சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Wednesday, June 29, 2011
Tuesday, June 28, 2011
கொடியவர்களின் கூடாரமாகிப் போனது கோயில் ,மஞ்சுநாதா! மஞ்சுநாதா!!
எத்தனுக்கு எத்தன், ஏமாற்றுப் பேர்வழிக்கு ஏமாற்றுப் பேர்வழி,
விடாக்கண்டனுக்கு கொடாக்கண்டன் - எப்படி வேண்டுமானாலும்
அழைக்க முடியும். எட்டியூரப்பாவும் குமாரசாமியும் நடத்திய
கீரி பாம்பு நாடகத்தைதான் சொல்கிறேன்.
தர்மஸ்தலா மஞ்சுநாதர் ஆலயத்தில் சத்தியம் செய்வாயா என
எட்டியூரப்பா சவால் விடுக்க, அதற்கு குமாரசாமி பதில் சவால் விட,
சட்டமன்றத்திலும் கர்நாடக மாநில மேடைகளிலும் நடக்கும்
நாடகத்தின் புதிய மேடையாக கோயில் மாறிப்போனது.
இறுதியில் எவரும் சத்தியம் செய்யவில்லை. இருவருமே
பொய்யர்கள் என்பதை மீண்டும் ஒரு முறை அம்பலப்படுத்திக்
கொண்டனர்.
கோயிலில் சத்தியம் என்று மூட நம்பிக்கையை வளர்க்கும்
கருவிகளாக இவர்கள் இருப்பதுதான் வேதனை. இவர்களின்
வெட்டி மோதலால் பக்தர்கள் அவதிப் பட்டதுதான் மிச்சம்.
மஞ்சுநாதர் எங்கே போய் ஒளிந்து கொண்டாரோ?
Sunday, June 26, 2011
மகேந்திர சிங் தோனி கொடுத்த செல்லாத செக்
வீட்டு வரி கட்டுவதற்காக ராஞ்சி மாநகராட்சிக்கு இந்திய கிரிக்கெட்
அணியின் காப்டன் மகேந்திர சிங் தோனி கொடுத்த 645 ரூபாய்க்கான
காசோலை செல்லாது என திரும்பி வந்து விட்டதாம்.
வங்கியின் கணக்கு எண் காசோலையில் தவறாக எழுதி விட்டார்கள்
என்று ராஞ்சி மாநகராட்சி அதிகாரிகள் சமாளிக்கிறார்கள். இப்போதெல்லாம் வங்கிக் கணக்கு எண் அச்சிடாமல் எந்த வங்கியும்
காசோலை புத்தகமே வழ்ழங்குவதில்லையே! தோனிக்கு மட்டும்
வங்கி கணக்கு எண் போடாத காசோலை புத்தகம் அளித்து விட்டார்களோ? இல்லை அவரது கணக்கில் அவ்வளவுதான்
பணம் இருந்ததோ? பாவம் பரம ஏழை!
ஒரே ஒரு சந்தேகம். வேலூர் கூட இல்லை, பக்கத்தில் உள்ள சத்துவாச்சாரி நகராட்சிதான். அங்கே வெறும் 900 சதுர அடி
வீட்டிற்கு வருடம் 3000 ரூபாய் வீட்டு வரி கட்டுகிறேன். ஜார்கண்ட்
தலைநகர் ராஞ்சியில் தோனி வீட்டிற்கு வரி வெறும் 645 ரூபாய்தானா?
இல்லை அது வெறும் குடிசையா?
பணம் உள்ளவர்களுக்கு மேலும் பணம் சேர்த்துத் தருவதுதான்
இன்றைய அரசுகளின் கடமை போலும்!
Saturday, June 25, 2011
மன்மோகன் சிங்கிற்கு மரண அடி?
பஞ்சாப் அசிங்கம் மன்மோகன் சிங் இப்போது என்ன சொல்லப்போகிறார்? என்ன செய்யப் போகிறார்?
இந்திய நலனில் அக்கறையற்ற, அமெரிக்காவுக்காகவே
அதன் முதலாளிகளுக்காவே வாழும் இந்திய ஜீவன் என்ற
குற்றச்சாட்டு இந்த மனிதர் உண்டு. இந்தியாவின் நலன்களை
புறக்கணித்து, இறையாண்மையை அடகு வைக்கிறார் என்ற
குற்றச்சாட்டு அவர் மீது அழுத்தமாக எழுந்தது அணு சக்தி
உடன்பாட்டின் போதுதான்.
அமெரிக்காவில் காலாவதியாகிப் போன நிறுவனங்கள் இந்தியாவில்
அணு உலைகள் அமைக்க வேண்டும் என்பதுதான் அமெரிக்க
அஜெண்டா. அப்படி அணு உலைகள் அமைக்க யுரேனியம் வேண்டும்,
தொழில் நுட்பம் வேண்டும், யுரேனியம் மறு சுழற்சியாக வேண்டும்.
யுரேனியத்தையோ, தொழில் நுட்பத்தையோ நியுக்ளியர் சப்ளை
குரூப் என்று அழைக்கப்படும் நாடுகள்தான் அளிக்க வேண்டும்.
அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகளுக்கு மட்டுமே அளிப்பது என்பது அவர்களின் நிலை.
அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் சர்வதேச அணு சக்தி
முகமை, இந்தியாவின் அணு உலைகளை சோதனை செய்யும்
உரிமையை வழங்கினால் யுரேனியம் கிடைக்கும் என்று அமெரிக்கா
ஆசை வார்த்தை சொன்னது, அண்ணனும் மயங்கிப் போனார்.
போகாதே, உன்னை நம்ப வைத்து கழுத்தறுத்து விடுவார்கள் என்று
மார்க்சிஸ்ட் கட்சி எச்சரித்தது, ஆதரவையும் விலக்கிக் கொண்டது.
கோடிகளில் செலவு செய்து நாற்காலியை காப்பாற்றிக் கொண்டு
வேகம் வேகமாக கையெழுத்தும் போட்டு விட்டார்.
அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால் சொற்பத்தொகையிலும்
அற்பத் தொகை இழப்பீடு அளித்தால் போதும் என்றும் சொல்லி விட்டது.
ஆனாலும் பாவம், அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்து
போடாத இந்தியாவிற்கு நோ யுரேனியம், நோ தொழில் நுட்பம் என்று
சொல்லி விட்டது. ஆனால் அணு உலை சோதனை மட்டும் நீடிக்கும்.
ஆக மிகப் பெரிய அடி, அல்வா எல்லாமே மன்மோகன் சிங்கிற்கு
கிடைத்து விட்டது.
ஹிந்து பத்திரிகை மிக அருமையாக ஒன்று எழுதியிருந்தார்கள்
"இந்தியாவின் மீதான எல்லா தடைகளும் நீங்கி விடும் என்று
மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் சொன்னார். ஆனால்
தடைகளை மீண்டும் விதிக்கக்கூடாது என அவர் அமெரிக்காவிடம்
கேட்கவில்லை போலும்."
ஊழல் பற்றி பேசும் அண்ணா ஹசாரே வகையறாக்கள் இது போன்ற
விஷயங்கள் பற்றி எல்லாம் கவலைப்பட மாட்டார்களா?
Friday, June 24, 2011
இருண்ட இரவு நீடிக்கட்டுமே!
அலுவலகத்திலிருந்து இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். பிரதான
சாலையிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளே வர வேண்டும். மின்சார வெட்டு. வீடுகளில் வெளிச்சம் இல்லை. வீதியிலும்
இல்லை. சாலையில் செல்லும் வாகனங்கள் தரும் ஒளி மட்டுமே.
அந்த ஒளியை மிஞ்சி சிறுவர்களின் ஒலி. உற்சாகமாக விளையாடிக்
கொண்டிருந்தார்கள். அந்த ஆரவாரத்தைக் கேட்கவே மிகவும்
மகிழ்ச்சியாக இருந்தது. ஆண்களும் பெண்களும் கூட அககம்பக்கத்தை
சேர்ந்தவர்களோடு பேசிக் கொண்டிருந்தார்கள். ஆற்காட்டாரால்
ஊக்குவிக்கப்பட்ட வணிகமான இன்வெர்டர் வாங்க முடியாத
பொருளாதாரப் பிரிவைச் சேர்ந்த மக்கள் அவர்கள்.
இது போன்ற சூழலை இது நாள் வரை பார்த்ததில்லையே என
யோசித்துக் கொண்டிருந்தபோதே அந்த சூழல் மாறி விட்டது.
