Tuesday, January 31, 2012

உடுப்பி கிருஷ்ணா, உன் சந்நிதியில் இப்படி ஒரு அராஜகமா?

இரண்டு  தினங்கள் முன்பாக கர்நாடக மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கட்சி
ஆர்ப்பாட்டம், பேரணி நடத்தியது. மூவாயிரம் பேர் அதிலே பங்கேற்று 
கைதானார்கள்.

போராட்டத்திற்கான காரணம் என்ன?
புகழ் பெற்ற  உடுப்பி கிருஷ்ணர் கோயிலில் நடக்கின்ற இரு மோசமான
நடைமுறைகளை தடுத்து நிறுத்த வேண்டும்  என்பதுதான்  அந்த
போராட்டத்தின் நோக்கம்.

அப்படி என்ன மோசமான நடைமுறைகள்?

ஒன்று கோயிலில் நடைபெறும் அன்ன தானத்தில் உயர் ஜாதியினருக்கும்
மற்ற ஜாதியினருக்கும் தனித்தனியாக பந்திகள் போடப்படுகின்றன.

இரண்டாவது உயர் ஜாதியினர் சாப்பிட்ட எச்சில் இலைகளில் மற்ற
ஒடுக்கப் பட்ட மக்கள்  அங்கப் பிரதட்சிணமாக  உருள வேண்டுமாம்.

இதைக் கேட்கவே அருவெறுப்பாக  உள்ளது. ஆனால் இதனை 
பாஜக அமைச்சர் ஆசார்யா  நியாயப்படுத்தியுள்ளார். அப்படி செய்தால்
சரும வியாதிகள் குணமாகும் என்று நம்பிக்கை உள்ளதாம். இது
ஒரு அமைச்சர் பேசும் பேச்சு!

அப்படி என்றால் உயர்சாதிக்காரர்களும்  எச்சில் இலைகளில் 
புரள்வார்களா?  அவர்களின் எச்சில் இலைகள் என்ன மூலிகை
இலைகளா?

உடுப்பி மடாதிபதி  பந்தி தனித்தனியாக நடத்துவது தவறுதான்,
ஆனால் உயர் ஜாதிக்காரர்கள் பிடிவாதம் பிடிக்கிறார்களே 
என்று புலம்புகின்றார்.

அரசு எதுவும் செய்யாது. மடாதிபதி புலம்புகின்றார். அப்போது
என்ன வழி?

ஒன்று உடுப்பி கிருஷ்ணன் இது தவறு என தனது பக்தர்களுக்கு
போதிக்க வேண்டும். இது நடக்காது.

ஒடுக்கப் பட்ட மக்கள் உடுப்பி கிருஷ்ணன் கோயிலை 
புறக்கணிக்க வேண்டும். அதுதான் தீர்வு!
 
  
 

Monday, January 30, 2012

கேரளா மீது ஏன் இந்த கொலை வெறி?



இவையெல்லாம்  கேரளாவில் மட்டும்தான் நடக்கும் 
என்று அழுத்தமாக சொல்லி மின் அஞ்சலில் எனக்கு
மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருக்கும் புகைப்படங்கள்
கீழே உள்ளவை







   இந்த அபத்தங்கள், விதி மீறல்கள், இலக்கிய, இலக்கண எழுத்துப் பிழைகள்  எல்லோருக்கும் பொதுவானவை.

அப்படி இருந்தும் கேரளா மீது ஏன் இந்த கொலை வெறி

Sunday, January 29, 2012

எப்படி இருந்த" நீயா நானா" இப்படி ஆயிடுச்சே?



எத்தனையோ  பயனுள்ள  பொருட்கள் மீது விவாதம் நடத்திக்
கொண்டிருந்த  விஜய் டி.வி  இப்போது  காலை உணவு இட்லியா
அல்லது வேறு ஏதாவது உணவா  என்று  இப்போது விவாதம்
நடத்திக் கொண்டிருக்கிறது.

விவாதிக்க எத்தனையோ விஷயங்கள் இப்போதும் உள்ளது.
ஆனாலும்  இட்லி, தோசை, பொங்கல் என்று விவாதிக்கும்
போது

வேறு என்ன சொல்வது ?

எப்படி இருந்த " நீயா, நானா இப்படி ஆயிடுச்சே "

நேற்று ஜெய்ப்பூர், இன்று பூனா, நாளை அயோக்கியத்தனம் எங்கே நடக்கப் போகிறது?


