Sunday, March 31, 2019

காமெடி ஏன் ஜட்ஜய்யா?



பெங்களூர் தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர், பிஞ்சிலே பழுத்த பெண் பித்தர் ஒருவரைப் பற்றி எந்த ஊடகமும்  உண்மையை (அது அவதூறு என்று அவர்களின் அகராதியில் அர்த்தமாம்) சொல்லக் கூடாது என்று தடை உத்தரவு வாங்கி உள்ளார், (அதுவும் வேறு எந்த தரப்பின் கருத்தையும் கேட்காமல்).

அந்த தீர்ப்பில் அந்த ஜட்ஜய்யா மிகுந்த ஆதங்கத்துடன் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.

"இத்தனை நாள் இல்லாமல் தேஜஸ்வி சூர்யா வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்பு அவர் மீது குற்றச்சாட்டுக்களை எழுப்புவது ஏன் என்பது கேள்விக்குரிய கேள்வி"

"நடுராத்திரியில நான் ஏண்டா சுடுகாடு போகனும்?" என்ற வடிவேலு வசனம்தான் நினைவுக்கு வருகிறது.

ஒருவர் ஒரு பிரதான கட்சியின் வேட்பாளர் என்று அறிவிக்கப் பட்ட பின்புதான் அவரது யோக்கியதாம்சங்கள் பொது வெளியில் அலசப்படும்.

அவரை வேட்பாளர் என்று சொல்லி இருக்காவிட்டால் நரி வலம் போனால் என்ன, இடம் போனால் என்ன என்றுதான் இருந்திருப்பார்கள்.

இது உங்களுக்கு புரியலையா ஜட்ஜய்யா?

ஆனால் அந்த "கேள்விக்குரிய கேள்வி' செம காமெடி.

ஆனால் அதெல்லாம் தீர்ப்பில் வேண்டாமே . . .


விஜய் சேதுபதியை தடுமாற வைத்தார்கள்



ஆனாலும் இந்த விகடன் ஆட்களுக்கு ஓவர் குசும்பு!

இப்படியா ஒரு கஷ்டமான கேள்வியைக் கேட்டு விஜய் சேதுபதியை தடுமாற வைப்பது !!!!

காணொளியில் அந்த கஷ்டமான கேள்வியும் உள்ளது. அதற்கு விஜய் சேதுபதி அளித்த சுவாரஸ்யமான பதிலும் உள்ளது.


Saturday, March 30, 2019

திருட்டுப் பசங்களுக்குப் பேச்சைப் பாரு!



கடலை மிட்டாய் முதல் அங்கன்வாடி ஊழியர்களுக்கு போன் வாங்கியது வரை ஊழல் செய்தது பாஜகவின் மஹாராஷ்டிர அமைச்சர் பங்கஜா முண்டே.

வேலை வாய்ப்பு (வியாபம்) ஊழல் பலரின் மர்ம மரணத்திற்கு காரணமாக இருந்தது மத்தியப் பிரதேசம்.

அமித் ஷா மகனும் அஜித் தோவல் மகனும் கோடீஸ்வரனான கதையை ஆராய்ந்தால் மோடி அரசின் நாற்றம் தெரியும்.

விஜய் மல்லய்யா, நீரவ் மோடி, மெகுல் சோஸ்கி போன்ற திருடர்களை வெளி நாட்டுக்கு ஓட வைத்த தூங்குமூஞ்சி சௌக்கிதார் மோடி.

அதிமுக ஊழல் பெருச்சாளிகளோடு கூட்டு வைத்துக் கொண்டுள்ள பாஜக திருடர்கள் பற்றி பேசுகிறது.

யெடீயூரப்பாவை விட, அவரது சிஷ்ய கேடிகளான ரெட்டி சகோதரர்களை விட பெரிய திருடர்கள் உண்டா என்ன?

பெரு முதலாளிகளின் திருட்டை சட்ட பூர்வமாக்கிய திருட்டு அரசு மோடி அரசு.

ரபேல் விமான ஊழல் போதாதா இவர்களின் யோக்கியதையை சொல்ல?

பிக்பாக்கெட் திருடன் தான் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக அவனே "திருடன் திருடன்" என்று கத்திக் கொண்டு முன்னே ஓடுவான்.

அது போல இருக்கிறது இந்த திருடர்களின் பேச்சு !!!!!

