Thursday, January 31, 2013

ஜெ வைப் பேச வைத்த கலைஞர் ஒரு கில்லாடிதான்



விஸ்வரூபம் பிரச்சினையில் வாய் திறக்காது செயலில்
மட்டும் டார்ச்சர் செய்து வந்திருந்த ஜெயலலிதாவை
பேச வைத்த கில்லாடி கலைஞர்.

விக்ரம் படத்தின் போது எம்.ஜி.ஆருக்கு ஜெ எழுதிய
கடிதத்தை வெளியிட்டு ஏதோ கமலஹாசனுக்கும்
ஜெயலலிதாவிற்கும் பூர்வ ஜென்ம பகை உள்ளது
என்ற தோற்றத்தை உருவாக்கிய அவரது சாமர்த்தியம்
கண்டு உண்மையிலேயே அசந்து போனேன்.

ஆனால் இத்தனை சாதுர்யத்தையும் தமிழக மக்கள்
நலனுக்காக பயன்படுத்தியிருந்தால் நன்றாக இருக்கும்.

சரி இந்த கடிதம் எப்படி கிடைத்தது?

எம்.நடராஜன் வீட்டில் சோதனை செய்த போது 
ஜெ வின் ராஜினாமா கடிதம் கிடைத்து அதை
சபாநாயகர் தமிழ்க்குடிமகன் ஏற்றுக் கொண்டு
பின்பு அது சட்டசபைக் கலவரம் வரை பிரச்சினை
ஆனதே, அப்போது கிடைத்த பொக்கிஷமா இது?

அதை இத்தனை நாள் பத்திரமாய் வைத்து இன்று
தக்க சமயத்தில் வெளியிட்டது உண்மையிலேயே
சாமர்த்தியம்தான்.

இக்கடிதம் ஜெ வின் ஆணவத்தை  நன்றாகவே
அம்பலப் படுத்தியிருக்கிறது. தமிழக மக்கள்
மனதில் அவரை மேலும் அசிங்கப்படுத்தியுள்ளது.

இன்று அவர் கொடுத்துள்ள விளக்கம் எல்லாம்
சிறு பிள்ளைகளால் கூட ஏற்றுக் கொள்ள முடியாதது.

சட்டம் ஒழுங்குப் பிரச்சினைப் பற்றி இப்போதுதான்
கவலை வந்துள்ளது. விஸ்வரூப கமலை விட
மிகச் சிறந்த நடிப்பு. ஆனால் இதை ரசிக்கத்தான்
தமிழக மக்கள் தயாராக இல்லை.

பின் குறிப்பு : 1980 ம் வருட சம்பவம் என்று ஜெ 
சொல்கிறார். ஆனால் விக்ரம் படம் வெளி வந்தது
1986 ம் வருடத்தில்தான். எனக்கு எப்படி நினைவில்
உள்ளது என்றால் அந்த வருடம்தான் நான் எல்.ஐ.சி யில்
பணியில் சேர்ந்தேன். முதல் மாத சம்பளம் வாங்கி
பார்த்த படம் விக்ரம்
 

Wednesday, January 30, 2013

தமிழகத்தில் இது சாத்தியமா?



தூய்மையின் மறுபக்கம் மாணிக்சர்க்கார்
 

அகர்தலா, ஜன. 25-நாட்டிலேயே மிகவும் கைசுத்தமான, மிகவும் ஏழ்மையான முதலமைச்சர் என்று திரிபுரா முத லமைச்சர் மாணிக்சர்க்காரை உறுதியாகக் குறிப்பிடலாம். இன்றைய நிலவரப்படி அவரது அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மொத்த மதிப்பு வெறும் ரூ.2.5 லட்சத்திற்கும் குறைவானதே.திரிபுராவின் தான்பூர் தொகுதியிலிருந்து இடது முன்னணியின் வேட்பாளராக சட்டமன் றத்திற்கு மீண்டும் போட்டியிடுகிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்தத் தலைவர், வியா ழனன்று தனது வேட்புமனுவோடு தாக்கல் செய்த சொத்துக்கள் பற்றிய விபரத்திலிருந்து பெறப்பட்ட தகவல்கள் உண்மையிலேயே ஆச்சரியம் அளிக்கின்றன. அவரது கை யிருப்பு வெறும் ரூ.1,080 மட்டுமே. அவரது வங்கிக் கணக்கில் இருப்பு ரூ.9.720 மட்டுமே.64 வயது நிரம்பிய மாணிக் சர்க்காருக்கு அவரது தாயார் அஞ்சலி சர்க்கார் மறைந்த போது விட்டுச் சென்ற சொத்து, ஒரேயொரு செண்ட்டுக்கும் சற்று அதிகமான (432 சதுர அடி) இடத்தில் கட்டப்பட்ட தகரக் குடிசை மட் டுமே. 

