Saturday, August 9, 2025

இன்னும் நாலு ஜட்ஜுங்கள சேர்த்துக்குங்கய்யா . . .

 


இப்படி ஒரு போர்ட் விரைவில் எழுதப்பட்டால் அதில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை. 

ஆமாம். நம்ம ஜட்ஜய்யா ஒருத்தரு இந்த வேலையைத்தான் நேத்து செஞ்சாரு. 


ஐய்யா, தலைமை நீதிபதி ஐய்யாங்களா, தமிழ்நாட்டில இந்த மாதிரி உதிரி கட்சிங்க நெறய இருக்கு! அதுக்குள்ள சண்டைங்களும் நெறய இருக்கு, அதனால டெல்லில சொல்லி கூட இன்னொரு நாலு ஜட்ஜுங்கள வேலைக்கு சேத்துக்குங்க. அவங்க பஞ்சாயத்துக்களை பாத்துக்கட்டும். இல்லாட்டி கேஸ் கட்டுங்க தேங்கிப் போய் கோர்ட்டுல இடம் பத்தாம போயிடப் போகுது. 

Thursday, August 7, 2025

இனிமே பத்ரி சேஷாத்ரி பேரு ????

 


கிழக்கு பதிப்பக சங்கி பத்ரி சேஷாத்ரிக்கு எதுக்கு இப்போ பாயசம் என்ற கேள்வி வரலாம்.

அரசுத் திட்டங்களில் முதல்வர் பெயர் இருக்கக்கூடாது என்று சென்னை உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்த சமயத்தில் 01.08.2025 அன்று தெனாவெட்டாக " பாபர் மசூதியை இடிக்கும் போது அமெரிக்காவில் இருந்தேன். மனதுக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது" என்று சொல்லியிருந்த அந்த சங்கி ஒரு பதிவு போட்டு "எல்லாம் வல்ல" வில்சன் உச்ச நீதிமன்றம் போவாரா என்று வேறு கேட்டிருந்தார். 

நேற்று தீர்ப்பு வந்ததும் அப்படியே பல்டி அடித்து வில்சனுக்கு பாராட்டு வேறு சொல்கிறார்.


இவருக்கு பல்டி சேஷாத்ரி என்ற பெயர் கன கச்சிதமாக பொருந்துகிறது அல்லவா!

Wednesday, August 6, 2025

இதுதான் நெசம் முட்டாள் சங்கிகளே

 

இந்த கார்ட்டூனை நினைவு படுத்த வேண்டிய அவசியத்தை முட்டாள் சங்கிகள் உருவாக்கி விட்டார்கள்.

ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தியது நான்தான் என்று  27 முறை ட்ரம்ப் சொல்லிவிட்டார். இந்தியப் பொருளாதாரத்தை செத்துப்போன பொருளாதாரம் என்று சொல்லி ஒரு வாரமாகிவிட்டது. ரஷ்யாவோடு எந்த வியாபாரமும் செய்யக்கூடாது என்று மிரட்டி மூன்று நாளாகி விட்டது. ஆனால் மோடியோ வாய் திறக்கவே இல்லை.

இந்த சூழலில் இப்படி ஒரு படத்தை சங்கிகள் பரப்புகிறார்கள்.


அதனால்தான் சொல்ல வேண்டியுள்ளது. அடேய் முட்டாள் சங்கிகளே, உங்க மோடி பில்டிங், பேஸ்மெண்ட் எல்லாம் பலவீனமாக இருக்கிற. மேல் மண்டையில ஒன்னும் இல்லாத  வெறும் டம்மி பீஸ்.  ட்ரம்பைப் பார்த்து நடுங்குபவர் என்பதுதான் யதார்த்தம்.

அதனால் இந்த பில்ட் அப் வேலையை எல்லாம் நிறுத்திக் கொள்ளுங்கள். 

Tuesday, August 5, 2025

நன்றி சொல்லும் நேரம் இது . . .

 



பணி ஓய்வு நாள் வந்து அதன் பின்னும் நான்கு நாட்கள் கடந்து விட்டது. 31.007.2025 அன்று பணி ஓய்வு. அதன் பின்பு 02.08.2025, 03.08.2025 ஆகிய நாட்கள் கோட்டச்சங்கத்தின் 38 வது பொது மாநாடு. கொஞ்சம் ஓய்விற்குப் பிறகு இன்றுதான் வலைப்பக்கத்திற்கு வர அவகாசம் கிடைத்தது. 

வேறு எதுவும் இங்கே எழுதப் போவதில்லை.

நன்றி நவில்வது மட்டுமே நோக்கம்.

வாட்ஸப் மூலமாக,
முகநூல் மூலமாக,
தொலை பேசி மூலமாக
வாழ்த்து தெரிவித்த
நேரடியாக இருக்கைக்கும் வீட்டிற்கும்
பின்பு அலுவலகத்தில் நடந்த,
சங்கம் சார்பாக மண்டபத்தில் நடந்த
பணி நிறைவு பாராட்டு விழாக்களில் கலந்து கொண்ட, பங்கேற்று வாழ்த்திய
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலைவர்கள், தோழர்கள்
எல்.ஐ.சி அதிகாரிகள், ஊழியர்கள்,
தோழமைச்சங்கத் தோழர்கள், பொறுப்பாளர்கள்,

நண்பர்கள், உறவினர்கள்,

பணி நிறைவு பாராட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்திய வேலூர் கோட்டச்சங்கப் பொறுப்பாளர்கள், அவர்களை வழிநடத்திய இளம் தலைவர்கள் தோழர் எஸ்.பழனிராஜ், பொதுச்செயலாளர், தோழர் பி.எஸ்.பாலாஜி, தலைவர் ஆகியோருக்கு வார்த்தைகளால் எப்படி நன்றி தெரிவிப்பேன்! இனி வரும் காலமும் நான் எப்போதும் போல உங்களுடன் இணைந்தே செயல்படுவேன் என்பதைத் தவிர!!

