Saturday, February 28, 2015

எத்தனை முறை படித்தாலும் மெய் சிலிர்க்கும்

  மறைந்த தோழர் ஐ.மா.பா பற்றி இயக்குனரும் பேச்சாளருமான தோழர் பாரதி கிருஷ்ண குமார் இன்றைய ஜூனியர் விகடனில் பகிர்ந்து கொண்டுள்ள அனுபவத்தை இங்கே பதிவிட்டுள்ளேன்.

தோழர் ஐ.மா.பா பற்றி நான் பகிர்ந்து கொண்டுள்ள மூன்றாவது பதிவு. இன்னும் ஒரு நெகிழ்ச்சியூட்டும் பதிவை நாளை பகிர்ந்து கொள்கிறேன்.

பதிவின் இறுதியில் உள்ள முக்கியமான புகைப்படத்தை பார்க்க தவறாதீர்கள்.
உண்மையும் நேர்மையும் தேசபக்தியும் நிரம்பிய ஐ.மா.பா.!
 
வரை எப்போதும் 'அப்பா’ என்றுதான் அழைப்பேன். நிறையத் தோழர்கள், நண்பர்கள் அப்படித்தான் அழைப்பார்கள். குழந்தைகள் இல்லை. 3 ஆண்டுகளுக்கு முன் அவரது மனைவி இறந்துபோகிற வரை ஒன்றாகவே இருவரும் வாழ்ந்தார்கள். அவருக்குப் பிடித்த கடையில் இருந்து உணவு வாங்கி வந்து நான், அவர், அம்மா என்று மூன்று பேரும் ஒன்றாகச் சாப்பிடுவோம். விடுதலைப் போராட்டம், விடுதலைக்குப் பிந்திய போராட்டங்கள் குறித்து அவருக்கு முழுமையான அனுபவ அறிவு இருந்தது. அவருக்குத் தெரியாத நிகழ்வுகள் குறித்து நாம் கேட்டால், ''அன்னிக்கு நாம் போகல; எனக்குத் தெரியாது... ஆனா போனவங்க சொன்னதை வேனா உனக்குச் சொல்றேன்'' என்று விவரிப்பார். எத்தனை முறை கேட்டாலும், சலிக்காமல் திரும்பிச் சொல்வார். வருடம், மாதம், தேதி என்று எந்தப் பிழையுமின்றி துல்லியமாகச் சொல்வார்.


லோகசக்தி, பராசக்தி, லோகோபகாரி, நவசக்தி, தீக்கதிர் என்று வாழ்நாள் முழுவதும் பத்திரிகைப் பணியில் இயங்கியவர். ஒரு பத்திரிகையாளனுக்கு இருந்தே தீர வேண்டிய உண்மையின் ஒளியோடுதான் எழுதுவார்; பேசுவார். வரலாற்றைச் சொல்வதில், கற்றுத் தருவதில் ஒப்பற்ற மனிதர். அந்த மனிதர் ஐ.மாயாண்டி பாரதி. ஒரு நூற்றாண்டைத் தொடுவதற்கு இன்னும் ஓரிரு ஆண்டுகள் இருக்கும் நிலையில் கண்மூடிவிட்டார்!
''அந்தக் காலத்துல... நாங்கல்லாம்'' என்று ஆரம்பித்தால், கண்களில் ஒளியேறப் பேசுவார். ஒரு வரலாற்று நிகழ்வை கண் முன்னே தோன்றச் செய்துவிடுவார். 13 ஆண்டு கால சிறைவாசம் அவருடையது. விடுதலைப் போரில் சேர்ந்த நாளில் இருந்து, இறுதிவரை கதர்தான் அணிந்தார். ''இது வெறும் துணியல்ல; அரசியல் சீருடை'' என்றார், கண்களில் பெருமிதத்துடன்.
வீட்டைவிட்டுப் புறப்படுகிறபோது கையில் ஒரு மஞ்சள் பையை எப்போதும் பிடித்திருப்பார். அதில் எப்போதும் புத்தகங்கள், பிரசுரங்கள் வைத்திருப்பார். படிக்கிற பழக்கமிருக்கிற ஆளாகப் பார்த்துத்தான் புத்தகங்கள் தருவார். படிக்கிற பழக்கமில்லாதவர்கள் கேட்டால், ''உனக்கு எதுக்கு? நீதான் படிக்க மாட்டியே?'' என்று முகத்துக்கு நேரே சிரித்தபடியே சொல்லி விடுவார்.


அதே மஞ்சள் பையில் எப்போதும் ஆரஞ்சு மிட்டாய்களும் புளிப்பு மிட்டாய்களும் வைத்திருப்பார். எந்த நிகழ்வுக்கு வந்தாலும், அந்தப் பகுதியில் கூடி நிற்கும் குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுப்பார். ''இது எதுக்குப்பா?'' என்று கேட்டபோது, ''மிட்டாய் கொடுத்தாதான் குழந்தைங்க நம்மகிட்ட வரும். அவனுக வந்துட்டா, பேசி தேச பக்தியை ஊட்டலாம்; வரலாறு பூரா சொல்லித் தரலாம்'' என்பார். எங்கும், எப்போதும் யாருக்கேனும் கற்பித்துக்கொண்டே இருக்கணும் அவருக்கு. நானும் அவரைப் பார்த்ததும் மிட்டாய் கேட்பேன். ''உனக்கு எதுக்குடா?'' என்பார். ''நானும் உங்ககிட்டக் கத்துக்குறேன்ல'' என்பேன். உதடுகள் பிரியாமல் சிரித்துக்கொண்டே, ஒரு மிட்டாயை எடுத்துக் கொடுப்பார்.
நிறைய புத்தகங்கள் வைத்திருந்தார். புத்தகத்தின் முதல் பக்கத்தில் புத்தகம் வாங்கிய ஊர், வருடம், தேதி எல்லாம் குறித்திருப்பார். பல புத்தகங்களில் ''காசு கொடுத்து வாங்கியது'' என்றும் எழுதி இருப்பார். ''இது எதுக்கு எழுதுறீங்க?'' என்று கேட்டபோது, ''திருடல... என் காசு போட்டு வாங்குனதுன்னு இத எடுக்குறவனுக்குத் தெரியணும்'' என்பார்.


2005-ம் ஆண்டு ஜனவரியில், கீழ்வெண்மணி குறித்த எனது ஆவணப் படத்துக்காக, அவரைப் பேட்டியெடுக்கப் போனேன். ஒரு நாள் முழுவதும் அவரோடு இருந்த அற்புதம்... அந்த நாள். பேட்டியின் இறுதியில் சொன்னார். ''அதே 44 பேரு எரிஞ்ச இடத்துல இருந்து ஒரு கைப்பிடி எலும்பும், சாம்பலும் நிறைய எடுத்து ஒரு பேப்பர்ல கட்டி வெச்சுக்கிட்டேன்'' என்றார். நான் அதிர்ந்தேன். உலக வரலாற்றில் 37 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட முகமறியாத அந்த எளிய, ஏழை மக்களின் அஸ்தியை யாரால் கண்டறிய முடியும்? அவர் காப்பாற்றி வைத்திருந்தார்.


