Thursday, March 31, 2011

கொல்றாங்க கொல்றாங்க - அன்று, அடிக்கிறான் அடிக்கிறான் - இன்று

திரைப்பட  இயக்குனர் ஷங்கர்  வெட்கப்பட வேண்டும்.  அவரால் கூட 
இப்படி  படம்  எடுக்க முடியாது. ஈரைப் பேனாக்கி  பேனை பெருமாளுக்குவது  திமுகவால்  மட்டுமே  சாத்தியம்.  
நள்ளிரவு கைதின்போது  கொல்றாங்களே, கொல்றாங்களே  என்று 
டப்பிங் வாய்ஸ்  சேர்த்து  அனுதாபத்தை  தேடிக் கொண்டவர்கள்  
இப்போது விஜயகாந்த் ( வேட்பாளரா அல்லது உதவியாளரா அல்லது 
மைக்செட்காரரா?) பலமுறை  ஒருவரை அடிப்பது  போல காட்டி 
அவர் மீது வெறுப்பை  உருவாக்க முயற்சிக்கின்றனர்.  எடுத்த
படத்தை  அப்படியே போட்டிருந்தாலாவது பரவாயில்லை. 
பலமுறை  அடித்துக் கொண்டே இருப்பது போல காண்பிப்பதால் 
இரண்டாவது படிக்கும் சிறுவன் கூட சொல்கிறான் இது கிராபிக்ஸ் 
என்று. 

பாவம்  தோல்விபயம்  திமுகவை  என்னவெல்லாம்  செய்ய வைக்கிறது?  


மனைவிக்கு பதிலாக கணவன், கணவனுக்குப் பதிலாக மனைவி

இந்த காமெடியெல்லாம்  காங்கிரசில் மட்டுமே  சாத்தியம்.

தங்கபாலுவின் மனைவி மயிலாப்பூர் வேட்பாளர்.  ஆனால் அவர் வேட்பு மனுவில்  குளறுபடி  செய்ய  மாற்று வேட்பாளராக  மனு செய்திருந்த  தங்கபாலுவேஇப்போது  வேட்பாளர். தனது மனைவியின்  வேட்புமனுவைக் கூட இவரால்  சரி பார்க்க முடியவில்லையா?  அல்லது தானே வேட்பாளராக மாறுவதற்கு செய்த  குறுக்கு வழியா என்பது  அவருக்கே  வெளிச்சம்.  

கிருஷ்ணகிரி காமெடிதான்  உச்சகட்டம். ஹசீனா  என்றொரு பெயரை 
முதலில் சொல்கின்றார்கள்.  அதற்கு  எதிர்ப்பு வந்ததும் மக்பூல் ஜான் 
என்று வேறொருவரை  அறிவிக்கிறார்கள்.  மாற்றப்பட்டாலும்  ஹசீனா
வேட்புமனு  தாக்கல்  செய்கின்றார். அதிகாரபூர்வ வேட்பாளராக 
அறிவிக்கப்பட்ட  மக்பூல்ஜான்  வேட்புமனுவை  தாக்கல் செய்யவே இல்லை.   ஆகவே  ஹசீனாதான்  காங்கிரஸ் வேட்பாளர்  என்று 
சொல்லுகின்றார்கள், 

ஆனால்  ஹசீனா கடைசி நிமிடத்தில்  வேட்புமனுவை  வாபஸ் வாங்க
மாற்று  வேட்பாளராக மனு செய்த  ஹசீனாவின் கணவர்  இப்போது 
காங்கிரஸ் வேட்பாளராம்.

இப்படியெல்லாம்  காமெடி செய்யத்தான் கருணாநிதியை  மிரட்டி 
63  தொகுதிகள்  வாங்கினார்கள்  போலும். 


 

Wednesday, March 30, 2011

லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து

இன்று  மின் அஞ்சலில் வந்த விஷயம் இது. 

உமாசங்கர் போல  கருணாநிதி  அரசால் பந்தாடப்பட்ட  ஒரு 
அதிகாரியின் பேட்டி. பழைய பேட்டிதான்  ஆனாலும்  பரவாயில்லை. 
படியுங்கள். சில செய்திகள் புதிதாய் தோன்றும்.
 
 
அன்பு வேண்டுகோள், கீழே பதிந்துள்ள ஒவ்வொரு வார்த்தைகளையும் கூர்ந்து வாசியுங்கள், இந்த தேசத்தின் மீதான மிகப் பெரிய நம்பிக்கை அதில் பொதிந்து கிடக்கிறது
 
 
 
''என்னை கோயம்புத்தூருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணியிருந்த நேரம். என் பொண்ணு யாழினிக்கு அப்போ மூணு வயசு. திடீர்னு ஒருநாள் ராத்திரி அவ மூச்சுவிட சிரமப்பட்டா. ஹாஸ் பிடலுக்குத் தூக்கிட்டுப் போனா உடனே அட்மிட் பண்ணச் சொல்லிட் டாங்க. மாசக் கடைசிங்கிறதால கையில ஆயிரம் ரூபாய்கூட இல்லை. புது ஊரு. அறிமுகம் இல்லாத மனுசங்க. எனக்குக் கீழே வேலை பார்க்குறவங்ககிட்ட கடன் கேட்கவும் சங்கடமா இருந்துச்சு. காஞ்சிபுரத்துல நான் வேலை பார்த்துட்டு இருந்தப்ப, எனக்கு நண்பரான ஒரு ஸ்கூல் டீச்சரும் அப்ப கோவைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வந்திருந்தாரு. அவர்கிட்ட தயங்கிட்டே நாலாயிரம் ரூபாய் கடன் கேட்கவும், அரை மணி நேரத்துல கொண்டுவந்து கொடுத்தார். உடனே, குழந்தைக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சுட்டோம். ஆனா, சம்பளம் வாங்கினதும் அந்தக் கடனை அடைச்சதும்தான் என் மனசுல இருந்த பாரம் இறங்குச்சு!''
 
 
 
சகாயம் ஐ.ஏ.எஸ்., நாமக்கல் மாவட்ட ஆட்சியர். மதுரையில் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில் எல்.ஐ.சி. ஹவுஸிங் லோன் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடு, வங்கியில் 7,172 ரூபாய் சேமிப்பு எனப் பகிரங்கமாகத் தனது<http://www.deccanchronicle.com/chennai/dt-collector-declares-assets-210> சொத்துப் பட்டியலை வெளியிட்ட இந்தியாவின் முதல் ஐ.ஏ.எஸ்., <http://www.deccanchronicle.com/chennai/dt-collector-declares-assets-210> அதிகாரி சகாயம். 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' வாசகத்துக்குக் கீழ் தலை நிமிர்ந்து அமர்ந்திருக்கிறார் சகாயம்.
 
''நான் அந்த கோயம்புத்தூர் சம்பவத்தை ஏன் சொல்றேன்னா... அப்ப என் கன்ட்ரோல்ல 650 மதுபானக் கடைகள் இருந்தன. லைசென்ஸ் புதுப்பிக்க கடைக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய்னு கொடுக்கத் தயரா இருந்தாங்க. நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, அடுத்த அஞ்சாவது நிமிஷம் 65 லட்ச ரூபாய் என் வீடு தேடி வந்திருக்கும். ஆயிரம் ரூபாய்கூட கையில் இல்லாத, மகளுக்கு உடம்பு சரியில்லாத சூழ்நிலையில் மனநிலை என்ன மாதிரி இருக்கும்னு யோசிச்சுப்பாருங்க. ஆனா, அதெல்லாம்தான் ஓர் அரசு அதிகாரியின் நேர்மைக்கான சோதனை. நேர்மையா இருக்குறதுல ஒரே ஒரு சிக்கல் மட்டும்தான். நாளுக்கு நாள் நமக்கு எதிரிகள் அதிகரிச்சுட்டே போவாங்க. அவங்களை மட்டும் சமாளிச்சுட்டாப் போதும்!'' - தடதடக்கும் வார்த்தைகளில் கொப்பளிக்கிறது உற்சாகம்.
 
''புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுனை குக்கிராமம்தான் என் ஊரு. 'மத்தவங்க தோட்டத்து மாங்காய் தெருவுல கிடந்தாக்கூட எடுத்துட்டு வரக் கூடாது'ன்னு சொல்ற அம்மா. 'நீ படிச்சு கலெக்டர் ஆகி, உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்டா'ன்னு சொல்லிட்டே இருக்குற அப்பா. 'கலெக்டர்தானே... ஆயிடுவோம்'னு படிச்சேன். ஆயிட்டேன். வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் நம்ம மனசு எந்தளவுக்குப் புத்துணர்ச்சியோடவும் புனிதமாகவும் இருக்கோ... கடைசி நாளின்போதும் அதே உணர்ச்சியோடு ஓய்வு பெறணும்னு மட்டும் முடிவு பண்ணேன்.
 