விஞ்ஞானி ராஜூவும் வெயில் கொடுமையும்



மதுக்கூர் இராமலிங்கம்

மதுரை நாடாளுமன்றத் தொகுதி யில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் ஆதரவு அதிமுகவினரை கலக்கமடையச் செய்துள்ளது. அதிமுக சார்பில் மதுரை தொகுதிக்கு வேட்பாளரை அறிவிப்பதற்குள்ளேயே அவர்களுக்கு விழி பிதுங்கிவிட்டது. முதலில்தற்போது எம்.பியாக உள்ள கோபால கிருஷ்ணன் பெயரை அறிவித்தார்கள். தன்னுடைய மகனை எப்படியாவது வேட் பாளராக்கி விடவேண்டும் என்பதற்காக அதிமுக அலுவலகத்தில் பாயைப் போட்டு படுத்திருந்த ராஜன் செல்லப்பா ஐந்தாறு நாற்காலியை தூக்கி அடித்து தன்னுடைய ஆத்திரத்தை வெளிப்படுத்தினார். இதனால் பயந்து போனவர்கள், அடுத்த அரை மணிநேரத்தில் வேட்பாளரின் பெயரை மாற்றி வி.வி.ஆர். ராஜ் சத்யன் என அறிவித்தார்கள். அத்துடன் மதுரை மாவட்டத்தை கேக் வெட்டுவது போல மூன்றாக பிரித்து செல்லூர் ராஜூ, ஆர்.வி.உதயகுமார், ராஜன் செல்லப்பா என ஆளுக்கொன்றாக கொடுத்து சமாளித் தார்கள். நல்ல வேளையாக மூன்று கோஷ்டியோடு பிரச்சனை முடிந்தது.

நூறு கோஷ்டி இருந்திருந்தால் மதுரை மாவட்டத்தை சல்லிசல்லியாக பிரித்து மேய்ந்திருப்பார்கள். செல்லூர் ராஜூ தன்னுடைய பரப்புரையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை பற்றி எந்த குற்றச்சாட்டையும் முன்வைக்க முடியாததால் அவர் ஒரு எழுத்தாளராக இருப்பதையே பெரும் குற்றமாக பேசி வருகிறார்.வைகை அணையை தெர்மாகோல் கொண்டு மூட முயன்ற பெரும் விஞ்ஞானி யான செல்லூர் ராஜூ, தன்னைப்போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களும் விஞ்ஞானிகளாக இல்லையே என்று வருத்தப்படுகிறார் போலிருக்கிறது. 


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வேட்பாளர் கிடைக்காததால்தான் ஒரு எழுத்தாளரைப் பிடித்து வேட்பாள ராக்கியிருக்கிறார்கள் என்று கூறியிருக் கிறார் ராஜூ. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் வேட்பாளருக்கு பஞ்சமில்லை. கட்சியில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருமே வேட்பாளராக நிற்பதற்கு முழுத் தகுதி யுள்ளவர்கள்தான். அதுகுறித்து விஞ்ஞானி ராஜூ வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை.

அதிமுக தன்னுடைய கொடியில் பொறித்திருக்கும் அறிஞர் அண்ணாவே பெரும் எழுத்தாளர்தான். அண்ணாவுடன் சேர்த்து கலைஞர், நாவலர், பேராசிரியர்என நூற்றுக்கணக்கான சிந்தனை யாளர்களும், எழுத்தாளர்களும் திமுகவில் இருந்தார்கள். அதிமுகவை துவக்கிய எம்ஜிஆரும், இவர்களால் அம்மா என்றழைக்கப்படும் ஜெயலலிதாவும் கலைத்துறையிலிருந்து வந்தவர்கள்தான். ஆனால் இன்றைக்கு கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார், நரேந்திர மோடியின் பேரன் ராகுல் என்று அரிய கண்டுபிடிப்புகளை வெளியிடும் “மேதைகளால்” நிரம்பி வழிகிறது அதிமுக.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் களப்பணி எதுவும் ஆற்றியதில்லையாம். ஆனால்அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன் அன்றா டம் களப்பணி ஆற்றி களைத்துவிட்டாராம். அவர் இதுவரை ஆற்றிய களப்பணி என்ன என்பதை வேட்புமனுவோடு சேர்த்துஅவர் கொடுத்துள்ள சொத்துப்பட்டியலைப் பார்த்தாலே தெரிந்து கொள்ளமுடியும். அதிமுக வேட்பாளரின் தந்தை ராஜன்செல்லப்பா மதுரை மேயராக இருந்தபோது ஆற்றிய ‘களப்பணியின்’ அருமை பெருமைகளை மதுரையில் கிழிந்து கிடக்கும் சாலைகளையும், பதறிக்கிடக்கும் பாதாளச் சாக்கடைகளையும் கேட்டாலே தெரியும். 

ஆனால் கலை இலக்கியப் பணியோடு சேர்த்து, மக்களுக்கான போராட்டக் களப்பணியில் எப்போதும் முன்னிற்கும் சு.வெங்கடேசனைத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக நிறுத்தி யிருக்கிறது. செல்லூர் ராஜூ வகையறா இப்போதுதான் பிரச்சாரத்தை துவக்கி யிருக்கிறது. வெயிலின் கொடுமை அதிகமாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில், இன்னும் என்னவெல்லாம் பேசுவார்களோ என நினைத்தால் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது.

நன்றி - தீக்கதிர் 27.03.2019



மோடி எப்போ, எப்படி உடைவார்?




ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் அவர்களின் முகநூல் பதிவில் பார்த்த அருமையான கார்ட்டூனை கீழே அளித்துள்ளேன்.

தன்னைத் தானே ஊதிப் பெருக்கிக் கொள்ளும் ஒரு போலிப் பிம்பம்தான் மோடி என்பதை எவ்வளவு அழகாக சொல்லியுள்ளார் அந்த ஓவியர்!!!

பலூன் உடையத்தான் போகிறது. அது எப்போது என்பது முதல் கேள்வி.