நீண்ட நேரம் தேடி அதைக் கண்டெடுத்தார். அவர் கைப்பட 'வெண்மணி அஸ்தி’ என்று எழுதி இருந்த சிறிய பொட்டலத்தை என்னிடம் தந்தார். பிரிக்கச் சொன்னார். கொஞ்சம் எலும்புத் துண்டுகள். கண்களை இடுக்கிக்கொண்டு பார்த்தார். ''குருத்தெலும்பா இருக்குடா... ஏதோ ஒரு குழந்தையோடதாகத்தான் இருக்கும்.. கொடுமைக்கார பாவிங்க'' என்றார். அவரது கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. அவர் அழுது அன்றுதான் பார்த்தேன். ''ஒப்படைச்சுட்டேன்... சேக்க வேண்டிய இடத்துல சேத்துரு'' என்று ஒரு பெருமூச்சு விட்டார். அதைக் கீழ்வெண்மணியில், அந்தத் தியாகிகளின் நினைவிடத்தில் கொண்டுபோய்ச் சேர்த்தேன். அங்கு அது பத்திரமாக இருக்கிறது.  
தனது செயல், பேச்சு, எழுத்து இவற்றின் மூலம், அனைவரையும் விடுதலையின்பால், சமத்துவத்தின் பால் ஈர்க்கும் திறவுகோலாக மனத் தடையை உடைக்கும் சாவியாக அவர் இருந்தார். ஆனால், அவர் மனதைத் திறக்கும் சாவியை அவர் யாரிடமும் தரவேயில்லை. எவ்வளவு பேசினாரோ, அவ்வளவுக்கும் அதிகமாக ரகசியங்களைத் தனக்குள் வைத்திருந்தார்.


வெண்மணி நினைவு தினக் கூட்டமொன்றுக்கு அவரும் நானும் சிறப்புரையாற்ற அழைக்கப் பட்டிருந்தோம். இரவு 7.30 மணிக்குக் கூட்டம். நான் பேசப் போவதற்கு முன் என்னை அழைத்து, ''இந்த அநீதிக்குப் பழி தீர்ப்போம், வரலாறு பதில் சொல்லும்; நியாயம் கேட்போம்னு உணர்ச்சி வசப்பட்டு எதுவும் பேசாதே... மிராசுதார்களைப் பத்தி எதுவும் பேசாதே... மத்தது எல்லாம் பேசிக்க'' என்றார்... ''எதுக்குப்பா?' என்றேன். ''சொன்னதைச் செய்யுடா'' என்று சொல்லிவிட்டார். எனக்குப் பிறகு அவர் பேசி முடித்தார். இரவு உணவருந்துகிற போது மீண்டும் கேட்டேன். பதில் எதுவும் சொல்லவில்லை. மறுநாள் தெரிந்தது. வெண்மணி வழக்கில் முதல் குற்றவாளியான இரிஞ்சியூர் கோபாலகிருஷ்ண நாயுடு முந்தினநாள் மாலை 5.30 மணிக்குக் கொல்லப்பட்டிருந்தார்.
''மிக விரைவானத் தகவல் தொடர்புகள் ஏதுமற்ற அந்த நாட்களில், அன்றைக்கே உங்களுக்கு அந்தச் செய்தி எப்படித் தெரியும்?’ என்று  பலமுறை கேட்டிருக்கிறேன். பதிலே சொன்னதில்லை. எனக்குத் தெரியும், அவர் ரகசியங்களின் பெட்டகமாகவும் இருந்தார்.


இறப்பதற்கு சில மாதங்கள் வரை, தனது வேலைகளைத் தானே பார்த்துக்கொண்டார். 2015 ஜனவரி 26ம் தேதியன்று குடியரசு தினத்துக்குக் கொடியேற்றுகிற விழாவுக்குப் புறப்படுகிற அவசரத்தில் கீழே விழுந்து படுக்கையானார். அதுவே அவருக்கு மரணப் படுக்கையாயிற்று. திருப்பூர் குமரனுக்கு நினைவுச்சின்னம் வேண்டுமென்று கோரிக்கை வைத்தது அவர்தான்.


கனிமவளக் கொள்ளைக்கு எதிராக சகாயத்தை நேரில் பார்த்து, தனது ஆதரவைச் சொன்னவரும் அவர்தான். கனிமவளக் கொள்ளை பற்றிப் பேசுகிறபோது ஒருமுறை சொன்னார், 'மலை முழுங்கி மகாதேவனுங்கள... சும்மாவிடக் கூடாது... அது நம்ம சொத்து...' என்று சொல்லிவிட்டு, ''பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ..'' என்று பாரதியின் பாடலை முழுவதுமாகப் பாடினார்.
''வெள்ளைக்காரன் என்னைப் புடிச்சி கோர்ட்ல நிறுத்திட்டான்.. 42-ல... ஜாமீன்ல விட்றதுக்காகவோ, எதுக்காகவோ... உனக்கு என்ன சொத்து இருக்குன்னு அந்த வெள்ளைக்கார நீதிபதி கேட்டான். 'மீனாட்சியம்மன் கோயிலு, மங்கம்மா சத்திரம், ரயில்வே ஸ்டேஷன் எல்லாமே என் சொத்து தான்னு சொன்னேன்''... ரொம்பப் பேசுறன்னுகூட 6 மாசம் போட்டான். எல்லாமே நம்ம சொத்து, ஜனங்க சொத்து. அது நாலு பேரு களவாண்டு சாப்புட்டா... பாத்துட்டு இருக்கலாமா? இருக்கக் கூடாதுடா'' என்றார் உறுதியும் உண்மையும் தேச பக்தியும் நேர்மையும் நிரம்பிய ஐ.மாயாண்டி பாரதி.


அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தப் போனேன்... குளிரூட்டப்பட்ட பெட்டிக்குள் இருந்தார் 'அப்பா’. ஏதோ கோபத்தில் முகத்தைத் திருப்பிக்கொண்டதுபோல் படுத்திருந்தார். அவரது உறவினர்கள், நண்பர்கள், தோழர்கள் என்று அஞ்சலி செலுத்த வந்தவர்களிடையே, ஓரிரு சுதந்திரப் போராட்ட வீரர்களும் இருந்தனர்.

ஒரு வீரம் மிகுந்த, தியாகம் புரிந்த தலைமுறையின் இறுதி மிச்ச சொச்சமாக, முதுமையும் வறுமையும் ஒருசேரத் தாக்கப்பட்ட மனிதர்களாக இருந்தார்கள்.

இறுதிநாட்களில், ஐ.மா.பாவின் மருத்துவச் செலவுக்குப் பணமின்றித் தவித்திருக்கிறார்கள் அவரது உறவினர்கள். இறுதி மரியாதை செலுத்த வந்த அதிகார வர்க்கம், நோயுற்ற நாட்களில் எங்கே போய் இருந்தது? உள் நெருப்பில் உயிரோடு எரிகிற உலைக்கு அரிசி போடாமல், செத்த பிறகு வாய்க்கரிசி போடுவதை இவர்கள் எப்போது நிறுத்துவார்கள்? மாநிலம் முழுவதும் தேடினாலும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஓராயிரம், இரண்டாயிரம் பேர்தான் இருப்பார்கள். அவர்களை ஓர்அரசாங்கம் தத்தெடுக்க வேண்டாமா? இனியாவது செய்யுங்கள்.
போன மாதம் மதுரை போய் இருந்தேன். ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டுப் புறப்படுகிறபோது ஒரு நண்பர் வந்தார். ''ஐ.மா.பா... ஆஸ்பத்திரில இருக்காரு... உங்களை வரச் சொன்னாரு'' என்றார்.பணிகள் காரணமாகப் போக இயலவில்லை. ''அடுத்த தடவை பார்க்குறேன்னும் சொல்லுங்க'' என்றேன். அடுத்த முறை அஞ்சலி செலுத்தத்தான் முடிந்தது. வயதில் மூத்தவர்கள் அழைத்தால், உடனே போய்ப் பார்த்துவிட வேண்டும். அந்த அழைப்பை ஒத்திப்போடக் கூடாது என்கிற பாடத்தைத் தன் மரணத்தின் வழியே எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார் ஐ.மா.பா. வாழ்நாள் முழுவதும்  கற்றுக் கொடுத்துவிட்டு, மரணத்திலும் கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள் அப்பா.

