஒப்புதல் சீட்டு கொண்டு வர வேண்டும் என்பதை வெளியில்
கொட்டை எழுத்தில் எழுதி வைத்திருந்தாலும் அது 
இல்லாமல் சட்டம் பேசியவர்கள் பலர்.

ஒரு கட்டத்தில்தான் நான் கொஞ்சம் பொறுமை
இழக்க வேண்டியிருந்தது.

கணிணியில் கொஞ்சம் சிக்கல் வந்து தாமதம் ஆன போது
" இந்த கவர்ன்மெண்ட் எம்ப்ளாயீசே இப்படித்தான். இந்த
வேலையெல்லாம் பிரைவேட்டிடம் கொடுத்துடனும் ".

அப்போதுதான் நான் சொன்னேன்

" இந்த பணியே தனியார் நிறுவனத்திற்கு அவுட்சோர்ஸிங்
செய்யப்பட்டு தனியார்  நிறுவன ஊழியர்கள்தான் செய்து
கொண்டிருக்கிறார்கள். எல்லா பணிகளையும் தனியாரிடமும்
தரவும் முடியாது. தரவும் கூடாது"

பிறகு இன்னும் கொஞ்சம் விளக்கமும் தரவேண்டி இருந்தது.

" மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது ஒரு பிரம்மாணடமான
பணி. இந்தியாவின் ஒவ்வொரு குக்கிராமத்திற்கும் சென்று
ஒவ்வொரு இந்தியனையும் நேரடியாக சந்திக்கிற பணி.
அதன் பின்பு திரட்டப்படுகின்ற ஏராளமான தகவல்களை
தொகுக்க வேண்டும். இந்தியாவின் சமூக சூழல் பற்றி 
இந்த கணக்கெடுப்பில்தான் அறிய முடியும். அதன் அடிப்படையில்
அரசு திட்டங்களையும் உருவாக்க முடியும். இந்த சவாலான
பணியை ஒவ்வொரு பத்தாண்டிலும் அரசு ஊழியர்களும்
ஆசிரியர்களும்தான் திறம்பட செய்து கொண்டு வருகின்றார்கள்.
ஆகவே வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று
அரசு ஊழியர்கள் பற்றி  பேசாதீர்கள் " என்று சின்ன வகுப்பே
எடுத்த பின்பு 

தனியாருக்கு ஆதரவான அந்த குரல் ஓய்ந்தது.

அரசு ஊழியர்களின் பணியில் இன்னும் மேம்பாடு வேண்டுமா
என்றால் கண்டிப்பாக வேண்டும்.

ஆனால் அதற்கு நிர்வாக முறையில் கண்டிப்பாக சில
மாற்றங்கள் வேண்டும். நடைமுறைகளில் எளிமை வேண்டும்.
வெள்ளைக்காரன் பாணியில் பக்கம் பக்கமாய் குறிப்பு
எழுதும் பழக்கம் மாற வேண்டும். 

எத்தனை குறிப்புக்கள் எழுதினாலும் அதை மீறித்தானே
ஊழல்கள் நடந்து கொண்டிருக்கிறது!

பிறகு அந்த கோப்புக்களும் காணாமல் போகிறது?
 

Saturday, August 24, 2013

கலக்குகிறார் நீதிபதி சந்துரு - அவசியம் படிக்க வேண்டிய அற்புத உரை

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி திரு கே.சந்துரு அவர்கள் 
இந்திய மாணவர் சங்கத்தின் மாநில மாநாட்டை துவக்கி
வைத்து நிகழ்த்திய அற்புதமான உரை இது. 

அவசியம் முழுமையாய் படியுங்கள்.

உரையை முழுமையாய் முகநூலில் பதிவு செய்த
இந்திய மாணவர் சங்கம், தென் சென்னை மாவட்டக்குழுவிற்கு
நெஞ்சார்ந்த நன்றி.

நீதிபதியாய் பணி செய்த போதும் சரி,
பணி ஓய்வுக்குப் பிறகும் சரி
கலக்குகிறார் திரு சந்துரு




இலவசக் கல்வி கானல் நீராகவே உள்ளது நீதிபதி கே.சந்துரு வேதனை: உறுதியுடன் போராட மாணவர்களுக்கு அழைப்பு...!

குடந்தை குழந்தைகளின் நினைவு வளாகம் (சென்னை), ஆக. 23 -“1970ல் கேரளாவில் இந்திய மாணவர் சங்கத்தின் முதல் அகில இந்திய மாநாடு நடை பெற இருந்தது. அந்த மாநாட் டிற்கு செல்ல மேற்கு வங்கத்திலி ருந்து ரயில் மூலம் பிரதிநிதிகள் சென்னைக்கு வந்து, பிறகு கேரள செல்ல திட்டமிட்டிருந்த னர். அச்சமயம் மேற்குவங்கத் தில் இருந்து வந்த ரயில் கால தாமதமானது. கேரளாவிற்குச் செல்ல வேண்டிய ரயில் எழும்பூ ரில் இருந்து புறப்பட தயாராக இருந்தது. ரயில் நிலைய மேலா ளரிடம் 30நிமிடம் காலதாமத மாக ரயிலை இயக்குமாறு கோரினோம். அவர் மறுத்தார்.

இதனால் ரயில் மறியல் செய் தோம். எங்கள் மீது ரயில்வே போலீசார் தடியடி நடத்தினர். அந்த தடியடியில் கால் உடைந்து போனவர்தான் தற்போதைய திரிபுரா மாநில முதலமைச்சர் மாணிக்சர்க்கார்” என்று உணர்ச்சிப்பூர்வமாக தனது உரையைத் துவக்கினார் நீதிபதி கே.சந்துரு.“இந்திய மாணவர் சங்கத் தின் முதல் 4 மாநாடுகளில் பிரதி நிதியாக கலந்து கொண்டேன். மாணவர் அமைப்பில் ஈடுபட்ட போது கிடைத்த சமூகப் புரிதல் தான் எனது எதிர்காலத்தை வழி நடத்த உதவியது” என்று தனது நீண்ட நெடிய சமூக வாழ்வின் துவக்கத்தை மிகவும் பெருமிதத் துடன் அந்த இளம் மாணவர் களிடையே நீதிபதி சந்துரு பகிர்ந்து கொண்டார்.