அனைத்தையும் தாண்டி  திருமணமான நாள் முதற்கொண்டு இன்றைய நாள் வரை என் பயணத்தில் துணை நின்று மன ரீதியாக, பொருளாதார ரீதியாக எனக்கு கை கொடுத்தவர். என்னுடன் நேரடியாக மோத முடியாத கோழைகளால் மன வலியும் காயங்களும் பெற்றவர்.  அவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டு எனக்கு பக்க பலமாக இருந்த அவரின்றி நான் இல்லை. எங்கள் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்து தாயுமானவனாக திகழும் என் மகன். இவர்கள் இருவருக்கும் எந்நாளும் நான் என்ன நன்றி சொல்ல முடியும்! என் அன்பை பகிர்ந்து கொள்வதைத் தவிர!

எல்.ஐ.சி பணியிலிருந்துதான் ஓய்வு. மக்களுக்கான பொது வாழ்க்கையில் இருந்து அல்ல என்று பணி நிறைவு பாராடு விழாவில் வாழ்த்திய பல தலைவர்கள், தோழர்கள் கூறினார்கள். அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வண்ணம் செயல்படுவதுதான் அவர்களுக்கு நான் செலுத்தும் உண்மையான நன்றியாக இருக்கும். 

என அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி சொல்லி நிறைவு செய்கிறேன்.

 


Thursday, July 31, 2025

விடை பெறும் வேளை இது



வாழ்க்கைப் பயணத்தில் இன்று ஒரு முக்கியமான நாள். முப்பத்தி ஒன்பது வருடம், மூன்றரை வருடங்கள் பணி செய்து இன்று எல்.ஐ.சி நிறுவனப் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறேன். 

16.07.1986 அன்று பயிற்சி உதவியாளராக பணியில் சேர்ந்து உயர் நிலை உதவியாளராக ஓய்வு பெறுகிறேன். சங்கப்பணி என்ற திசை வழியில் பயணம் அமைந்ததால் பதவி உயர்வுகளை நாடவில்லை. திருமணம் ஆன போது நான் பணியாற்றிக் கொண்டிருந்த நெய்வேலிக்கு என்னால்  அவரால் மாறுதல் பெற இயலவில்லை. இருவரும் ஒன்றாக பணியாற்ற வாய்ப்பு இருந்த வேலூருக்கு என்னால் உதவியாளராக மாறுதல் பெற இயலாது. உயர்நிலை உதவியாளராக பதவி உயர்வு பெற்றால்தான் சாத்தியம் என்பதால் அந்த பதவி உயர்வு பெற்றேன். என் மனைவி ஏன் நெய்வேலி வர வேண்டும்? நான் ஏன் அவர் பணியாற்றிய கும்பகோணத்திற்கு சென்றிருக்கக் கூடாது> இந்த சிந்தனை நீண்ட காலத்திற்கு பிறகே வந்தது. ஆணாதிக்க் சிந்தனையின் வெளிப்பாடுதான் மனைவியை மாறுதல் நாட வைத்தது என சுய விமர்சனமாக ஏற்றுக் கொள்கிறேன்.

எல்.ஐ.சி பணி மூலம் என்ன பெற்றேன்?

மிக முக்கியமானது சமூக அந்தஸ்து. கல்லூரி தேர்வு முடிவு வந்த ஆறாவது மாதத்திலேயே வேலையில் சேர்ந்து விட்டேன். பார்வைகளே சொன்னது வித்தியாசத்தை. வேலைக்கு செல்பவன் என்று கிடைக்கும் மரியாதையை விட எல்.ஐ.சி வேலை எனும் போது ஒரு படி மேலேதான்.

பொருளாதார தன்னிறைவு  என்பது பொருளாதார வளம் என்ற அளவிற்கு முன்னேற்றம் கிடைத்தது. ஓய்வு பெற்ற பிறகும் வாழ்க்கையை எடுத்துச் செல்லும் வாய்ப்பை, நம்பிக்கையை எல்.ஐ.சி அளித்துள்ளது.

முன்பெல்லாம் பல நிறுவனங்களில் வாடிக்கையாளர்கள் பற்றி மகாத்மா காந்தி சொன்னதை எழுதி வைத்திருப்பார்கள். அதை வாசகமாக பார்க்காமல் வாழ்க்கை முறையாக பார்க்கும் ஊழியர்களைக் கொண்ட நிறுவனம் எல்.ஐ.சி. இங்கே கற்றுக் கொண்ட பொறுப்புணர்வு வாழ்க்கைக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.

எல்.ஐ.சி எனக்குக் கொடுத்த மிகப் பெரிய வாய்ப்பு எல்.ஐ.சி க்கு முன்பே தோன்றி எல்.ஐ.சி தோன்ற காரணமாக இருந்த எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம். 

எல்.ஐ.சி பற்றி நான் முன்னர் சொன்னது அனைத்தின் பின்னணியிலும் எங்கள் ஏ.ஐ.ஐ.இ.ஏ உள்ளது. அதைப் பற்றி பிறகு பார்ப்போம். இனி அவசரம் அவசரமாக ஓடி பத்து மணிக்கு ரேகை வைக்க அவசியம் கிடையாதல்லவா!

இன்று நான் பெற்ற எல்லாமே பொருளாதார வளம், ஞாஅம், மிகப் பெரும் அனுபவம், புரிதல், தோழர்கள் பட்டாளம் என எல்லாமே எங்கள் சங்கம் தந்ததுதான். எந்த சவாலாக இருந்தாலும் சந்திக்கும் உறுதியும் கூட.

02.05.2025 அன்று நடந்த மோசமான சாலை விபத்தில் இரண்டு இடங்களில் எலும்பு  முறிந்து அறுவை சிகிச்சைநடந்த வேளையில் இந்த நாளில் பணியில் மீண்டும் சேர்ந்து ஓய்வு பெறுவேனா அல்லது ஸ்டெர்ச்சர் அல்லது வீக் சேரில் கடைசி நாள் மட்டும் வந்து செல்வேனா என்ற கேள்வி இருந்தது. 

