Wednesday, July 31, 2024

இந்தியாவில் முதல் முறையாக . . .

 


இந்தியாவில் முதல் முறையாக . . .

துப்பாக்கி சுடும் போட்டியில் ஏர் பிஸ்டல் 10 மீட்டர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவை பதக்கப்பட்டியலில் இடம் பெற வைத்த பதக்க மங்கை மனு பாக்கர், அதே பிரிவில் கலப்பு இரட்டையருக்கான போட்டியில் சரப்ஜோத்சிங்குடன் இணைந்து இன்னொரு வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

இருவருக்கும் வாழ்த்துக்கள்.

ஒரே ஒலிம்பிக் போட்டியில் இந்தியர்கள் யாரும் இதுவரை இரண்டு பதக்கங்களை வென்றதில்லை.

2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்று "ஒன்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீரர்" என்ற சாதனையை படைத்த மனு பாக்கருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். 

Tuesday, July 30, 2024

மந்திரி பேச்சையாவது கேளுங்கம்மா . . .

 


ஆயுள் இன்சூரன்ஸ் பிரிமியத்திற்கு வசூலிக்கப்படும் ஜி.எஸ்.டி யை நீக்க வேண்டும்,  ஆயுள் இன்சூரன்ஸ் பிரிமியத்திற்கு மீண்டும் வரி விலக்கு தர வேண்டும், பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை ஒரே நிறுவனமாக ஒன்றிணைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்ற வேண்டுகோளோடு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தோழர்கள் நாடெங்கிலும் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து வருகிறோம்.

பாஜக மந்திரி நிதின் கட்காரியை எங்கள் நாக்பூர் கோட்டத் தோழர்கள் சந்தித்துள்ளனர். அவர் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு நிதியமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.





ஆணவம் நிறைந்த நிர்மலா அம்மையாரே, நல்லவர்கள் சொல்வதை எல்லாம் கேட்கக்கூடாது என்ற பிடிவாதத்துடன் இருக்கும் நீங்கள் குறைந்தபட்சம் உங்கள் கட்சி மந்திரி சொல்வதையாவது கேட்டு நடக்கவும்.

Monday, July 29, 2024

ஆறே கால் லட்சம் தண்டச்செலவு

 




மேலேயுள்ள படங்கள் என்ன தெரியுமா?

ஆறே கால் லட்ச ரூபாய் செலவில் மோடி மூஞ்சியோடு செல்பி எடுத்துக் கொள்ள ரயில் நிலையங்களில் வைக்கப்பட்ட செல்பி பாயிண்டுகளில் ஒன்று.

இது காட்பாடியில் உள்ளது.

ஆறே கால் லட்ச ரூபாயின் இன்றைய நிலை இது. முதலாவது பிளாட்பர்மிற்கு அவசரமாக வரும் பயணிகளுக்கு இடைஞ்சலாகவும் குப்பைப் பைகளை மறைத்து வைக்கும் விதத்திலும் உள்ளது.

குப்பைப் பைகளை வைக்க பொருத்தமான இடம்தான். 

ஆமாம்.

முன்பிருந்ததும் ஒரு குப்பையின் கட் அவுட் தானே!

Sunday, July 28, 2024

மனு பாக்கர் - முதல் பெருமை



பாரிஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் துப்பாக்கி சுடும் போட்டிகளில்  10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு முதல் பதக்கமும் பதக்கப்பட்டியலில் இடமும் பெற்றுக் கொடுத்த வீராங்கனை மனு பாக்கருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

வெற்றிகள் தொடரட்டும் . . . 


Friday, July 26, 2024

முட்டாள்களே நம்புவார்கள்

 


மன்னராட்சியின்  அடையாளமான செங்கோலை புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மைய மண்டபத்தின் மையப் பகுதியில் எழுந்தருள வைத்து விட்டு


குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள இந்த ஆடம்பர அரங்கின் பெயரை "தர்பார் ஹால்" என்பதிலிருந்து "ஜன தந்திரிக் மண்டப்" என்று பெயர் மாற்றியதற்கு "மன்னராட்சியின் அடையாளமாக தர்பார் என்ற பெயர் இருப்பதுதான் காரணம் என்று சங்கி அரசு சொல்வதௌ முட்டாள்கள் மட்டுமே நம்புவார்கள்.


"அசோகா ஹால்"  என்ற இந்த அரங்கின் பெயரை "அசோகா மண்டப்" என்று மாற்றியதன் மூலம் மன்னராட்சி, மக்களாட்சி என்பதெல்லாம் உடாப்ஸ், இந்தித் திணிப்புக்கு இப்படி குடியரசு முலாம் பூசி விட்டார்கள் என்பது நன்றாக புரிகிறது.  

எத்தனை சிறுத்தைகளைத்தான் கொல்வீர்கள்?

 


போன வருடம் மோடி பிறந்த நாளுக்காக நமீபியாவிலிருந்து 12 சிறுத்தைகளை வரவைத்து அவர் அவற்றை மத்தியப் பிரதேச காட்டுக்குள் அனுப்பி வைத்தார்.

அவற்றில் எட்டு சிறுத்தைகள் இறந்து விட்டது. இவற்றுக்கு பிறந்த மூன்று குட்டிகளும் இறந்து விட்டது.

என்ன காரணம்?

ஆப்பிரிக்க் சிறுத்தைகளுக்கு இந்திய தட்ப வெப்ப சூழல் ஒத்து வரவில்லை.

சரி, இப்போ என்ன?