சென்னையில் நடைபெற்று வரும் இந்திய மாணவர் சங்கத் தின் 23வது மாநில மாநாட்டை வெள்ளியன்று துவக்கி வைத்து பேசுகையிலேயே அவர் மேற் கண்டவாறு தனது நினைவு களைப் பகிர்ந்து கொண்டார். மாணவப் பருவத்தில் போரா ளியாக தனது வாழ்வைத் துவக்கி, பிற்காலத்தில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மக்கள் போற்றும் நீதிபதியாக செயலாற்றி ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, இந்திய மாணவர் சங்க மாநாட்டில் மேலும் பேசியதாவது:-

மக்களிடம் கற்றுக்கொண்டோம்

1970களில் வேலையில்லாத் திண்டாட்டம் இருந்தது. இத னால் மாணவர் சங்கம் சென் னை பல்கலைக் கழக பட்ட மளிப்பு விழாவின் போது, ‘படித் தோருக்கு வேலை இல்லை; பட் டமளிப்பு ஒரு கேடா?’ என்று போராட்டம் நடத்தினோம். இதனால் பட்டமளிப்பு விழா நிறுத்தி வைக்கப்பட்டது. 2 வரு டம் எஸ்எப்ஐ-யின் முழுநேர ஊழியராகவும், சென்னை, திரு வள்ளூர், காஞ்சிபுரம் பகுதி களை உள்ளடக்கிய சென்னை-செங்கல்பட்டு மாவட்டத்தின் செயலாளராக 5 ஆண்டுகள் பணியாற்றினேன்.

இந்த காலக் கட்டத்தில், பல்கலைக் கழகங்க ளில் கற்காத பாடத்தை மக்களி டம் கற்றுக்கொண்டேன்.அன்றைய காலக்கட்டத்தில் வியட்நாமில் ஏகாதிபத்தியத்தின் கொடூரத் தாக்குதலை எதிர்த்து ‘உன் பெயரும் என் பெயரும் வியட்நாம்’ எனக்கூறி அமெ ரிக்க தூதரகம் முன்பு போராட் டம் நடத்தினோம். சில நேரங் களில் ஒரே நபராக சென்று கூட போராட்டம் நடத்தினோம். வியட்நாம் இன்றைக்கு இறை யாண்மை மிக்க நாடாக இருப் பதற்கு உலகம் முழுவதும் இருந்த ஜனநாயக சக்திகளின் குரல்கள் தான் காரணம். தமிழக மாணவர் கள் மத்தியில் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வை ஊட்டிய தில் இந்திய மாணவர் சங்கத் திற்கு பெரும் பங்கு உண்டு. காங் கிரஸ் கட்சியின் மக்கள் விரோ தக் கருத்தை எதிர்த்த நேரத்தில், சிறந்த குடிமக்கள் உருவாக தெருக்களே உதவின.

இதுவா வளர்ச்சி?

அரிசி உற்பத்தியில் செங்கல் பட்டு மாவட்டம் முன்னணியில் இருந்தது. ஒரே ஒரு பாலாறு ஓடு கிறது. வருடத்தின் பாதி நாட்கள் வறண்டு கிடக்கும். அங்குள்ள ஏரிகளை பயன்படுத்தி அதிக ளவு அரிசி உற்பத்தி செய்து, தாம்பரம் சந்தைக்கு கொண்டு வந்து விற்றனர். வியாபாரிகள் அரிசியை பதுக்கி வைத்து விலை யை ஏற்றினர். இதனையறிந்த மாணவர்களாகிய நாங்கள் அரி சியை எடுத்து மக்களுக்கு விநி யோகித்தோம். வியாபாரிகளும், சமூக விரோதிகளும், காவல் துறையினரும் சேர்த்து தாக்கி னர். என்.ராம், வி.கே.ராமச்சந்தி ரன், ஜி.ராமகிருஷ்ணன் உள் ளிட்ட 11 பேர் மீது 23 பிரிவு களின் கீழ் வழக்குப் பதிவு செய் தது. அந்த சம்பவம் மிகப்பெரிய எழுச்சியை உருவாக்கியது.

இன்றைக்கு காஞ்சிபுரத்தில் அரிசி உற்பத்தியும் இல்லை. தாம்பரம் அரிசிச் சந்தையும் இல்லை. பாலாற்றில் சாயக் கழிவுகளும், சாராயக்கழிவுக ளும் கலந்துவிட்டன. மணல் கொள்ளையர்களின் வேட் டைக்காடாக மாறி விட்டது. விளை நிலங்களை ரியல் எஸ் டேட்காரர்கள் சூறையாடிவிட் டனர். தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கரச் சாலை என்று நிலத்தை அபகரித்து விட்டனர்.

அந்த சாலை தங்க நாற்கரச் சாலை இல்லை; ஆக்டோபஸ் சாலை. தருமபுரி செல்வதற்குள் 8 டோல்கேட்டுகளில் 300 ரூபாய் கட்டணம் வசூலித்து கொள் ளையடிக்கின்றனர். இதுவா வளர்ச்சி?அன்றைய காலத்தில் சென் னைக்கு அருகில் உள்ள பெருங் களத்தூரில் 3ஆயிரம் பேர் வேலை செய்த ஸ்டாண்டர்டு மோட்டார்ஸ் மூடப்பட்டது. கார்களை வாங்க ஆள் இல்லை என்று கூறி நிறுவனத்தை மூடி னர். அந்த தொழிலாளர்களோடு இணைந்து மாணவர்களும் போராடினோம். பல தொழிற் சங்கத் தலைவர்களை உறவினர் கள் என்று கூறி விடுதிகளில் தங்க வைத்து பாதுகாத்தோம்.இன்றைக்கு அமெரிக்காவில் உள்ள டெட்ராய்டு நகரம் திவா லாகி விட்டது என்கிறார்கள்.

அந்த நகர நிர்வாகம், தொழிற்சாலைகள் மூடப் பட்டதால், தொழிலாளர் களுக்கு வேலை இல்லை. வரி வருவாய் இல்லை. எனவே நகர நிர்வாகம் திவாலாகி விட்டதாக கூறு கிறது. ஸ்டாண்டர்டு மோட் டார்ஸ் மூடப்பட்ட அந்த மாவட்டத்தில் தற்போது 8 கார் தொழிற்சாலைகள் உள் ளன. அமெரிக்க தொழி லாளி வேலை இழந்து இந் திய தொழிலாளிக்கு வேலை கிடைத்தால் அது வளர்ச்சி அல்ல.உலகமயக் கொள்கை யால் அமெரிக்காவில் நிறு வனத்தை மூடிவிட்டு இந்தி யாவில் தொழில் தொடங்கு கிறார்கள்.