மோடியே ஓவராக ஊதி தன்னைத்தானே நொறுக்கிக் கொள்ளப் போகிறாரா

அல்லது

அந்த பிம்பத்தில் உள்ளேயுள்ள காற்றை நாம் அகற்றி விடப் போகிறோமா

என்பதுதான் நம் முன் உள்ள இரண்டாவது கேள்வி


Friday, March 29, 2019

விளக்கமாத்துக்கு தேச பக்தன் பட்டமாம்!


மேலே உள்ள படத்தை ஒரு வாட்ஸப் குழுவில் பார்த்தேன். காலையில்தான் இணையத்தில் இந்த வேட்பாளரைப் பற்றி படித்திருந்தேன்.

காதல் என்ற பெயரில் என்னை ஐந்தாண்டுகள் சீரழித்த கழிசடை என்று ஒரு பெண்மணி பதிவிட்டுள்ளார்.




பெண்கள் மசோதாவைப் பற்றி கேவலமாக பேசியவன். 

இந்து மகாசபை தலைவர் சொன்னதை நேரு சொன்னதாக எழுதி வாங்கிக் கட்டிக் கொண்டவன்.

இருபத்தி எட்டு வயதிலேயே இவ்வளவு கேவலமாக நடந்து கொண்டவன் எம்.பி யானால் என்ன ஆட்டமெல்லாம் போடுவானோ?

"விளக்குமாத்துக்கு பட்டு குஞ்சலமாம்"  என்பார்கள்.

பாஜக வில் "விளக்குமாத்துக்கு தேச பக்தன்" பட்டம் கொடுக்கிறார்கள்.

மோடி கட்சியில் வேட்பாளர்களும் அவரை மாதிரியே டுபாக்கூர் பார்ட்டிகளாகத்தானே இருப்பார்கள்.  

பரிசுப் பெட்டி கொடுத்து பரிசுப் பெட்டி ?????



தேர்தல் ஆணையம் அடிப்படையில் மோடி ஆணையமாக மாறி பல ஆண்டுகள் ஆகி விட்டது.

ஆனால் அவர்கள் மற்ற கட்சிகளுக்கும் அவர்கள் உதவக் கூடிய நல்ல மனது கொண்டவர்கள் என்பதன் அடையாளமாக டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க கட்சி வேட்பாளர்களுக்கு பொதுச்சின்னமாக “பரிசுப் பெட்டி” அளித்துள்ளது.

எவ்வளவு பொருத்தமான சின்னம்!

பரிசுப் பெட்டிகள் எந்த வடிவிலும் இருக்கலாம்!
பரிசுப் பெட்டிக்குள் எந்த விதமான பரிசும் இருக்கலாம்!
பரிசுப் பெட்டிகளின் அளவு மாறுபடலாம்!
பரிசுப் பெட்டிகளின் மதிப்பு மாறுபடலாம்!
பரிசுப் பெட்டிகளுக்குள் காந்தி நோட்டுக்களையும் வைக்கலாம்.

ஆக வெரைட்டி, வெரைட்டியாக யோசித்து பரிசைக் கொடுப்பதற்கு வசதியான சின்னத்தை கொடுத்துள்ளார்கள்.

பரிசுப் பெட்டியை பெற்றுக் கொண்டு பரிசுப் பெட்டியை அளித்திருப்பார்களோ?




நள்ளிரவுக் கொலை புதிதல்ல . . .


கோவாவில் சட்டமன்றத்தேர்தல் முடிவுகள் வந்த போது பெரும்பான்மைக் கட்சியாக காங்கிரஸ் வந்தது. பாஜகவிற்கு அதை விட எண்ணிக்கை குறைவு.

 உதிரி கட்சிகள், சுயேட்சைகளை விலைக்கு வாங்கி ஆளுனரின் உதவியோடு பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிகரை கோவாவிற்கு மீண்டும் வரவழைத்து அங்கே ஆட்சிக்கு வந்தது பாஜக.

மனோகர் பாரிகர் இறந்து போன அன்றே புதிய முதல்வராக பிரமோத் சவந்த் என்பவரை பதவியேற்க வைக்கிறார்கள். தலா மூன்று எம்.எல்.ஏ க்கள் வைத்துள்ள இரண்டு கூட்டணிக் கட்சிகளுக்கு துணை முதல்வர் பதவி தருகிறார்கள்.

அதில் ஒருவர் எம்.ஜி.பி கட்சியைச் சேர்ந்த ராமகிருஷ்ண டாவலிகர் என்பவர். அவரது சகோதரர்தான் அந்த கட்சியின் தலைவர். ஒரு இடைத் தேர்தலில் நிற்க சீட் கேட்கிறார். ஏற்கனவே பெரும்பான்மை இல்லாத பாஜக கடுப்பாகி விட்டது. 

உன்னுடைய ஆதரவோடு ஒன்றும் எங்களுக்கு ஆட்சி அவசியமில்லை என்று கோபமாக கூறி விட்டது.

புதிய முதலமைச்சர் ராஜினாமா செய்து விடுவார் என்று எதிர்பார்த்தீர்களா என்ன?

அவ்வளவு சொரணையெல்லாம் பாஜகவிற்கு இருக்கிறதா என்ன?

