நேற்று
ஜூனியர் விகடனில் இந்த செய்தி படித்து விட்டு மிகவும் அதிர்ந்து போனேன்.
கராத்தே
ஹுசைனி, ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்காக அவருடைய, அவரது மாணவர்களின் ரத்தத்தைக்
கொண்டு ஜெயலலிதாவின் சிலையை செய்துள்ளார்.
அன்னதானம், அபிஷேகம், அறுபத்தி ஐந்து அடி கேக், அலகு குத்தி தேர் இழுத்தது
என்பதிலிருந்து தான் மாறுபட்டு இருப்பதாக காண்பிப்பதற்கு இப்படி ஒரு இழி செயல்
செய்துள்ளார்.
இதற்கு முன்பு
ரத்தத்தில் ஓவியம் வரைந்ததாகவும் அதைப் பார்த்த ஜெ மகிழ்ந்து போய் 19 ஏக்கர்
நிலம் கொடுத்ததாகவும் பெருமையோடு வேறு கூறியுள்ளார். இன்னும் பெரிதாக ஏதோ
எதிர்பார்த்தே இதை செய்துள்ளார் என்பதை சொல்லாமல் சொல்லி விட்டார்.
மனித உயிர்
பற்றிய புரிதல் சிறிதும் இல்லாமல், மனித ரத்ததின் மகத்துவம் தெரியாமல் செய்யப்பட்ட
மட்டமான வேலை இது. ரத்தம் கிடைக்காமல் எத்தனையோ உயிர்கள் அன்றாடம் பலியாகிறது.
அவசரமாக ரத்தம் வேண்டும் என்பதற்காக திண்டாடுபவர்கள் எத்தனையோ பேர். சி.எம்.சி
மருத்துவமனையின் ரத்த வங்கி முன்பாக அரை மணி நேரம் உட்கார்ந்திருந்தாலே ரத்த
தானத்தின் முக்கியம் புரியும்.
நாம்
அளிக்கும் ரத்தம் ஒரு உயிரைக் காப்பாற்றுகிறது என்ற உணர்வோடு ரத்த தானம் அளிக்கும்
நல்ல பழக்கம் அதிகரித்துக் கொண்டு வருகிறது. ஆனால் இவரோ? தான் கெட்டது
மட்டுமல்லாமல் தன் மாணவர்களுக்கும் ஒரு தவறான முன்னுதாரணமாக இருந்துள்ளார்.
அவர் கணக்கு
படி பார்த்தாலே கிட்டத்தட்ட எண்பது உயிர்களை காப்பாற்றக் கூடிய ரத்தம் இவரது
வக்கிர சிந்தனையால் விரயமாகி இருக்கிறது.
மனித நேய சிந்தனை கொண்ட ஒவ்வொருவரும் இந்த மலிவான செயலைக் கண்டிக்க
வேண்டும்.
ஜெயலலிதா இதனை
கண்டிக்க வேண்டும். அது மட்டுமல்ல சரியான
ஒரு இடத்திற்கு ஹூசைனியை அனுப்ப வேண்டும்.
அந்த இடம் :
மன நோய் விடுதி..