இனி ''வாடா... போடா'' என்று ஒருமையில் உரிமையில் யார் அழைக்கப் போகிறார்கள்? ''மிட்டாய் குடுங்கப்பா'' என்று குழந்தை மாதிரி யாரிடம் கேட்க முடியும்? மன்னித்துக் கொள்ளுங்கள் அப்பா. உங்களிடம் கற்றதை, மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுக்கிற வேலையை, பிழையின்றி செய்ய வேண்டும். அப்படிச் செய்வது தான் உங்களுக்கான அஞ்சலி!
பாரதி கிருஷ்ணகுமார்


இக்கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கிற வெண்மணி அஸ்தி ஒரு கண்ணாடிப் பேழையில் வெண்மணி தியாகிகள் நினைவகத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஐந்தாண்டுகள் முன்பு வெண்மணி பயணத்தின்போது எடுக்கப்பட்ட படம்

இந்த வருஷமும் அல்வாதான்




இன்னும் கூட சில அப்பாவி (இளிச்சவாய் என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும்) நடுத்தர மக்கள் மோடி அரசு நமக்கு நல்லது செய்யும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் வாக்குறுதியில் சொன்ன "ஐந்து லட்ச ரூபாய் வரை வருமான வரி விலக்கு" என்ற வாக்குறுதி இன்றைய பட்ஜெட்டில் காப்பாற்றப்படும் என்று எதிர்பார்த்தார்கள். 

நம்புகிறவர்களைத்தானே ஏமாற்ற முடியும்?

பட்ஜெட் தயாரிப்பின் முதல் சடங்கு அல்வா கிண்டுவதாம். அப்படி அருண் ஜெய்ட்லி கிண்டிய அல்வா "ஐந்து லட்ச ரூபாய் வரை வருமான வரி விலக்கு" என்று எதிர்ப்பார்த்தவர்களுக்குத்தான். 4,42,000 வரை ஊதியம் உள்ளவர்கள் வருமான வரி கட்ட வேண்டாம் என்று ஒரு விளக்கம் கொடுத்துள்ளார் பாருங்கள், அதுதான் ஜெய்ட்லி அல்வா ஸ்பெஷல்

தயாராக இருங்கள்.

உங்களுக்கு ஒவ்வொரு வருஷமும் அல்வா மட்டுமே கிடைக்கும்.

பட்ஜெட்டைப் பற்றி விரிவாக விரைவில் பார்ப்போம்.
 

இளையராஜாவின் மேதமை

 http://behindwoods.com/tamil-movies/slideshow/the-name-you-didnt-know/images/ilaiyaraaja-gnanadesikan.jpg

நேற்று இரவு தொலைக்காட்சி சேனல்களை மாற்றிக் கொண்டு வந்த போது  பொதிகையில் இந்த பாட்டு ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.   

ஆயிரம் முறைக்கு மேலும் கேட்டிருப்பேன். ஆனாலும் ஒவ்வொரு முறை கேட்கும் போதும் விய்ப்பை அளிக்கும் பாடல். இளையராஜாவின் மேதமையை உண்ர்த்திக் கொண்டே இருக்கும் பாடல்.

நீங்களும் கேட்டு ரசியுங்கள்

Friday, February 27, 2015

அது ஒன்றும் வெற்றுப் பக்கம் அல்ல

மறைந்த சுதந்திரப் போராட்ட வீரர் தோழர் ஐ.மாயாண்டி பாரதி பற்றி தீக்கதிர் பொறுப்பாசிரியரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான தோழர் மதுக்கூர் ராமலிங்கம் எழுதிய ஒரு சிறந்த கட்டுரை.


`என்னத்த எழுத...’

 


மதுக்கூர் இராமலிங்கம்

மனிதனை மனிதன் சுரண்டாத சோசலிசப் புரட்சி ரஷ்ய மண்ணில் வெடித்துக் கிளம்பிய அதே 1917ம் ஆண்டில்தான் ஐ.மா.பா. மதுரையில் பிறந்தார். தன்னுடைய இறுதிக்காலம் வரையிலும் சோசலிச லட்சியத்தின்பால் தளராத நம்பிக்கை கொண்டவராக அவர் இருந்தார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டக்குழு அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவருடைய உடலுக்கு பல்வேறு அரசியல் இயக்கங்கள், தியாகிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் என அணி அணியாக வந்து அஞ்சலி செலுத்திய காட்சி அவர் சமூகத்தின் சகல பிரிவினரோடும் கொண்டிருந்த உயிர்த் துடிப்பான உறவை காட்டுவதாக இருந்தது.

திரு.வி.கவை ஆசிரியராகக் கொண்ட நவசக்தி, பரலி சு.நெல்லையப்பரின் லோகபகாரி, ஜனசக்தி, தீக்கதிர் உள்ளிட்ட ஏடுகளில் அவர் பணியாற்றியுள்ளார். தீக்கதிர் ஏட்டில் அவர் 25 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அப்போது அவரால், கண்ணோட்டம், வாளும் கேடயமும், நேருக்கு நேர் போன்ற பகுதிகள் எழுதப் பட்டன. `குழந்தைகளுக்கு தாய் ஊட்டும் உணவு போல எந்த ஒரு விசயத்தையும் எளிதாக்கித் தருவதில் தனிச்சிறப்பான ஆற்றல் கொண்டவர் ஐ.மா.பா.’ என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த தலைவர் ஏ.பாலசுப்பிரமணியம் தந்த மதிப்புரை.இன்றைக்கும் கூட சில முதிய தோழர்களை சந்திக்கும்போது தீக்கதிரில் ஐ.மா.பா எழுதியது போல எளிமையாக எழுத வேண்டும் என்று கூறுவார்கள். 

அவருடைய எழுத்துக்கள் எந்தளவுக்கு தோழர்களை ஈர்த்திருந்தது என்பதை புரிந்துகொள்ள முடியும்.அவசர நிலைக்காலம் அது. ஒவ்வொரு நாளும் தீக்கதிர் பத்திரிகையை கொண்டுவருவது என்பது பிரசவ வலி போன்றது. ஒவ்வொரு செய்தியையும், கட்டுரையையும் அதிகாரிகள் இரண்டு மூன்று முறை பார்த்து தணிக்கை செய்த பிறகுதான் வெளியிட முடியும். துணையாசிரியராக இருந்த இரா.நாராயணன் சைக்கிளிலேயே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பலமுறை அலைவார். ஒருமுறை ஐ.மா.பா எழுதிய தலையங்கத்தை அதிகாரிகள் திருப்பி அனுப்பிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். 

இதனால் கோபமடைந்த ஐ.மா.பா. தலையங்கம் பகுதி யில் `என்னத்த எழுத...?’ என்று எழுதிக் கொண்டுபோய் காட்டியிருக்கிறார். எங்கே தலையங்கம்? என்று கேட்டதற்கு நீங்கள் காட்டும் கெடுபிடியில் இப்படித்தான் எழுதமுடியும் என்று கூறியிருக்கிறார் ஐ.மா.பா. அதையும் கூட அதிகாரிகள்விடவில்லை. இதன்மூலம் நீங்கள் உங்கள் வாசகர் களுக்கு எதையோ சூசகமாக தெரிவிக்க நினைக்கிறீர்கள் என்று சொல்லி அதையும் அனுமதிக்க மறுத்துவிட்டனராம். கடைசியில் அன்றைய தலையங்கப் பகுதிஎந்த எழுத்தும் இல்லாமல் வெறும் வெள்ளையாக விடப்பட்டிருக்கிறது.

அவசரநிலைக் கொடுமையை இதை விட வலிமையாக வேறு எவ்வாறு வெளிப் படுத்தமுடியும்.