கடந்த மாதமே பணியில் இணைய முடிந்ததென்றால் அதற்கு சங்கம் ஊட்டி வளர்த்த உறுதிதான் காரணம்.

இரண்டாவது இன்னிங்ஸில் என்ன செய்யப் போகிறேன்.

களத்திற்குச் செல்ல உடல்நிலை உடனடியாக அனுமதிக்காது. அதனால் நிலுவையில் உள்ள எழுத்துப் பணிகளுக்கு முன்னுரிமை.

இங்கே வந்து போகும் நேரமும் அதிகமாகும், இயல்பாகவே . . .


Tuesday, July 29, 2025

எங்கள் மனதில் தேசம். உங்கள் மனதில் ?????

 எங்கள் மனதில் தேசம் உள்ளது .

உங்கள் மனதில் தேர்தல் உள்ளது .



- ஆப்பரேசன் சிந்தூர் குறித்த நாடாளுமன்ற விவாதத்தில் எனது உரை
அவைத் தலைவர் அவர்களே உங்களுக்கு எனது அன்பான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
பகல்ஹாம் தாக்குதலுக்கு எதிராக தேசமே ஒன்றுபட்டு நிற்கிறது. வீழ்ந்த ஒவ்வொரு உயிரும் ஏற்படுத்திய வலியும் வேதனையும் ரணமாய் நிற்கிறது.
அந்த தாக்குதலுக்கு எதிராக இந்தியா தொடுத்த எதிர்வினை அதுசார்ந்த விவாதத்தை மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு இந்த அவையிலே நடத்துவதற்கு எதிர்கட்சிகளாகிய நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். இந்த முயற்சி இன்றைக்கு நேற்றைக்கு அல்ல , கடந்த இரண்டு மாதங்களாக இந்த முயற்சியை எதிர்கட்சிகள் பொறுப்புணர்ச்சியோடு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு மாதங்களாகவும் பொறுப்புணர்ச்சி என்றால் என்ன என்ற விலை கேட்பதைப் போல ஆளுங்கட்சித் தரப்பு தொடர்ந்து வினையாற்றிக் கொண்டிருக்கிறது. அவற்றினுடைய ஒரு சான்று தான் இந்த அவையிலே இப்போதும் நடந்திருக்கிறது என்பதை முதலில் நான் பதிவு செய்கிறேன்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் இந்த விவாதத்தை துவக்கி வைத்துப் பேசினார். 2016 ஆம் ஆண்டு உரி தாக்குதல் நடந்த போது ஆளுங்கட்சி என்ன சொன்னதோ , 2019 ஆம் ஆண்டு பதன்கோடு தாக்குதல் நடந்த பின்னணியில் ஆளுங்கட்சி என்ன சொன்னதோ அதையே தான் இன்றைக்கு மீண்டும் இவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
நீங்கள் பேசிய இவ்வளவிற்கும் பிறகு இந்தத் தீவிரவாதத் தாக்குதல் பகல்ஹாமில் எப்படி நடந்தது ? தாக்குதல் துவங்கி ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு தான் உதவியோ , தகவலோ அரசுக்கு கிட்டியிருக்கிறது என்ற செய்தி எவ்வளவு பெரிய வெட்கக்கேடானது . இது மூன்றடுக்கு பாதுகாப்பின் தோல்வி. இராணுவத்தின் தோல்வி , CRPF யினுடைய தோல்வி , ஜம்மு - காஷ்மீர் காவல்துறையினுடைய தோல்வி என மூன்றினுடைய தோல்வி. இதற்கு யார் பொறுப்பேற்கப் போவது ? அதிகாரிகளா ? அமைச்சரா ? ஒரே தேசம் ஒரே தலைவர் என்று நீங்கள் சொல்கிற மாண்புமிகு பிரதமர் அவர்கள் இதற்கு பொறுப்பேற்கப் போகிறாரா ? யார் பொறுப்பேற்கப் போகிறார்கள் ?
நீங்கள் உங்கள் ஆட்சிக்கு முன்புவரை நடந்த எல்லா சம்பவங்களுக்கும் நேரு துவங்கி மன்மோகன்சிங் வரை பொறுப்பேற்க வேண்டும் என சொல்லுவீர்களே , இப்போது நீங்கள் யாரைக் கையைக் காட்டப் போகிறீர்கள் என்ற கேள்வியை நாங்கள் எழுப்ப விரும்புகிறோம் . இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்த போது சவுதி அரேபியாவிலே இருந்த நம்முடைய மாண்புமிகு பிரதமர் அவர்கள் தனது பயணத் திட்டத்தைக் குறுக்கிக் கொண்டு உடனடியாகப் புறப்பட்டார்.
நேரடியாக அவர் பகல்ஹாமிற்கு போகப் போகிறார் என்று நாடே எதிர்பார்த்தது. நேரடியாக காஷ்மீருக்குப் போகப் போகிறார் என்று நாடே எதிர்பார்த்தது. ஆனால் அவர் நேரடியாக பீஹாரினுடைய தேர்தல் பேரணிக்குப் போனார். எங்கள் இதயங்களில் தேசம் இருக்கிறது. உங்கள் இதயங்களில் தேர்தல் மட்டும் தான் இருக்கிறது என்பதை இந்த நாடு தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.
அதுமட்டுமல்ல சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரைக் கூட்டுங்கள் என்று மீண்டும் மீண்டும் நாங்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். பிரதமர் என்ன சொன்னார் ? ஜனநாயகத்தின் கோவில் இந்த நாடாளுமன்றம் என்று சொன்னார். சரி கோவிலுக்கு வாங்க என நாங்கள் கூப்பிடுகிறோம். கோவிலுக்கு வர இவ்வளவு பயப்படுகிற ஒரு பிரதமரை நீங்கள் கொண்டிருப்பது சரியா ? நியாயமா ? ஏன் அதுவும் சிறப்பு வழிபாட்டிற்கு வாருங்கள் , சிறப்பு கூட்டத் தொடருக்கு வாருங்கள் என்று மீண்டும் மீண்டும் கேட்கிறோம்.
இங்கே வராமல் பீஹாருக்குப் போய் பிரதமர் பேசுகிறார் “ கற்பனை செய்ய முடியாத தாக்குதலை நாங்கள் நடத்துவோம்” என்றார். கற்பனை செய்ய முடியாத தாக்குதலை நடத்துவார் என்று நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். நடத்தினார் , யார் நடத்தினார் ? அமெரிக்க அதிபர் டிரம்ப் நடத்தினார் கற்பனையே செய்ய முடியாத ஒரு தாக்குதலை. இந்தப் பிரச்சனையில் அதிகமாகத் தோல்வி அடைந்திருப்பது உள்துறை அமைச்சகமா ? அல்லது வெளியுறவுத் துறை அமைச்சகமா? என்ற விவாதத்தை இந்த அவை நடத்திக் கொண்டிருப்பது எதிர்கட்சிகளாகிய நாங்கள்.
சர்வதேச நிதியம் (IMF) பாகிஸ்தானுக்கு கடன் கொடுப்பதை இந்தியாவால் தடுக்க முடியவில்லை. அதன் நிர்வாகக் குழுவில் 25 நாடுகள் இருக்கிறது . அதில் ஒரு நாடு கூட இந்தியாவிற்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை. உலக அரங்கில் இந்தியாவை தனிமைப்படுத்தி வைத்திருக்கிறீர்கள் நீங்கள் என்பதை இங்கே நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அதேபோல பாலஸ்தீன பிரச்சனையில் ஐநா தீர்மானத்தில் இருந்து விலகியது, ஈரான் மீதான தாக்குதல் விவகாரத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டறிக்கையில் கையெழுத்துப் போடாதது, ட்ரம்ப்பினுடைய பேச்சுக்கு எதிராக எந்த எதிர்வினையும் ஆற்றாதது , வர்றீங்க மூலம் சர்வதேச அரங்கில் இந்தியாவை ஒரு கோழை நாடாக கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறீர்கள் என்பதை நாங்கள் இங்கே குற்றஞ்சாட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.
எனக்கு முன்னாள் பேசிய மரியாதைக்குரிய முன்னாள் அமைச்சர் அனுராக் தாக்கூர் அவர்கள் குறிப்பிட்டதைப் போல இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்குச் சொல்வதற்கு அனைத்துக் கட்சிக் முழுசா நீங்கள் அனுப்பினீர்கள். எதிர்கட்சிகளெல்லாம் அதில் பங்கெடுத்தார்கள். என்ன விசித்திரம் தெரியுமா ? உங்களால் கடந்த காலங்களில் யாரெல்லாம் தேச துரோகிகள் என்று சொன்னீர்களோ , அந்த தேசத்துரோகிகளில் பலர் எதிர்க்கட்சி குழுவில் பங்கெடுத்தோம். ஏனென்றால் எங்களுக்கு முக்கியம் தேசம் தான். அதுமட்டுமல்ல ஒவ்வொரு குழுவிலும் ஒன்று அல்லது இரண்டு இஸ்லாமிய எம்.பிக்கள் பங்கெடுத்தார்கள். பாஜக ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு இஸ்லாமிய எம்பிகளுக்கான பிரதிநிதித்துவத்தை கொடுத்த முதல் விசயம் இது தான் . அதைக் கொடுத்தவர்கள் எதிர்க்கட்சிகளாகிய நாங்கள்.

