Saturday, September 30, 2017

ஆரணிக்கு வாங்க . . அவசியம் வாங்க . . .

நாளை ஆரணியில் துவங்கும் எங்கள் வேலூர் கோட்டச் சங்கத்தின் 
முப்பதாவது பொது மாநாட்டிற்கு வாரீர் என்று அன்புடன் அழைக்கிறேன்.

 

Friday, September 29, 2017

இதுதான்யா யதார்த்தம் வெங்காயம்!!!!

ஆயுத பூஜையை முன்னிட்டு வந்த ஒரு வாழ்த்துச் செய்தி.

அது இங்கே தமிழிலே

இந்த அஷ்டமி அன்று
எந்த ஒரு துர்க்கையும் கருக்கொலை செய்யப்படாமல் இருக்க,
எந்த ஒரு சரஸ்வதியும் கல்வி கற்க பள்ளிக்குச் செல்வது தடுக்கப்படாமல் இருக்க,
எந்த ஒரு லட்சுமியும் தன் தேவைக்காக கணவனிடம் பிச்சையெடுக்கும் நிலை வராமல் இருக்க,
எந்த ஒரு பார்வதியும் வரதட்சணைக்காக எரியூட்டப்படாமல் இருக்க,
எந்த ஒரு காளியும் "ஃபேர் & லவ்லி" ட்யூப், ட்யூபாக முகத்தில் பூசிக் கொள்ளாமல் இருக்க

பிரார்த்திப்போம் 

துர்க்கைதான் அக்காலத்தில் பாதுகாப்பு மந்திரி,
லட்சுமிதான் நிதி மந்திரி

என்றெல்லாம் கதையளந்த வெங்காய நாயுடுவுக்கு,
இதுதான் யதார்த்தம் என்று சொல்லிக் கொள்கிறேன்.



பி.கு : துணை ஜனாதிபதியை வெங்காயம் என்று சொல்லலாமா என கொதிப்பவர்கள் யாராவது இருந்தால் அவர்கள்

ஹமீது அன்சாரியை வெங்காய நாயுடு, மோடி, ராம் மாதவ் உள்ளிட்ட பாஜககாரர்கள் அசிங்கப்படுத்தியபோது கொந்தளித்தார்களா 

என்றும்

ஜனாதிபதியை தின மலர் போன்ற பத்திரிக்கைகள் "கோவிந்து" என்றே அழைத்துக் கொண்டிருப்பதற்கு கொந்தளித்தார்களா

என்பதையும் ஆதாரத்தோடு நிரூபித்து 

பிறகு கொந்தளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

 

Thursday, September 28, 2017

யாரை ஏமாற்ற இந்த நாடகம் மோடி?

இந்தியப் பொருளாதாரம் அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது.

ஏழைகளை உருவாக்க அருண் ஜெய்ட்லி ஓவர்டைம் பார்க்கிறார்.

இந்தியப் பொருளாதாரம் நிமிர முடியாத சரிவை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது.

மேலே உள்ள செய்திகள் எல்லாம் உண்மைதான்.

ஆனால் அவற்றைச் சொல்வது யார்?

பொர்கி சாமி,
காவி ஆடிட்டர்,
நரி சின்ஹா

எல்லோருமே ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

செயினைத் திருடிக் கொண்டு ஓடுகிறவன் தானும் "திருடன், திருடன்"  என்று கத்திக் கொண்டு ஓடுவதைப் போன்ற காட்சியன்றி வேறெதுமில்லை.

இந்த நாடகத்தின் பின்னணியில் ஏதோ பெரிதாக நடக்கப் போகிறது.
விழிப்போடு இருக்க வேண்டிய தருணம் இது. ஆளும் கட்சி ஆட்களே காரித்துப்புகிறார்கள் என்று நம்மை ஏமாற்றி விட்டு திரைக்குப் பின் வேறு ஏதோ பெரிய அராஜகத்திற்கு ஒத்திகை பார்க்கிறார்கள். போதாக்குறைக்கு நாகாலாந்தில் வேறு ஒரு துப்பாக்கிச்சண்டை. 



எச்சரிக்கையாக இருங்க மக்களே!!!!

Wednesday, September 27, 2017

இதற்கு ஏன் அங்கே சென்றீர் கமல்?




கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயனை சந்திக்கச் சென்றது அரசியல் கற்க என்று சொன்னார் கமலஹாசன்.

தேவைப்பட்டால் பாஜகவை ஆதரிப்பேன் என்ற அரசியலை  நிச்சயம் தோழர் விஜயன் உங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கப் போவதில்லை.

இதைச் சொல்ல எதற்கு தோழர் விஜயனைச் சந்தித்தீர்கள்? இதிலே கருப்புச்சட்டை வேறு!!!

இந்த குழப்ப அரசியலைக் கற்றுக் கொடுக்க உங்களுக்கு  தமிழிசை போதும் என்று நினைக்கிறேன்

Monday, September 25, 2017

ஜெ உப்புமா சாப்பிட்டதும் டூப்தானா?




கடந்தாண்டு டிசம்பர் மாதம் எழுதிய பதிவு இது

அம்மா
கிங்காங் என பெயரிட்டு அழைத்தார்,
ஆளுக்கு ஒரு ஸ்பூன் உணவு கொடுத்தார்,
நான்தான்  பாஸ் என்றார்,
சிகை அலங்காரத்தை மாற்றச்சொல்லி உத்தரவிட்டார்,
உப்புமா சாப்பிட்டார்,
சீரியல் பார்த்தார்,
சினிமா பாட்டு கேட்டார்,
சட்டமன்றத்திற்கு அழைத்துச் செல்வதாகவும்
கொட நாட்டு டீ தருவதாகவும் சொன்னார்.
 
என்றெல்லாம் அப்பல்லோ மருத்துவமனை தாதியர்களைக் கொண்டு பேட்டி கொடுக்க வைத்தது நினைவுக்கு வருகிறதா?
 
இட்லி சாப்பிட்டதாக சொன்னது மட்டும்தான் பொய்யா?
அல்லது உப்புமா சாப்பிட்டதும்தானா?
 
திண்டுக்கல் சீனிவாசன் போல
அப்பல்லோ பிரதாப் ரெட்டியும் எப்போது உண்மை பேசுவார்?
 
 

Sunday, September 24, 2017

"நடுங்கிக் குரைக்கிறது" ?????????????

இன்றைய தீக்கதிர் நாளிதழில் வெளியாகியுள்ள முக்கியமான கட்டுரையை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன். அமெரிக்க ஏகாதிபத்தியமும் முதலாளித்துவ ஊடகங்களும் வட கொரியா பற்றி செய்து வரும் பல பொய்ப்பிரச்சாரங்களை அம்பலப்படுத்துகிறது.

நன்றி தோழர் எஸ்.பி.ராஜேந்திரன்



‘நடுங்கிக் குரைக்கிறது ஓர் ஞமலி’ எஸ்.பி.ராஜேந்திரன்



செப்டம்பர் 21 அன்று தீக்கதிர் ஆசிரியர் பெயருக்கு ஒரு கடிதம் வந்தது. திருநெல்வேலியிலிருந்து வாசகர் டி.ஆறுமுகம் அவர்கள் எழுதியிருந்தார்.“இன்றைய தீக்கதிர் நாளிதழில் வடகொரியாவுக்கு எதிராக டிரம்ப் கொக்கரிப்பு-சிபிஎம் கடும் எதிர்ப்பு என்ற முன்பக்க செய்தி தொடர்பாக பின்வரும் விமர்சனம் தெரிவிக்கப்படுகிறது: ‘வடகொரியாவுக்கு எதிராக டிரம்ப் கொக்கரிப்பு’ என கடும் எதிர்ப்பை தெரிவிக்கும் சிபிஎம், சில நாட்களுக்கு முன்பு ‘அமெரிக்காவைத் தாக்குவோம்’ என வடகொரிய அதிபர் கொக்கரித்தாரே, அந்தச் செய்தியை ஏன் கண்டுகொள்ளவில்லை?”.

வடகொரியாவைப் பற்றி பலருக்கும் எழுகிற இயல்பான சந்தேகமும் கேள்வியும்தான் மேற்கண்ட கடிதத்தில் பிரதிபலித்திருக்கிறது. நாம் அன்றாடம் கவனிக்கிற ஊடகங்கள் நமக்குத் தெரிவிக்கும் செய்திகளிலிருந்தே வடகொரியாவை புரிந்துகொள்ள முயல்கிறோம். ஆனால் ஊடகங்கள் சொல்ல மறுக்கிற - இன்றைய அமெரிக்க - வடகொரிய அரசியல் மோதல் என்கிற நாணயத்தின் மற்றொரு பக்கம் இருக்கிறது.உண்மையில் “அமெரிக்காவைத் தாக்குவோம்” என்று இதுவரையிலும் வடகொரியா சொன்னது இல்லை. ஆனால் அமெரிக்காவை தாக்குவதற்காகத்தான் வடகொரியா ஏவுகணை சோதனைகளையும் அணுசோதனைகளையும் நடத்தி வருகிறது என சர்வதேச ஊடகங்கள் இடைவிடாமல் ஊதித் தள்ளுகின்றன. அதையே நம்மூர் ஊடகங்களும் ஊதுகின்றன. யாரும் எதிர்பாராத வகையில், கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் பேசுகையில், “வடகொரியாவை முற்றாக அழிப்போம்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். 

ஐநா வரலாற்றில் - பொதுச் சபைக் கூட்டத்திலேயே இறையாண்மை மிக்க ஒரு நாட்டைப் பார்த்து அழித்தொழிப்போம் என்று இதுவரையிலும் எந்தவொரு ஜனாதிபதியும் கூறத் துணியவில்லை. ஆனால் நாடுகளின் இறையாண்மையை பாதுகாக்க உறுதியேற்க வேண்டிய ஐநா சபையின் மைய மண்டபத்தில் நின்றுகொண்டு வடகொரியாவை அழிப்போம் என கொக்கரித்ததன் மூலம் ஒட்டுமொத்த உலகையே அவமதித்தார் டொனால்டு டிரம்ப். இதற்கு பின்னர்தான், வடகொரிய ஆளுங்கட்சியான கொரிய தொழிலாளர் கட்சியின் மத்தியக்குழு கூடி, எங்களை அழிக்க முயன்றால் அடுத்த கணமே, அமெரிக்கா தனது இறுதி முடிவைச் சந்திக்க வேண்டியிருக்கும்.அமெரிக்க ஜனாதிபதி சொல்வதை மிரட்டல் என்கிறோம்; அதற்குப் பிறகு வடகொரியா சொல்வதை எச்சரிக்கை என்கிறோம். இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் இடையில் மிகப்பெரும் வேறுபாடு இருக்கிறது. அந்த வேறுபாட்டிற்குப் பின்னால் கிட்டத்தட்ட 70ஆண்டுகால வரலாறு இருக்கிறது. 

மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் - லெனின் - ஸ்டாலின் - மாவோ - கிம் இல் சுங் ஆகியோரின் சித்தாந்தங்களையும் கோட்பாடுகளையும் வழிகாட்டியாகக் கொண்டு இயங்குகிற வடகொரிய தொழிலாளர் கட்சியின் தலைமையில் வடகொரிய அரசு அமைந்துள்ளது. கொரிய மக்கள் ஜனநாயக குடியரசு எனும் சோசலிச வடகொரியா சுயசார்புடன் பல்வேறு துறைகளில் வளர்ச்சியை நோக்கி பயணப்பட முயற்சித்து வருகிறது. உலகப் பொருளாதார நெருக்கடியின் தாக்கங்கள், சோவியத் வீழ்ச்சியின் தாக்கங்கள்- இவை ஒருபுறம் இருந்தாலும் அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளை அரைநூற்றாண்டுக்கும் மேலாக சுமந்துகொண்டே தற்சார்பு பொருளாதாரமாக வளர்கிறது வடகொரியா என்பதுதான் அடிப்படையான உண்மை. 

ஆளும் கட்சியின் உட்கட்சி அணுகுமுறைகள் தொடர்பாகவும் இளம் ஜனாதிபதியான கிம் ஜோங் உன்னின் அணுகுமுறைகள் தொடர்பாகவும் மேற்கத்திய ஊடகங்கள் என்ன பரப்புகின்றனவோ அதுமட்டுமே உள்ளூர் ஊடகங்களில் ஊதப்பட்டு வருகின்றன. ஆனால் மறுபுறத்தில் அமெரிக்காவின் பகிரங்கமான ராணுவ மிரட்டல்கள் குறித்தோ - ஜப்பானையும் தென்கொரியாவையும் வடகொரியாவுக்கு எதிராக தூண்டிவிட்டு நிரந்தரமாக ஒரு பகைமையை நீடிக்கச் செய்து வருவது குறித்தோ - வடகொரியாவை நோக்கி அமெரிக்காவின் 60ஆயிரத்திற்கும் மேற்பட்ட துருப்புக்கள் எந்தநேரமும் தாக்குவதற்கு தயாராக காத்திருப்பது குறித்தோ - ஜப்பானில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் எந்த நேரமும் வடகொரியா மீது கொடூர குண்டுவீச்சுகளை நடத்தி கொத்திக் குதற துடித்துக் கொண்டிருப்பது குறித்தோ நமது ஊடகங்கள் வாய்திறப்பது இல்லை.

