Monday, August 31, 2020

டிஸ்லைக்கை லைக்கும் தருணம்

 


ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் அவர்களின் வார்த்தைகளை இரவல் வாங்கிக் கொள்கிறேன்.

I am beginning to like Dislike, 

பிடிக்கவில்லை என்பது இப்போது பிடிக்கிறது. 

புரியவில்லையா?

சமீபத்திய குரங்குக் குளியல் (அதாங்க மங்கி பாத்) நிகழ்வின் யூட்யூப் பகிர்விற்கு விருப்பக்குறி இட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து பதினான்காயிரம் என்றால் விருப்பமில்லை என்றவர்களின் எண்ணிக்கையோ ஏழு லட்சத்து எட்டாயிரத்தை கடந்து விட்டது.



இது சரிப்பட்டு வராது என்று புதிதாக ஒரு இணைப்பை பகிர்ந்தார்கள். அதிலும் இதே நிலைதான்.  



விருப்பக்குறி இட்டவர்களின் எண்ணிக்கை நாற்பத்தி ஆறாயிரம் என்றால் விருப்பமில்லை என்றவர்களின் எண்ணிக்கையோ ஒரு லட்சத்து முப்பத்தி ஓராயிரத்தை கடந்து விட்டது.

அந்த குரங்குக் குளியலில் மோடி பேசியவற்றில் ஒரு முக்கியமான விஷயம் பற்றி எழுத வேண்டும். மாணவர்கள் ஏன் க்டுப்பானார்கள் என்பது அப்போது புரியும் . . .

நாளை மாலை எழுதுகிறேன்.

பிகு : இந்த பதிவிற்கும் மேலே உள்ள படத்திற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம். "உள்ளத்தை அள்ளித் தா" படத்தைப் பார்த்தவர்கள் இந்த காட்சியை நினைவு படுத்திக் கொள்ளுங்கள். தொடர்பு புரியும். 

படம் பார்க்காதவர்கள் யூட்யூபில் இந்த படத்தைப் பாருங்கள். 2 மணி நேரம் ஆறு நிமிடத்திற்குப் பிறகு வரும் காட்சியைப் பாருங்கள். புரியும்




அவமதிப்பின் மதிப்பு ஒரு ரூபாய்!!!!!

 


உச்ச நீதிமன்றத்தை இரு ட்விட்டர் பதிவுகள் மூலமாக பிரஷாந்த் பூஷன் இழிவு படுத்தினார் என்று உச்ச நீதிமன்றம் பதிவு செய்த செல்ஃபி அவமதிப்பு வழக்கில் தீர்ப்பு அளித்து விட்டார்கள்.

பிரஷாந்த் பூஷன் ஒரு ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று சொல்லி தீர்ப்பளித்து விட்டார்கள்.

ஆம்,

வெறும் ஒரு ரூபாய் தான்.

ஒரு கோடி ரூபாய் என்று முதலில் புளகாங்கிதம் அடைந்த தினமலர் பின்பு சத்தமில்லாமல் பழைய செய்தியை நீக்கி விட்டது.

தீர்ப்பைப் பற்றி ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. உச்ச நீதிமன்றமே தனது மதிப்பை வெறும் ஒரு ரூபாய் அளவிற்கு குறைத்துக் கொண்ட பின்பு நாம் சொல்ல என்ன இருக்கிறது!

காழ்ப்புணர்வின் காரணமாக அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினால் இப்படிப்பட்ட பரிதாபமான நிலைதான் வரும் என்பதை அனைவரும் புரிந்து கொண்டு நடக்க வேண்டும். 

அவர்கள் சொல்வதும் சொல்லாததும்

 எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை பங்குச்சந்தையில் இணைத்திட வேண்டும் என்று மோடி அரசு முயல்கிறது. அதற்காக அவர்களது கோயபல்ஸ் பாரம்பரியத்தின்படி கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டுள்ளது. அந்த கட்டுக்கதைகளை அம்பலப்படுத்தி, பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் வெளியிடுகிற "காப்பீட்டு ஊழியர்" மற்றும் எங்கள் வேலூர் கோட்ட இதழ் "சங்கச்சுடர்" ஆகியவற்றுக்காக எழுதிய கட்டுரையை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

நாளை எல்.ஐ.சி நிறுவனத்தின் உதய தினம். எல்.ஐ.சி நிறுவனத்திடமிருந்து ஒரு சிறு செங்கல்லைக் கூட உருவ அனுமதிக்க மாட்டோம் என்ற எல்.ஐ.சி குடும்பத்தின் உறுதியை மோடி வகையறாக்கள் நாளை உணர்ந்து கொள்வார்கள்.