இஸ்லாமிய அடிப்படைவாதிகள்  ஜெய்ப்பூரில் சல்மான் ருஷ்டீயை
வரவிடாமல் தடுத்து விட்டார்கள்.  காஷ்மீர் பற்றிய ஆவணப் படத்தை
பூனா வில்  வெளியிட விடாமல்  இந்து அடிப்படைவாதிகள்  தடுத்து
விட்டார்கள்.

இது ஒரு அபாயகரமான போக்கு.

இது அனுமதிக்கப்பட்டால்  நாளை யாரும் வாய் திறக்க முடியாத
மோசமான சூழல் உருவாகும். அடிப்படைவாதிகள் கையில் 
கருத்துசுதந்திரம் சிறைப்பட்டு விடும்.

இதனை நாம் அனுமதிக்க முடியாது.

அனைவரும் குரல் எழுப்புவோம்

Saturday, January 28, 2012

சாத்தானின் வரிகளுக்கு சொந்தக்காரனை கொண்டாடுவது அடிமைத்தனமா?

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி திரு மார்கண்டேய கட்ஜூ 
வாய் திறந்தாலே  வெடி குண்டுதான் போலிருக்கிறது.
சல்மான் ருஷ்டி  அப்படி ஒன்றும்  மிகச்சிறந்த எழுத்தாளர்
கிடையாது. லண்டனிலோ, நியுயார்க்கிலோ  வசிப்பவராக
இருந்தால் கொண்டாடுவது  என்பது  இந்தியர்களின்  ரத்தத்தில்
இன்னமும் ஊறியிருக்கும் அடிமை புத்தி என்று வெடிக்கிறார் அவர்.

அவர் சொல்லியுள்ள குணாம்சம் இந்தியர்களுக்கு உண்டு என்பது
உண்மைதான். 

சல்மான் ருஷ்டி யின் எழுத்துக்கள் எந்த வகை?

படித்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன் . . . 
 

தோட்டாக்களுக்கு உயிரே பரிசாய்





இந்தியாவில்  மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமையை பாதுகாக்க
தோட்டாக்களுக்கு தனது உயிரையே பரிசளித்த மகாத்மாவின் 
நினைவு நாளை மத நல்லிணக்க பாதுகாப்பு தினமாக அனுசரிப்பது
என்று  எங்கள் வேலூர் கோட்டத்தில் முடிவெடுத்தோம். 
அத்தனை பேருக்கும் செல்ல வேண்டிய செய்தி அல்லவா, அதனால்
எங்கள் சுற்றறிக்கை  உங்கள் பார்வைக்கு

 
காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்
வேலூர் கோட்டம், பதிவு எண் 640/ என்.ஏ.டி
சுற்றறிக்கை எண் 9/12                            27.01.2012
அனைத்து  உறுப்பினர்களுக்கும்
அன்பார்ந்த தோழர்களே,

ஜனவரி முப்பது அன்று மத நல்லிணக்க பாதுகாப்பு தினம் அனுசரிப்போம்

ஜனவரி முப்பது – இந்திய விடுதலைப் போராட்டத்தின் முக்கியத் தலைவர் மகாத்மா காந்தி அவர்களின் நினைவு நாள். இந்துக்களும் முஸ்லீம்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று பாடுபட்டதற்காக துப்பாக்கிக் குண்டுகளை பரிசாகப் பெற்றவர். மத வெறியர்களால் அவரது உயிர் பறிக்கப்பட்டது. அவரது மரணத்தையும் மதக் கலவரமாக மாற்ற வேண்டும் என்பதால் அவர் உயிரைப் பறிக்க துப்பாக்கியோடு புறப்பட்ட நாதுராம் கோட்சே வின் கையிலே இஸ்மாயில் என்று பச்சை குத்தி அனுப்பினார்கள் அடிப்படைவாதிகள்.

அவர்களின் தீய முயற்சிகள் இன்னும் ஓயவில்லை. ஆட்சியைப் பிடிக்க ரத்த யாத்திரை புறப்பட்டார்கள், கடப்பாறை பயணம் மேற்கொண்டு மசூதியை இடித்தார்கள். அன்று அவர்கள் பற்ற வைத்த தீ இன்னும் அணையவில்லை. வினை, எதிர் வினை என்று கலவரங்கள், குண்டு வெடிப்புக்கள் என தேசம் பல மோசமான நிகழ்வுகள் ஆங்காங்கே இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.

