Sunday, July 11, 2010

கோயிலுக்கு ஒரு நியாயம். மசூதிக்கு ஒரு நியாயமா?






                                   




வேலூர் கோட்டை என்றால் பொதுவாக மக்களுக்கு நினைவில்
வருவது அகழியால் சூழப்பட்ட அழகிய கற்கோட்டை. வரலாறு
தெரிந்தவர்களுக்கு வெள்ளையனுக்கு எதிரான முதல் சுதந்திர
முழக்கம் அங்கேதான் ஒலித்தது என்பது நினைவிற்கு வரும்.
ஆன்மீக அன்பர்களுக்கு அங்கே உள்ள ஜலகண்டேஸ்வரர் ஆலயம்
மனதில் தோன்றும். கோட்டைக்குள்ளே திப்புசுல்தான் வழிபட்ட
ஒரு மசூதி ஒன்று உண்டு எனவோ அதிலே வழிபடும் உரிமை
இஸ்லாமியர்களுக்கு தொடர்ந்து மறுக்கப்படுகின்றது என்பது
பலருக்கு புதிய செய்தியாக இருக்கலாம்.


வேலூர் கோட்டையின் சிறப்பம்சம் என்பது பிரிட்டிஷ்
 ஏகாதிபத்தியத்தை  எதிர்த்து இந்து ,முஸ்லிம் சிப்பாய்கள்
ஒன்றிணைந்து போராடினார்கள் என்பதும் கோட்டையில்
இருந்த வெள்ளையர்களை வீழ்த்தி யூனியன் ஜாக் கொடியை
கீழிறக்கி திப்புவின் புலிக்கொடியை பறக்க விட்டார்கள்.
எட்டே மணி நேரத்தில் இப்புரட்சி வெள்ளையர்களால்
மிருகத்தனமாக ஒடுக்கப்பட்டது. எண்ணூறு இந்திய
வீரர்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் வெட்டப்பட்டும்,
சுடப்பட்டும், தூக்கிலடப்பட்டும், பீரங்கி வாயில் கட்டி
வைக்கப்பட்டும் சிதறடிக்கப்பட்டனர். இந்து முஸ்லிம்
வீரர்களின் குருதி ஒன்றாய் கலந்து கோட்டை அகழியை
செம்மயமாக்கியது.


வேலூர் கோட்டை புரட்சியின் பிறப்பிடம் மட்டுமல்ல,
இந்து முஸ்லிம் ஒற்றுமையின் அடையாளசசின்னமும்
கூட.


வெள்ளையர்கள் வழிபட்ட தேவாலயம் இன்றும்
பயன்பாட்டில் உள்ளது. அவர்கள் ஆட்சி செய்தபோது
ஜலகண்டேஸ்வரர் ஆலயமும் மசூதியும் ஆயுத்தசாலையாக
தானியக்கிடங்காக மாற்றப்பட்டது. ஜலகண்டேஸ்வரர் லிங்கம்
கோட்டைக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டு " சாமி
இல்லாத கோயில்" என்ற பெயரை வேலூருக்குப்
பெற்றுத்தந்தது.


இந்திய விடுதலைக்குப்பின்பு  வேலூர் கோட்டை
தொல்பொருள் துறையின்  கைவசம் வந்தது. 1947 ல்
எது எப்படி இருந்ததோ அதே நிலை அப்படியே தொடர
வேண்டும் என வறட்டுச்சட்டம் பேசியது அத்துறை.
கோயிலும் மசூதியும் மீண்டும் வழிபாட்டிற்குத்
திறந்து விடப்பட வேண்டும் என்ற கோரிக்கை
நிராகரிக்கப்பட்டது.


ஆனால் 80 ளில்  மாவட்ட ஆட்சியர் கங்கப்பா 
துணை கொண்டு இந்து அமைப்புக்கள் லிங்கத்தை 
மீண்டும் கோயிலுக்குள் அமைத்து விட்டனர். அங்கே 
இப்போது ஜலகண்டேஸ்வரர் அருள் பாலித்துக் 
கொண்டிருக்கிறார். 


ஆனால் மசூதி வழிபாடு மட்டும் கானல்நீராகவே 
உள்ளது. சட்டம் பேசி தடுக்கிறது தொல்பொருள்துறை. 
மத்தியஅரசோ  இது பற்றி எந்த முடிவையும் எடுக்க
தயங்குகிறது. சங் பரிவாரங்கள் மசூதியை திறக்கக் 
கூடாது என மிரட்டுகின்றன.


இஸ்லாமிய அமைப்புக்களும் மார்க்சிஸ்ட் கட்சியும் 
பல இயக்கங்களை நடத்தி விட்டனர். மார்க்சிஸ்ட் கட்சியின்
மறைந்த மக்களவை உறுப்பினர் தோழர் மோகன் பங்கேற்ற 
தர்ணா போராட்டம் முடிந்ததும்  இந்து முன்னணி  ஒரு கூட்டம்
போட்டு மதுரை எம்.பி க்கு வேலூரில் என்ன வேலை என்று 
கேட்டது. 


அயோத்தியில் கோயில் கட்ட பாகிஸ்தானில் பிறந்த 
அத்வானி மட்டும் ரத யாத்திரை செல்லலாம் என்பது 
அவர்களது நியாயம்.


1947 ல் கோட்டையில் இருந்த நிலை அப்படியே இல்லை
என்பதுதான் உண்மை. பல அலுவலகங்கள் இடம் மாறி 
விட்டன. புதிதாக துவங்கப்பட்ட திருவள்ளுவர் 
பல்கலைக்கழகம் அங்கேதான் செயல்பட்டுக்
கொண்டிருக்கிறது. ஜலகண்டேஸ்வரர் மீண்டும்
வந்து விட்டார்.


ஆனாலும்  மசூதி மட்டும் திறக்கப்படாது என
பிடிவாதம் பிடிப்பது சரியல்ல. அகழியில் கலந்து
ஓடிய இந்து முஸ்லிம் வீரர்களின் ரத்தம்
மத ஒற்றுமையை உயர்த்திப் பிடித்தது. இன்னமும்
அந்த பாரம்பரியத்தை பாதுகாத்து வரும் வேலூர்
மண்ணில் மசூதியும் திறந்து விடப்பட்டால் வேலூர்
கோட்டை, கோயில், மசூதி, தேவாலயம் என்று மூன்று
மதத்தினரின் வழிபாட்டுத் தளங்களோடு மத
நல்லிணக்கம்  சாத்தியமே என  என்றென்றும்
உரக்க முழங்கும்.   

No comments:

Post a Comment