கொரோனா
இரண்டாம் அலையின் எண்ணற்ற துயரங்கள்,
மோடி
அரசின் தொடர் தாக்குதல்,
தனியார்மயமாக்கல்,
பணமயமாக்கல் என தேசத்தின் சொத்துக்கள் விற்பனை,
காஷ்மீர்
பிரச்சினைக்கு தீர்வில்லாமை,
எண்ணற்ற
ஆளுமைகளின் மறைவு,
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
கொரோனா
இரண்டாம் அலையின் எண்ணற்ற துயரங்கள்,
மோடி
அரசின் தொடர் தாக்குதல்,
தனியார்மயமாக்கல்,
பணமயமாக்கல் என தேசத்தின் சொத்துக்கள் விற்பனை,
காஷ்மீர்
பிரச்சினைக்கு தீர்வில்லாமை,
எண்ணற்ற
ஆளுமைகளின் மறைவு,
இம்மாத துவக்கத்தில் இந்திய ராணுவம் நாகாலாந்தில் 12 அப்பாவி மக்களை படு கொலை செய்து ராணுவ அதிகார சிறப்புச் சட்டத்தினால் நடவடிக்கை இல்லாமல் தப்பித்ததையும் நாம் மறந்திருக்க முடியாது.
AFSPA ரத்து செய்யப்பட வேண்டும் என்ற குரல் அங்கே ஒலித்தது. மாநில முதலமைச்சர் கூட வலியுறுத்தினார்.
ஆனால் அச்சட்டம் நாகாலாந்தில் மேலும் ஆறு மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்று மாநில அரசே ஆணை பிறப்பித்துள்ளது.
இதை இரட்டை வேடம் என்று சொல்லாமல் வேறெப்படி அழைப்பது?
போராடும் மக்களை ஒடுக்க ராணுவ சிறப்புச்சட்டம் இருப்பது நல்லது என்று மாநில அரசு முடிவெடுத்ததா?
அல்லது
படுகொலைகள் அங்கே பழக்கமாகி விட்டதா?
இன்று காலை ஆங்கில இந்து நாளிதழில் முதல் பக்கம் கீழே உள்ள விளம்பரத்தைப் பார்த்தேன்.
ஒரு சவரன் தங்கம் ரூபாய் 2,022 என்று அந்த விளம்பரம் சொல்கிறது. ஒரு சவரனுக்கு முப்பதாயிரம் ரூபாய் குறைத்து தரும் நல்லவர்களா என்ற சந்தேகத்தோடு அந்த விளம்பரத்தை முழுமையாக படித்தேன்.
01.01.2022 அன்று மட்டுமே இந்த சலுகை . . .
அந்த கடையின் நான்கு கிளைகளில் மட்டும்தான் இந்த சலுகை விலையாம்.
இந்த சலுகை நான்கு மணி நேரத்துக்கு ஒருவர் என்ற அடிப்படையில் மூவருக்குத் தரப்படும்.
ஆக மொத்தம் 12 பேருக்கு தரப்படும்.
சலுகை விலையால் அந்த கடைக்கு இழப்பு 3,60,000 ரூபாய்.
அந்த சலுகை யாருக்குக் கிடைக்கும்?
குறைந்த பட்சம் ஐயாயிரம் ரூபாய்க்கு தங்கம் வாங்குபவருக்கு ஒரு சீட்டு தரப்படும். அந்த சீட்டில் அந்த கடைக்கு ஒரு விளம்பர முழக்கம் எழுதித் தர வேண்டும். அப்படி ஐயாயிரம் ரூபாய்க்கு நகை வாங்கி விளம்பர முழக்கம் எழுதித் தந்தால் அந்த முழக்கம் திருப்தியாக இருந்தால் நான்கு மணி நேரத்துக்கு ஒருவருக்கு சலுகை விலையில் தங்கம் விற்கப்படும்.
அதிர்ஷ்டக் குலுக்கல் கிடையாது. தகுதியான விளம்பர முழக்கத்திற்கே சலுகை விலை என்று சொல்லி விட்டது.
2022 ரூபாய்க்கு ஒரு சவரன் என்ற ஆசையை தூண்டி விட்டாயிற்று.
விளம்பர
வாசகத்தின் அடிப்படையில் பரிசு என்று சொல்லியாகி விட்டது.
பிறகென்ன
நம் மக்கள் தங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்காதா என்று ஐயாயிரம் ரூபாய்க்கு தங்கம் வாங்கிக்
குவிக்கப் போகிறார்கள்.
