செங்கோலை வைத்து சங்கிகள் செய்யும் அரசியலில் உள்ள பொய்கள், பொய்களின் நோக்கம் குறித்து திரு ஆர்.ஷாஜஹான் அவர்கள் முகநூலில் எழுதியுள்ள விரிவான பதிவை பகிர்ந்து கொள்கிறேன். இந்த சர்ச்சையினால் ஆதீனம் பற்றிய ஒரு செய்தி நினைவுக்கு வந்தது. அது நாளை.
பாஜகவினர் - அது மிகப்பெரிய பொறுப்பில் இருக்கிற பிரதமர் ஆனாலும் சரி, உள்துறை அமைச்சர் ஆனாலும் சரி, பேஸ்புக்கில் இருக்கிற அரைவேக்காடுகள் ஆனாலும் சரி - பொய்களை கட்டுக்கட்டாக அவிழ்த்து விடுவார்கள் என்பது உலகுக்கே தெரிந்த விஷயம். எனவே, செங்கோல் விஷயத்தில் சொன்னதும் உருட்டுதான் என்பதிலும் யாருக்கும் சந்தேகம் தேவையில்லை. ஏன் என்பதை வரலாற்று ஆதாரங்களுடன் தெளிவாக்குகிறேன்.
செங்கோல் விஷயத்தில் அமித் ஷா உருட்டியது என்ன? மே மாதம் 28ஆம் தேதி நாடாளுமன்றக் கட்டிடத்தைத் திறந்து வைக்கும் பிரதமர் மோடி, செங்கோலை நிறுவுவார். அந்த செங்கோல், நாட்டின் ஆட்சி அதிகார மாற்றத்தைக் குறிக்கும் புனித செங்கோல். அதிகாரத்தை மாற்றித் தரும் நிகழ்வுக்கு ஏதும் சடங்குகள் தேவையா என்று மவுன்ட்பேட்டன் நேருவிடம் கேட்டார். நேரு, ராஜாஜியிடம் கேட்டார். சோழர் காலத்தில் ஒரு மன்னனிடமிருந்து மற்றொரு மன்னனுக்கு ஆட்சி அதிகாரம் மாற்றப்படும்போது செங்கோலும் வழங்கப்படும் வழக்கத்தை நினைவுகூர்ந்த ராஜாஜி, திருவாவடுதுறை ஆதீனத் துறவிகளிடம் சொல்ல, அவர்கள் செங்கோலைத் தயாரித்து எடுத்துக் கொண்டு, மவுன்ட்பேட்டன் நேருவிடம் கொடுப்பதற்கேற்ற வகையில் விமானத்தில் தில்லிக்குச் சென்றனர். ஆகஸ்ட் 14 நள்ளிரவு சுதந்திரம் அடையும் நிகழ்வின்போது மவுன்ட்பேட்டன் அதை நேருவிடம் கொடுத்தார்.
- இதுதான் பாஜகவினர் அடுக்கிய உருட்டு.
இனி விஷயங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
ஆட்சி அதிகாரத்தைக் குறிக்க ஏதேனும் சடங்குகள் தேவையா என்று மவுன்ட்பேட்டன் கேட்டிருப்பாரா?
நேரு வாழ்நாள் எல்லாம் அறிவியலை முன்வைத்தவர். நாத்திகர் என பிரகடனப்படுத்திக் கொள்ளவில்லையே தவிர, ஆட்சியில் மத சடங்குகளை அனுமதிக்கும் சிந்தனை அவருக்கு இருந்திருக்கவே முடியாது. அவரைப் பற்றி மவுன்ட்பேட்டனுக்கு நன்றாகவே தெரியும். அவரிடம் சடங்குகள் ஏதும் தேவையா என்று மவுன்ட்பேட்டன் கேட்க வாய்ப்பே இல்லை. அதற்கான வரலாற்று ஆதாரமும் ஏதும் இல்லை. எனவே, மவுன்ட்பேட்டன்—>நேரு—>ராஜாஜி—>ஆதீனம் கதைக்கு வாய்ப்புகள் இல்லை.
சடங்குகள் ஏதும் தேவையா என்று மவுன்ட்பேட்டன் ராஜாஜியிடம் கேட்டிருப்பாரா?