காஞ்சிபுரத்துல டி.ஆர்.ஓ-வா இருந்தப்ப ஒரு பெரியவர் தான் வாங்கிய பெப்சியில் அழுக்குப் படலம் இருந்ததாகப் புகார் கொடுத்தார். சாம்பிளை லேப் டெஸ்ட்டுக்கு அனுப்பினதுல, 'மனிதர்கள் குடிக்க ஏற்ற பானமில்லை'ன்னு ரிப்போர்ட் வந்தது. சட்டப்படி அந்த நிறுவனம் மேல என்ன நடவடிக்கை எடுக்கணும்னு ஒரு அறிக்கை தயாரிச்சேன். ரொம்ப யோசனைக்குப் பிறகு தாசில்தார்கிட்ட எட்டு பூட்டு மட்டும் வாங்கிட்டு வரச் சொன்னேன். எதுக்குன்னு புரியாம வாங்கிட்டு வந்தவரைக் கூட்டிக்கிட்டு மதுராந்தகத்துல இருக்குற பெப்சி கம்பெனிக்குப் போனேன்.
 
நான் தயாரித்த அறிக்கையின் ஒரு நகலை கம்பெனி மேனேஜர்கிட்ட கொடுத்துட்டு, 'கம்பெனியைப் பூட்டி சீல்வைக்கப் போறோம். எல்லாரையும் வெளியே வரச் சொல்லுங்க'ன்னு சொன்னோம். அந்த மேனேஜரைவிட என்கூட வந்த தாசில்தார் ஆடிப் போயிட்டாரு. 'சார்... பெரிய பிரச்னை ஆயிடும். எதுக்கும் கலெக்டரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்'னு பதறுனாரு. 'கலெக்டரைக் கேட்டா சீல்வைக்க விட மாட்டாரு. சட்டப்படி இந்தக் கம்பெனியை மூட நமக்கே அதிகாரம் இருக்கு. நீங்க தைரியமா உங்க கடமையைச் செய்யுங்க'ன்னு அவரை உள்ளே அனுப்பினேன். ஒரு மணி நேரம் கழிச்சு இன்னும் பதற்றத்தோடு வெளியே வந்தவரு, 'சார்... அவங்க அமெரிக்கா வரைக்கும் பேசுறாங்க சார். சி.எம்-கிட்ட பேசுறதாச் சொல்றாங்க சார். என்ன பண்ணலாம்?'னு கேட்டாரு. 'உள்ளே இருக்கிறவங்களை அரெஸ்ட் பண்ணிட்டு சீல்வைக்க வேண்டியதுதான்'னு நான் சொல்லவும்தான் எல்லாரும் பயந்து வெளியே வந்தாங்க. கம்பெனியை இழுத்து மூடி, எட்டு பூட்டுகளையும் போட்டு சீல்வெச்சுட்டோம்.
 
நான் உடனே அலுவலகத்துக்குப் போகாம ஒரு குக்கிராமத்துக்குப் போயி ரேஷன் கடை, பள்ளிக்கூடத்தை எல்லாம் ஆய்வு பண்ணி முடிச்சுட்டு, ராத்திரி எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன். என் மனைவி வாசல்லயே காத்துட்டு இருந்தாங்க. கலெக்டர், சீஃப் செக்ரெட்டரி, உள்துறைச் செயலாளர்னு பலரும் என்னைக் கேட்டு வீட்டுக்கு போன் பண்ணிஇருக்காங்க. நான் திரும்ப எல்லோருக்கும் போன் பண்ணா, 'யாரைக் கேட்டு சீல்வெச்சீங்க? என்ன காரியம் பண்ணியிருக்கீங்க தெரியுமா?'ன்னு எல்லாரும் கேள்வி கேட்டாங்க. 'நான் என் கடமை யைத் தான் சார் செஞ்சேன். மக்களுக்கு நல்லது செஞ்சதுக்காக சஸ்பெண்ட் பண்ணா, தாராளமாப் பண்ணிக்கோங்க'ன்னு சொல்லிட்டேன். மறு நாள் எந்தப் பத்திரிகைலயும் பெட்டிச் செய்தியாக்கூட பெப்சிக்கு சீல்வெச்ச சம்பவம் ரிப்போர்ட் செய்யப்படவே இல்லை.
ரெண்டு நாள் கழிச்சு ஜூனியர் விகடன்ல மட்டும் அந்தச் செய்தி விரிவா வந்திருந்தது. அதுக்குப் பிறகுதான் பெப்சிக்கு நான் சீல்வெச்ச விஷயமே வெளி உலகத்துக்குத் தெரிஞ்சது.
 
இதுவரை 15 இடங்களுக்கு என்னை மாத்தி மாத்திப் பந்தாடிட்டாங்க. இப்போதான் முதன்முதலா நாமக்கல் மாவட்டத்துக்கு கலெக்டர் ஆகியிருக்கேன். மாவட்டம் முழுக்க ஒரு கோடி மரக் கன்றுகள் நடத் திட்டமிட்டு, ஏழு லட்சம் மரக் கன்றுகளை நட்டாச்சு. அவற்றின் முறையான பராமரிப்புக்கும் ஏற்பாடு பண்ணியாச்சு. இன்னும் 10 வருஷத்துல அதிக மரங்கள் உள்ள மாவட்டமாக நாமக்கல் இருக்கும். ஏற்கெனவே நொந்து போயிருக்கும் விவசாயிகளை, 'குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வா'ன்னு ஒவ்வொரு மாசமும் கலெக்டர் ஆபீசுக்கு அலைக்கழிக்கிறது நல்லாவா இருக்குன்னு நானே விவசாயிகளைத் தேடிப் போக ஆரம்பிச்சேன். ஒருநாள் ராத்திரி முழுக்க அந்தந்த கிராமத்துலயே தங்கி, அவங்க குறைகளை வாழ்ந்து பார்த்துட்டு வருவேன். அப்பதான் அவங்க சொல்றதுக்கு முன்னாடியே அவங்க குறைகள் என்னன்னு நாமளே உணர முடியும்!'' என்கிற சகாயம், தன் மகள் யாழினியை மடியில் வைத்துக்கொண்டு, ''சொல்லுடா குட்டி... உயர உயரப் பற... வானம் வசப்படும்!'' என சொல்லிக் கொடுக்கிறார்.
 
''உயர உயரப் பற... வானம் ஒரு நாள் வசப்படும்'தான் கரெக்ட்!'' - திருத்திச் சிரிக்கிறாள் கலெக்டர் மகள்!

Tuesday, March 29, 2011

தாவி வா! தாவி வா ! தேர்தலில் சீட்டு பெற தாவி வா !

இந்த சட்டமன்ற  தேர்தல்  ஒரு விதத்தில்  சிறப்பானது. ஒரு கட்சியிலிருந்து  அடுத்த கட்சி மாறி வந்தவர்களுக்கு  தேர்தலில் நிற்க 
அதிகமான  வாய்ப்பு  கொடுக்கப்பட்டுள்ள தேர்தல் இதுதான். 

திராவிட முன்னேற்றக் கழகம் தன்னை நம்பி தாவியவர்களை கைவிடாத  கட்சி  என்ற பெயரை பெற்றுள்ளது. 

சேகர்பாபு,
கம்பம் ராமகிருஷ்ணன்,
அனிதா ராதாகிருஷ்ணன்,
மு.கண்ணப்பன்,
திருப்பூர் கோவிந்தசாமி 

ஆகிய சமீபத்திய கட்சி மாறிகளுக்கும்  

எ.வ. வேலு,
மைதீன்கான்,
திருச்சி செல்வராஜ்,
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் 

ஆகிய பழைய கட்சிமாறிகளுக்கும்  தி.மு.க  இந்தமுறையும் 
வாய்ப்பு அளித்துள்ளது.  