இந்தப் பின்னணியில் சமீபத்தில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை கணக்கில் கொண்டு உலகிற்கு பல்வேறு உண்மைகளை உரைக்கும் நோக்கத்துடன் கொரிய மக்கள் ஜனநாயக குடியரசின் செய்தித்தொடர்பு செயலகத்திலிருந்து, ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி ஏடான பிராவ்தா நாளேட்டிற்கு அனுப்பப்பட்டுள்ள பத்திரிகை செய்தி, பிராவ்தா இணைய ஏட்டில் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்தச் செய்தியை சர்வதேச ஊடகங்கள் எதுவும் வெளியிடாததன் பின்னணியிலேயே பிராவ்தா ஏட்டிற்கு கொரிய செய்தித் தொடர்பு செயலகம் அனுப்பியிருக்கிறது. அதில் ஏராளமான விவரங்களை வடகொரிய அரசு தெரிவித்திருக்கிறது. குறிப்பாக சமீப காலம் வரை - தனது அணுசோதனை முயற்சி உள்பட அனைத்து ஏவுகணை சோதனைகளையும் நிறுத்திவிடவும், கைவிடவும் தயாராக இருப்பதாக வடகொரியா கூறியிருக்கிறது; அதற்கு கைமாறாக, வடகொரியாவுடன் அமைதி ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறது. 

ஆனால் அந்த கோரிக்கையை வழக்கம்போல அமெரிக்கா நிராகரித்துவிட்டது.வடகொரியாவுடன் ஏன் அமெரிக்கா அமைதி உடன்பாட்டில் கையெழுத்திட வேண்டும் என்ற கேள்வி எழக்கூடும். அதன் பின்னணி 1950களில் இருந்து துவங்குகிறது.1945இல் இரண்டாம் உலகப்போர், ஹிட்லரை சோவியத் செஞ்சேனை வீழ்த்தியதற்குப் பிறகு முடிவுக்கு வந்தது. ஆனால் அதை அப்படியே முடிந்துவிடாமல் தொடரும் நோக்கத்துடன் ஜப்பானின் ஹிரோசிமா, நாகசாகி நகரங்கள் மீது கொடூரமான அணு ஆயுத தாக்குதலை அமெரிக்கா நடத்தியது. அந்த அதிர்ச்சியிலிருந்து உலகம் மீள்வதற்கு முன்பே கொரிய தீபகற்பத்தில் 1950ல் மிகப்பெரும் யுத்தத்தை கட்டவிழ்த்துவிட்டது அமெரிக்க ஏகாதிபத்தியம். இந்த யுத்தத்தில் லட்சக்கணக்கான கொரிய மக்களை கொன்று குவித்தது. கொரியாவை இரண்டாகப் பிளந்தது. இதைத்தொடர்ந்துதான் கொரிய தொழிலாளர் கட்சியின் தலைமையில் கொரிய மக்கள் ஜனநாயக குடியரசு மலர்ந்தது. 

அந்தப் போரின் முடிவில் 1953 ஜூலை 27 அன்று அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் பிறகு இந்த ஒப்பந்தத்தை - கொரிய தீபகற்பத்தில் நிரந்தரமாக அமைதியை உருவாக்கும் நோக்கத்துடன் - நிரந்தர அமைதி உடன்பாடாக மாற்றி கையெழுத்திட வேண்டும் என வடகொரியா வலியுறுத்தியது. அதற்காக தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அனைத்து முயற்சிகளையும் அமெரிக்கா நிராகரித்தது. அதன் நோக்கம் என்னவென்றால், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டுமென்றால் அதன் புவி அரசியல் மையமாக இருக்கும் கொரிய தீபகற்பத்தை முற்றாக தனது பிடியில் கொண்டுவர வேண்டும் என்பதுதான். அமெரிக்காவின் நோக்கத்திற்கு வடகொரியா இரையாகவில்லை. அதுதான் வடகொரியா மீதான அமெரிக்காவின் தீராத ஆத்திரத்திற்கு காரணம்.கொரிய தீபகற்பத்தில் இத்தகைய பிரச்சனை நிலவிய போதிலும், இன்றைக்கு ஊடகங்கள் பரபரப்பாக பேசுகிற அணு ஆயுத பரவல் தடை உடன்பாட்டில் - அந்த உடன்பாடு உருவான தருணத்திலேயே வடகொரியா உறுப்பினராக கையெழுத்திட்டது. 

ஆனால் 1990களில் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்த பிறகு - சோசலிச முகாமில் இருந்த நாடுகள் மீது அமெரிக்கா மிகக்கடுமையான நிர்ப்பந்தங்களையும் கட்டுப்பாடுகளையும் தடைகளையும் விதித்தது. குறிப்பாக வடகொரியாவை உலக வரைபடத்திலிருந்தே அழித்துவிட துடித்தது. அப்போதும் கூட மேற்கண்ட அணு ஆயுதப் பரவல் தடை உடன்பாட்டில் வடகொரியா உறுப்பினராக நீடித்தது. ஆனால், 2003ஆம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதியாக ஜார்ஜ் புஷ் வந்த பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. “தீமையின் அச்சு” என்று பெயரிட்டு அவர் சில நாடுகளைப் பட்டியலிட்டார். அந்தப் பட்டியலில் வடகொரியாவையும் சேர்த்தார். உலகின் தீய சக்திகளாக ஈரான், இராக், வடகொரியா ஆகிய நாடுகளை வரையறை செய்தார். இந்தப் பட்டியலை வெளியிட்ட அந்த ஆண்டே இராக் மீது, மிகக்கொடூரமான யுத்தத்தை ஜார்ஜ் புஷ் நடத்தினார். லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அடுத்த குறி வடகொரியாதான் என்பது பளிச்சென்று தெரிந்தது. அப்போதுதான் வடகொரியா முதல்முறையாக தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கு என்ன வழி என்று சிந்திக்கத் துவங்கியது. முதல்கட்டமாக அணு ஆயுதப் பரவல் தடை உடன்பாட்டிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தது. 

அந்த உடன்பாட்டில் ‘தனது சொந்த இறையாண்மைக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதினால் வெளியேறலாம் எனும் ஷரத்து 10 விதியின் படியே பகிரங்கமாக அறிவித்துவிட்டு வெளியேறியது. அமெரிக்காவிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக வடகொரியா தனது சொந்த அணுசக்தி திட்டத்தை உருவாக்குவது என முடிவு செய்தது.வடகொரியா இந்த முடிவை எடுத்தவுடனே ஒட்டுமொத்த ஊடகங்களும் ஓலமிட்டன. அமெரிக்கா தனது மிரட்டலை இன்னும் தீவிரப்படுத்தியது. அந்தச் சூழ்நிலைமையிலும் கூட 2005ல் வடகொரியா மீண்டும் உலக மன்றத்தில் முறையிட்டது. ஆக்கிரமிப்பு செய்யமாட்டோம் என அமைதி உடன்பாட்டில் அமெரிக்கா கையெழுத்திடுமானால் உடனடியாக தனது அணுசக்தி திட்டத்தை கைவிடத் தயாராக இருப்பதாக வடகொரியா உறுதியளித்தது. 

ஆனால் புஷ் நிராகரித்தார்.இதனிடையே ரஷ்யா மற்றும் சீனாவின் முயற்சிகளின் விளைவாக அமெரிக்கா- ரஷ்யா- சீனா- வடகொரியா - தென்கொரியா - ஜப்பான் ஆகிய ஆறு நாடுகள் பங்கேற்கும் தொடர் பேச்சுவார்த்தை நடந்தது. பத்தாண்டு காலம் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தைகள் அனைத்திலும் அமெரிக்கா தனது பகைமை நடவடிக்கைகளையும் ஆக்கிரமிப்பு நோக்கத்துடன் கூடிய ராணுவப் பயிற்சிகளையும் கைவிட வேண்டும் என்றும், அமைதி உடன்பாட்டில் கையெழுத்திட வேண்டும் என்று வடகொரியா வலியுறுத்தியது. ஆனால் அதை அமெரிக்கா முற்றாக நிராகரித்தது. 2015க்குப் பிறகு அந்தப் பேச்சுவார்த்தைகளும் நடக்கவில்லை. மீண்டும் ஒரு முறை ஒபாமா ஆட்சியில், அமைதி உடன்பாட்டிற்காக வடகொரியா வேண்டுகோள் விடுத்தது. ஆனால் ஒபாமாவும் நிராகரித்தார்.

அமைதி உடன்பாடு தொடர்பான கோரிக்கைகளை மட்டுமல்ல, வடகொரியா- தென்கொரியா இணைப்பு தொடர்பான ஆலோசனைகளையும் வேண்டுகோள்களையும் முற்றாக நிராகரிக்கும் விதத்தில் தென்கொரியாவையும் அமெரிக்கா தூண்டிவிட்டது. 1972, 1990, 1993 ஆகிய ஆண்டுகளில் இந்த முயற்சிகள் தீவிரமாக நடந்தன. வடகொரிய தரப்பிலிருந்தே இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

பின்னர் ஒரு கட்டத்தில் 2000ம் ஆண்டிலும், 2007லும் வடகொரிய-தென்கொரிய இணைப்பு முயற்சிகள் நிறைவேறும் என்ற சூழல் கூட ஏற்பட்டது. அந்த சமயத்தில் தென்கொரிய ஜனாதிபதிகளாக இருந்த கிம் டே ஜங் மற்றும் ரோ மூ ஹியூன் ஆகியோர் முற்போக்கான தலைவர்களாக இருந்தனர். அவர்கள் அமெரிக்க தலையீட்டையும் மீறி இணைப்பு முயற்சியில் உறுதியாக இருந்தனர். ஆனால் 2008ல் தென்கொரியாவில் அமைந்த ஆட்சி முற்றிலும் அமெரிக்க கைப்பாவை ஆட்சியாக மாறியது. 

எனவே வடகொரிய - தென்கொரிய இணைப்பு முயற்சிகளும் நடக்கவில்லை.இருநாடுகளும் வெவ்வேறு சித்தாந்தத்தின் அடிப்படையில் ஆட்சி நடைபெறுகிற நாடுகள் என்ற போதிலும் அவரவர் சித்தாந்தத்தை அமலாக்கிக் கொண்டே இருதரப்பு பொருளாதாரத்தை பலப்படுத்தும் விதத்தில் ஒரு கூட்டாட்சியாக செயல்பட முடியும் என்று மிகவும் ஜனநாயகப்பூர்வமான தீர்வினை சோசலிச வடகொரியா முன்வைத்தது. ஆனால் அத்தனையையும் சீர்குலைத்தது அமெரிக்க ஏகாதிபத்தியம். இதன் ஒட்டுமொத்த நோக்கம் என்னவென்றால், வடகொரியா என்ற நாட்டை முற்றாக அழிப்பது என்கிற அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தீராத கம்யூனிச வெறுப்பும், ஆசிய பசிபிக் பிராந்தியத்தை தனது ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவருகிற அதிகார வேட்கையுமே ஆகும்.

இந்தப் பின்னணியில் அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சிக்கு வந்தபிறகு, ஆசிய பசிபிக் பிராந்தியத்தை சுற்றி வளைக்கும் நோக்கத்துடன் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் செயல்பாடுகளும் சூழ்ச்சிகளும் தீவிரமடைகின்றன. தென்கொரியாவிலும் ஜப்பானிலும் அமெரிக்க ஏவுகணை திட்டங்கள் முழுமையாக அமலாக்கப்பட்டுள்ளன. தாட் என்ற பெயரிலான இந்த ஏவுகணை திட்டம் முற்றிலும் வடகொரியாவையும், அதைத் தொடர்ந்து சீனா மற்றும் ரஷ்யாவையும் குறிவைத்து நிறுவப்பட்டுள்ளது.இந்த நிலையில்தான் முற்றிலும் தற்காப்புக்காக வடகொரியா கடந்த சில ஆண்டுகளாக தனது ஏவுகணை சோதனைகளை தீவிரப்படுத்தியது. 

அணுசக்தி சோதனைகளை தீவிரப்படுத்தியது.மேற்கத்திய ஊடகங்கள் இந்த உண்மைகளை மறைத்து, வடகொரியாவால் அமெரிக்காவுக்கு ஆபத்து என்றும் வடகொரியாவால் இந்த உலகிற்கே ஆபத்து என்றும் திட்டமிட்டு பொய்யைப் பரப்புகின்றன. வடகொரியா தன்னைத் தற்காத்துக் கொள்ள தயாராகிக் கொண்டிருக்கிறது. இப்பூவுலகில் தன்னையும் தனது மக்களையும் காத்துக் கொள்ள, தனது தாக்கு திறனை அதிகரித்துக் கொள்வதைத்தவிர வேறு எந்த வாய்ப்பையும் வடகொரியாவுக்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் விட்டுவைக்கவில்லை.