இந்த இடத்தின் இன்றைய சந்தை மதிப்பு ரூ.2 லட்சத்து 20 ஆயிரம்.மாணிக்சர்க்காரின் மனைவி பெயர் பாஞ் சாலி பட்டாச்சார்யா. ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் சமீபத்தில்தான் மத்திய அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். மத்திய அரசுத்துறையில் அதிகாரியாக பணியாற்றி யவர் இவர். ஓய்வு பெற்றபோது பணிப் பலனாக கிடைத்த ரூ.23 லட்சத்து 58 ஆயிரத்து 380-ஐ வைப்புநிதியில் போட்டு வைத்துள்ளார். இரண்டரை பவுன் (20 கிராம்) தங்க நகை வைத்திருக்கிறார். இதன் இன்றைய மதிப்பு ரூ.72 ஆயிரம். இது தவிர கையிருப்பாக ரூ.22 ஆயிரத்து 15 வைத்துள்ளார். மாணிக் சர்க்கார் - பாஞ்சாலி பட்டாச்சார்யா தம்பதியி னருக்கு கார்கள் போன்ற அசையும் சொத் துக்கள் எதுவும் இல்லை. மாணிக் சர்க்காரின் தகரக் குடிசை, பாஞ்சாலி பட்டாச்சார்யாவின் பணி ஓய்வு நிதி என அனைத்தையும் சேர்த்து மொத்தம் இவர்கள் கையில் இருப்பது ரூ.24 லட்சத்து 52 ஆயிரத்து 395

.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரிபுரா மாநிலக் குழுவின் நிதிப்பொறுப்பை கையாள் பவர் ஹரிபாததாஸ். மாநிலக் குழு உறுப்பின ரான இவர், முதலமைச்சரைப் பற்றிக் குறிப் பிடுகிறார்: “கட்சியின் இதர சட்டமன்ற உறுப் பினர்களை போலவே தனது முழு சம்பளத்தை யும், இதர அலவன்ஸ்களையும் கட்சியின் மாநிலக்குழுவிடமே ஒப்படைக்கிறார்; முழு நேர ஊழியர் என்ற முறையில் அவருக்கு கட்சி மாதம் ரூ.5 ஆயிரம் ஊதியம் அளிக்கிறது”.இந்த அளவிற்கு மிகவும் குறைவான மாதச் சம்பளம் பெறுகிற ஒரே முதலமைச்சர் இந்தியா வில் மாணிக்சர்க்கார் மட்டுமே.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லச் செயலாளர் பிஜன் தர்ரிடம் கேட்டோம். “தோழர் மாணிக் சர்க்கார் தனது வாழ்க்கை முழுவதையும், கட்சிக்கும், மக்களுக்கும் அர்ப் பணித்தவர். தனக்கென்று சொத்துக்களை உருவாக்கிக் கொள்ளவோ, அதிகரித்துக் கொள்ளவோ அவர் சிந்தித்ததுகூட கிடையாது” என்று அவர் பதிலளிக்கிறார்.எதிர்க்கட்சியான காங்கிரசின் மூத்த தலை வர்களும் கூட இதை ஒப்புக் கொள்கிறார்கள்.