செஞ்சி ராமச்சந்திரன், எல்.கணேசன் ஆகிய இரு பெரிசுகள் மட்டும்தான்
கைவிடப்பட்டவர்கள். 
திமுகவில் ஐக்கியமாவார் என்று  எதிர்பார்க்கப்பட்டு கடைசி நேரத்தில் 
காங்கிரசில் தாவிய எஸ்.வீ. சேகர் பாவம். ஏற்கனவே கோஷ்டிப் 
பூசலில் குடுமி பிடி சண்டை நடக்கும் காங்கிரஸ் அவரை கைவிட்டு 
விட்டது. முன்போல அவரால் மயிலாப்பூரில் சுயேட்சையாகவும் 
நிற்கவும் முடியவில்லை. நாவலர்  நெடுஞ்செழியனை விட கூடுதல்
வோட்டுக்கள் பெற்றவன் என்று பீற்றிக் கொள்ளவும் வாய்ப்பில்லாமல் 
போய்விட்டது. 

அதிமுக கூட்டணியில்  கட்சி தாவியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த 
பெருமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமே உண்டு. 

கடந்த தேர்தலில் தளி தொகுதி  இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு  ஒதுக்கப்
பட்டது.  அந்த வேட்பாளருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சியின் ராமச்சந்திரன்  சுயேட்சை வேட்பாளராக நின்றார்.   மார்க்சிஸ்ட்  கட்சி 
அவர் மீது நடவடிக்கை  எடுத்து  கட்சியிலிருந்து நீக்கியது. சுயேட்சை 
வேட்பாளராக வெற்றி பெற்ற  ராமச்சந்திரனை சி.பி.ஐ  தனது 
கட்சியில் இணைத்துக் கொண்டது. அவர் இப்போது  சி.பி.ஐ. வேட்பாளர். 
சி.பி.ஐ  வேட்பாளருக்கு எதிராக தேர்தலில் நின்றதால்  சி.பி.எம் மால் 
நீக்கப்பட்டவர் சி.பி.ஐ வேட்பாளராகவே போட்டியிடுவது கொடுமையா,
வேடிக்கையா? 

அதே போல குடியாத்தம் தொகுதி வேட்பாளர் லிங்கமுத்து கூட 
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது கட்சி விரோத நடவடிக்கைக்காக 
மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு  இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 
தாவியவர்தான்.

கட்சி மாறிகளுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது இந்த தேர்தல். 


 

Monday, March 28, 2011

காங்கிரஸ் கட்சியும் பாரதீய ஜனதாவும் கூட்டுக் களவாணிகள்

சமீப காலமாக காங்கிரஸ் கட்சியும் பாரதீய ஜனதாவும் மிக மோசமாக
சண்டையிட்டுக் கொள்கின்றார்கள். கடுமையாக மோதுகின்றார்கள். 
மத்தியரசிற்கு பாரதீய ஜனதா கட்சி ஒவ்வொரு நாளும் அதிலும் 
நாடாளுமன்றத்தில்  ஏதாவது ஒரு தலைவலி கொடுத்துக் கொண்டே 
இருக்கிறது. 

நாளிதழ்களை  படிப்பவர்களுக்கும்  தொலைக்காட்சியைப் பார்ப்பவர்களுக்கும்  இப்படி ஒரு பிம்பம் ஏற்பட்டிருக்கும். ஆடுகளம் 
சேவல் சண்டையை விட இது உக்கிரமாக இருக்கிறதே என்றும் தோன்றும்.

ஆனால்  சத்தமே இல்லாமல்  இரு கட்சிகளும் கை கோர்த்துக் கொண்டு 
உழைப்பாளி மக்கள் முதுகில் குத்தியுள்ளதை எத்தனை பேர் அறிவார்கள்? 

பென்ஷன் நிதி வளர்ச்சி மற்றும் கட்டுப்பாட்டு ஆணைய மசோதாவை மக்களவையில்  24 ம் தேதியன்று  அரசு தாக்கல் செய்தது. தாக்கல் 
செய்யலாமா, வேண்டாமா என்பதற்கு வாக்கெடுப்பு வேண்டும் என 
மார்க்சிஸ்ட் கட்சி கேட்க  வாக்கெடுப்பு நடந்தது. அன்றைய அவையில் 
பெரும்பாலான காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் இல்லை. சோனியா காந்தி, பிரணாப் முகர்ஜி,மன்மோகன்சிங்  போன்றவர்கள் கூட இல்லை.

அன்று அவையில் உள்ள ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 
எண்ணிக்கையை கணக்கில் எடுத்தால் மசோதா தாக்கல் செய்வது 
வாக்கெடுப்பில் தோற்றுப் போயிருக்கும். 

ஆனால் நடந்தது என்ன? 

பாரதீய ஜனதா கட்சியின் 25  உறுப்பினர்கள்  ஆளும் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர்.  மசோதா தாக்கலானது. 

புதிய பென்ஷன் திட்டம் என்ற உழைப்பாளி மக்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகின்ற திட்டம் , சர்வதேச பொருளாதார நெருக்கடியில்  அமெரிக்க தொழிலாளர்களின் சேமிப்பான ஒன்றரை 
டிரில்லியன் டாலரை காற்றில் மறைய வைத்த திட்டம், தொழிலாளர்களின்  சேமிப்பை பங்குச்சந்தையில் முதலீடு செய்து 
சர்வ தேச நிதிமூலதன திமிங்களின் வேட்டைக்கு உட்படுத்துகின்ற 
ஒரு திட்டம். 

இதை அமுலாக்குவதில்  இரண்டு கட்சிகளும் ஒன்றாகவே உள்ளது. இந்திய, பன்னாட்டு முதலாளிகளின்  எடுபிடிகல்தான் இவர்கள் என்பது
மீண்டும் நிரூபணமாகியுள்ளது.  பாஜக கொண்டு வந்த ஐ.ஆர். டி.ஏ மசோதாவை காங்கிரஸ் எப்படி காப்பாற்றியது என்பதை  எனது 
நூறாவது பதிவான 'தலைவருக்கு ஓசிச்சோறு ' வில் விரிவாகவே 
எழுதியிருந்தேன். 

மக்களை கொள்ளையடிப்பதில் இரு கட்சிகளுமே கூட்டுக்   
களவாணிகள் தான்.

   

 

Saturday, March 26, 2011

குடும்பத்தால் கொலை செய்யப்பட்ட ஒரு அப்பாவி,


எனது முந்தைய  பதிவுகளில்  கார்ப்பரேட் மருத்துவமனைகள் பற்றியும் 
'ரமணா' திரைப்படக்காட்சி  மிகையல்ல, எனக்கே  அது போன்ற  ஒரு 
அனுபவம்  உண்டு  எனக் குறிப்பிட்டிருந்தேன்.  அது பற்றிய  பகிர்வு இது.

ஒரு அதிகாரி, சென்னைவாசி, பதவி உயர்வில் வேலூர் வந்திருந்தார். 
இங்கே தனியாக அறை  எடுத்து இருந்திருந்தார். ஒரு சனிக்கிழமை 
காலை அவருக்கு பக்க வாதம் வந்து  அவர் தங்கியிருந்த வீட்டின் 
உரிமையாளர்  அலுவலகத்திற்கு தகவல் கொடுத்து விட்டு ஆட்டோவில்
சி.எம்.சி   மருத்துவமனையில்  சேர்த்தார். நடந்து வந்த அவர் நிலை படிப்படியாக மோசமாகி  நினைவிழந்து போனார். சி.எம்.சி யில்  அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து  உடனடியாக சில சோதனைகள் செய்தார்கள். 

மூளையில்  ரத்த நரம்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  மிகவும் 
மோசமான நிலைக்கு செல்லாததால்   விரைவில்  குணமாக வாய்ப்பு 
உள்ளதாகச்சொல்லி  நரம்பியல் அவசரப் பிரிவிற்கு மாற்றினார்கள். 
காலை பத்து மணிக்கு முன்பாகவே  அவரது குடும்பத்திற்கு தகவல் 
கொடுத்தாலும்  மாலை ஆறு மணிக்குத்தான்  வந்தார்கள்.    

வந்த உடனேயே எப்போது டிஸ்சார்ஜ்  செய்யலாம், சென்னைக்கு அழைத்து  போகலாம்  என்று பரபரத்தார்கள்.  இப்போது பயணம் 
செய்வதற்கான உடல்நிலையில்  அவர் இல்லை. அப்படி செய்வது 
இன்னும் மோசமாக மாறி விடும்  என்று மருத்துவர்கள் சொன்னார்கள். 
அதெல்லாம்  கேட்க அவர் தம்பி தயாராக இல்லை.  அவரது மனைவியால்  வாய் திறந்து  பேச முடியவில்லை.  ஒரு மணி நேரம் 
இருவருக்கும் விளக்கமாகப் பேசி மருத்துவமனையில்  ஒருவர் 
இருந்தால் போதும், மற்ற பணிகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.
என்று தைரியம்  சொல்லி விட்டு வந்தோம். 