காஷ்மீரின் பனிமலைகளில் ரோஜாக்கள் அழகுடன் மலர்ந்த காலம் மாறி ரத்தம் இன்று கசிந்து கொண்டிருக்கிறது. குஜராத்திலே ஆயிரக்கணக்கில் சிறுபான்மை மக்களை கொன்று குவித்த நர வேட்டை நரேந்திர மோடிக்கு இப்போது பிரதமர் கனவு. இதனை நனவாக்க எத்தனை லட்சம் உயிர்களை பறிப்பார்களோ என்று அச்சம் கொள்ளாமல் யாரும் இருக்க முடியாது.

பல்வேறு இனம், மொழி, மதம், மாநிலங்கள் அடங்கிய நாடாக இந்தியா திகழ்கின்ற போதும் அனைத்து மக்களையும் ஒன்றாக இணைப்பது மத்ச்சார்பின்மை, மத நல்லிணக்கம் என்ற மெல்லிய இழைதான். அதனை சிதைக்க மத அடிப்படைவாதிகள் முயல்கின்றனர். உரிமைகளுக்காக ஒன்றுபட்டு போராட வேண்டிய உழைக்கும் மக்களையும் பிரிக்கப் பார்க்கிறார்கள்.

அதனை அனுமதிக்க மாட்டோம், இந்தியாவின் அடிப்படை கொள்கையான மத்ச் சார்பின்மையை பாதுகாப்போம் என்று உரக்கச்சொல்கிற இயக்கமாக, மக்கள் ஒற்றுமைக்காக மகாத்மா காந்தி அமரரான ஜனவரி முப்பது அன்று மத நல்லிணக்க பாதுகாப்பு தினம் அனுசரிப்பது என சிதம்பரத்தில் நடைபெற்ற கோட்டச்சங்கத்தின் இருபத்தி நான்காவது பொது மாநாடு முடிவு செய்தது.

ஜனவரி முப்பது அன்று கோரிக்கை அட்டை அணிந்து, அனைத்து கிளைகளிலும் மதச்சார்பின்மையை, மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக வாயிற்கூட்டம் நடத்திடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இது உழைக்கும் மக்களின் கடமையும் கூட.
வாழ்த்துக்களுடன்,
தோழமையுள்ள
ஒம் . . எஸ்.ராமன்
பொதுச்செயலாளர்

Friday, January 27, 2012

தனியாரிடம் செல்லவுள்ள தண்ணீர் வளம்




இந்த தேசத்தின் அனைத்து இயற்கை வளங்களில் பெரும் பகுதியை தனியார்வசம் ஒப்படைத்துள்ள மத்தியரசு இப்போது தண்ணீர் வளத்தையும் ஒட்டு மொத்தமாக தனியாரிடம் தாரை வார்க்க முடிவு செய்துள்ளது.

மத்தியரசு உருவாக்கியுள்ள தேசியத் தண்ணீர் கொள்கை மிகமிக மோசமானது, அபாயகரமானது. அரசு கொள்கை வரைவு ஒன்றை தயார் செய்து சுற்றுக்கு விட்டுள்ளது. அதன்படி குடிநீர் மற்றும் பாசனத்திற்காக தண்ணீர் வழங்கும் பொறுப்பை அரசுகள் கைகழுவி விடும். அவை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும் என்பதுதான் அந்த கொள்கையின் முக்கிய அம்சம்.

இதனால் நதிகள், ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகள் எல்லாமே தனியாரின் கட்டுப்பாட்டிற்குள் சென்று விடும். பாதுகாக்கப் பட்ட குடிநீர் தேவை என்று எப்படி இப்போது மக்கள் மினரல் வாட்டர் பாட்டில்களையும் கேன்களையும்  பணம் கொடுத்து வாங்குகின்றார்களோ, அது போல அனைத்து தேவைகளுக்கான தண்ணீருக்கும் விலை கொடுக்க வேண்டிய கட்டாயம் உருவாகும்.

விதைக்கும், உரத்திற்கும்,பூச்சிக்கொல்லிக்கும்,இதர செலவினங்களுக்கும் பணம் இல்லாமல் சிரமப்படும் விவசாயி, பாசனத்திற்கான தண்ணீருக்கும் பணம் கொடுக்க வேண்டுமென்றால் எங்கே செல்வான்? இதன் விளைவுகள் ஒவ்வொருவரையும் கடுமையாக பாதிக்காதா? ஆனால் உலக வங்கி கட்டளை மத்தியரசை ஆட்டி வைக்கிறது.

