இது என்னுடைய எட்டாயிரமாவது பதிவு.
என்ன எழுதலாம் என்று யோசித்தேன்.
வலைப்பக்க அனுபவத்தையே எழுதலாம் என்று முடிவு செய்தேன்.
2009 ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது வலைப்பக்கம் தொடங்கி ஒரு பதிவு எழுதினேன். தேர்தல் முடிவுகள் திருப்தி அளிக்காத காரணத்தால் மக்களை திட்டி ஒரு பதிவு எழுதி ஒரு பூட்டு போட்டு பூட்டி விட்டேன்.
2010 ம் ஆண்டு ஒரு விபத்து. காலில் ஜவ்வு கிழிந்து கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல் விடுப்பில் இருக்க நேரிட்டது. அப்போது பொழுதை போக்க வலைப்பக்கத்தை தூசி தட்டி எழுதத் தொடங்கினேன்.
எல்.ஐ.சி நிறுவனத்தை பொதுத்துறை நிறுவனமாக பாதுகாப்பது, அதற்கான நியாயங்கள், எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் செயல்பாடுகள், சில அனுபவங்கள் என்று எழுதத் தொடங்கியது பிறகு பல்வேறு விஷயங்கள் குறித்து எழுதும் அளவு விரிவடைந்தது.
நான் நம்புகிற பொது உடமைத் தத்துவம், நான் நேசிக்கிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கற்றுக் கொடுத்ததன் அடிப்படையில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை உழைக்கும் வர்க்கக் கண்ணோட்டத்தில் அணுகுவது என்ற முறையில் பதிவுகளை எழுதத் தொடங்கிய பின்பு பதிவுகள் குவியத் தொடங்கியது.
தமிழ் மணம் திரட்டி செயல்பட்டு வந்து வரை அதிலே வரிசைப் பட்டியலில் இடம் பிடிப்பது, ஒவ்வொரு நாளும் வெளியாகும் டாப் பத்து பதிவுகளில் இடம் பெறுவது ஆகியவையெல்லாம் மிக்க உற்சாகம் அளித்தது. தமிழ் மணம் செயலிழந்ததும் பார்வைகளின் எண்ணிக்கையில் கொஞ்சம் சரிவு இருந்தது. அது ஒரு வருட காலம்தான். வாட்ஸப் குழுக்களில் பதிவை பகிர்வது அந்த இழப்பை ஈடு செய்தது.
பெரும்பாலும் அரசியல் பதிவுகள்தான். பதிவுக்கு பொருத்தமான படத்தை தயார் செய்ய பெரும்பாலும் உதவுவது வடிவேலுதான். அரசியல் பதிவுகளைத் தாண்டி நான் ரசித்த இசை, முயற்சித்த சமையல்கள் ஆகியவையும் வந்துள்ளது. கிட்டத்தட்ட எண்பது புத்தகங்களுக்கு அறிமுகம் எழுதியது நிறைவைத் தந்துள்ளது.
ஜெயமோகன், மாலன் போன்றவர்களின் போலித்தனத்தை தோலுரிப்பது என்பது மிகவும் விருப்பமான ஒன்று.
கிட்டத்தட்ட ஒரு ஐநூறு பதிவுகளாவது அடுத்தவர்கள் எழுதியதாக இருக்கும். அடுத்தவர் பதிவை தன் பதிவாக காண்பிக்கும் சிறுமையை எந்நாளும் செய்ததில்லை. ஒரிஜினலாக எழுதியவர்களுக்கு நன்றி சொல்லியே பகிர்ந்து கொண்டுள்ளேன்.
இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலை என்பது போல அனாமதேயங்கள் தொல்லையும் சமயத்தில் எரிச்சல் ஊட்டும். மண்டையை மறைத்தாலும் கொண்டையை மறைக்காத பாடி சோடாக்கள் போல சில அனாமதேயங்கள் யார் என்பதும் தெரியும். அதில் ஒருவரின் குடும்ப வாழ்க்கையை காப்பாற்றி இருக்கிறேன். இன்னொருவரின் வேலையை காப்பாற்றியுள்ளேன். ஆனாலும் . … நன்றி மறந்த துரோகிகளும் உலாவும் உலகல்லவா இது!
இன்றைக்கு வலைப்பக்கம் எழுதுவதற்கு ஒரே ஒரு நோக்கம்தான் உள்ளது.
இந்தியாவிற்கு நேர்ந்த மிகப்பெரிய துயரம் மோடி ஆட்சியில் தொடர்வது. மத வெறியை தூண்டி மக்களை பிளவுபடுத்தும் அந்த மோசமான சக்திகளை, அவர்களின் அராஜக செயல்களை, கேவலமான பொய்களை அம்பலப் படுத்துவதுதான். ஒவ்வொரு நாளும் எழுதுவதற்கான செய்திகளை சங்கிகள் அளித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
இந்தியாவில் சமூக மாற்றம் உருவாகும் வரை என் பதிவுகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். எழுத்து அலைகள் என்றும் ஓயாது.