இரவு பதினோரு மணிக்கு முதல் நிலை அதிகாரிகள் சங்கத்தின் 
செயலாளர் தோழர் கேசவன் தொலை பேசி செய்து சி.எம்.சி வாருங்கள் 
என்று கூப்பிட்டார்.  வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியிருந்தது.  என் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை. ஆகவே 
சென்னை போகின்றோம்  என்று பிடிவாதம் பிடித்தார். என்ன சமாதானம் சொன்னாலும்  கேட்க தயாராக இல்லை. மருத்துவர்கள் கடுப்பாகி 
விட்டனர். அப்போது சாலையும் மிகவும் மோசமாக இருந்தது. 
இந்த நிலையில் பயணம் என்பது அவர் உயிரைப் பறிப்பதற்கு 
சமம் என்று கூறினார். யார் சொல்வதையும் கேட்க அந்த மனிதன்
தயாராக இல்லை. 

மருத்துவ ஆலோசனைக்கு மாறாக எனது சொந்த விருப்பத்தில் சொந்த 
பொறுப்பில்  டிஸ்சார்ஜ் செய்கிறேன்  என்று கையெழுத்து வாங்கிக் கொண்டு  டிஸ்சார்ஜ்  செய்தார்கள். நானும் தோழர் கேசவனும் 
சாட்சிக் கையெழுத்து போட்டோம். இரவு ஒரு மணிக்கு ஆம்புலன்ஸ் 
ஏற்பாடு செய்து கொடுத்து  அனுப்பி வைத்தோம். ஒரு நான்கு நாட்களுக்கு
தகவலே இல்லை. 

பிறகு அப்பல்லோ மருத்துவமனையில் உயிருக்கு போராடுவதாக 
தகவல் வந்தது. ஒரு வண்டி வைத்துக்கொண்டு  சென்னை விரைந்தோம். 
சென்னைக்கு அழைத்துப்போன பிறகு கூட சரியான ஒரு மருத்துவ மனையில்  அவரை அந்த படுபாவிகள் சேர்க்கவில்லை.  ஏதோ ஒரு 
சாதாரண மருத்துவமனையில் சேர்த்து விட்டு அங்கே எந்த வசதியும் 
இல்லாமல் நிலைமை முற்றிப் போனதும் அப்பல்லோவில் சேர்த்துள்ளனர்.  

அப்பல்லோவில்  ஒன்றரை  லட்ச ரூபாய் பணம் கட்டச்சொல்லி 
கூறியுள்ளார்கள்.  கட்ட வேண்டுமா என்ற விவாதம் ரொம்ப நேரம் 
ஓடிக்கொண்டிருந்துள்ளது . எல்.ஐ.சி யில் மருத்துவ சிகிச்சைக்கு 
முன் பணம் தருவார்கள்  என்று சொல்லி மருத்துவமனை அளித்த
விபரங்கள், செலவின எஸ்டிமேட்டை  வேலூர்ருக்கு  ஃ பாக்ஸ் 
அனுப்பி விட்டு அப்போதிருந்த முது நிலைக் கோட்ட  மேலாளருக்கு
தொலைபேசி செய்து அட்வான்ஸ் உடனே சாங்க்ஷன் செய்யுங்கள். 
மண்டல அலுவலகத்திற்கு சொல்லி அவர்களை காசோலை கொண்டு 
வரச்சொல்லுங்கள் என்றேன். 

அந்த புண்ணியவான் கேட்ட கேள்வி என்ன தெரியுமா? அவர் அதிகாரி 
ஆயிற்றே? உங்கள் சங்க உறுப்பினர் கிடையாதே? நீங்கள் ஏன் பேசுகிறீர்கள்?   தொலைபேசியிலியே  கடுப்படித்ததும் வேலை நடந்தது. 
கிட்டத்தட்ட நாற்பது நிமிடங்களில் காசோலை கைக்கு வந்து விட்டது. 
நாங்கள் செய்த தவறு அதுதான். 

அதற்கு சில நிமிடங்கள் முன்பாக இனி வாய்ப்பு இல்லை. வீட்டிற்கு 
எடுத்துச்செல்லுங்கள், மானிட்டரை எடுத்தால் அடுத்த நிமிடம் மரணம்
என்று சொன்னவர்கள், பத்தாயிரம் ரூபாய் பணம் கட்டி டிஸ்சார்ஜ் 
செய்து கொள்ளுங்கள் என்றவர்கள், ஒரு லட்சம் ரூபாய்க்கான 
காசோலையை பார்த்த உடன்  சுறுசுறுபபாகி  விட்டார்கள். ஐ.சி.யு 
படலம் ஒரு லட்ச ரூபாய் தீரும் வரை எந்த சிகிச்சையும் இல்லாமலேயே 
தொடர்ந்தது. தேடி வந்த லட்சுமியை  திருப்பி அனுப்ப அப்பல்லோ 
விரும்பவில்லை. கட்டிய பணம் தீர்ந்ததும் மானிட்டரை அகற்றி 
உயிர் போய் விட்டது என்று சொல்லி  உடலை கட்டிக்கொடுத்து விட்டார்கள். 

வேலூரிலிருந்து அழைத்து வராமல்  இருந்தால்  ஒரு வேளை அவரை 
காப்பாற்றி இருக்கலாம் என்று சொன்ன போது  பான்பராக்கை குழப்பிக் 
கொண்டே அந்த அன்புச்சகோதரன் சொன்னான் 'நாபத்தி அஞ்சு வயசுல
செத்துப்போகணும் அப்டிங்கறது  அவன் விதி சார். இதெல்லாம் யார் 
மாத்த முடியும்? செத்தப்பறம் ஆராய்சி பண்ணா அவன் வரவாப் 
போறான்?. நீங்க ரொம்ப மனச அலட்டிக்காதீங்க" 

இதுதான் உறவுகளின் உண்மையான நிலை என்ற வேதனையான 
பாடம் கிடைத்தது அன்று.   நல்ல சிகிச்சைக்கான வாய்ப்பு இருந்தும்
சென்னைக்கு கூட்டிப்போய்  அவரை அவரது குடும்பத்தினரே 
சாகடித்து விட்டனர்  என்பது  எவ்வளவு மோசமான உண்மை?  

Friday, March 25, 2011

துயர வரி அகற்றப்பட்டது. கார்ப்பரேட் மருத்துவமனைகளின் பகற்கொள்ளை நிறுத்தப்படுமா?

மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைகள் மீது விதிக்கப்பட்ட  துயர வரி என்று  மருத்துவத்துறையால்  அழைக்கப்பட்ட சேவை வரி திரும்பப் பெறப்பட்டு விட்டது.  இது உண்மையிலேயே  நல்ல விஷயம்தான். 
எதிர்ப்புக்கு  அரசு  அடிபணிந்துள்ளது  என்று கூட  பலரும் பெருமைப் படலாம்.  நிதி நிலை அறிக்கையில் முன்மொழியப்பட்டு பின்பு அது நிறைவேறும் வேளையில்  திரும்பப்பெறப்பட்ட  அனுபவம்  ஏதேனும்   இதற்கு முன்பு உண்டா?  

பங்குச்சந்தை  தரகர்களுக்கு  முன்பு  சேவை வரி விதிக்கப்பட்டது. 
அவர்கள்  போராடினார்கள். மும்பை பங்குச்சந்தை  ஒரு நாள் முடங்கிப்
போனது. சிவகங்கைச்சீமான்  சிதம்பரம் மும்பை பறந்தார்.  தரகர்களை 
சமாதானம் செய்தார். விதித்த வரியை அகற்றினார். இப்போது துயர வரி.

ஆக  தரகர்களோ, பெரும் பணக்காரர்களோ, பெரிய மருத்துவமனைகளோ 
போராடினால்  மத்தியரசு ஓடோடி வரும், அவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படும்  என்பது துயர வரி விஷயத்திலும்  நிரூபணம் ஆகி விட்டது. 
என்னே ஒரு வர்க்க பாசம்! இதுவே  சாதாரண உழைப்பாளி மக்கள் போராடும் போது  மழைத்தண்ணீர்  மேலே விழுவதை  உணராத  
எருமைகளாய்தான்  மத்தியரசு உள்ளது. 