பொலிவியா நாட்டில்    கோசமாம்பா நகரில்  நீர் நிர்வாகம் பெக்டெல் என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த நிறுவனம் நிகழ்த்திய கொடுமைகளால் வெகுண்டெழுந்த பொலிவிய மக்களின் போராட்டம் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வைத்தது. இவா மொரேல்ஸ் தலைமையில் இடதுசாரி ஆட்சி மலர அடிப்படையாகவும் அந்த போராட்டம் அமைந்தது. அப்படிப்பட்ட சூழலை நாம் இந்தியாவிலும் உருவாக்க வேண்டும். 

ஊழல்களின் ஊர்வலம் - சாலையோரத்து குழாய்கள்


எங்கள் மாத இதழ் சங்கசுடருக்காக  எழுதியது


சுமார் முப்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு சாலை மார்க்கமாக பயணம் செய்பவர்கள் கண்களில் ஒரு காட்சி தவிர்க்க முடியாமல் இருந்தது. மீன்சுருட்டி தொடங்கி பண்ருட்டி வரையுள்ள சாலையின் ஒரு பக்கத்தில் பிரம்மாண்டமான குழாய்கள் காட்சியளிக்கும். அரசியல் விளம்பரங்கள் எழுதுவது, சுவரொட்டி ஒட்டுவது என்று மட்டுமல்லாமல் பல ஏழை மக்களின் கௌரவமான வீடுகளாகக் கூட அந்த குழாய்கள் காட்சியளித்தன.

தி.மு.க வின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் சென்னையின் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க வீராணம் ஏரியிலிருந்து பெரிய சிமெண்ட் குழாய்கள் வாயிலாக தண்ணீரை சென்னைக்கு எடுத்துச் செல்ல திட்டம் தீட்டப்பட்டது. சத்யநாராயணா என்ற நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது.

பிரம்மாண்டமான குழாய்களும் தயாரிக்கப்பட்டது. அவற்றை பூமியில் புதைக்கும் பணிகள் தொடங்கும் நேரத்தில்தான் அவற்றின் தரம் சரியல்ல என்பதும் அவற்றால் தண்ணீரின் அழுத்ததை தாங்க முடியாது என்பதும் கண்டறியப்பட்டது.

முதல்வர் கலைஞர் உள்ளிட்டவர்களுக்கு ஒப்பந்த தொகையில் பெரும் பகுதியை அளித்து விட்டதால்தான் தரமற்ற குழாய்கள் தயாரிக்கப்பட்டது என்று குற்றம் சுமத்தப்பட்டது. வீராணம் திட்டம் கைவிடப்பட்டது. அவசரநிலைக் காலத்தில் தி.மு.க அரசு கலைக்கப்பட்டு சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டபோது பிரதானமாக விசாரிக்கப்பட்டது இந்த ஊழல். சி.பி.ஐ வழக்கும் பதிவு செய்தது.

ஆனால் 1980 ல் ஜனதா ஆட்சி கலைந்து திமுக “ நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக’” என்று காங்கிரஸ் கட்சியோடு லட்சிய உறவு வைத்தபோது சர்க்காரியா கமிஷன் அறிக்கையும் கிடப்பில் போடப்பட்டது. சி.பி.ஐ பதிவு செய்த வழக்குகளும் குற்றப் பத்திரிக்கை தயார் செய்யும் முன்னரே திரும்பப் பெறப்பட்டது.

சிமெண்ட் குழாய்கள் அப்படியே இருந்தால் அவை மக்களுக்கு கருணாநிதி செய்த ஊழலை நினைவுபடுத்தும் என்பதால் அதனை அகற்ற வேண்டாம் என எம்.ஜி.ஆர் சொன்னதாகவும் தகவல் உண்டு. 1989 ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு திடீரென ஒரு நாள் அத்தனை குழாய்களும் மாயமாய் மறைந்தது. அது என்னவானது என்பது அரசுக்கே வெளிச்சம். தன் ஆட்சியின் ஊழல் சின்னத்தை மக்கள் பார்த்துக்கொண்டிருப்பதை கலைஞரும் விரும்ப மாட்டாரல்லவா?   

கூடுதல் தகவல்கள் : 2001 ல் வீராணம் ஊழல் வழக்கை மீண்டும் நடத்தப் போவதாக ஜெயலலிதா கூற அது ஒரு பரபரப்புச் செய்தியாக ஊடகங்களுக்கு உணவாக அமைந்ததே தவிர வேறு எதுவும் நடக்கவில்லை.