நான் விளம்பரத்தைப் பார்த்தது ஆங்கில இந்து நாளிதழில். இன்னும் எத்தனை நாளிதழ்களில் வந்துள்ளதோ? நாளையும் வெளி வரலாம். அவர்கள் செலவழிக்கும் 3,60,000 ரூபாயை விட விளம்பரக் கட்டணமே பல மடங்கு இருக்கும்! சலுகை தருவது என்பது ஜூம்லா. அதன் பேரில் ஐயாயிரம் ரூபாய்க்கு தங்கம் வாங்க கூட்டத்தை சேர்ப்பதுதான்.
இதுவும் ஒரு வகை சதுரங்க வேட்டைதானே!
பிகு: அந்த கடைக்கு நாம் வேறு விளம்பரம் தர வேண்டுமா என்று அக்கடையின் பெயர் விலாசத்தையெல்லாம் நீக்கி விட்டேன். திருவண்ணாமலை, புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் ஆகிய ஊர்க்காரர்கள் மட்டும் உஷாராக இருக்கவும்.
மேலே பச்சைப் பசேலென்று காட்சியளிக்கும் வயல் வெளி வெண்மணியில் உள்ளது. மிகச் சரியாக சொல்ல வேண்டுமென்றால் வெண்மணி ஊரின் நுழைவாயில் வளைவிலிருந்து தியாகிகள் நினைவிடம் செல்லும் வழியில் உள்ளது.
இப்போதே இவ்வளவு செழிப்பாக உக்ளதே, ஐம்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்திருக்கும்! அப்போதெல்லாம் காவிரி நதி நீர் பிரச்சினை எல்லாம் வேறு கிடையாது.
அவ்வளவு செழிப்பாக உள்ள ஊரில் அரைப்படி நெல் கூலி உயர்வு தருவதில் எந்த பிரச்சினையும் இருந்திருக்காது.
ஆனாலும் மறுத்தார்கள்.
ஏன்?
அரைபடி நெல் கூலி உயர்வு தருவது சிக்கலில்லை. அந்த உயர்வை செங்கொடி அமைப்பில் இணைந்து கேட்டதுதான் சிக்கல்.
செங்கொடியை அந்த கிராமத்தில் பறக்கவிட்டதுதான் ஜமீன்தார்கள் பார்வையில் தவறு.
விவசாயிகள் சங்கத்தின் செங்கொடியை கீழிறக்கி, நெல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மஞ்சள் கொடியை பறக்க விட்டால் கோரிக்கையைக் காட்டிலும் கூடுதல் உயர்வு தருவதாக ஆசை காண்பிக்க செங்கொடியின் வீரப் புதல்வர்கள் அந்த முன்மொழிவை நிராகரித்தார்கள்.
எங்களை மனிதர்களாக மதித்தவர்கள் செங்கொடி இயக்கத்தைச் சார்ந்தவர்கள்தான். அதனால் செங்கொடி இயக்கத்தை விட்டு விலகுவதோ செங்கொடியை இறக்குவதோ நடக்காத கதை என்று உறுதிபட தெரிவித்தார்கள்.
அதனால்தான் கோபால கிருஷ்ண நாயுடுவும் இதர நிலக்கிழார்களும் வெறி கொண்டு தாக்கினர். 44 பேரை உயிரோடு கொளுத்தினார்கள்.
இன்று என்ன நிலை?
ஒரு செங்கொடியை கீழிறக்க நினைத்த இடத்திலே ஊரெங்கும் செங்கொடிகள்….
அந்த கண்கொள்ளா காட்சியை நீங்களும் கண்டு ரசியுங்கள்.
இந்தாண்டு கேரளாவுக்கு சட்டப் பேரவைத் தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய உ.பி முதல்வர் மொட்டைச் சாமியார் வந்திருந்தார். “சுகாதாரக் கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை கற்றுக் கொள்ள உத்திரப் பிரதேசத்திற்கு வாருங்கள்” என்று அப்போது அவர் தோழர் பினராயி விஜயனை பொது மேடையில் பகிரங்கமாக நக்கல் செய்தார்.
திட்டக் கமிஷனுக்கு மாற்றாக மோடியால் உருவாக்கப்பட்ட “நிதி ஆயோக்” சுகாதாரக் கட்டமைப்பு வசதிகள், மருத்துவ மனைகள் தரம் ஆகியவை எப்படி உள்ளன என்ற தர வரிசைப் பட்டியலை நேற்று முன் தினம் வெளியிட்டுள்ளது. பெரிய மாநிலங்கள், சிறிய மாநிலங்கள் என்று இரண்டாக பிரிக்கப்பட்டு தர வரிசை அளிக்கப்பட்டுள்ளது.