ஆம் மின்சாரம் வந்து விட்டது. அத்தனை பறவைகளும் கூட்டுக்குள்
அடைந்து விட்டது. புத்தகச்சுமைக்குள் சிறுவர் சிறுமியர் புதைந்து
போக ( பாடங்கள் துவங்கா விட்டாலும் கூட) நாதஸ்வரம், தங்கம்
என தொலைக்காட்சித் தொடர்கள் பெண்களையும் ஏன் பல
ஆண்களையும் இரு கரம் நீட்டி வரவேற்று விலங்கு பூட்ட
வீதியில் ஒளி வந்திருந்தது, ஒலி தான் எங்கோ ஒளிந்து
கொண்டு விட்டது.
ஏக்கத்தோடு நினைத்துப் பார்த்தேன்,
இருண்ட இரவு நீடிக்கட்டுமே!Thursday, June 23, 2011
கிழிக்கப்பட்ட பக்கங்கள்
நேற்று தீக்கதிரில் படித்த ஒரு சுவாரஸ்யமான ஒரு செய்தி.
அரசு அமைக்கும் குழுக்கள் செயல்படும் லட்சணங்கள் பற்றியது.
கல்வியாளர் திரு ராஜகோபாலன் அவர்கள் ஒரு அனுபவத்தை
பகிர்ந்து கொண்டுள்ளார். முன்பு மத்தியரசு ஒரு ஆணையிட்டதாம்.
பாடப்புத்தகங்களில் மூன்றில் ஒரு பகுதியை குறைக்க வேண்டும்
என்று. தமிழக அரசு அமைத்த குழுவின் பரிந்துரை என்ன தெரியுமா?
ஒவ்வொரு புத்தகத்தின் மூன்றாவது பக்கத்தையும் கிழித்து விடுவது.
முதல் பக்கத்தின் தொடர்ச்சியாக இருந்தாலும் கவலையில்லை,
முக்கியமான பாடமாக இருந்தாலும் கவலை இல்லை. ஒவ்வொரு மூன்றாவது பக்கமும் தேவையில்லை. அவ்வளவுதான்.
தான் கடுமையாக ஆட்சேபித்ததால் கணக்கு புத்தகம் மட்டும்
தப்பியது, தேவையானவற்றை மட்டும் வைத்துக் கொண்டு புதிய
புத்தகம் தயாரிக்கப்பட்டது, மற்ற பாடங்களில் மூன்றாவது
பக்கங்கள் போனது போனதுதானாம்.
Wednesday, June 22, 2011
சுவிஸ் வங்கியில் ராஜீவ் காந்தி பதுக்கியது 13 ,200 கோடி ரூபாய்?
சுவிஸ் வங்கி ஒன்றில் ராஜீவ் காந்தி 13 ,200 கோடி ரூபாய் பதுக்கியதாக
ஜெர்மன் பத்திரிகையில் 1991 ம் வருடம் செய்தி வந்ததாக அப்படத்துடன் ஒரு மின்னஞ்சல் இன்று உலாவிக் கொண்டுள்ளது. அப்போதே காங்கிரஸ் கட்சி எதுவும் பதில் அளிக்கவில்லை என்றும் அந்த மின்னஞ்சல் கூறுகின்றது. இத்தனை வருடத்திற்கு பிறகு yaar தூசி தட்டி அனுப்பினார்கள் என தெரியவில்லை. அப்போதே பதில் சொல்லாத காங்கிரஸ் இப்போது மட்டும் என்ன சொல்லப்போகின்றது?
Tuesday, June 21, 2011
ஆண்களின் குற்றமா ? ஆட்சியின் குற்றமா?
உத்திரப் பிரதேச மாநிலத்தில் கிட்டத்தட்ட இரண்டு நாட்களுக்காக
நான்கு தலித் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர்.
அதிலே ஒருவர் இறந்து போயுள்ளார். ஒருவர் கண்களில் கத்தியால்
குத்தப்பட்டு பார்வையிழந்துள்ளார். வக்கிரம் பிடித்த மிருகங்களின்
வெறிச்செயல். மிக மிகக் கடுமையான அளிக்கப்பட வேண்டிய செயல் இது.
மாயாவதி உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற குரல் இப்போது
எழுந்துள்ளது. இதிலேதான் எனக்கு சில சந்தேகங்கள்.
அரசு அதிகாரிகளோ அல்லது அவரது அமைச்சரவை சகாக்களோ,
சட்ட மன்ற உறுப்பினர்களோ ஏன் அவரது கட்சிக்காரர்களோ இந்த
இழி செயலை செய்திருந்தால் அவர் பொறுப்பேற்று பதவி விலகுவது
சரியாக இருக்கும். அல்லது இந்த கொடுமைக்கு காரணமான கேவலமான
குற்றவாளிகளை பாதுகாக்க அவரது அரசு முயன்றால் பதவி விலகு
என்று கோருவது மிக மிக நியாயமாகவே இருக்கும்.
ஆனால் குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடித்த பின்பும் பதவி
விலகு என ஊடகங்கள் முழங்குவதில் உள் நோக்கம் இருப்பதாகவே நான் பார்க்கிறேன். ஊடகங்களை தூண்டி விடுவதில் தற்போது கைது
நாடகம் ஆடிய காங்கிரஸ் இளவரசனுக்கு என்ன பங்கு என்று தெரியவில்லை.
மாயாவதிக்கு நான் நிச்சயமாக வக்காலத்து வாங்கவில்லை. அவருடைய அணுகுமுறை குறித்தும் ஊழல் குறித்தும் கடுமையான
விமரிசனங்கள் உண்டு. மத்தியரசுக்கு ஆபத்து வந்த போது முட்டு கொடுத்ததற்காக தாஜ் காரிடார் வழக்கை நீர்த்துப் போகச்செய்தது
காங்கிரஸ் கட்சி என்பதையும் நான் மறக்கவில்லை.
மத்தியஅரசின் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட குற்றப்பதிவுகள்
அறிக்கையின் படி 2009 ம் ஆண்டு அதிகமான பாலியல் வன்கொடுமை
வழக்குகள் பதிவானது பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில்( 14 %).
பெண் குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமை அதிகமாக நடந்ததும்
பாஜக ஆளும் சத்திஸ்கர் மாநிலத்தில்தான் (25 .06 ). 35 மாநகரங்களில்
என்று எடுத்துக் கொண்டால் காங்கிரஸ் ஆளும் புது டெல்லியில் தான்
அதிகம் (23 . 8 )
அந்த மாநில முதல்வர்களை பதவி விலகச்சொல்லி விட்டு பிறகு
மாயாவதியிடம் வரலாமே!
Monday, June 20, 2011
சாமியாரின் படுக்கையறையில் ரகசிய பொக்கிஷக் குவியல் ஏன்?
இறந்து போன சத்ய சாய் பாபாவின் படுக்கையறையை திறந்து
பார்த்த போது பணமும் தங்கமும் வைரமும் குவிந்து கிடந்ததாம்.
எண்ணிப் பார்க்கையில் 12 கோடி ரொக்கம், 98 கிலோ தங்கம், சில
தங்கச்சிலைகள், வைர ஆபரணங்கள் இருந்ததாம். நேபாள மன்னர்
அளித்த நகையெல்லாம் காணோம் என்று பக்தர்கள் புலம்புகின்றனராம்.
முற்றும் துறந்த முனிவர்களுக்கு எதற்கு இத்தனை செல்வம்? அதுவும்
ரகசியமாக? சத்யசாய் பாபாவின் சொத்துக்கள் வெளிப்படையானது
என்று இத்தனை நாள் சொல்லி வந்தது கட்டுக்கதை என்பது இந்த
படுக்கையறை பொக்கிஷம் அம்பலப்படுத்தி விட்டது.
எப்படி இந்த சொத்து, ஏன் ரகசியமாய் பதுக்கி வைக்கப்பட்டது என்பதை
அடுத்த ஜென்மத்து கர்நாடக மாநிலத்தில் பிறக்கப்போகும் பிரேம் சாய்
வந்து சொல்வாரோ?
மிஸ்டர் புதிய பரிசுத்தம் அண்ணா ஹசாரே அவர்களே,
லோக் பால் மசோதாவில் சாமியார்களை சேர்த்து விட்டீர்களா?Sunday, June 19, 2011
கக்கன்ஜி, ராகுல்ஜி - பிழைப்பிற்காக இப்படியா
இன்று ஒரு விளம்பரம் பார்த்தேன்.
அதை கீழே அளித்துள்ளேன்.
18 . 06 . 2011 அன்று 102 வது பிறந்த நாள்
நேர்மைக்கும்
(கக்கன் ஜி )
19 .06 .2011 அன்று 42 வது பிறந்தநாள் காணும்
எளிமைக்கும்
(ராகுல் ஜி)
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவண்: காங்கிரஸ் அல்லக்கை
(பெயர் மாற்றப்பட்டுள்ளது)
கழகக் கலாசாரம் காங்கிரஸ் கட்சியையும் நன்றாக
பாதித்துள்ளது என்பதற்கு இந்த விளம்பரம்தான்
ஆதாரம்.