மதுரை வடக்குமாசி - மேலமாசி வீதி சந்திப்பில் உள்ள பிள்ளையார் கோவிலில் குன்றக்குடி அடிகளாரை நடுவராகக் கொண்டு பரபரப்பான பட்டிமன்றங்கள் நடந்து வந்த காலம் அது. காலத்தை வெல்லும் ஆற்றல் மிக்கது மார்க்சியமா, காந்தி யமா, வள்ளுவமா என்ற தலைப்பில் அடிக்கடி விவாதம் நடக்கும். மார்க்சிய அணியின் சார்பில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், தா.பாண்டியன், ஐ.மா.பா., வி.பரமேசுவரன் போன்றவர்கள் பங் கேற்று வாதிடுவார்களாம்.
ஒருமுறை மார்க்சிய அணியின் சார்பில் ஐ.மா.பா. பேசி யிருக்கிறார். இலங்கை பிரச்சனை கொதி நிலையில் இருந்த காலம் அது. சில கட்சிகள் இனவெறியை வலுவாக தூண்டிவிட்ட நேரம் அது. அப்போது பேசிய ஐ.மா.பா. தேசிய இனப் பிரச்சனையில் மார்க்சிய அணுகுமுறையை எடுத்து வைத்திருக்கிறார். கூட்டத்திலிருந்து ஆட்சேபக் குரல்கள், ஆனால் கடைசிவரை தன்னுடைய கருத்தை கூறிவிட்டுத் தான் ஐ.மா.பா. முடித்திருக்கிறார் என்று நினைவுகூர்ந்தார் ஓவியக் கவிஞர் ஸ்ரீ.ரசா.அவர் இளைஞராக இருந்த காலத்தில் மிதவாத எண்ணம் கொண்ட காங்கிரஸ் தலைவர் ஒருவர் கேரளத்திலிருந்து மதுரைக்கு பேச வந்திருக்கிறார்.
ஐ.மா.பா. விடுதலைப் போராட்டத்தை வேகமாக நடத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். வந்த பேச்சாளர் அமைதி யான முறையில்தான் விடுதலை பெற முடியும். எத்தகைய போராட்டமும் நடத்தக்கூடாது என்று பேசியிருக்கிறார். இந்த பேச்சுக்கு மொழி பெயர்ப்பாளர் ஐ.மா.பா. இவர் அவருடைய மலையாள பேச்சைதனது பாணியில் மொழி பெயர்த்து, `மயிலேமயிலே என்றால் இறகு போடாது, வெள் ளைக்காரனை கெஞ்சிக் கொண்டிருந்தால் நாட்டை விட்டு போகமாட்டான், அவனைஅடித்து விரட்ட வேண்டும்’ என்று கூறியிருக்கிறார். பேசிய கேரள பேச்சாளர் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக ரயில் நிலையத்தில் வைத்துகைது செய்யப்பட்டிருக்கிறார். கடைசி வரையில் அவருக்கு தன்னை ஏன்கைது செய்கிறார்கள் என்று தெரிய வில்லை. 

சாகசங்கள் செய்வதிலும் ஐ.மா.பா.வல்லவர். காங்கிரசின் மூவர்ணக் கொடியை ஏந்தி வந்தால் போலீஸ்காரர்கள் அடித்து நொறுக்கிய காலம் அது. ஐ.மா.பா.வும் அவருடைய நண்பர்கள் சிலரும் சேர்ந்து இரவோடு இரவாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்தில் பல்லி போல ஏறி மூவர்ணக் கொடியை கட்டிவிட்டு வந்துவிட்டார்கள். சற்று பிசகினாலும் கோபுரத்திலிருந்து கீழே விழுந்து சிவலோகம் செல்ல வேண்டியிருக்கும். ஆனால் அதைப் பற்றி அஞ்சாமல் கொடியை கட்டிவிட்டு வந்துவிட்டார்கள்.அடுத்த நாள் விடிந்தவுடன் மதுரை முழுவதும் இதுதான் தலைப்புச் செய்தி யாக இருந்திருக்கிறது. இந்தக் கொடியை அவிழ்க்க கோபுரத்தில் ஏற பகலிலேயே போலீஸ்காரர்களுக்கு அரை நாள் ஆகியது. ஆனால் கும்மிருட்டில் சில மணி நேரத்தில் கொடியை கட்டிவிட்டு இறங்கிவிட் டோம் என்று ஐ.மா.பா. அடிக்கடி கூறுவார்.கட்சிப் பத்திரிகையாளர் குழு ஒன்று சோவியத் யூனியன் சென்றது. அதில் தீக்கதிர் சார்பில் தோழர் ஐ.மா.பா. இடம்பெற்றிருந்தார். அந்த அனுபவம் குறித்து அவருக்கே உரிய பாணியில் `மண்ணில் ஒரு சொர்க்கம் கண்டேன்’ என்று தீக்கதிரில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். சோவியத் சென்று வந்த அவருக்கு மதுரையில் வரவேற்பு தரும் வகையில் பேரவை ஒன்று நடைபெற்றுள்ளது. வழக்கம் போல கதர் வேஷ்டி, சட்டையுடன் ஐ.மா.பா. நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார். 

ஐ.மா.பா. பேசுவார் என்று அறிவித்தவுடன் திடீரென்று வேட்டி சட்டையை அகற்றிவிட்டு கோட் சூட்டுடன் காட்சியளித்திருக் கிறார். இப்படித்தான் சோவியத் யூனியனில் மனிதர்களே முற்றாக மாறியிருக்கிறார்கள் என்று கூறி தன்னுடைய பேச்சை துவக்கியதாக அ.குமரேசன் கூறுவார். 1968ம் ஆண்டு வெண்மணியில் கோரப் படுகொலை நடந்தவுடன் உடனடியாக விரைந்து சென்று முழுமையான செய்தி தீக்கதிரில் வெளிவரச் செய்தவர் ஐ.மா.பா. அப்போது எரிக்கப்பட்ட ராமையாவின் குடிசையிலிருந்து ஒரு பிடி சாம்பலை அள்ளி வந்திருக்கிறார். அதை 40 ஆண்டுகளுக்கும் மேலாக பாதுகாத்து வைத்திருக்கிறார்.

தூக்குமேடை தியாகி பாலு, மாரி மணவாளன் போன்ற எண்ணற்ற தியாகிகளின் வாழ்க்கையை ஆவணமாக்கியவர். மதுரை சிறையில் தியாகி பாலு தூக்கிலிடப்பட்ட காட்சியை ஐ.மா.பா. இப்படி எழுதியிருக்கிறார். “பாலுவின் பாத கமலங்களைத் தாங்கி நின்ற ஆதாரப் பலகை பாதாளம் போயிற்று, சுண்டி இழுத்த கருநாகக் கயிறு பாலுவின் மூச்சை முடித்தது. கல்லும் உருகும், கருநாகம் நெஞ்சிளகும், நேற்று இரவு முழுவதும், செங்கொடிப் பாட்டுகளை பாடிய பாலுவின், `சுட்டுப் பொசுக்கினாலும் - தோழர்களை தூக்கிலேற்றினாலும், விட்டுப் பிரியாது செங்கொடி வீரம் குறையாது’ என்று பாடிச் சிறகடித்த பாலுவின் பொன்னுயிர் பறிக்கப்பட்டுவிட்டது”.

தனது வாழ்நாளில் 13 ஆண்டுகள் சிறையில் கழித்திருக்கிறார். தனது வாழ்வை சுருக்கமாக சொல்லும் வகையில் அவர் உருவாக்கிய புதுமொழி ‘ஏறினால் ரயில், இறங்கினால் ஜெயில்’ அவருக்கு இறுதி மரியாதை செலுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செந்தொண்டர்கள் அணி வகுத்த வந்த போது தோழர் நன்மாறன் சொன்னார் மதுரையில் முதன்முதலாக கட்சிக்கு செம்படையை உருவாக்கி அதற்கு தளபதியாக இருந்தவர் ஐ.மா.பா. என்று.பாவலர் வரதராஜன் சகோதரர்களை கண்டறிந்து பொதுவுடமை இயக்க மேடைக்கு அழைத்து வந்தவர்களில் ஐ.மா.பா.வும் ஒருவர். அவர்களை தாய் மைப் பண்போடு துவக்க காலத்தில் அரவ ணைத்தவர்.