பெரிய மாநிலங்களுக்கான பட்டியலில் முதலிடம் பெற்றுள்ள மாநிலம் பினராயி விஜயன் முதலமைச்சராக இருக்கிற கேரளாதான்.
பினராயி விஜயனுக்கு சுகாதாரக் கட்டமைப்பு தொடர்பாக கற்றுத் தருவதாக சவடால் பேசிய மொட்டைச் சாமியார் முதலமைச்சராக இருக்கிற உத்திரப் பிரதேசம்தான்.
நிதி ஆயோக்கின் இணைய தளத்திலிருந்தே நேரடியாக தரவிறக்கிய அந்த பட்டியல் இதோ…
அதைப்
பார்த்தால் இன்னொரு உண்மையும் தெரியும்.
முந்தைய
வருடத்தில் கூட கேரளா முதலிடத்திலும் உபி கடைசி இடத்தில்தான் இருந்திருக்கிறது.
ஆனாலும்
கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் மொட்டைச் சாமியார் சவடால் விட்டுள்ளார்.
மோடியின்
சிஷ்யன் வேறெப்படி இருப்பார்!!!!
பிகு:
“இந்த மண் கோட்டையை நம்பியா மனக்கோட்டை கட்டினான்” என்ற வசனம் பொருத்தமாக இருக்கும்
என்பதற்கே இப்படம். மற்றபடி தோழர் விஜயன் பானர்மேன் அல்ல, யோகியும் கட்ட பொம்மன் அல்ல.
மெட்ரோ ரயிலில் செல்பவருக்கு கீழே யார் உள்ளார்கள் என்பது தெரியாது. கீழே உள்ளவர்களுக்கு ரயிலில் போவது யார் என்று தெரியாது.
அதற்குப் பதிலாக உங்களை விதம் விதமாக படமெடுக்கும் புகைப்படக் காரர்களைப் பார்த்தாவது கையாட்டி இருக்கலாம்!
நன்றி கெட்ட மனிதனய்யா நீர்!
அன்னை தெரசாவின் “மிஷன் ஆஃப் சேரிட்டிஸ்” அமைப்பு வெளி நாட்டிலிருந்து நிதியுதவி பெறுவதற்கான அனுமதியை ஒன்றிய உள்துறை அமைச்சகம் புதுப்பிக்க மறுத்துள்ளது.
இந்தியா முழுதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஆதரவற்றோருக்காக, தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அன்னை தெரசா வழியில் சேவை செய்து கொண்டிருக்கும் அமைப்பு “மிஷன் ஆப் சேரிட்டிஸ்”. அல்பேனிய நாட்டில் பிறந்து இந்தியாவில் சேவை செய்தவர் அவர். இந்தியாவில் மட்டுமல்லாமல் ஏராளமான வெளி நாடுகளிலும் செயல்படும் அமைப்பு அது.
பஞ்சாபில் சமீபத்தில் நடைபெற்று வரும் அரசியல் குழப்பங்களுக்குக் காரணமான நவ்ஜோத் சிங் சித்து எரிச்சலூட்டும் ஒரு நபர். ஆனால் அவருடைய பதிவு ஒன்று முக்கியமானது. அதனை பகிர்ந்து கொள்கிறேன்.
வேலூரில் கூட மிஷன் ஆப் சேரிட்டிஸ் நடத்தும் ஒரு இல்லம் உள்ளது. சர்வ தேச மகளிர் தினத்தை ஒட்டி ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது இல்லத்திற்கு பொருளுதவி செய்வது எங்கள் சங்கத்தின் பாரம்பரியம். அப்படி ஒரு ஆண்டு வேலூர் சேண்பாக்கத்தில் உள்ள இல்லத்திற்குச் சென்றோம்.. வயது முதிர்ந்த, குடும்பத்தால் கைவிடப்பட்ட மன நலம் பாதிக்கப்பட்ட, பெண்களுக்கான இல்லம் அது. சுமார் நூறு பேருக்கு குறையாமல் அங்கே இருந்தார்கள். ஒரு புறம் மனம் கனத்துப் போனாலும் அந்த சூழலில் இருந்து எவ்வளவு விரைவாக வெளியேற முடியுமோ, அவ்வளவு விரைவாக வெளி வர வேண்டும் என்றுதான் தோன்றியது.