நேற்றைய தினம் நம்முடைய மரியாதைக்குரிய பிரதமர் தமிழ்நாட்டிற்கு வந்து சோழர்களுடைய பேரரசை நினைவுபடுத்தி சோழர்கள் நடத்திய போரையும் ஆபரேஷன் சிந்தூரையும் இணைத்துப் பேசியிருக்கிறார். நான் ஒரு வரலாற்று மாணவனாக, வரலாற்றை அறிந்த எழுத்தாளன் என்ற முறையில் சொல்கிறேன் , இந்தியாவில் இருந்த ஒரு பேரரசு கடல்கடந்த வெற்றியைப் பெற்றது என்றால் அது ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனின் சோழப் பேரரசு மட்டும்தான்.

அந்த வெற்றிக்கு என்ன காரணம் தெரியுமா ? ராஜ ராஜனோ, ராஜேந்திர சோழனோ தான் நடத்திய எல்லா போரையும், தான் ஆரம்பித்த எல்லா போரையும் அவன் தான் முடித்தானே தவிர பக்கத்து நாட்டு மன்னன் முடித்து வைக்கவில்லை. '

மோடி தொடங்கிய ஆபரேஷன் சிந்தூரை முடித்து வைத்தது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் என்பதை 25 முறை சொன்னார். ராஜராஜன் ஆரம்பித்த போரை பக்கத்து நாட்டு மன்னன் முடித்ததாக சொல்லியிருந்தால், முதலில் அவன் கதையை முடித்திருப்பான் ராஜ ராஜனும் , ராஜேந்திரச் சோழனும்.

எனவே இன்றைக்கும் கூட இந்த அவையில் நமது பாதுகாப்புத்துறை அமைச்சர் விவாதத்தை ஆரம்பித்து பேசினார் . ராமன் எப்படி இலங்கையின் மீது படையெடுத்து ராவணனைக் கொன்றானோ அதேபோல இந்தப் படையெடுப்பை பிரதமர் நடத்தியிருக்கிறார் என்று சொன்னார். இன்னொரு அமைச்சர் எழுந்து சொல்கிறார் , என்ன சொன்னார் ? சிசுபாலனுடைய தலையை வெட்டுவதற்கு சுதர்சன சக்கரத்தை கிருஷ்ணன் பயன்படுத்தியதைப் போல பிரதமர் படைகளைப் பயன்படுத்தினார் என்று சொல்கிறார். "ராமன், கிருஷ்ணன் போன்ற கடவுள்களை எல்லாம் உங்கள் தோல்விகளை மறைக்க இவ்வளவு மலினமாக பயன்படுத்துவது நியாயமா? ஆத்திகவாதிகளின் மனம் புண்படாதா? இந்துக்களின் மனம் புண்படாதா? என்பதை மிக வேதனையோடு நாங்கள் இங்கு கேட்கிறோம்.

