காஞ்சிபுரம்
வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு
நிச்சயமாக அதிர்ச்சி தரவில்லை. வழக்கு சென்ற பாதையே இலக்கை தீர்மானித்து விட்டது.
கைது செய்த ஜெயலலிதாவின் ஆட்சி மாறி கருணாநிதியின் ஆட்சி வந்த போதே வழக்கு
முடிந்து விட்டது.
குடியரசுத்
தலைவர் தொடங்கி பிரதமர் வரை கை கட்டி வாய் மூடி அடிபணிந்து கிடந்த ஒரு மடம், தலைமை
தேர்தல் ஆணையாளரே போக்குவரத்து காவலாளி போல ஊழியம் செய்த இடம். திமிரும்
அகந்தையும், செருக்கும், ஆணவமும் ஆணாதிக்கமும் ஜாதியமும், மேலாதிக்கமும் பிற்போக்குத்தனமும் பின்னிப் பிணைந்து கிடந்த
பீடம். இப்படிப்பட்ட இடங்களில் முறைகேடுகள், கையாடல்கள், ஊழல்கள், வக்கிரங்கள்,
மீறல்கள் தவிர வேறு என்ன நடக்கும்?
இதையெல்லாம்
அம்பலப்படுத்த வேண்டும் என்று நினைத்த சங்கரராமன் என்ற மனிதனை ரத்தச் சேற்றில்
மிதக்க விட்டார்கள். கடவுளின் தூதராக பார்க்கப் பட்டவர்களை பக்தகோடிகள் எப்போது
கடவுளாகவே வழிபடத் தொடங்கினார்கள் அல்லவா, அதனால்தான் அவர்கள் அழிக்கும் கடவுளாக
மாறி அரிவாள் மனிதர்களை அனுப்பி வைத்தார்கள்.
அற்புதங்களை
ஆண்டவன் மட்டும் நிகழ்த்துவதில்லை, இறைதூதர்கள் மட்டும் நடத்துவதில்லை. எப்போதாவது
அரசும் கூட செய்யும் என்பது போல எட்டாவது உலக அதிசயமாய் காவி உடை அணிந்தவர்கள்
மீது கூட சட்டத்தின் கரங்கள் நீண்டது. கமண்டலம் பிடித்த கைகளை காவல் விலங்கு
அலங்கரித்தது. தண்டம் பிடித்தவர்களை தடி வைத்த காவலர்கள் அழைத்து வந்தார்கள்.
மாளிகையின் வசதிகளை மடத்தில் அனுபவித்தவர்களுக்கு சிறையின் கொசுக்கடியும்
கிடைத்தது. அரசர்கள் போல் பல்லக்கில்
பயணம் செய்தவர்களுக்கு போலீஸ் வேனும் வாகனமானது.
மடத்தின்
வளத்தை யார் அபகரிப்பது என்று பெரியவர்களுக்குள் நடந்த மோதல்கள், காணாமல் போன
தங்கத் தாமரைகள், இன்னும் பல லீலைகள் என எத்தனையோ தகவல்கள் வெளிவந்தது.
காவித்திரைக்கு பின்னே இருந்த களங்கங்கள் அம்பலமானது.
ஆட்சி
மாறியதும் காட்சிகள் மாறியது. பெரியாரின் வாரிசு என்று இன்றும் கூட சிலரால்
நம்பப்படுபவருக்கு நட்புக் கரம் நீட்டப்பட அவரும் நேசத்தோடு பற்றிக் கொண்டார்.
அரசாட்சியின் துணை கிடைத்த பின்னே சாட்சிகள் மட்டும் சளைத்தவர்களா என்ன?
மிரட்டப்பட்டார்களோ,
இல்லை விலை கொடுத்து வாங்கப் பட்டார்களோ, பல்டி அடிப்பதில் உலக சாதனை அல்லவா
உருவானது! அதிகமான பிறழ் சாட்சியங்களை கொண்ட வழக்கு இதுதான் என்று புள்ளி
விபரங்கள் சொல்கிறதே! கொலையுண்டவரின் மனைவியும் மகனுமே தடம் பிரண்டு தடுமாறிய
பின்பு மற்றவர்களை என்ன சொல்ல?
கருப்பு துணி
கட்டப்பட்ட நீதி தேவதையின் கண்களுக்கு எந்த பேரமும் மிரட்டலும் பாதாளம் வரை
பாய்ந்த பணமும் தெரியவில்லை. பெருமளவு சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறிப் போன
மர்மம் என்ன என்று யோசிக்க, இறந்து போனது என்ன கோடிகளில் மிதக்கும் ஏதாவது
செல்வந்தனா என்ன? சாதாரண கோயில் ஊழியர்தானே!
முறைகேடுகளைப்
பற்றி குரல் கொடுக்க இனி இன்னொரு சங்கர ராமனுக்கு துணிவு வருமா என்ன? அப்படியே
வந்தாலும் அவர்களையும் அழித்து விட மாட்டார்களா முற்றும் துறந்த துறவிகள்?
தமிழக அரசு
என்ன செய்யப் போகிறது?
கலைஞர்
செய்ததை ஜெயலலிதா மாற்றுவதும் ஜெயலலிதா செய்வதை கருணாநிதி மாற்றுவதுமே தமிழக
கலாச்சாரமாக மாறி விட்டது.
அந்த
மரபின்படியாவது கருணாநிதியால் நீர்த்துப் போகச் செய்யப்பட்ட வழக்கிற்கு மீண்டும்
உயிர் கொடுக்க வேண்டும். நீதிக்கும் கூட....