மூன்று எம்.எல்.ஏ க்கள் கொண்ட எம்.ஜி.பி கட்சியில் டாவாலிகர் தவிர மீதமுள்ள இரண்டு எம்.எல்.ஏ க்களை பாஜகவிற்கு கட்சி மாற வைத்து விட்டது. மூன்று பேரில் இரண்டு பேர் குரங்கு போல தாவினால் கட்சித்தாவல் தடைச்சட்டம் எல்லாம் செல்லாது.

டாவாலிகரின் துணை முதல்வர், அமைச்சர் பதவி எல்லாம் பறிக்கப்பட்டு விட்டது.

பாஜகவிற்கு வந்து சேர்ந்த இரண்டு பேரும் மந்திரியாகி விட்டார்கள். அதிலே மனோகர் அஸ்கானோகர் என்பவருக்கு துணை முதல்வர் பதவியும் கொடுத்து விட்டார்கள்.

இந்த குரங்கு தாவலை பலரும் கோவா நள்ளிரவுக் கொள்ளை என்று அழைக்கிறார்கள்.

ஜனநாயகத்தை,
கூட்டணி தர்மத்தை,
நம்பிக்கையை

கொலை செய்த நிகழ்வு இது.

அதனால் 

கோவா நள்ளிரவுக் கொலை என்பதுதான் 
பொருத்தமான தலைப்பாக இருக்க வேண்டும்.

அதே போல பாஜகவிற்கும் இது போன்ற 
நள்ளிரவுக் கொலைகள் ஒன்றும் புதிதல்ல . . .


Thursday, March 28, 2019

மோடி வேணாம் - குழந்தையே சொல்லுது



சூப்பரான வீடியோ
நீங்களும் மோடிக்கு ஓட்டு போடாதீங்க


மோடிக்கு இதுவே போதும்

மோடியின் லேட்டஸ்ட் நாடகத்தைப் பற்றி பத்தி பத்தியாக எல்லாம் எழுதப் போவதில்லை.

கீழே உள்ள படங்களே போதும்.






சங்கிகள் யாராவது பொங்க வேண்டும் என்று விரும்பினால் கடைசி படத்தை பார்த்து விட்டு பொங்கவும். 

ஒரு வேளை ரோஷப்பட்டு (அதெல்லாம் சங்கிகளுக்கு வராது) ஏதாவது செய்து கொண்டால் அதற்கு கம்பெனி பொறுப்பு கிடையாது. 

Wednesday, March 27, 2019

டி.எம்.எஸ் ஸும் அவரே, பி.சுசீலாவும் அவரே




கடந்த சனி, ஞாயிறு ஒரு குடும்பப் பயணமாக வெளியூர் சென்றிருந்தேன். ஞாயிறு மாலை நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு அருகிலிருந்த ஒரு சிறிய உணவகத்திற்கு காபி குடிக்கப் போயிருந்தேன். அந்த வேளையில் என்னைத் தவிர வேறு வாடிக்கையாளர்கள் யாரும் இல்லை.

காபிக்காக காத்திருந்த வேளையில்  முன்னே இருந்த டேபிளிலிருந்து ஒரு பெண் குரலில் ஒரு பாடல் ஒலித்தது.  எந்த பெண்ணுமே இங்கே இல்லையே என்ற யோசனையோடு பார்த்தால் அடுத்து ஆண் குரலும் ஒலிக்கத் தொடங்கியது.

நடிகர் திலகம் நடித்த “ரோஜாவின் ராஜா” படத்தில் வரும் “அலங்காரம் கலையாத சிலையொன்று கண்டேன்” பாடல் அது. டி.எம்.எஸ் குரல் மற்றும் பி.சுசீலா குரல் இரண்டையுமே பாடிய அவர் அந்த உணவகத்தின் உணவு பறிமாறும் ஊழியர். இரண்டு குரல்களிலுமே ரொம்பவுமே அற்புதமாக பாடினார்.

பாடலை முழுதுமாகக் கேட்டு விட்டு அவரை பாராட்டினேன். முன்னொரு காலத்தில் மேடைக் கச்சேரிகளில் பாடியதாகவும் இப்போது கச்சேரிகளும் கிடையாது, இருக்கும் கச்சேரிகளிலும் பழைய பாடல்கள் பாடுபவர்களுக்கு வாய்ப்பும் கிடையாது என்பதால் இந்த வேலைக்கு வந்து விட்டதாகக் கூறினார்.

ஹோட்டலில் ஆட்கள் இல்லாத போது பாடுவது வழக்கம் என்றும் சொன்னார்.

அவரைப் பாராட்டி ஒரு சிறிய தொகை கொடுத்த போது வாங்கிக் கொள்ள மறுத்து விட்டார்.

“ஹோட்டலுக்கு வரவங்க கிட்ட பாடிக் காண்பிச்சு காசு வாங்கிக்கறான் என்று கூட இருக்கறவங்களே முதலாளி கிட்ட போட்டுக் கொடுத்துடுவாங்க சார்”

அதுவும் சரிதானே!

எட்டப்பர்கள் சூழ் உலகல்லவா இது!