இப்போது வடகொரியாவின் பலம் அதிகரித்துவிட்டதா என்ற கேள்வியும் எழக்கூடும். ஐநாவின் மைய மண்டபத்தில் நின்றுகொண்டு அமெரிக்க ஜனாதிபதி, வடகொரியாவை அழித்துவிடுவோம் என்று ஓலமிடுவதிலிருந்தே தெரிகிறது, வடகொரியா தனது பலத்தை அதிகரித்திருக்கிறது என்பது.இதை வடகொரியாவின் சமீபத்திய இரண்டு முக்கிய ஏவுகணை சோதனைகள் நிரூபித்துள்ளன.2017 ஆகஸ்ட் 29 மற்றும் செப்டம்பர் 15 ஆகிய தேதிகளில் ‘குவாசாங்’ 12 என்ற வெகுரக ஏவுகணைகளை வடகொரியா வெற்றிகரமாக சோதித்துப் பார்த்தது. இந்த சோதனைதான் டிரம்ப் நிர்வாகத்தின் அதிர்ச்சிக்கும் ஆத்திரத்திற்கும் காரணம். கொரிய தீபகற்பத்தின் எரிமோ முனையிலிருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணைகள் ஜப்பான் மீது பறந்து சென்று 2000கிலோமீட்டருக்கு அப்பால் பசிபிக் பெருங்கடலில் வடகொரியா நிர்ணயித்த இலக்கில் மிகச்சரியாக விழுந்தது. பிற நாடுகளும் இதுபோன்ற சோதனைகளை நடத்தியுள்ளன. 

ஆனால் வடகொரியா நடத்திய சோதனை அமெரிக்காவுக்கு அதிர்ச்சியளிக்கக் காரணம் இருக்கிறது. ஏனென்றால், “எங்களுக்கு தெரியாமல் வடகொரியா எந்த சோதனையும் இனி நடத்திவிட முடியாது; இனி ஏதேனும் ஏவுகணை சோதனை நடத்துவது தெரிந்தாலே - அது எங்களது பகுதியை நோக்கி நடத்தப்படவில்லை என்று தெரிந்தாலும் கூட - வானிலேயே இடைமறித்து தாக்கி வடகொரியாவின் ஏவுகணைகளை அழிப்போம்” என்று அமெரிக்க ராணுவ அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் கூறியிருந்தார். அவர் அப்படி கூறிய அடுத்த வாரத்திலேயே வடகொரியா தனது சோதனையை நடத்தியது. சோதனை வெற்றி என்று அறிவித்த பிறகுதான் அமெரிக்காவிற்கே தெரிய வந்தது. அமெரிக்காவின் ரேடார்களால் வடகொரிய ஏவுகணையை கண்டுபிடிக்க முடியவில்லை. ஜப்பானில் அமெரிக்காவின் ஏவுகணை கட்டமைப்புகள் வலுவாக நிறுவப்பட்டிருந்த போதிலும் கூட, ஜப்பானின் வானத்திலேயே பறந்து சென்றது வடகொரியாவின் ஏவுகணை. 

இது எப்படி என்று இப்போது வரையிலும் குழம்பி போய் நிற்கிறது அமெரிக்கா.இதுகுறித்து இரண்டு முக்கியமான உலகப்புகழ்பெற்ற அணு ஆயுத வல்லுநர்கள் கூறுவதை நாம் கவனிக்க வேண்டும். ‘டிபென்ஸ் ஒன்’ என்ற அமைப்பின் வல்லுநர் ஜோ கிரின்சியோன், “வடகொரியாவின் ஏவுகணை வானத்தில் 770 கிலோமீட்டர் உயரத்தில் பாய்ந்து சென்றிருக்கிறது. இந்த உயரத்தில் செல்லும் எதையும் ஜப்பானில் நிறுவப்பட்டுள்ள அமெரிக்காவின் ‘பேட்ரியாட் பிஏகே 3’ ரேடார் கட்டமைப்புகளால் கண்டுபிடிக்க முடியாது; உண்மையிலேயே இவ்வளவு உயர்த்தில் வடகொரியா தனது ஏவுகணையை செலுத்தியிருக்கிறது என்றால் அது வியப்புக்குரியதுதான்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.டோக்கியோவைச் சேர்ந்த பிரபல ஆயுத குழுமமான ‘நெக்சியல்’ ஆய்வு மையத்தின் நிபுணர் லான்ஸ் காட்லிங், இதே கருத்தை எதிரொலிக்கிறார்.

“ஜப்பானின் வானத்தில் மிக அதிக உயரத்தில் - அதி வேகத்தில் பாய்ந்து சென்றிருக்கிறது வடகொரிய ஏவுகணை. இங்கு அமைக்கப்பட்டுள்ள ரேடார் கருவிகளோ அல்லது வருகிற ஏவுகணையை இடைமறித்து தாக்குகிற ஜப்பானின் ‘எஸ்எம்-3’ ரக இடைமறிப்பு ஏவுகணைகளோ அல்லது அமெரிக்காவின் சக்திவாய்ந்த ‘ஏஜீஸ்’ வகை இடைமறிப்பு ஏவுகணைகளோ கூட இவ்வளவு உயரத்திற்கு சென்று தாக்கும் திறன் கொண்டவை அல்ல” என்று குறிப்பிட்டிருக்கிறார்.ஜப்பானின் வானில் பாய்ந்து சென்றது பொருத்தமானது அல்ல என்றாலும், சர்வதேச விதிகளின் படி வானம் யாருக்கும் சொந்தமல்ல.ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் வடகொரியா போன்ற நாடுகளை அச்சுறுத்தும் நோக்கத்துடன் தென்கொரிய ராணுவ தளங்களிலும் ஜப்பானிய ராணுவ தளங்களிலும் அமெரிக்கா நிலைநிறுத்தியுள்ள மிக அதிநவீன ஆயுதங்களே மேற்கண்ட ஏஜீஸ் வகை ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்கள்தான். 

ஆனால் அவற்றால் வடகொரிய ஏவுகணைகளை தடுக்க முடியாது என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.இதுதான் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஆத்திரத்திற்கு கொண்டுசென்றிருக்கிறது. இதுதான் வடகொரியாவை அழிப்போம் என்று டொனால்டு டிரம்ப்பை கொக்கரிக்கச் செய்திருக்கிறது. ஆனால் கொரிய தொழிலாளர் கட்சி செப்டம்பர் 22ஆம் தேதி கூடி டிரம்ப்க்கு பதிலடி கொடுத்திருக்கிறது. கொரிய தொழிலாளர் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் வடகொரிய அரசின் துணைத் தலைவருமான கிம் கி நாம் தலைமையில் கூடிய மத்தியக்குழு வெளியிட்டுள்ள மிக நீண்ட அறிக்கையில் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் டிரம்ப்பின் கொக்கரிப்பு பற்றி ஒரு வரி வருகிறது:“நடுங்கிக் குரைக்கிறது ஓர் ஞமலி.”

Saturday, September 23, 2017

இன்று முதல் . . . .


 அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 15 வது மாநில மாநாடு இன்று முதல் தர்மபுரியில் தொடங்குவதை முன்னிட்டு அமைப்பின் பொதுச்செயலாளர் எழுதிய கட்டுரையை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள்



அதர்மங்களை அழிக்க தருமபுரி அழைக்கிறது பி.சுகந்தி


காவியங்கள் நமக்கு பல கதைகளைச் சொல்கின்றன. தவறு செய்த மன்னன் முன்னால் நின்று நீதி கேட்டு மதுரையை தீக்கிரையாக்கினாள் கண்ணகி என சிலப்பதிகாரம் சொல்கிறது. வாச்சாத்தி நம் சமகாலத்து காவியம், கண்ணகியின் கோபத்தை விட பல மடங்கு கோபத்தோடு நீதிகேட்டு நெடும்பயணம் செய்தனர் வாச்சாத்தி பெண்கள். பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட அவர்கள் கூனிக் குறுகி வீட்டிலே முடங்கவில்லை. நீதிகேட்டு வீதிக்கு வந்தார்கள். 

இச்சமூகம் சொல்லும் போலிக்கற்பை உடைத்து தூள்தூளாக்கினார்கள். கண்ணகி வைத்த தீ மதுரையை எரித்தது. வாச்சாத்தி மக்கள்வைத்த தீ சமூக அநீதியை சுட்டெரித்தது. அத்தகையசமூக நீதிக்கான போராட்டத்தை வழி நடத்திய தருமபுரிமண்ணில் 15ஆவது மாநில மாநாடு நடைபெறுவதில் ஜனநாயக மாதர் சங்கம் பெருமை கொள்கிறது.ஜனநாயக மாதர் சங்கத்தின் வரலாறு நெடுகிலும் தியாக வேள்வியால் புடம் போட்ட தலைவர்கள்பலர் இடம் பெற்றுள்ளனர் . தேச விடுதலைப் போராட்டத்தில் குதித்திட்ட உன்னத தாய் விடுதலைக்கனலைமக்கள் மனதில் முட்ட தன் வெண்கலக்குரலால் வீதியெங்கும் பாடல்களைப் பாடியதற்காகவும் யுத்த எதிர்ப்பு பிரச்சாரத்திற்காகவும் வேலூர் சிறையிலடைக்கப்பட்டு 6 ஆண்டு காலம் சிறை தண்டனையை அனுபவித்தவர் கே.பி.ஜானகியம்மாள்.

13 வயதில் சுதந்திரப்போரில் தன்னை இணைத்துக்கொண்டு சிறைத் தண்டனை பெற்ற பாப்பா உமாநாத்,இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக காவல் துறையினர் குண்டாந்தடிகளால் பதம்பார்க்கப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்ட ஷாஜாதி கோவிந்தராஜன் ஆகியோர் மாதர் சங்கத்தின் முன்னோடிகள். ரேசன், குடிநீர் உள்ளிட்ட அடிப்படைவசதிகளை மக்களுக்கு பெற்றுத் தருவதற்காக போராடியதால் வெட்டி வீழ்த்தப்பட்ட வீராங்கனை லீலாவதி. இப்படி பெண்ணுரிமைக்கும், உழைப்பாளி மக்களின் உரிமைகளுக்கும் தாங்கள் வாழும் வரை போராடியவர்களின் இலட்சியப் பயணத்தை முன்னெடுக்கும் மாநாடு இது.சுவாதி, நந்தினி, ஹாசினி, ரித்திகா, ஐஸ்வர்யா, சோனாலி, பிரார்த்தனா ஆகியோர் ரத்தமும், சதையும் உணர்வுமாய் இருந்த மனுஷிகள். ஆம் ஆணாதிக்க கழுகுப் பார்வைக்கு இரையாக்கப்பட்ட மனுஷிகள். ஆயிரம் கனவுகளோடு வாழ்ந்த இப்பெண்கள்வீழ்த்தப்பட்டார்கள். 

கசாப்புக் கடைகளில் வெட்டப்படும் விலங்குகளைக் போல நம் தோழிகள் நித்தம் நித்தம் வெட்டி வீழ்த்தப்படுவதை நாம் எத்தனை காலம் வேடிக்கை பார்ப்பது? தமிழகத்தில் ஆண்டுக்கு 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கும், வன்முறைக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள். பால்மணம் மாறாத குழந்தைகள், பள்ளிப்பருவக் குழந்தைகள், வளர் இளம் பருவக் குழந்தைகள் என வன்முறைக்குள் தள்ளப்படும் குழந்தைகளை பாதுகாக்க எந்தவித ஏற்பாடும் இல்லை. கடந்த 3 ஆண்டுகளில் 50 குழந்தைகள் மீதான வன்முறை வழக்குகளில் ஜனநாயக மாதர் சங்கம் போராடியிருக்கிறது. சில வழக்குகளில் நீதியையும் பெற்றுத்தந்துள்ளது.

வரதட்சணை விலங்கொடிப்போம்

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். இல்லை. பெரும்பாலான திருமணங்கள் சொக்கத்தங்கத்திலும், ரொக்கப்பணத்திலுமே நிச்சயிக்கப்படுகின்றன. உலகமயக் கொள்கையால் இக்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கல்வி எனும் வியாபாரத்தில் முதலீடு செய்பவர்கள் திருமணத்தின் போது வரதட்சணை என்னும் லாபத்தை பெறுகிறார்கள். கணவன்-மனைவி வாழ்க்கை இப்படி வியாபாரமாக பார்க்கப்படும் போதுமகிழ்ச்சியான சமத்துவ வாழ்வை பெண்கள் எப்படி எதிர்பார்க்க முடியும்? ஒவ்வொரு 77 நிமிடத்திற்கும் ஒரு பெண் வரதட்சணைக் கொடுமை சாவுக்குள் தள்ளப்படுகிறாள் என இந்திய குற்றப்பிரிவு ஆணையத்தின் புள்ளி விபரம் சொல்கிறது. இத்தகைய வரதட்சணைக் கொடுமைகளே பெண் கருக்கொலைக்கும் சிசுக்கொலைக்கும் காரணியாகின்றது. கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில்12 மில்லியன் பெண் குழந்தைகள் கருவிலேயே கொல்லப்பட்டுள்ளன. பெண்ணை அணுவணுவாய் கொல்ல வைக்கும் உலகமயக் கொள்கையையும், ஆணாதிக்கச் சிந்தனையையும் வேரறுப்பது எப்போது?