அடுத்து தென் ஆப்பிரிக்காவிலிருந்து இன்னும் 12 சிறுத்தைகளை கொண்டு வந்து குஜராத் காட்டுக்குள் விடப் போகிறார்களாம்.

ஒரு முறை பட்டும் அறிவில்லாமல் அதே தவறை மறுபடியும் செய்வது முட்டாள்தனம். முட்டாளின் ஆட்சியில் புத்திசாலித்தனமாக எதுவும் நடக்காது. இந்த முட்டாள்தனத்தால் சிறுத்தைகள் கொல்லப்படும் என்பதுதான் கொடுமை. 

Thursday, July 25, 2024

"பக்கா"வா? "பக்கோடா"வா? - சுவெ

 




*நாளொரு கேள்வி: 24.07.2024*


தொடர் எண் : *1516*

இன்று நம்மோடு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் *சு வெங்கடேசன்*
##########################

*"பக்கா" வேலை எவ்வளவு?* *"பக்கோடா வேலை" எவ்வளவு?*

கேள்வி: நாலு கோடி வேலை, பதினோரு லட்சம் கோடி ஆதாரத் தொழில் வளர்ச்சி என்றெல்லாம் பட்ஜெட்டில் ஆரவார அறிவிப்புகள் உள்ளனவே! 

*சு.வெங்கடேசன்*

* பட்ஜெட்டில் ஆரவாரமான அறிவிப்புகள். ஆனால் எங்கே இருந்து நிதி ஆதாரங்கள் என்பதே கேள்வி! உலகம் முழுவதும் செல்வ வரி, வாரிசுரிமை வரி, கார்ப்பரேட் வரி உயர்வுகள் பற்றிய விவாதம். ஆனால் இந்திய பட்ஜெட்டில் அன்னிய கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்டுகிற கார்ப்பரேட் வரி 40% லிருந்து 35 % ஆகக் குறைப்பு. தேசியம் பேசுகிற அரசாங்கத்தின் அளவற்ற அன்னிய பாசம்.

* விவசாயிகளுக்கு விளைச்சல் செலவினத்தை விட 50 சதவீதம் கூடுதலாக குறைந்தபட்ச ஆதார விலை அதிகரிப்பு என நிதி அமைச்சர் அறிவிப்பு. மறைந்த விவசாய அறிஞர் எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்துரைத்த C 2 + 50 % ஆ அரசால் தரப்படுகிறதா? பதினோராவது ஆண்டாக ஆட்சியில் தொடர்கிற நீங்கள் இப்போதும் இந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் கடந்து போகிறீர்களே இது ஏமாற்று அல்லவா!

* 4 கோடி வேலை வாய்ப்பு என்று அதிரடியாய் அறிவிப்பு. 2014இல் 10 கோடி என்று அறிவித்த அதிரடி என்ன ஆனது! உங்கள் அதிரடி அறிவிப்பு எல்லாம் இந்திய இளைஞர்களின் எதிர்பார்ப்பில் பேரிடியாக மாறியது தானே அனுபவம்!உங்கள் 4 கோடி அறிவிப்பில் "பக்கா" வேலை எவ்வளவு? "பக்கோடா வேலை" l எவ்வளவு?

* இந்திய வளர்ச்சி "பளிச்சிடும் முன்னுதாரணம்" என்று தங்களுக்கு தானே பாராட்டி கொள்ளும் அரசே! உலகின் அதிகமான ஏற்றத் தாழ்வு கொண்ட தேசம் இந்தியாதான் என்ற சாதனையே உங்கள் வளர்ச்சியின் குணம் என்பதை சொல்ல மறந்து விட்டீர்களே! வளர்ச்சி யாருக்கு... பில்லியனர்களுக்கா? ஏழை, நடுத்தர மக்களுக்கா?

* 500 பெரிய நிறுவனங்களில் தொழில் பயிற்சி பெற இளைஞர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்று அறிவிப்பு. இந்த 500 பெரிய நிறுவனங்களில் எவ்வளவு வேலை வாய்ப்புகள் கடந்த 10 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டது? ஆண்டு வாரியாக எவ்வளவு வேலை வாய்ப்புகள் உயர்ந்தன? டாப் 100 நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் உயரவே இல்லை என தொழிலதிபர் சுனில் பாரதி மிட்டல் கூறினாரே! அந்த நிலைமை மாறிவிட்டதா?இன்டர்ன்ஷிப் பெறுபவர்கள் அங்கே வேலைவாய்ப்பு பெறுவார்களா? இல்லை அவர்களின் வேலையை மலிவான ஊதியத்திற்கு வாங்குகிற ஏற்பாடா?

* பீகார் ஆந்திரா சிறப்பு திட்டங்கள் அறிவிப்பு... 10 ஆண்டுகளாக எவ்வளவு புறக்கணித்தீர்கள் என்பதன் ஒப்புதலா?உங்கள் அரசை இழுக்கும் இரட்டை என்ஜின்களை கழட்டி விடும் வரை இப்படிப்பட்ட அறிவிப்புகள் வெளிவருமோ!

* தமிழ்நாட்டுக்கு அறிவிப்பில் ஏதும் இல்லையே! நிதியமைச்சரே வழக்கமாக மேற்கோள் காட்டும் திருக்குறளும் இல்லையே!

* ஆதார தொழில் வளர்ச்சிக்காக மூலதன செலவு 11 லட்சம் கோடி என்று பட்ஜெட்டில் அறிவிப்பு. ஆதார தொழில் வளர்ச்சிக்கு அமுத சுரபியாக உள்ள எல்.ஐ.சி யை பலப்படுத்துவோம் என்று அறிவிக்க வேண்டாமா?எல்.ஐ.சியின் பங்கு விற்பனையை தொடர மாட்டோம் என்று அறிவிக்க வேண்டாமா? இல்லையெனில் ஆதார தொழில் வளர்ச்சிக்கு எங்கே இருந்து வரும் பணம்!