அந்த பாடலை இன்னொரு முறை கேட்க வேண்டும் என்று தோன்றியது. நான் கேட்டேன். உங்களுக்காக அப்பாடலின் இணைப்பையும் இங்கே அளித்துள்ளேன்.


நேற்று “காதல் ராஜ்ஜியம் எனது’ பற்றிய பதிவை பகிர்ந்து கொண்டிருந்தேன். அப்பாடல் போலவே இதுவும் “மெல்லிசை மன்னர், கவியரசு, டி.எம்.எஸ் மற்றும் பி.சுசீலா” கூட்டணியில் வந்த நடிகர் திலகத்தின் படப்பாடல்.  நேரம் கிடைக்கும் போது இந்த ஐவர் காம்பினேஷன் பாடல்களை தேடி பகிர்ந்து கொள்கிறேன்.



மானங்கெட்ட பாஜகவினர் தூக்கில் தொங்குவார்களா?




வாட்ஸப்பில் ஒரு செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது.

கிறிஸ்துவர்களும் முஸ்லீம்களும் முடிவு செய்து விட்டார்கள். அவர்கள் மோடிக்கு வாக்களிக்க மாட்டார்கள். இந்துக்களே நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்று தொடங்கி அப்பட்டமாக மத வெறியை கிளப்புகிற செய்தி அது.  இதனை தயாரித்ததும் பரப்புவதும் பாஜக வின் கீழ்த்தரமான உத்தி.

வெறுப்பரசியல் என்பதற்கு அந்த செய்தியைக் காட்டிலும் வேறு உதாரணம் தேவையில்லை.

ஒரு புறத்தில் முஸ்லீம்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கு எதிராக நச்சைக் கக்கிக் கொண்டு இன்னொரு புறம் என்ன செய்கிறார்கள் என்பதை கீழே உள்ள புகைப்படங்கள் உணர்த்துகின்றன.






வாயைத் திறந்தாலே ஜிஹாதிகள் என்றும் பாவாடைகள் என்றும் கண்டபடி பேசிக் கொண்டு இப்போது ஓட்டுக்காக அவர்களிடமே போய் நிற்கிற பாஜகவினரை மானங்கெட்டவர்கள் என்று சொல்லாமல் வேறெப்படி அழைப்பது?

ஒரு பக்கம் சிறுபான்மை மக்களை இழிவு படுத்திக் கொண்டு, அவர்களுக்கு எதிராக விஷப் பிரச்சாரம் செய்து கொண்டு அதே நேரம் வோட்டுக்காக அவர்கள் காலிலே விழுந்து கொண்டிருக்கிறார்கள்.

நான் மேலே குறிப்பிட்ட செய்தியை தயாரித்த, பரப்பிய பாஜக ஆட்கள் தங்கள் தலைவர்கள் செய்ததைப் பார்த்து ரோஷப்பட்டு தூக்கில் தொங்குவார்களா?

அதெப்படி செய்வார்கள்?

அவர்களும் மானங்கெட்ட பிறவிகள்தானே!!!!

அனிதாவை மறந்திடலாமோ????. . .

கொலையுண்டவர்களின் குரல் கேளீர் என்ற பதிவுகளின் தொடர்ச்சி இது.

மோடியை வீழ்த்த வேண்டிய அவசியத்தை அவர்கள் தமிழகத்திலும் உருவாக்கி உள்ளார்கள் என்பதற்கான பதிவுகள் தொடர்ந்து வரும்.

வாக்களிக்கும் முன்பாக நாம் மறக்க முடியாத பெயர் அனிதா


Tuesday, March 26, 2019

இதுதான்யா ரசனை

சூடான தேர்தல் பதிவுகளுக்கு மத்தியில் ஒரு சின்ன இளைப்பாறல்.

மதுரைத் தோழர் சுப்பாராவ் பகிர்ந்து கொண்டதை நானும் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

என்ன ரசனையாக பாடலை ஆராய்ந்துள்ளார். எழுதியவர் யாரோ, அவருக்கு வாழ்த்துக்கள். 

பாடலின் இணைப்பும் கீழே உள்ளது. 





காதல் ராஜ்ஜியம் எனது"....1975 இல் வெளி வந்த 'மன்னவன் வந்தானடி' திரைப்படப் பாடல்...நடிகர் திலகம்..மஞ்சுளா....கனவுப் பாடல் என்று ஞாபகம்...கவியரசரின் கவிநயம் சொட்டும் அமுதப் பாடல்..ஏழிசை வேந்தன்,இசையரசியின் குரலில்...மெல்லிசை மன்னரின் இசையில்......

ஒரு கதை எழுதும் முன் முதலில் குறிப்பு வரைந்து கொள்வது போல ஒரு பாடல் இசையமைக்கும் முன் அந்த இசைக் கோர்ப்பின் ஒரு திட்டத்தை மெல்லிசை மன்னர் அமைக்கும் அழகே அவர் பாடலின் வெற்றிக்கு ஒரு முன்னோட்டம்...வாத்தியங்களின் தேர்வு,அதை வரிசைப் படுத்தி வகுக்கும் பாங்கு,மன்னர் மன்னர்தான் என்று சொல்லி விடும்.கோரஸ் அமைப்பு அது ஒரு தனி சிறப்பு...இந்தப் பாடலில் அந்த 'அரேன்ஜ்மென்ட்'....ஆஹா....