பொதுவாழ்வில் தூய்மையானவர் மாணிக்சர்க் கார் என்று ஒளிவுமறைவின்றிக் கூறுகிறார்கள்.ஒரு முதலமைச்சரின் மனைவி என்ற “பெருமை” எதுவும் இல்லாதவர் பாஞ்சாலி பட்டாச்சார்யா. எல்லா பெண்களையும் போலவே அவர், மார்க்கெட்டுக்கு நடந்தே செல் கிறார். அல்லது எப்போதாவது ரிக்ஷாவில் செல்கிறார். அவர் ஒருபோதும் அரசு வாக னத்தைப் பயன்படுத்தியதில்லை.திரிபுரா மாநிலத்தில் அதிக காலம் முதல மைச்சர் பொறுப்பை வகித்துக் கொண்டிருப்ப வர் மாணிக்சர்க்கார்.

 1998ம் ஆண்டு முதன் முறையாக, வடகிழக்கு இந்தியாவின் கடைக் கோடியில் அமைந்துள்ள, முற்றிலும் வங்க தேச எல்லையால் சூழப்பட்டுள்ள இந்தச் சின் னஞ்சிறிய மாநிலத்தில் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.திரிபுராவில் ஆட்சியிலிருந்த இடது முன் னணி அரசை 1988ம்ஆண்டு காங்கிரஸ் - திரி புரா உபசாதி சமிதி கூட்டணி தோற்கடித்தபோது, முதலமைச்சரின் இல்லத்திலிருந்து ஒரே யொரு தகரப்பெட்டியோடு வெளியில்வந்த மகத்தான தலைவர் நிருபன்சக்கரவர்த்தியின் காலடித்தடத்தை பின்பற்றி, 1998 முதல் இன்றுவரை பொதுவாழ்வில் தூய்மை, மக்கள் நலனுக்காக அயராத உழைப்பு என மாநி லத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்கிறார். (பிடிஐ)

நன்றி 
தீக்கதிர் நாளிதழ்  

தமிழகத்திலும் சாத்தியம்தான் மக்களின் பயணம் இடது திசை 
நோக்கி நடக்கும் போது  

Tuesday, January 29, 2013

விஸ்வரூபம் தடை - அம்மா, அம்மாதான் பிரச்சினை

உயர்நீதி மன்றம் தடை நீக்கிய பின்பும்
மேல் முறையீடு செய்ய வேண்டும்,
காலை பத்து முப்பது வரை தீர்ப்பை
நிறுத்தி வையுங்கள் என்று அரசுத்
தரப்பு கோரியதிலிருந்து தெளிவாகத்
தெரிகிறது, அனைத்துப் பிரச்சினைகளுக்கும்
பின்னணியில் இருப்பது அம்மா, அம்மா,
அம்மா மட்டுமே. அம்மாவின் சூட்சுமக்
கயிற்றுக்கு ஆடிய பொம்மைகளை இனி
யாரும் எதுவும் சொல்ல வேண்டாம்.

வில்லைக் கையிலேந்தி தாக்குதலைத்
தொடுத்தவரை விட்டு விட்டு வீணாய்ப் 
போன அம்புகள் மீது இனியும் ஏன்
கோபம்?


நல்லதை சொன்னா கேட்கவே மாட்டாங்களா?





டெல்லி பாலியல் வன் கொடுமை அராஜகத்திற்கு பிறகு, இது போன்ற மோசமான சம்பவங்கள் நிகழாமல் இருக்க நீதியரசர் வர்மா தலைமையில் ஒரு குழு அமைத்தது.

உலகத் தொலைக்காட்சிகளிலேயே முதல் முறையாக

மன்னிக்கவும்,

இந்திய ஜனநாயகத்திலேயே முதல் முறையாக ஒரு குழு நியமிக்கப் பட்ட முப்பது நாட்களுக்குள்ளாகவே ஆய்வு செய்து அறிக்கை அளித்த பெருமை வர்மா குழுவிற்குத்தான் உண்டு. பல்வேறு தரப்பு மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து அளித்துள்ள அறுநூறு பக்க அறிக்கையில் முக்கியமான பல பரிந்துரைகள் உள்ளது.

தண்டனைக் காலத்தை அதிகரிப்பது தொடங்கி பல ஆலோசனைகள் சொல்லப்பட்டுள்ளது. உண்மையிலேயே அற்புதமான பணியை வர்மா குழு செய்துள்ளது. அவகாசம் கிடைக்கும் போது அத்தனையையும் எழுத முயற்சிக்கிறேன்.