*செவ்வானம்*

Wednesday, July 24, 2024

சங்கிகள் இல்லை, அமைதியாய் கடந்த யாத்திரை

 


ஹரியானாவில் பிரிஜ் மண்டல் யாத்திரை என்ற பக்தர்களின் யாத்திரை கடந்தாண்டு நடைபெற்ற போது "நூ" என்ற ஊரில் கலவரம் வெடித்து எட்டு பேர் கொல்லப்பட்டனர்.

அப்போது எழுதிய ஹரியானா கலவர அரசியல் என்ற பதிவை இணைப்பின் மூலமாக படியுங்கள்

அதே யாத்திரை இந்த வருடம் "நூ" வைக் கடந்தது. அப்போது இஸ்லாமிய மக்கள், பக்தர்களை வரவேற்று குளிர் நீர் கொடுத்து ரோஜா இதழ்களை தூவி வரவேற்றனர்.

எங்கள் கிராமத்தில் இந்து முஸ்லீம் ஒற்றுமை பல்லாண்டுகளாக கட்டுக்கோப்பாக உள்ளது. வெளியாட்களினால் கடந்த ஆண்டு கலவரம் வெடித்து எங்கள் ஊருக்கே களங்கம் ஏற்பட்டு விட்டது. அதனால் இந்துக்களும் முஸ்லீம்களும் பேசி இந்த வருடம் வரவேற்பு கொடுப்பது என்றும் எந்த வெளியாளையும் அனுமதிக்கக்கூடாது என்று முடிவு செய்தோம் என்று கிராமத்தினர் மகிழ்ச்சியோடு சொல்கின்றனர்.

சங்கிகளை அகற்றினால் அமைதி நிச்சயம் என்று நிரூபித்த "நூ" மக்களுக்கு பாராட்டுக்கள் . . .


Tuesday, July 23, 2024

காவடி யாத்திரையில் கலவரத்துக்கு விதையா?

 



வட இந்தியாவில் கான்வர் யாத்திரை நடந்து கொண்டிருக்கிறது. நம்ம ஊர் காவடி போலத்தான் அதுவும்.

கங்கை நதி நீரை முக்கியமான தளங்களிலிருந்து காவடியில் உள்ள பானைகளில் சேகரித்து அந்த கங்கை நீரைக் கொண்டு தங்கள் ஊரில் உள்ள சிவன் கோயில்களில் அபிஷேகம் செய்வார்கள்.

கிட்டத்தட்ட இரண்டு மாதம் நடக்கும் இந்த யாத்திரை செல்லும் வழியில் உள்ள உணவகங்கள், கடைகளில் ஆகியவற்றின் பெயர்ப் பலகைகளில்  முதலாளிகளின் பெயரை எழுதி வைக்க வேண்டும் என்று மொட்டைச் சாமியார் உத்தரவு போட்டுள்ளார்.

என்ன காரணம்?

இஸ்லாமியர்கள் தங்கள் கடைகளுக்கு பொதுவான பெயர்கள் வைக்கிறார்களாம். அப்படி இருக்கிற இஸ்லாமியர்களின் கடைகளில் சாப்பிட்டு யாத்திரை செல்பவர்களின் புனிதம் கெட்டு விடுமாம். இஸ்லாமியர்களின் வணிகத்தை அழிக்க நினைக்கும் சில்லறை புத்தி இது.

இது மட்டுமா நோக்கமாக இருக்கும்?

மக்களவைத் தேர்தலில் வாங்கிய அடியை சட்டப்பேரவை தேர்தலில் சரி செய்ய இந்துக்களின் உணர்வுகளை உசுப்பேற்றி விடும் ஆபத்தான சதி இது.

இன்னும் கூட ஒரு காரணம் இருக்கும் என்று அனுமானிக்கிறேன்.

உணர்வுகளை தூண்டி விடுவது கலவரத்தை உருவாக்கவே! முசாபர்நகர் கலவரத்தை நடத்தித்தான் மொட்டைச்சாமியார் ஆட்சிக்கு வந்தார். இப்போது இன்னொரு கலவரம் அந்த கிரிமினல் சாமியாருக்கு தேவைப்படுகிறது. கடைகளில் பெயர்ப்பலகைகளில் இஸ்லாமியர்களின் பெயர் இருந்தால் அவர்களை தாக்குவது சுலபமாக இருக்கும் என்பதுவும் இந்த அறிவிப்பின் பின்னணியில் இருப்பதாக நான் சந்தேகிக்கிறேன்.

உத்திரப்பிரதேச மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது. . .

 பிகு: அயோக்கியத்தனமான உத்தரவை உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது ஒரு நல்ல செய்தி

Monday, July 22, 2024

சேதி நிசமா ஆட்டுக்காரா?

 


உங்களுக்கு பொழுது போகவில்லையா? ரொம்பவே டல்லா இருக்கீங்களா? 

சமீபத்தில் பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட  கல்யாண்ராமன் மற்றும் திருச்சி சூர்யாவின் ட்விட்டர் பக்கத்திற்கு செல்லுங்கள்.

ஆட்டுக்காரன் மீது தொடர்ச்சியாக வெடிகுண்டுகள் வீசிக் கொண்டே இருப்பார்கள். அதிர வைக்கும் எந்த குற்றச்சாட்டிற்கும் ஆட்டுக்காரனோ, அல்லக்கைகளோ வாய் திறந்ததே கிடையாது.