எல்.ஐ.சி பங்கு விற்பனை – சொல்லப்படுவதும் சொல்லப்படாதவையும்

 நரியின் பார்வை எப்போதும் இரையின் மீதுதான் என்பது போல இந்த கொரோனா துயர காலத்திலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சேவை செய்யும் தன் செயல் திட்டத்தை  மத்தியரசு தொடர்ந்து அரங்கேற்றிக் கொண்டுதான் இருக்கிறது. இந்த வருடம் நிதி நிலை அறிக்கையை சமர்ப்பிக்கும் போது எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை விற்கப் போவதாக நிதியமைச்சர் அறிவித்தார். இப்போது பங்கு விற்பனை செய்வதற்கான ஆலோசனைகளை வழங்கிடுவதற்கான ஆலோசகர்களை நியமிப்பதற்கான விளம்பரத்தை நிதியமைச்சகத்தின் “முதலீடு மற்றும் பொதுச்சொத்து நிர்வாகத்துறை (DEPARTMENT OF INVESTMENT AND PUBLIC ASSET MANAGEMENT) வெளியிட்டுள்ளது. இதன் மூலம் எல்.ஐ.சி பங்கு விற்பனைக்கு எதிரான போராட்டம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. எல்.ஐ.சி பங்கு விற்பனைக்கு மத்தியரசு சொல்லும் காரணங்கள் என்ன? அவற்றின் உண்மைத்தன்மை என்ன?

 அரசு சொல்வது : எல்.ஐ.சி யின் செயல்பாட்டில் வெளிப்படைத் தன்மை இருக்கும். பங்குச்சந்தை கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

 உண்மை : ஏற்கனவே எல்.ஐ.சி யின் செயல்பாடு வெளிப்படைத்தன்மை உடையதுதான். இன்சூரன்ஸ் வளர்ச்சி மற்றும் ஒழுங்காற்று ஆணையத்துக்கு ஒவ்வொரு மாதமும் எல்.ஐ.சி அறிக்கை அளிக்கிறது. மேலும் எல்.ஐ.சி யின் கணக்குகள் நாடாளுமன்றத்தின் ஆய்வுக்கு உட்பட்டது. எல்.ஐ.சி யின் ஒவ்வொரு காலாண்டு செயல்பாடும் பொது வெளியில் முன்வைக்கப்படுகிறது. இதை விட வேறென்ன வெளிப்படைத்தன்மை இருக்க முடியும்.

 அரசு: பங்குச்சந்தைக்கு செல்வதன் மூலம் எல்.ஐ.சி யால் சந்தையிலிருந்து பணத்தை திரட்ட முடியும்.

 உண்மை : ஒவ்வொரு ஆண்டும் மூன்றரை லட்சத்திலிருந்து நான்கு லட்சம் கோடி ரூபாய் வரை நிதியை திரட்டுகிற எல்.ஐ.சி க்கு பங்குச்சந்தையிலிருந்து நிதி திரட்ட வேண்டும் என்ற தேவை என்பதே கிடையாது.

 அரசு: எல்.ஐ.சி பங்குகள் விற்கப்படுவதால் சிறு முதலீட்டாளர்கள் பயன் பெறுவார்கள்

 உண்மை: பங்குச்சந்தையில் சிறு முதலீட்டாளர்களின் அளவு மிகவும் குறைவுதான். இந்திய மக்கட்தொகையில் வெறும் 2.5 % மட்டுமே பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள். ஆனாலும் பங்குச்சந்தையில் பெருமளவு வர்த்தகம் செய்பவர்கள் அன்னிய நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட பெறு நிறுவனங்களே. சிறு முதலீட்டாளர்களுக்கு பயன் கிடைக்கும் என்று சொல்வது தவறானது. இந்திய, அன்னிய நிதி நிறுவனங்களுக்கு ஆதாயம் அளிப்பதுதான் அரசின் நோக்கம்.

 அரசு சொல்வது உண்மையில்லை என்கிற போது இம்முடிவிற்கான காரணம் என்ன?

 கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகைகள்  வாரி வழங்கி வருவதால் அரசின் கையிருப்பு நிதி கரைந்து கொண்டு வருகிறது. அந்த பற்றாக்குறையை சமாளிக்கத்தான் ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை கைப்பற்றிக் கொண்டார்கள். இப்போது எல்.ஐ.சி பங்கு விற்பனை மூலம் சமாளிக்கப் பார்க்கிறார்கள். அரசின் செலவுகளுக்காக மட்டுமே இந்த நிதி பயன்படும். மாறாக வளர்ச்சிக்கான முதலீடாக அல்ல.  எப்படிப்பட்ட பஞ்சம் வந்தாலும் கூட நம் விவசாயிகள் விதை நெல்லை உணவுக்காக பயன்படுத்த மாட்டார்கள். அந்த பொறுப்புணர்வு அரசுக்கு இல்லை.