அதுபோன்று ஜனசக்தியில் பணியாற்றிய காலத்தில் ஜெயகாந்தனை வளர்த்தவர்களில் ஐ.மா.பாவும் ஒருவர்.மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை இவரை அண்ணன் என்றுதான் அழைப்பார். பட்டுக்கோட்டையார் எழுதிய கடிதங்களையும் ஐ.மா.பா பாதுகாத்து வைத்திருந்தார். சோவியத் அனுப்பிய விண்கலம் சந்திரனை சென்றடைந்தவுடன் பட்டுக்கோட்டையாரைத் தேடி ஓடியிருக்கிறார் ஐ.மா.பா. அப்போது மக்கள் கவிஞர் ஒரு திரைப் படத்திற்கு பாட்டு எழுதும் வேலையில் ஈடுபட்டிருந்தாராம். இவர் சென்று செய்தியைச் சொல்லி உடனடியாக ஜனசக்திக்கு ஒரு கவிதை வேண்டும் என்று கேட்டவுடன் “சந்திரனை தொட்டதின்று மனித சக்தி” என்ற பாடலை மக்கள் கவிஞர் கடகடவென்று எழுதிக்கொடுத்தாராம். ஜனசக்தியில் அந்தப் பாட்டு சூடாக அச்சேறியது.கிறிஸ்துமஸ் தாத்தா கூட ஆண்டுக்கு ஒரு முறைதான் குழந்தைகளுக்கு இனிப்பு தருவார். ஆனால் இந்த கம்யூனிஸ்ட் தாத்தாவின் கைப்பையில் எப்போதும் குழந்தைகளுக்கான இனிப்பும், அன்பும் நிரம்பி வழிந்துகொண்டே இருந்தது. இவருடைய வருகையை எதிர்பார்த்து அன்றாடம் தீக்கதிர் வாசலில் ஒரு மழலையர் பட்டாளம் காத்துக்கிடக்கும். மணிமேகலையின் அமுத சுரபி போல அந்தக் கைப்பை வற்றியதே இல்லை. 1931ம் ஆண்டு மாவீரன் பகத் சிங்கை தூக்கிலிடப்பட்டபோது ஆவேசம் கொண்டவராக மதுரையில் நடைபெற்ற ஊர்வலத்தில் பங்கேற்ற ஐ.மா.பா.வின் ஆவேசம் கடைசி வரை குறையவேயில்லை. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்த மருத்துவர் இரங்கல் கூட்டத்தில் இப்படி கூறினார். அவருடைய மரபணுக்களிலேயே தேசபக்தி கலந்திருந்தது. மருத்துவ மனையில் பேச முடியாமல் சோர்ந்து படுத்துக்கிடந்தாலும், விடுதலைப் போரைப் பற்றி பேசினால் உடனடியாக எழுந்து உட்கார்ந்து `வந்தே மாதரம், இன்குலாப் ஜிந்தாபாத், ஜெய்ஹிந்த்’ என்று முழங்கத் துவங்கிவிடுவார்’ என்றார்.அவருடைய இறுதி ஊர்வலத்திலும் இந்த மூன்று முழக்கங்களும் கேட்டுக் கொண்டே இருந்தது.

ரயில்வே பட்ஜெட் எனும் மாயமான் வேட்டை

 http://www.greaternoidaweb.in/images/train.jpg

பயணிகள் கட்டணம் உயர்த்தப்படாத ரயில்வே பட்ஜெட் என்று பாஜக ஆட்கள் பீற்றிக் கொண்டாலும் எந்த ஒரு புதிய திட்டமோ இல்லை புதிய ரயிலோ இல்லாத, ஏற்கனவே பாதியில் உள்ள திட்டங்களையும் அம்போவென் நிறுத்தியுள்ள ஒரு பட்ஜெட்டாகத்தான் கட்சித்தாவல் புகழ் சுரேஷ் பிரபு வழங்கியுள்ளார் என்பதுதான் உண்மை.

பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது சொற்பத் தொகை. ரயில்வேயில் உள்ள காலியிடங்களை நிரப்புவது பற்றி பேச்சே இல்லை. 

அப்பர் பெர்த்தில் ஏற புதிய படிக்கட்டு, எஸ்.எம்.எஸ் தகவல்கள் ஆகியவை வெறும் ஜோடனை வேலைகள்.

தூய்மை இந்தியா திட்டத்தை அம்லாக்குவோம் என்று வார்த்தையில் சொல்லியுள்ளாரே தவிர  அதற்கான திட்டம் எதுவும் இல்லை. பயோ டாய்லெட் பற்றி பேசப்பட்டுள்ளது. ஆனால் தண்டவாளங்களில் மனிதக் கழிவை கையால் அகற்றுவதை நீக்க என்ன செய்யப் போகிறார்கள்.

பயோ டாய்லெட்டிற்கான நிதியைக் கூட தனியார் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி நிதியிலிருந்துதான் அளிக்க வேண்டுமாம்.

மொத்தத்தில் ஒரு வெற்று பட்ஜெட்.  கார்ப்பரேட்டுகளிடம் ரயில்வேயை ஒப்படைக்க அடித்தளம் அமைப்பதற்காக  எந்த புதிய திட்டமும் எங்களால் முடியாது என்று சொல்லியுள்ளார்கள்.

கட்டண உயர்வு கிடையாது என்ற மாய மானை உருவாக்கி அதிலே மக்கள் மயங்கும் நேரத்தில் ரயில்வே துறையை கார்ப்பரேட்டுக்கள் வேட்டையாட களம் உருவாக்கிக் கொடுத்துள்ளார்கள்.

பட்டியலினத்தவர் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் தோழர் டி.கே.ஆர்

 https://c2.staticflickr.com/4/3203/3012840328_ecc7cd7f41.jpg

பட்டியலினத்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் புதிதாக சில ஜாதிகளை இணைப்பது பற்றியும் திட்டக் கமிஷன் ஒழிக்கப்பட்டு விட்டதால் எஸ்.சி/எஸ்.டி துணைத் திட்ட நிதி என்ன ஆகும் என்பது பற்றியும் நாடாளுமன்ற மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தோழர் டி.கே.ரங்கராஜன் பேசியுள்ளதின் இணைப்பை இங்கே அளித்துள்ளேன்.

ஆக்கபூர்வமாக தோழர் டி.கே.ஆர் முன்வைத்த கருத்துக்களை மோடி அரசு பரிசீலிக்குமா? 

Thursday, February 26, 2015

எழுத்தாளன் என்றால் அடிப்பார்களா?

"மாதொரு பாகன்" நாவலை முன்வைத்து எழுத்தாளர் பெருமாள் முருகன் மீது மன ரீதியான தாக்குதல் நடத்திய பிற்போக்கு சக்திகள் அடுத்த கட்டமாக புலீயூர் முருகேசன் மீது நேரடியாக  அடிதடி தாக்குதலே நடத்தியுள்ளனர். 

வழக்கம் போல காவல்துறை ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாகவே வால் பிடித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தோழர் ச.தமிழ்ச்செல்வன் பகிர்ந்து கொண்ட தகவலை இங்கே பதிவு செய்துள்ளேன்.

தமிழகத்தில் அரசு என்று ஒன்று இருக்கிறதா? கோதானம் செய்வதும் தங்கத்தேர் இழுப்பதும் கேக் வெட்டி தின்பதும்தான் அமைச்சர்களின் வேலையாகிப் போன ஒரு ஆட்சியில் எழுத்தாளர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று கிளம்பியுள்ள கூட்டத்திற்கு எதிராக கண்டனம் முழங்குவோம்.

அரசே உறக்கத்தைக் கலைத்து உருப்படியாக நடவடிக்கை எடு என்று குரல் கொடுப்போம்.

 
எழுத்தாளர் புலியூர் முருகேசன் மீது கொலை வெறித் தாக்குதல்...