பிழைப்பிற்காக ராகுல் காந்தியை புகழட்டும்,
நாராக புகழட்டும், பொய்களால் மாலை கட்டி
சூடட்டும்.
ஆனால் கொஞ்சம் கூட விவஸ்தையில்லாமல்
உண்மையான நேர்மையாளர் கக்கன் பெயரை
வேறு இழுத்து அவரை இழிவு படுத்துகின்றனர்.
காங்கிரஸ் கட்சி எவ்வாறு கக்கன் அவர்களின்
நூற்றாண்டைக் கொண்டாடியது என்பது
அனைவரும் அறிந்த அவலம்.
அவரோடு எளிமை வேடம் போட்டு வரும்
ஏமாற்று இளவரசனை இணைத்திருப்பது
கக்கன் அவர்களுக்கு அவமானம்.
பிழைப்பிற்காக இன்னும் மோசமாகக் கூட
காங்கிரஸ்காரர்கள் செல்வார்கள்.
Friday, June 17, 2011
இடதுசாரி எதிர்ப்பாளர்களின் கவனத்திற்கு
இன்று தீக்கதிர் நாளிதழில் வந்துள்ள அருமையான கட்டுரை. மார்க்சிஸ்டுகள் வீழ்த்தப்பட்டதாக கனவு காணுபவர்களே, நாங்கள்
முன்னைக்காட்டிலும் வேகமாக, வலிமையாக, உறுதியோடு
வருவோம் என்று சொல்கின்றார், மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல்
தலைமைக்குழு உறுப்பினர் தோழர் கே.வரதராஜன்.
வங்கத்தில் வரலாறு திரும்பும் |
-கே.வரதராசன் |
அண்மையில் நடந்துமுடிந்த சட்டமன் றத் தேர்தலில் மேற்குவங்கத்தில் இடது முன் னணிக்கு ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, உற்சாகமடைந்துள்ள முதலாளித்துவ ஊட கங்கள், இனி இந்தியாவில் இடதுசாரி களுக்கு எதிர்காலம் இல்லை என்று புழுதிப் புயலை கிளப்பிவிட்டு வருகின்றன. சோவி யத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சோசலிசத்திற்கு பின்னடைவு ஏற்பட்டபோதும் உலக அளவில் இத்தகைய பிரச்சாரம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. ஆனால் முதலாளித்துவ உலகில் தற்போது ஏற்பட் டுள்ள நெருக்கடி, முதலாளித்துவத்தால் மனிதகுலத்தின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாது என்பதையும் சோசலிசமே உலகின் எதிர்காலம் என்பதையும் மெய்ப் பித்து வருகின்றன. மேற்குவங்க தேர்தல் முடிவுகளை பரி சீலனை செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் மத்தியக்குழு, அரசியல் மட்டத்திலும், ஸ்தாபன மட்டத்திலும் நேர்ந்த தவறுகளை திருத்திக்கொள்ளும் பொருட்டு மேற்கொள்ள வேண்டிய சில நடவடிக்கைகளை வரை யறை செய்துள்ளது. அதே நேரத்தில் மேற்கு வங்கத்தில் ஏற்பட்டுள்ள தோல்வியானது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், இடது சாரிகளையும் அரசியல் ரீதியாக துடைத் தெறிந்துவிட்டது என்ற திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரத்தை மத்தியக்குழு நிராகரித்துள்ளது. மேற்குவங்கத்தில் ஏற்பட்டுள்ள தோல்வி யை முதலாளித்துவ ஊடகங்களும் முதலா ளித்துவ பொருளாதார உபாசகர்களும் கொண் டாடுவதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் தம்மை ஒரு இடதுசாரி விமர்சகர் என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் அ. மார்க்சும் இத்தகைய பிரச்சாரத்தில் இறங்கி யுள்ளதுதான் வியப்பளிக்கிறது. ஜூனியர் விகடன் ஏட்டில் “மேற்குவங்கம்.. மார்க்சிஸ்ட் கட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும்” என்ற தலைப்பில் இரு கட்டுரைகளை எழுதியுள்ளார். அவர் தனது கட்டுரையை முடிக்கும் போது, இடது முன்னணி அரசின் வீழ்ச்சி வர வேற்கப்படவேண்டியது என்றாலும், நிச்சய மாக அது மகிழ்ச்சிக்குரிய ஒன்றல்ல, என்று குறிப்பிட்டிருக்கிறார். இடது முன்னணி அரசு மீண்டும் வெற்றி பெறாதது இவருக்கு வர வேற்கப்பட வேண்டிய ஒன்றாக தெரிகிறது. இதிலிருந்தே இவரது முகவிலாசத்தை புரிந்து கொள்ளமுடியும். சட்டமன்றத் தேர்தலில் இடதுமுன்னணி அடியோடு வீழ்ந்துவிடவில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலைவிட கூடுதல் வாக்குகளை பெற்றிருக்கிறது. இந்தத் தேர்த லில் 1 கோடியே 95 லட்சம் வாக்குகளை இடதுமுன்னணி பெற்றுள்ளது. இது பதிவான வாக்குகளில் 41 சதவீதமாகும். மார்க்சிஸ்ட்டுகள் பெருமையடித்துக் கொள்ளும் நிலச்சீர்திருத்தம், குத்தகைதாரர் களின் உரிமையை நிலைநாட்டும் ஆபரே ஷன் பர்கா, விவசாய கூலிகளுக்கு குறைந்த பட்ச கூலி நிர்ணயம் முதலிய கனவுகள் நனவாகின என்று அ.மார்க்ஸ் போகிற போக்கில் கூறியுள்ளார். இந்திய அளவிலும், முதலாளித்துவக் கட்சிகள் தொடர்ந்து ஆட்சி செய்யும் பிற மாநிலங்களிலும் நிலச்சீர்திருத்தம் எந்தள விற்கு புறக்கணிக்கப்பட்டது என்பதோடு ஒப்பிடும்போதுதான் மேற்குவங்கத்தில் இடதுமுன்னணி அரசால் நிகழ்த்தப்பட்ட நிலச்சீர்திருத்தத்தின் மேன்மையை புரிந்து கொள்ள முடியும். இந்தியா முழுவதும் உபரி நிலமாக அறி விக்கப்பட்டது 73லட்சத்து 35ஆயிரம் ஏக்கர். இதில் கையகப்படுத்தப்பட்டது 64லட்சத்து 96ஆயிரம் ஏக்கர். இதில் விவசாயத்திற்கு பிரித்துக்கொடுக்கப்பட்டது 54 லட்சத்து 2 ஆயிரம் ஏக்கர். இதில் மேற்குவங்கத்தில் இடது முன்னணி ஆட்சிக்காலத்தில் 11லட் சத்து 30ஆயிரம் ஏக்கர் நிலம் 30.4லட்சம் ஏழை விவசாயிகளுக்கு பிரித்துக்கொடுக்கப் பட்டுள்ளது. அதாவது இந்தியாவில் பகிர்ந்த ளிக்கப்பட்ட மொத்த நிலத்தில் 24 சதவீத நிலம் மேற்குவங்கத்தில் மட்டும் பகிர்ந் தளிக்கப்பட்டுள்ளது. இதனால் பலன் பெற்ற வர்களில் 64 சதவீதம் பேர் தலித்துகள், பழங் குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப் பைச் சேர்ந்த விவசாயிகள் ஆவர். இதனால் மேற்குவங்க கிராமப்புற மக்க ளில் 90 சதவீதம் பேருக்கு நிலம் கிடைத்துள் ளது. பண மதிப்பீட்டின்படி பார்த்தால் இந்த நிலச்சீர்திருத்தத்தின் விளைவாக 1,30,000 கோடி ரூபாய் பணக்காரர்களிடமிருந்து ஏழைகளுக்கு கைமாற்றிவிடப்பட்டுள்ளது. இதனால் மேற்குவங்க கிராமங்களின் முகத்தோற்றமே மாறியது. தேசிய அளவில் விவசாய வளர்ச்சி விகிதம் 2.1 சதவீதம் மட்டுமே இருந்த நிலையில், மேற்குவங்க விவசாய வளர்ச்சி விகிதம் 3.1 சதவீதமாக உயர்ந்தது. நாட்டின் மொத்த அரிசி உற்பத்தி யில் மேற்குவங்கத்தின் பங்கு 16 சதவீதமாகும். அரிசி உற்பத்தியிலும் காய்கறி உற்பத்தி யிலும், மேற்குவங்கமே நாட்டில் முதலிடம் வகித்தது. விவசாயிகள் வாழ்வில் மட்டுமின்றி விவசாய உற்பத்தியிலும் மலர்ச்சியை ஏற் படுத்தியது மேற்குவங்க இடதுமுன்னணி அர சின் நிலச்சீர்திருத்தம். இது பெருமையடித் துக்கொள்வதற்காக கூறப்படும் சாதனை அல்ல. நாட்டின் வேறு எந்த மாநிலத்திலும் நடைபெறாத சாதனை. இதே போன்று குத்தகை விவசாயிகளின் நலனும் வேறெந்த மாநிலத்தையும் விட மேற்குவங்கத்தில் முழுமையாக பாதுகாக்கப் பட்டது. அந்த மாநிலத்தில் 1977ம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை யிலான இடதுமுன்னணி அரசு ஆட்சிக்கு வந்தபோது பதிவு செய்யப்பட்டிருந்த குத் தகை விவசாயிகளின் எண்ணிக்கை 5லட் சத்திற்கும் குறைவே ஆகும். இடது முன்னணி ஆட்சியில் 15லட்சத்திலிருந்து 20 லட்சம் வரை குத்தகை விவசாயிகள் பதிவு செய்யப் பட்டதாக சமூக அறிவியல் ஆய்வு மையம் ஒன்று நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந் துள்ளது. ஆனால், இந்த உண்மையை மறைத்து மார்க்சிஸ்ட் கட்சியினருக்கு மட்டுமே நிலம் வழங்கப்பட்டது என்று பொய்ப்பிரச்சாரம் செய் யப்படுகிறது. எதையும் விபரத்தோடு எழுது வதாகக் கூறிக்கொள்ளும் அ.