வங்கிகளை
சீரமைப்பதற்காக அவைகளின் மூலதனத்தை அதிகரிக்க இரண்டு லட்சம் கோடி ரூபாய் வரை நிதி அளிக்கப் போவதாக நிதியமைச்சர் அருண்
ஜெய்ட்லி சொல்லியுள்ளார்.
இது தொடர்பாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பத்திரிக்கைச் செய்தியை முன்னர் பகிர்ந்திருந்தேன், அதன் பின்னணியில் இங்கே சில கருத்துக்களை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
இந்த
வருட பட்ஜெட்டில் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள அரசுகளின் பங்குகளை 72,000 கோடி அளவில்
விற்கப் போவதாக அறிவித்து அந்த வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள்.
மூலதனத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமே இல்லாத அளவிற்கு லாபகரமாக
செயல்படுகிற, லாபத்தின் பங்காக சில ஆயிரம் கோடி ரூபாய்களை ஒவ்வொரு ஆண்டும் அரசுக்குத்
தருகிற பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பங்குகளையும் பட்ஜெட்டில் சொல்லியபடி
விற்கத் தொடங்கியுள்ளனர்.
என்.எல்.சி நிறுவனத்தின் ஐந்து சதவிகித பங்குகளை விற்று ரூபாய் 750 கோடி ரூபாய் திரட்டப் போகிறார்களாம்.
அப்படி
தன் கைவசம் உள்ள பங்குகளை இதர நிறுவனங்களில் மத்தியரசு விற்று வருகையில் வங்கிகளுக்கு
மட்டும் மூலதனத்தை அதிகரிக்க நிதி தருவது என்பது முரண்பாடாக தெரிகிறதல்லவா? இந்த நிதி ஒன்றும் மத்தியரசின் கஜானாவிலிருந்து வரப்போவதில்லை. பின் எங்கே என்பது பற்றி பிறகு பார்ப்போம்.
கூடுதல் மூலதனம் வரப்போவது வங்கிகளுடைய பிரச்சினைகளை தீர்க்க உதவுமா என்பதை மட்டும் இப்போது பார்ப்போம்.
வங்கிகளுடைய முக்கியமான பணி என்பது கடன் கொடுப்பதுதான். அதற்கு இப்போது அவர்கள்வசம் நிதி போதுமானதாக இல்லை என்பதுதான் யதார்த்தம்.
அப்படிப்பட்ட நிலை ஏன் உருவானது?
வாராக்கடன் மற்றும் வாராக்கடனை தள்ளுபடி செய்ய ஒதுக்கி வைக்கும் நிதி.
வசூலிக்க முடியாத வாராக்கடனாக 2011 ல் 74,664 கோடி ரூபாயாக இருந்தவை இப்போது எட்டு லட்சம் கோடி ரூபாயாக மாறி விட்டது. மத்தியரசு சொல்வது போல வேறு பல கடன்களை மாற்றி அமைத்தால் வாராக்கடன் தொகை பதினைந்து லட்சம் கோடி ரூபாயாக மாறி விடும்.
கடந்த நிதியாண்டில் வங்கிகளின் லாபம் ரூபாய் 1,58,982 கோடி ரூபாய்.
அதிலே வாராக்கடனுக்காக ஒதுக்கி வைக்கப்பட்ட தொகை 1,70,370 கோடி ரூபாய்.
ஆக நஷ்டம் 11,388 கோடி ரூபாய்.
வங்கிகளின் ஒட்டு மொத்த லாபத்தையும் வாராக்கடன் முழுங்கி விட்டது. எனவே அவர்களது மூலதனம் அரிக்கப்பட்டு விட்டது.
இந்த சூழலில்தான் கூடுதல் மூலதனம் அளிக்கப்படுகிறது. இது எங்கே செல்லும்? மீண்டும் பெரு நிறுவனங்களுக்கு கடனாக செல்லும். ஒரு காலகட்டத்திற்குப் பிறகு இத்தொகையும் வாராக்கடனாக மாறும். ஏனென்றால் வங்கிக்கடனை திருப்பி செலுத்தாவிட்டால் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
பனிரெண்டு நிறுவனங்கள் மட்டுமே வைத்திருக்கிற வாராக்கடன் ரூபாய் 2,53,729 கோடி ரூபாய். முந்தைய பதிவில் இந்த விபரம் உள்ளது. இருப்பினும் மீண்டும் பகிர்கிறேன்.
ஆனால் வாராக்கடனை வசூலிக்க எந்த நடவடிக்கையும் எடுக்க மத்தியரசு தயாராக இல்லை. ஏன் வாராக்கடன் பட்டியலை வெளியிடக் கூட அவர்கள் தயாராக இல்லை.
வங்கிகளை சீரமைக்க வங்கி ஊழியர் அமைப்புக்கள் அரசிடம் கோருவது எளிதான நடவடிக்கைகள்தான். அரசு கஜானாவிலிருந்து பத்து பைசா கூட தேவையில்லை.
1) கடனை திருப்பி செலுத்தாதவர்கள் பட்டியலை வெளியிடு
2) கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள் எந்த தேர்தலிலும் போட்டியிடுவதை, அரசுப்பதவிகளுக்கு வருவதை தடை செய்.
3) சொத்துக்களை பறிமுதல் செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடு.
4) கடனை திருப்பி செலுத்தாததை கிரிமினல் குற்றமாக அறிவித்து அதற்கேற்ற நடவடிக்கை எடு.
5) கடன் வழங்கியவர்கள் யாரோ அவர்களை அதற்கு பொறுப்பாக்கு
கொடுத்த கடனை வசூலிக்காமல் எத்தனை லட்சம் கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்தாலும் அதனால் வங்கிகளுக்கோ, நாட்டிற்கோ, சாமானிய மக்களுக்கோ எந்த பயனும் இல்லை.
ஜெய்ட்லி அறிவிப்பில் இன்னும் சில வில்லங்கங்களும் உண்டு. அவற்றைப் பற்றி பின்னர் பார்ப்போம்.