 பாலிசிதாரர்களுக்கு , பொது மக்களுக்கு பாதிப்பு இருக்குமா?

எல்.ஐ.சி யின் உபரி, பாலிசிதாரர்களுக்கான போனஸாக வழங்கப்படுகிறது. மக்கள் பணம் மக்களுக்கே என்ற கோட்பாட்டின் படி எல்.ஐ.சி செயல்படுவது மாற்றப்படும். பாலிசிதாரர் நலனை விட, மக்கள் நலனை விட பங்குதாரர் நலன் என்பது பிரதானமாக கருதப்படும் நிலை வரும். அதன் காரணமாக மத்திய, மாநில அரசுகளின் கட்டமைப்புத் தேவைக்காக செய்யப்படும் முதலீடு பாதிக்கப்பட்டு பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள். உபரியை பகிர்ந்து கொள்ள பங்குதாரர்கள் வருவதால் பாலிசிதாரர்களும் பாதிக்கப் படும் அபாயம் உண்டு. பங்கு விற்பனையை தடுக்க வேண்டிய அவசியத்தை இது உணர்த்துகிறது.  

 எல்.ஐ.சி பங்குகளை விற்க நிதியமைச்சகத்திற்கு உரிமை உண்டல்லவா?

 எல்.ஐ.சி யின் மூலதனம் துவக்கத்தில் வெறும் ஐந்து கோடி மட்டுமே. ஐ.ஆர்.டி,.ஏ சட்டத்தின் அடிப்படையில் எல்.ஐ.சி திருத்த சட்டம் 2011 மூலம் 100 கோடியாக உயர்த்தப்பட்டது. அப்போது நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதம் இந்திய அரசியலில் ஒரு அபூர்வம் என்றே சொல்ல முடியும். எல்.ஐ.சி க்கு கூடுதல் மூலதனம் தேவைப்படுமானால் அது நாடாளுமன்ற அனுமதியோடு அரசின் நிதியிலிருந்துதான் தரப்பட வேண்டும் என்றும் எல்.ஐ.சி யின் பொதுத்துறை தன்மை எக்காலத்திலும் நீர்த்துப் போக அனுமதிக்கப்படக் கூடாது என்றும் முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவு இப்போது மீறப்படுகிறது. அது மட்டுமல்ல, எல்.ஐ.சி யிடம் உள்ள நிதி என்பது முழுதும் அரசுக்கு சொந்தமானது அல்ல. ஒவ்வொரு வருடமும் திரட்டப்படுகிற உபரியில் 95 % பாலிசிதாரர்களுக்கும் 5 % அரசுக்கும் அளிக்கப்படுகிறது. எனவே 5 % உடமையாளரான அரசுக்கு எல்.ஐ.சி யின் பங்குகளை விற்பதற்கான எந்த தார்மீக உரிமையும் கிடையாது.

 எல்.ஐ.சி பங்கு விற்பனை என்பது வணிகத்தில் பாதிப்பு ஏற்படுத்துமா?

 நியூ இந்தியா நிறுவனத்தின் பத்து சதவிகித பங்குகள் விற்கப்பட்ட உடன் செய்யப்பட்ட முதல் நடவடிக்கை என்பது நியூ இந்தியா நிறுவனத்தின் அனைத்து அலுவலகப் பலகைகளிலும் விளம்பரங்களிலும் “முழுமையான அரசு நிறுவனம்” என்ற வாசகம் அகற்றப்பட்டது. எல்.ஐ.சி யின் போட்டி நிறுவனங்கள் எல்.ஐ.சி இனியும் அரசு நிறுவனம் கிடையாது என்ற பிரச்சாரத்தை எடுத்துச் செல்ல முயற்சிக்கலாம். ஆனால் எல்.ஐ.சி இது நாள் வரை ஏற்படுத்தியுள்ள நற்பெயர், நம்பிக்கை, தனியார் கம்பெனிகளின் முயற்சி கைகூட அனுமதிக்காது.

 எல்.ஐ.சி க்கு கூடுதல் மூலதனம் தேவைப்படுகிறதா?

 வெறும் ஐந்து கோடி ரூபாய் மூலதனத்தோடு துவக்கப்பட்டு, இப்போது நூறு கோடி ரூபாய் மூலதனம் உள்ள எல்.ஐ.சி நிறுவனம் தற்போது முப்பத்தி இரண்டு லட்சம் கோடி சொத்து மதிப்பு உள்ள நிறுவனமாக பிரம்மாண்டமாக உருவெடுத்துள்ளது. எனவே கூடுதல் மூலதனத் தேவை என்பதே எழவில்லை. இன்னும் சொல்லப்போனால் பிரதமர் முன்வைக்கிற சுய சார்பு இந்தியா (ஆத்ம நிர்பார் பாரத்) என்ற முழக்கத்திற்கு முற்றிலும் முரணானது.