பாடல் காட்சியில் நடிகர் திலகம் குதிரை மேல் ராஜ அலங்காரத்தில்....மஞ்சுளா ஆடிக் கொண்டு பாடி வருவது....
கவியரசரின் வரியலங்காரம் சொல்ல என்னைப் போல் சாமான்யர்களுக்கு அறிவு போறாது...


"காதல் ராஜ்ஜியம் எனது அங்கு
காவல் ராஜ்ஜியம் உனது இது
மன்னன் மாடத்து நிலவு இதில்
மாலை நாடகம் எழுது......"


பாடல் ஆரம்பம் குதிரைக் குளம்பொலியுடன் கன கம்பீரமாய்....
ஒரு குடம் தேனைக் குடுவையுடன் கவிழ்த்தது போல சுசீலாம்மா இனிமையைக் கொட்டித் தீர்த்து விடுவார் பல்லவியில் ....காதல்.....இந்த சொல்லை இத்தனை இனிமையாக வேறு யாராலும் சொல்ல முடியாது....அத்தனை அழகுடன்....காவல் ராஜ்ஜியம் உனது....இங்கு ஒரு தொகுதி பங்கீடு...இது மன்னனின் மாட மாகிய அந்தப்புரம்.....அதில் மாலை நாடகம் எழுது...சிருங்காரம்....அஹிம்சையாய் .......கா...வ..ல் ....அந்த நெடில் 


சங்கதி....அபாரம்...மன்ன....ன்.......அழுத்தம்....மாலை....மா.....லை நாடகம்.....அந்த மாலை சங்கதிக்கு ஒரு முத்துமாலை பரிசளிக்கணும்...குதிரை குளம்பு ரிதத்துடன் லீட் வயலின்.......
டி.எம்.ஸ் தொடங்கும் முன் வரும் அந்த குழல் பாடலின் மொத்த எழில்...


'கண்ணான கண்மணி வனப்பு
கல்யாணப் பந்தலின் அமைப்பு
தேவதேவியின் திருமேனி
மஞ்சள் கொண்டாடும் மாணிக்க சிவப்பு.....'


கண்மணி வனப்பு.....அந்த வனப்புக்கு தன் கணீர் குரலில் அவர் சேர்க்கும் செழிப்பு...
கல்....யாண ....இங்கு ஒரு நெடில்...பந்தலின் அமைப்பைப் பாடியே சித்திரமாகக் காட்டி விடுவார்...
மணமக்களின் திருமேனி மஞ்சள் மின்னும் தகதக சிகப்பு......மாணிக்கம் போல் சிவப்பாக மின்னுகிறதாம்....மணமக்களின் அலங்காரம் ....அழகுசாதன நிலையத்திற்குப் போகாத இயற்கை வனப்பை கவியரசரின் தமிழ் அரைத்துப் பூசிப் பூரிப்பாக்கியிருக்கும்...


இங்கு லீட் கிடார்........அற்புதம்..
பிஜிஎம்மில் வயலின்,சிதார்,தபலா ...தொடரும் குழல்.....இந்த அரேன்ஜ்மென்ன்டுக்கே ஒரு 10 தோலா தங்கம் மெல்லிசை மன்னருக்கு கொடுக்கணும்....


'திங்கள் ஒரு கண்ணில் குளிர் தென்றல் மறு கண்ணில்
தாலாட்டும் பெண்மை இது.....இது சுசீலாம்மா.....
குளுமையைக் கொட்டும் கண்கள்....அதுவும் எப்படிப் பட்ட குளுமை....
ஒரு கண்ணில் நிலவு...மறு கண்ணில் குளிர் தென்றல் .....அந்தக் குளுமையோடு
தாலாட்டும் பெண்மையாம் அவள்....
வரிகளைக் கேட்கும் போதே தண்மையை இப்படி தன்மையாய் இவரால் மட்டுமே கொட்ட முடியும்...


டி.எம்.எஸ்..."வைகை மலர்ப் பொய்கையென மங்கை மணிச் செங்கை நீராட்டும் நேரம் இது '.......வைகை மலர்.....இது மேல் ஸ்தாயியில்.....என்ன ஒரு சுருதி சுத்தம்.....நீ....ராட்டும்......நெடில்.....
இதைத் தொடரும் 'ஆ ஆ ஆ ஆ '...சுசீலாம்மா...ஆஹா ஆஹா.....
இதுவரை தொடரும் ரிதம் டோலக்....


அடுத்த வரிகளில் டிரம்சை தடவிக் கொடுக்கும் அந்த ப்ரஷ்.....


"தென்பாண்டித் தேவனின் அணைப்பு
குற்றாலத் தென்றலின் நினைப்பு
ராஸ லீலைகள் இதுதானோ?உள்ளம் கொள்ளாத ஆனந்த தவிப்பு.....