முந்தைய பதிவில் துயர வரி குறித்து டாக்டர் தேவி பிரசாத் ஷெட்டி 
எழுதியிருந்தது பற்றி குறிப்பிட்டிருந்தேன்.அரசு விதிக்கும்  வரிகளால்தான்  மருத்துவமனைகள்  ஏராளமான கட்டணம் விதிப்பதாக
அவர் எழுதியிருந்தார். வரிகள் மட்டும் இல்லையென்றால்  எதோ அரசு
மருத்துவமனைகளை விட கொஞ்சமே கொஞ்சம்தான்  அதிகமாக 
கட்டணம் வசூலிப்பார்கள்  என்பது போன்ற தொனி  அதில் இருந்தது. 


வரிகள்தான் மருத்துவக் கட்டண உயர்விற்குக் காரணமா? வேறு எதுவுமே
கிடையாதா? ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யில்லையா இது? 

ஆடம்பரக் கட்டமைப்புகள்  ஒரு முதலீடு. கார்ப்பரேட் மருத்துவமனைகளும்  சரி பெரும் வணிகப் பல்கலைக் கழகங்களும் 
தங்கள் கட்டிடங்களை பிரம்மாண்டமாகக் கட்டி காட்டி காசு பிடுங்க
முயற்சிக்கின்றன. மிகப் பெரிய மருத்துவமனைகளில் நுழைபவர்களில்
கணிசமான காசு பறிக்கப்படுவது  சோதனைகளுக்குத்தான். இந்த 
பரிசோதனைகள்  நோயாளிக்கு  அவசியமில்லாமல் இருக்கலாம். ஆனால்  வாங்கி வைத்துள்ள இயந்திரங்களுக்கு அவசியம். 


மருந்துகளைப் பொறுத்தவரை  நோயாளிகளின்  தேவையை பூர்த்தி
செய்யாத மருந்தாகக் கூட அது  இருக்கலாம், ஆனால் அவை மருத்துவரின்  விருப்பத்தை பூர்த்தி செய்த மருந்து நிறுவனம்  தயார்
செய்த மருந்தாக இருப்பது  முக்கியம்.  ஆடம்பரப் பொருட்கள், வெளி நாட்டு சுற்றுலா என்றெல்லாம் கவனிப்பதற்காக செய்யப்பட செலவினம் 
நோயாளியின் தலையில் தான்  விடிகிறது. 


அறுவை சிகிச்சைகளுக்கு  ஆகும்  செலவினம்  எல்லா  மருத்துவமனைகளிலும்  ஒன்று போல  உள்ளதா?  வேலூர் சி.எம்.சி 
மருத்துவமனைக்கும்   சென்னையில்  உள்ள  மருத்துவமனைகளுக்கும்
பல முக்கிய  மருத்துவ  சிகிச்சைகளில்   செலவினத்தில்   மிகப் பெரிய 
வித்தியாசம்  உள்ளதை   பல முறை  நான் கவனித்துள்ளேன். சி.எம்.சி 
மருத்துவமனைக்கு  வெளி நாட்டு நிதி வருவதாக வேண்டுமானால் 
சொல்வார்கள்.   


சென்னைக்கு உள்ளேயே  உள்ள மருத்துவமனைக் கட்டணங்களிலும் 
பலத்த முரண்பாடுகள்  உண்டு.  பல தோழர்களின்  மருத்துவ செலவின 
பில்களை பல ஆண்டுகளாகப் பார்த்து வருபவன்   என்ற முறையில்  
பல மருத்துவமனைகள்   செய்வது பகற்கொள்ளை  என்று  உறுதியாக 
சொல்ல முடியும்.  'ரமணா' திரைப்படக் காட்சி என்பது அதீதமல்ல. 
யதார்த்தத்தில் எனக்கே  அப்பல்லோ  மருத்துவமனையில்  ஒரு 
மோசமான  அனுபவம்  உண்டு.  அது பற்றி  தனியாக எழுதுகிறேன்.


ஏழை மக்கள் மீது அனுதாபம் உள்ளதாகச்சொல்லி  துயர வரியை 
ரத்து செய்ய வைத்து விட்டார்கள். நல்லது. அவர்கள் மீது கூடுதல்
பாரம் ஏறவில்லை  என்பது மகிழ்ச்சி.  துயர வரி வரும்போது வந்த
அனுதாபத்தை  இனியாவது  நோயாளிகள் மேல் கார்ப்பரேட் மருத்துவமனைகள் காண்பித்தால் அது மிக நல்லது.  
 
   

 

Wednesday, March 23, 2011

நாடாளுமன்றத்தில் வெடிகுண்டு. ஏன்?







'செவிடர்களை கேட்க வைக்க வெடிகுண்டுச்சத்தம் தேவைப்படுகின்றது' 
என்ற பிரெஞ்சுப் புரட்சியில்  உயிர் நீத்த பிரபல பிரபல  புரட்சியாளன்
வைலியாவின்  அமர வாக்கியத்தை  எங்கள் செயலுக்கு சாட்சியமாக்குகிறோம்.  

ஆட்சி சீர்திருத்தம்  என்ற பெயரில் இந்த தேசத்தை அவமதிக்கும் செயலை ஆங்கில ஆட்சியாளர்கள் கடந்த பத்தாண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த ஆட்சியாளர்களின் கொள்கை நமக்கு 
தெளிவாக தெரிந்ததே. சைமன் கமிஷனிடமிருந்து ஆட்சி சீர்திருத்தம் என்ற ரொட்டித் துண்டுகளுக்காக எதிர் நோக்கும் ஆட்களை பொதுப் பாதுகாப்புச்சட்டம் போன்ற மசோதாக்களால்   அடக்கி ஒடுக்க அரசு 
முயல்கிறது. அடுத்த சட்டமன்றக் கூட்டத்தில் பத்திரிக்கைகளின் 
வாயிலாக ராஜதுரோகம் பரவுவதைத் தடுக்கவும் ஒரு சட்டம் திணிக்கப்படும் என்றும் அரசு அச்சுறுத்துகிறது. பொதுவாழ்வில் 
பணியாற்றும் தொழிலாளர் தலைவர்கள் எந்தக்காரணமும்  இன்றி 
கைது செய்யப்படும் நிகழ்ச்சிகள் அரசின் போக்கை தெளிவாகவே 
காட்டுகின்றன. 

அடக்குமுறை மற்றும் அவமதிப்பின் இந்த சூழலில் தங்களுடைய 
பொறுப்பைத் தெரிந்து கொண்டுதான் H.S.R.A. தங்களுடைய 
போராளிகளுக்கு இத்தகைய பணிகளைச்செய்ய  பணித்திருக்கிறது. 
சட்டமியற்றும் இத்தகைய  நாடகங்களை முடிவுக்குக் கொண்டு வருவதே  நோக்கமாகும். அந்நியர்கள் நம்மைச் சுரண்டுகிறார்கள்.
அதற்கு சட்டத்தை போர்த்தி விடும் செயலை அனுமதிக்கக்கூடாது. 

பாராளுமன்றம் என்ற நாடகத்திலிருந்து விலகி தங்களுடைய சொந்தத் 
தொகுதிகளுக்குத் திரும்பிச்சென்று  அன்னியச்சுரண்டலுக்கு எதிரான 
புரட்சிக்கு மக்களை ஆயப்படுத்துமாறு  மக்கள் பிரதிநிதிகளை 
கேட்டுக்கொள்கிறோம். 

மனித வாழ்க்கையை நாங்கள் புனிதமாகக் கருதுகிறோம். ஒவ்வொரு நபரும் சுதந்திரத்தை  அனுபவிக்கும் ஒரு எதிர்காலத்தை காண 
விரும்புகின்றோம்.  மனிதக் குருதி சிந்த நேரிடுவதால் நாங்களும் 
வருந்துகிறோம்.  சுரண்டலை  ஒழித்துக்கட்டும் புரட்சியில்  தவிர்க்க
இயலாமல் குருதி சிந்த நேரிடுகிறது. 
இன்குலாப் ஜிந்தாபாத்




இந்த நாளில் தூக்கு மேடையை முத்தமிட்ட 
புரட்சி வீரர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு 
ஆகியோருக்கு வீர வணக்கம். 

நாடாளுமன்றத்தில் வெடிகுண்டோடு அவர்கள் 
வீசிய பிரசுரம்தான் மேலே தரப்பட்டுள்ளது. 


இந்திய விடுதலைக்காக  மிக இளம் வயதிலேயே இன்னுயிர் நீத்த பகத்சிங்கை இந்தியாவிற்கு 
அளித்த பஞ்சாப் மண்தான் 
இந்தியாவை அமெரிக்காவின் காலனியாக 
மாற்றத் துடிக்கும் மன்மோகன் சிங்கையும் 
அளித்தது என்பது எவ்வளவு  பெரிய முரண்நகை


 


Monday, March 21, 2011

ஆஸ்பத்திரிக்கா போறே? கொண்டே புடுவேன்!