இதிலும் வாய்ப்புகள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால், ராஜாஜி படேலைப் போன்றவர் அல்ல. மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொண்டவர். அதனால்தான் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக அவரையே விரும்பினார் நேரு. ஆனால் படேலின் விருப்பம் காரணமாகவே ராஜேந்திர பிரசாத் குடியரசுத் தலைவர் ஆனார். தவிர, மவுன்ட் பேட்டனுக்குப் பிறகு முதல் (கடைசி) கவர்னர் ஜெனரல் ஆக மவுன்ட்பேட்டன் தேர்வு செய்ததும் ராஜாஜியைத்தான். காரணம், படேல் நேருவின் வலது கரமாகவே இருந்தாலும் கவர்னர் ஜெனரலாக படேல் வருவதை நேரு விரும்பவும் இல்லை, படேலும் மறுத்து விட்டார். அப்படிப்பட்ட ராஜாஜியிடம் சடங்குகள் குறித்துக் கேட்டிருக்க வாய்ப்பும் இல்லை, கேட்டதற்கான ஆதாரங்களும் இல்லை. (ராஜாஜியை குடியரசுத் தலைவர் ஆக்க வேண்டும் என்ற நேருவின் விருப்பத்தை தந்திரமாக முறியடித்து ராஜேந்திர பிரசாத்தை குடியரசுத் தலைவர் ஆக்கினார் படேல். அதை எப்படிச் செய்தார் என்பது சுவாரசியான தனிக்கதை.)
ஆக, செங்கோல் விஷயமே முற்றிலும் பொய்யா?
இல்லை. செங்கோல் ஒன்று திருவாவடுதுறை ஆதீனத்தால் கொண்டு வரப்பட்டது உண்மைதான். இந்தியா விடுதலை பெற்றதையொட்டி பல்வேறு நாடுகளிலிருந்து தலைவர்கள் வாழ்த்துச் செய்தி அனுப்பினார்கள். பல்வேறு பிரமுகர்கள் பரிசுகளும் வழங்கியிருப்பார்கள். அப்படியொரு பரிசுதான் இந்தச் செங்கோல்.
திருவாவடுதுறை ஆதீனம் எதற்காக இப்படியொரு தங்கத் தகடு பொருத்தப்பட்ட வெள்ளிச் செங்கோலை வழங்க முன்வந்தார்கள் என்பது தெரியாது. அது எதுவாகவும் இருந்து விட்டுப் போகட்டும்.
பாஜகவினரும் அரைவேக்காட்டு அடிமைகளும் பரப்பிக் கொண்டிருப்பதுபோல செங்கோல் விமானத்தில் கொண்டு செல்லப்படவும் இல்லை, மவுன்ட் பேட்டனிடம் தரப்படவும் இல்லை. சுதந்திர விழாவில் மவுன்ட்பேட்டன் நேருவிடம் அதைத் தரவும் இல்லை. இது எல்லாமே இட்டுக்கட்டி கதைகள். இதன் மூல கர்த்தா, 2000 ரூபாய் நோட்டில் சிப் வைத்திருப்பதாக நம்பிப் பரப்பிக் கொண்டிருந்த மகா அறிஞர் குருமூர்த்திதான் என்று கருதப்படுகிறது. சரி, அதுவும் இருக்கட்டும். உண்மையில் என்ன நடந்தது?
1947 ஆகஸ்ட் 11ஆம் தேதி திருவாவடுதுறை ஆதீனக் குழு ஒன்று செங்கோலுடன் சென்னையிலிருந்து ரயிலில் புறப்பட்டது என்பதை ஹிண்டு நாளிதழ் படத்துடன் வெளியிட்டுள்ளது.
தில்லி சென்ற திரு அம்பலவாணர் உள்ளிட்ட ஆதீனக் குழுவினர் ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலை நாதஸ்வரம் முழங்க, ஊர்வலமாகச் சென்றார்கள். ஒரு வெள்ளித் தட்டில் பீதாம்பரம் துணியையும் எடுத்துச் சென்றார்கள். நேருவின் இல்லத்தை அடைந்ததும் குழுவினர் வெளியே காத்திருந்தார்கள். அழைப்பு வந்த பிறகு வீட்டிற்குள் சென்றார்கள். ஒரு துறவி - ஆதீனம் அம்பலவாணர் - ஐந்து அடி நீளமும் இரண்டு அங்குல அகலமும் கொண்ட ஒரு தங்கச் செங்கோலை ஏந்தியிருந்தார். அவர் தஞ்சையிலிருந்து கொண்டு வந்த புனித நீரை நேருவின் மீது தெளித்தார். நேருவின் நெற்றியில் திருநீறை இட்டார். பீதாம்பரத்தை நேருவின் மீது போர்த்தினார். செங்கோலை நேருவிடம் கொடுத்தார்.