சாதாரண தொண்டு அமைப்புக்களால் செய்ய இயலாதவற்றைத்தான் அவர்கள் செய்து வருகிறார்கள்.
அனுமதி ரத்துக்கான காரணம் என்ன?
சில தவறுகள் நடக்கிறது என்று உள்துறை அமைச்சகம் பொத்தாம் பொதுவாக சொல்கிறதே தவிர, விபரம் எதையும் பொது வெளியிலும் கூறவில்லை. அந்த அமைப்பிடமும் தெரிவிக்கவில்லை.
மீண்டும் மீண்டும் முன் வைக்கப்படுகிற புளித்துப் போன வாதமான “மத மாற்றம் செய்கிறார்கள்” என்ற ப்ழைய கட்டுக்கதையை சிலர் தூசி தட்டி பேசத் தொடங்கியுள்ளனர். ஸ்டெய்ன்ஸ் பாதிரியாரையும் அவரது இரு மகன்களையும் உயிரோடு கொளுத்தியதை நியாயப்படுத்தவும் இதே கட்டுக்கதையைத்தான் அளந்து விட்டார்கள். அந்த கொலைக்கு திட்டமிட்டுக் கொடுத்த முதல் குற்றவாளி இப்போது மோடியின் மந்திரி.
மற்றவர்கள் ஆசை காண்பித்தால் மாறுகிறது போலத்தான் தங்கள் மதம் பலவீனமாக இருக்கிறதா என்ற கேள்வியை சங்கிகள் எப்போதாவது தங்கள் மனதிடமாவது கேட்டிருப்பார்களா? சமத்துவத்தை எல்லா அம்சங்களிலும் கொண்டு வர சிறு துரும்பையாவது கிள்ளிப் போட்டிருப்பார்களா?
சரி, அதெல்லாம் இருக்கட்டும்.
அன்னை தெரசாவின் அமைப்பு செய்து வருவது போன்ற பணி எதையாவது சங்கிகளின் அமைப்பு எப்போதாவது செய்திருக்கிறதா?
இந்த கேள்வியை கேட்பதில் ஒரு காரணம் உள்ளது.
இந்தியாவிலேயே அதிகமாக வெளி நாட்டு நிதி பெறுவது யார் தெரியுமா?
அது ஆர்.எஸ்.எஸ் அமைப்புதான்.
அது பற்றி விரிவாக ஒரு பதிவு எழுத வேண்டும். முன்னோட்டமாக ஒரே ஒரு தகவல்
கோரோனா நிவாரண உதவிக்காக ஓராண்டில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஒரு அங்கமான சேவா பாரதி பெற்ற வெளி நாட்டு நிதி 22 மில்லியன் டாலர், இன்றைய ரூபாய் மதிப்பில் 164 கோடி ரூபாய். இந்த 164 கோடி ரூபாய் எதற்காக, எப்படி, எங்கே செலவிடப்பட்டது என்று கணக்கு கேட்குமா உள்துறை அமைச்சகம்? ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நோக்கம் என்ன என்பதை அறியாதவர்களா நாம்!
இன்றைய ஆட்சியாளர்களின் உள்ளத்தில் ஊறிப் போன மத வெறி தவிர வேறேதும் காரணமில்லை. அவர்களின் சேவையை முடக்குவதில் ஒரு அற்ப சந்தோஷம்.
குழந்தைகளை காக்க கடுமையாக போராடிய டாக்டர் கபீல் கானை பணி நீக்கம் செய்த ஆள்கள்தானே இவர்கள்!
அன்னை தெரசா காவியுடை அணிந்தவராக இருந்திருந்தாலோ, கோவை காருண்யா ஆட்கள் போல இவர்களுக்கு தலையாட்டுபவராக இருந்தால் அனுமதி தொடர்ந்திருக்கும், ஏன் அரசே அதிகமான நிதி கூட சேகரித்துக் கொடுத்திருக்கும்.
பிகு: மேலே உள்ளது அன்னை தெரசா அவர்களின் சமாதி. கொல்கத்தா சென்றிருந்த போது எடுத்த படம்.
அன்றிலிருந்து இன்று வரை
சென்னை புத்தக விழா வரும் போதெல்லாம் எப்படி இலக்கிய சர்ச்சைகள் வெடிக்குமோ, அது போல வெண்மணி தியாகிகள் தினம் வரும் போதெல்லாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீதான அவதூறுகளை முகநூலில் மட்டும் செயல்படும் தீவிர புரட்சியாளர்கள் புறப்பட்டு விடுவார்கள்.
