சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Saturday, March 31, 2012
Friday, March 30, 2012
Wednesday, March 28, 2012
தளபதி, தல, மந்திரி – சில கேள்விகள், ஒரு பதில்
ராணுவத் தளபதிக்கு சில கேள்விகள் :
உங்களை எழுத்து பூர்வமான புகார் கடிதம் கொடுக்குமாறு ராணுவ அமைச்சர் சொன்ன பின்பும் அப்படி கொடுக்காதது ஏன்?
அப்படியென்றால் முறையான விசாரணை செய்வதில் உங்களுக்கு விருப்பமில்லையா?
அல்லது முறையான விசாரணை நடக்கும் என்று நம்பிக்கை கிடையாதா?
ஒரு வேளை உங்கள் பணிக்காலம் ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட்டிருந்தாலும் கூட இந்த புகாரை நீங்கள் தெரிவித்திருப்பீர்களா?
ராணுவ மந்திரி அந்தோணிக்கான கேள்விகள் :
ராணுவ தளபதி ஒரு அதிர்ச்சியான தகவல் தருகின்றார். எழுத்து பூர்வமான புகார் கொடுத்தால்தான் விசாரணை செய்வீர்களா ?
அப்படி அலட்சியப் படுத்த வேண்டிய சாதாரண விஷயம்தானா இது?
பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் சாதாரண மொட்டைப் பெட்டிஷன் அடிப்படையிலேயே விசாரணை நடைபெறும் போது,
ராணுவ தளபதி சொல்வதற்கு ஒரு மொட்டை பெட்டிஷனுக்கான மரியாதை கூட கிடையாதா?
நாட்டின் “தல” மன்மோகன் சிங்கிற்கான கேள்வி :
இந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா?
இதற்கு மன்மோகன் என்ன பதில் சொல்வார் என்று எனக்கு தெரியும்.
அவர் பதில் “ எனக்கு எதுவும் தெரியாது ”
Tuesday, March 27, 2012
Monday, March 26, 2012
ராணுவ தளபதிக்கு போதி மரம் எங்கே முளைத்தது?
இன்றைய பரபரப்புச் செய்தி ராணுவ தளபதி ஜெனரல்
வி.கே.சிங் அவர்களின் பேட்டி. ராணுவத்தில் தற்போது
உபயோகத்தில் இருக்கும் வாகனங்களை மீண்டும்
வாங்க அனுமதித்தால் பதினான்கு கோடி ரூபாய்
லஞ்சம் அளிப்பதாக ஓய்வு பெற்ற இன்னொரு ராணுவ
அதிகாரி கூறியதாகவும் அதை ராணுவ அமைச்சர்
அந்தோணியிடம் தெரிவித்ததாகவும் அவர் சொல்லி
உள்ளார்.
இந்த விபரங்கள் எல்லாமே உண்மையாக இருக்கலாம்.
ராணுவ கொள்முதலும் ஊழலும் ஒட்டிப் பிறந்த
இரட்டையர்கள். தோட்டா முதல் சவப்பெட்டி வரை
ஊழல் நடைபெற்றதை நாடு பார்த்துள்ளது.
இன்று இத்தகவலை பத்திரிக்கைகளிடம் பகிர்ந்து
கொள்ளும் தளபதி இத்தனை நாள் என்ன செய்து
கொண்டிருந்தார்?
அவர் வயது பிரச்சினை சாதகமாக முடிந்திருந்தால்
இப்போது கூட அவர் வாய் திறந்திருப்பாரா என்று
சந்தேகமாக உள்ளது. அதனால்தான் அவரைப்
பார்த்து கேட்கத் தோன்றுகிறது.
உங்களுக்கு போதிமரம் இப்போதுதான் முளைத்ததா?
Sunday, March 25, 2012
நீ திருந்தவே மாட்டியா?
மத்திய திட்டக்குழு துணைத்தலைவர் மாண்டெக் சிங்
அலுவாலியா மீண்டும் திருவாய் மலர்ந்துளளார்.
கிராமப்புறங்களில் 26 ரூபாய் வருமானமும் நகர்ப்
புறத்தில் ரூபாய் 28. 75 வருமானமும் ஒரு நாளில்
இருந்தால் அவர்கள் வறுமைக் கோட்டிற்கு மேலாக
உள்ளவர்கள் என்றும் இந்தியாவில் வறுமை
குறைந்து விட்டது என்று அருள் வாக்கு சொல்லி
உள்ளார்.
இதற்கு விளக்கம் சொல்வதற்கு எனக்கு விருப்பம்
இல்லை. ஏனென்றால் கொஞ்சம் கூட இதயத்தில்
ஈரமே இல்லாத படுபாவி அவர்.
ஒரே ஒரு கேள்வி மட்டும் அவருக்கு.
நீயெல்லாம் திருந்தவே மாட்டியா?
Saturday, March 24, 2012
பூட்டுக்களே சாட்சியாக . . .