மத்தியரசு ,இவ்வாறு சொல்லாமல்  சொன்னதாக கொந்தளிக்கிறார்கள் மருத்துவர்கள். மருத்துவமனைகளுக்கு  சேவை வரி விதிக்கப்பட்டுள்ளதைக்  கண்டிக்கிறார்கள். ஆளுநர் மாளிகை முன்பாக 
ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. பெங்களூர் நாராயண ஹிருதயலாயா 
மருத்துவமனையின்  தலைவர் டாக்டர் தேவி  பிரசாத் ஷெட்டி  இது தொடர்பாக எழுதிய கடிதமும்  மின்னஞ்சல்களில் சூடாக உலாவின. 
டாக்டர் தேவி  பிரசாத்  ஷெட்டி  என்ன சொல்கிறார்.  மருத்துவத்திற்காகவும் சுகாதாரத்திற்காகவும்  ஒட்டு மொத்த உற்பத்தியில் ஒரு சதவிகிதத்திற்கும்  குறைவாக செலவிடுகிற  அரசாக  இந்தியா உள்ளது,அரசு செய்யத்தவருகின்ற  பணியைத்தான் தனியார் மருத்துவமனைகள் செய்வதாகவும்,  இதய அறுவை சிகிச்சை, சிறு நீரக மாற்று சிகிச்சை ஆகியவைக்கு பத்தாயிரம் முதல்  பதினைந்தாயிரம் வரை கூட ஆகும்  என்றும் புற்று நோய் சிகிச்சைக்கு  இருபதாயிரம் வரை 
கூடுதலாகும்  என்று அவர் கூறியுள்ளார். 

அது மட்டுமல்ல, இந்த சேவை வரி  நவீன கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு  மட்டும் பொருந்தும், பணக்காரர்கள் மட்டுமே 
பாதிக்கப்படுவார்கள்  என்று  அரசு சொல்வது தவறு என்று மறுக்கிற 
அவர், அனைத்து  அறுவை சிகிச்சை அறைகளும்  ரத்த வங்கிகளும் 
சட்டப்படியும் சரி, தொழில் நுட்ப தேவையின் அடிப்படையிலுமே 
குளிர்சாதனம்  செய்ய வேண்டிய  கட்டாயம் உள்ளது. எனவே இந்த 
சேவை வரி அனைத்து மருத்துவமனைகளுக்கும் பொருந்தும் என்றும் 
அவர் கூறுகின்றார். 

இதய, சிறு நீரக, மூளை, அறுவை சிகிச்சைகளையும் இவ்வரி மூலமாக
ஒட்டு மொத்த மக்கட்தொகையில்  பத்து சதவிகிதம்  மட்டுமே சிகிச்சை
பெறக்கூடிய நிலை உருவாகியுள்ளதாகவும்  இதனால் அதிகமான 
விதவைகளை  உருவாக்கக் கூடிய நாடாக இந்தியா மாறி விடும் என்றும்
அவர் கூறுகின்றார். இந்த சேவை வரிக்கு துயர வரி (Misery Tax) என்றும் 
பெயர் சூட்டி  இதற்கு எதிராக போராட முன்வருமாறு  அவர் அழைத்துள்ளார்.

அரசு செய்யத்தவறிய கடமைகளை  சுட்டிக்காட்டியுள்ளது சரியானது. 
மருத்துவ சிகிச்சைக்கான  கட்டணம் உயரும்  என்பதும் சரியானது. 
சேவை வரி அகற்றப்பட வேண்டும் என்பதும் அதற்காக போராட வேண்டும்  என்பதும் மிகச்சரியானது.  துயர வரி என்ற பெயர் மிகவும் 
பொருத்தமானது. 

ஆஸ்பத்திரிக்கா போறே? கொண்டே புடுவேன்  என்று மிரட்டுவது 
மத்தியரசு மட்டும்தானா?  மருத்துவமனைகள்  தங்களிடம் வருகின்ற
நோயாளிகளை மிரள வைப்பதே கிடையாதா?  
கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறியும்  மருத்துவமனைகளின் 
மறுபக்கம்  எவ்வாறு  உள்ளது? மருத்துவக்கட்டணங்கள்  உயருவதற்கு
வரிகள் மட்டுமே காரணம்  என்று சொல்வது எவ்வளவு தூரம் 
சரியானது? 

மத்தியரசு  என்றுமே ஏழைகளுக்கு எதிரானது. அவர்களின் துயர 
வரியை கண்டிப்போம், அகற்று  என்று குரல் கொடுப்போம்.
அதே நேரம் பகட்டான மருத்துவமனைகளின் பகற்கொள்ளையைப்
பற்றியும் அறிந்து கொள்வோம். 
நாளை தொடரும் ...      

 
  

Sunday, March 20, 2011

ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பாராட்டி வைரமுத்து, வாலி கவிதைகள்

ஸ்பெக்ட்ரம்  ஊழலைப் பாராட்டி  கலைஞரின்  அரசவைப்
புலவர்கள்  வைரமுத்துவும் வாலியும் கவிதை  எழுதினால் 
எப்படி இருக்கும் என்று  அவர்கள் பாணியிலேயே  எழுதப்பட்ட
கவிதைகள்  இங்கே .
யாம் பெற்ற இன்பம் பெருக இந்த வையகமும் என்ற  எனது
பெருந்தன்மையும் பேரவாவுமே  இக்கவிதைகளை மறு வெளியீடு  செய்ய வைத்துள்ளது.
   
 கவிஞர் வைரமுத்துவின் கவிதை(கற்பனைதான்)
‍‍‍‍‍‍‍‍‍‍=============================================
"
அன்று சர்க்காரியா சொன்னார்.
நீ விஞ்ஞான முறையில் ஊழல் செய்பவன் என்று.
ஆனால் இன்று விஞ்ஞானத்திலேயே நீ ஊழல்செய்திருக்கிறாய்.
வானில் உள்ள தேவர்களின் எண்ணிக்கை கூட
  முப்பத்துமுக்கோடி தான்.
நீ ஒரே தவணையில் அடித்ததோ
  ஒரு லட்சத்துஎழுபத்தாறாயிரம் கோடி.
ஊழல் செய்வதில் நீ ஒரு எட்டமுடியாத சிகரம்.
ஊழலுக்கே உன் குடும்பம்தான் தலைநகரம்.
வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தின் தலைவன் நீ..
உன் குடும்பம் வழி வந்தாரை வாழ வைக்கும் தலைவன் நீ
ஆம் குடும்பத் தலைவன் நீ..
நான் கட்டியதோ பொன்மணி மாளிகை….
நீ கட்டியதோ பத்மாவதிதயாளு மற்றும் ராசாத்தி
சர்காரியாவையே சாக்கு மூட்டையில் கட்டியவன் நீ….
உன்னிடம் சுண்டைக்காய் சிபிஐ எம்மாத்திரம்….."

கவிஞர் வாலியின் கவிதை(கற்பனைதான்)
===========================================
"
கொற்றவனே… கொற்றவனே….
ஸ்பெக்ட்ரத்தை விற்றவனே
தறுதலைகளை பெற்றவனே
சூடு சொரணை அற்றவனே
கொற்றவனே.. கொற்றவனே..
உன்னால் அடைய வேண்டியது ஏற்றம்.
தமிழகத்துக்கு கிடைத்ததோ ஏமாற்றம்.
மக்களுக்கு மிஞ்சியதோ முற்றம்.
உனக்கு அள்ளித் தந்தது ஸ்பெக்ட்ரம்.
தமிழ்ல உனக்கு புடிச்ச வார்தை கோடி
நீ பெத்து வச்சுருக்க புள்ளைங்களோ கேடி
தள்ளு வண்டில போனாலும் தளராது உன் பாடி..
உன் புள்ளைங்களுக்கு நீதான் சரியான டாடி
எக்கச்சக்கமா சேத்துருக்க துட்டு
நீ கதை வசனம் எழுதுனா சூப்பர் ஹிட்டு
உன்னால தமிழகம் போனது கெட்டு
உனக்கு மக்கள் அடிக்கப் போறாங்க ரிவிட்டு"


Saturday, March 19, 2011

அராஜகத்திலிருந்து தப்பிக்க அரைக் கம்பத்தில் கொடி



தேர்தல் கமிஷன் கொண்டுள்ள நடத்தை விதிகளில் பல அவசியமானவை. சில அதீதமாகப் போய்க்கொண்டிருக்கிறது. அபத்தமானவையும் உண்டு. அப்படிப்பட்ட ஒரு அபத்தம்தான் கொடிகளை அகற்றுவது என்பது. அரசியல் கட்சிக்கொடிக்கும் தொழிற்சங்கக் கொடிக்கும்  வித்தியாசம் தெரியாத  கொடுமை பற்றி நேற்று  எழுதியிருந்தேன். கொடிக்கம்பத்தை பாதுகாத்த  ஒரு பழைய அனுபவம் பற்றி பகிர்ந்து கொள்ளவே  இந்த பதிவு. 