இரண்டு ஆலோசனைகளை மட்டும் ஏற்க முடியாது என்று மத்திய சட்ட அமைச்சர் அவசரம் அவசரமாக அறிவிக்கிறார்.

என்ன அவை?

ராணுவ சிறப்புச் சட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்களின் பதவி பறிக்கப்பட வேண்டும். அவர்கள் தேர்தலில் நிற்க ஐந்தாண்டு கால தடை விதிக்கப்பட வேண்டும்.

இது இரண்டும் சாத்தியமில்லை என்று சட்ட அமைச்சர் சொல்கிறார். அதன் பொருள் என்ன?

மற்றவர்கள் தவறிழைத்தால் தண்டனை கொடுப்போம். ராணுவ வீரரோ
மக்கள் பிரதிநிதியோ தவறு செய்தால் பாதுகாப்போம் என்பதுதானே?
இந்த லட்சணத்தில் இவர்கள் மற்ற பரிந்துரைகளை மட்டும் எங்கே அமுலாக்கப் போகிறார்கள்?

காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்கு பெண்களேதான் பாதுகாப்பு. அரசு அதற்கு பொறுப்பல்ல. அவர்களுக்கு வேறு எவ்வளவோ முக்கியமான வேலைகள் இருக்கிறது, இந்தியாவை விற்பது உட்பட.

Monday, January 28, 2013

பத்ம பூஷன் விருது – ஜானகி அம்மாவின் கோபம் நியாயம்தான், ஆனாலும்




காலம் தாழ்த்தித் தரப்பட்ட விருது. ஆகவே எனக்கு இது தேவையில்லை என்று பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி தனக்கு அளிக்கப்படவுள்ள பத்ம விபூஷன் விருதை ஏற்க மறுத்தது நியாயமான கோபம். அந்த உணர்வுகளை நிச்சயம் ஏற்க வேண்டும். பல விருதுகள் அதுவும் அரசு வழங்கும் விருதுகள் சரியான நபருக்கு சரியான நேரத்தில் வழங்கப்படுவதில்லை. பல சமயம் தவறான நபர்களுக்கும் செல்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பத்ம பூஷன் வழங்கப்பட்ட அதே வருடம்தான் இளையராஜாவிற்கும் பத்ம பூஷன் வழங்கப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையுலகிற்கு வரும் முன்னரே இசையின் சிகரங்களைத் தொட்டவர் ராஜா. விருது வழங்குவதில் உள்ள முரண்பாடுகளுக்கு இது ஒரு உதாரணம்.

தொழிலாளர் நலன் காக்க போராடும் தொழிற்சங்கத் தலைவர்கள் யாரும் பத்ம விருதுகள் பெற்றதாய் எனக்கு நினைவில்லை. அப்படியே கிடைத்திருந்தாலும் அவர்கள் சமரச அமைப்பான ஐ.என்.டி.யு.சி யைச் சேர்ந்தவர்களாக இருந்திருப்பார்கள். ஆனால் விருதுப் பட்டியலில் முதலாளிகளுக்கு தவறாமல் இடம் உண்டு.

காலம்தாழ்த்தி எனக்கு விருது வழங்கப்பட்டுள்ளதாக கோபப்படும் எஸ்.ஜானகி அவர்கள் தனக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று கேட்பதுதான் நெருடலாக உள்ளது. ஆயிரக்கணக்கான பாடல்களை பல மொழிகளில் பாடிய  எனக்கு ஏன் அந்த விருது அளிக்கக் கூடாது என்பது அவர் கேள்வி. அவரைப் பொறுத்தவரை அது நியாயமாகக் கூட இருக்கலாம். சிங்கார வேலனே தேவாவும் அவர் பாடியுள்ளார். நேத்து ராத்திரி யம்மாவும் பாடியுள்ளார். திரைப்பட பாடல்களை பாடியுள்ள லதா மங்கேஷ்கருக்கு அளித்துள்ளதால் அவரும் எதிர்பார்க்கிறார் என தோன்றுகிறது.