அதாவது இந்தி யாவை அமெரிக்காவின் புறவாசலாக மாற்றுகிறார் கள். குறைந்த கூலிக்கு தொழிலாளர்களை கசக்கி பிழிந்து வேலை செய்து லாபம் கொழிக்கிறார்கள். இது வளர்ச்சிஅல்ல. வளர்ச்சி யாருக்கு என்று கேட்க வேண்டும்? அணை கட்டு வது, அணுஉலைகள் அமைப் பது வளர்ச்சி அல்ல. பூர்வ குடிகள் தங்கள் வாழ்விடங் களில் இருந்து வெளியேற் றப்படுவது, வாழ்விடங் களை ரியல் எஸ்டேட்காரர் களும், காண்ட்ராக்டர் களும் கொள்ளையடிப்பது வளர்ச்சியாகுமா?

பிரகாசமான எதிர்காலம்

இந்திய மாணவர் சங்கம் முன்வைக்கும் சுதந்திரம், ஜனநாயகம், சோசலிசம் என்பவை சாதாரண கோஷங்கள் அல்ல. அதற்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. 1971ம் ஆண்டு வாக்கில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு அண்ணா மலை பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் கொடுப் பதை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் போலீஸ் தடியடியில் உதயக்குமார் என்ற மாணவர் இறந்து விட்டார். அதனை கண் டித்து மிகப்பெரிய மாண வர் போராட்டம் நடை பெற்றது. அதன் விளைவாக ராமசாமி கமிஷன் அமைக் கப்பட்டது. அப்போது எஸ்எப்ஐ சார்பில் ஒரு உண்மையறியும் குழு பல் கலைக் கழகம் சென்று ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது. அதன் ஒரு நகல் தற்போதும் என்னிடம் உள்ளது. அதனை மாணவர் சங்கத்திடம் வழங்குகிறேன். மாணவர் சங்கத்தின் பொன் விழாவின் போது இது போன்ற பழைய பிரசுரங் களை கண்காட்சியாக வைக்க வேண்டும் என்றார். (உண்மையறியும் குழுவின் அறிக்கையின் பழைய நகலை மாநிலச் செயலாளர் ஜோ.ராஜ்மோகனிடம் வழங்கினார்)

மாநில உரிமைப் பறிப்பின் ஆரம்பம்

அவசரநிலைப் பிரக டன காலத்தில் எஸ்எப்ஐ மிகப்பெரிய போராட்டம் நடத்தியது. இடதுசாரித் தலைவர்களை பாதுகாப் பது, துண்டு பிரசுரங்கள் விநியோகிப்பது எனப் பணி யாற்றினோம். அந்த காலக் கட்டம்தான் வர்க்க அரசி யலை புரிந்து கொள்ளவும், படிப்பிற்கும், வாழ்க்கை எதார்த்தத்திற்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்து கொள்ளவும் உதவியது. வாழ்க்கைக்கான வழியைக் காட்டியது. அந்த காலக் கட்டத்தில்தான் மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி யை மத்தியஅரசு மத்திய பட்டியலுக்கு கொண்டு சென்றது.

அதுவே மாநில உரிமை பறிப்பின் ஆரம்ப மாக இருந்தது.1981 காலக்கட்டத்தில் புதிய கல்விக்கொள்கை அமலாக்கப்பட்டது. கல்வி கொடுப்பது அரசின் கட மை அல்ல என்று அறிவிக் கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற உன்னிகிருஷ்ணன், மோகினி-ஜெயின், டிஎம்ஏ பாய் வழக்கு என அனைத் தும் கல்வி வியாபாரத்திற்கு துணை நிற்பதாகவே இருந் தன. கட்டாய இலவசக் கல்வி வழங்க வேண்டும் என்று காலம் காலமாக எஸ்எப்ஐ போராடி வந்த தன் விளைவாகவே 2002ல் அரசியல் அமைப்பு சட்டத் தில் 21 (ஏ) பிரிவு சேர்க்கப் பட்டது. அது 2010 முதல் அமலாக்கப்பட்டு வருகிறது. அதுவும் 6-14 வயது வரை உள்ளவர்களுக்கே இலவசக் கல்வி பெறுவது அடிப் படை உரிமை என்றுள் ளது. அதேநேரத்தில் அரசே எல்கேசி, யுகேஜி வகுப்பு களுக்கு ரூ. 10ஆயிரம் கல் விக்கட்டணம் நிர்ணயிப் பது கேவலமாக உள்ளது.

மாணவர் போராட்டத்தால் மட்டுமே முடியும்

தனியார் கல்வி நிறு வனங்களில் 25 விழுக்காடு நலிவுற்ற பிரிவினருக்கு வழங்க வேண்டும் என்றுள் ளது. அதனை எதிர்த்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. அந்த வழக்கு என்னவாகும் என்று தெரி யாது. இலவசக் கல்வி என் பது கானல் நீராகவே உள் ளது. கல்வியிலும் ஏழை, பணக்காரன் என்ற பாகு பாடு காட்டப்படுகிறது. 21(ஏ)ல் கல்வி அடிப்படை உரிமை என்று கூறிவிட்டு ஏழைக்கு ஒரு கல்வியும், பணக்காரர்களுக்கு ஒரு கல்வியும் அளிக்கப்படு கிறது. இதனை மாற்றிட மாணவர் சங்கத்தால் மட்டும்தான் முடியும். இவ்வாறு அவர் கூறி னார்.

Friday, August 23, 2013

வேணும், வேணும், அமிதாப் பச்சனுக்கு நல்லா வேணும்.....

இன்றைய முக்கியமான தலைப்புச் செய்திகளில் ஒன்று
அமிதாப்பச்சனின் குரலை நரேந்திர மோடியின் விளம்பரத்திற்காக
பயன்படுத்திய மோசடி வேலைதான்.



