மோசமான
ஆட்சிக்கு உதாரணமாய் : மம்தாவின் மறு பெயர் அராஜகம்
மேற்கு
வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி இரண்டு ஆண்டுகளை நிறைவு
செய்துள்ளது. ஒரு ஆட்சிக் காலத்தை மதிப்பீடு செய்ய இரண்டாண்டுகள் போதாது என்று
மம்தா பானர்ஜி சொல்வதே இந்த இரண்டாண்டுகளில் அவரது ஆட்சி எதையும் சாதிக்கவில்லை
என்று அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலம்தான்.
விவசாயிகள்
தற்கொலை, மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் தாக்குதல், தொண்டர்களை கொல்வது, வேலை
நிறுத்தப் போராட்டங்களில் பங்கேற்றவர்கள் மீது பொய் வழக்குகள் தொடுத்தல்,
மத்தியரசுக்கு மிரட்டல் நாடகங்கள், எதிராக குரல் கொடுப்பவர்களை மாவோயிஸ்ட் என
முத்திரை குத்துதல், கேலிச்சித்திரத்தை ரசித்ததற்கு சிறைத் தண்டனை, அடி உதை, கைது
செய்யப்பட்ட கட்சிக்காரனை லாக்கப்பை திறந்து விடுதலை போன்றவை அவரது முதலாமாண்டின் சிறப்பம்சம் என்றால்
இரண்டாம் ஆண்டில் அவர் சாதித்தது இன்னும் அதிகம்.
கேள்வி
கேட்ட மாணவி டானியா சச்தேவை மாவோயிஸ்ட் என்று கடந்தாண்டு சாடிய மம்தா, கேள்வி
கேட்ட ஒரு விவசாயியை அங்கே கைது செய்ய ஆணையிட்டு தனது அராஜகத்தை
வெளிப்படுத்தினார். பாலியல் கொடுமைகள் அதிகரித்து வரும் வேளையில் மக்கள் தொகை
அதிகரிக்கும் போது பாலியல் வன்கொடுமைகளும் அதிகரிக்கத்தான் செய்யும் என்று
பொறுப்பில்லாமல் பேசினார்.
மத்திய
அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்வேன் என்ற மிரட்டல் நாடகத்தை ஒரு கட்டத்திற்கு
மேல் தொடர முடியவில்லை. புலி வருகுது என்ற புரளியை உருவாக்கிய சிறுவன் இறுதியில்
புலிக்கு பலியானது போல திரிணாமுல் காங்கிரஸ் ஒரு கட்டத்தில் மத்திய அமைச்சரவையிலிருந்தே வெளியேற நேரிட்டது.
கல்லூரி
தேர்தல் நடத்த வேண்டும் என்பதற்காக அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த
மாணவர் சங்கத் தோழர்கள் மீது மம்தாவின் காவல்துறை மிருகத்தனமாக தாக்கியதில் சுதிப்தா
சென் குப்தா என்ற மாணவர் சங்கத் தலைவர் இறந்து போனார். அது ஒரு விபத்து என்று
காவல்துறை சாதிக்கையில் அற்பமான சம்பவம் என்று முதலமைச்சர் கூறினார்.
காவல்துறையின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் ஒரு இளைஞன் இறந்து போவது
அற்பத்தமானது என்று சொல்வது அவரது அற்பத்தனமான குணாம்சத்திற்கு எடுத்துக்காட்டு.
இந்த
சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள மாணவர்கள் மம்தாவிற்கும் நிதியமைச்சருக்கும்
எதிர்ப்பு தெரிவிக்கையில் நேர்ந்த தள்ளுமுள்ளுவின் எதிர்வினையாக திரிணாமுல்
கட்சியின் குண்டர்கள் மேற்கு வங்கத்தில் வெறியாட்டம் ஆடினர். ஆயிரத்திற்கும்
மேற்பட்ட மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கொல்கத்தா
நகரின் சிறப்பான பிரஸிடென்ஸி பல்கலைக் கழகத்திலும் திரிணாமுல் குண்டர்களின்
வன்முறை தாக்குதல் நிகழ்ந்தது.
மார்க்சிஸ்ட்
கட்சியின் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற ஏகாதிபத்திய விருப்பத்தை நிறைவேற்ற
மம்தாவிற்கு துணை நிற்க ஆளுனராக அனுப்பப்பட்ட முன்னாள் உளவுத்துறை அதிகாரி
எம்.கே.நாராயணனே குண்டர்கள் ஆட்சி நடக்கிறது என்று சொல்ல வேண்டியிருந்தது.
இந்த
ஆட்சியின் ஊழல் முகமும் இப்போது அம்பலமாகி விட்டது. சாரதா குழுமம் என்ற தனியார்
சீட்டு கம்பெனி மக்களிடமிருந்து கோடிக் கணக்கில் பணத்தை வசூலித்து மோசடி செய்து
விட்டது. அவர்கள் வசூலித்த பணத்தில் திரிணாமுல் கட்சித் தலைவர்களுக்கு பங்கு
இருக்கிறது என்ற தகவல்கள் அம்பலமாகியுள்ளது. மம்தா பானர்ஜி வரைந்த ஓவியங்களை பல
லட்சம் ரூபாய் கொடுத்து இந்த கம்பெனி உரிமையாளர் சுதிப்தா சென் வாங்கியுள்ளதும்
தெரிய வருகிறது. லியர்னாடோ டாவின்ஸி, பிக்காஸோ, மைக்கேல் ஏஞ்சலோ போன்ற உலகப் புகழ்
பெற்ற ஓவியர்களின் ஓவியங்களுக்குக் கூட இந்தியாவில் இவ்வளவு விலை கொடுத்து யாரும்
வாங்கியதில்லை. லஞ்சம் வாங்குவதற்கு மம்தா கண்டுபிடித்துள்ள புதிய உத்தி இது
போலும்.
தங்கள்
சேமிப்பை இழந்த மக்களுக்கு நியாயம் கிடைக்க மம்தா அரசு எந்த நடவடிக்கையும்
எடுக்கவில்லை. சாரதா குழுமத்தின் சொத்துக்களை கைப்பற்றுவதற்குப் பதிலாக, அவரது
கட்சிக்காரர்களிடம் இருக்கிற சுதிப்தாசென்னின் பணத்தை பறிமுதல் செய்வதற்குப்
பதிலாக பாவ வரி என்று கூடுதல் சுமையை
மக்கள் மீது சுமத்தியுள்ளார்.
அனைத்து
அம்சங்களிலும் தோற்றுப்போன அரசாகவே மம்தாவின் ஆட்சி காட்சியளிக்கிறது. அவரது
செல்வாக்கு குறைந்து வருகிறது என்பதை இடைத் தேர்தல் முடிவுகளும் காண்பிக்கிறது. அவரது ஆதரவு தளம்
கரைந்து கொண்டு வருகிறது என்பதை உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளும் அம்பலப் படுத்தி
விடுமோ என்ற அச்சத்திலேயே அதனையும் தள்ளிப் போடப் பார்க்கிறார். மின்மினிப்
பூச்சியை ஓளி தரும் தீபமாக நம்பி ஏமாந்த மேற்கு வங்க மக்கள் தங்கள் தவறுகளை
திருத்திக்கொள்ளும் காலம் நெருங்கிக் கொண்டே இருக்கிறது.
பின் குறிப்பு : ஜெ அம்மையாரின் ஆட்சி என்று நினைத்து படிக்க
வந்திருந்தால் ஏமாற்றமடைய வேண்டாம். அந்த ஆட்சி பற்றியும்
எழுதுவேன்