ஆனால் எனக்கு இந்த விருதைக் கொடுக்க வேண்டும் என்று கேட்பது அவருக்கும் அழகல்ல, விருதுக்கும் அழகல்ல. அவரது நியாயமான கோபத்தையே அது கறைப்படுத்தி விட்டது.

Sunday, January 27, 2013

காவல்துறை திருந்தவே திருந்தாதா?


 


இது வெள்ளிக்கிழமையன்றே எழுதியிருக்க வேண்டிய
பதிவு. நேரமின்மையால் இன்றுதான் எழுதுகிறேன்.

வியாழன் அன்று அதிமுக, மத்தியரசைக் கண்டித்து
ஆர்ப்பாட்டம் நடத்தியது. வேலூரிலும் நடந்தது. மற்ற
கட்சிகளோ, தொழிற்சங்கங்களோ, ஆர்ப்பாட்டம் நடத்த
வேண்டும் என்றால் வேலூரில் இரண்டே இரண்டு
இடங்கள் மட்டும்தான். 

தலைமை தபால் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்
நடத்த அனுமதி தருவதே இல்லை. மறியல் செய்து
கைதாகும் போராட்டம் என்றால் கூட ஏக கெடுபிடி
இருக்கும்.

ஆனால் அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு மட்டும் அங்கே
அனுமதி அளித்தது மட்டுமல்ல, அந்த பரபரப்பான
சாலையையே அடைத்து விட்டார்கள். மக்களை
வேறு பாதையில் திருப்பி விட்டார்கள்.

அதனால் ஏராளமான போக்குவரத்து நெரிசல்,
குழப்பம் எல்லாமோ.

ஆளும்கட்சி என்றால் ஜால்ரா அடிக்கும் போக்கை
காவல்துறை மாற்றிக் கொள்ளாதா?

பின் குறிப்பு : படம் வேலூர் படம் அல்ல, சென்னை 
ஆர்ப்பாட்டம்.
 
 

Saturday, January 26, 2013

கமலஹாசனுக்கு ஏன் இந்த கொலை வெறி?





இப்போது நான் எழுதப் போவது விஸ்வரூபம் மற்றும் இஸ்லாமிய
அமைப்புக்கள் பற்றிய சர்ச்சை இல்லை.

தமிழக அரசு, விஸ்வரூபம் படத்தை தடை செய்ததற்கு 
இப்படியும் ஒரு காரணம் உண்டு என்று உலாவும் ஒரு
செய்தி பற்றியது.

ப.சிதம்பரம் புத்தக வெளியீட்டு விழாவில் அவர்
பிரதமராக வேண்டும் என்று எழுப்பப்பட்ட 
கோஷ்டி கானத்தில் கமலஹாசனின் குரலும்
இணைந்திருந்ததால் கடுப்பான ஜெயலலிதா
தக்க சமயம் பார்த்து பழி வாங்கி விட்டார் என்பதே
அந்த செய்தி.

இது நடந்திருக்காது என்றும் யாராலும் மறுக்க
முடியாது. அப்படிப்பட்ட குணாம்சம் கொண்டவர்தான்
அவர்.

கமலஹாசனுக்கு என்னுடைய கேள்வி இதுதான்.

இந்தியா மீதும் இந்தியர்கள் மீதும் உங்களுக்கு
அப்படி என்ன கொலை வெறி?

நிதியமைச்சராக ப.சி படுத்தும் பாடே தாங்க
முடியவில்லை. இந்தியாவில் இன்னும் கொஞ்சம்தான்
விற்பனைக்கு பாக்கி உள்ளது. இந்த லட்சணத்தில்
சிவகங்கைச் சீமான் பிரதமராகவும் ஆனால்?????

நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது....

விழாக்களுக்கு போவதையெல்லாம் கொஞ்சம்
தவிர்த்து விடுங்களேன். அதனால்தான் இப்படி
விபரீதமாக பேச வேண்டியுள்ளது.