அசலும் நகலும் சேர்த்து அமிதாப்பச்சன் வெளியிட்டுள்ள 
வீடியோவின் இணைப்பு இங்கே.

அமிதாப்பச்சனும் அவர் ரசிகர்களும் பொங்கி எழுந்து விட்டார்கள்.
ஒரு உள்ளாட்சித் தேர்தல் முடிந்ததும் கலைஞரைப் பார்த்து

" பச்சை, பச்சை, பச்சை துரோகம்" என்று  

மருத்துவர் ஐயா சொன்னாரல்லவா?

அது போல அமிதாப்பச்சனும் 

"போலி, போலி, போலி"

என்று கர்ஜித்துள்ளார்.

ஆனால் எனக்கு என்னமோ அமிதாப்பச்சன் மீது அனுதாபமே
வரவில்லை.

திரைப்படங்களில் நடிப்பதன் மூலம் பணம் வருகிறது,
விளம்பரங்களில்  நடிப்பதன் மூலம் பணம் வருகிறது,
க்ரோர்பதி நிகழ்ச்சியில் உண்மையான கோடீஸ்வரர் அவர்தான்.
அவர் மனைவியும் அந்த காலத்தில் சினிமாவில் நடித்தவர்.
இப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்.
மகனும் மருமகளும் திரைப்படம், விளம்பரம் என்று 
கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்.

இவ்வளவு இருந்தும் குஜராத் மாநில பிராண்ட் அம்பாசிடர்
பணியை மோடி கொடுத்ததும்
காசு,பணம், துட்டு, மணி, மணி 
என்று ஓடி விட்டார்.

அதனுடைய விளைவு 

இன்று தவிக்கிறார்.

சினிமாக்காரர்தானே படங்களில் யாராவது பின்னணி
பேசுவது பழக்கம்தானே, மாறாக முன்னர் பேசிய பின்னணிக்கு
படத்தை  மட்டும் மாற்றி விட்டார்கள்.

ஆனால் மோடியின் இந்த மோசடி இப்போது அம்பலமானது
ஒரு வகையில் நல்லது.

பிரதமராக வருவதற்கே இவ்வளவு கேடி வேலைகள் செய்யும்
நரேந்திர மோடி, பிரதமரானால் எவ்வளவு கேடி வேலையெல்லாம்
செய்து காங்கிரஸ்காரர்களையே தூக்கி சாப்பிட்டு விட மாட்டாரா
என மனசாட்சியுள்ள நீங்கள் எல்லாம் யோசிக்க மாட்டீர்களா என்ன?

காங்கிரஸ் கட்சிக்கும் பாரதீய ஜனதாவிற்கும் வேறு மாற்று
கிடையாதா என்று சிந்திக்க மாட்டீர்களா என்ன? 

Thursday, August 22, 2013

சாமியார்களுக்கு பாலியல் வன் கொடுமைதான் முக்கியத் தகுதியா

இது  கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு எதிரான கட்டுரை அல்ல,
தங்களையே கடவுள் என்று சொல்லிக் கொண்டு காசு பார்க்கும்
மோசடிப் பேர்வழிகளை நம்பி ஏமாந்து கொண்டிருக்கும் அப்பாவி
மக்கள், இனியாவது சாமியார்கள் என்ற போர்வையில் உலா வரும்
ஆசாமிகளை நம்பி ஏமாறக் கூடாது என்பதற்காகத்தான்.

இதோ இந்த படத்தில் உள்ள சாமியார் யார் தெரியுமா?


இந்திய மக்களின் மனசாட்சியை உலுக்கிய புது டெல்லி மாணவி 
பாலியல் கொடுமை நிகழ்வு நினைவில் உள்ளதா?

அப்போது ஏராளமானவர்கள் பல்வேறு அபத்த மொழிகளை 
உளறிக் கொட்டினார்கள். சங் பரிவார குட்டி தேவதைகள் முதல்
தலைமை பீடத்தில் இருந்து மோகன் பகவத் வரை அப்போது
ஆணாதிக்க சிந்தனைகளை வெளிப்படுத்தி தங்களின் உண்மை
முகத்தை மேலும் ஒரு முறை வெளிச்சம் போட்டுக் காட்டினார்கள்.

தமிழகத்தின் காமெடி சாமியார் மதுரை ஆதீனம், பெண்கள் பர்தா
போட்டுக் கொள்ள வேண்டும் என்றார். அந்த சமயத்தில் ஒருவர்
கூறியது என்ன தெரியுமா?

" அந்தப் பெண் தன்னை கெடுக்க வந்தவர்கள் காலில் விழுந்து
அண்ணா, என்னை எதுவும் செய்யாதீர்கள் என்று கெஞ்சி இருக்க
வேண்டும், அண்ணா என்று கூப்பிட்டு ஒரு மந்திரத்தை ஜபித்திருந்தால்
அவருக்கு எதுவும் நிகழ்ந்திருக்காது. ஆகவே தவறு அந்தப் பெண்
மீதுதான்"

இதைச்சொன்ன புண்ணியவான்தான் மேலே படத்தில் இருக்கும்
ஆசாராம் பாபு. கோடிக்கணக்கில் சொத்துக்கள் கொண்ட ஒரு
மடத்தை நடத்தி வரும், கடவுளின் அவதாரம் என்று அழைக்கப்படும்
இந்த ஆசாராம் பாபு மீது டெல்லி மற்றும் ராஜஸ்தான் காவல்துறை
வழக்கு பதிவு செய்துள்ளது.

எதற்குத் தெரியுமா?

ஒரு பதினாறு வயது மாணவியை பாலியல் வன் கொடுமை செய்த
காரணத்திற்காக.

இந்த மனிதர் மீது ஏற்கனவே கொலை, கொலை முயற்சி, மோசடி,
நில அபகரிப்பு, பாலியல் புகார்கள் என்று ஏராளமான புகார்கள்
பல வட மாநிலங்களில் பதிவாகியுள்ளது.

ஆனாலும் அவர் தசாவாதாரம் கமல் போல, மசாலா கேப் இளவரசு
போல பல பல கெட்டப்புக்களில்  பக்தர்களுக்கு அருள் பாலித்துக்
கொண்டிருக்கிறார். அவர்களும் காணிக்கைகளை கொட்டிக்
கொண்டே இருக்கிறார்கள். இவர்களும் கொழித்துக் கொண்டே
இருக்கிறார்கள். 