இதுதான் நடந்தது. டைம் இதழில் இது விரிவான செய்தியாக பதிவாகியுள்ளது.
இன்னும் கொஞ்சம் வரலாற்றுரீதியாகப் பார்ப்போம்.
நேரு அறிவியல் சிந்தனை கொண்டவர். திருநீறு வைப்பது போன்ற மதரீதியான சடங்கினை எப்படி ஏற்றுக் கொண்டார்?
சுதந்திரம் கிடைக்கவிருந்த நேரத்தில் நேரு மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகியிருந்தார். அவர் ஒருவரைத் தவிர அவரைச் சுற்றிலும் இருந்த எல்லாருமே மதப் பிடிப்புக் கொண்டிருந்தவர்கள்தான். ஒரு கட்டத்தில் நேரு சமரசங்கள் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார். “சடங்குகளை அவர்கள் செய்தது அவருக்கு சலிப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் வெளிக்காட்டாமல் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். தாம் எதிர்கொண்டுள்ள அச்சம் தரும் பணிகளுக்கு சாதகமாக வரும் எந்த உதவியையும் - அவரால் வெறுத்து ஒதுக்கப்பட்ட மூடப்பழக்கங்களிலிருந்து வந்தாலும் - முற்றாக நிராகரித்துவிடக்கூடாது என்று அந்த முற்போக்காளர் உணர்ந்து விட்டார் போலும்!”
- என்று மேற்குறிப்பிட்ட செங்கோல் நிகழ்வை டொமினிக் லேப்பியர்-லேரி காலின்ஸ் இருவரும் நள்ளிரவில் சுதந்திரம் நூலில் மிகத் தெளிவாகவே பதிவிட்டுள்ளனர். (பக்கம் 344-345). இந்த நூலாசிரியர்களுக்கு எந்த அரசியல் சாய்வும் இல்லை, தேவையும் இல்லை என்பது வரலாற்றைப் படித்தவர்களுக்குத் தெரியும்.
ஆக,14ஆம் நள்ளிரவில் அதிகாரம் கைமாறும் சுதந்திர தின விழாவின்போது செங்கோல் வழங்கப்பட்டது என்பதெல்லாம் மகா உருட்டு. 14ஆம் தேதி மாலையில் நேருவிடம் தனிப்பட்ட முறையில் பரிசாகத் தரப்பட்டது. செம்மையான ஆட்சியைத் தர வேண்டும் என்று வாழ்த்தித் தரப்பட்டதாக இருக்கலாம், ஆனால் ஆட்சி அதிகார மாற்றத்தின் அடையாளமாகத் தரப்பட்டது என்பது அப்பட்டமான உருட்டு.
அப்படியானால், செங்கோலுடன் நேருவும் அருகே ஆதீனமும் நிற்கும் படத்தின் கீழே ஆகஸ்ட் 15ஆம் தேதி என எழுதப்பட்டிருக்கிறதே?
ஆமாம் - இந்தியா சுதந்திரம் பெற்றது ஆகஸ்ட் 15 என எழுதப்பட்டுள்ளதே தவிர, பழைய படத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதிதான் தரப்பட்டது என எழுதப்படவில்லை. பிற்பாடு ஆள் ஆளுக்கு அதை பகிரும்போது - தவறான புரிதல்களும்கூட காரணமாக இருக்கலாம் - ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி தரப்பட்டதாக எழுதி விட்டார்கள். மக்களும் அதையே நம்பி விட்டதற்கான சாத்தியங்கள் அதிகம். பத்திரிகை ஆதாரங்களும் 14ஆம் தேதி என்றே தெளிவாகக் காட்டுகின்றன.
ஆதீனம் நேருவிடம் செங்கோல் கொடுத்தபோது என மூன்று வகையான படங்கள் உலவுகின்றன. ஒன்று கூட்டத்துடன் இருப்பது. அந்தக் கூட்டத்தைப் பார்த்தாலே, அது நாடாளுமன்ற வளாகத்துக்குள் எடுக்கப்பட்டதல்ல என்பது தெளிவாகத் தெரியும். மற்றொன்றில் நேரு பிரதானமாகத் தெரிவார், ஆதீனம் பின்னணியில் மங்கலாகத் தெரிவார். இது ஹிண்டு நாளிதழில் வெளிவந்த படம். மூன்றாவது, நேரு பீதாம்பரம் அணிந்து செங்கோலைப் பிடித்துக்கொண்டு நிற்க, பக்கத்தில் ஆதீனம் நிற்கும் படம். அந்தப் படத்தைப் பார்த்தால் உண்மையில் அது படமா, ஓவியமா என்று சந்தேகம் வரும். மூன்றையும் பதிவில் தந்திருக்கிறேன்.