அதிகரிக்கும் வலைத்தள வன்முறைகள் 

இணைய தளம், முகநூல், வாட்ஸ் அப், டுவிட்டர்என வரிசையாக வந்து கொண்டிருக்கும் அறிவியல் வளர்ச்சி ஆண்-பெண் பேதம் பார்ப்பதில்லை. ஆனால் அதை விரல் நுனியில் சொடுக்கி இயக்கும் மனித மூளை ஆண்-பெண் பாகுபாடுகளால் நிரம்பி வழிகிறது.பெண்கள் குறித்த ஆபாசமான சித்தரிப்புகள் வினுப்பிரியா போன்ற இளம் பெண்களின் உயிரைப்பறிக்கின்றது.
மறுபுறத்தில் பெண்கள் இயக்க செயல்பாட்டாளர்கள், கலைஞர்கள், டிவி விவாதங்களில் பங்கெடுப்பவர்கள் பெண்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களது அறிவையும், ஆற்றலையும், ஆளுமையையும் தாங்கிக் கொள்ள முடியாமல் பாலியல் வக்கிரங்களை வலைத்தளங்களில் அள்ளி வீசுகிறார்கள் ஆணாதிக்க பிற்போக்கு வாதிகள்.பொது வெளியெங்கும் நொடிப்பொழுதில் பரவும்சமூக வலைத்தளங்களால் வக்கிரப் பதிவுகளுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க வேண்டிய சைபர் கிரைம் தமிழகத்தில் செயல்பாடற்று செத்துக்கிடக்கின்றது.
இத்தகைய வலைத்தள வன்முறைகளை எதிர்கொண்ட பத்திரிகையாளர்கள் கவிதா முரளிதரன்,கவின்மலர், சமூக செயல்பாட்டாளர் உ.வாசுகி,ஜோதிமணி, திவ்யாபாரதி, சமூக ஆர்வலர்கள் பேரா.சுந்தரவள்ளி, ஹேமாவதி என பட்டியல் நீள்கிறது.சமூக வலைத்தளங்களால் பெண்கள் இழிவாக சித்தரிக்கப்படுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு தூசுபடிந்துக்கிடக்கின்றது. சட்டத்தால் மட்டுமல்ல, ஆண்டாண்டு காலமாய் அழுக்கடைந்து கிடக்கின்ற ஆணாதிக்கச் சமூகத்தை மாற்றியமைக்கும் போராட்டத்தால் தான் இத்தகைய வன்முறையிலிருந்து பெண்களை முழுமையாக பாதுகாக்க முடியும்.

தள்ளாடும் தமிழகம்
உழைக்கும் மக்களின் ஒரே மூலதனம் உடல் வலிமை மட்டுமே. அத்தகைய உடல் வலிமை கொண்டுஉழைத்து அவர்கள் ஈட்டும் வருமானத்தை சுரண்டுவதற்கு தமிழகத்தில் 6500க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு வைத்துள்ளது. இலக்கு வைத்து சரக்கு விற்பதன் மூலம் லாபம் ஈட்டும் தொழிலாக மதுக்கடைகளை மாற்றியிருக்கிறது அரசு.மதுவால் கிடைக்கும் வருமானம் அரசுக்கு அவமானம்இல்லையா? 9000 கோடி ரூபாய் துவங்கி விற்பனை இலக்கு 40,000 கோடி ரூபாய் நோக்கிச் செல்கிறது. அரசியலில் நேரெதிர் துருவத்தில் செல்லும் அதிமுக-வும், திமுக-வும் மதுக்கொள்கையில் மட்டும் கைகோர்த்து ஒரே பாதையில் பயணிக்கின்றன.மதுவால் ஆண்டுக்கு 201000 குற்றச்செயல்கள் தமிழகத்தில் நடந்துள்ளன. இந்தியாவிலேயே விபத்துக்கள் அதிகம் நடக்கும் மாநிலமாகவும் தமிழகம் மாறி வருகிறது. 

கடந்த 5 ஆண்டுகளில் தன் கணவனை குடிபழக்கத்துக்கு பலிகொடுத்த இளம் பெண்களின் எண்ணிக்கை 9500ஐ தாண்டுகிறது.இக்காலத்தில் தான் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவால் 3000க்கும்மேற்பட்ட கடைகளை மூட முயற்சித்தாலும் அவற்றைமக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு கொண்டுவர ஆட்சியாளர்களும் காவல்துறையும் ஒருங்கே துடித்தனர். சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டாலும் பரவாயில்லை. மிடாஸ் நிறுவனத்தின் ஏஜெண்டு வேலையை காவல்துறையும், அரசும் இக்காலத்தில் சிறப்பாகச் செய்துள்ளன. 

டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பெண்கள் அமைப்புகளும், பொதுமக்களும் நடத்திய போராட்டங்கள் காவல்துறையின் ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்பட்டன. ஜனநாயக மாதர்சங்கம் 3 ஆண்டுகளில் 334 கடைகளின் முன்பு நடத்திய போராட்டத்தால் 163 கடைகள் அகற்றப்பட்டுள்ளன. இப்போராட்டத்தின் வாயிலாக மாதர் சங்கத்தின் முன்னணி ஊழியர்கள் 30க்கும் மேற்பட்டவர்கள் மீது காவல்துறை பொய் வழக்கை பதிவு செய்திருக்கின்றது. பலர் காவல்துறையின் தாக்குதலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.சுதந்திரப் போராட்டம் துவங்கி குண்டாந்தடிகளையும், துப்பாக்கிக் குண்டுகளையும் பொய் வழக்குகளையும் சந்தித்த தியாகத் தலைவர்களின் வாரிசுகள் நாங்கள். 

உங்கள் பொய் வழக்குகளையும், தடியடிகளையும் தூளாக்கி உழைக்கும் மக்களை, பெண்களை பாதுகாக்கும் போராட்டத்தை தொடர்வோம் என்று சூளுரைக்கும் மாநாடு இது.குடிநீருக்காக நம் பெண்கள் குடங்களோடு வீதிவீதியாய் அலைந்து கொண்டிருக்கும் போது, நமது நிலத்தடி நீரை சொற்ப விலைக்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்றுக் கொண்டிருக்கும் அரசுக்கு எதிராகவும், மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகளால் தரிசாக்கப்பட்ட விவசாயிகளின், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வை பாதுகாக்க மாற்றுக் கொள்கை வகுக்கும் மாநாடாகவும் இது அமையும்.

மதவெறி மாய்த்து மக்கள் ஒற்றுமை காண !
உணவு உரிமை பாதுகாத்திட !
வன்முறையற்ற சமத்துவ சமூகம் படைக்க !

ஜனநாயக மாதர் சங்கத்தின் 15ஆவது மாநில மாநாடு அழைக்கிறது.

செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறும் பேரணியில்  ஆயிரம், ஆயிரம் பெண்களின் கோஷங்களால் விண்ணதிரட்டும், தருமபுரி வீதிகள் அதிரட்டும், பெண் விடுதலை பிறக்கட்டும்.

கட்டுரையாளர் : மாநில பொதுச் செயலாளர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்

Friday, September 22, 2017

நாலு கோடி -ரிசர்வ் வங்கி -ச.வேட்டை

இந்த படிவத்தில் உள்ள விபரங்களை பூர்த்தி செய்து அனுப்பினால் உடனடியாக நான்கு கோடியே அறுபது லட்சம் ரூபாய் உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று வந்த மின்னஞ்சலை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன். 

நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக உர்ஜித் படேலின் படம், அனிலா குமாரி என்று ஒரு அம்மையாரின் ஐ.டி கார்ட் எல்லாம் போட்டு ரிசர்வ் வங்கி லோகோவுடன் எல்லாம் அனுப்பியிருக்கிறார்கள். 

எத்தனை பேருக்கு இது போல அனுப்பியுள்ளார்களோ?

அதை நம்பி எத்தனை பேர் ஏமாறப் போகிறார்களோ?

எச்சரிக்கையா இருங்க மக்களே! 

சதுரங்க வேட்டைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது

 

Thursday, September 21, 2017

நல்லாதான் பதுக்கினாரு..ஆனாலும்?????




நேற்று இரவு ஒரு தோழர் அனுப்பிய காணொளி. ஒரு கூட்டம் முடிந்து வருகையில் கொஞ்சம் களைப்பாக இருந்தது. இதைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்ததில் களைப்பு போயே போச்சு. நீங்களும் பார்த்து சிரியுங்கள்.


சேகர் ரெட்டி வீட்டிலும் இப்படித்தான் பதுக்கி வைத்த புத்தம்புது இரண்டாயிரம் ரூபாய்க் கட்டுக்களை இப்படித்தான் கண்டு பிடித்திருப்பார்களோ?

ஆமாம். அந்த ரெய்டு மேட்டர் அதுக்கப்பறம் என்ன ஆச்சு?

அதான் ஓ.பி.எஸ் அடிமையாயிட்டாரே, கேஸையும் பதுக்கியிருப்பாங்கன்னு  சொல்றீங்களா !!!!!

தேசிய கீதம் தெரியாட்டி குத்தமாய்யா?



ரஷ்யா போன போது தேசிய கீதம் ஒலிக்கையில் அதை கண்டு கொள்ளாமல்  மோடி போய்க்கொண்டே இருந்து விட்டார் என்று கீழே உள்ள வீடியோவை அனுப்பி பலரும் நையாண்டி செய்கிறார்கள்.



பாவம் மோடி.

சுதந்திரம் பெற்று ஐம்பதாண்டுகள் வரை ஆர்.எஸ்.எஸ் இயக்கம் மூவர்ணக் கொடியையோ  தேசிய கீதத்தையோ, அரசியல் சாசனத்தையோ ஏற்கவேயில்லை.  அதனால் பாவம் மோடிக்கு ஜனகன தான் இந்தியாவின் தேசிய கீதம் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ரஷ்யர்கள் ஏன் பாட்டாக பாடாமல் இசையை மட்டும் கொடுத்தார்கள். அதனால் அது ஏதோ அவரை வரவேற்பதற்கான பின்னணி என்று நினைத்துக் கொண்டிருப்பார்.

தென் ஆப்பிரிக்காவில் "ஜீ பூபாம்பா" என்றெல்லாம் மந்திரம் சொல்லி ஒரு பெண்மணி வரவேற்றது நினைவில் உள்ளதல்லவா? அது போல ஏதோ ஒரு இசை என்று நினைத்திருப்பார். 

பிரதமராக இருந்து கொண்டு மக்களுக்காக உருப்படியாக எதுவும் செய்யவில்லை. இனிமேலும் செய்யப் போவதில்லை. மாட்டின் பெயரால் கொலை, ஜி.எஸ்.டி யின் பெயரால் வழிப்பறி, அன்றாடம் பெட்ரோல் விலை உயர்வு, இப்படி எத்தனையோ குற்றம் செய்து விட்டார். அதை விட பெரிசாய்யா இது?

ஏதோ சாதாரணமான ஆள் மாதிரி சினிமாக்கு போயிருந்தாலாவது தெரிஞ்சிருக்கும். அதானிக்கும் அம்பானிக்கும் முறைவாசல் செய்யவே அவருக்கு நேரம் பத்தலை.  


உனக்கு கல்யாணமாச்சா இல்லையா என்ற கேள்விக்கே ஒழுங்கா பதில் சொல்ல முடியாத ஒரு ஆளுக்கிட்ட தேசிய கீதம் தெரியாதா என கேட்கறதுதான் குத்தம்.  


Tuesday, September 19, 2017

டி.ஆரு இங்கே பாரு



பீப் சாங்கிற்கு எதிராக போராடிய மாதர் சங்கம் இந்த பிரச்சினையில் என்ன செய்தது? அந்த பிரச்சினையில் என்ன செய்தது? என்று கேட்பதே காழ்ப்புணர்வில் ஊறிப் போன சிலருக்கு பொழுது போக்காக மாறி விட்டது. அவர்கள் சொன்ன பிரச்சினையில் மாதர் சங்கம் தலையிட்டு இருக்கும், போராடி இருக்கும். அதைப் பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள அவர்களுக்கு அக்கறை இருக்காது. ஆனால் மாதர் சங்கத்தை திட்டி ஒரு ஸ்டேட்டஸ் போடுவதும் அதன் மூலம் சில லைக்ஸ் பெறுவதும் அவர்களைப் போலவே பொழுது போகாத சிலரின் வக்கிர கமெண்ட்ஸை பெறுவதும்தான் அவர்களின் நோக்கம்.

பீப் பாடல் எனும் உயர்தர இசை வேள்வியை நடத்திய சிம்புவை மகனாகப் பெற்ற டி.ஆரும் அவ்வப்போது இந்த கேள்வியை எழுப்பிக் கொண்டே இருக்கிறார்.

அவருக்கு இந்த பதிவு அர்ப்பணம்

டி.ஆரு, மாதர் சங்கம் இங்கே இருக்கு பாரு.

மதுரை மாவட்டம் பொதும்புவில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்த ஆராக்கியசாமி என்பவன் பல காலமாக பல சிறுமிகள் மீது பாலியல் சீண்டலும் பாலியல் வன் கொடுமையும் செய்து வந்திருக்கிறான்.