தென்பாண்டித் தேவன்....(கவியரசருக்கு இந்தப் பாண்டியன் மேலும்..மீனாளின் மேலும் உள்ள ஒரு நெருக்கம்)ஆடவனின் அணைப்பின் தன்மை குற்றாலச் சாரலை நினைவுறு த்துகிறதாம்...இராசலீலையைக் கூட இவ்வளவு கண்ணியமாகக் கவியரசரால் மட்டுமே சொல்ல முடியும்.....ஆனந்தத் தவிப்பு......என்ன ஒரு சொல்லாடல் அது ...சிலிர்க்கிறது...


வயலின்,தபலா,குழல் தொடர அடுத்த சரணம்....


"கொஞ்சும் தமிழ் மூன்றும் தரும் சந்தம் அதில் தோன்றும்
தானாகப் பாடல் வரும்....
தத்தும் கிளி நித்தம் மணி முத்தம் இடும் சத்தம்
தேனாகக் காதில் விழும்..."


மூன்று தமிழ் சந்தம் தர பாடல் தானாக வரும்...
தத்தும் கிளி...இடும் மணி முத்தம் தேனாக காதில் விழும்.....
தமிழ்....அதன் இனிமையைப் பற்றிப் பேசினால் போதுமா.....வார்த்தைகள் இப்படி சந்தமாக வந்து விழணும் ....தத்தும்....முத்தம்....நித்தம்......இதுதான் கவியரசர்.....


"சிங்காரப் பொன்மகள் சிரிப்பு 

சங்கீத வீணையின் படைப்பு..
அழகு தேவதை அலங்காரம் கம்பன் சொல்லாத காவியச் சிறப்பு.......(காதல்)


சிங்காரப் பொன்மகள் சிரிப்பு....டி.எம்.எஸ்ஸின் ஆண்மையான கம்பீரம்...
சங்கீத வீணையின் படைப்பு...சுசீலாம்மாவின் மென்மையான சிருங்காரம்......
அழகு தேவதையின் அலங்காரம்....(மஞ்சுளா மிகவும் அழகாக இருப்பார் காட்சியில்)...கம்பனால் கூட யூகித்து வர்ணிக்க இயலாதாம்.....கற்பனையின் ஊற்று கவியரசர்.....


காதல் ராஜ்ஜியம்....பட்டும் படாமல் பாடி இருக்கும் நயம்....
மன்னன் மாடத்து நி...ல..வு...மாலை....அந்த சங்கதி...சொல்லும் ஓராயிரம் சங்கதி....
பாடல் முழுவதும் கவியரசர் தமிழால் மெழுக.....மன்னர் இசையால் அழகு சேர்த்திருப்பார்.....மன்னர் மன்னர்தான்......


அதிலும் கவி மகா சக்ரவர்த்தியுடன் சேர்ந்து விட்டால் மன்னாதி மன்னன்....பிருந்தாவன சாரங்க ராஜாங்கம்....................பாடல் உங்களுடன்

பாடலின் இணைப்பு இங்கே

மோடி சினிமாவிலும் மோசடி



நரேந்திர மோடி பற்றி ஒரு சினிமா வரப் போகிறது. அதன் ட்ரெய்லர் பார்க்கிற போதே மிகவும் கொடுமையாக இருந்தது. ஐந்தாண்டுகளாக அனுபவிக்கும் கொடுமையை மூன்று மணி  நேர கொடுமையாக சுருக்கி தரப் போகிறார்கள் போல.

அது ஒரு புறம் இருக்கட்டும். பாஜக ஆட்களைத்தவிர வேறு யாரும் அந்த படத்தை தியேட்டருக்குப் போய் பார்க்கப் போவதில்லை. 

இந்த பதிவு அதைப் பற்றியதல்ல

அந்த  திரைப்படத்தின் விளம்பரத்தில் பாடலாசிரியர்கள் என்பதில் பிரபல இந்தி பாடலாசிரியர் திரு ஜாவேத் அக்தர் பெயர் இடம் பெற்றுள்ளது.  மோடி ஆட்சியை கடுமையாக விமர்சித்து செயல்பட்டு வருபவர் அவர்.  தான் அந்த படத்திற்கு எந்த பாடலும் எழுதாத போது விளம்பரத்தில் தன் பெயரை இணைத்ததை அவர் கண்டித்துள்ளார்.

ஆனால் படக்குழு மோடியைப் போலவே கள்ள மௌனம் சாதிக்கிறது.




மோடியைப் போலவே மோடியைப் பற்றி படமெடுப்பவர்களும் மோசடிப் பேர்வழிகள்தான் போல.

இரண்டு மோசடிகள் இதில் உள்ளது.

பாடலெழுதாத ஒருவரின் பெயரை விளம்பரத்தில் சேர்த்தது முதல் மோசடி.

மோடியை விமர்சிக்கிற ஒருவர் காசுக்காக மோடி பற்றிய படத்தில் பாட்டு எழுதியுள்ளார் என்ற தோற்றத்தை உருவாக்குவது இரண்டாவது மோசடி.

மோடி = மோசடி

Monday, March 25, 2019

நிரந்தரமாக நீக்குங்கள் ஸ்டாலின்




ராதாரவியின் உரையைக் கேட்டேன். மிகவும் கேவலமான சிந்தனை உள்ளவர் என்று மீண்டும் ஒரு முறை நிரூபணமாகி உள்ளது. 