அதெல்லாம் கிடையாது. ஆகஸ்ட் 14 நள்ளிரவு நிகழ்வில்தான் தரப்பட்டது. வரலாற்றைப் பதிவு செய்தவர்கள் மறைத்து விட்டார்கள் என்று சொல்கிறார்களே?
1947 ஆகஸ்ட் 14-15 என்பது ஏதோ மிகப் பழைய காலம் அல்ல. இன்றைய சங்கிகளின் முன்னோடிகளும் நேருவின் அமைச்சரவையிலேயே இருந்த காலம்தான் அது. பத்து பேர் மறைத்து விட்டாலும் வெளிப்படுத்தக்கூடிய ஒருவர்கூடவா இல்லாமல் போய்விடுவார்? அது மட்டுமல்ல. அதே காலத்தில் அரசியல் நிர்ணய சபைக்கூட்டங்களும் நடந்து கொண்டிருந்தன. (அரசியலமைப்புச் சட்டத்தை வரைவதற்கான குழுவின் பெயர்தான் அரசியல் நிர்ணய சபை. ராஜேந்திர பிரசாத் தலைவராக இருந்தார்.) அந்த சபையின் நடவடிக்கைக் குறிப்புகள் முழுக்கவும் பதிவாகியுள்ளன. அதிலும் விவாதங்கள் எல்லாம் அட்சரம் பிசகாமல் பதிவாகியுள்ளன. ஒருவர் பேசும்போது வேறொருவர் குறுக்கே பேசினால், குறுக்கிட்டுப் பேசியவர் பெயரும் அவர் பேசிய விவரமும்கூட பதிவாகியுள்ளது. இருமியது தும்மியதை எப்படி விட்டு விட்டார்கள் என்று சொல்லக்கூடிய அளவுக்கு எல்லாமே பதிவாகியுள்ளது. அதன் பெயர் Constituent Assembly Debates. அப்படிப்பட்ட தெள்ளத்தெளிவான நடவடிக்கைக் குறிப்பில், ஆகஸ்ட் 14ஆம் தேதி என்ன நடந்தது என்பதும் முழுமையாகப் பதிவாகியுள்ளது.
- இரவு 11 மணிக்கு ராஜேந்திர பிரசாத் தலைமையில் கூட்டம் துவங்குகிறது.
- சுசேதா கிருபளானி வந்தே மாதரம் பாடலின் முதல் வரிகளைப் பாடுகிறார்.
- தலைவர் உரையாற்றுகிறார்.
- விடுதலைப் போரில் உயிரிழந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தப்படுகிறது.
- நேரு கொண்டு வந்த தீர்மானத்தை முன்வைப்பார் என்று தலைவர் அறிவிக்கிறார்.
- tryst with destiny என்கிற வரலாற்றுச் சிறப்புமிக்க உரையை ஆற்றுகிறார் நேரு.
- At this solemn moment when the people of India, through suffering and sacrifice, have secured freedom, I…………………………… I a member of the Constituent Assembly of India, do dedicate myself in all humility to the service of India and her people to the end that this ancient -land attain her rightful place in the world and make her full and willing contribution to the promotion of world peace and the welfare of mankind; என்கிற தீர்மானத்தை முன்மொழிகிறார் நேரு.
- சவுத்ரி காலிக்உஸ்ஸமான் அதை வரவேற்றுப் பேசுகிறார்.
- டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் உரையாற்றுகிறார்.
- எச்.வி. காமத் தான் முன்வைத்த திருத்தங்கள் தேவையில்லை என்று சொல்கிறார்.
- தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படுகிறது.
- ஒருமனதாக ஏற்கப்படுகிறது.
- 12 மணி அடித்ததும் “At this solemn moment when the people of India, through suffering and sacrifice, have secured freedom, I………. a member of the Constituent Assembly of India, do dedicate myself in all humility to the service of India and her people to the end that this ancient land attain her rightful and honoured place in the world and make her full and willing contribution to the promotion of world peace and the welfare mankind.” என உறுதிமொழி எடுக்கப்படுகிறது.