இப்பிரச்சினை பற்றி தகவல் தெரிந்ததும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தலையிட்டது. போராடியது. மாவட்ட நிர்வாகம் ஆரோக்கியசாமியை பாதுகாக்க முயன்றது. மாதர் சங்கம் வழக்கு தொடுத்தது. தோழர் பிருந்தா காரத் புதுடெல்லியிலிருந்து பொதும்பு வந்தார். மாநில டி.ஜி.பி யை நேரில் சந்தித்தார். அதன் பின்பே நிர்வாகம் அசைந்தது. ஆரோக்கியசாமியை இடை நீக்கம் செய்தது. உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளை ஆரோக்கியசாமியை கைது செய்யவும் மாணவிகளுக்கு இடைக்கால இழப்பீடு கொடுக்கவும் உத்தரவிட்டது.

அவ்வழக்கில் மதுரை மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. ஆரோக்கியசாமிக்கு ஐம்பத்தி ஐந்து வருடம் சிறைத்தண்டனை வழங்கி உள்ளது. அதாவது அந்த மனிதன் இறக்கும்வரை கம்பி எண்ணிக் கொண்டு இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு மேலும் ஒரு ஐம்பதாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறியுள்ளது. 

இந்த வழக்கை தொடுத்தது அனைத்திய ஜனநாயக மாதர் சங்கம். வாதாடியது மாதர் சங்கப் பொறுப்பாளரான தோழர் உ.நிர்மலாராணி. 

பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நியாயம் கிடைக்க களத்தில் உறுதியாக இருந்தது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் என்பதை டி.ஆர் புரிந்து கொள்ளட்டும்.

நியாயத்தை நிலைநாட்டிய மாதர் சங்கத்தோழர்கள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். அச்சப்படாமல் சாட்சி சொன்ன மாணவிகளுக்கும் பாராட்டுக்கள்.

இப்பிரச்சினை பற்றி அறிந்ததும் எங்கள் மதுரைக் கோட்டச்சங்கம் இருபத்தி ஐயாயிரம் ரூபாய் வழக்குச் செலவுகளுக்காக அளித்தது. வழக்கு நடத்த தேவையான பிரமாண வாக்குமூலங்களை தயார் செய்யவும் மதுரைக் கோட்டத் தோழர்கள் உதவினார்கள். அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

 

வரலாற்றுக்கே துரோகம் - புரிகிறதா ஜெயமோகன்?




கீழடி ஆய்வு பற்றி அரசியல்வாதிகள், மேடைப் பேச்சாளர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அவர்கள்

தமிழ் பாசிஸ்டுகள்,
அரை வேக்காடுகள்,
அசடுகள்

என்று தமுஎகச அமைப்பை நேரடியாக குறிப்பிடாமல் ஆனால் அவர்களைப் பற்றி ஜெயமோகன் கடுமையாக வசை பாடியிருந்தார்.  

 நேற்றைய தீக்கதிரில் தமுஎகச பொதுச்செயலாளர் தோழர் சு.வெங்கடேசன் விரிவான நேர்காணல் அளித்திருந்தார். மத்தியில் ஆளும் பாஜக கீழடி ஆய்வை மூடுவதற்கு ஸ்ரீராமன் மூலம் முயல்வதை அம்பலப்படுத்தியிருந்தார்.

வரலாற்றில் துரோகத்தைப் பார்த்துள்ளோம். வரலாற்றுக்கே துரோகம் இழைப்பவர்கள் இவர்கள் என்ற அவரது விமர்சனத்தை துரோகச் செயலுக்கு முட்டுக் கொடுத்து எழுதிக் குவித்த ஜெயமோகனுக்கு அர்ப்பணிக்கிறேன்.

இனி நேர்காணலை படியுங்கள். 

 கீழடி: மூன்றாம் கட்ட ஆய்வும் முடித்து வைக்கும் ஏற்பாடும்


கீழடி மூன்றாம் கட்ட ஆய்வு முடிவடைந்துள்ளதாகவும் செப்டம்பர் 30 அன்றுடன் ஆய்வுக்காலம் முடிவடைவதாகவும் இந்த ஆய்வில் உருப்படியாக எதுவும் கிடைக்கவில்லை என்றும் கீழடி அகழாய்வை இத்தோடு சீர்குலைத்து மூடுவிழா நடத்தும் நோக்கத்துடன் அகழாய்வுப் பணி இயக்குநர் பு.சு.ஸ்ரீ ராமன் ஞாயிறன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இதன் பின்னணியையும் மோசடிகளையும் அம்பலப்படுத்தி, கீழடியைப் பாதுகாக்க அணிதிரள்வோம் வாரீர் என அழைக்கிறார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன் 

அவரது நேர்காணல்.
கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வின் முடிவுகளை அதன் பொறுப்பாளர் பு.சு.ஸ்ரீராமன் வெளியிட்டுள்ளார். இது தொடர்பான உங்களது கருத்தென்ன?

மூன்றாம் கட்ட அகழாய்வு தொடங்கப்பட்டவுடன் கீழடி அகழாய்வு மையம் ஒரு இராணுவமுகாம் போல மாற்றப்பட்டது. அங்கு என்ன நடக்கிறது என்று எந்தவிதமான தகவலும் ஊடகத்துக்கும், பார்வையாளருக்கும் எந்தக்கட்டத்திலும் வெளியிடப்பட வில்லை. ஒளிப்பதிவு கருவிகள் எதுவும் அகழாய்வுக்குழிகளை நெருங்காமல் அதன் பொறுப்பாளர் ஸ்ரீராமன் பார்த்துக் கொண்டார். இப்பணியில் ஈடுபட்டுள்ள கடை நிலை ஊழியர்கூடபார்வையாளர்களிடம் பேச அவர் அனுமதிக்க வில்லை. சரி, என்ன தான் நடக்கிறது பார்ப்போம் என்றுதான் நாங்களும் காத்திருந்தோம். இப்பொழுது முழு உண்மையும் வெளிவந்து விட்டது.

இந்த ஆண்டின் ஆய்வு முடிவுகளை அவர் வெளியிட்டுள்ளார். என்ன நோக்கத்துக்காக அமர்நாத் இராமகிருஷ்ணன் மாற்றப்பட்டு இவர் அப்பணிக்கு அமர்த்தப்பட்டாரோ அந்த நோக்கத்தை தெளிவாக நிறைவேற்றியுள்ளார். “இவ்விடத்தில் (கீழடியில்) கட்டிடங்கள் தொடர்ச்சியாகவோ அல்லது பரவலாகவோ கட்டப்பெறவில்லை என்று தெரியவருகிறது” என்ற முடிவினை அறிவித்துள்ளார். மத்திய ஆட்சியாளர்கள் எதிர்பார்த்தது போல கீழடி அகழாய்வை இழுத்துமூடவேண்டிய வாசகத்தை ஸ்ரீராமன் எழுதி முடித்துள்ளார். அவரை கொண்டு வந்ததன் நோக்கம் நிறைவடைந்தது.

இந்த ஆண்டு நடந்த ஆய்வினைப் பற்றிய உங்களின் கருத்தென்ன?

மூன்றாம் ஆண்டு அகழாய்வுக்கு அனுமதி மறுப்பு,பின்னர் ஆய்வின் தலைவர் அமர்நாத் இராமகிருஷ்ணன் இடமாற்றம், ஸ்ரீராமன் நியமனம், ஆய்வினை துவக்கி வைக்க வந்த மத்திய அமைச் சர்களின் பேச்சு - எல்லாமே பட்டவர்த்தனமான அரசியலாக அமைந்ததை நாம் பார்த்தோம்.
இதன் தொடர்ச்சியாகத் தான் இந்த ஆண்டு ஆய்வின் செயல்பாடு அமைந்துள்ளது என்பதையே ஸ்ரீராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இருந்து அறிய முடிகிறது. இந்த ஆண்டு அகழாய்வுப் பணி நடந்த தன்மையை எடுத்துக் கொள்வோம். கடந்த இரண்டு ஆண்டுகளில் 2500 சதுர மீட்டர் பரப்பளவில் அகழாய்வு நடந்தது. ஆனால் இந்தாண்டு ஆய்வு நடத்தப்பட்டதென்னவோ வெறும் 400 சதுர மீட்டர் பரப்பளவு மட்டுமே.இதற்கு ஸ்ரீராமன் சொல்லும் காரணம் ஆய்வு துவங்கியதே ஐந்து மாத தாமதத்தில் தான் என்பது. முதலாமாண்டு ஆய்வு மூன்று மாத தாமதத்தில் தான் துவங்கியது. (மார்ச் 2-2015) ஆனால் அப்படியிருந்தும் அமர்நாத் இராமகிருஷ்ணனால் 43 அகழாய்வுக் குழிகளை தோண்ட முடிந்தது. ஆனால் ஐந்துமாத தாமதத்தில் துவங்கிய ஸ்ரீராமன் வெறும் 10 குழியை மட்டுமே தோண்டியுள்ளார்.

இங்கு தான் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய செய்தியே உள்ளது. கடந்த ஆண்டு அகழாய்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை சராசரியாக 80 க்கும் மேல் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 25க்கும் மேல் இல்லை. எந்த ஒரு நாளும் 80 பேர் பணியில் அமர்த்தப்படவில்லை. இது தற்செயலல்ல, இதுதான் அவர்களின் நோக்கமே. இதில் மிக முக்கியமான விசயம் என்னவென்றால், இந்த ஆண்டுக்கான அனுமதி வழங்கப்பட்ட பின்னும், நிதி ஒதுக்காமல் இருந்ததால், நாடாளுமன்றத்தில் தமிழக உறுப்பினர்கள் குரல் கொடுத்த தன் விளைவாக மிக அதிக நிதி இவ்வாண்டு தான் ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ. 25 லட்சம் நிதி ஒதுக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டில் 43 குழிகள் தோண்டப்பட்டுள்ளது. ஆனால் ரூ.40 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ள இந்த ஆண்டு 10 குழிகள் மட்டுமே தோண்டப்பட்டுள்ளது.

மழையின் குறுக்கீடு அகழாய்வுக்கு இடையூறாக இருந்ததாக ஸ்ரீராமன் தெரிவித்துள்ளாரே?

இதைவிட அபத்தமான ஒரு காரணத்தை யாரும் சொல்லிவிட முடியாது. அமர்நாத் ஆய்வு மேற்கொண்ட இரண்டு ஆண்டும் கீழடியில் மழையே பெயவில்லையா? இதே செப்டம்பர் மாதத்தில் தானே அவரும் ஆய்வினை முடித்தார். இந்த ஆண்டு மட்டும் மழையை எப்படி காரணம் சொல்லமுடியும். முதலில் கூறியதைப்போல உரிய பணியாளர்களை வேலைக்கு அமர்த்தாமல் திட்டமிட்டே வேலையை மந்தப்படுத்தும் செயல் முதல் நாளில் இருந்து நடைமுறையானதை கீழடியில் உள்ள அனைவரும் அறிவர்.இதில் மிகுந்த கவலைக்குரிய விசயம் என்ன வென்றால் இவ்வாண்டு அகழாய்வு செய்யப்பட்ட ஒரு குழிகூட இயற்கை மண்படிமம் (கன்னி மண் – Virgin soil) வரை தோண்டப்படவில்லை. அதாவதுஎந்த ஒரு அகழாய்வுக் குழியும் முழுமையடைவில்லை என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது. ஒரு குழியைக்கூட முழுமையாக தோண்டாமல் தான் பல முடிவுகளை ஸ்ரீராமன் அறிவித்துள்ளார்.கடந்த ஆண்டுகளில் இயற்கை மண் அடுக்குகளுக்கு கீழே மணல் அடுக்குகளும் கண்டறியப்பட்டன. அதை வைத்துத்தான், வைகை நதி முதலில் இப்பகுதியில் ஓடியுள்ளது; பின்னர் நதியின் போக்கு மாறியவுடன் வளமிக்க வண்டல் மண் படிவம் தோன்றியுள்ளது; அந்த வளமிக்க மண்ணின் பரப்பில் தான் இந்நகரம் உருவாகியுள்ளது என்று ஆய்வாளர்கள் கூறினர். 

இவ்வாண்டு ஆய்வினில் சேகரிக்கப்பட்ட கரித்துகள் மாதிரிகளை கரிமப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தி காலநிர்ணயம் செய்யப்படும் என்று ஸ்ரீராமன் கூறியுள்ளது பற்றி உங்களது கருத்தென்ன?

ஒரு குழி கூட இயற்கை மண்படிமம் வரை தோண்டப்படவில்லை என்பதை அவரே தெரிவித்துள்ளார். அப்படியென்றால் இவர் அகழாய்வுக்குழியின் எந்த நிலையில் எடுக்கப்பட்ட கரிமத்துகளை மாதிரிக்கு அனுப்பப் போகிறார் என்ற கேள்வி எழுகிறது.குழியின் மேற்புறத்தில் இருக்கிற மாதிரிகளை அனுப்பி கால நிர்ணயத்தை மிக அருகாமையில் கொண்டுவருவதற்கான வாய்ப்பும் இதில் உள்ளதாகவே கருதுகிறேன்.கடந்த ஆண்டு அமர்நாத் இராமகிருஷ்ணன் குழு,20 மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்ப மத்தியஅரசிடம் அனுமதி கோரியது. ஆனால் மத்திய அரசுகொடுத்ததோ இரண்டு மாதிரிகளை ஆய்வு செய்வ தற்கான அனுமதிதான். மீதமுள்ள பதினெட்டு மாதிரிகள் இன்னும் ஆய்வு செய்யப்படாமல் இருக்கின்றன.அதனை ஆய்வுக்கு உட்படுத்தாமல் இந்த ஆண்டு ஸ்ரீராமன் குழு சேகரித்துள்ள மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பக்கூடாது. தவறான கால நிர்ணயத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பை அனுமதிக்க முடியாது.

கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட கட்டு மானங்களின் தொடர்ச்சியோ அல்லது அதனுடன் தொடர்புடைய எவ்விதக் கூறுகளோ இவ்வாண்டு ஆய்வு செய்த குழிகளில் கிடைக்கவில்லை. எனவே இவ்விடத்தில் கட்டிடங்கள் தொடர்ச்சியாகவோ அல்லது பரவலாகவோ கட்டப்பெறவில்லை என்று ஸ்ரீராமன் தெரிவித்துள்ளாரே?

இவர்களின் நோக்கம் முழுமையாக வெளிப்பட்டு நிற்கும் இடம் இதுதான். கடந்த ஆண்டு மிக விரிந்த கட்டுமான அமைப்பு கண்டறியப்பட்டது. அது குடியிருப்பல்ல; தொழிற்கூடம், ஈனுலைகள், மூன்று விதமான வடிகால்கள், சதுரவடிவ தொட்டிகள், வட்டவடிவத் தொட்டிகள் எனப் பலவும் இருந்ததைப் பார்த்தோம். அந்த கட்டுமானத்தின் தொடர்ச்சி தென்திசை நோக்கி பூமிக்குள் போயிருந்தது. 

அதன் தொடர்ச்சியை கண்டறிய வேண்டும் என்றால் தென்திசையில் குழி அமைத்திருக்க வேண்டும். ஆனால் தென் திசையில் ஒரு குழி கூட அமைக்கப்படவில்லை. அதற்கு நேர் எதிராக வடதிசையில் தான் இவ்வாண்டின் அனைத்துக் குழிகளும் தோண்டப்பட்டுள்ளன.கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கட்டு மானத்தின் பிற மூன்று பகுதியில் தோண்டாமல், கட்டுமானப்பகுதியின் தொடர்ச்சி இருக்கும் தென்திசை யில் தோண்டாமல், கட்டுமானப் பகுதியின் தொடர்ச்சி இல்லாத பகுதியில் மட்டும் தோண்டியது ஏன் என்பதுதான் முக்கியமான கேள்வி.

அது மட்டுமல்ல, முதலாமாண்டு ஆய்வு மூன்று இடங்களில் தோண்டப்பட்டது, இரண்டாமாண்டு ஆய்வு ஆறு இடங்களில் தோண்டப்பட்டது. ஆனால் இவ்விரு ஆண்டிலும் கிடைத்த நிதியை விட இவ்வாண்டு அதிக நிதி ஒதுக்கப்பட்டும் ஒரேஒரு இடத்தில் மட்டும் தோண்டப்பட்டது ஏன்?

100 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த மேட்டில்எவ்வளவோ இடங்களிருந்தும் இவர்கள் தோண்ட வில்லை. கட்டிடத்தின் தொடர்ச்சியற்ற அந்த குறிப்பிட்டஇடத்தில் மட்டுமே தோண்டியுள்ளனர். அங்கும் முழுமையாக இயற்கை மண்படிமம் வரை தோண்டவில்லை.அப்படியிருக்க, இவ்விடத்தில் கட்டிடங்கள் தொடர்ச்சியாகவோ அல்லது பரவலாகவோ கட்டப்பெறவில்லை என்று ஆய்வாளர் ஸ்ரீராமன் தெரிவித்துள்ளதென்பது என்ன நோக்கத்துக்காக இவர் நியமிக்கப்பட்டாரோ அந்த நோக்கத்தை நிறைவேற்றியுள்ளார் என்பதை தெளிவாகக் காட்டுகிறது.

அருங்காட்சியம் அமைத்தல், கட்டுமானங்களை பொதுப்பார்வைக்கு கொண்டுவருதல் ஆகியப் பணிகள் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி மேற்கொள்ளப்படும் என்று ஸ்ரீராமன் கூறியுள்ளாரே?

கள அருங்காட்சியகம் அமைக்க இரண்டு ஏக்கர் நிலம் மே மாதமே மாவட்ட நிர்வாகத்தால் தரப்பட்டுவிட்டது. ஆனால் இன்று வரை, அதனை ஏற்றுக்கொண்டு நிர்வாக நடவடிக்கையைக் கூட மத்திய அரசு செய்யவில்லை. அப்புறம் எங்கே இருந்து அருங்காட்சியம் அமைக்கப்படும்?

மூன்றாம் கட்ட அகழாய்வின் விபரங்களை ஆய்வாளர் ஸ்ரீராமன் தெரிவித்துள்ள பின்னணியில் அடுத்து என்ன செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

திராவிட நாகரிகத்தின் மிகமுக்கிய அடையாளம் கீழடி. உலகின் மிகச் சிறப்புமிக்க இலக்கியத் தொகுதிகளில் ஒன்றான சங்க இலக்கியம் சொல்லும் மனித வாழ்வின் வளமையை நிரூபிக்கும் ஆதாரம். சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் கண்டறியப்பட்டுள்ள இத்தொல்லியல் மேடு என்பது நமது வரலாற்றுக்கு மிக மிக முக்கியமான இடம்.இந்துத்துவா அரசியல் முழுவிசையோடு வரலாற்றின் கட்டமைப்புகளை குலைத்துப் போட்டுக்கொண்டிருக்கும் இன்றைய நிலையில் கீழடியைப்பாதுகாப்பது, அதன் ஆய்வினை அறிவியல்பூர்வமாக முன்னெடுத்துச் செல்வது மிகமுக்கியம். 

தமிழகத்தில் உள்ள பலரும் சந்தேகப்பட்டது போலவே, இவ்வாண்டு அகழாய்வு என்பது அவர்களின் அரசியல் நோக்கத்தை நிறைவேற்றும் பகுதியாக அமைந்துள்ளதைப் பார்க்கிறோம். ஒரு அகழாய்வில் எதுவும் கிடைக்கவில்லை என்று நிரூபிக்க என்னனென்ன வழிகளுண்டோ அத்தனை யும் இந்த ஆண்டு செய்து முடித்துள்ளனர்.எனவே மிகுந்த விழிப்புணர்வோடு இதனை அணுகவேண்டும். அகழாய்வு தொடரவேண்டும் என்பதைவிட திசைதிருப்பவிடக் கூடாது என்பதிலும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஸ்ரீராமன் போன்ற ஆய்வாளர்கள் ஆய்வினை திசை திருப்பும் வேலையைச் செய்து முடிப்பார்கள் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. அதை அனுமதிக்கக்கூடாது.

Monday, September 18, 2017

இன்று இவர் எங்களோடு




மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே.கனகராஜ் அவர்கள் அளித்த உரையின் காணொளி கீழே உள்ளது.

வானமே அதிகார எல்லையாக மனதில் கொண்டு வரம்பு மீறும் நீதியரசர்களிடம் அவர் சில கேள்விகள் கேட்டுள்ளார்.

நீதிபதிகளால் பதில் சொல்ல முடியாது. வேண்டுமானால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கலாம்.

அவசியம் காணொளியை முழுமையாக பாருங்கள். மிகவும் அற்புதமான, அர்த்தம் மிக்க உரை. மீண்டும் சொல்கிறேன். தவற விடாதீர்கள்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மகத்தான தலைவர் தோழர் சுனில் மைத்ரா அவர்களின் நினைவு நாளான இன்று நாங்கள் விழுப்புரத்தில் நடத்தும் சிறப்புக்கருத்தரங்களில் தோழர் கனகராஜ் "மதவெறியை மாய்த்து மனித நேயம் வளர்ப்போம்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றவுள்ளார்.



வாய்ப்புள்ள அனைவரும் இந்நிகழ்ச்சிக்கு வருமாறு அன்புடன் வரவேற்கிறேன்.

இப்போது காணொளியைப் பாருங்கள்.
 





Sunday, September 17, 2017

பிரெட் பால் அல்வா -இரண்டு நேயர் விருப்பம்

நீண்ட நாட்களாக சமையல் பதிவு எதுவும் எழுதவில்லை. அதனால் சமையலறை பக்கம் போகவில்லை என்று அர்த்தமல்ல. புதிய முயற்சி எதுவும் செய்யவில்லை. அவ்வளவுதான். 

கடந்த ஞாயிறு மகனின் நேயர் விருப்பம் புதிய முயற்சிக்கு வித்திட்டது. அவன் கேட்ட பிரெட் அல்வாவை புதிய முறையில் முயற்சித்தேன். ஏற்கனவே ஒரு முறை பிரெட் பேரிச்சம்பழ அல்வா செய்துள்ளேன். பிரெட்டில் வேறு சில உணவு வகைகளும் கூட.

பார்க்காதவர்கள் இணைப்பினை பயன்படுத்திக் கொள்ளவும்






சரி இப்போது பிரெட் பால் அல்வாவை பார்ப்போம். 

பிரெட்டை சிறு துண்டங்களாக்கி ஒரு பெரிய பாத்திரத்தில் நெய் ஊற்றி வதக்கவும். அதிலே காய்ச்சிய பாலை ஊற்றி கிளறவும். பிறகு சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறவும். அவ்வப்போது நெய் ஊற்றிக் கொள்ளவும். பிறகு ஏற்கனவே வறுத்து வைத்த முந்திரியை சேர்த்து ஏலக்காய் பொடி போட்டு இறக்கி வைத்து விடவும்.

திருப்திகரமாக வந்திருந்தது. 



இரண்டு நேயர் விருப்பம் என்று தலைப்பில் உள்ளதே என்று கேட்கிறீர்கள் அல்லவா?

நேரம் இல்லாத காரணத்தால் இதனை பதிவு செய்யவில்லை. வெள்ளி அன்று போளூர் ஆண்டுப் பேரவைக் கூட்டம். கூட்டம் முடிந்து சிற்றுண்டி சாப்பிடுகையில் போளூர் கிளைச்செயலாளர் தோழர் சங்கர், "நீங்க சமையல் போட்டு ரொம்ப நாளாச்சு தோழர்" என்றார்.

அவரது குறையையும் இப்போது தீர்த்து விட்டேன்.


 

Saturday, September 16, 2017

யாரந்த நாற்பத்தி ஆறு அதிமேதாவிகள்?




இன்றைய நாள் மிகவும் நல்ல நாள்.

நல்லதொரு செய்தியை அளித்துள்ளது.

சாரணர் இயக்கத்திற்கு காவிச்சாயம் பூச நினைத்த நச்சு ராசாவை மண்ணை கவ்வ வைத்துள்ள நாள்.

எடப்பாடி, பன்னீர் எனும் இரண்டு அடிமைகள் துணை கொண்டு தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பாஜகவிற்கு கிடைத்துள்ள சரியான சவுக்கடி.

நச்சு ராசாவின் ஆணவத்திற்கு கிடைத்துள்ள மரண அடி.

ராசாவிற்கு எதிராக வாக்களித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி. 

மத்திய, மாநில அரசுகளின் சதிகளை மீறி வெற்றிவாகை சூடிய திரு மணி அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

ஆனாலும் ராசா நாற்பத்தி ஆறு வாக்குகள் பெற்றது கவலை அளிக்கத்தான் செய்கிறது.

அவர்கள் காவிகளா? 
அல்லது அடிமைகளின் ஆட்களா?

யாராக இருந்தாலும் அவர்கள் ஒரு விஷயத்தை உணர வேண்டும்.
பாம்பிற்கு பால் ஊற்றியுள்ளார்கள்.
அந்த பாம்பு அவர்களையும் கொத்தும் நாள் தூரத்தில் இல்லை.
 

எச்.ராசாவை தோற்கடியுங்கள்

உடலெங்கும் மனமெங்கும் விஷமேறிப் போய், ஒவ்வொரு வார்த்தையிலும் நச்சை மட்டுமே வெளிப்படுத்துகிற சமூக விரோதி, மக்கள் விரோதி, அமைதியை சீர்குலைக்கும் பயங்கரவாதி எச்.ராசா, சாரணர் இயக்கத்தின் தலைவர் பொறுப்புக்கு போட்டியிடுகிறாராம். 

வாக்களிக்கும் தகுதி படைத்த அனைவருக்கும் அன்பான வேண்டுகோள். 

மனிதன் அல்ல, மிருகம் என்று கூட சொல்ல முடியாத இந்த மோசமான பிறவியை தோற்கடியுங்கள்.

மாணவர்களை வழிநடத்தும் மகத்தான பொறுப்பிற்கு இந்த இழிபிறவியா?

இன்றைய தீக்கதிர் கட்டுரை, எச்.ராசா ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதை விரிவாக விளக்குகிறது.