 இதனை தடுக்க இயலுமா?

 1994 ல் மல்ஹோத்ரா குழுவின் முக்கியமான பரிந்துரை எல்.ஐ.சி நிறுவனத்தின் ஐம்பது சதவிகித பங்குகளை  விற்க வேண்டும் என்பதுதான். இடையறாத போராட்டமும் மக்கள் மத்தியிலான பிரச்சார இயக்கமும்தான் இருபத்தி ஆறு ஆண்டுகளாக எல்.ஐ..சி நிறுவனத்தை இது நாள் வரை முழுமையான அரசு நிறுவனமாக தக்க வைத்துள்ளது.

 பட்ஜெட் அறிவிப்பு வந்ததுமே உடனடியாக அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், முதல் நிலை அதிகாரிகள் சங்கம், வளர்ச்சி அதிகாரிகள் சங்கம் ஆகிய மூன்று அமைப்புக்களும் இணைந்த கூட்டு அணி  04.02.2020 அன்று ஒரு மணி நேர வேலை நிறுத்தம் மேற்கொள்வதாக அறிவித்தது. இதன் தாக்கத்தால் மற்ற அமைப்புக்களும் வேலை நிறுத்தத்தில்  இணைந்து கொள்ள கடுமையான எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டது.

 ஆலோசகர்கள் நியமிப்பது தொடர்பான தகவல் தெரிந்ததுமே கூட்டு அணி சார்பில் நிதியமைச்சருக்கு அம்முடிவை கை விடக் கோரி கடிதம் அனுப்பப்பட்டது. மீண்டும் மக்களிடம் செல்வதும் அவர்களிடம் உண்மைகளை சொல்வதும் அவர்கள் ஆதரவோடு எல்.ஐ.சி யின் பொதுத்துறைத் தன்மையை முழுமையாக பாதுகாப்பது இப்போதும் சாத்தியமே.

 எஸ்.ராமன், வேலூர்

 

 

Sunday, August 30, 2020

என்னத்த சொல்ல? சங்கி . . .

 


மேலே உள்ள மீமை சில நாட்கள் முன்பாகத்தான் பகிர்ந்து கொண்டுள்ளேன். 

இப்போது இச்செய்தியை வழக்கறிஞர் தோழர் பிரதாபன் ஜெயராமன் பகிர்ந்து கொண்டுள்ளார். 

தாலித்திருடனின் கதை!


கோவையில் நேற்று தாலியறுத்தல், கொள்ளை சம்பவத்தில் கைதாகியுள்ள சரவணக்குமார் எனும் நபர் ஆர்.எஸ்.எஸ் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட செயலாளராகவும் பணியாற்றிவருகிறான்.


இவனின் தந்தை அரசாங்க போக்குவரத்தில் ஊழியராக பணியாற்றியிருக்கிறார். நடுத்தரக்குடும்பத்தைச்சார்ந்த இவனை B.E வரை கடினப்பட்டு படிக்கவைத்திருக்கிறார் அவர் தந்தை!


B.E படித்த முடித்த உடன், இந்திய ரூபாய் மதிப்பில் 2 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் இங்கிலாந்தில் உள்ள ஹெல்த்கேர் நிறுவனம் ஒன்றில் பணிக்கு சேருகிறான்.


அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு, கோவைக்கு திரும்பி, அவன் அப்பாவிடம் 16 லட்சம் ரூபாய் பெற்று, காரமடை பகுதிக்குட்பட்ட வெள்ளியங்காடு என்ற இடத்தில் 56 பசுமாடுகளை கொண்டு ஒரு மாட்டுப்பண்ணை அமைத்திருக்கிறான்.


மோடி அரசின் திட்டமிடப்படாத ஊரடங்கு உத்தரவினால் ஏற்பட்ட நெருக்கடிகளினால் அதில் 16 பசுமாடுகள் இறந்ததால் நஷ்டத்தில் சிக்கியுள்ளான்.


சங்கீகளின் அரசின் தவறான பொருளாதார கொள்கை சங்கீகளையும் நடுத்தெருவிற்கு கொண்டு வந்துள்ளது என்பதுதான் மோடி அரசின் 6 ஆண்டு சாதனைகளில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய சாதனை!


மோடி அரசின் ஊரடங்கு நிலையால் பாதிக்கப்பட்ட இவன், அந்த நட்டத்தை சரிசெய்ய, மக்கள் பணத்தையும், உடமையையும் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளான்.