- அரசியல் நிர்ணய சபை அதிகாரத்தை எடுத்துக் கொண்டது என்றும், மவுன்ட்பேட்டன் கவர்னர் ஜெனரலாகத் தொடர வேண்டும் என்றும் மவுன்ட் பேட்டனுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கிறார் தலைவர்.
- சரோஜினி நாயுடுவின் சார்பாக திருமதி ஹன்ஸா மேத்தா தேசியக் கொடியை வழங்குகிறார். சிறு உரையாற்றுகிறார்.
- தேசியப் பாடல்கள் பாடப்படுகின்றன - ஸாரே ஜஹான் சே அச்சாவின் முதல் சில அடிகள், ஜன கண மன பாடலின் முதல் சில அடிகள் (அப்போது தேசிய கீதம் கிடையாது என்பது கவனிக்கத்தக்கது.)
- அவை மறுநாளுக்காக ஒத்தி வைக்கப்படுகிறது. (மறுநாள் காலை 10 மணிக்குத்தான் அவை மீண்டும் கூடுகிறது. )
ஆக, இதில் எந்த இடத்திலும் ஆதீனமோ செங்கோலோ இடம்பெறவே இல்லை. சரிபார்க்க விரும்புவோர் constitutionofindia . net தளத்தில் பார்க்கலாம்.
ஆக, ஆட்சி அதிகார மாற்றத்தின் அடையாளம் செங்கோல் என்பதெல்லாம் மகா உருட்டு.
ஏன், எதற்காக இந்த உருட்டு?
இதுதான் முக்கியமாக கவனிக்க வேண்டிய செய்தி.
எல்லா மாநிலங்களிலும் மோடிக்கு ஆதரவு இருக்கும்போது தமிழ் நாடு மட்டும் மோடியை முற்றிலும் புறக்கணிப்பது ஏன், தமிழ் சமூக ஊடகங்களில் மோடி கேலி செய்யப்படுவது ஏன் என்று ஆராய்வதற்கெனவே ஒரு குழு உருவாக்கப்பட்டது, ஊடகங்களின் செய்திகள் அலசப்பட்டன என்பது உள்வட்டாரச் செய்திகள். தமிழையோ தமிழர்களையோ திட்டிக் கொண்டிருந்தால் இன்னும் அசிங்கப்படத்தான் சாத்தியம் என்று அந்தக் குழு சொல்லியிருக்க வேண்டும்.
2024 தேர்தலில் தமிழ் நாட்டில் ஐந்து இடங்களையாவது பிடித்துவிட வேண்டும் என்பது பாஜக தலைமையின் திட்டம். காசி தமிழ் சங்கமம் என்ற நாடகம் நடந்ததும், அடுத்து சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நடந்ததும் இதனை முன்னிட்டுத்தான். தேர்தலுக்குள் இன்னும் சில சங்கமங்கள் நடக்கலாம்.
மோடி எங்கே பேசினாலும் தமிழ் பழமையான மொழி என்று தவறாமல் பேசுவதும் இதனை ஒட்டித்தான். பப்புவா நியூ கினியில் திருக்குறள் மொழியாக்க நூலை வெளியிடுவதும் அதற்குத்தான். இளையராஜாவை விட்டு மோடியைப் புகழ வைப்பதும் அதற்குத்தான். இளையராஜாவுக்கு மாநிலங்களவையில் பதவி கொடுத்ததும் அதற்குத்தான். சோழர்களைப் போற்றிப் பேசுவதும், ராஜராஜ சோழனை தூக்கிப் பிடிப்பதும் அதற்குத்தான். அதன் இன்னொரு வடிவம்தான் இந்த செங்கோலும். இன்னும் வரக்கூடிய நாட்களில் மோடி அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருவார். தமிழ்ப் புகழ் பாடுவார். தமிழ் மக்கள் என் சகோதரர்கள் என்பார். ஆனாலும் எல்லாவற்றிலும் தமிழுடன் மதத்தையும் இணைத்தே அரசியல் செய்வார். தமிழ்ப் பண்பாடு என்பதே இந்துப் பண்பாடு மட்டுமே என்று முன்வைக்க முனைவார்கள். அதற்கான ஒத்திகைகள்தான் இவை என்பதே என் உறுதியான கருத்து.