மார்க்சும் வழி மொழிந்திருப்பது அவரது நேர்மையை பறை சாற்றுவதாக இல்லை. மேற்குவங்கத்தில் முஸ்லிம்கள் நிலை குறித்து சச்சார் குழு வெளியிட்ட விபரத்தை மார்க்சிஸ்ட் கட்சி அப்போதே மறுத்துள்ளது. மேற்குவங்கத்தில் மதக்கலவரங்களே நடை பெறவில்லை என்பதை அ.மார்க்ஸ் ஒத்துக் கொண்டுள்ளார். நீதிபதி ரெங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரை அடிப்படையில் முஸ்லிம் களுக்கு இடஒதுக்கீடு வழங்க மத்தியஅரசு மறுத்த நிலையிலும் மேற்குவங்க இடதுமுன் னணி அரசு, முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த 53 பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு கல்வி மற் றும் அரசு வேலைவாய்ப்பில் 10சதவீத இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவு பிறப்பித்தது. சிறுபான்மை மக்கள் அதிகமாக உள்ள மாவட்டங்களில் சிறுபான்மையினரின் பன் முக வளர்ச்சித்திட்டங்களுக்கு 2010ம் ஆண் டில் ரூ.264 கோடி செலவிடப்பட்டது. இந்தியா விலேயே இதுதான் அதிகமான தொகை யாகும். மேற்குவங்க சிறுபான்மை வளர்ச்சி மற்றும் நிதிக்கழகம் முஸ்லிம் மக்களுக்கு நுண்நிதி மற்றும் நீண்டகாலக் கடன்களை வழங்கியுள்ளது. இதனால் பலன்பெற்றவர்கள் 1கோடியே 8லட்சம் பேர் ஆவர். 1977ம் ஆண்டில் 238 மதரசா பள்ளிகளே இருந்த நிலையில், 2010ம் ஆண்டில் 605 பள்ளிகளாக உயர்ந்தன. மதரசா பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை 4ஆயி ரத்திலிருந்து 4.7லட்சமாக உயர்ந்தது. அனைத்து துவக்கப்பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களில் 30சதவீதம் பேர் முஸ்லிம் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள். உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இந்த எண்ணிக்கை 21 சதவீதமாக உயர்ந்தது. எதிர்க்கட்சியினரை போட்டியிடவிடாமல் தடுப்பது, எதிரணிக்கு வாக்களிக்கக் கூடிய வர்களை வாக்குச்சாவடிக்கே வரவிடாமல் செய்வது என்ற நிலை இடதுமுன்னணி ஆட் சிக்காலத்தில் ஏற்பட்டதாகவும் அ.மார்க்ஸ் கூறியுள்ளார். இதுவும் முதலாளித்துவ ஊட கங்களால் அடிக்கடி சுமத்தப்படும் அழுக் கான அவதூறுதான். இது உண்மை என்றால் நாடாளுமன்றத் தேர்தலிலும் அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் எதிர்க்கட்சி யினர் எப்படி வெற்றிபெற முடிந்தது. மக்க ளின் தொடர்ச்சியான ஆதரவுடன் தான் 34 ஆண்டுகாலம் இடதுமுன்னணி உலக வர லாற்றில் ஒரு சாதனையாக மேற்குவங்கத் தில் ஆட்சிபுரிய முடிந்தது. இந்த சாதனை யை மலிவான குற்றச்சாட்டுகளால் மறைத்து விடமுடியாது. ஜனநாயகம் முழுமையாக செயல்படுத் தப்படவேண்டும் என்பதில் இடதுமுன் னணி அரசு மிகுந்த கவனத்துடன் செயல்பட் டது. மாநில அரசின் பட்ஜெட் தொகையில் 50 சதவீதம் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பயன்படுத்தப்பட்டன. பஞ்சாயத்து ராஜ் சட் டம் அமல்படுத்தப்படுவதற்கு முன்பே உள் ளாட்சி தேர்தல்கள் முறையாக காலக்கிரமத் தில் நடத்தப்பட்டன. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மேற்குவங்கத்தில் 600க்கும் மேற்பட்ட தோழர்கள் திரிணாமுல்-மாவோயிஸ்ட் குண் டர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களது பெயர், ஊர் பட்டியல் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் முடிவுக்குப் பிறகு கட்சியைச் சேர்ந்த 14 தோழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கட்சி மற்றும் வெகுஜன அலுவலகங்கள் கைப்பற்றப்படுகின்றன. அ.மார்க்ஸ் வரவேற் றுள்ள ஆட்சி மாற்றத்தின் லட்சணம் இது தான். இடதுமுன்னணி ஆட்சியில் மேற்கு வங்க மாநிலம் ஏகாதிபத்திய எதிர்ப்பின் கூர் முனையாக விளங்கியது. இடதுமுன்னணி ஆட்சியை அகற்றவேண்டும் என்பதில் ஏகா திபத்தியம் தொடர்ந்து முனைப்பாக இருந்து வந்தது. 34 ஆண்டுகளுக்கும் மேலாக இடது சாரிகளின் தலைமையில் ஒரு அரசு நீடிப் பதை முதலாளிவர்க்கத்தாலும் சகித்துக் கொள்ள முடியவில்லை. இந்தப் பின்னணி யில் தான் ஆட்சிமாற்றம் நிகழ்ந்துள்ளது. அனுபவங்களை அடி உரமாக்கி, படிப்பி னைகளை படிக்கட்டுகளாக்கி மேற்கு வங்கத்தில் இடதுசாரி இயக்கம் எழும். 34 ஆண்டுகால ஆட்சியின்போது மக்களுக்கு கிடைத்த பலன்களை பாதுகாக்கும் போராட் டங்களை வலுவுடன் முன்னெடுத்துச் செல் லும். அவதூறுகளை முறியடித்து முன்னே றும். வங்கத்தில் வரலாறு திரும்பும். |
சுதந்திரம் பறிக்கும் சுதந்திர தேவி
இன்று மின்னஞ்சலில் வந்த படம். ஒரே புகைப்படத்தில் 18000 உள்ளனர்.
இது உலக சாதனை. அமெரிக்காவில் நிகழ்ந்த சாதனை. கையில் இத்தனைபேர், காலில் இத்தனை பேர், தீபத்தில் இத்தனை பேர் என்றெல்லாம் அடுக்கியிருந்தார்கள். கடைசியாக சொல்லப்பட்ட விஷயம்தான் கொஞ்சம் யோசிக்க வைத்தது.
ஒரு போருக்கான பயிற்சியின்போது அமெரிக்க வீரர்களைக் கொண்டு
சுதந்திர தேவியின் வடிவில் எடுக்கப்பட்டது அந்த புகைப்படம் என்று
அந்த செய்தி முடிந்திருந்தது.
அமெரிக்காவின் சுதந்திரத்திற்கான அடையாளத்தில் எடுக்கப்பட்ட அந்த
படம் வேறு ஒரு நாட்டின் சுதந்திரத்தை பறிக்கும் தயாரிப்பில் எடுக்கப்பட்டது என்பதை யோசிக்கிறபோது அமெரிக்க ஏகாதிபத்தியம்
எவ்வளவு வக்கிரமானது என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
உங்களுக்கு?