மாண்புமிகு பாதுகாப்புத்துறை அமைச்சர் தனது பேச்சில் ஒருமுறை கூட மறந்துகூட கர்னல் சோஃபியா குரேஷிக்கு ஏற்பட்ட அவமதிப்பை , மத்திய பிரதேசத்தின் உங்கள் எம்பி விஜய் ஷா அவமரியாதையாக பேசியதைக் கண்டித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஏன் ?

அதேபோல பஹல்காம் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்ற தனது உயிரைக் கொடுத்தான் குதிரை ஓட்டியான அதில் ஷா. அதில் ஷாவின் வீரத்தைப் பாராட்டி ஒரு வார்த்தை கூட நீங்கள் பேசவில்லை. ஒரு அதில் ஷா மட்டுமல்ல தீவிரவாதத்திற்கு எதிராக நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான அதில் ஷாக்கள் இருக்கிறார்கள் என உணர்த்தியது காஷ்மீர் மக்கள் . அந்த காஷ்மீர் மக்களின் ஒருமைப்பாட்டை அங்கீகரித்து ஒருவார்த்தை நீங்கள் பேசவில்லை .

வேதனையோடு நாங்கள் சொல்கிறோம் . மதரீதியான வேறுபாடுகளை பயங்கரவாதத்தை வைத்து அதிகரிக்க முடியாது என்பதுதான் இந்தியா சொல்கிற செய்தி. அது தான் இந்தியா . அந்த இந்தியாவை உங்களால் ஒருபோதும் பிளக்கவோ, வெறுக்கவோ முடியாது .
நாங்கள் வெல்வோம் !

மக்களவையில் மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் முழங்கியது.

மோடி எனும் தெய்வக்குழந்தையையா?

 


ஏன் மேலே உள்ள படம்?

கீழேயுள்ள படத்தை பாருங்கள்

இப்படி கர்ப்பகிரகத்தில் புகைப்படம் எடுக்கலாமா?
ஆகம விதி அனுமதிக்கிறதா?
பல கோவில்கள் போன் எடுத்துச் செல்வதையே தடை செய்துள்ள போது இவர் மட்டும் என்ன ஸ்பெஷல்?

என்றெல்லாம் சிலர் கேட்கிறார்கள். அந்த கேள்வி நியாயம் போல கூட தோன்றலாம்.

அவர்களுக்கெல்லாம் ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

"ஒன்பது கிரகங்களும் உச்சத்தில் உள்ள ஒருவனால் பேட்டரி இல்லாவிடில் கூட அலைபேசி பேச முடியும்"  என்பது போல தாய் தந்தை இல்லாமல் தெய்வக்குழந்தையாக அவதாரம் எடுத்த ஒருவருக்கு எங்கும் எந்த விதியும் பொருந்தாது. 


Sunday, July 27, 2025

பாவம்யா மோடியின் கருப்புப்பூனை!

 


நேற்று மதியம் சேனல்களை மாற்றி வருகையில் ஏதோ ஒரு சேனலில் மோடி கங்கை கொண்ட சோழபுரம் கோயில் கருவறையில் தியான நாடகம் நடத்தியதை (இது பற்றி தனியாக எழுத வேண்டும்) காண்பித்துக் கொண்டிருந்தது. இன்னொரு சேனலோ இளைய ராஜாவின் பாடலை கண்ணை மூடி ரசிப்பது போல சீன் போட்டு  தப்புத் தாளம் போட்டுக் கொண்டிருந்த கொடுமையை காண்பித்தது.

அப்போது பின்னால் நின்றிருந்த கருப்புப் பூனையையும் காண்பித்தார்கள்.

உண்மையிலேயே அவர் பாவம்!




மோடி செய்யும் கோணங்கித்தனம், சேஷ்டைகள், கோமாளித்தனங்கள் ஆகியவற்றைப் பார்த்தாலும் அவர் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். தலையில் அடித்துக் கொள்ள முடியாது. சிரிக்க முடியாது. தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொள்வதை மறைக்கத்தான் கருப்புக் கண்ணாடி அணிந்துள்ளார் போலும்!

Saturday, July 26, 2025

மோடி வஞ்சனை செய்யலீங்க! ஆமாங்க

 


சமூக செயற்பாட்டாளர் தோழர் அ.முத்துக்கிருஷ்ணன் பகிர்ந்து கொண்ட பதிவையும் காணொளியையும் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

இந்திரா காந்தி 1966-1977 மற்றும் 1980-1984 காலகட்டத்தில் இந்தியாவின் பிரதமராக இருந்தார். இந்த காலத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தொடங்கப்பட்டு, ஆரம்பகட்ட வளர்ச்சியில் இருந்தது. 1983இல் இந்தியாவின் முதல் விண்வெளி வீரரான ராகேஷ் ஷர்மா, சோவியத் யூனியனின் சோயூஸ் T-11 விண்கலம் மூலம் விண்வெளிக்கு பயணித்தார். இது இந்திய விண்வெளி வரலாற்றில் ஒரு மைல்கல்.

ராகேஷ் ஷர்மா விண்ணில் இருந்தபோது, இந்திரா காந்தி அவருடன் தொலைபேசி மூலம் உரையாடினார். இந்த உரையாடல் இந்தியாவின் விண்வெளி திட்டத்தின் முக்கியத்துவத்தையும், தேசிய பெருமையையும் வெளிப்படுத்தியது. இந்திரா காந்தி, ராகேஷ் ஷர்மாவிடம், "விண்ணில் இருந்து இந்தியா எப்படி தெரிகிறது?" என்று கேட்டார். அதற்கு அவர், "சாரே ஜஹான் சே அச்சா" (எல்லா உலகங்களிலும் மிகச் சிறந்தது) என்று பதிலளித்தார்.
மோடி விண்வெளியில் இருக்கும் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் உரையாடு காணொளியை உற்சாகமாக பார்க்க தொடங்கினேன், அதில் மோடி நீ உன்னுடன் கொண்டு சென்ற கேரட் ஹல்வாவை சாப்பிட்டாயா என்று பேசியது, லேப்டாப்பை மூடி வைத்து விட்டு வேறு வேலைகள் நிறைய கிடக்கும் என்று இடத்தை காலி செய்தேன்.