அவர்கள் எல்லாம் என்றைக்கும் எந்த களப் போராட்டத்திலும் ஈடுபட மாட்டார்கள். விலைவாசி உயர்வு தொடங்கி வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் வரை ஒரு சாதாரண ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் கூட கலந்து கொள்ள மாட்டார்கள். அவர்களின் இயக்கம் எல்லாமே முக நூலில் பதிவெழுதுவதோடு முடிந்து போய் விடும். வெண்மணி தினம் வரும் போது அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சாடுகிற போது, “ஆஹா, இவர்கள் அல்லவா கம்யூனிஸ்டுகள், இன்னும் ஓரிரு நாளில் இவர்கள் புரட்சியைக் கொண்டு வந்து விடுவார்கள்” என்ற பிரமை நமக்கே வந்து விடும்.
இவர்களின் வீரம் மார்க்சிஸ்டுகளை வசை பாடுவதோடு நின்று போய் விடும் என்பதை நீங்கள் உணரும் போது அந்த பழைய புரட்சியாளர்கள் காணாமல் போய், புதிய புரட்சியாளர்கள் அவதாரமெடுத்திருப்பார்கள்.
இவர்களுக்கெல்லாம் தனித்தனியாக பதிலெழுத வேண்டிய அவசியம் இல்லை. தமுஎகச வின் மதிப்புறு தலைவர் தோழர் ச.தமிழ்ச்செல்வன் இரண்டாண்டுகளுக்கு முன்பு எழுதியதை பகிர்ந்து கொண்டாலே போதுமானது.
அவரது பதிவு இங்கே . . .
வெண்மணியில் சிபிஎம் தோழர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும்தான் எரிக்கப்பட்டனர். அவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் என்பதை எரித்த கோபாலகிருஷ்ண நாயுடுவும் 23 மிராசுதார்களும் அன்று ஏற்கவே இல்லை.
கம்யூனிஸ்ட்டாவது புடலங்காயாவது.. அவனுங்க பள்ளுப் பறையனுங்கதான் என்று கோபாலகிருஷ்ண நாயுடு ஊர் ஊராகப்போய் பிரச்சாரம் செய்தான்.
அதே பிரச்சாரத்தை இப்போது முகநூலிலும் பத்திரிகைகளிலும் நாம் தோழமை எனக் கருதுவோர் சிலர் செய்து வருகிறார்கள்.
ஆனால்,நாம் எல்லாச் சாதியிலும் பிறந்தவராக இருக்கும் தோழர்கள் அந்த 44 கம்யூனிஸ்ட்டுகளுக்கும் வீர வணக்கம் செய்துவிட்டுத் திரும்பிக்கொண்டிருக்கிறோம் - எரியும் நினைவுகளோடு....
தஞ்சை மண்ணில் பள்ளன் கட்சி, பறையன் கட்சி என்கிற பெருமையைப் பெற்ற இயக்கம் கம்யூனிஸ்ட் இயக்கம். "அடங்க மறு அத்துமீறு" என்று இன்று நாம் எழுப்பும் முழக்கங்களுக்கெல்லாம் அடியுரமாக அமைந்தது அன்று தோழர் சீனிவாசராவ் எழுப்பிய "அடிச்சா திருப்பி அடி", " ஏன்டின்னு கூப்பிட்டா என்னடான்னு பதில் சொல்லு" என்கிற ஆவேச முழக்கங்கள்தாம்.
"வெண்மணியில் கொல்லப்பட்ட 44 பேரில் ஒருவர்கூட தாழ்த்தப்பட்டவர் அல்லாதவர் இல்லையே ஏன் தோழர்" என்று வரலாற்றிடம் கேட்க வேண்டிய கேள்வியை பலி கொடுத்த நம்மை நோக்கிச் சிலர் கேட்பது அவர்களின் அரசியல் தேவைக்காக என்பதை நாம் பதட்டமின்றி எதிர்கொள்ள வேண்டும்.
கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கும் இவர்களுக்கும் இருக்கும் பொதுவான நோக்கம் செங்கொடியைக் கீழே இறக்க வைப்பதுதான் என்பது புரியாமலா இருக்கிறது நமக்கு?