Wednesday, June 15, 2011
இரண்டு லட்ச ரூபாயோடு இறந்து போனவன் சொன்ன செய்தி என்ன?
இன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வெளி வந்த செய்தி இது. ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர் நகரில் ஒரு பிச்சைக்காரன் இறந்து
போயிருக்கிறான். அழுக்கான உடைகளுடன் நைந்து போன பை
ஒன்றோடு துர் நாற்றத்தோடு காணப்பட்ட அந்த மனிதன் பற்றி
யாருக்கும் தெரியவில்லை, சக பிச்சைக்காரர்களுக்குக் கூட.
போலீஸ் அவன் யார் என்று அறிந்து கொள்ள பாண்ட் பாக்கெட்டை
சோதனை போட்ட போது அதிலே 1500 ரூபாய் இருந்ததாம். பிறகு
அந்த நைந்து போன பையைப் பார்த்தால் அதிலே ஆயிரம் ரூபாய்,
ஐநூறு ரூபாய் நோட்டுக்களாக இரண்டு லட்சம் ரூபாய் இருந்ததாம்.
அச்செய்தி அறிந்த பின் இவர் எனது உறவினர் என்று பலரும்
மொய்த்தாலும் யாருக்கும் பெயரைக் கூட சொல்ல
முடியவில்லையாம்.இப்போது காவல்துறையிடம் உள்ள
அந்தப் பணம் பின்பு அரசு கஜானாவிற்கு சென்று விடுமாம்.
இச்சம்பவம் பல சிந்தனைகளை எழுப்பியது.
இரண்டு லட்சம் ரூபாய் பணம் இருந்தும் தனது நோய்க்குக் கூட
சிகிச்சை பார்க்கவில்லை. பிறகு எதற்கு அந்த பணம்?
பிச்சைக்காரர்களிடம் லட்சக்கணக்கில் பணம் உள்ளதாக
வரும் நகைச்சுவை எல்லாம் உணமைதான் போலும்?
இரண்டு லட்ச ரூபாய் பணம் இருந்தும் அது அவனுக்கு
பயன்படவில்லை. கோடிக்கணக்கில் பணம் சுருட்டி
வெளிநாட்டில் பதுக்கி வைக்கும் பணத்தை நம்
அரசியல்வாதிகளால் அனுபவிக்கவே முடியாத போது
எதற்காக விழுந்து விழுந்து ஊழல் செய்கின்றார்கள்?
பிச்சைக்காரனின் பணம் அரசு கஜானாவிற்கு செல்கிறது.
அரசு கஜானா பணம் அரசியல்வாதிகளுக்கு வருகிறது.
இவர்களில் உயர்ந்தவர் யார்?
Tuesday, June 14, 2011
திகாரை நிரப்பப் போகும் அடுத்த பூதம்
ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில் முறைகேடுகள் நடந்துள்ளது என்ற
குற்றச்சாட்டுக்கள் பல காலமாக இருந்த போதும், தோழர் சீத்தாராம் யெச்சூரி பல ஆதாரங்களை அடுக்கிய போதும் பிரச்சினை சூடு
பிடித்தது தலைமை தணிக்கை அதிகாரி அளித்த அறிக்கைக்கு பின்புதான்.
கிருஷ்ணா கோதாவரி எரிவாயு படுகையை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அளித்ததில் முறைகேடுகள் உள்ளது என்பது அண்ணன் தம்பி அம்பானிகள் அடித்துக் கொண்ட போது வெளி வந்தது. அந்த
ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அப்போதே மார்க்சிஸ்ட்
கட்சி வலியுறுத்தியது.
இதிலேயும் எண்ணற்ற முறைகேடுகள் நடந்துள்ளது, அது எவ்வளவு என
மதிப்பிட முடியாத இழப்பு, ரிலையன்ஸ் மற்றும் அரசு அதிகாரிகள்
மத்தியில் கூடா நட்பு உள்ளது என்றும் அந்த அறிக்கை கூறுகின்றது,
ஊழல் எதிர்ப்பு சூராதி சூரர்கள் இது பற்றி எதுவும் பேச மாட்டார்கள். ஏனென்றால் இது அவர்களின் ஸ்பான்சரான கார்ப்பரேட்டுகளின்
ஊழல்.
ஆனாலும் இது அடுத்த பூதம்தான். எத்தனை தலைகளுக்கு திகார்
காத்திருக்கிறதோ?
Monday, June 13, 2011
கூடிய நட்பு - நண்பேன்டா . . .
ஜம்பமும் பலிக்கல,
ஜாமீனும் கிடைக்கல,
கூடுமா கூடாதா
ஏதுவும் தெரியல,
விட்டாலும் வினை
தொட்டாலும் தொல்லை,
என்ன செய்ய அது வரை
நீ என் நண்பேன்டா . . .
கவிதை - மதுரை பாரதி
இது எனது 200 வது பதிவு
இவர்கள் மட்டுமா உங்களை மிரட்டுகின்றனர்? நாங்கள் கேணையர்களா?
மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று வீரமாக முழங்கியுள்ளார்.
அண்ணா ஹசாரேவும் பாபா ராம்தேவும் மத்தியரசுக்கு கட்டளையிடுகின்றார்கள், இதனை எப்படி ஏற்பது என்று கேட்டுள்ளார்.
மிஸ்டர் பிரணாப் முகர்ஜி இவர்கள் மட்டுமா உங்களை மிரட்டுகின்றார்கள்!
இவர்கள் மட்டுமா உங்களுக்கு கட்டளையிடுகின்றார்கள்?
அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்று என்று அமெரிக்கா உங்களுக்கு
கட்டளையிடவில்லை?
வங்கி, பென்ஷன், இன்சூரன்ஸ் துறைகளை மேலும் திறந்து விடு என
பன்னாட்டு நிதி நிறுவனங்கள் உங்களுக்கு கட்டளையிடவில்லை?
பெட்ரோலியப் பொருட்கள் விலை நிர்ணயத்தில் தலையிடாதே என
எஸ்ஸார், ரிலையன்ஸ் நிறுவனங்கள் உங்களுக்கு கட்டளையிடவில்லை?
சில்லறை வணிகத்தில் என்னை அனுமதி என வால்மார்ட் போன்ற
பன்னாட்டு பகாசுர கம்பெனிகள் கட்டளையிடவில்லையா?
நான் சொல்வதை கேட்டால் கூட்டணி, இல்லையென்றால் நடையை கட்டு என மம்தா கட்டளையிடவில்லையா?
இத்தனைக்குப் பிறகும் நான் வீரன், சூரன் என்றால் நம்ப நாங்கள்
கேணையர்களா?
இதையெல்லாம் மறைக்கிறீர்களா? அல்லது உங்களுக்கு மறதி எனும்
வியாதியா? மருத்துவரிடம் செல்லுங்கள் பிரணாப் !
Sunday, June 12, 2011
மத வெறியர்கள் படிக்கக் கூடாத ஒரு இரங்கற்பா!