 சாரணிய இயக்க தலைமை ஏற்க எச். ராஜாவுக்கு அருகதை உள்ளதா?
திருவாரூர், செப்.15-

தொண்டுள்ளத்தையும், நல்லொழுக்கத் தையும் மாணவப் பருவத்திலிருந்தே வளர்த்தெடுப்பதுதான், ஸ்கவுட் எனப்படும் சாரணிய இயக்கத்தின் நோக்கம். இந்த உன்னத நோக்கங்களுக்கும், மதவெறியைக் கிளப்பி கலவரத் தீ மூட்டும் ஆர்எஸ்எஸ் பேர்வழி எச். ராஜாவுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? ஆனால், கள்ளங் கபடமற்ற குழந்தைகளின் உள்ளத்திலும் மதவெறி விஷத்தை ஏற்றுவதற்காக, தமிழக சாரணிய இயக்கத்தையே கைப்பற்றும் சதித் திட்டத்துடன், அதன் தலைவர் பதவிக்கு எச். ராஜா போட்டியிடுகிறார். 

சாரணிய இயக்கத்தின் மாட்சிமை காப்பாற்றப்பட வேண்டுமானால், எச். ராஜா தோற்கடிக்கப்பட்டாக வேண்டும்.1907-இல் பேடண்ட் பவல் என்பவரால் பிரிட்டனில் உருவாக்கப்பட்ட மாணவர் தொண்டு அமைப்புதான் ‘ஸ்கவுட்’ எனப்படும் சாரணியம் இயக்கம். அநேகமாக உலகநாடுகள் அனைத்தி லும் கல்வி நிறுவனங்கள் தோறும் இந்த சாரணியர் படை அமைப்புகள் உள்ளன. துவக்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே உலகம் முழுவதும் கோடிக்கணக்கான சிறுவர்கள், குழந்தைகள், மாணவர்களை கொண்ட பேரியக்கமாக சாரணிய இயக்கம்வளர்ந்தது. இந்தியாவில் 1909-இல் பெங்களூரு பிஷப் காட்டன் பாய்ஸ் பள்ளியில் ஆரம்பிக்கப்பட்ட சாரண - சாரணியர்இயக்கம் பின்னர் நாட்டின் அனைத்துப் பள்ளிகளுக்கும் கிளை விரித்தது. 

சாரணிய இயக்கம் உலகளாவிய மாணவர் - இளைஞர் பேரியக்கமாக வளர்ந்திருந்தாலும், அந்தந்த நாடுகளின் சமூகச் சுழல் மற்றும் இறையாண்மைக்கேற்ப சில நோக்கங்கள் திட்டங்களையும்- தேவையான மாற்றங்களையும் தன்னகத்தே சுவீகரித்துக் கொண்டு இயங்கி வருகின்றன.பல்வேறு இன, மொழி, மதங்களால் பின்னப்பட்ட அழகிய தேசமான இந்தியாவில், அதன் தனிச்சிறப்பான வேற்றுமையில் ஒற்றுமை என்பதன் அடிப்படையிலான இறையாண்மையையும் உள்வாங்கியே சாரணிய இயக்கம் செயல்பட்டு வருகிறது. மாணவர்கள், இளைஞர்கள் தங்களின் ஆக்கப்பூர்வமான; பாத்திரத்தை வகிப்பதன் மூலம் இந்திய நாட்டையும், அதன் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்கான பணிகளில் ஈடுபடுவதே இந்திய சாரணிய இயக்கத்தின் நோக்கம் என்றால் அது சரியானதாகும். 

சாரணியம் சாரணர் பயிற்சி 

அந்த வகையில்தான், தில்லியை தலைமையிடமாகக் கொண்ட பாரத சாரணிய இயக்கத்தின் மாநில, மாவட்ட அளவிலானஇந்திய கட்டமைப்பு மற்றும் அதன் பிரிவுகள், அதன் செயல்முறைகள் அனைத்தும், மாணவர்களை இனிமையான பண்புகளைக் கொண்டவர்களாக, அவர்களை நாட்டின் எதிர்கால நல்குடிமக்களாக உருவாக்கும் நோக்கம் கொண்டவை. 

அதற்கான பயிற்சிகளை அளித்து, சமூகத்திற்கு உதவும் தொண்டுள்ளங்களை உருவாக்குகின்றன. அடிப்படை பண்பு, நல்லொழுக்கம், நாட்டுப் பற்றுடன் கூடிய பொதுநல செயல்களில் ஈடுபடும் எதிர்காலத் தலைமுறையை உருவாக்குகின்றன. நாட்டின் ஒற்றுமைக்கான படை வீரர்களை உருவாக்குகின்றன. சமூக இடர்பாடுகளில் மக்களைக் காப்பாற்றுவது, பாம்பு, நாய் விஷக்கடிகளுக்கு முதலுதவி அளிப்பது, நோய்த் தடுப்பு முறைகளை விளக்குவது உள்ளிட்ட ஏராளமான பயிற்சிகளையும் அளிக்கின்றன. அவற்றைப் பெறும் மாணவர்கள், தங்களின் அறிவை சமூகத்துடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.

ஆகவே, இந்தியச் சிறுவர்கள் மற்றும் மாணவர்களை உற்சாகப்படுத்தி சாரணிய இயக்கத்தில் ஈடுபடுத்தி பயிற்சி அளிப்பது முக்கியமான பணியாகும்.ஏழு வயது சிறுவர்கள் முதற்கொண்டு செயல்படும் சாரணிய இயக்கம் பல பிரிவுகளை கொண்டு உள்ளது. இன்று 36 லட்சத்து 87 ஆயிரத்து 127 சாரணிய பிரிவுகளில், 56 லட்சத்து 95 ஆயிரத்து 800 சாரண - சாரணியர் உள்ளதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.சாரணர் - சாரணியர்களுக்கென மூவிதழ் மலர் வடிவில் சின்னங்கள் உள்ளன. பச்சைத் துணியில் மஞ்சள் நூல் எந்திரப் பின்னலால் உருவாக்கப்பட்ட இணைப்புச் சின்னத்தை தங்கள் சீருடைகளில் சாரணிய இயக்க மாணவர்கள் அணிந்து கொள்கிறார்கள். இந்த மஞ்சள் வண்ணத்தை காவியாக மாற்றும் உள்நோக்கத்துடன்தான் ஆர்எஸ்எஸ் பேர்வழியான எச். ராஜா சாரணிய இயக்கத்தின் தலைமைக்குப் போட்டி போடுகிறார். இதற்கான தேர்தல் சனியன்று (செப்.16) நடைபெறுகிறது. 

மதவெறி நஞ்சை விதைக்கும்எச். ராஜா

மதவெறி மூலம் கலவரத் தீயை பற்ற வைத்து, மக்களைத் துண்டாடும் எச். ராஜா,சாரணிய இயக்கத்தின் தலைமைக்கு தகுதி யற்றவர் என்பது இடதுசாரிகளுக்கு மட்டுமல்ல; லட்சக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்களின் பொதுக் கருத்தாகவும் இன்று உருவாகியுள்ளது. பாசிச இந்துத்துவா கருத்தை போற்றியும், மற்ற மதங்களை இகழ்ந்து பேசியும்; மக்கள் ஒற்றுமையை சிதைக்கும் குணம் கொண்ட எச்.ராஜா சாரணிய இயக்கத் தலைமையை கைப்பற்ற நேர்ந்தால் சாரண - சாரணியர்களின் மென்மையான தொண்டு உள்ளங்கள் நஞ்சாக்கப்படும். மதவாத வெறுப்பு கொண்ட வேலைத்திட்டங்கள் திணிக்கப்படும். ஆர்எஸ்எஸ்-சின் காவி அணிவகுப்புக்கு ஆள்பிடிக்கும் மைதான மாக தமிழக சாரணிய இயக்கம் மாறும். மகத்தான சர்வதேச இயக்கங்களில் ஒன்றான சாரணிய இயக்கம் அதன் மாண்பை இழக்கும். சாரணிய இயக்கம் கேலிக்கூத்தாகி விடும்.

செய்தி தொகுப்பு : பி. கந்தசாமி, திருவாரூர்.

Friday, September 15, 2017

பெருமையாய் உள்ளது மணி. சூப்பர்



வழக்கறிஞர் தோழர் பிரதாபன் ஜெயராமன் அவர்களின் முக நூல்
பதிவிலிருந்து எடுத்தது. 


இன்று சிறார் நீதிமன்றத்தில்...

நீதிபதி:- NEETக்கு எதிராக போராடினீர்களா?

இளம்தோழர்:- ஆம்

நீதிபதி:- ஏன் எதிர்க்கிறீர்கள்?

இளம்தோழர்:- நீட் என்னைப்போன்ற மாநில பாடத்திட்டத்தில் பயின்றவர்களுக்கு அநீதியளிக்கிறது.

நீதிபதி: அப்ப உங்க மாநில பாடதிட்டம் தரமாக இல்லையா?

இளம்தோழர்: அப்படியெல்லாம் இல்ல. சிபிஎஸ்இ ல படிக்க வைக்கறவங்க காசு செலவு செய்து தனியா கோச்சிங் கொடுப்பாங்க. எங்களுக்கு யார் செலவு செய்வாங்க?

நீதிபதி:- அப்படியெனில் உங்க படிப்புக்கு கோச்சிங் சரியில்ல.

இளம்தோழர்:- அப்படியில்ல. நாங்களும் நன்றாக படித்து மார்க் எடுத்தோம்..நீட்டில் வெறும் 10% மட்டுமே எங்கள் பாடத்திட்டத்தில் இருந்து கேள்வி கேட்டால் எப்படி சரியாகும்?

நீதிபதி:- நீங்க முன் வைக்கும் தீர்வு என்ன?
இளம்தோழர்: நீட்டை நீக்கனும்.

நீதிபதி:- இனிமே போராடுவீங்களா?

இளம்தோழர்:- நீட்டை நீக்கும்வரை போராடுவோம்.

நீதிபதி:- என்ன படிக்கிறீங்க?
இளம்தோழர்:- பி.காம்

நீதிபதி:- அதன்பின் என்ன படிக்க போறீங்க?

இளம் தோழர்:- பி.எல் படிப்பேன்.

நீதிபதி:- அப்பா அம்மா என்ன வேலை செய்கிறார்கள்? அவர்களுக்கு நீங்க போராடியது?

இளம் தோழர்:- அப்பா கூலி, அம்மா வீட்டுவேல. அவங்களுக்கு தெரியும்.
நீதிபதி:- நீங்க பி.எல் படிங்க!

மணிக்குமாருக்கு ரெட் சல்யூட்...

நெஞ்சுரத்தோடு நீதிமன்றத்தை சந்தித்த தோழன் மணியை நினைத்தால் பெருமையாக உள்ளது. சூப்பர்.

Thursday, September 14, 2017

கொலையெல்லாம் ஒரு மேட்டரா. . .

சற்று நேரம் முன்பு வீடு திரும்புகையில் காகிதப்பட்டறை பகுதியில் உறியடி திருவிழா என்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது. 

இரண்டு வருடங்கள் முன்பாக இதே பகுதியில் வேலூரின் ஒரு பெரிய தாதாவை கொலை செய்ய முயற்சி நடந்தது. கொலை செய்ய முயற்சி செய்த நபரை தாதாவின் ஆட்கள் துரத்திக் கொண்டு ஓட, ஒரு கட்டத்தில் அவன் சிக்கிக் கொள்ள தாதாவின் இரு மகன்கள் கல்லை முகத்தில் போட்டு கொன்று விட்டார்கள். அந்த கொலை தொடர்பான படங்கள் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது. அதிலே ஒரு படம் கீழே உள்ளது. முகங்களை, சடலத்தை நான் மறைத்துள்ளேன்.


அந்த தாதாவும் சில மாதங்கள் முன்பு கொலை செய்யப்பட்ட ஆட்களின் கோஷ்டியால் கொல்லப்பட்டு விட்டார்.

போக்குவரத்து நெரிசலின் போது சாலையின் இருபக்கமும் கட்டப் பட்டிருந்த ஃப்ளெக்ஸ் பேனர்களைப் பார்த்தேன்.

கல்லைத் தூக்கிப் போட்டு கொலை செய்த அந்த இரண்டு மகன்களும் பேனர்களில் மீசையை முறுக்கிய படி சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

பின் குறிப்பு : ஒரு ஜாதி சங்கம் பெயரில் அந்த பேனர்கள் வைக்கப் பட்டிருந்தது.

 

Wednesday, September 13, 2017

தொழுகை - தெப்பக்குளம் - தங்கக் கிரீடம்




தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு நடத்திய மத நல்லிணக்க சிறப்பு மாநாடு பற்றி நேற்று எழுதியிருந்தேன். அதிலே தோழர் ஆளூர் ஷாநவாஸ் பேசிய போது பகிர்ந்து கொண்ட சில தகவல்கள்.