விஸ்வரூபம் - இஸ்லாமிய அமைப்புக்கள் இழந்த வாய்ப்பு



விஸ்வரூபம் திரைப்படத் தடை பற்றி மாமா ஏன் எதுவும்
எழுதவில்லை என்று உன் மருமகன் கேட்கிறான் என
இன்று காலை என் அக்கா தொலைபேசியில் சொன்ன
போதுதான் கிட்டத்தட்ட நாற்பத்தி எட்டு மணி நேரத்திற்கு
மேல் வலைப்பக்கம் வரவேயில்லை என்பது 
நினைவிற்கு வந்தது.

தொழிற்சங்கப் பணிகள் மற்றும் சில சொந்த அலுவல்கள்
இவைகளுக்கு மத்தியில்
இதோ இப்போது சற்று அவகாசம்
கிடைக்க எழுத வந்து விட்டேன்.

விஸ்வரூபம் படத்திற்கு தடை தேவையா ? இல்லையா?

படம் வெளி வருவதற்கு முன்பாக, ரசிகர்கள் பார்ப்பதற்கு
முன்பாக அப்படி தடை செய்யும் அளவிற்கு என்ன அதில்
உள்ளது?

தொலைக்காட்சி விவாதங்களில் பேசப்பட்டதன் அடிப்படையில்
பார்க்கும் போது இஸ்லாமிய அமைப்புக்கள் நிதானம்
தவறியுள்ளதாகவே உணர்கிறேன். 

கதைக்களம் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்காவிலும்
நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. தாலிபன் தலைவர்
முல்லா ஓமர் தமிழ் பேசுவதாக காட்சி வருகின்றது.
ஒரு தூக்கு தண்டனை நிறைவேற்றப் படுகையில்
எல்லோரும் துப்பாக்கியை உயர்த்தி மகிழ்கின்றார்கள்.
கொலை செய்வதற்கு முன்பாக தொழுது விட்டு
செல்கிறான். கண்கள் கட்டப்பட்ட சிறுவன் ஆயுதங்களை
சரியாக சொல்கிறான். 

இவையெல்லாம் எதிர்ப்பிற்கான முக்கியக் காரணங்கள்.

ஆப்கானிஸ்தானில்  இவையெல்லாம் நடக்கவில்லையா?
மதத்தின் பெயரால், இறைவனின் பெயரால் தாலிபனும்
அல்கொய்தாவும் கொடூரங்களை நிகழ்த்தவில்லையா?
சமீபத்தில் கூட ஒரு பெண்ணை கொன்று விட்டு
உற்சாகக் குரல் எழுப்பியதை பார்த்தோமே! நான் கூட
இச்சம்பவம் பற்றி பதிவு எழுதினேன். பெண்களின்
உரிமைகள் நசுக்கப்பட்டதே! படிக்க வேண்டும் என்று
ஆசைப்பட்ட மலாலா வை துப்பாக்கித் தோட்டாக்கள்
தொலைத்ததே....

ஆப்கானின் தாலிபனுக்கும் பாகிஸ்தானின் தீவிரவாத
இயக்கங்களுக்கும் இந்தியாவில் உள்ள
அதிலும்  தமிழகத்திலும் உள்ள இஸ்லாமியர்களுக்கும்
எந்த தொடர்பும் கிடையாது என்பதை 
தமிழகத்தில் உள்ளவர்கள் எல்லோரும்
நன்றாக அறிவார்கள். ஆகவே படம் பார்த்து
யாரும் தவறாக புரிந்து கொள்ள மாட்டார்கள்.

சில வெறியர்களின் தவறை அந்த மதத்தின் தவறாக
தவறாக புரிந்து கொள்ளும் மக்கள் இந்தியாவில்
அதிகம் பேர் கிடையாது. 

தீவிரவாதிகளுக்கும் மற்ற அமைப்புக்களுக்கும் உள்ள
வேறுபாடுகள் புரிந்தவர்கள்தான் இந்திய மக்கள்.

ஆக இந்தக் காட்சிகள் வெளி வந்தால் ஒற்றுமை பாதிக்கப்படும்
என்பதெல்லாம் கற்பனாவாதம். 