மறைந்த ஓவியக் கலைஞர் எம்.ஃஎப்.ஹுசைனுக்கு இந்து ராமின் அஞ்சலி. மத வெறியர்களுக்கு சவுக்கடியும் கூட. நன்றி - தீக்கதிர் நாளிதழ் | |||||||
கடந்த செவ்வாய்க்கிழமை மதிய நேரத்தில் லண்டனில் உள்ள மருத்துவமனைப் படுக்கையில் படுத்தவா றே, இந்தியாவின் தலைசிறந்த மிகவும் கொண் டாடப்பட்ட கலைஞரான எம். எப்.உசேன் தொலைபேசியில் அழைத்தார். துபாயில் இருந்தபோது “உணரமுடியாத மாரடைப்பு தாக்கியது” என்று மிகவும் மெலிதான குரலில் அவர் குறிப்பிட்டார். அது நடந்தபோது அதைக் கண்டுபிடிக்கவில்லை. நல்ல மருத்துவர்களையும், மருத்துவ வசதிகளையும் கொண்ட லண்டன் ராயல் பிராம்ப்டன் மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக சென்றபோது இது தெரிய வந்தது என்றார். எப்படி இருக்கிறீர் கள் என்று கேட்டபோது, வேறு எந்த சிக்கல்களும் இல்லை என்றார். கவனித்துக் கொள்ள வேறு யாராவது இருக்கிறார்களா என்றபோது, குடும்ப உறுப்பினர்கள் வந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். அது இறுதி விடை கேட்டு பேசிய குரல் என்று எனது உள்ளுணர்வு கூறியது. ஆயிரக்கணக்கான பிறைகளைப் பார்த்தவர், இஸ்லாமிய நாட்காட்டிப்படி நூறாண்டுகளைக் கடந்தவர், கிரிகோரியன் நாட்காட்டிப்படியும் நூறு ஆண்டுகளைக் கடப்பதற்கு தகுதி உள்ளவர் என்று எனக்குத் தெரியும். ஒரு பலவீனமான மற்றும் எந்தவித உதவியும் இல்லாத நிலையில், சொந்த மண்ணிலிருந்து வெகு தூரத்தில் மருத்துவமனைப் படுக்கையில் படுத்திருக்கி றோம் என்ற உணர்வோடு அவர் என்னை தொலைபேசியில் அழைத் திருக்கிறார் என்று தோன்றியது. அவரது நிறைவுக்காலத்தில் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் கொண்ட குடும்பம் எப்படியோ சரியான நேரத்தில் வந்து சேர்ந்தது. மதரீதியான வெறுப்புப் பிரச்சாரம், மிரட்டல்கள், காலித்தனங்கள் மற்றும் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலைகளால் நாட்டைவிட்டே அவர் வெளியேற நிர்ப்பந்தம் ஏற்பட்ட 1996 ஆம் ஆண்டுக்கு எனது எண்ணங்கள் சென்றன. தான் மிகவும் நேசித்த இந்தியா தன்னைக் கைவிட்டு விட்டது என்று ஆழ்ந்தவருத்தத்துடன் அவர் இருந்தார். லண்டனிலிருந்தும், நியூயார்க்கிலிருந்தும் அவர் தொலைபேசியில் தொடர்ந்து பேசினார். “அந்நிய மண்ணில் இறந்துவிடாமல்”, இந்தியாவுக்குத் திரும்பி வந்துவிட வேண்டும் என்று அவர் கேட்டவண்ணம் இருந்தார். மகாராஷ்டிர மாநில அரசோடு பல மாதங்கள் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், ஒரு நடுஇரவில் மாறு வேடத் தில் நாட்டிற்குத் திரும்ப அவர் அனு மதிக்கப்பட்டார். ஆனால் அவர் ஆல் பைன் தொப்பி மற்றும் இத்தாலிய காலணியை அணிந்திருந்தாலும் மும் பை விமான நிலையத்திலும் சரி, ஹீத் ரோ விமான நிலையத்திலும் தனது மாறுவேடம் பலனளிக்கவில்லை என் பதை அவர் உணர்ந்து கொண்டார். மும்பை தாஜ் ஓட்டலுக்கு அவரை உடனடியாக நாங்கள் அழைத்துச் சென்றோம். இந்தப் பாதுகாப்பற்ற காலகட்டத்தில் இந்தூர் மற்றும் பல இடங்களில் நடந்த நீதிமன்ற விசாரணைகளுக்கு அவரோடு நாங்களும் சென்றோம். மதவெறிக் கும்பல்களிடமிருந்து அவருக்கு நேர்ந்த கொடுமை மற்றும் பயங்கரத்தையும் நேரில் பார்த்தோம். வளர்ந்து வரும் இந்தியாவில், தனது எண்பதுகளில் இருந்த ஒரு மேதை சந்திக்க நேர்ந்த நிலையற்ற தன்மை மற்றும் அச்சம் படர்ந்த சூழல் ஆகியவற்றையும் பார்க்க நேர்ந்தது. ஆனால், ஒரு நகரம் தனக்குப் பாதுகாப்பாக இருப்பதாக அவர் நினைத்தால் அது சென்னைதான். தனது மகன் முஸ்தபாவோடும், எங்களோடும் அவர் தங்கியிருந்திருக்கிறார். குறைவான பொருட்களோடுதான் அவர் எப்போதுமே பயணம் செய்தார். அதனால் சில ஜோடி துணிகளையும், ஓவியம் வரைவதற்குத் தேவையான பொருட்களையும் எங்கள் வீடுகளில் வைத்திருந்தார். அவர் அமைதியாக நேரத்தைக் கழித்தார். ஓவியம் வரைந்தார். தனது திரைப்படத்திற்கான இசைக்காக பல இரவுகளை ஏ.ஆர்.ரகுமானுடன் கழித்தார். தனது கடைசிப்படத்தின் படச்சுருள்களோடு எப்போதும் வருவார். எங்கள் நண்பர்களுக்கு அதைத் திரையிட்டுக் காட்டினார். சில சமயங்களில் எழுத்தாளர் ஆர்.கே.நாராயணனை அவர் சந்தித்தார். அதிகாலை நேரங்களில் நீலம் மற்றும் பொன்னிறக் கிளியைப் பார்ப்பதும், அதை வரைவதுமாக தனது நேரத்தைக் கழித்தார். எனினும் அச்சுறுத்தல் மற்றும் சட்டரீதியான மிரட்டல்களோடு தான் இந்தப் பத்தாண்டுகள் கழிந்தன. இறுதியாக 2006 ஆம் ஆண்டில் இந்தியாவை விட்டு வெளியேறி தனது வாழ்விடத்தை வேறு இடத்தில் அமைத்துக் கொண்டார். 2006 ஆம் ஆண்டு முதல், அவருக்கு எதிராக இந்துத்துவாவாதிகளின் வெறுப்புப் பிரச்சாரம் அதிகரித்ததால் துபாயிலும், கத்தாரிலும் அவர் வசித்து வந்தார். கோடைக்காலங்களில் லண்டனில் தனது நேரத்தைக் கழித்தார். தொந்தரவு மற்றும் மிரட்டல்கள் இருந்த இந்தியாவைத்தவிர அனைத்து இடங்களுக்கும் சுதந்திரமாக அவர் பயணம் செய்து வந்தார். இங்குள்ள நிர்வாகம் அவர் திரும்புவதை உறுதி செய்யும் அளவுக்கு உறுதியானதாகவும் இல்லை. சரியான வகையில் உச்ச நீதிமன்றம் தலையிட்டாலும், அது மிகவும் தாமதமானதாகவே இருந்தது. உசேனின் படைப்பாற்றல் சுதந்திரத்தையும், அமைதியான மன நிலையையும் பாதுகாப்பதில் முந்தைய பாஜக அரசை விட எந்தவிதத்திலும் உயர்ந்ததாக காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி இருக்கவில்லை. எனக்கு நினைவிருக்கிறது. பிப்ரவரி 2010ல் நியூயார்க்கிலிருந்து தொலைபேசி மூலம் அழைத்து கத்தார் குடியுரிமையை ஒப்புக்கொண்டு விட்டதாகத் தெரிவித்தார். கத்தார் குடியுரிமையால் அங்கீகரிக்கப்பட்டாலும், வெளிநாட்டில் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது மற்றும் சொந்த நாட்டின் குடியுரிமையை விட வேண்டிய நிலை ஏற்பட்டது பற்றி ஆழ்ந்த வருத்தத்தில் அவர் இருந்தார். எழுபது ஆண்டுகளாக நேசத்துடனும் மதச்சார்பற்ற வகையிலும் தனது கலையைக் கொண்டாடி வந்த பிறந்த மண்ணிலிருந்து விலகி நிற்பது அவருக்கு வருத்தத்தைத் தந்தது. கத்தார் குடியுரிமைக்காக தான் விண்ணப்பிக்கவில்லை என்றும் அந்த அமீரகத்தின் அரசு குடும்பத்தின் வற்புறுத்தலால்தான் அது கிடைத்தது என்பதையும் அவர் குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார். அவர் மறைந்த வியாழக்கிழமை அதிகாலை நேரம் வரையில் அன்றா டம் நாள் முழுவதும் வேலை செய்துள்ளார். ஆளுயர கண்ணாடி சிற்பங்களையும் பெரிய, பெரிய ஓவியங்களையும் உருவாக்கி வந்தார். அவரது கலைப்பணி இரண்டு முக்கிய மான அம்சங்களை உள்ளடக்கிய தாக இருந்தது. ஒன்று, இந்திய நாகரிக வரலாறு. மற்றொன்று அரபு நாகரி கமாகும். இரண்டாவது அம்சம், கத் தாரின் அரசர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியின் மனைவி ஷேக் மோஸா பிந்த் நாசர் அல் மிஸ் நெத்தின் முயற்சியால் உருவானது. இந்தத்திட்டத்தில் உருவாகும் படைப் புகள் அனைத்தும் தோஹாவில்தனி யாக ஒரு அருங்காட்சியகத்தில் வைக்கப்படுவதாக இருந்தது. வருத்தத்தோடு இருந்தாலும், இந்தியாவில் உள்ள எந்தவொரு நபர் மீதும் உசேன் கோபம் அடையவில்லை. லண்டன் மருத்துவமனையில் அமைதியாகவும் கவுரவத்துடனும் நிகழ்ந்துள்ள அவரது மறைவு, சுதந்திர இந்தியாவின் மதச்சார்பின்மை வரலாற்றில் மிகவும் வருந்தத்தக்க அத்தியாயத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. எம்.எப்.உசேனை விட இந்தியாவின் பன்முகத்தன்மை, பன்முக மதஉணர்வுகள் மற்றும் மதச்சார்பின்மை ஆகியவற்றிற்கு உண்மையாகவும், உணர்வுபூர்வமாகவும் மதிப்பளிப்பவர் யாரையும் எனக்குத் தெரியாது. நவீனத்துவம், வளர்ச்சி மற்றும் சகிப்புத்தன்மை ஆகிய குறிக்கோள்கள் அவரது மூச்சோடு மூச்சாகக் கலந்திருந்தது. நாட்டின் நிர்வாகம் மற்றும் சட்டத்துறை பாதுகாப்பாக திரும்பி வருவதை உறுதிப்படுத்த முடியாதது உள்ளிட்டு அவர் நாட் டை விட்டு வெளியேற நேர்ந்த ஒட்டு மொத்த நிகழ்வுகள், சுதந்திரமான எண்ணங்கள் மற்றும் படைப்பாற் றல், மதச்சார்பற்ற நாடு ஆகியவை யெல்லாம் என்ன? என்ற கேள்விக ளைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. தனது அளப்பரிய அறிவு மற்றும் படைப்பாற்றலைப் பயன்படுத்தி நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் அற்புதங்களையும், அது பிரதிநிதித்துவப்படுத்தும் வரலாற்று நாகரிகத்தையும் படம் போட்டுக் கொண்டாடிய அதே நேரத்தில், சாதாரண நிலையிலிருந்து வந்த, நாட்டின் மகத்தான மகனுக்கு நாட்டு மக்கள் தங்கள் மரியாதையைச் செலுத்தட்டும். | |||||||
Saturday, June 11, 2011
தமிழகத்தில் தரிசு நிலம்? ஜெயலலிதாவிற்கு பதில்
தமிழகத்தில் தரிசு நிலமே கிடையாது என்று ஜெயலலிதா சொன்னாதற்கு மார்க்சிஸ்டுகள் ஏன் மௌனமாக உள்ளனர் என்று
ஒரு மூன்று நாட்களாக சில தோழர்கள் பிய்த்து பிடுங்கிக் கொண்டு
இருந்தார்கள். கூட்டணி வைத்ததால் தயக்கமா என்ற கேள்வியும்
இணைந்தே வந்தது.