இந்த வெடிகுண்டை பாருங்கள்


இதற்காவது ஆட்டுக்காரனோ, அல்லக்கைகளோ வாய் திறக்கும் வாய்ப்பு உண்டா?

Sunday, July 21, 2024

"நீட்" மோசடி நிரூபணமானது . . .

 


நீட் தேர்வு என்பது பயிற்சி மையங்களுக்கு கொட்டிக் கொடுக்க வசதியுள்ள பணக்கார வீட்டுக் குழந்தைகளுக்கான தேர்வு என்பதைக் கடந்து மோசடியான வழிகளில் தேர்வாக லட்சங்களை கொடுக்கும் வல்லமை உடையவர்களுக்கான தேர்வு என்பதுதான் இப்போதைய யதார்த்தம்.

 உச்ச நீதிமன்றம் தேர்வு மையங்களின் அடிப்படையிலான முடிவுகளை வெளியிடச் சொல்லி உத்தரவிட அத்தகவல் மோசடியை நிரூபித்துள்ளது.

 அதிக மதிப்பெண் எடுத்தவர்களில் பெரும்பான்மையான மாணவர்கள்   ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிகார் என்ற சின்னஞ்சிறு ஊரிலிருந்துதான் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். இதே போல மஹாராஷ்டிரா, குஜராத், பீகார், உ.பி ஆகிய மாநிலங்களில் உள்ள சில குறிப்பிட்ட மையங்களின் மாணவர்கள்தான் அதிக மதிப்பெண் பெற்றவர்களில் மிகப் பெரும்பான்மையானவர்கள்.  கேள்வித்தாள்கள் கசிவும் அங்கெல்லாம் நடந்துள்ளது. விபரங்கள் இன்றைய ஆங்கில இந்து நாளிதழில் உள்ளது.

 இப்படி மோசடிகளின் மொத்த வடிவமாக உள்ள “நீட்” தேர்வு இனியும் வேண்டுமா?

 தமிழ்நாட்டுடன் இந்திய மக்கள் அனைவரும் இணைந்து உரக்க குரல் கொடுக்க வேண்டும். . .

 BAN NEET


Friday, July 19, 2024

மாட்டுக் குண்டர்களும் மோடி போலீஸும்

 


எருமை மாடுகளை வியாபாரத்திற்காக கொண்டு சென்ற மூன்று மாட்டு வியாபாரிகளை மோடியின் மாட்டுக் குண்டர்கள் அடித்து கொன்று விட்டனர். 

இது நடந்தது கடந்த மாதத்தில்.

நடந்தது பாஜக ஆளும் சத்திஸ்கர் மாநிலத்தில் . .

வாகனத்தில் சென்ற வியாபாரிகளை மோடியின் மாட்டுக்குண்டர்கள் வழி மறித்து அடித்தார்கள் என்பது இறந்து போனவரில் ஒருவர் மரண வாக்குமூலமாக தன் நண்பருக்கு தொலைபேசியில் சொன்னது.

ஆனால் மோடியின் போலீஸோ, மோடியின் மாட்டுக் குண்டர்களை பாதுகாக்க கதையை மாற்றி விட்டது.

மாட்டுக்குண்டர்கள் ஒரு பாலத்தின் மீது துரத்திய போது வியாபாரிகளே  லாரியிலிருந்து குதித்து செத்துப் போனார்கள். அவர்கள் அடிக்கப்படவெல்லாம் இல்லை என்று காவல்துறை கண்காணிப்பாளர் சொல்லி விட்டார்.

அவங்க லாரியிலிருந்து எப்படி குதிச்சாங்க? அவங்க மேல இருந்த காயம் எப்படி வந்தது என்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல அவரால் இயலவில்லை.

எப்படி முடியும்?

மாட்டுக்குண்டர்களை பாதுகாக்க மக்களை மடையர்களாக கருதுகிறோம் என்று அவரால் எப்படி சொல்ல முடியும்!

Thursday, July 18, 2024

என்னமோ நடக்குது !!!

 


"தமிழ் மணம்" வலை திரட்டி செயல்பாட்டில் இருந்தவரை எனது வலைப்பக்கத்தின் பார்வைகள் (HITS) சராசரியாக ஒரு நாளைக்கு ஆயிரத்திலிருந்து ஆயிரத்து இருநூறு வரை இருக்கும். தமிழ்மணம் முடங்கிய பின்பு அது சராசரி ஐநூறு என்ற அளவில்தான் இருந்து வருகிறது. மக்களவைத்தேர்தல் சமயத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் அளவுக்குச் சென்றது.

ஆனால் நேற்று முன் தினம் இரவு முதல் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. செவ்வாய் இரவு ஒன்பது மணி அளவில் வீடு திரும்பிய போது கூட 360 தான் இருந்தது. நேற்று இரவு பார்த்தால் செவ்வாயன்று பார்வைகள் 5168 என்றும்  நேற்று இரவு வரை 7037  என்றும்  இருந்தது.



காலையில் இப்போதைய நிலவரம் இது . . .




நேற்று முன் தினம் இரவு முதல் யார் என் வலைப்பக்கத்திற்கு படையெடுத்து வந்தார்கள்?

சமீபத்திய பதிவுகள் தொடங்கி பத்தாண்டுகளுக்கு முந்தைய பதிவுகள் வரை படிக்கப்பட்டுள்ளது. புளிச்ச மாவு ஆஜான் குறித்து எழுதிய பெரும்பாலான பதிவுகள் பல முறை படிக்கப்பட்டுள்ளது. மாலன் பற்றிய எந்த பதிவும் சீண்டப்படவில்லை என்பது வேறு விஷயம்! 