சென்னை மண்ணடி இஸ்லாமியர்கள் நிரம்பிய பகுதி. பக்ரீத் போன்ற திருநாட்களின் போது அவர்கள் ஒன்றாக தொழுகை நடத்த அங்கே உள்ள மசூதிகளில் இடம் போதாது. அவர்களுக்குச் சொந்தமான மைதானமும் கிடையாது. ஆனால் அவர்கள் தொழுகை நடத்த ஒரு மைதானம் கிடைத்தது. புகைப்படத்தில் பார்த்தால் அவர்கள் தொழுகைக்குப் பின்னணியில் ஒரு சிலுவை தெரியும். ஆம் டான் பாஸ்கோ பள்ளி நிர்வாகம் தங்கள் பள்ளி மைதானத்தை தொழுகை நடத்த அனுமதித்தது. இதுதான் மத நல்லிணக்கம்.

வரலாறு முழுதும் இதைக் காணலாம்.

மயிலாப்பூரில் கபாலீஸ்வரருக்கு ஆலயம் கட்டிவிட்டார்கள். கோயில் அருகே தெப்பக்குளம் உருவாக்க ஆசைப்பட்டார்கள். கோயிலுக்கு அருகே உள்ள நிலம் வேறு ஒருவருடையது. அவரிடம் கேட்க தயங்கினார்கள். இருந்தும் கேட்டார்கள். அவர் முழுமனதோடு தெப்பக்குளத்திற்கான இடத்தை எந்த விலையும் பெற்றுக் கொள்ளாமல் வழங்கி விட்டார். இப்போதும் மயிலை தெப்பத்திருவிழாவின் முதல் நாள் முதல் மரியாதை அந்த மனிதரின் பரம்பரைக்குத்தான். நிலமளித்த அந்த நபர் ஆற்காடு நவாப்.

மராட்டிய மன்னர்கள் சிருங்கேரி சங்கர மடத்தின் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி கொள்ளையடித்துப் போக தன்னை பாதுகாக்க வேண்டும் என்று சங்கராச்சாரியார் யாருக்கு கடிதம் எழுதினார் தெரியுமா? திப்புசுல்தானுக்கு. திப்பு சுல்தான் தனது படைகளை அனுப்பி உதவியது மட்டுமல்லாமல் இருநூறு வராகன் தங்கமும் அளித்தார். சங்கராச்சாரியார்கள் இப்போதும் அணிந்து கொள்ளும் கிரீடம் அந்த தங்கம் கொண்டு செய்யப்பட்டதுதான்.

இதுதான் இந்தியாவின் பாரம்பரியம். இந்த வரலாறை நாம் சொல்லாவிட்டால் மற்றவர்கள் பொய்களை பரப்பிக் கொண்டிருப்பார்கள்.

ஆம் உண்மைதான். 

உண்மையான வரலாற்றை நாம் உரக்கச் சொல்லாவிட்டால் ராசாக்களும் சமஸ்கிருத சங்கீதங்களும் அனாமதேய முதியவரும் பொய்யான தகவலைச் சொல்லி விஷத்தை பரப்புவார்கள். 

Tuesday, September 12, 2017

கோவையில் மூன்று பேர் . . .


கடந்த சனிக்கிழமையன்று கோவையில் எங்கள் தென் மண்டலக் கூட்டமைப்பின் சார்பில் மத நல்லிணக்க சிறப்பு மாநாடு நடைபெற்றது. எங்கள் கோட்டத்திலிருந்து 13 தோழர்கள் பங்கேற்றோம். புகைவண்டியில்  முன்பதிவு இல்லாததால் வேன் மூலம் சென்றோம். சோர்வளிக்கும் பயணம்தான். ஆனால் அந்த சிரமத்தை தோழர் அருணன், தோழர் ஆளூர் ஷானவாஸ், திரு பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரின் அருமையான உரைகள் போக்கி விட்டது. முக்கியப் பேச்சாளர்கள் அனைவருமே கலக்கலாக பேசினார்கள்.  உரைகளின் முக்கியமான அம்சங்களை தீக்கதிர் நாளிதழில் பிரசுரித்துள்ளனர். அதனை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

தோழர் ஆளூர் ஷாநவாஸ் பகிர்ந்து கொண்ட ஒரு தகவலும் மாநாடுத் தீர்மானமும் மிக முக்கியமானது. அதனை நாளையும் நாளை மறுநாளும் பகிர்ந்து கொள்கிறேன்.

 
 இந்துக்களுக்கும் எதிரானது ஆர்எஸ்எஸ் மதநல்லிணக்க மாநாட்டில் தலைவர்கள் எச்சரிக்கை



கோயம்புத்தூர், செப்.10-
“இந்துக்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என்கிற சங்பரிவாரங்கள் அனிதாவின் மரணத்திற்கு நீதிகேட்டோ, கௌரி லங்கேஷ் படுகொலையை கண்டித்தோ ஏன் கிளர்ந்தெழவில்லை. பெரும் பான்மை மக்களை அச்சப்படுத்தி வாக்கு வங்கியை பலப்படுத்துவது மட்டுமே இவர்களின் நோக்கம். ஆர்எஸ்எஸ் கூட்டம் சிறுபான்மை மதங்களைச் சேர்ந்தோருக்கு மட்டுமல்ல இந்துமக்களுக்கும் எதிரானவர்கள்” என கோவையில் நடைபெற்ற மதநல்லிணக்க மாநில சிறப்பு மாநாட்டில் தலைவர்கள் உரையாற்றினர். தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற மாநாட்டிற்கு கூட்டமைப்பின் துணைத் தலைவர் க. சாமிநாதன் தலைமை தாங்கினார். கோவைப் பகுதி பொதுச் செயலாளர் கே.துளசிதரன் வரவேற்றார்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போ ன்ஸ், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்க த்தின் கவுரவத் தலைவர் பேராசிரியர் அருணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஆளூர் ஷா நவாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.பேராசிரியர் அருணன் பேசுகையில்,“இந்து மதம் என சொல்லப்படுவது கூட்டமைப்பு. பல பிரிவுகள் ஒன்றிணைக்கப்பட்டு நடைமுறையில் இந்து மதம் என அழைக்கப்படுகிறது. ஆறு சமயங்களை இணைத்து வழிபாட்டு முயற்சி எட்டாம் நூற் றாண்டுக்கு பிறகு உருவாக்கப் பட்டது என மதவரலாறு சொல்கிறது. ஒரு குலதெய்வ வழிபாட்டுக் குள்ளேயே சைவச்சாப்பாடு, அசைவ சாப்பாட்டு முறை உள்ளது. இதுதான் வாழ்க்கை என்பதை அங்கீகரிக்க வேண்டும்” என்றார். ஒரே மதம் என்று இவர்கள் சொல்லுகிற இந்து மதத்தில் பிரிவுகள் உள்ளது என்பதை மறைத்து அதன் பன்மைத்துவத்தை ஒழித்து 130 கோடி மக்கள் மீது ஒற்றைப் பண் பாட்டை திணிக்க முயற்சிக்கிறார்கள். 

மூன்றாண்டுகளில் 30க்கும் மேற்பட் டோர் மாட்டுக் கறியின் பேரால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் ஐந்து இந்துக்களும் உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.உ.பியில் ரோமியோ எதிர்ப்பு படை உருவாக்கப்படுகிறது. இதன் நோக்கம் மதமறுப்பு, சாதி மறுப்பு காதல் உருவாகிவிடக் கூடாது என்பதுதான் எல்லோரும் இந்துக்கள் என்றால் சாதி மறுப்பு காதலை ஏன் மறுக்கிறீர்கள்? ஏனென்றால் சாதியை ஒழிக்க இவர்கள் தயாராக இல்லை. கௌரி லங்கேஷ் படுகொலை யை ஒரு கூட்டம் சமூக வலைத்தளத் தில் கொண்டாடுகிறது. அப்படி கொண்டாடுகிறவரை பின்தொடர்கிற வராக பிரதமர் மோடி இருக்கிறார் என்பதுதான் வேதனை. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஏழை, எளிய, அடித்தட்டு இந்து மக்களுக்கு மட்டுமல்ல உயர்சாதி இந்துக்களுக்கும் இவர் கள் எதிரானவர்கள்தான். 

உயர் சாதியில் பிறந்தவர்கள் அனைவரும் மதவெறியர்களோ, சாதி வெறியர்களோ இல்லை. அவர்களிலும் முற்போக்கு ஜனநாயக மதச் சார்பின்மை சிந்தனை கொண்டோர் உள்ளனர். மிகக்கொடூரமான மும்பை கலவரத்தை முன்னின்று நடத்திய பால்தாக்ரே பிராமணர் அல்லாதவர். நடந்த கொடூரத்தை ஆதாரத்துடன் பட்டியலிட்ட சிறீகிருஷ்ணா கமிசன் தலைவர் சிறீகிருஷ்ணா பிராமணர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உண்மையில் மதக்கலவரங்கள் அனைத்து சாதி, மதத்தினருக்கும் வாழ்விற்கும் கேடுவிளைவிக்கக்கூடியதே. மதச்சார்பின்மை என்பதன் அர்த்தம் பொதுவாழ்வில் இருந்து மதத்தை பிரித்து வைப்பது, கல்வியில், அரசியலில், அரசிடம் இருந்து மதத்தை பிரித்துவைப்பது என்பதே உண்மையான பொருள் என்றார் அருணன்.


வேறுபாடு என்னவெனில்

பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், “21 ஆம் நூற்றாண்டில் ஒவ்வொரு நாளும் மனிதன் புதிய புதிய கிரகங்களை கண்டுபிடித்துக் கொண்டு வருகிறான். பூமிக்கு அடியில் ஆறாயிரம் அடி கீழே என்ன இருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்கிற அளவிற்கு விஞ்ஞானம் அறிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. ஆனால் இங்கு நாட்டை மதத்தை சொல்லி பின்னோக்கி இழுத்துச்சென்று கொண்டிருக்கிறார்கள். எங்கே எதற்கு அழைத்து செல்கிறார்கள் என்று கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது. இதுகுறித்து பேசினால் இந்து விரோதிகள் என குற்றம் சாட்டுகிறார்கள். நாங்கள் இந்து மதத்துக்கோ மக்களுக்கோ எதிரானவர்கள் கிடையாது. மனிதர்களை பாகுபடுத்தும் இந்துத்துவ கோட்பாட் டிற்குத்தான் எதிரானவர்கள் விரோதிகள். 

அனைத்து மதங்களிலும் உள்ள மூட நம்பிக்கைகளுக்கு நாங்கள் எதிரானவர்கள்” என்றார்.வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்வில் பல லட்சக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள். அந்த இடங்களில் இஸ்லாமிய வணிக நிறுவனங்கள், கிருஸ்துவ தேவாலயங் கள் என பல தெருக்களில் உள்ளது. பல லட்சக்கணக்கான மக்கள் கூடுகிற இந்த திருவிழா முடிந்த மூன்று மணி நேரத்தில் ஒருவர் கூட இருக்க மாட்டார்கள். அனைவரும் அமைதியாக கலைந்து சென்று விடுவார்கள். யாரும் யார் மீது கல்லை வீசவில்லை, காவல்துறையின் பாதுகாப்பும் கிடையாது. ஆனால் பத்து பேர் கலந்து கொள்ளும் ராமகோபாலன் தலைமையில் நடைபெறும் பிள்ளையார் ஊர்வலத்தில் ஐநூறு காவலர்கள் பாதுகாப்பு வழங்க வேண்டியுள்ளது. இதுதான் இந்துவிற்கும், இந்துத்துவத்திற்குமான வேறுபாடு என்றும் அவர் குறிப்பிட்டார் 

.ஆளூர் ஷா நவாஸ் தமது உரையில், “நான் ஒரு மதத்தை பின்பற்று கிறேன்.  இதேபோல் இந்த அரங்கத்தில் இருப்பவர்கள் அவரவர் மதத்தை பின்பற்றுபவர்களும் உள்ளனர். மதத்தை மறுப்பவர்களும் இந்த அரங்கில் இருப்பார்கள். மதநல்லிணக்கம் என்றால் என்னுடைய மதத்தில் உள்ள சடங்குகளை மற்ற மதத்தை சார்ந்தவர்களிடம் வலியுறுத்துவதோ, மற்ற மதத்தினரின் சடங்குகளை என்னை ஏற்கச் சொல்வது அல்ல. அவரவர் பின்பற்றுகிற மத சடங்குகளை பின்பற்றவும், மதமே வேண்டாம் என்ற கருத்தைக் கொண்டிருப்பவர்களுக்கும் இடையூறு செய்யக் கூடாது என்பது மட்டுமல்ல ஒத்து ழைக்க வேண்டும் என்பதே மதநல்லிணக்கத்தின் அடையாளம்” என்றார் 

நாட்டில் தற்போது, மத நல்லிணக்கம் திட்டமிட்டு சீர்குலைக்கப் படுகிறது. ஒவ்வொருவரும் தன்னுடைய மதத்தை சுதந்திரமாகப் பின்பற்ற முடியுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. நாட்டின் பன்மைத்துவத்தை சிதைத்து ஏகத்துவத்தை நிலைநாட்டுகிற அதையே சட்டமாக்க துடிக்கிற நிலையில் நாடு போய்க்கொண்டி ருக்கிறது. எந்தப் புறத்தில் இருந்து வந்தாலும் மதவெறியை அனுமதிக்க முடியாது. அம்பேத்கரியம், பெரியாரியம், மார்க்சியம் என்றால் என்ன என்று மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது என்றும் கூறினார்.