எதிர்ப்பதற்கு மாறாக, நாங்கள் தீவிரவாதத்தை ஆதரிக்க
மாட்டோம். வரலாற்று ரீதியாக உள்ள சில தவறுகளை
திருத்தி விட்டு படத்தை வெளியிடட்டும் என்று 
சொல்லியிருந்தால் சரியாக இருக்கும்.



ஏனென்றால் தாலிபன், அல் கொய்தா, முல்லா ஓமர்,
ஓசாமா பின் லேடன் என எல்லோரும் அமெரிக்காவின்
தயாரிப்புக்கள்தான்.

ஒரு அரசு தனது சுயநலத்திற்காக தீவிரவாதத்தை 
ஊக்குவித்தால் அதுவே பெரிய விலை கொடுக்க 
வேண்டியிருக்கும் என்பதற்கு இந்திரா காந்தியின்
கொலையும் இரட்டை கோபுர தகர்ப்பும் நல்ல
படிப்பினைகள்.

ஒவ்வொரு கலை வடிவத்தையும்
அது திரைப்படமோ இல்லை
கார்ட்டூனோ  ஏதோ ஒரு காரணம்
சொல்லி எதிர்த்துக் கொண்டும் தடை செய்து கொண்டும்
இருந்தால்  அந்த நாட்டில் இருப்பது ஜனநாயக ஆட்சியாக
இருக்க முடியாது. தாலிபன் ஆட்சியாக இருக்கும். 
அதற்கு இவர்கள் இடம் தரக்கூடாது.  


ஆனால் இந்த எதிர்ப்பின் மூலம் இஸ்லாமியர்களை
எதிர்ப்பதை மட்டுமே தொழிலாகக் கொண்டுள்ள
பலருக்கு தீனி கிடைத்து விட்டது.

இதனை இஸ்லாமிய அமைப்புக்கள் 
தவிர்த்திருக்க வேண்டும். 

படம் வெளி வரட்டும். அதன் பின்பு அதை விமர்சிப்போம்
என்ற நிலைதான் சரியாக இருக்கும். அதனை விடுத்து
நீதிமன்ற தடை நீங்கினாலும் திரையிட விட மாட்டோம்
என்பது  தவறான அணுகுமுறை.
 


Wednesday, January 23, 2013

பாலியல் கொடுமைகளை இந்திய ராணுவம் தூண்டுகிறதா?





அதிர்ச்சியளிக்கிற தகவல் இது. பாலியல் கொடுமை செய்த ஒரு ராணுவ வீரர் ஒருவருக்கு ராணுவ நீதிமன்றம் தண்டனை அளித்துள்ளது.

ஆதாரங்களோடும் சாட்சியங்களோடும் நிரூபிக்கப்பட்ட அந்த குற்றத்திற்கு மிக மிக கடுமையான தண்டனை கொடுத்து தர்மத்தையும் நியாயத்தையும் அந்த ராணுவ நீதிமன்றம் நிலை நாட்டியுள்ளது.

என்ன தண்டனை தெரியுமா?

மூன்று மாத சிறை மற்றும் ஒரு பதவி இறக்கம். லான்ஸ் நாயக் என்ற பதவியிலிருந்து சிப்பாயாக பதவி இறக்கம் செய்துள்ளது.

மரண தண்டனை, ஆண்மை நீக்கம், ஆயுட்காலம் வரை சிறை என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கும் சூழலில் வெறும் மூன்று மாத சிறை என்பதன் மூலம் ராணுவ வீரர்களுக்கு என்ன செய்தி சொல்கிறது இந்த தண்டனை?

கவலைப்படாதே சகோதரா, உனக்கு நாங்கள் துணையாக இருப்போம் என்று சொல்லாமல் சொல்லி உற்சாகப் படுத்துகின்றதா?

சாதாரணமாக அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் ஏதாவது குற்றத்திற்காக ( அது பேனா திருடிய குற்றமாகக் கூட இருக்கலாம்) பதினைந்து நாட்கள் சிறைத்தண்டனை பெற்றாலே அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள்.

ஆனால் கட்டுப்பாடும் ஒழுக்கமும் இருக்க வேண்டிய ராணுவத்தில் மோசமான ஒழுக்கக் கேடான ஒரு குற்றத்தை செய்த நபருக்கோ வெறும் பணியிறக்கம் மட்டும்தான் என்பது எவ்வளவு மோசமான விஷயம்?