திடீரென ஏன் இந்த பரபரப்பு?

இது நல்லதா? கெட்டதா?

எதுவாக இருந்தாலும் I am waiting.  . . .



Wednesday, July 17, 2024

பக்தர்களை சோதிக்கலாமா அயோத்தி ராமா?

 


தேனியில் நூறு பேர், திண்டுக்கல்லில் 12 பேர் என 112 பேர் அயோத்திக்கு செல்வதென்று முடிவு செய்து ஒரு ட்ராவல் ஏஜெண்டை அணுகி உள்ளனர்.

அந்தாளும் 30,000 வாங்கிக் கொண்டு எல்லோருக்கும் விமான டிக்கெட்டை கொடுத்துள்ளான்.

அந்த டிக்கெட்டுக்களை எடுத்துக் கொண்டு மதுரை விமான நிலையத்துக்குச் சென்றால் அங்கே வாசலிலேயே அவர்களை திருப்பி அனுப்பிவிட்டார்கள்.

காரணம் ?

அவை போலி டிக்கெட் . . .

அந்த ட்ராவல் ஏஜெண்டோ அந்த டிக்கெட்டுக்களை வேறு ஒருவர் மூலமாக ஏற்பாடு செய்ததாக சொல்லியுள்ளான். தன் சொந்தக்காசை போட்டாவது மாதக் கடைசியில் அனுப்புவதாக சொல்லியுள்ளதால் யாரும் போலீஸில் புகார் கொடுக்கவில்லை.

இன்னும் கொஞ்ச நாள் போனால்தான் தெரியும்.

இறுதி ஏமாற்றம் பக்தர்களுக்கா இல்லை ட்ராவல் ஏஜெண்டிற்கா என்று . . .

அநேகமா அந்த ட்ராவல் ஏஜெண்ட் தொடர்பு எல்லைக்கு அப்பால் போய் விடுவார் என்றுதான் தோன்றுகிறது.

ராம பக்தியை வைத்து ஓட்டு வாங்கப்பார்த்த மோடிக்கு அயோத்தியில் ஓட்டு கிடைக்கவில்லை. 

அது போல தன்னுடைய பெயரைச் சொல்லி மோசடி செய்த பேர்வழிகளை அயோத்தி ராமர் தண்டிக்கிறாரா என்று பார்ப்போம் . . .

Tuesday, July 16, 2024

பத்ரிநாதரும் பாஜகவை கைவிட்டார்

 


தெய்வங்கள், அவர்களுக்கான கோயில்கள் ஆகியவற்றை வைத்து அரசியல் செய்யும் பாஜகவிற்கு முக்கியமான கோயில்கள் அமைந்துள்ள தொகுதிகளிலேயே தோல்விதான் கிடைத்து வருகிறது. முந்தைய சம்பவம் அயோத்தியில். தற்போதைய சம்பவம் உத்தர்கண்டில் உள்ள பத்ரிநாத்தில்.

13 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல்களில் 11 தொகுதிகளில் இப்போது பாஜக தோற்றதல்லவா! அதில் ஒன்று பத்ரிநாத்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவிற்கு ராஜேந்திரசிங் பண்டாரி என்பவர் தாவினார். அதனால் அங்கே இடைத்தேர்தல். இப்போது பாஜக சார்பாக நின்ற பண்டாரியை வாக்காளர்கள் தோற்கடித்து காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைத்துள்ளார்கள்.

மக்கள் அருள் மட்டுமல்ல, கடவுள் அருள் கூட பாஜகவிற்கு குறைந்து கொண்டே வருகிறதே!


Sunday, July 14, 2024

ட்ரம்ப் கொலை முயற்சியா? நம்ப முடியலை

 


தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ட்ரம்ப் சுடப்பட்டுள்ளார். ஒருவர் கொல்லப்பட ட்ரம்பின் காதை உரசிக்கொண்டு குண்டு சென்றுள்ளது.

அது ட்ரம்பை கொல்ல நடந்த முயற்சி என்ற நம்பிக்கை ஏனோ வரவில்லை.

ஏனென்றால் தேர்தல் வெற்றிக்காக எந்த அளவிற்கும் கீழிறங்கக் கூடிய நபர் ட்ரம்ப்.

ஏனென்றால்

அவர் மோடியின் நண்பர் . . .

Saturday, July 13, 2024

மக்கள் போராட்டத்தின் வெற்றி

 


கீழேயுள்ள செய்தியை நேற்று படிக்கையில் மகிழ்ச்சியாக இருந்தது.


விசாகப்பட்டிணம் எஃகு தொழிற்சாலை மூடப்படாது என்று ஒன்றிய எஃகுத்துறை அமைச்சர் குமாரசாமி உறுதியளித்துள்ளார்.

கிட்டத்தட்ட ஒரு வருட காலத்திற்கு மேல் விசாகப்பட்டிணம் நகர மக்கள் நடத்திய போராட்டம் தந்த வெற்றி இது.

இந்த நிறுவனத்திற்கு இது புதிதல்ல.

சில வருடங்களுக்கு முன்பு எங்களின் அகில இந்திய மாநாடு ஒன்றில் அன்றைய அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் கே.வேணுகோபால் பேசியது இப்போதும் நினைவில் உள்ளது.

ஆந்திராவில் இரண்டு மத்திய பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முயற்சி நடந்தது. 

ஒன்று ஹைதராபாத் ஆல்வின் நிறுவனம். இன்னொன்று விசாகப்பட்டிணம் எஃகுத் தொழிற்சாலை.