பதவிகளுக்காக கொள்கைகளில் சமரசம் செய்து கொள்பவர்கள் அல்ல
மார்க்சிஸ்டுகள் என்பதை இன்று தீக்கதிரில் வந்துள்ள தோழர் பெ.சண்முகம் அவர்களின் கட்டுரை தெளிவாக்கும். நிலத்திற்கான
போராட்டத்தை முன்னேடுத்துச் செல்வதற்கான அடையாளமாகவும்
இக்கட்டுரையை பார்க்க முடியும்.
வசதிபடைத்தவர்களால் வளைக்கப்பட்டுள்ளது | |
-பெ. சண்முகம் | |
“தமிழகத்தில் தரிசு நிலமே இல்லை. எல்லா தரிசு நிலமும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்திலும் எனது ஆட்சிக் காலத்திலும் பிரித்து வழங்கப்பட்டு விட்டன. முந்தைய அரசு 2006ல் இந்தத் திட்டத்தை அறிவித்த போதே தரிசு நிலங்கள் இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளேன்” என்று ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது குறுக்கிட்டு பேசிய முதல்வர் ஜெய லலிதா கூறியுள்ளார். தமிழகத்தில் தரிசு நிலமே இல்லை என்று கூறுவது சரியல்ல என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். 2004-05ம் ஆண்டு முதலமைச்சராக ஜெயலலிதா இருந்த போதே அரசு வெளி யிட்டுள்ள விபரப்படி தரிசு நிலத்தின் பரப் பளவு 23.96 லட்சம் ஹெக்டேர் (ஏறத்தாழ அறுபது லட்சம் ஏக்கர்). இதுவல்லாமல் சாகு படிக்கு ஏற்ற தரிசு நிலம் ஏறத்தாழ 10 லட்சம் ஏக்கர். இந்த நிலத்தில் சிறுபகுதியை சிறு, குறு விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் ‘ஒருங்கிணைந்த தரிசு நில மேம்பாட்டுத் திட்டம்’ என்ற பெயரில் தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இது குறித்து 2002-03ம் ஆண்டு நிதிநிலை அறிக் கையில் “தரிசு நிலங்களை விளைநிலங் களாக மாற்றுவதில் தனியார்துறை பங்கேற் பை ஊக்குவிக்கும் பொருட்டு, பெரும்பாலான தரிசு நிலங்களையும், தரம் குறைந்த நிலங் களையும் நீண்டகால அடிப்படையில் குத் தகைக்கு விட அரசு தயாராக உள்ளது” என கூறப்பட்டது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டு பணிகள் துவக்கப்பட்டன. கடும் எதிர்ப்பின் காரணமாக பிறகு அரசு பின்வாங்கியது. தமிழகத்தில் எந்தவொரு ஆட்சிக் காலத் திலும் உச்சவரம்புச் சட்டத்தை பயன்படுத்தி மிச்ச நிலம் பெருமளவு விநியோகம் செய்யப் படவில்லை. 1961ம் ஆண்டு துவங்கி 31.3.2009 வரையிலான 50 ஆண்டு காலத்தில் உபரியாக அறிவிக்கப்பட்ட நிலம் 2,08,383 ஏக்கர். இதில் பயனாளிகளுக்கு ஒப்படை செய்யப்பட்ட நிலம் 1,90,073 ஏக்கர். 1,50,491 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 2001-2006ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட உபரி நிலம் 8,371 ஏக்கர் மட்டுமே. இது 6,439 பேருக்கு வழங்கப்பட் டுள்ளது. எனவே தமிழ்நாட்டை பொறுத்தவரை உச்சவரம்புச் சட்டத்தின் கீழும் நிலம் முழு மையாக கைப்பற்றப்பட்டு வழங்கப்பட வில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக, நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு தலா 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்று வாக் குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு 50 லட்சம் ஏக்கர் அளவுக்கு தரிசு நிலம் இல்லை என்று சாதித்தனர். திமுக ஆட்சி யில் தரிசு நிலவிநியோகம் என்பது பெயரள வுக்கு ஏமாற்று நாடகமாகவே நடந்து முடிந்து விட்டது. பெரும்பகுதியான மக்கள் வேளாண் மையை சார்ந்துள்ள ஒரு மாநிலத்தில், கிராமப் புறங்களில் பெரும்பகுதியானவர்கள் நிலமற்ற வர்களாக உள்ள நிலையில், தரிசு நிலமே இல்லை என்று இப்போதும் கூறுவது, நில மற்ற ஏழை, எளிய மக்களின் நலனை பாது காக்க உதவாது என்பதை ஆழ்ந்த வருத்தத் துடன் குறிப்பிட வேண்டியுள்ளது. நிலம் காணாமல் போய்விடக் கூடிய பொருளல்ல. தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப் பான 130.3 லட்சம் ஹெக்டேருக்கான விபரங் களும் ஆவணங்களாக அரசு அலுவலகங் களில் தூசி படிந்து கிடக்கிறது. எனவே, தரிசு நிலங்கள் எங்கே மறைந்து கிடக்கிறது என் பதை கண்டறிவது அரசு நினைத்தால் ஒரு சில வாரத்தில் நடைமுறை சாத்தியமாகக் கூடியக் காரியமே! தரிசு நிலங்களை கண் டறிந்து நிலமற்ற ஏழைகளை நிலஉடமை யாளராக ஆக்க வேண்டுமென்ற உறுதி தான் இப்போது தேவை. தரிசு நிலங்கள் வசதிபடைத்த மனிதர் களால், அரசியல் செல்வாக்குள்ளவர்களால் வளைத்துப் போடப்பட்டிருக்கிறது. இத்த கையவர்கள் சட்டத்தை வளைத்து மோசடி யாக பட்டா பெற்று அனுபவித்து வருகிறார்கள். உதாரணத்திற்கு காவேரிராஜபுரத்தில் அர சுக்கு சொந்தமான தரிசு நிலம் 193.93 ஏக்கர், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி. தினகரனால் ஆக்கிரமிக்கப்பட்டு வேலி போடப்பட்டிருக்கிறது என்று மாவட்ட ஆட்சித் தலைவரே அரசுக்கு அறிக்கை அளித்துள்ளார். இது போல, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, இராமநாதபுரம், விழுப்புரம், விருதுநகர் என ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு நிலம் செல்வாக்கு படைத்த நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசு தரிசு நிலங்களை மீட்க தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும். இதற்கென்று ஒரு சிறப்புக் குழுவை நியமித்து ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் தரிசு நிலங்களை கண்டறிய அரசு முன்வரவேண் டும். கிராம வாரியாக தரிசு நிலம் குறித்த சர்வே எண், அது யாருடைய ஆக்கிரமிப்பில் இருக்கிறதென்ற விபரத்தை அறிய மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மூலம் அரசு முயற்சிக்க வேண்டும். நிலம் என்பது விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் வாழ்வா தாரம். அவர்கள் நிம்மதியாக வாழ அதுவே ஆதாரம். முந்தைய அரசு அறிவித்த திட்டங் களை அரைகுறையாகவும், மோசடியாகவும் நிறைவேற்றியதால்தான் தி.மு.கவுக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். எனவே அதிமுகவுக்கு மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் வாக்களித்து ஆட்சியில் அமர வைத்துள்ள னர். ஏழைகளின் எதிர்பார்ப்புகளை நிறை வேற்றும் வகையில் புதிய அரசின் செயல் பாடு அமைய வேண்டும் என்பதே நமது வேண்டுகோள். கட்டுரையாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் |
சுடிதார் அணிந்து வந்த தேவனே ! ஊழல் சுத்தமாகுமா உண்ணா விரதத்தால்!! அட ராமா, தேவா
உடல் சுத்தமாகும்
குடல் சுத்தமாகும்
ஊழல் சுத்தமாகுமா
உண்ணா விரதத்தால்!!