நேற்று மாலை கரூரை அடுத்த பசுபதிபாளையத்தில் எழுத்தாளர் முருகேசன் தாக்கப்பட்டதாக தகவல் கிடைத்ததும் கரூர் தமுஎகச மாவட்டச் செயலாளர் பழ.நாகராஜனை தொடர்பு கொண்டோம். அவர் உடனடியாக பசுபதிபாளையம் காவல்நிலையம் சென்று விசாரித்தபோது, "அப்படி ஒன்றும் சம்பவம் இல்லை" என பதில் கூறியுள்ளனர். பின்னர் தொடர்ந்து ஊரில் விசாரித்தபோது, கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், முருகேசனின் புத்தகம் தங்கள் சமூகத்தை இழிவு படுத்துவதாகச் சொல்லி மறியல் செய்துள்ளனர். மறியல் முடித்து இருபது பேர் கொண்ட கும்பல் முருகேசன் வீடு புகுந்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். பின்னர் அவரைக் காரில் தூக்கிப் போட்டுச் சென்று வெளியில் வைத்து "நாங்க தனியரசு கட்சிக்காரங்க, உண்ணக் கொல்லாம விடமாட்டோம்." என்று சொல்லி அடித்துள்ளனர்.

அவர்கள் போட்டுவிட்டுப் போன பிறகு, முருகேசன் காவல் நிலையம் சென்றிருக்கிறார். "ஒரு நாலு பேர் வந்து தாக்கியதாக புகார் கொடுங்கள்" என காவல்துறையினர் கூறியுள்ளனர். பின்னர், "பிரஸ் கிளப் சென்று முறையிட்ட பின் நடந்ததை எழுதிக் கொடுங்கள்" ஏற்கிறோம் என்று சொல்லியுள்ளனர். இரவு தனியார் மருத்துவமனையில் வைத்திருந்துவிட்டு பத்து மணிக்கு மேல், அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

தனியார் மருத்துவமனைக்கு நமது தமுஎகச மாவட்டச் செயலாளர் சென்று விசாரித்தபோது "அப்படி யாரும் அனுமதிக்கப்படவில்லை" எனச் சொல்லி அனுப்பிவிட்டனர். கரூர் சிபிஎம் மாவட்டச் செயலாளர் கந்தசாமி விசாரித்ததில் "எழுத்தாளருக்குப் பாதுகாப்பு கருதி பத்திரமான இடத்தில் வைத்திருக்கிறோம்" எனக் காவல்துறை சொல்லியிருக்கிறது.

சிபிஎம் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் சென்னையில் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் இன்று காலை பேசி முறையாக வழக்கைப் பதிவு செய்ய வற்புறுத்தலாம் என்று சொன்னார். முருகேசனிடம் நானும் பேசினேன். சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கனகராஜும் பேசினார். அப்போது அவர், "சாதிய சக்திகளை எதிர்த்து உறுதியாகப் போராடுவோம். நான் பின் வாங்க மாட்டேன். இவர்களுக்கு அடிபணிய மாட்டேன்." என உறுதியான குரலில் பேசினார்.

இனி நமக்குத்தான் கடமை இருக்கிறது. தமிழகம் முழுவதும் கண்டனம் முழங்க வேண்டும்.
Bottom of Form





Wednesday, February 25, 2015

அவரைப் பற்றி அவரோடு பழகியவர்

நேற்று காலமான சுதந்திரப் போராட்ட வீரரும் பொதுவுடமை இயக்க மூத்த தலைவருமான தோழர் ஐ.மாயாண்டி பாரதி பற்றி அவரோடு பழகிய எங்கள் இன்சூரன்ஸ் இயக்க மூத்த தோழர் காஷ்யபன் பகிர்ந்து கொண்டதை இங்கே பதிவு செய்துள்ளேன்.


தோழர் ஐ.மா.பா அவர்களுக்கு எனது செவ்வணக்கம்.





 

"ஐ.மா . பா  " அவர்களுக்கு   அஞ்சலி...!!!


"ஐ.மா.பா " என்ற ஐ.மாயாண்டி பாரதி .........


மதுரை "டவுண் ஹால் " ரோடிலிருந்து ரயில் நிலையம் செல்லும் பாதையில் வலதுபக்கம் முதல் சந்து தான் மண்டயனாசாரி சந்து.எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அங்குதான் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் இருந்தது.பிடி.ஆர்,சரோஜ் முகர்ஜி ,சுந்தரய்யா,. இ.எம்.எஸ், என்று அந்த பாரத புத்திரர்களின் பாதம்பட்ட அலுவலகம் அது. அந்த வீடு ஐ.மாயாண்டி பாரதியின் வீடு.


மதுரை மேலமாசிவீதியில் "ரேமாண்ட்ஸ் " இருந்த கட்டடத்தின் மாடியில் தான் ஐ.மா.பா வசித்து வந்தார். அவர் "தீக்கதிர்" அலுவலகத்திற்கு செல்லும் அழகே தனி. வெள்ளை வேட்டி,சட்டை ,கழுத்தில் நேரியல், ஒருபையில் மதிய உணவு,சில புத்தகங்கள், மற்றொரு மஞ்சள் பையில் இனிப்புமிட்டாய் களொடு புறப்படுவார். ஐந்து வயதிலிருந்து சிறுவர்கள் அவர் படியை விட்டு இறங்கியதும் "தாத்தா -தாத்தா" என்று மொய்த்துக்கொள்வார்கள். அவர்களுக்கு பையிலிருந்து மிட்டாய் கொடுப்பார். வடக்கு ஆவணி மூல வீதி 1ம் நம்பர் சந்திலிருந்த தீக்கதிர் பை பாஸ் ரொடு போனபிறகும் இது தொடர்ந்தது.


புது அலுவலகத்தில் ரோட்டைப்பார்த்த ஜன்னல் அருகில்தான் அவருக்கு இடம். பள்ளிச்சிறுவர்கள் ஜன்னளொரம் வந்து தினம் மிட்டாய் வாங்கிகொண்டு செல்வார்கள். ஒய்வு நேரங்களீல் அவர்களுக்கு பகத்சிங், திருப்பூர் குமரன்,போன்ற தெசபக்தர்களீன் கதையைச்சொல்வார். கண்கள்விரிய, வாய்பிளக்க, அந்தச்சின்னஞ்சிறிசுகள் பார்க்க நடிதுக்காட்டுவார். அதில் ஒருசிறுவன்தான் படித்து,மாணவர்,இயக்கம்.வாலிபர்சங்கம் என்று வளர்ந்து தீக்கதிர் துணைஆசிரியராக அவர் அருகில் அமர்ந்து பணியாற்றிய பாண்டி என்ற பாண்டியன்


இன்று மதுரை நகரத்தில் பகுதிகமிட்டி,இடைக்கமிட்டி என்று தலமை வகிப்பவர்களில் பலர் அன்று அவரிடம் மிட்டய் வாங்கிய சிறுவர்களாவர். Catch them young என்பதை நடைமுறைப்படுத்தியவர் அவர்.


சுதந்திரப் பொராட்டகாலத்திலும்,தலைமறைவு வாழ்க்கையின் போதும் நடத்திய சாகசங்கள் மெய்சிலிர்க்க சொல்லுவார். காங்கிரஸ் அரசு கம்யூனிஸ்டுகளை நரவேட்டையாடிக்கொண்டிருந்தது.தலமறைவாக இருந்தனர். செலம் சிறையில் கம்யூனிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்." சாமா! இதுக்கு பதிலடி கொடுக்கணம்னு தொணித்து.பவநகர் மகாராஜா தூத்துக்குடி வர இருந்தார். மீள்விட்டான் பக்கத்துலா காத்திருந்தோம். ராத்திரி.தண்டவாளத்தை கழட்டி ரயிலை கவிழ்த்துவது திட்டம். ரயிலும் வந்தது கவிழ்ந்தது.ஆனா அது கூட்ஸ் ரயில் " 

என்றுகூறிவிட்டு,"நெஞ்சுல கோபமிருந்தது.வீரமிருந்தது.விவேகமில்ல" என்று முடிப்பார்.