ஏன் தோழர்! மோடி யார்? அவர் படிப்பு என்ன என்பதெல்லாம் நமக்கு தெரியாதா என்ன? அவர் என்ன நேருவா? இந்திராவா? மொரார்ஜியா இல்லை வி.பி.சிங்கா? அல்லது ஐ.கே.குஜ்ராலா? அவர் என்ன வச்சுகிட்டா வஞ்சனை செய்யறாரு! அவரது மூளை எனும் களிமண் சட்டியில் அவ்வளவுதாங்க இருக்கு!!!!!!

..

Friday, July 25, 2025

அன்புமணியால் சட்டம் ஒழுங்கு கெடும் - ஐயா

 


அன்பு மணி ஏதோ யாத்திரை போகிறாராம். அப்படி போனால் வட தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விடும் என்பதால் அதனை தடை செய்ய வேண்டும் என்று பெரிய ஐயா போலீஸில் புகார் சொல்லியுள்ளார். தன் பெயரை இனிஷியலைத் தவிர வேறெதற்கும் பயன்படுத்தக்கூடாது என்றும் சொல்லியுள்ளார்.

இந்த காமெடிச்சண்டை போரடிக்கத் தொடங்கி விட்டது.  "கண்கள் பணித்தது, இதயம் கனத்தது, கனி இனித்தது" சீனை சீக்கிரமாக அரங்கேற்றுங்கள்.

Thursday, July 24, 2025

இல்லாத நாட்டுக்கு போலி ......

 



மேற்கு ஆர்டிகா,

சபோர்கா,

பௌல்வியா,

லோடோனியா

ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளீர்களா? குறைந்த பட்சம் கேள்வியாவது பட்டுள்ளீர்களா?

நான் இன்றுதான் கேள்விப்பட்டேன், அந்த பெயர்களில் எந்த நாடும் கிடையாது என்றும் அந்த நாடுகளின் தூதர் என்றபெயரில் ஒருவன் போலி தூதரகம் நடத்தி மோசடி செய்து வந்துள்ளான் என்று இன்றுதான் கேள்விப்பட்டேன்.

உபி மாநிலம் காஸியாபாத்தில் ஒரு ஆடம்பர மாளிகையில் ஹர்ஷவர்த்தன் ஜெயின் என்பவன் தன்னை தூதராக காண்பித்துக் கொண்டு "வெளிநாடுகளில் வேலை, ஹவாலா ஆகிய மோசடிகளை செய்து வந்துள்ளான். நேற்று அவன் கைதாகியுள்ளான்.

பழைய போலிச்சாமியார் சந்திராசாமி, போபோர்ஸ் பீரங்கி தரகர் அட்னான் கஷோகி ஆகியோருக்கு நெருக்கமாக இருந்தவன் என்று சொல்லும் ஊடகங்கள் இப்போது அவனுக்கு பின்புலம் யார் என்றோ எத்தனை வருடங்களாக இந்த மோசடியை செய்து வருகிறான் என்பதை மட்டும் சொல்லவில்லை.

ஒரு வலைத்தளத்தில் நான் பார்த்த சில கமெண்டுகள் சுவாரஸ்யமானவை.

இந்த முறை குஜராத்தை மிஞ்சி விட்டது உ.பி.

உ.பி யில் புத்திசாலிகளும் கூட இருக்கிறார்கள் என்பது இப்போதுதான் தெரிகிறது.

காஸியாபாத் மக்கள் பெருமைப்பட வேண்டிய தருணம் இது. குஜ்ராத்திகள் கூட சிந்திக்காத மோசடி இது!

சரி, இதில் மொட்டைச்சாமியார் பங்கு என்ன?

Wednesday, July 23, 2025

இப்படித்தான் இருக்க வேண்டும் மரணம் . . .

 

மார்க்சிஸ்ட் கம்யூன்ஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் பெ.சண்முகம் அவர்களின் முகநூல் பதிவுகளை பகிர்ந்து கொண்டுள்ளேன். படங்களும் அவரது பக்கத்திலிர்ந்து எடுக்கப்பட்டவையே.

மெய் சிலிர்க்கிறது !!!















நானும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் கே.பாலகிருஷ்ணன்,உ.வாசுகி ஆகியோரும் மறைந்த மகத்தான தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் அவர்களுக்கு செவ்வணக்கம் செலுத்த ஆலப்புழா வந்து காத்திருக்கிறோம். நேற்று பிற்பகல் இரண்டு மணிக்கு திருவனந்தபுரம் நகரிலிருந்து அவருடைய உடலை சுமந்த ஊர்தி 24மணிநேரம் கடந்த பிறகும் இங்கு வந்து சேர முடியவில்லை. தூரம் என்னவோ 150 கிலோமீட்டர் தான் ஆனால், கேரள மாநில மக்கள் அனைவருமே தெருவில் குவிந்து விட்டார்கள் என்று சொல்லத் தக்க அளவுக்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை மக்கள் வெள்ளம்.

இறந்த பின்னும் மக்களை திரட்டும் வல்லமை கொண்டவராக தோழர் வி.எஸ் திகழ்கிறார் என்பதை கண்ணாரக் கண்டு வியந்து போய் இருக்கிறோம். நாங்கள் மட்டுமல்ல. நாடே வியந்து தான் பார்த்துக் கொண்டிருக்கிறது. எப்போது அவருடைய முகத்தை பார்ப்போம் என காத்திருக்கிறோம். மரணம் என்றால் அது இப்படி இருக்க வேண்டும்.