எந்தவித குற்றச்சாட்டும் எழாத சாமியார்கள் யாராவது இப்போது
உள்ளார்களா? குற்றம் செய்வதுதான் தகுதியாக மாறிக் கொண்டு
வருகிறது.

என்னுடைய வேண்டுகோள் ஒன்றே ஒன்றுதான்.

கடவுளை வேண்டுமானால் நம்புங்கள்,
கடவுள் இல்லை என்று சொல்பவரை  வேண்டுமானால் நம்புங்கள்,
கடவுள் இருந்தால் நன்றாக இருக்கும் எறு சொல்பவரைக் கூட
நம்புங்கள்.

ஆனால் நான்தான் கடவுள், கடவுளின் தூதன், கடவுளை நீங்கள்
சென்றடைய உதவும் மீடியம், என்றெல்லாம் சொல்பவர்களை மட்டும்
நம்பாதீர்கள். 

பாபா ராம்தேவ்களும் நித்தியானாந்தாக்களும் உங்களின் பலவீனத்தை
மூலதனமாக்கி வளர்ந்தவர்கள்.

இனியும் சாமியார்கள்  உங்கள்  பலவீனமானத்தை பயன்படுத்த
அனுமதிக்கப் போகின்றீர்களா?
 

Wednesday, August 21, 2013

இப்படி இருந்த அதிமுக மந்திரிங்க, எப்படி இப்படியானாங்க?




எப்போதும் தலை வணங்கி பணிவும் அடக்கமும் இணைந்து  அம்மா புகழ் மட்டுமே பாடிக்கொண்டிருக்கும் அதிமுக அமைச்சர்களின் மாமூலான காட்சி இது.



அப்படி பணிவின் சிகரங்களாக காட்சியளிக்கும் அமைச்சர் பெருமக்களா இப்படி உறங்கிக் கொண்டிருப்பது? அதுவும் “அம்மா” பேசிக் கொண்டிருக்கும் போது?



எங்கிருந்தது வந்தது இந்த தைரியம்?

யார் கொடுத்தது இந்த துணிச்சல்?

எப்படி இது சாத்தியமானது?

புரியாமல் தவிக்கின்றேன்.
புதிருக்கு விடை சொல்லுங்களேன்.

பின் குறிப்பு : அம்மாவின் அடுத்த அமைச்சரவை மாற்ற விளையாட்டில் உருளப் போகும் தலைகள் இவைகள்தானோ?

Tuesday, August 20, 2013

கவலையளிக்கும் கறுப்பு சிவப்பு – இது வேறு, உடன்பிறப்புக்கள் கவலைப்பட வேண்டாம்.


கறுப்பு வெள்ளிக்கிழமை – சிவப்புக் கம்பளம்

தேசம் தனது அறுபத்தி ஏழாவது சுதந்திர தினத்தை நாடெங்கும் உற்சாகமாக கொண்டாடிய மறுநாள் மிகப் பெரிய பொருளாதார சரிவைக் கண்டது.

ஏற்கனவே சரிந்து கொண்டிருக்கிற ரூபாயின் மதிப்பு அன்று மேலும் மோசமாக சரிந்து ஒரு டாலருக்கு இணையான இந்திய நாணயத்தின் மதிப்பு 62.17  ரூபாய் என்ற அளவிற்கு குறைந்தது. மும்பைப் பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸில்  எழுநூறு புள்ளிகள் வரை சரிந்தது. சமீப காலத்தில் மிக மோசமான அளவு வீழ்ச்சி 16.08.2013 அன்றுதான் ஏற்பட்டது. பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய் பங்குச்சந்தை மூலமாக தேசத்தை விட்டு வெளியேறியது. சமீப காலமாக சரிந்து கொண்டிருந்த தங்கத்தின் விலை அன்று மிகக் கடுமையாக உயர்ந்து ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை மட்டும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயர்ந்தது.

இத்தனை பாதிப்புக்கள் ஒரே நாளில் நிகழ்ந்ததால் ஊடகங்கள் அதனை கறுப்பு வெள்ளிக் கிழமை என்று வர்ணித்தார்கள். 

இதற்கு என்ன காரணம் சொல்லப்படுகிறது?

அன்னிய நிதி நிறுவன முதலீட்டாளர்கள், பங்குச்சந்தையிலிருந்து பணத்தை வெளியே எடுத்துச் செல்ல கட்டுப்பாடுகள் வரலாம் என்ற  வதந்திகளால் ஏற்பட்ட அச்ச உணர்வில், அப்படிப்பட்ட சூழல் வருவதற்கு முன்பாக அவர்கள் தங்கள் முதலீட்டை வெளியே கொண்டு வந்துதான் காரணம் என்று அரசு விளக்கம் அளிக்கிறது.

இதன் மூலம் இரண்டு விஷயங்கள் தெளிவாகி விட்டது.

எந்த ஒரு கட்டுப்பாட்டிற்கும் சர்வதேச நிதி மூலதனம் தன்னை உட்படுத்திக் கொள்ளாது. அப்படிப்பட்ட நிலையை எந்த அரசாவது உருவாக்க நினைத்தால் அந்த நாட்டிலிருந்து வெளியேறி விடும்.

ஒரு நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சிக்கு அன்னிய மூலதனத்தை நம்ப முடியாது. அப்படி நம்பினால் அது எதிர்பாராத நேரத்தில் காலை வாரி விடும்.

இந்த சூழலில் மத்தியரசு என்ன செய்யப் போகிறது?

பங்குச்சந்தை சரிவை சமாளிக்க அரசிற்கு ஆபத்பாந்தவனாக, கை கொடுக்கும் காவலனாக எல்.ஐ.சி இருக்கும். எல்.ஐ.சி நிறுவனத்தின் தொடர்ச்சியான முதலீடுகள் மூலமாக பங்குச்சந்தை சரிவு என்பது சமாளிக்கப்படும்.

ஆனால், அரசு இந்த நிலையிலிருந்து பாடம் கற்றுக் கொண்டுள்ளதா?

இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சீர்திருத்தங்களை விரைவு படுத்தி நிலைமையை சரி செய்யப் போகிறோம் என்பதுதான் ஆட்சியாளர்களின் பதிலாக உள்ளது.