1991 ல்  நான் நெய்வேலியில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம். 
ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட அந்த கொடிய இரவன்று நானும் அப்போது
நெய்வேலி கிளைச்சங்கத்தின்  தலைவராக இருந்த தோழர் ராமலிங்கமும்  அந்த இரவன்று  நெய்வேலி அமராவதி திரையரங்கில் 
வீர பாண்டிய கட்டபொம்மன்  திரைப்படம்  இரண்டாவது காட்சிக்கு 
சென்றிருந்தோம்.  கிட்டத்தட்ட ஒன்றரை மணிக்கு படம் முடிந்தது. 
அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் டீ சாப்பிட்டு விட்டு சிகரெட் 
பிடித்து விட்டு வீட்டிற்கு வருகையில் இரண்டு மணி இருக்கும். 

தானியங்கிக் கதவானதால் ஒரு சாவி கையில் இருக்கும். யாரையும் 
தொந்தரவு செய்யாமல்  உள்ளே போய் தூங்கி விட்டேன். பொதுவாக 
இரண்டாவது ஆட்டம் சினிமா போனால் எட்டு மணிக்கு முன்பு 
எழுப்ப மாட்டார்கள். ஆனால் அன்றோ காலை ஐந்து மணிக்கெல்லாம் 
என் அப்பா எழுப்ப தூக்க கலக்கத்தில் நைட்டு சினிமா போனது 
தெரியாதா? என்று அவரிடம் எரிந்து விழ டேய் ராஜீவ் காந்தி செத்துப் 
போயாச்சாம் என்று அவர் சொல்ல பிறகுதான் விபரங்கள் 
தெரிந்தது. நள்ளிரவு இரண்டு மணிக்குக் கூட அவரது மரணம் 
பற்றிய தகவல்கள் பரவியிருக்கவில்லை. 
காலை சற்று விடிந்ததும், தோழர் ராமலிங்கத்தையும் எழுப்பி அவரையும்
கூட்டிக் கொண்டு ஊழியர் குடியிருப்புக்கு அடுத்து இருந்த அலுவலக 
வாசலில் இருந்த சங்கக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விட்டோம். 
மரியாதை என்று சொல்ல மனசாட்சி இடம் கொடுக்கவில்லை. உள்ளுணர்வின்  உந்துதலில் செய்யப்பட காரியம் அது. 

கிட்டத்தட்ட ஏழு மணி போல அராஜகம் தொடங்கியது.  காங்கிரஸ் 
அதிமுக கட்சியினர்  கும்பல் கும்பலாக   கெட்ட  கெட்ட  வார்த்தைகளில்
கருணாநிதியை திட்டிக் கொண்டு  கண்ணில் பட்டதை எல்லாம் அடித்து
நொறுக்கிக் கொண்டிருந்தார்கள். திமுக சுவரொட்டிகள், தட்டிகள், 
துணி பேனர்கள் எல்லாம்  கொளுத்தப் பட்டது. கொடிக்கம்பங்கள் 
வீழ்த்தப்பட்டு  கொடிகளையும்  எரித்தார்கள். திமுக, கம்யூனிஸ்ட் 
கட்சிகள், ஜனதா தளம் என்று கட்சிக்கொடிகள், தொமுச, சி.ஐ.டி.யு  
சங்கக்கொடிகளும்  தப்பவில்லை.  அந்தத் தேர்தலில்  முதல் முறையாக
களமிறங்கிய வன்னியர் சங்காக இருந்து பரிணாம வளர்ச்சி பெற்ற  பாட்டாளி மக்கள் கட்சியின்  கொடிக்கம்பங்களை மட்டும் அதிமுக,
காங்கிரஸ் கும்பல்  நெருங்கவேயில்லை. வன்னியர் வாக்கு பற்றிய 
அச்சமாகக் கூட இருக்கலாம். 

பாட்டாளி மக்கள் கட்சி தவிர அன்று தப்பித்த ஒரே கொடி 

அரைக் கம்பத்தில் பறந்த  எங்கள்  சங்கக் கொடி.  

Friday, March 18, 2011

அறியாத மாடுகளாய் காவல்துறை

நேற்று காலை  ஒன்பது முப்பது மணிக்கு எங்கள் அலுவலகத்திற்கு ஒரு 
காவல்துறை துணை ஆய்வாளர்  வந்தார். அலுவலக வாசலில் இருந்த 
எங்கள்  சங்கத்தின் கொடிக்கம்பத்தையே முறைத்துப் பார்த்துக்
கொண்டிருந்ததைப் பார்த்து அப்போது  அலுவலகத்திற்குள் நுழைந்த 
எங்கள் சங்கத்தலைவர் தோழர் தசரதன் அவரை அணுகி என்ன விஷயம்
என்று கேட்டிருக்கிறார். தேர்தல் கமிஷன் எல்லா கட்சிகளின் 
கொடிக்கம்பங்களில் உள்ள கொடிகளையும் அகற்றி  கம்பத்திற்கும்
வெள்ளை வர்ணம் பூச வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. எனவே 
இந்த கொடியை உடனே கீழிறிக்க வேண்டும் என்று அதிகார தொனியில் 
சொல்ல தோழர் தசரதன் அவருக்கு தக்க பதிலளித்துள்ளார். 

இது கட்சிக் கொடி அல்ல. எங்கள் சங்கக்கொடி என்று. சிவப்புக் கலரில்
கொடி உள்ளது. இது கம்யூனிஸ்ட் கட்சிக் கொடிதான் என்று அவர் 
மீண்டும் சொல்ல, தோழர் தசரதன் அவருக்கு சிறு பிள்ளைக்கு சொல்வது போல கொடியைப் பாருங்கள் அதிலே எங்கள் சங்கத்தின் சின்னமான
ஏ.ஐ.ஐ.இ.ஏ என்ற வார்த்தைகள்  ஆங்கிலத்தில் உள்ளது. எங்கள் 
சங்கத்தின் பெயர் ALL INDIA INSURANCE EMPLOYEES ASSOCIATION 
என்று சொன்ன பிறகும் சிவப்பு கலருணா கம்யூனிஸ்ட் கட்சிதான் 
என்று மீண்டும் சொல்ல, தசரதன் கடுப்பாகி தொழிற்சங்கக் கொடிகளையும்  அகற்ற வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவு
இருந்தால் அதைக் காண்பியுங்கள், இல்லையென்றால் கொடியை 
எல்லாம் இறக்க முடியாது என்று சொல்ல, இன்னும் அரை மணி 
நேரத்தில் ஆர்டரோடு வருகின்றேன் என்று போனவர் இன்னமும் 
வரவில்லை. 

சுத்துகிற மாட்டுக்கு செக்கு என்று தெரியுமா? சிவலிங்கம் என்று 
தெரியுமா? என்று ஒரு பழமொழி உண்டு. பொதுவாகவே அது 
காவல்துறைக்கு பொருந்தும் என்றாலும் அரசியல் கட்சிக்கொடிக்கும்
தொழிற்சங்கக் கோடிக்கும் கூட வித்தியாசம் தெரியாத அதி அதி அதி
புத்திசாலிகளாக காவல்துறை உள்ளது வெட்கக்கேடு. 

பின்குறிப்பு : சிவப்பு நிறத்தை பார்த்து மாடுகள் மிரளலாம். காவல்துறை 
என் மிரள்கிறது. இதனால் நான் காவல்துறையை மாடுகள் என்று 
சொல்வதாக யாராவது அர்த்தம் கொண்டால்  அதற்கு நான் பொறுப்பல்ல.
 