ராணுவ சிறப்புச் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்து பெண்களை பாலியல் கொடுமைகள் செய்கின்றனர் என்பதுதான் காஷ்மீரிலும் வட கிழக்கு மாநிலங்களிலும் தொடர்ந்து சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள். ராணுவத்தைக் கண்டித்து மணிப்பூர் மாநிலப் பெண்கள் இம்பால் நகரில் உடைகளைத் துறந்து போராட்டம் நடத்தக் கூடிய அளவிற்கு மன ரீதியாக பாதிப்படைந்துள்ளனர் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது. அச்சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தித்தானே ஐரோம் ஷர்மிளா பல்லாண்டுகளாக உண்ணா விரதப் போராட்டம் நடத்தி வருகின்றார்!

இப்படிப்பட்ட நிலையில் ராணுவம் மீதுள்ள மரியாதையை இது போன்ற தீர்ப்புக்கள் இழக்கச் செய்யும்.

இந்த தண்டனையே எதற்காக கொடுத்துள்ளார்கள் என்று எனக்கு தோன்றுகிற சந்தேகம் என்ன தெரியுமா?

“ ஆதாரங்கள், சாட்சியங்கள் என்று மாட்டிக் கொள்ளக் கூடிய விதத்திலா குற்றம் செய்வாய். இதைப் பார்த்தாவது மற்றவர்கள் புத்திசாலித்தனமாக, மாட்டிக் கொள்ளாமல் தவறு செய்யுங்கள்”

என்பதுதான் இந்த தண்டனையின் செய்தியாக நான் நினைக்கிறேன்.

Monday, January 21, 2013

ராகுல் காந்தி பம்மாத்தின் பின்னே பதுங்கியுள்ள ஒரு பயங்கரம்





ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவரானது பற்றி நான் எதுவும் எழுதப் போவதில்லை. முன்னரே ஒரு பதிவில் சொன்னது போல அது அக்கட்சியின் உள் விவகாரம். நேரு குடும்பத்தைத் தவிர வேறு யாருக்கும் தங்களை அடக்கியாள் அதிகாரம் இல்லை என்று காங்கிரஸ்காரர்கள் நினைத்தால் அதிலே நமக்கென்ன பிரச்சினை?

ஆனால் ஜெய்ப்பூர் பிரகடனம் என்ற பெயரில் ஒரு பம்மாத்து நாடகம் நடந்துள்ளது. அதிலே ஒரு வரி பத்து லட்சம் வேலைவாய்ப்புக்கள் ஆண்டுக்கு ஆண்டு உருவாக்குவோம் என்பது. அதைப்பார்த்து யாரும் புல்லரித்துப் போகாதீர்கள். மன்மோகனை விட ராகுல் காந்தி சூப்பர் என்று யாரும் முட்டாள்தனமாக சந்தோஷப்பட வேண்டாம்.

முதலீட்டார்கள் நலனுக்கு ஏற்ப, அவர்களுக்கு உகந்த ஒரு சிறப்பான சூழலை உருவாக்கி இவர்களை வேலைவாய்ப்புக்களை உருவாக்குவார்களாம்.

என்ன புடலங்காய் சிறப்பான சூழல்?

இந்தியாவின் எந்த தொழிலாளர் நலச்சட்டங்களோ, வருமான வரிச் சட்டங்களோ, மற்ற எந்த ஒரு விதிகளோ பொருந்தாது என்பதுதான் பொருள்.

பத்து லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கப் போகிறோம் என்ற பெயரில் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் இன்னும் அதிகமான சலுகைகளை வழங்கப் போகிறோம் என்பதுதான் இதன் பொருள். முதலாளிகள் விரும்பியது கண்டிப்பாய் நடக்கும்.

பத்து லட்சம் வேலைகள்?

முன்பு என்னவோ, அதுவேதான் இப்போதும்.

முன்பு என்ன?

எதுவும் நடக்கவில்லை.

அப்படியென்றால்

இப்போதும் எதுவும் நடக்காது.