அரசு தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இன்சூரன்ஸ்துறையில் அன்னிய மூலதன அளவை 26 % லிருந்து 49 % ஆக உயர்த்த வழி வகுக்கும் இன்சூரன்ஸ் சட்ட திருத்த மசோதாவையும் பென்ஷன் நிதியை அன்னிய மூலதனத்தின் ஆதிக்கத்திற்கு உட்படுத்த வழி வகுக்கும் பென்ஷன் வளர்ச்சி மற்றும் ஒழுங்காற்று ஆணைய மசோதாவையும் நிறைவேற்றத் துடிக்கிறது. அன்னிய மூலதனம் உள்ளே வந்தால்தான் இந்தியப் பொருளாதாரம் நிமிரும் என்ற பிரச்சாரத்தையும் கட்டவிழ்த்துள்ளது.

சர்வதேச பொருளாதார நெருக்கடி உலகை குலுக்கிய நேரத்தில் அது பற்றி ஆய்வு செய்ய உலகின் மிகச்சிறந்த பொருளாதார வல்லுனர்களைக் கொண்டு உலக வங்கியால் அமைக்கப்பட்ட குழு தனது பரிந்துரையில்  “எந்த ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் உள்நாட்டு சேமிப்பிற்கு மாற்றாக அன்னிய மூலதனம் ஒருபோதும் இருக்க முடியாது” என்று பரிந்துரைத்தது.

ஆனால் எந்தேரமும் காற்றில் கற்பூரமாய் காணாமல் போகிற அன்னிய நிதி மூலதனத்தின் மீது கொண்டுள்ள மோகத்தில் உள்நாட்டு சேமிப்பை ஊக்குவிக்க மறுக்கிறார்கள். உள்நாட்டு சேமிப்பை திரட்ட அடிப்படையாக திகழும் எல்.ஐ.சி போன்ற பொதுத்துறை நிறுவனங்களை சீரழித்து விட்டு அன்னிய நிதி மூலதனத்திற்கு சிவப்புக் கம்பளம் விரிக்கிறது மத்தியரசு.

காங்கிரஸ் கட்சிக்கு எந்த விதத்திலும் சளைக்காத பாரதீய ஜனதா கட்சியும் இந்த சீர்திருத்தங்களை அமுலாக்க கரம் கோர்க்க தயாராகவே உள்ளது. நெருக்கடிகளிலிருந்து இவர்களை காப்பாற்ற கை கொடுக்கும் எல்.ஐ.சி நிறுவனத்தை சீரழிக்கும் முயற்சிகளை எந்நாளும் அனுமதியோம் என்ற உறுதியோடு மக்களிடம் நாங்கள் தொடர்ந்து  செல்வோம். மாற்றுக் கொள்கைகளை முன்வைப்போம். 


இன்சூரன்ஸ்துறையில் அன்னிய மூலதன அளவு உயர்த்தப்பட்டால் உடனடியாக ஒரு நாள் வேலை நிறுத்தம் மேற்கொள்வது என்று எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் ஏற்கனவே எடுத்த முடிவை  நிறைவேற்ற தயாராக இருக்கிறோம்.. எங்களோடு நீங்களும் வாருங்கள்.

Monday, August 19, 2013

அவமானத்தை மூலதனமாக மாற்றிய கவியரசர் கண்ணதாசன்

 முகநூலில் நான் படித்து ரசித்தது.

கவிஞர் கண்ணதாசன் வாழ்வில்..அவமானம் ஒரு மூலதனம்...
.............................................................................................................

செட்டிநாட்டிலிருந்து எழுத்துக் கனவுகளுடன் 14 வயதுப் பையனாகச் சென்னை வந்தார் கவிஞர். அன்று இரவு படுக்க இடமின்றி மெரினா பீச்சில் காந்தி சிலைக்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு வைத்துப் படுத்துக் கொண்டிருக்கிறார் கவிஞர்.

நள்ளிரவு போலீஸ்காரரின் உருட்டுத்தடி அவரைத் தட்டி மிரட்டியது. காலையில் நகரத்தார் விடுதிக்குப் போக வேண்டும்.

இரவு மண்ணடி வரை நடந்து போக முடியாது. அதனால் பீச்சில் படுத்துக் கொள்ள அனுமதிகேட்ட அந்தப் பதினாறு வயதுப் பையனின் கோரிக்கையைப் போலீஸ் நிராகரித்தது.

""படு...படுக்கணும்னா நாலணா கொடு'' என்று காவல் மிரட்டியது.

நாலணாவுக்கு வழியின்றி கலங்கிய கண்களுடன் காந்தி சிலையிலிருந்து நடந்திருக்கிறார் கவிஞர்.

அவர் வளர்ந்து கவியரசர் கண்ணதாசன் என்று பெயர் பெற்று "சுமைதாங்கி' என்ற சொந்தப்படம் எடுக்கிறார்.

கதாநாயகனாக நடித்த ஜெமினி கணேசனை எங்கிருந்து நடக்க விடுவது என்று யோசித்த கவிஞர் அதே காந்தி சிலையைத் தேர்ந்தெடுத்தார்.

நள்ளிரவு ஷூட்டிங்.

ஆனால் படத்தில் இரவு 7 மணி மாதிரி இருக்க பீச் ரோட்டில் நிறைய கார்கள் வரிசையாக வர வேண்டும்.

ஏழு கார்களை நிற்க வைத்து மாறி மாறி ஒன்றன் பின் ஒன்றாக வருகிற மாதிரி படம் எடுக்கிறார்கள்.

வீட்டில் இந்தப் படத்தைப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்த கவிஞர் தன் பின்ளைகளைப் பார்த்துச் சொல்லியிருக்கிறார்.

""இந்தக் கார்களை கவனித்தீர்களா..?

இவை எல்லாமே நம்முடைய கார்கள்.

வாழ முடியும் என்று நம்பிக்கையோடு சென்னை வந்த என்னை இந்த இடத்தில்தான் நாலணா இல்லை என்பதற்காகப் போலீஸ் நடக்கவிட்டது.

இதே இடத்தில் என் ஏழு கார்களை ஓடவிட்டுப் படம் எடுத்திருக்கிறேன்.

நம்பிக்கை என்னை ஜெயிக்க வைத்துவிட்டது!'' என்றாராம்!