மாற்றம் என்ற முழக்கத்தை முன் வைத்து பாரக் ஓபாமா அமெரிக்க குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரால் அமெரிக்கப் பொருளாதாரத்தில் மாற்றத்தைக் கொண்டு வர முடிந்ததா? அப்படி அதிசயம் எதுவும் அமெரிக்காவில் நிகழவில்லை என்பதற்கு ஒரு சோற்றுப் பதமாக வங்கிகள் திவாலைச் சொல்ல முடியும். 2012 ம் ஆண்டில் மட்டும் இது வரை 14 வங்கிகள் திவாகியுள்ளன. ஜனவரி மாதம் எட்டு வங்கிகளும் பிப்ரவரி மாதம் நான்கு வங்கிகளும் மார்ச்சில் இதுவரை இரண்டு வங்கிகளும் திவாலாகியுள்ளன. அமெரிக்கப் பொருளாதாரம் இன்னும் சீர்படவில்லை என்பதற்கு மூடப்பட்ட வங்கிகளின் பூட்டுக்களே மௌன சாட்சியாக உள்ளது.
முடிவுகள் அமுலாகுமா, வெறும் கனவாய் நின்றிடுமா?
குறைந்தபட்ச ஊதியச்சட்டத்தில் உச்சநீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் அடிப்படையில் மாற்றங்களைக் கொண்டு வருவது,
ஒரு நிறுவனம் வருங்கால வைப்பு நிதியில் இணைக்கப்பட குறைந்த பட்சம் இருபது ஊழியர்கள் இருக்க வேண்டும் என்ற விதியை பத்து ஊழியர்கள் என மாற்றுவது,
குறைந்தபட்ச பென்ஷன் தொகையை ஆயிரம் ரூபாய் என அதிகரிப்பது,
பணிக்கொடை பெறுவதற்கான பணித் தகுதிக் காலத்தை ஐந்தாண்டுகள் என்பதிலிருந்து குறைப்பது, ஒரு நிறுவனத்திலிருந்து வேறு நிறுவனத்திற்கு பணி மாறினாலும் முந்தைய பணிக்காலத்தையும் கணக்கிலெடுத்துக் கொள்வது.
மகப்பேறு கால விடுப்பை பன்னிரெண்டு வாரங்களிலிருந்து இருபத்தி நான்கு வாரங்களாக உயர்த்துவது.
அங்கன்வாடி, சத்துணவு, ஊட்டச்சத்து ஊழியர்கள் ஆகியோருக்கு சமூகப் பாதுகாப்பு வழங்குவது,
மத்திய, மாநில அரசுகள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவது,
மாநில அரசுகள் சமூக நல வாரியங்களை அமைப்பது,
தேசிய அளவில் வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துவது.
வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் தொழிற்சாலைகளுக்கு முன்னுரிமை அளிப்பது.
தொழிலாளர்களுக்கு ஒரு கௌரவமான பணிச்சூழலை உருவாக்குவது,
மத்திய வேலைவாய்ப்புக் கொள்கை ஒன்றை உருவாக்குவது.
இவையெல்லாம் கோரிக்கைகள் அல்ல, மத்தியரசின் தொழிலாளர் நலத்துறை ஒவ்வொரு ஆண்டும் நடத்தும் இந்தியத் தொழிலாளர் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள்.
மத்திய, மாநில அரசுகள், தொழிற்சங்கங்கள், முதலாளிகள் ஆகியோர் பங்கேற்கும் முத்தரப்பு மாநாடு இது. நாற்பத்தி ஐந்தாவது முத்தரப்பு தொழிலாளர் மாநாடு இந்த ஆண்டு பிப்ரவரி 14,15 ஆகிய நாட்களில் புதுடெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங் துவக்கி வைக்க நடைபெற்றது.
ஆனால் இம்முடிவுகள் அமுலாக்கப்படுமா?
இக்கேள்வியை எழுப்ப வேண்டிய அவசியம் என்ன?
ஏனென்றால் இம்மாநாட்டை துவக்கி வைத்த பிரதமர் மன்மோகன்சிங், தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பது பற்றி கவலைப்படுவதை விட தொழிலாளர் நலச்சட்டங்களால் சில சமயம் இடையூறுகள் ஏற்படுவதாக கற்பனை செய்து புலம்பியிருக்கின்றார்.
எந்த ஒரு தனியார் முதலாளியும் இந்திய சட்டங்களை மதிப்பதில்லை என்பதையும் அப்படிப்பட்டவர்களுக்கு ஆதரவாகவே தனது அரசு செயல்படுகின்றது என்ற உண்மையையும் மறைத்து அவர் பேசியுள்ளார். அது மட்டுமல்ல, தொழிற்சங்கங்களின் கருத்துக்கள் என்னவென்று தெரிந்து கொள்ளக் கூட அவர் தயாராக இல்லை. வந்தோம், புலம்பினோம், புறப்பட்டோம் என்ற ரீதியில்தான் அவரது மன நிலை இருந்துள்ளது.