இந்த நிலையில், காரமடை பகுதியில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் கத்தி மற்றும் அரிவாள் காட்டி மிரட்டி நகை, பணம் போன்றவற்றை கொள்ளையடித்துவந்துள்ளான்.


கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அனிதா என்ற இளம்பெண்ணை தாக்கி 9 சவரன் நகை கொள்ளையடித்துள்ளான். இந்த சம்பவத்தை விசாரித்த காவல்துறைக்கு, இவனின் கொள்ளை சம்பவம் தெரிய வந்திருக்கிறது.


இவன் தலைமையிலான கும்பல், சிறுமுகை பகுதியில் பர்னீச்சர் கடையில் 10 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்துள்ளது.


இவன் தலைமையிலான கூட்டத்தில் 5 பேரை போலிஸார் கைது செய்திருக்கிறார்கள். பலரை தேடி வருகிறார்கள்.


இவன் 17/06/2017 அன்று கோவை மாவட்ட மார்க்ஸிஸ்ட் கட்சி அலுவலத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியதால் கைது செய்யப்பட்டு, வழக்கில் பிணையில் வந்துள்ளான்.


மார்க்ஸிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய இவனை "தேசபக்தன்" என ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் கொண்டாடின. அவனுக்கு நேரடியாக ஆதரவு அளித்தன.


இப்போது, இந்த திருடனுக்கு கண்டனமும் தெரிவிக்காமல், அவன் மீது நடவடிக்கை எடுக்காமல் அமைதிக்காக்கின்றன. இது அந்த அமைப்புகளின் வழக்கமான ஒன்றுதான்.


யோக்கியன்களுக்கு சங்கபரிவார அமைப்புகளில் எந்த தொடர்பும் இருக்காது என்பது சமீபத்தில் பாஜகவில் இணைந்த கல்வெட்டு ரவி(57 வழக்கு), அறம் ராஜா(46 வழக்கு), அபின் கடத்திய அடைக்கலராஜ் ஆகியோரும், இந்த கொள்ளைக்கும்பல் உள்ள பாஜகவில் தன்னையும் ஐக்கியப்படுத்திக்கொண்ட முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலையும் வாழும் உதாரணங்கள்.


பெரிய சங்கீகள் பதவியில் அமர்ந்துகொண்டு, நாட்டை கொள்ளையடிப்பதும், பொதுத்துறைகளை தனியாருக்கு விற்பதுமாக செய்துவரும் நிலையில், அவர்களின் அடிமை சங்கீகள், நாட்டு மக்களிடம் திருடியும், கொள்ளையடித்தும் மக்களை ஏய்த்துப்பிழைக்கிறார்கள்






இச்செய்தியை முன்னாள் ஐ.பி.எஸ் ஸிற்கு டேக் செய்தார். ரோஷக்கார போலீஸ் உடனே எதிர்வினையாற்றி விட்டார். நீக்கி விட்டார். 

தாலித் திருடனை அல்ல. தோழர் பிரதாபனின் பதிவை. 

என்னத்த சொல்ல?

சங்கி . . .

நிர்மலா அம்மையாரின் நிதி பாசிஸம்




 இரண்டு நாட்களுக்கு முன்பாக நடந்த இணைய வழி கருத்தரங்கம் ஒன்றில் எங்கள் தென் மண்டலப் பொதுச்செயலாளர் தோழர் டி.செந்தில் குமார், "நிதி பாசிஸம்" என்ற புதிய சொற்றொடரை பயன்படுத்தினார்.

அதற்கான உதாரணத்தை நிர்மலா அம்மையார் கொடுத்து விட்டார். 

ஆம்.

ஜி.எஸ்.டி மூலம் எல்லா பணமும் மத்தியரசுக்கு செல்கிறது. மாநிலங்களுக்கு மத்தியரசு இழப்பீடு தர வேண்டும். அப்படி மத்தியரசு மாநிலங்களுக்கு தர வேண்டிய இழப்பீடு 2.35,000 கோடி ரூபாய்.

அதை மாநிலங்களுக்கு தர முடியாது என்றும் இரண்டு ஆப்ஷன் கொடுத்துள்ளார் அம்மையார்.

மாநிலங்கள் ஜி.எஸ்.டி இழப்பீட்டுக்குப் பதிலாக ரிசர்வ் வங்கியிலிருந்து 97,000 கோடி (அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து) குறைந்த வட்டியில் கடன் வாங்கிக் கொள்ளலாம்.

அல்லது

2,35,000 கோடி ரூபாயையும் ரிசர்வ் வங்கி மூலமாக கூடுதல் வட்டிக்கு வெளிச்சந்தையிலிருந்து கடன் வாங்கிக் கொள்ளலாம்.