Tuesday, March 15, 2011

63 நாயன்மார்களும், 63 தொகுதிகளும்! -மதுரை சொக்கன்

இன்று தீக்கதிர் நாளிதழில்  வந்த அற்புதமான ஒரு கட்டுரை. 
“காங்கிரஸ் கட்சிக்கு 63 இடங்கள் வந்திருக்கின்றன. அவர்கள் இதை நல்ல எண்ணத்தோடு, பக்தி மனப்பான்மை யோடு வரவேற்பார்கள் என்று எண்ணு கிறேன். ஏனென்றால் புராணத்திலே 63 நாயன்மார் என்பார்களே அந்த 63 நாயன் மார்களை இன்றைக்கு காங்கிரசார் இந்தக் கூட்டணியிலே பெற்றிருக்கிறார்கள் என் பதற்காக அவர்களுக்கு என்னுடைய வாழ்த்து”

திமுக தலைவரும், முதல்வருமான கலைஞர் வேறு வழியின்றி திமுக 63 இடங்களை தமிழக காங்கிரசில் உள்ள பல்வேறு கோஷ்டிகளுக்கு கொடுத்த பிறகு வெளியிட்ட வேதனை வார்த்தை கள் இவை. அவர் குறிப்பிடுகிற 63 நாயன் மார்களைப் பற்றி பெரிய புராணத்தில் சேக்கிழார் பாடியுள்ளார். இந்தப்பெரிய புராணத்தையும், ராமாயணத்தையும் கொளுத்த வேண்டும் என்று திமுகவைத் துவக்கிய அண்ணா ஒரு காலத்தில் வாதா டினார். அந்த உரை கூட “தீ பரவட்டும்” என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது.

நாயன்மார்கள் மொத்தம் 72 பேர், 63 பேர் தனி அடியார்கள் என்றும் 9 குழுவினர் தொகையடியார்கள் என்றும் அழைக்கப் படுகின்றனர். நல்லவேளை தனியடியார் களுக்கு மட்டும் ஒதுக்கீடு முடிந்திருக் கிறது. காங்கிரசில் உள்ள கோஷ்டிக ளுக்கு ஏற்ப தொகையடியார்களுக்கும் சேர்த்து தொகுதிகள் கேட்டிருந்தால் 72 தொகுதிகளை திமுக இழக்க வேண்டி வந்திருக்கும்.

திருத்தொண்டர் புராணம் என்ற பெயரில் அரங்கேற்றப்பட்ட பெரிய புரா ணத்தில் பேசப்படும் நாயன்மார்களின் வர லாற்றை படித்துப்பார்த்தால் பெரும்பா லான நாயன்மார்கள் பக்தியின் பெயரால் மோசடி செய்யப்பட்டவர்களாக, வஞ்சிக் கப்பட்டவர்களாக இருப்பதைத்தான் பார்க்க முடிகிறது.

திருநீலகண்டர் எனும் நாயன்மார் சிவனடியார்களுக்கு திருவோடு செய்து தருவதையே திருப்பணியாக செய்து வந்தாராம். தேர்தல் முடிவில் யாருக்கு யார் திருவோடு தரப்போகிறார்கள் என்று தெரியவில்லை.

இளையான்குடி மாறநாயனார் என்ப வர் சிவனடியார்களுக்கு உணவு படைப் பதையே பெரும்பேறாகக் கருதினாராம். ஒரு மழைநாள் நள்ளிரவில் இளையான் குடி மாறநாயனார் கடும்பசியோடு படுத் திருந்த வேளையில், சிவனடியார் ஒருவர் அவரது வீட்டுக்கு வந்தாராம். வீட்டில் சமைக்க எதுவுமே இல்லாததால் காலை யில் நாற்றங்காலில் தூவிய விதை நெல் லை வாரிக்கொண்டு வந்து அதை அரிசி யாக்கி சமைத்து உணவு படைத்தார்களாம். தமிழகத்தில் தகுதிக்கு அதிகமாக 63 தொகு திகளை பெற்றதன் மூலம் திமுகவின் விதை நெல்லையும் காங்கிரஸ் பறிமுதல் செய்துள்ளது என்பதைத்தான் கலைஞர் சூசகமாகக் குறிப்பிடுகிறாரோ என்னவோ.

மெய்ப்பொருள் நாயனார் ஒரு மன்னர், அவருடைய எதிரியான முத்தநாதன் சிவனடியார் வேடத்தை போலியாகப் புனைந்து வந்து மெய்ப்பொருள் நாயனாரை வஞ்சம் தீர்த்தாராம். அன்றைக்கு சிவனடியார் வேடத்தில் வந்தது போல இன்றைக்கு சிபிஐ உருவத்தில் வந்து காரியத்தைச் சாதித்திருக்கிறார்கள்.

பூசலார் நாயனார் இதயத்திலேயே இறைவனுக்கு கோவில் கட்டியவர். கலை ஞரும் தொகுதி கிடைக்காதவர்களைப் பார்த்து, என் இதயத்திலே இடம் உண்டு என்று அவ்வப்போது கூறுவார். பூசலார் நாயனாரைப்போல இதயத்தில் மட்டும் இடம் தருவதாக இருந்தால் 234 தொகுதி களையும் காங்கிரசுக்கே திமுக ஒதுக்கி யிருக்கும். ஆனால் அவர்களோ இதயத் தை ரணப்படுத்தி தொகுதிகளை பெற்றி ருக்கிறார்கள்.

கண்ணப்ப நாயனார் தன்னுடைய கண்களையே லிங்கத்தின் சிலைக்கு கொடுத்திருக்கிறார். மூர்த்தி நாயனார் சந்தனக்கட்டைக்குப் பஞ்சம் வந்த போது தனது முழங்கையையே தேய்த்து இறைவனுக்கு சந்தனக்காப்பு இட்டாராம்.

கணம்புல்ல நாயனார் தமது தலைமுடி யை எரித்து சிவனுக்கு தீவட்டி ஏந்தினா ராம். இப்படி எந்த நாயனாரின் வரலாற்றை எடுத்துக்கொண்டாலும் அவர்கள் கடவு ளின் பெயரால் ஏமாற்றப்பட்டவர்களாக, வஞ்சிக் கப்பட்டவர்களாக இருப்பதையே பார்க்க முடிகிறது.

திருநாளைப்போவார் என்றழைக்கப் பட்ட நந்தனார் சரித்திரமும் பெரிய புராணத்தில்தான் வருகிறது. 63 நாயன் மார்களில் அவரும் ஒருவர். பெரிய புரா ணத்தில் மூவாயிரம் தில்லைவாழ் அந்த ணர்கள்தான் முதல் நாயனார்கள் என்று குறிக்கப்படுகிறார்கள். அவர்கள்தான் தில்லை நடராஜரை தரிசிக்க ஆசைப் பட்ட நந்தனாரை தீயில் இறக்கிக் கொன்ற வர்கள். அவர் கோவிலுக்குச் சென்ற வாசல் இன்னமும் அடைக்கப்பட்டுக் கிடக்கிறது. அதைத் திறந்துவிடுமாறு தீண் டாமை ஒழிப்பு முன்னணி போராட்டம் நடத்தியபோது, நீங்கள்தான் நந்தனார் உள்ளே சென்றபோது வெற்றிலைபாக்கு கொடுத்து அனுப்பி வைத்தீர்களா என்று கிண்டலாகக் கேட்டார் முதல்வர். நந்தனா ரின் வாரிசுகள் இன்னமும் கூட பல கோயில்களுக்குள் அனுமதிக்கப்படா மல் வெளியில்தான் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டிய திமுக அரசு, பல சமயங்களில் ஆதிக்கச் சக்திகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டது. இப்போது 63 தொகுதி களை மிரட்டிப் பறித்த நிலையில் பெரிய புராணத்தையும் துணைக்கழைக்க வேண்டிய பரிதாப நிலையில் திமுக நிற்கிறது.

காங்கிரசார் இதை பக்திமனப்பான்மை யோடு ஏற்பார்கள் என்று முதல்வர் கூறி யிருந்தாலும் குரூரப்புத்தியோடு அவர்கள் கேட்கும் தொகுதிகளைத்தான் ஒதுக்க வேண்டும் என்றல்லவா நிர்ப்பந்தம் செய்து வருகிறார்கள்.

60 தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்தபோதும் கூடுதலாக மூன்று தொகுதிகளைக் கேட்டு நெருக்கடி கொடுத் துள்ளது காங்கிரஸ். மூன்று என்ற எழுத் துக்கு அன்பு, அறிவு, தமிழ், அண்ணா என்று எத்தனை சிறப்புகள் உண்டு என்று கலைஞர் அடுக்குவதுண்டு. ஆனால் இப்போது ஊழல், சிபிஐ, ரெய்டு என்ற மூன்றெழுத்துக்களை காட்டியே, மூன்று தொகுதிகளை பெற்றிருக்கிறது காங்கிரஸ்.

மதுரை சொக்கன்