********************************************************************************

என்னுடைய வாழ்நாளில் நான் பார்த்த மிக நீண்ட தூர இறுதி ஊர்வலம் தோழர் வி.எஸ் அவர்களுடையதுதான். பல லட்சக்கணக்கான மக்கள் 150 கிலோமீட்டர் தூரமும் நின்று தாங்கள் நேசித்த தலைவருக்கு இறுதி மரியாதை செய்ய கொட்டுகிற மழையில் காத்திருந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். நான் பார்த்த மிகப்பெரும் மக்கள் திரள் பங்கெடுத்த இறுதி ஊர்வலமும் இதுதான். மக்களின் மனங்களை வென்ற மகத்தான தலைவராக தோழர் வி.எஸ் அவர்கள் வாழ்ந்து மறைந்திருக்கிறார். இல்லை, இல்லை மக்கள் மனங்களில் தொடர்ந்து வாழ்வார். அனைத்து தொலைக்காட்சிகளிலும் கடந்த மூன்று நாட்களாக தோழர் வி.எஸ் அவர்களின் இறுதி நிகழ்ச்சியை தவிர வேறு எந்த நிகழ்வுகளும் ஒளிபரப்பப்படவில்லை என்பது மற்றொரு சிறப்பு. அவரைப்போல் வாழ முயற்சிப்போம்

இடியாய் தாக்கிய இரட்டைத் துயரம்

 






 

நேற்று முன் தினம் 21.07.2025 அன்று ஒரு மோசமான நாள். உழைக்கும் வர்க்கம் இரு முக்கியமான தலைவர்களை இழந்த நாள்.

 

ஒருவர், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் துணைத்தலைவரும் சத்திஸ்கர் மாநிலத்தின் முக்கியமான மார்க்சிஸ்ட் கட்சித்தலைவருமான தோழர் பி.சன்யால்.

 

மற்றவர் கேரளாவின் முன்னாள் முதல்வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் இருந்த தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன்.

 

தோழர் சன்யால் பற்றி முதல் முறையாக அறிந்தது  எங்கள் சங்கத்தின் “இன்சூரன்ஸ் வொர்க்கர்” இதழின் மூலமாக.

 

1988 ல் பாரத் பந்த் நடைபெற்ற போது அவர் பணியாற்றிய ராய்ப்பூர் கோட்ட அலுவலகத்தில் போஃபோர்ஸ் ஊழல் வழக்கு தொடர்பாக வைக்கப்பட்டிருந்த  ஒரு கார்ட்டூனை அடித்து நொறுக்கிய இளைஞர் காங்கிரஸ் குண்டர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக போலீஸ் ராய்ப்பூர் கோட்டப் பொதுச்செயலாளராக இருந்த தோழர் சன்யாலை கைது செய்தது. ராய்ப்பூர் நகர தொழிற்சங்கத் தோழர்கள் கொதித்து போராடியதில் போலீஸ் பின்வாங்கி அவரை விடுவித்தது.

 

1994 ல் அகமதாபாத் நகரில் நடைபெற்ற 15 வது அகில இந்திய மாநாட்டில்தான் அவரை முதன் முதலில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் புதிதாக உருவாக்கப்பட்டிருந்த மத்திய மண்டலக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர். அனல் கக்கிய உரை. இடதுசாரி கருத்தியலை தெளிவாகவும் ஆணித்தரமாகவும் எடுத்துரைக்கும் உரை. சமரசமில்லாத, கொள்கைப் பற்று கொண்ட தலைவர்.

 

அதன் பிறகு ஒவ்வொரு மாநாட்டிலும் அவர் எப்போது பேசுவார் என்று ஆவலோடு எதிர்பார்க்க வைத்தது அந்த உரை.

 

அவருடன் பரிச்சயமானது நான் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் ஆன பிறகுதான்.  தோழமையின் கதகதப்பை அவரிடம் உணர முடியும்.

அந்த செயற்குழுவில் அடுத்த சில மாதங்களில் ராய்ப்பூரில் நடைபெற உள்ள அகில இந்திய மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவராக தோழர் ஹபீப் தன்வர் செயல்படவுள்ளார் என்று அவர் அறிவிக்கையில் பெரும் ஆரவாரம். அவர் மிகப் பெரிய கலை ஆளுமை, நாடக விற்பன்னர், திரை இயக்குனர்  என்பதெல்லாம் பிறகுதான் தெரிந்து கொண்டேன்.  

 

ராய்ப்பூர் மாநாடு ஒரு அற்புத அனுபவம்.  1500 அமரக்கூடிய அரங்கம் ராய்ப்பூரில் கிடையாது. அதனால் ஒரு தற்காலிக அரங்கை பிரம்மாண்டமாக உருவாக்கினார். உணவுக்கூடம், தற்காலிக கழிவறைகள் என எல்லாமே உருவானது. அந்த மாநாட்டுப் பேரணியை வாழ்த்த ரெய்ப்பூர் நகர உழைக்கும் மக்கள் முழுதுமே திரண்டிருந்தனர். மலைவாழ் மக்கள் பங்கேற்பு அதிகமான அளவில் இருந்தது.

 

தோழர் ஹபீப் தன்வர் இரண்டு நாடகங்களை நடத்தினார். திருப்பத்தூர் தூய இருதயக் கல்லூரி  குழுவினர் தோழர் ஹபீப் தன்வரின் “சரண்தாஸ் சோர்” என்ற நாடகத்தை வேலூரில் நடத்தினர். தமுஎகச பொறுப்பேற்று நடத்திய அந்த நாடகத்திற்கான  அழைப்பிதழை கொடுக்க வந்த தமுஎகச பொறுப்பாளரான ஆறுமுகம் பிள்ளை என்ற தோழரிடம்  நான்  ஒரிஜினல் வடிவத்தையே பார்த்துள்ளேன் என்று சொல்ல நாடகத்திற்கான அறிமுகத்தை  அளிக்கும் பொறுப்பை அளித்து விட்டார். நாடக இயக்குனரான தோழர் பார்த்திப ராஜாவோ, நீங்கள் ஹபீப் தன்வர் நடித்ததை பார்த்தீர்களா! அதிர்ஷ்டசாலி என்று வியந்து சொன்ன போதுதான் அவரின் அருமை புரிந்தது. அவரை மாநாட்டில் இணைத்த தோழர் சன்யாலின் அருமையும்.