இந்த முன்மொழிவுகளை மாநிலங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மாநிலங்களுக்கு விதிகள் படி சேர வேண்டிய தொகையை அளிக்காமல் மத்தியரசு ஏமாற்றி விட்டு, கடனாக மாநிலங்கள் தலையில் சுமையை ஏற்றுவதை ஏற்க முடியாது. மத்தியரசு வேண்டுமானால் கடன் வாங்கி மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி தொகையை பட்டுவாடா செய்யட்டும் என்று கேரள அமைச்சர் தோழர் தாமஸ் ஐசக் சரியாகவே சொல்லியுள்ளார்.

ஆமாம்.

ஏன் மத்தியரசால் மாநிலங்களுக்கு தர வேண்டிய நிதியை தர முடியவில்லை.

அதெல்லாம் ஏற்கனவே அதானி, அம்பானிக்கு வாரி விட்டாச்சு. அப்போதானே அவர்கள் சுருட்டிக் கொண்டது போக மீதமுள்ள தொகையை பாஜகவிற்கு தேர்தல் பத்திரங்கள் மூலமாக திருப்பித் தருவார்கள்!

Saturday, August 29, 2020

கடுப்பில் கடவுள்



 வோட்டுக்காக என்னை பயன்படுத்தினாய் . . .

கலவரத்தைத் தூண்ட என்னை பயன்படுத்தினாய் . .  .

பிரச்சினைகளை திசை திருப்ப என்னை பயன்படுத்தினாய் . . .

ஆறு வருடமாய் நீ ஆட்சியில் இருந்தாலும் உன் தோல்விகளுக்கெல்லாம் அறுபது வருடம் முன்பிருந்த நேருவை குறை சொன்னாய், அக்கம்பக்கத்து நாடுகளைச் சொன்னாய். ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்த கதையாக  நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்ததற்கு இப்போது என்னையே காரணமாக்கி விட்டாய். 

பொருளாதாரத்தை என்னால்தான் சரி செய்ய முடியுமென்றால் நிதியமைச்சராக நீங்கள் எதற்கு அம்மணி?

இவண்

கடுப்போடு கடவுள்


பிணந்தின்னி கழுகு (சங்கி )


 



கீழே உள்ள ட்விட்டர் பதிவை பார்க்கும் போது மேலே உள்ள படம்தான் நினைவுக்கு வந்தது.

 திரு வசந்தகுமார் மரணத் தருவாயில் இருக்கும் போதே போட்ட பதிவு இது.


 

அவர் இறப்பதற்கு முன்பே அவரது மக்களவை இடம் காலியாகி அங்கே இடைத்தேர்தல் வந்து அதில் பொன்னார் வெற்றி பெற்று மத்தியமைச்சராக மீண்டும் பொறுப்பேற்பார் என்பதெல்லாம் எவ்வளவு வக்கிரமான சிந்தனை!

 சங்கிகளை விட கேவலமானவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்பதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

 அடுத்தவர் மரணத்தை எதிர்பார்த்து நாள் குறித்தவர்கள்தான் முதலில் மரணத்தை தழுவினார்கள் என்பது வரலாறு. ஆனாலும் வக்கிர சிந்தனையாளர்கள் அடுத்தவர்கள் மரணத்திற்காக ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

 அவர்களை பிணந்தின்னி கழுகுகள் என்றழைக்காமல் வேறெப்படி அழைப்பது?

பிகு : சூடானின் பட்டினிப் பிரச்சினையை மேலே உள்ள படம் சித்தரித்தது.  புகைப்படக் காரருக்கு பாராட்டுக்களும் கண்டனங்களும் குவிந்தது. ஒரு குழந்தையின் மரணத் தருவாயில் அதை காப்பாற்றுவதற்குப் பதிலாக புகைப்படம் எடுத்தோமே என்ற குற்ற உணர்வில் அந்த புகைப்படக் காரர் கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார். அவருக்கு குற்ற உணர்வு இருந்தது. இந்த பிணம் தின்னிக் கழுகுகளாக இருந்தால்  . . . . .கொன்றே போட்டிருப்பார்கள். 

 

 


கொரோனா கால துயரங்கள்



 கொரோனா காலத்தின் மிகப் பெரும் துயரமாக நான் பார்ப்பது இக்காலக்கட்டத்தில் இறந்து போனவர்கள் அவர்களுக்கு வழக்கமான காலத்தில் இறந்து போனால் கிடைக்கக் கூடிய இறுதி மரியாதை கிடைக்காமல் போவதே!