ஒருமுறை புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி டெல்லி சென்று அன்றைய சிபிஎம் பொதுச்செயலாளர் தோழர் சுர்ஜித்தை சந்தித்து தங்கள் இயக்கத்தை சிபிஎம் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டபோது, சுர்ஜித் சிரித்தபடி மென்மையாகக் கூறியது: ”நாங்களே தலித் மக்களின் இயக்கமாக இருக்கும்போது நீங்கள்தான் எங்களை ஆதரிக்க வேண்டும்”
செங்கொடி இயக்கம் மட்டுமல்ல, திராவிட விவசாயத் தொழிலாளர் இயக்கமும் பெருவாரியாக தாழ்த்தப்பட்ட மக்களைக் கொண்ட இயக்கமாகவும் அதே சமயம் எல்லாச் சாதியினரையும் தோழர்களாகக் கொண்டிருந்த இயக்கமாக அன்று இருந்ததும் வரலாறு.
தஞ்சை மண்ணில் தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக பண்பாட்டு மற்றும் பொருளாதார விடுதலைக்கான போரை முன்னெடுத்த இயக்கத்தில் தம் இன்னுயிரை ஈந்த மற்றும் சிறைசென்று சித்திரவதைப்பட்ட தலைவர்கள் / தோழர்களின் பட்டியலைப் பாருங்கள்...
வாட்டாக்குடி இரணியன் -சுட்டுக்கொலை
ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் -சுட்டுக்கொலை
ஜாம்புவானோடை சிவராமன் -சுட்டுக்கொலை
சேரங்குளம் அமிர்தலிங்கம்,
ஆம்பலாப்பட்டு முருகையன்,
மணலி கந்தசாமி,
சாகும்வரை கையில் போலீஸ் சுட்ட குண்டுகளை ஏந்தியிருந்த தோழர் ஏ.எம்.கோபு,
கொல்லப்பட்ட தோழர் என்.வெங்கடாசலம்,
கே.ஆர்.ஞானசம்பந்தன்,
கோ.பாரதிமோகன்,
சமீபத்தில் மறைந்த தோழர் கோ.வீரய்யன்,
ஏ.ஜி.கஸ்தூரிரங்கன்,
பாவா நவநீதகிருஷ்ணன்
என தாழ்த்தப்பட்ட சமூகம் அல்லாத பிற சமூகங்களில் பிறந்த தோழர்கள். இவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். கடைசி இருவர் பெரியாரிஸ்ட்டுகள். உங்கள் பாஷையில் சொன்னாலாவது மனம் இரங்கி ஏற்க மாட்டீர்களா என்பதற்காக இதை வருத்தத்துடன்தான் பதிவிடுகிறோம்.
பண்ணையார்களுக்கும் கோவில் மடங்களுக்கும் ஜமீந்தார்களுக்கும் எதிரான வர்க்கப் போரில் தலித் மற்றும் தலித் அல்லாத சமூகத்தினர் கரம் கோர்த்து நின்ற வர்க்கப்போராட்ட வரலாறு தஞ்சை மண்ணுக்குரியது. அதன் உச்சம்தான் வெண்மணி. தலித்துகளுக்காக தலித் அல்லாதவர் ரத்தம் சிந்திய பாரம்பரியம் தஞ்சை மண்ணுக்குரியது. அதை மேலும் வளர்த்தெடுப்பதுதானே தலித் விடுதலையின் மீது அக்கறையுள்ளவர்கள் உண்மையில் செய்ய வேண்டிய காரியம். தந்திர ரீதியாகவும் அதுதானே வெற்றி தரும். விமர்சனங்கள் இருக்கலாம். அதை விவாதிக்கலாம். செங்கொடி இயக்கம் சுயவிமர்சனத்தைப் பொக்கிஷமாகக் கருதும் இயக்கம்தான்.
ஆனால், "அதை நாங்க மட்டும் பாத்துக்கிர்றோம். நீங்க வேண்டாம்” என்று கத்தரித்துவிடும் வாதங்கள் நம் பொதுவான நோக்கத்துக்கு ஊறு விளைவிக்கும். உசுப்பேத்தும் நக்கல்களையும் நிதானத்துடன் எதிர்கொள்வோம். தஞ்சை மண்ணின் அசலான பாரம்பரியத்தை செங்கொடி ஏந்தி கறுப்பு மற்றும் நீலக் கொடிகளையும் தோழமையுடன் இணைத்துக்கொண்டு முன்னேறுவோம்.
காலம் நமக்கிடும் கட்டளை இதுவே.
-ச. தமிழ்ச்செல்வன்