அட ராமா, தேவா
ஆயிரம் விளக்குகள்,
மின் விசிறிகள், ஏசி மிஷின்கள்,
மெத்தைகள், திண்டுகள்,
கறுப்புப் பணத்தை
இழுத்து வர
வெள்ளைக்கு ஆன செலவு
பல கோடிகள் . . .
சூடு பிடித்தது
உண்ணாவிரதம்,
உணவை தொடாதவர்
சுரிதாரை கையிடுக்கில் வைத்தார் எதற்கும் தேவைப்படும்
காவல்துறைக்கு
கடுக்காய் கொடுக்க . . .
கவிதை : மதுரை பாரதி
Friday, June 10, 2011
வெட்கத்தில் தலை குனிவோம்
இந்தியாவின் மிகச்சிறந்த ஓவியக் கலைஞன் என்று உலக நாடுகளால்
போற்றப்பட்ட எம்.எப். ஹுசைன் மறைந்து விட்டார். இந்தியாவின்
பிக்காசோ என்று அழைக்கப்பட்ட அந்த மனிதர் இங்கிலாந்தில் மறைந்தார். இங்கிலாந்திலேயே புதைக்கப்படவுள்ளார்.
பத்மஸ்ரீ தொடங்கி பதமவிபூஷன் வரை உயரிய விருதுகளை அளித்து
அலங்கரித்த அரசு, ஐந்தாண்டுகள் மாநிலங்களவையில் கூட
அமரவைத்தது. ஆனால் இறந்த பின்பு ஆறடி நிலம் கூட அவருக்கு
இந்தியாவில் கிடைக்கவில்லை.
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக இருக்கக்கூடாது என்று சங்
பரிவார அமைப்புக்கள் விரும்புகிறார்கள், அவர்கள் மத நல்லிணக்கத்தை சீர் குலைக்க முயற்சிக்கிறார்கள் என்பதற்கான
ஒரே உதாரணம் அவர்கள் ஹுசைனை இந்தியாவை விட்டே
துரத்தியதுதான்.
இந்து கடவுளை அவர் அவமானப்படுத்தினார் என்று வேகமாக
குற்றம் சுமத்துபவர்கள் அமிதாப் பச்சன் கூறியுள்ள இரங்கல் செய்தியை
பாருங்கள்.
" நான் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியபோது ஹுசைன்
தனக்கு அனுமார் படம் வரைந்து அளித்தார், அது தனக்கு மிகவும்
சக்தி அளித்தது '
கலைஞனை மதிக்காத , சொந்த மண்ணில் இறக்க அனுமதிக்காத ,
புதைக்காத தேசத்தில் வாழ்கிறோம் என்பது கொஞ்சம் தர்ம சங்கடமாக
உள்ளது. வருத்தத்தில் மட்டுமல்லாமல் வெட்கத்திலும் தலை குனிவோம்.
Thursday, June 9, 2011
எனக்கு சம்பளம் வேண்டாம் - ஜப்பானில் ஜெயலலிதா
ஃபுகூஷியாமா அணு ஆலை விபத்தின் பிரச்சினைகள் தீரும் வரை பிரதமர் பதவிக்கான சம்பளம் வாங்கப்போவதில்லை என்று ஜப்பான் பிரதமர் நவோடா கான் சொல்லியுள்ளார். என்ன ஒரு பொறுப்பான பிரதமர் என்று ஜப்பான் ஊடகங்கள் மட்டுமல்ல இந்திய மக்கள் கூட சிலர் பாராட்டியுள்ளனர்.
இச்செய்தி தனது முதல் ஆட்சிக்காலத்தில் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக ஜெயலலிதா வாங்கியதையும் அந்த ஆட்சிக்காலம் ஊழல்
மிகுந்ததாய் நினைவு படுத்தியது.
இந்த பிரச்சினையிலும் கூட இப்போது பொறுப்பானவர் என்று சொல்லப் படும் ஜப்பானின் பிரதமர் சுனாமி வந்த போது , அணு உலை விபத்து
என்று வந்த போது எவ்வளவு பொறுப்பாக நடந்து கொண்டார் என்பதுதான் இப்போது கேள்வியே.
கடல் நீரை உடனடியாக பயன்படுத்தியிருந்தால் அணு உலையின் வெப்பம் அதிகரித்து உலைகள் வெடித்திருக்காது. ஆனால் அப்படி
செய்ய அணு ஆலையின் தனியார் நிர்வாகம் முன் வரவில்லை.
டோக்யோ எலக்ட்ரிக் பவர் கம்பெனி என்ற அந்த தனியார் நிறுவனம்
தனது ஆலைக்கு பாதிப்பு வரக்கூடாது என்றுதான் பார்த்ததே தவிர
கதிர் வீச்சு நிகழ்ந்தால் அது நிகழ்ந்தால் யாருக்கோதான் பாதிப்பு
என்று இருந்தது.
டெப்கோ என்று அழைக்கப்படும் நிறுவனத்தை எதுவும் செய்ய முடியாமல், உத்தரவு போட முடியாமல் கையாலாகாத நிலையில்
இருந்த ஜப்பான் பிரதமர் இன்று பொறுப்போடு இருப்பதாக
சொன்னால் சிரிப்புதான் வருகின்றது.
மொத்தத்தில் எல்லா நாடுகளிலும் தில்லாலங்கடிகள் இருக்கிறார்கள்!
Wednesday, June 8, 2011
நீங்கள் போன் பேசுகின்றீர்களா? ஒன மினிட் ப்ளீஸ்!
கீழே உள்ள படத்தை , விளம்பரத்தை நன்றாக கவனியுங்கள்.
அது சொல்லும் செய்தி என்ன?
நீங்கள் பயன்படுத்தும் தொலைபேசி சேவையால் யாருக்கு பயன்?
ஐடியா பிர்லாவை பணக்காரனாக்கும்,
ரிலையன்ஸ் உபயோகிப்பாளர் அம்பானியை மகிழ்ச்சியாக்குகிறார்,
ஏர்டெல் லில் பேசினால் மிட்டலுக்கு தெம்பு,
டோகோமா வில் பேசுவது டாடாவை வளமாக்கும்.
ஆனால் ஒரு பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர் மட்டுமே தேசத்திற்கு
செல்வத்தை தேடித்தருகின்றார்.
ஆகவே பி.எஸ்.என்.எல் சேவையை பயன்படுத்துங்கள். . .
இந்த விளம்பரத்தை அளித்துள்ளது பி.எஸ்.என்.எல் நிர்வாகம் அல்ல.
பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம்.
இடது சாரி தொழிற்சங்கங்களை எப்போதும் திட்டிக் கொண்டிருப்பவர்களே, இப்போது புரிந்து கொள்ளுங்கள்,
தாங்கள் பணியாற்றும் நிறுவனங்களுக்கு பாதுகாப்பாக,
காவல் அரணாக இருப்பது தொழிற்சங்கங்கள்தான்.
அதுவும் இடதுசாரி தொழிற்சங்கங்கள் மட்டும்தான்.
இந்த விளம்பரம் பொதுத்துறை நிறுவனங்களை சீரழித்த, நாசமாக்கிய,
சிதைத்து வருகின்ற காங்கிரஸ், பாஜக விற்கு சமர்ப்பணம்
Subscribe to:
Posts (Atom)