ஆல்வின் தொழிலாளர்கள் அவர்கள் ஆலைக்குள் மட்டும் போராடினார்கள். அப்படி ஒரு பிரச்சினையோ போராட்டமும் வெளியே யாருக்கும் தெரியவில்லை. தனியார்மயத்தை தடுக்க முடியவில்லை.

அதே நேரம்

விசாகப்பட்டிணம் தொழிலாளர்கள் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தார்கள். தொழிற்சாலை பிரச்சினை மக்கள் பிரச்சினையாக, நகரத்தின் பிரச்சினையானது. மக்களின் போராட்டமாக பரிணமித்தது. அதன் விளைவாக  தனியார்மயம் தடுக்கப்பட்டது.

இப்போதும் விசாகப்பட்டிணம் எஃகு தொழிற்சாலையை பாதுகாத்தது அந்த நகரத்தின் மக்கள் நடத்திய உறுதியான, தொடர் போராட்டமே. 


Friday, July 12, 2024

அசிங்கம் மோடிக்கு புதிதா என்ன?

 


ஆஸ்திரியாவுக்குப் போன தெய்வக்குழந்தை, ஆஸ்திரியா என்று சொல்வதற்குப் பதிலாக ஆஸ்திரேலியா என்று சொல்ல, ஒட்டு மொத்த பார்வையாளர்களும் ஆஸ்திரியா. ஆஸ்திரியா என்று கத்தி சரி செய்துள்ளார்கள்.


மோடியின் முகம் அசிங்கத்தில் மூழ்கி இறுகிப் போனதை பாருங்கள்.

ஆனால் இப்படிப்பட்ட அசிங்கமெல்லாம் மோடிக்கு புதிதல்ல. 

திருமதி சிரிசேனா MRS SIRISENA என்பதை எம்.ஆர்.எஸ்.சிரிசேனா என்று படித்த பேர்வழிதானே!

எழுதிக் கொடுத்ததை படிக்கும் போதே இந்த லட்சணம்! 

இந்த முட்டாள் எல்லாம் மூன்றாவது முறை பிரதமர் என்பது மிகப் பெரிய அசிங்கம், இந்தியாவிற்கு . . .இந்திய மக்களுக்கு . . .

Thursday, July 11, 2024

வாஜ்பாயும் வேஸ்டா மோடி?

 


ரஷ்யாவுக்குப் போன மோடி அங்கேயுள்ள இந்தியர்கள் மத்தியில் பேசுகையில் இந்தியா, இந்த கெரகம் ஆட்சிக்கு வந்த 2014 க்கு பிறகுதான் வேகமாக வளர ஆரம்பிச்சுது, அது வரைக்கும் தத்தியா, மந்தமா இருந்திருக்காங்கன்னு அளந்து விட்டிருக்காரு. 


காங்கிரஸை மட்டும் அந்தாளு அசிங்கப்படுத்தலை. ஏழு வருஷம் பிரதமரா இருந்த வாஜ்பாயையும் சேர்த்துத்தான் அசிங்கப்படுத்தி இருக்கிறார்.

இந்தாளு குஜராத்தில நடத்தின நர வேட்டையை ஊருக்காகவாவது கண்டிச்சார் அல்லவா! அதான் காண்டு

Wednesday, July 10, 2024

மலர் வளையத்துடன் வீர வணக்கம்

 





அடிமைத்தளையை அறுத்தெரிய,

சுதந்திரக்காற்றை சுவாசிக்க
மத ஒற்றுமையின் அடையாளமாய்
குருதி சிந்தி  இன்னுயிர் நீத்த
வேலூர் சிப்பாய் புரட்சி வீரர்களுக்கு
சுதந்திரப் போர் தியாகிகளுக்கு
216 வது வருட நினைவு தினமான இன்று
சிப்பாய் புரட்சி தியாகிகள் நினைவுச்சின்னத்தில்
எங்கள் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் சார்பில்
மலர் வளையம் வைத்து
வீர வணக்க முழக்கமிட்டு

அஞ்சலி செலுத்தினோம்.

ஜனாதிபதியம்மா, தாங்காதம்மா . . .

 


மரியாதைக்குரிய ஜனாதிபதி அவர்களே,

எங்களால் ஒரு மோடியின் போட்டோ ஷூட்டுக்களையே தாங்க முடியவில்லை.

அதே வழியில் நீங்களுமா?

வேண்டாம் மேடம், நாடு தாங்காது.

பிகு: மோடியே தாங்க மாட்டார், தொடர விட மாட்டார் என்பதுதான் யதார்த்தம்.

Tuesday, July 9, 2024

3 சட்டங்கள் - சமஸ்கிருதம் மட்டுமல்ல பிரச்சினை.

 


ஒன்றிய அரசு மூன்று சட்டங்களை வாயில் நுழையாத பெயர்களை வைத்து நிறைவேற்றியது நினைவில் உள்ளதல்லவா!

வாயில் நுழையாத பெயர் என்பது அல்ல பிரச்சினை . . 

அதைக்காட்டிலும் தீவிரமானது.

வழக்கறிஞரும் எழுத்தாளருமான தோழர் இரா.முருகவேள் அவர்களின் இரு பதிவுகள், சட்டங்களில் உள்ள சதிகளை புரிந்து கொள்ள உதவும்.

இதோ அவரின் பதிவுகள்.

