மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் மிகச் சிறந்த நாடாளுமன்றவாதியுமான தோழர் பாசுதேப் ஆச்சார்யா, நேற்று காலமானார். அவருக்கு என் செவ்வணக்கம்.
இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கு மிகவும் நெருக்கமானவர் தோழர் பாசுதேப் ஆச்சார்யா. எல்.ஐ.சி நிறுவனத்தை பொதுத்துறை நிறுவனமாக பாதுகாக்க மக்களவையில் தொடர்ந்து குரல் கொடுத்தவர். இன்சூரன்ஸ் ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்து துல்லியமாக அறிந்தவர். 01.08.1992 முதல் இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய ஊதிய உயர்வில் அநீதி செய்தது மத்தியரசு. பேச்சுவார்த்தை இல்லாமல் தனது முன்மொழிவை அறிவிக்கை மூலமாக திணித்தது. அந்த அநீதிக்கு எதிரான அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் போராட்டத்தை மக்களவையில் எதிரொலித்தவர் தோழர் பாசுதேப் ஆச்சார்யா. இது குறித்து விவாதிக்க வேண்டுமென்று சுமார் 90 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துக்களை திரட்டவும் உதவியவர்.
1996 டிசம்பர் இறுதியில் மதுரையில் நடைபெற்ற அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் 16 வது பொது மாநாட்டின் துவக்க நிகழ்வில் அவர் சிறப்புரையாற்றிருக்க வேண்டும். மாநாட்டை துவக்கி வைத்து அன்றைய மேற்கு வங்க நிதியமைச்சர் தோழர் அசிம்தாஸ் குப்தா பேசுவதாக இருந்தார் என்று நினைவு. ஆனால் அப்போது தமிழ்நாடு முழுதும் பெய்து கொண்டிருந்த கடும் மழையால் அனைத்து வித போக்குவரத்துக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. இருவரும் வர இயலாமல் பொதுவுடமை இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் ஆர்.உமாநாத், மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். மறுநாள் பிரதிநிதிகள் மாநாட்டில்தான் தோழர் பாசுதேப் ஆச்சார்யா உரையாற்றினார். இன்சூரன்ஸ் ஊழியர்களின் ஊதிய உயர்வு பிரச்சினைகள் குறித்து அவர் மிகவும் துல்லியமாக புரிந்து கொண்டுள்ளவர் என்பதை அப்போதுதான் உணர முடிந்தது.
தோழர் பாசுதேப் ஆச்சார்யா என்றால் என் மனதுக்கு இன்னொரு நிகழ்வும் நினைவுக்கு வரும். 1996 ல் வேலூரில் தென் மண்டல மாநாடு நடைபெறுகிறது. அலைபேசி வசதிகள் அறிமுகமாகாத காலகட்டம் அது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் அன்றைய பொதுச்செயலாளர் தோழர் என்.எம்.சுந்தரம், டெல்லிக்கு எஸ்.டி.டி பேச வேண்டும் என்று சொல்லுகிறார். அழைத்துச் செல்கிறேன். சிதம்பரம் கிளையின் அன்றைய தலைவர் மறைந்த தோழர் கே.அனந்தராமன் கார் ஓட்டுகிறார். மாநாட்டு அரங்கம் அருகில் இருந்த ஒரு எஸ்.டி.டி பூத் திமுகவின் நகரச்செயலாளராக இருந்து மதிமுக சென்று மீண்டும் திமுகவிற்கே திரும்பிய பூபாளன் என்பவருடையது. நாங்கள் சென்ற போது அவர்தான் இருந்தார்.
இணைப்பு கிடைத்து தோழர் என்.எம்.எஸ் பேசத் தொடங்கிய பின்பு நாங்கள் இருவரும் வெளியே வந்து விட்டோம். கிட்டத்தட்ட முப்பது நிமிடங்கள் தொலைபேசி உரையாடல் நடந்தது. ஆயிரம் ரூபாய் வரை பில் வந்ததாக நினைவு.
பணத்தை கொடுக்க நாங்கள் உள்ளே சென்ற போது திரு பூபாளன், ஆச்சர்யமாக "யார் சார் இவரு! இப்படி ஒரு இங்கிலிஷ் இதுவரை என் வாழ்வில் கேட்டதில்லை. பெரும்பாலான வார்த்தைகளை முதல் முறையாக கேட்கிறேன். அந்த பக்கம் இருந்தவர் பேசினதும் கேட்டதும் அவரும் இவர் மாதிரியேதான் பேசினார்" வினவ பதில் சொல்லி விட்டு புறப்பட்டோம்.
மறுமுனையில் பேசியவர் தோழர் பாசுதேப் ஆச்சார்யா , , ,
The loss is irreparable.
ReplyDelete