 

அந்த மாநாட்டில் முதல் நாளில் உணவு பரிமாறுவதில் கொஞ்சம் குளறுபடி இருந்தது. அன்று இரவு அதைப் பற்றி தோழர் சன்யால் “உணவில் கொஞ்சம் சிக்கல் இருந்தமைக்கு வருத்தங்கள். இவர்கள்தான் சத்திஸ்கர் மாநிலத்திலேயே மிகப் பெரிய கேட்டரிங் நிறுவனம். அவர்களோடு விவாதித்தோம்” என்று சொல்லிக் கொண்டு இருக்கையில் “முடிவு என்ன?” என்று அப்போதைய பொதுச் செயலாளர் தோழர் என்.எம்.சுந்தரம் கேட்க “வெற்றிதான் நமது பாரம்பரியம் (Success is our tradition” என்று அவர் சட்டென்று பதிலளிக்க அரங்கம் கரவொலிகளால் அதிர்ந்தது.

 

2010 ல் குடியாத்தத்தில் நடைபெற்ற எங்கள்  கோட்ட மாநாட்டில் அவர் உரையாற்ற வேண்டும் என்று விரும்பி அழைத்த போது உடனடியாக ஒப்புக் கொண்டு பொது மாநாட்டிலும் பின்பு பிரதிநிதிகள் மாநாட்டிலும் மிகச் சிறப்பாக பேசினார்.

 

அவரை நான் செல்லமாக கடிந்து கொண்ட அனுபவமும் உண்டு. கான்பூரில் அகில இந்திய மாநாடு. ஊழியர்கள் பிரச்சினைகளை பேசும் வாய்ப்பு எங்கள் தென் மண்டலத்தால் கொடுக்கப்பட்டிருந்தது. நேரம் போதாமையால் இரவு உணவுக்குப் பின்பும் மாநாடு தொடர்ந்தது. இரவு 11 மணிக்கு குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த போது பேச அழைக்கப்பட்டேன். விடுமுறைப் பயணச் சலுகை விதிகளை எளிமையாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசுகையில் அந்த வருட ஆடிட் முடிந்த பின்புதான் எல்.டி.சி போன மகிழ்ச்சியையே ஒரு ஊழியரால் அனுபவிக்க முடியும் என்று நான் குறிப்பிட  தோழர் சன்யாலும் அப்போதைய வடக்கு மண்டல தலைவருமான தோழர் பகவான் ஸ்வரூப் சர்மாவும் மேஜையைத் தட்டி வெடிச் சிரிப்போடு ஆரவாரம் செய்ய என் பேச்சின் ஓட்டம் தடைபட மீண்டும் இயல்புக்கு வர ஒரு நிமிடம் ஆனது. அடுத்த நிமிடம் மணியும் அடிக்கப்பட்டு விட்டது. உங்களால்தான் என்னால் ஒழுங்காக பேச முடியவில்லை என்று அவரிடம் செல்லமாக கோபித்துக் கொண்டேன்.

 

அவர் என்னிடம் கடிந்து கொண்ட அனுபவமும் உண்டு. பாமக அராஜகக் கும்பலிடமிருந்து தப்பிய அனுபவத்தை ஏற்கனவே பகிர்ந்துள்ளேன். இந்த ஏப்ரலில் கூட மீள் பதிவு செய்துள்ளேன். தைலாபுரம் தோட்டத்திலிருந்து தப்பித்தவுடன் அந்த நிகழ்வை ஓரிரு வார்த்தைகளில் முகநூலில் பதிவு செய்திருந்தேன். “Take Care” என அங்கே பின்னூட்டம் இட்டு விட்டு உடனடியாக அழைக்கவும் செய்தார். பிறகு இன்னொரு இடத்தில் மரம் வெட்டப்பட்டதால் பயணம் தடைபட்டு விட்டது என்றும் ஒரு பதிவு எழுதியிருந்தேன்.அதிகாலை 3 மணிக்கு வீடடைந்து உறங்கியும் விட்டேன்.

 

காலை 7 மணிக்கு  தொலைபேசியில் அழைத்த தோழர் சன்யால், எத்தனை மணிக்கு வீட்டிற்கு வந்தேன் என்பதை கேட்டு விட்டு, “பிரச்சினையில் சிக்கிக் கொண்டதை பதிவு போட்ட நீங்கள், ஜாக்கிரதையாக வீடு திரும்பியதை ஏன் எழுதவில்லை, எவ்வளவு கவலையாக இருந்தது தெரியுமா? இனி இது போல செய்யாதீர்கள்” என்று உரிமையோடு கண்டிக்க என் தவறு புரிந்தது.

 

தோழர் சன்யாலின் மறைவு இடதுசாரி முற்போக்கு இயக்கங்களுக்கு பெரும் இழப்பு.

 

வாழும் வரலாறாகத் திகழ்ந்த தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன் அவர்களின் மறைவின் மூலம் மார்க்சிஸ்ட் கட்சி தன் முதல் தலைமுறையின் கடைசி தல்லைவரையும் இழந்துள்ளது. போராட்டத்தில் புடம் போற்ற தலைவரின் மறைவின் மூலம் இந்தியா தனது விடுதலைக்காக போராடிய ஒரு வீரரை இழந்துள்ளது.

 

செவ்வணக்கம் தோழர் சன்யால்

செவ்வணக்கம் தோழர் அச்சுதானந்தன்.

 








பிகு: முகப்பில் உள்ளது எங்கள் குடியாத்தம் மாநாட்டு புகைப்படங்கள்.

கீழே உள்ளது ராய்ப்பூர் அகில இந்திய மாநாட்டு புகைப்படங்கள்.