 அஞ்சலி நிகழ்வில் இருபது பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்ற விதி இருப்பதால் இயற்கை மரணத்திற்குக் கூட செல்ல முடியாத நிலைமை உருவாகி விட்டது. இந்த வாரம் மட்டுமே ஓய்வு பெற்ற ஒரு அதிகாரியின் இறப்பிற்குச் செல்ல இயலவில்லை.

 குடும்பத்திலும் ஒரு மரணம் கொரோனா காரணமாக. மிகவும் நெருங்கிய உறவினராக இருந்தாலும் பயணிக்க முடியவில்லை. அப்படியே பயணித்திருந்தாலும் முகத்தைக் கூட பார்த்திருக்க முடியாது.

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் தோழர் உ.வாசுகி அவர்களின் கணவர் தோழர் ஏ.பி.விஸ்வநாதன் கடந்த திங்கள் அன்று இறந்து போனார்.



 இத்துயரச் செய்தி வந்த சில நிமிடங்களுக்குள்ளாக கட்சியின் மூத்த தலைவர் தோழர் டி.லட்சுமணன் அவர்கள் காலமானார் என்ற இன்னொரு துயரம் தொடர்ந்தது.



 சாதாரண நேரமாக இருந்திருந்தால் எண்ணற்ற தோழர்களின் பங்கேற்போடு இவர்களின் இறுதி ஊர்வலம் நடந்திருக்கும். ஆனால் இப்போதோ?

 வாழும் போது கிடைக்கிற மரியாதையை விட இறக்கும் போது கிடைக்கும் மரியாதை மிகவும் முக்கியமானது.

 அதனை மறுக்கிற கொரோனா என்றுதான் ஒழியுமோ?

பிகு:



இன்று காலை பகிர்ந்து கொள்வதற்காக நேற்று மாலை எழுதிய பதிவு. அதற்குள்ளாகவே மக்களவை உறுப்பினரும் வசந்த் அன்ட் கோ உரிமையாளருமான திரு வசந்தகுமார் காலமான தகவல் வருகிறது. இது என்றுதான் முடியுமா?


Friday, August 28, 2020

பெற்ற வெற்றி நிலைத்தது.

 




தமிழகத்தில் அருந்ததியருக்காக அளிக்கப்பட்ட  உள் ஒதுக்கீடு சட்ட ரீதியானது, செல்லத் தக்கது, உள் ஒதுக்கீட்டிற்கான உரிமை மாநில அரசுக்கு உண்டு என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு முக்கியமானது. 

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சென்னையில் நடத்திய பிரம்மாண்டமான பேரணி, இக்கோரிக்கையின் வெற்றியை வேகப் படுத்தியது என்றால் அது மிகையில்லை. இப்பேரணி நடைபெறும் வேளையில் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் என்.வரதராஜன் அவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்ததும், கொள்கை அளவில் கோரிக்கையை ஒப்புக் கொண்டதையும் அதை தோழர் என்.வி பேரணிக்குப் பின்பு நடைபெற்ற கூட்டத்தில் அறிவித்ததும் மனதில் பசுமையாக இருக்கிறது. 

ஆம் அப்பேரணியில் வேலூரிலிருந்து மட்டும் எங்கள் சங்கத் தோழர்கள் இருபது பேர் கலந்து  கொண்டோம். 

 

இன்றைக்கு சங்கியாகவே மாறியுள்ள டாக்டர் கிச்சாமி உள் ஒதுக்கீட்டை மிகக் கடுமையாக எதிர்த்தார். இருப்பினும் சட்டம் வந்தது. இப்போது அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் போனதும் டாக்டர் கிச்சாமிதான். உள் ஒதுக்கீடு கூடாது என்று சொன்னவர் இப்போது நாங்கள் பட்டியலினமே அல்ல என்ற அளவிற்கு மாறிப்போனதுதான் விஷமூர்த்தி மேஜிக்.

தீர்ப்பின் பின்னணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே.கனகராஜ் அவர்களின் பதிவை பகிர்ந்து கொள்கிறேன்.

 

செங்கொடி என்றெதுமே ஒரு ஜீவன் பிறக்குதம்மா!

 

இன்று அதுவும் மோடி தலைமையிலான ஆட்சி அதிகாரத்திலிருக்கும்போது அருந்ததியருக்கான உள் இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் மகத்தானதொரு தீர்ப்பை அளித்திருக்கிறது. இந்த இடஒதுக்கீட்டிற்கு அரசியல் கட்சி என்கிற முறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முற்றிலும் உரிமை கொண்டாட முடியும். அரசாங்கம் என்கிற முறையில் டாக்டர்.கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலான திமுக அரசாங்கம் உரிமை கொண்டாட முடியும். இந்தப் போராட்டத்தை அந்தக் காலத்தில் வழிநடத்திய, தலைமை தாங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் தோழர் என்.வரதராஜன் தனித்த பெருமைக்கும் புகழுக்கும் உரியவராவார்.

 தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர்களாக விளங்கிய தோழர்கள் பி.சம்பத், கே.சாமுவேல்ராஜ் ஆகியோரின் பங்கும் அளப்பரியது.

 இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி உச்சநீதிமன்றத்திற்கு சென்றார். உச்சநீதிமன்றம் இந்த இடஒதுக்கீடு செல்லும் என்றும், மாநில அரசு இடஒதுக்கீடு அளித்தது சரிதான் என்றும் தீர்ப்பளித்திருக்கிறது.

 இந்தக் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் ஒன்றை அழுத்தமாகவும் தொடர்ச்சியாகவும் பதிவு செய்ய வேண்டும்.

 கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் முகவுரையில் தோழர் ஏங்கெல்ஸ்  இப்படி குறிப்பிட்டிருக்கிறார்;

 "சுரண்டப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வரும் வர்க்கம் (பாட்டாளி வர்க்கம்) சுரண்டியும், ஒடுக்கியும் வரும் வர்க்கத்திடமிருந்து (முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து) இனி தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டுமானால், சமுதாயம் அனைத்தையும் அதேநேரத்தில் சுரண்டலிலிருந்தும் ஒடுக்குமுறையிலிருந்தும் என்றென்றுக்குமாய் விடுவித்தே ஆக வேண்டும்."-கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை (1883-ஆம் ஆண்டு ஜெர்மன் பதிப்பின் முகவுரை)

 ஆம், தொழிலாளி வர்க்கம்தான், தொழிலாளி வர்க்கம் மட்டும்தான் அனைத்துவிதமான சுரண்டல்களிலிருந்தும் ஒடுக்குமுறைகளிலிருந்தும் சமூகம் முழுவதையும் விடுவிப்பதற்கான ஆற்றல் கொண்டது, அதன் கடமையும் அதுதான்.

 அருந்ததியர் மக்கள் பட்டியலினத்திற்குள்ளேயே மிகவும் ஒடுக்கப்பட்டவர்களாய் இருந்து வருகிறார்கள் என்பது உண்மை. தோழர் என்.வரதராஜன் அவர்களின் வார்த்தைகளில் சொல்வதானால் "அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடி மூட்டை" அவர்கள். அந்தக் கரங்கள் தாங்கள் பிடிக்க வேண்டிய கொடியைக் கூட, எழுப்ப வேண்டிய முழக்கத்தைக் கூட மனதிற்குள் அன்றி வெளிப்படையாகச் சொல்ல தயங்கும் நிலை தற்போதும் இருக்கிறது.

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தக் கோரிக்கையை முன்னெடுத்து பல மாநாடுகளை நடத்தியது. அந்த மாநாடுகளில் அருந்ததியர் மக்களோடு செங்கொடியை ஏந்திய உழைப்பாளி வர்க்கம் தன்னை முழுமையாக கரைத்துக் கொண்டது. இறுதியாக சென்னையில் நடைபெற்ற பேரணியில் அருந்ததியர் மக்களைக் காட்டிலும் எண்ணிக்கையில் அதிகமாக உரத்த குரல்களில் செங்கொடியேந்திய தொழிலாளி வர்க்கம் நிலப்பிரபுத்துவ சமூகத்தால் தங்களை பிரித்து வைத்திருந்து எல்லாவிதமான தடைகளையும் தாண்டி அருந்ததியர்களுக்கு உள் இடஒதுக்கீடு கொடு என உரத்த குரலில் அந்த இயக்கத்தில் கலந்து கொண்டார்கள்.

 இதோ அது சாத்தியமாகி உச்சநீதிமன்றத்தின் அங்கீகாரத்தையும் பெற்று நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. செங்கொடி இயக்கத்தின் பிதாமகர்கள் சொன்னதை தொழிலாளி வர்க்கம் எல்லா காலத்திலும் தங்கள் நினைவில் நிறுத்திக் கொண்டு முன்னேறும்.

 ஆம், செங்கொடி இயக்கத்தால் மட்டுமே சமூகம் முழுவதையும் எல்லாவித சுரண்டல்களிலிருந்தும் ஒடுக்குமுறைகளிலிருந்தும் விடுவிக்க முடியும். அது தொழிலாளி வர்க்கத்தின் கடமையாகும்.

சமூக முழுவதையும் இப்படி விடுவிப்பதன் மூலமாகவே தொழிலாளி வர்க்கம் எல்லா விதமான சுரண்டல்களிலிருந்தும் ஒடுக்குமுறைகளிலிருந்தும் தன்னுடைய விடுதலையை நிரந்தரமாக்கிக் கொள்கிறது.