புதிய கிரிமினல் சட்டங்களை நான் இன்னும் முழுமையாக படிக்கவில்லை. ( இது வேறு இரண்டாயிரம், மூவாயிரம் ரூபாய் தண்டச் செலவு ). ஆனால் இவை பற்றி வரும் விமர்சனங்களும் மேலோட்டமான பார்வையில் கிடைத்த விஷயங்களும் அதிர்ச்சி அளிக்கின்றன.

புதிய இந்திய தண்டனை சட்டத்தில் முன்பு மனித உரிமைகளுக்கு எதிரானது என்று உச்ச நீதி மன்றத்தால் நிறுத்தி வைக்கப் பட்ட 124 A எனப்படும் தேசத் துரோக பிரிவு புதிய சட்டம் பிரிவு 150 இன் படி வேறு வடிவத்தில் திரும்ப கொண்டு வரப்பட்டு உள்ளது.

தீவிரவாதம், பயங்கரவாதம், தேசத் துரோகம் போன்றவற்றுக்கு மிகவும் மேலோட்டமான விளக்கங்கள் கொடுக்கப் பட்டுள்ளன. இது போலீஸ் அதிகாரத்தை அதிகப் படுத்தி சாதரான அமைதியான செயல் பாடுகளையும் இக்குற்றங்களாக கருதி வழக்கு தொடுக்க முடியும்.

UAPA போன்ற சிறப்பு தீவிர வாத தடுப்பு சட்டங்கள் உள்ளன. இவற்றுக்கு இப்போது பல கட்டுப்பாடுகள் உள்ளன. இது போன்ற குற்றங்களை புதிய கிரிமினல் சட்டங்களின் அடிப்படையிலேயே தண்டிக்க முடியும். இது சிறப்பு சட்டங்களில் உள்ள கட்டுப்பாடு இல்லாமல் போலீஸ் செயல்பட உதவும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

புதிய குற்றவியல் நடைமுறை சட்டத்தில் உள்ளதாகக் கூறப்படும் பிரிவுகள் அதிர்ச்சியளிக்கிறது. கைதிகளுக்கு கை விலங்கு போடுவது பல நீதிமன்றங்களால் தடை செய்யப் பட்டுள்ளது. இந்தச் சட்டம் பிரிவு 43 இதை அனுமதிக்கிறது. இன்னும் தனிமைச் சிறையில் வைப்பது, பொதுவாக கைது செய்யப்பட்டு பதினைந்து நாட்களுக்குள் விசாரணைக்கு கேட்டால் நீதிமன்ங்கள் அனுமதிக்கும். இதற்கு பதில் கைது செய்யப்பட்டு அறுபது நாள், தொண்ணூறு நாள் வரை நீதிமன்ற காவலில் இருந்து போலீஸ் காவலுக்கு அழைத்துச் செல்ல அனுமதிப்பது போன்ற மாற்றங்கள் உள்ளன என்கிறார்கள்.

இவையெல்லாம் சட்டத்தை நவீனப் படுத்துவதற்கு பதில் நாட்டை பின்னால் தள்ளும்.

இந்திய அரசியல் சட்டத் துக்கு அடுத்து மிகவும் முக்கியமானவை கிரிமினல் சட்டங்கள். இவற்றை இந்த அளவுக்கு விவாதம் இன்றி நிறைவேற்றி இருப்பது நாட்டின் எதிர்க்கட்சிகள், அறிவுத் துறையினரின் பலவீனத்தை காட்டுகிறது.

அர்பன் நக்சல் என்று குற்றம் சாட்டும் வழக்கம் உள்ள நிலையில் இந்த மாற்றங்கள் இன்னும் பிரச்சினையை ஏற்படுத்தும்.

********************************************************************************
புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வந்து விட்டன. இவற்றால் மிகக் குறைவாக பாதிக்கப் படப் போகின்ற வக்கீல்கள் மட்டுமே, அதுவும் தமிழ்நாடு, மேற்கு வங்காள வக்கீல்கள் மட்டுமே எதிர்த்துப் போராடி வருகின்றனர்.

மிக அதிகமாகப் பாதிக்க வாய்ப்பு உள்ள பல்வேறு மக்கள் உரிமை இயக்கங்கள், அறிவு ஜீவிகள், கட்சிகள் தரப்பிலிருந்து அடையாளப் போராட்டங்கள் என்பதற்கு மேல் ஒரு தீர்மானமான எதிர்ப்பும் இல்லை.

மிக மோசமான மனித உரிமை மீரல்களுக்கு வித்திடக் கூடியது என்று உச்ச நீதி மன்றம் சொன்ன 124 A இன்னும் தீவிரமான வடிவத்தில் திரும்பவும் வந்து இருக்கிறது. அரசை விமர்சிப்பவர்கள் இதில் சிக்கும் வாய்ப்பு உள்ளது. ஏதாவது இது போன்ற வம்பில் சிக்கி உள்ளே போனால் குறைந்தது 60, 90 நாட்களுக்கு ஜாமீன் கிடைக்காமல் செய்ய முடியும். ஆன் லைனில் சாட்சி சொல்ல அனுமதி உண்டு. எனவே சாட்சிகள் மீது போலீஸ் அதிக கட்டுப்பாடு செலுத்தும். கடுமையான தண்டனைகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. அரசியல் ரீதியாக மாற்றுக் கருத்து கொண்டவர்கள் அவற்றை வெளிப்படுத்து பவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப் படுவார்கள்.

இந்த அரசு இந்த சட்டங்களை மிரட்டும் பூச்சாண்டி போலப் பயன்படுத்தப் போவது இல்லை. நிச்சயம் அதன் முழு உக்கிரத்தையும்யும் உணர வேண்டி வரும்.