திருநெல்வேலி கொக்கிரகுளத்தில தெலுங்கு செட்டியார் வேடத்தில அவர் பாலவிநாயகத்தோட சுத்தியதை கதை கதையாகச்சொல்லுவார்.


" ஐ.மாபா! பத்திரிகைக்கு எப்படி வந்தீங்க?"

"கட்சி வேலை! எதுன்னாலும் செய்யத்தான வேணூம். ஜனசக்தில ஒக்காருன்னாங்க. அங்க ஜீவா,மாஜினி, முத்தையா கூட வேலை.வேடிக்கை தெரியுமா? மூணு பெருக்கும் காதுகேக்காது." என்று கூறி சிரிப்பார். 


கட்சி மீது அவருக்குள்ள விமரிசனத்தை கோபமாக வெளிபடுத்துவார். கே.ஏம் அவர்க்கு விளக்கமளித்து சமாதானப்படுத்துவார்.அவர் போனதும் என்னிடம்" தஞ்சாவூரில் வசதியான குடும்பம். அண்ணமலைல படிக்க அனுப்பினாங்க பால தண்டாயுதம் இவருனு மானவர்களை சேத்தாங்க.பொலீஸ் பிடிச்சுட்டான். அப்பா சத்தம்போட்டார். குடும்பத்துக்கும் எனக்கும்சம்பந்தமில்லனு சொல்லி விடுதலை பத்திரம் எழுதிகொடுத்துட்டு கட்சிக்குவந்துட்டாரு. இப்ப அலுமினிய சட்டியில கரி அடுப்புல மதியசோற பொங்கி சாப்பிடுதாரு." 

கண்கள் கசிய அவர்கள் இருவரையும் மனதால் தொழுவேன். 

சில சமயம் காரசாரமாக கே.எம் அவர்களோடு விவாதிப்பார். கொபம் கொப்புளிக்கும் கே எம் எழுந்து பொய்விடுவார். கோஞ்ச நேரம் கழித்து கிரஷாம் என்ற ஆபீஸ் எடுபிடி ஐ.மா.பா வை வந்து கூப்பிடுவார்." சமாதானமா! வர முடியாது" என்பார். சிறிது நேரம் கழித்து ஒரு அலுமினிய டம்ளரில் சூடாக டீ யை கே எம் கொண்டு நீட்டுவார். "ஏன் ! இதைக்குடிக்க அங்க வரணுமோ

" சர்யா! ஒரு டீ தான் இருந்தது.எல்லார் முன்னலயும் உமக்குமட்டும்கொடுத்தா ..." 

ஐ.மா.பா டீயைக்குடிப்பார்." ஐ.மா..பா. இப்பாடிசண்டை போடவும் வேண்டாம்.குடிக்கவும் வேண்டாம் என்பேன்" நான் . 

. "இதபார்ர.சண்டை போட்டதே அதுக்குத்தானே" என்பார் அவர்.


மனித நேயத்தின் உச்சகட்ட வளர்ச்சி தான் மார்க்சிசம் என்பார்கள் .அதை இந்த தேசபக்தர்கள் காலடியில் அமர்ந்து கற்றுக் கொண்டேன் .

மோடியின் வீர வசனம் குருமகா சன்னிதானத்திற்கு பொருந்தாதா?




தன்னலமற்ற சேவை புரிந்த, அனைவரிடத்திலும் அன்பை மட்டுமே வெளிப்படுத்திய, இந்தியாவின் பெருமைகளில் ஒன்றாக திகழ்ந்த அன்னை தெரசா மீது காவிக்கூட்டத் தலைவன் மோகன் பகவத் நச்சைக் கக்கியுள்ளார். இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. விஷத்தை உமிழ்வதுதான் நாகப் பாம்பின் இயல்பு. அதைத்தான் மோகன் பகவத் செய்துள்ளார்.

இதனால் அன்னை தெரசாவிற்கு எந்த இழிவுமில்லை. அவரின் காலடி நிழலில் நிற்கக் கூட தகுதியற்ற மோகன் பகவத்தின் இழி குணம் இன்னொரு முறை அம்பலப்பட்டுள்ளது. இந்த மனிதரின் உரையை முன்பு நேரடி ஒளிபரப்பு செய்த அரசுத் தொலைக்காட்சிக்கு இழிவு. இவர்தம் பாதம் பணிந்து ஆட்சி நடத்தும் மோடி அரசுக்கு இழிவு. இந்த மனிதர் வாழும் நாடாக இருப்பதால் இந்தியாவிற்கு இழிவு.

 மற்ற மதங்கள் மீது துவேஷத்தை பரப்பக் கூடாது
அனைத்து மதங்களும் சமம்

மாற்று மதத்தவர் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்


எனது அரசு இதையெல்லாம் சகித்துக் கொள்ளாது
 
என்றெல்லாம் மோடி வீர வசனம் பேசி ஒரு வாரம் முடிவதற்குள் அவரது குரு மகா சன்னிதானம் மோகன் பகவத் இப்படி வெறுப்பை விதைப்பதன் நோக்கம் என்ன தெரியுமா?
 
நடிப்பிற்குக் கூட இப்படியெல்லாம் உளறக்கூடாது என்று மோடியின் தலையில் வைக்கப்பட்ட குட்டுதான் மோகன் பகவத்தின் உரை. நாங்கள் அப்படித்தான் பேசுவோம். விஷத்தைக் கக்குவோம். வெறுப்பை பரப்புவ்வோம், பகைமைத் தீயை விசிறி விடுவோம் என்று காவிக்கூட்டம் அளித்துள்ள பிரகடனம் அது. ஆகவே அண்ணன் மோடி எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார் என்பதுதான் யதார்த்தம்.
 
நாய் வால் என்றும் நிமிராது.
 


 

Tuesday, February 24, 2015

ஹனுமான் கதாயுதம் என்றொரு கதை



மேலேயுள்ள கதாயுதம் இலங்கையில் அகழ்வாராய்சி நடத்தும் போது கண்டுபிடிக்கப்பட்டது.  ராவணனுக்கு எதிரான போரில் ஹனுமான் பயன்படுத்தியது, இதுதான் ராமாயணம் நடந்ததற்கான ஆதாரம் என்ற ரீதியில் முகநூலில் பலரும் பக்திப் பரவசத்தோடு பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதை பலரும் நம்பி புல்லரித்துக் கொண்டு போய் இருக்கிறார்கள்.

ஆனால் உண்மை என்னவென்றால்  மத்தியப் பிரதேசத்தில் 125 அடி உயரத்தில் செய்யப்பட்ட ஹனுமார் சிலையில் பொருத்துவதற்காக செய்யப்பட்ட கதாயுதம். அதை அந்த சிலை உள்ள இடத்திற்கு எடுத்துச் செல்லும் போது எடுத்த புகைப்படம். இது நடந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகி விட்டது.

ஆனால் இலங்கையில் புதைந்து கிடந்தது, ஹனுமான் போரில் பயன்படுத்தியது என்ற கற்பனைக் கதைகள் இப்போதுதான் கிளம்பியுள்ளது. 

இதற்கு முன்பாக கடோத்கஜன் எலும்புக் கூடு என்ற  மோசடிக்கதை உலாவிக் கொண்டிருந்தது பற்றி எழுதியதன் இணைப்பை மேலே அளித்துள்ளேன். 

கேட்பவன் கேணையன் என்றால் கேரம் போர்டைக் கண்டுபிடித்தது கே.எஸ்.ரவிகுமார் என்றுதான் சொல்வார்கள்.

இப்படி கட்டுக்கதைகள் மூலம்தான் பக்தியை பாதுகாக்க வேண்டியிருப்பது அதன் பலவீனம்தானே!
 