இந்த முடிவுகளை ஏட்டளவிலேயே வைத்துக் கொள்ளத்தான் மத்தியரசு விரும்பும் என்பதற்கு நிதி நிலை அறிக்கையே ஒரு ஆதாரம். எடுக்கப்பட்ட முடிவுகளை அமுலாக்குவதற்கான கொள்கை அறிவிப்புக்கள் எதுவுமே பட்ஜெட்டில் வரவில்லை. அதற்கான நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை.
ஆனால் அப்படியே காலத்தை ஓட்டி விடலாம் என மத்தியரசு கனவு காண முடியாது. ஏனென்றால் உழைக்கும் மக்களின் கோரிக்கைகளை வென்றெடுப்பது என்ற உறுதியான முடிவில் தொழிற்சங்க இயக்கங்கள் உள்ளன. 28.02.2012 அன்று பத்து கோடி தொழிலாளர்கள் பங்கேற்ற ஒரு நாள் வேலை நிறுத்ததின் மகத்தான வெற்றிதான் அதற்குச்சான்று.
உறுதியான போராட்டங்கள், உழைக்கும் மக்களின் கனவுகளை நனவாக்கும். விரைவாகவே . . . .
Thursday, March 22, 2012
பகத்சிங்கின் சிறைப் போராட்டமும் சில அரிய ஆவணங்களும்.
நூல் அறிமுகம்
நூல் : பகத்சிங்கின் சிறைப் போராட்டமும்
சில அரிய ஆவணங்களும்.
ஆசிரியர் : சமன்லால்
தமிழில் : எஸ்.சம்பத்
வெளியீடு : கீழைக்காற்று வெளியீட்டகம்
சென்னை – 2.
விலை : ரூபாய் 15.00
ஒரு நாயைக் கொல்வதாக இருந்தால் கூட விசாரணை செய்வோம் என்று ஜம்பம் பேசிய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் முகத்திரையை கிழிக்கிறது இந்த சிறிய நூல்.
“ கேளாக் காதினரை கேட்க வைப்பதற்காக “ என்று தொடங்கும் பிரசுரத்தோடு நாடாளுமன்றத்தில் வெடி குண்டு வீசியதற்காக சிறையில் அடைக்கப்பட்ட மாவீரன் பகத்சிங், தனது வழக்கை எதிர் கொள்வதற்காக தனக்குள்ள உரிமைகளை நிலை நாட்ட நீதி மன்றங்களுக்கு எழுதிய 12 கடிதங்களின் தொகுப்பே இந்த நூல்.
அவரது வழக்கறிஞரும் சிறையிலடைக்கப்பட்டதால் புதிய வழக்கறிஞரை தேர்வு செய்ய தனது தந்தையை சந்திக்க அனுமதிக்க வேண்டும், வழக்கறிஞரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்ற கடிதங்கள் அவரால் அனுப்பப்படுகின்றன. எந்த ஒரு கடிதத்திலும் அவர் “ சட்டத்தின்படி எனக்குள்ள உரிமை, அதை காவல்துறையோ, சிறைத்துறையோ பறிக்க அனுமதிக்க முடியாது “ என்ற தொனியே அக்கடிதங்களில் உள்ளதே தவிர, அவர் என்றும் நீதிபதிகளின் கருணையை நாடியதில்லை என்பது நமக்கு எழுச்சியூட்டும் செய்தி.
அப்ரூவராக மாறிய ஒருவர், பகத்சிங் மற்றும் அவரது தோழர்களைப் பற்றி அபாண்டமாக குற்றம் சுமத்திய போது குற்றம் சுமத்தப்பட்ட ஒரு இளைய தோழர் அந்த அப்ரூவர் மீது செருப்பை வீசியெறிகின்றார். இச்செயலை நாங்கள் ஏற்கவில்லை என்று எழுதும் போது பகத்சிங்கின் உயர்ந்த குணம் தெரிய வருகின்றது. நீதிபதிகள் முன்னிலையிலே பகத்சிங்கும் அவரது தோழர்களும் பல முறை தாக்கப்பட்டனர் என்பதும் இந்த நூல் நமக்கு தெரிவிக்கிற ஒரு செய்தி.
தனது நீண்ட, நெடிய ஆயுளில் அஹிம்சையை போதித்த காந்தியடிகள் உண்ணாவிரதம் இருந்த நாட்களை விட இளம் வயதில் தூக்கு மேடையை தழுவிய, பயங்கரவாதி என முத்திரை தரப்பட்ட பகத்சிங் கூடுதல் நாட்கள் உண்ணா விரதம் இருந்துள்ளார் என்பது ஒரு ஆச்சரியமான செய்தி. அவசியம் படிக்க வேண்டிய ஒரு நூல் இது.
( மார்ச் 23 – பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவு நாள் )
Subscribe to:
Posts (Atom)