திரையில் மட்டுமல்ல, நிஜமான வாழ்க்கையிலும் ஒரு வில்லன், பெண்களை இழிவு படுத்தும் பேர்வழி என்பது நன்றாகவே தெரிகிறது.

இப்போது மோடி எப்படி மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளை இழிவு படுத்திப் பேசினாரோ, அதே இழிவை ஒரு வருடம் முன்பு செய்தவர்தான் ராதாரவி.

இப்போது ராதாரவியை திமுக கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்துள்ளது. இது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் இது போதுமானதல்ல.

இந்த பிரச்சினையில் ராதாரவியைக் கண்டித்த திரைக் கலைஞர் தோழர் ரோகியை ட்ப்பிங் யூனியனிலிருந்து நீக்கி உள்ளார் ராதாரவி. 

ஆக அவருடைய ஆணவம் மாறப் போவதில்லை. இது போன்றவர்கள் இருப்பதனால் திமுக விற்கு எந்த ஆதாயமும் கிடைக்கப் போவதில்லை. இவர் பேச்சைக் கேட்டு மக்கள் கடுப்படைவதற்கான வாய்ப்பு வேண்டுமானால் வரலாம்.

ஆகவே ராதாரவியை திமுக விலிருந்து நிரந்தரமாக நீக்கி விடுங்கள் திரு ஸ்டாலின்.

பிகு: ராதாரவியின் அந்த ஆபாசப் பேச்சிற்கு சில ஜென்மங்கள் கை தட்டியுள்ளதே, அவர்கள் எப்படிப்பட்ட ஆசாமிகளாக இருப்பார்கள்?


Friday, March 22, 2019

தொடரும் "கொ.கு"


மேலும் சில “கொலையுண்டவர்  குரல்கள் . . .

நான் ஜுனாய்த் கான் – வயது 15
ஓடும் ரயிலில் ஒரு கும்பலால் என் மதத்தின் காரணமாக கொல்லப்பட்டவன்



நான் ஆஃசிபா பானு – நாடோடி இனத்தைச் சேர்ந்த எட்டு வயதுப் பெண்

எங்கள் ஆட்களுக்கு தக்க பாடம் கற்பிக்கப்பட கூட்டு பாலியல் வன் புணர்வுக்கு உள்ளாகி முதுகெலும்பு நொறுக்கப்பட்டு கொல்லப்பட்டவள்



நான் நரேந்திர தபோல்கர் – எழுத்தாளர் – செயற்பாட்டாளர் – 67 வயது
மூட நம்பிக்கைகளுக்கு எதிராக இருந்ததால் சுட்டுக் கொல்லப்பட்டவன்



நான் எம்.எம்.கல்புர்கி – அறிஞர் – வயது 76
ஹிந்துத்துவாவிற்கும்  மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பேசியதால் சுட்டுக் கொல்லப்ட்டவன்



நான்  கோவிந்த் பன்சாரே – எழுத்தாளர் – செயற்பாட்டாளர் –வயது 81
இந்துத்துவாவிற்கு எதிராக எழுதியதால் சுட்டுக் கொல்லப்பட்டவன்



நான் கௌரி லங்கேஷ் – பத்திரிக்கையாளர் – வயது 55
ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக விற்கு எதிராக எழுதியதால் சுட்டுக் கொல்லப்பட்டவள்.



இரண்டு பதிவையும் படித்து விட்டும் மோடிக்கும் பாஜகவிற்கும் ஒட்டு போட வேண்டும் என்று நினைப்பவர்கள் யாராவது இருந்தால் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

இந்தியாவை விட்டுட்டு எங்கேயாவது ஓடிருங்க, உண்மையான தேச விரோதிகள் நீங்கள்தான்.

கொலையுண்டவர் குரல் கேளீர் . . .


ஒரு மேற்கு வங்கத் தோழரின் முக நூலிலிருந்து எடுக்கப்பட்டது.

மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்கு முன்பாக இவர்களை எல்லாம் மறவாதீர்.

நான் ஷேக் நயீம் – கால்நடை வியாபாரி- வயது 35
நானும் எனது மூன்று நண்பர்களும் ஜார்கண்டில் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டோம்.


நான் ஜெயேஷ் சோலங்கி – தலித் – வயது 21
ஆதிக்க சாதியினரின் திருவிழாவை வேடிக்கை பார்த்ததால் அடித்துக் கொல்லப்பட்டவன்



 நான் பெஹ்லு கான் - கால்நடை விவசாயி – வயது 55
மாடுகளை கடத்துவதாகச் சொல்லி மாட்டுக் குண்டர்களால் கொல்லப்பட்டவன்



நான் முகமது அக்லக் – விவசாயக் கூலி வயது 52
மாட்டிறைச்சி வைத்திருந்தேன் என்று குற்றம் சாட்டப்பட்டு கொல்லப் பட்டவன்.



நான் பிரதீப் ராதோட் – தலித் – விவசாயி- வயது 21
குதிரை வாங்கி ஓட்டியதற்காக கொல்லப்பட்டவன்



நான் முகமது அஃப்ரசுல் - புலம் பெயர் தொழிலாளி – வயது 48
லவ் ஜிஹாத் என்ற பெயரில் கொல்லப்பட்டவன்



பதிவு தொடரும் . . . .