Monday, February 23, 2015

ரவா பருப்பு இனிப்புக் கொழுக்கட்டை

சமையல் பதிவு போட்டு நீண்ட நாட்களாயிற்றே என்று இரண்டு தோழர்கள் கேட்டது  கொஞ்சம் உசுப்பி விட்டது. புதிய முயற்சிகள் எதுவும் செய்வதற்கான காலமும் கிடைக்கவில்லை என்பதும் உண்மை. ஆனால் இப்படி ஒரு கேள்வி வந்த பின்பு சும்மா இருக்க முடியுமா?

என்ன செய்யலாம் என்ற சிந்தனைக்கு என் மனைவி மூலமே விடை கிடைத்தது. கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, ரவா, மிளகாய் வற்றல் சேர்த்து ஒரு காரக் கொழுக்கட்டை செய்திருந்தார்கள். அதன் ருசி பிரமாதமாக இருந்ததால் அதையே இனிப்பாக மாற்றி விடலாம் என்று முடிவு செய்தேன்.நேற்று கிடைத்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு செய்த    அந்த முயற்சி வெற்றிகரமாக வந்ததால் இங்கே உங்களுக்கான ரவா பருப்பு கொழுக்கட்டை. சொதப்பியிருந்தாலும் அதனை பதிவிட்டிருப்பேன் என்பது வேறு விஷயம்.

முதலில் கடலைப் பருப்பு மற்றும் பயத்தம்பருப்பு ஒவ்வொன்றும் ஒரு முக்கால் ட்ம்ப்ளர் எடுத்துக் கொண்டு ஊற வைக்கவும். ஊற வைத்த அந்த பருப்போடு ஒன்றரை ட்ம்ப்ளர் வெல்லம் மற்றும் தேங்காய் துறுவலை சேர்த்து தண்ணீர் விடாமல் மிக்ஸியில் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.



பிறகு முந்திரி பருப்பை வறுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதே வாணலியில் நெய் சேர்த்து ரவாவை வறுக்கவும். இன்னொரு அடுப்பில் சுடு தண்ணீர் வைக்கவும். ரவா நங்கு வறுபட்டதும் சுடுதண்ணீரை (நன்றாக கொதிக்க கொதிக்க இருக்க வேண்டும்) கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கேசரி போல வரும்வரை கிளரவும். பின்பு இதோடு ஏற்கனவே அரைத்து வைத்த பருப்பு கலவையையும் வறுத்த முந்திரி பருப்பையும் சேர்த்து நன்றாக கிளறுங்கள். கொஞ்சம் திடமான பிறகு அடுப்பிலிருந்து இறக்கி விடவும். 




அடுத்து இந்த கலவையை கைகளிலியே வட்டமாக தட்டிக் கொள்ளுங்கள். அப்படி தயார் செய்ததை இட்லி பானையில்  வைத்து  இட்லி தட்டில் கொஞ்சம் நெய் தடவி சில நிமிடங்கள் வேக வைக்கவும்.



அடுப்பிலிருந்து எடுத்து மேலே ஒரு செர்ரி பழம் வைத்து அலங்கரித்து சாப்பிடவும்.



பின் குறிப்பு 1 : ஒவ்வொரு நிலையிலும் புகைப்படம் எடுக்க கேமரா தயாராக இருக்க வேண்டும்.

பின் குறிப்பு 2 : இந்த ரவா பருப்பு இனிப்பு கொழுக்கட்டைக்கு நான் பேடண்ட் எல்லாம் வாங்கப் போவதில்லை. ஆகவே யாரும் ராயல்டி பற்றி கவலைப்பட வேண்டாம். 


நேற்று ரத்தச்சிலை, இன்று சிலுவை. எப்படி திட்டுவதென்று தெரியவில்லை.

 




இரண்டு வருடங்கள் முன்பாகவே கராத்தே ஹூசைனி போக வேண்டிய இடம் மன நோய் விடுதி என்று எழுதியதை இங்கே விபரமாக படியுங்கள்.

அப்போது ஜெயலலிதாவை குளிர்விக்க ரத்தத்தில் சிலை செய்த அந்த மனிதன், இப்பொது தன்னை சிலுவையில் அறைந்து கொண்டு தனக்கு மறை கழண்டுள்ளதை மீண்டும் நிரூபித்துள்ளார்.

இதை அடிமை புத்தி என்று திட்டுவதா?
இல்லை ஆதாயத்திற்கான சந்தர்ப்பவாதம் என்பதா?
அநாகரீகச் செயல் என்று சாடுவதா?

முன்பு ரத்தச்சிலை செய்த போதே அதனை ஜெயலலிதா கண்டிக்காமல் அவருக்கு நிலம் கொடுத்து ஊக்குவித்ததால் இப்போது சிலுவை நாடகம் நடந்துள்ளது.

அடுத்த அபத்தத்தை ஹூசைனி செய்யும் முன் அந்த மனிதனை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அடையுங்கள்

பணத்திற்காக வெறியூட்டாதீர்கள்


Image result for Star sports cricket advertisement

 Image result for Star sports cricket advertisement


 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்து கொண்டிருக்கிறது. அதற்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி சேனல் தயாரித்த மூன்று விளம்பரப் படங்களை நேற்று என் மகன் காண்பித்தான்.

பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் பாகிஸ்தானின் வெற்றி பெற்றால் வெடிப்பதற்காக பட்டாசுகளை வாங்கி பல வருடங்களாக ஏக்கத்துடன் காத்திருந்து ஏமாறுவதாக முதல் படம் இருக்கிறது.

தென் ஆப்பிரிக்காவை இதுவரை உலகக் கோப்பையில் வென்றதே இல்லை என்பதை தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் நையாண்டி செய்வதாக இரண்டாவது விளம்பரப்படம் இருக்கிறது.

ஏமாற்றத்துடன் உள்ள பாகிஸ்தான் ரசிகர் தென் ஆப்பிரிக்க சட்டையைப் போட்டுக் கொண்டு அந்த அணியை ஆதரிப்பதாகவும் அந்த அணி தோற்றதும் வெறுப்பாக அந்த சட்டையை கழட்டி வீசி வெளியே வருபவரிடம் ஐக்கிய அரபு அணி ரசிகர் தங்கள் சட்டையை பாகிஸ்தான் ரசிகரிடம் அளித்து தங்களை ஆதரிக்கச் சொல்வதாய் மூன்றாவது விளம்பரம் அமைந்துள்ளது.

இந்த விளம்பரங்கள் எல்லாமே இந்திய ரசிகர்களை வெறியூட்டும் தன்மையோடுதான் அமைந்துள்ளது. இது மலிவான ரசனை என்பது மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட. இந்தியா பாகிஸ்தான் மக்களிடையே பகைமையை உருவாக்குவதும் அதை அதிகப்படுத்துவதுமாக உள்ளது. கனவான்களின் விளையாட்டு என்று சொல்லப்பட்ட கிரிக்கெட் களவாணிகளின் ஆக்கிரமிப்பில் உள்ளது என்பதற்கான உதாரணம் இது.

தங்களுடைய விளம்பர வருவாயை அதிகரிக்க, அதிகமானவர்களை தொலைக்காட்சியை பார்க்க வைக்க இப்படி வெறியூட்டப்படுகிறது. பன்னாட்டு ஊடகங்கள் கிரிக்கெட் உலகில் அடிவைத்த பின்புதான் எல்லா சீர்கேடுகளும் தொடங்கியது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இப்போது அந்த சீரழிவு காசுக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அளவிற்கு போய் விட்டது. பொதுவாக இங்கிலாந்து கால்பந்து ரசிகர்களை முரட்டுத்தனமானவர்கள் என்று எல்லோரும் சொல்வார்கள். அப்படி முரட்டுத்தனமான கிரிக்கெட் ரசிகர்களை உருவாக்கவே இது போன்ற மட்டமான சிந்தனை கொண்ட விளம்பரங்கள் வழி வகுக்கும்.

ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமானால் 

This is not Cricket