அதிமுக ஆட்சியில் புதிய வீராணம் திட்டம் என்று தொடங்கப்பட்டது. பொன்னியின் செல்வன் நாவலில் கடல் போல காட்சியளித்த வீராணம் ஏரியில் இப்போது நீர் இல்லாததால் ஐம்பத்தி எட்டு ஆழ்துளை கிணறுகள் தோண்டப்பட்டு அதன் மூலம் குடிநீர் உறிஞ்சப் பட்டு சென்னைக்கு செல்கிறது.

Tuesday, January 24, 2012

புலிகள் என்றாலே ஒரு கம்பீரம்தான்


புலிகள் கம்பீரமாய்   காட்சி    தருகின்றதல்லவா?

நீங்கள் வேறு எதையும் நினைத்து ஏமாறவில்லையே?

தடை செய்யப்பட்ட நாடகம் – இப்போது தமிழிலே



முற்போக்கு நாடகாசிரியர், திரைப்பட இயக்குனர் மறைந்த தோழர் ஹபீப் தன்வர் அவர்களின் புகழ்பெற்ற ஒரு நாடகம் சரண்தாஸ் சோர். சத்திஸ்கரி மொழியில் தயாரிக்கப்பட்ட இந்த நாடகத்தை பிரபல இயக்குனர் ஹிந்தியில் திரைப்படமாக்கியுள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்மிதா பட்டீல் நடித்துள்ளார். இந்த நாடகத்தை பார்க்கும் வாய்ப்பு எனக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு எங்கள் சங்கத்தின் அகில இந்திய மாநாடு ராய்ப்பூர் நகரில் நடைபெற்ற போது கிடைத்தது.

ஒரு நாணயமான திருடன், தன் குருநாதருக்கு தான் பொய் பேச மாட்டேன் என்று அளித்த வாக்குறுதியை காப்பாற்ற இறுதியில் மரணத்தை தழுவும் கதை அது. எங்கள் மாநாட்டு வரவேற்புக்குழுவின் தலைவராக இருந்த தோழர் ஹபீப் தன்வர் மாநாட்டுப் பிரதிநிதிகளுக்காக அந்த மாநாட்டை தனது குழுவுடன் நடத்தினார். மொழி புரியாவிட்டாலும் கதையை முழுமையாக உள் வாங்கிக் கொள்ள முடிந்தது. ஒரு நாடோடிக் கதையை தழுவி நாடகமாக்கப்பட்டது அது.

திருப்பத்தூர் தூய இருதயக் கல்லூரிப் பேராசிரியர் திரு பார்த்திபராஜா அதை தமிழில் சரண்தாஸ் திருடன் என்ற பெயரில் உருவாக்க, நேற்று அதனை வேலூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் நடத்தியது. மூலத்தின் ஜீவனை சிதைக்காமல் தமிழ்ப் பாடல்களோடு நன்றாகவே படைத்திருந்தார்கள். ஹிந்தியில் அதனை பார்த்தவன் என்ற ஒரே காரணத்தாலேயே, நாடகம் துவங்கும் முன் அதனை அறிமுகம் செய்யும் வாய்ப்பு  எனக்கு கிடைத்தது. ஒரு நல்ல நாடகம் பார்த்த நிறைவு கிடைத்தது.

இப்போதுதான் தலைப்பிற்கே வரவுள்ளேன்.

தோழர் ஹபீப் தன்வர் மறைந்த இரண்டு மாதங்களுக்குள்ளாக சத்திஸ்கர் மாநில பாஜக அரசு இந்த நாடகத்தை தடை செய்தது. நாடக நூலும் அனைத்து நூலகங்களிலிருந்தும் அகற்றப்பட்டது. தடை செய்ய என்ன காரணம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். வசனங்களில் ஏதேனும் சிக்கல் இருக்குமா என்று கூட சிந்தித்தேன். நேற்று தமிழில் நாடகம் பார்த்த பிறகு அது காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் கூட போய்விட்டது.

பிறகு என்னவாக இருக்க முடியும்?

பொய் பேசாமல் உண்மையே பேசுவது என்பதுதான் நாடகத்தின் அடிப்படைக் கருத்து.

அதுதான் தடைக்கான காரணமாக இருக்கலாம்!

ஏனென்றால் உண்மை பேசுவது என்பதற்கும் பாஜகவிற்கும் சம்பந்தமே கிடையாதே!