எங்கு அவமதிக்கப்பட்டாரோ அங்கு கவிஞர் தம் வெற்றியை அரங்கேற்றியிருக்கிறார்.

அவமானம் ஒரு மூலதனம்...

இது புரிந்தால் வெற்றி நிச்சயம்!

("வெற்றி நிச்சயம்' என்ற புத்தகத்தில் "அவமானம் ஒரு மூலதனம்' என்ற கட்டுரையில் சுகி.சிவம்..)..

நன்றி..பி.வினோத்குமார்..

உடுமலை.சு.தண்டபாணி தண்டபாணி

Sunday, August 18, 2013

புத்திசாலிகள் யார்? போட்டி முடிவுகள்

நேற்று நான் 15 பழமொழிகளுக்கான படங்களைப் போட்டு
அதற்கான விடைகளை கண்டு பிடிக்கச் சொல்லியிருந்தேன்.

இதோ படங்களும் அதற்கான விடைகளும்


1 நல்ல மாட்டிற்கு ஒரு சூடு,
2 ஆடற மாட்டை ஆடிக் கறக்கனும், பாடற பாட்டை பாடிக் கறக்கனும்
3 கல்லானாலும் கணவன், புல்லானாலும் கணவன்
4 அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
5 மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி
6 வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
7 பாம்பின் கால் பாம்பறியும்


 8 அழுத புள்ளைக்குத்தான் பால் கிடைக்கும்
9  தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை
10 வீட்டில எலி, வெளியில புலி
11 விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பா என்றானாம்
12 ஏட்டுச்சுரைக்காய் கூட்டிற்கு உதவாது
13 தாய் எட்டடி பாய்ந்தா குட்டி பதினாறு அடி பாயும்
14 ஊர் இரண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்
15 பணம் பத்தும் செய்யும்.










கிட்டத்தட்ட முன்னூறு பேர் பார்த்த பதிவில் தைரியமாக
பதில் சொன்னவர்கள் எட்டு பேர். பின்னூட்டமாக மட்டும்
இல்லாமல் மின்னஞ்சல் மூலமாக, முகநூல் செய்தியாக
விடை சொன்னவர்களில் 

தோழர் கே.எம்.சாந்தலட்சுமி பதினான் கு விடைகளை 
சரியாகவும்

தோழர் என்.ராஜா பன்னிரெண்டு விடைகளையும்
தோழர் ராஜி பதினோரு விடைகளையும் 
தோழர் வசந்தராஜன், DYFI, பத்து விடைகளையும்

சரியாக  சொல்லியுள்ளனர்.

அவர்களுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

முயற்சித்த மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

அப்படியே பார்த்து விட்டுப் போனவர்களுக்கு

??????????????????????????????????????????????

 

Saturday, August 17, 2013

உங்கள் புத்திசாலித்தனத்திற்கு ஒரு சவால் - தமிழறிவிற்கும்தான்

ஒரு நண்பர் அனுப்பிய மின்னஞ்சல் இது.

முதல் படத்தைப் பார்க்கவும்


இந்தப்படம் ஒரு பழமொழியை குறிக்கிறது.
அது யானைக்கும் அடி சறுக்கும்.

இப்போது கீழே உள்ள படங்களை கவனமாக
பார்க்கவும்


 

என்ன பார்த்து விட்டீர்களா?

மேலே உள்ள படங்களைப் பார்த்து அதற்குரிய 
சரியான பழமொழியை கண்டுபிடித்து 
சொல்லவும்.

அத்தனை பழமொழிகளையும் கண்டுபிடித்தால்
நீங்கள் நிச்சயம் புத்திசாலிதான்.

எங்கே கண்டு பிடியுங்கள் பார்ப்போம்.

பின்னூட்டம் இடாமல் தப்பித்தால் அது உங்களுக்கு
இழுக்கு.

பின் குறிப்பு : என்னால் இதுவரை ஏழு பழமொழிகளைத்தான்
கண்டுபிடிக்க முடிந்துள்ளது

Friday, August 16, 2013

குழம்பினேன், தெளிவு பெற்றேன்





நேற்றைய பத்திரிக்கை விளம்பரங்களில் தமிழக முதல்வர்
சென்னை போர் வீரர் நினைவகத்தில் மலர் வளையம்
வைத்து அஞ்சலி செலுத்துவார் என்று படித்த போது 
கொஞ்சம் குழம்பினேன். 

சென்னை போர் வீரர் நினைவகத்திற்கு உள்ளே சென்றது
கிடையாது எனினும் வெளியிலிருந்து பார்த்துள்ளேன். 
முதலாவது உலகப் போரில் உயிர் நீத்த பிரிட்டிஷ் ராணுவ
வீரர்களின் நினைவகம் என்றல்லவா இருக்கும். இதற்கு
ஏன் செல்கிறார் என்று குழப்பம் வந்தது. 

பிறகு விபரங்களை இணையத்தில் தேடியபோதுதான்
அந்த நினைவகத்தை முதலாம் உலகப் போர்,
இரண்டாம் உலகப் போர், சீனப் போர், பாகிஸ்தான்
போர்கள் என எல்லா போர்களிலும் இறந்த வீரர்களுக்கான
நினைவகமாக மாற்றி விட்டனர் என்பது தெரிய வந்தது.

தெளிவு கிடைத்தது.

புதிது புதிகாக நினைவகங்கள் அமைத்துக் கொண்டே
போவதை விட, அப்படி அமைத்து அவற்றை பராமரிக்காமல்
பாழாக்குவதை விட இது மேல் அல்லவா!

Thursday, August 15, 2013

இது உண்மையென்றால் நான் இந்திரா காந்தியை நிச்சயம் பாராட்டுவேன்

சற்று முன் முகநூலில் பார்த்த செய்தி இது.

இந்தத் தகவல்  உண்மையென்றால் நான் இந்திரா காந்தியை நிச்சயம் பாராட்டுவேன். 

ஆங்கிலேய ஆணவம்

ஒரு காலத்தில் ஆங்கிலேயர்களின் ஆட்சியிலிருந்து தற்போது சுதந்திரமாக இருக்கும் நாடுகளை ஆங்கிலத்தில் (commonwealth countries)காமன்வெல்த் நாடுகள் என்று கூறுவார்கள். இந்த காமன்வெல்த் தலைவர்கள் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கூடுவார்கள் (கூடி என்ன பேசுவார்கள் என்பது வேறு விஷயம், ஏதோ ஒரு நாட்டு மக்களின் வரிப்பணம் வீணாகும் என்பது தான் உண்மை!). 1975ம் ஆண்டு ஜமைகா நாட்டில் இந்த கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொள்வதற்காக அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி சென்றிருந்தார். இந்திராவை 'இரும்பு பெண் (Iron Lady) என்று அப்போதைய ஆங்கிலேய பத்திரிகைகள் பட்ட பெயர் வைத்திருந்தனர். இந்த பெயருக்கு ஏற்ப ஒரு சம்பவம் நடந்தது.

மாநாடு நடந்து முடிந்த அன்று இங்கிலாந்து ராணி எலிஸபெத்* எல்லா தலைவர்களையும் சந்திக்க விரும்பினார். ஆனால் முன்னாள் தலைவர்களெல்லாம் ஒரு காலத்தில் தனது நாட்டுக்கு அடிமைகளாக இருந்தார்கள் என்ற எண்ணம் எலிஸபெத் ராணிக்கு இருந்திருக்கும் போல. எல்லா தலைவர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பினார்.

அதில் இருந்த வாக்கியம் என்னவென்றால் "Her Majesty will be pleased to grant an audience to you" என்று இருந்தது. அதாவது மற்ற தலைவர்கள் ஏதோ எலிஸபெத்தை பார்க்க நாக்கை தொங்க போட்டுக்கொண்டு இருப்பது போலவும் ராணியார் 'தரிசனம்' தருவதற்கு சம்மதிப்பது போலவும் அந்த கடிதத்தின் தொனி இருந்தது. சிறிய வயது முதலே இந்திரா நேருவின் சத்யாகிரஹ போராட்டத்தை அருகிலேயே பார்த்தவர். அவர் உடனே என்ன செய்தார் தெரியுமா? பதிலுக்கு தனது ஹோட்டல் அறையில் இருந்த ஒரு லெட்டர் பேடை கிழித்து "The Prime Minister of India will be pleased to meet you" (இந்திய பிரதமர் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைவார்) என்று எழுதி அனுப்பினார்.

மற்ற தலைவர்கள் மத்தியில் இது மிகவும் பரபரப்பாக
பேசப்பட்டது. தவறை உணர்ந்த எலிஸபெத், முதலில் எழுதிய கடிதத்தை வாபஸ் வாங்கி கொண்டு "Her Majesty will be pleased to meet you" என்று திருத்தி அனுப்பினார்.

அது மட்டுமல்ல, அதற்கு பிறகு நடந்த எல்லா காமன்வெல்த் மாநாடுகளிலும் எந்த நாட்டில் மாநாடு நடக்கிறதோ, அந்த நாட்டின் தலைவர்தான் மற்ற தலைவர்களூக்கு அழைப்பிதழ் கொடுக்க ஆரம்பித்தனர், எலிஸபெத் ராணி அல்ல*. 'ஒரு காலத்தில்
நாங்கள் உங்களுக்கு அடிமையாக இருந்தோம், இப்போது இல்லை' என்று சொல்லாமல் சொல்லி ஆங்கிலேயர்களின் ஆணவத்தை அடக்கிய* இந்த கடிதம் உண்மையில் சரித்திரம் படைத்து விட்டது என்றே கூறலாம் அல்லவா?

அன்சாரி முஹம்மது
படித்ததில் பிடித்தது


இப்படிப்பட்ட குணாம்சம் உங்களின் வாரிசுகளுக்கு ஏன் இல்லாமல்
போய்விட்டது இந்திராஜி?

சுதந்திர நாளில் தேசத்தை சுத்தம் செய்திடுவோம்.





கத்தியின்றி ரத்தமின்றி
வாங்கியதா நம் சுதந்திரம்?

குண்டாந்தடிகளில்
உடைந்த மண்டைகள்,
தோட்டாக்கள்
துளைத்த நெஞ்சங்கள்,
சிறைக் கொட்டடியில் இழந்த
இளமைகள்,
தூக்கில் தொங்கிய
கழுத்துக்கள்,

எத்தனை பேர் அறிவார்கள்?
வெகுண்டெழுந்த மாலுமிகளால்
ஆடிப் போனது
வெள்ளையர் கூட்டமென்று.

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின்
அஸ்தமனத்திற்கு
வெடிகுண்டுகளின் ஒசையும்
காரணம் என்று
இன்றைய தலைமுறையில்
எத்தனை பேர் அறிவார்கள்?

வரலாற்றின் நாயகர்கள்
வதைபட்ட காவியத்தை
திரை போட்டு மூடிவிட்டு
திரும்ப திரும்பக்
கதைத்தார்கள்
“ கத்தியின்றி ரத்தமின்றி
வாங்கிய சுதந்திரம்
இதுவென்று”

வாங்கியதாய் சொன்னவர்களின்
வாரிசுகள்
விற்பனைப் பிரதிநிதியாகி
தேசத்தை
விற்கவும் செய்கிறார்கள்.

வீணர்களின் கையில்
சுதந்திர வீணையோ
புழுதி படியப் படிய.


தியாகிகளின் குருதி
தண்ணீரில் கரைந்து
வீணாவதா?

கொடியேற்றி
மிட்டாய் திங்கவா
சுதந்திர தினம்?

மூவர்ணக்கொடியை
சட்டைப்பையில்
குத்தி வைத்து
அழகு பார்க்கவா
சுதந்திர தினம்?

அடிமையாய் மாறியவர்
நம்மையும்
அடிமையாய் மாற்றத்
துடிப்பவர்
செங்கோட்டைக் கொத்தளத்தில்
ஆர்ப்பரிக்கும் நாடகத்தை
மவுன சாட்சியாய்
வேடிக்கை பார்க்கும்
வெட்கக்கேடு
இனியும் தேவையா?

தியாகிகளைப் போற்றி
சுதந்திரம் காப்போம்.
எந்நாளும் நாம்
அடிமையில்லை
என்பதை
உரக்கச் சொல்வோம்.

தேசத்தை விற்பவர்களை
தேசம் விட்டு
வெளியேற்றுவோம்.

சுதந்திர நாளில்
தேசத்தை
சுத்தம் செய்திடுவோம்.