இப்போது எல்லோரும் அமைதியாக இருந்து விட்டு பின்பு முகநூல் போராளிகள் பூஞ்சையிலும் பூஞ்சையான எழுத்தாளர்களிடம் வந்து இதற்கு குரல் கொடுத்தாரா அதற்கு குரல் கொடுத்தாரா என்றால் ஒரே ஒரு பதில்தான்.

எழுத்தாளர் ஓடி விட்டார். முடிந்தால் நீங்களும் ஓடித் தப்பி விடுங்கள்.

Monday, July 8, 2024

ராஜினாமா செய்து விட்டு பேசவும் VP

 


இந்திய நாட்டின் மிகப் பெரிய துயரங்கள், சில உச்சகட்ட பதவிகளுக்கு விசுவாசம் காரணமாகவே சிலர் வருவதும் பதவிக்கு ஏற்றார் போல அவர்கள் நடந்து கொள்ளாமல் இருப்பதும்.

யானை மாலை போட்டு அரச பதவிக்கு வந்தாலும் சில பிச்சைக்காரர்களின் குணாம்சம் மாறுவது கிடையாது.

அப்படிப்பட்ட ஒரு நபர்தான் இன்றைய துணை ஜனாதிபதி...

ஆர்.எஸ்.எஸ் பற்றி மாநிலங்களவையில் விமர்சனம் வைக்கப்பட்டால், இவர் கோபம் பொத்துக் கொண்டு வந்து பதில் சொல்கிறார். நான் சின்னப்புள்ளையா இருக்கறப்பவே சேர்ந்துட்டேன் தெரியுமா என்றெல்லாம் விளக்கம் வேறு...

மூன்று புதிய சட்டங்கள் பற்றி "ஏதோ பகுதி நேர ஊழியர்களைக் கொண்டு அரைகுறையாக தயாரிக்க்ப்பட்டது போலிருக்கிறது" என்று ப.சிதம்பரம் சொன்னால் "நாங்கள் என்ன பகுதி நேர ஊழியர்களா? எங்களை இழிவு படுத்தாதே" என்று கத்துகிறார்.

யாராவது இவரிடம் சொல்லுங்கள்.

"இவர் துணை ஜனாதிபதி, கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டவர், இந்தியாவின் இரண்டாம் குடிமகன். மாநிலங்களவையை பாரபட்சமின்றி, அமைதியாக நடத்துவதுதான் இவர் வேலை. அரசுக்கு ஜால்ரா அடிப்பதோ, அரசின் சார்பில் பதில் சொல்வதோ அல்ல. அப்படி விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டுமென்று இவர் இதயம் துடித்தால் அதை பதவியிலிருந்து ராஜினாமா செய்து விட்டு நடந்து கொள்ளட்டும். 

Saturday, July 6, 2024

கடைசியில் என் பெயரிலேயும் . . .

 


முகநூலில் பல சமயம் நமக்கு ஏற்கனவே நண்பர்களாக இருப்பவர்களிடமிருந்து நட்பழைப்பு வருகிற போது அது போலி என்று தெரிந்து அவர்களை கலாய்த்து அவர்கள் பணம் கேட்பதற்கு முன்பே நான் பணம் கேட்டு வெறுப்பேற்றுவது எனக்கு ஒரு பொழுதுபோக்கு.

இன்று என் பெயரிலேயே ஒரு திருடன் போலிக்கணக்கு ஆரம்பித்து பல நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் நட்பழைப்பு அனுப்பியிருக்கிறான்.


புதிதாக ஏதாவது முகநூல் கணக்கு துவக்கி இருக்கிறாயா என்று என் மகன் தொலைபேசியில் கேட்டபோதுதான் விபரம் தெரிந்தது.

இதில் கொடுமை என்னவென்றால் அவன் எனக்கே நட்பழைப்பு அனுப்பி உள்ளான். அந்த நட்பழைப்பை இப்போது காணவில்லை.

எனவே இதனால் நான் அளிக்கும் எச்சரிக்கை என்னவென்றால்

என் பெயரில் வரும் நட்பழைப்பை ஏற்க வேண்டாம். பணம் கேட்டால் ஒரு பைசா கூட அனுப்ப வேண்டாம். முடிந்தால் அந்த போலியை பணம் கேட்டு வெறுப்பேற்றவும்.


கொலைகார சாமியாரை பாதுகாக்கும் . . . .

 


உபியின் பாலியல் வன்முறைகளின் தலைநகர் ஹாத்ராஸில் 121 பக்தர்களின் உயிரை பலி கொண்ட சம்பவத்தில் ஆறு பேர் மீது போலீஸ் வழக்கு பதிந்துள்ளது. அவர்கள் எல்லோரும் அந்த போலிச்சாமியார் நடத்திய சத்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள்.

ஆனால் அந்த சத்சங்கத்தை நடத்தி மரணங்களுக்கு காரணமாக இருந்த போலே பாபா என்ற போலிச்சாமியார் மீது எந்த வழக்கும் கிடையாது.

அவரை விசாரிப்பீர்களா என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு "ஒரு வேளை அவரை விசாரிக்க வேண்டிய அவசியம் உருவானால் மட்டுமே விசாரிப்போம்" என்று பதில் சொல்கிறார் உபியின் ஒரு ஐ.ஜி.

கொரோனா இரண்டாம் அலை காலகட்டத்தில் இந்த சாமியார் இது போன்ற சத்சங்கம் நடத்த அனுமதி கேட்ட போது 50 பேர் கலந்து கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டதாம். ஆனால் 50,000 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

கொரோனா இரண்டாம் அலையில் உ.பி யில் கொத்து கொத்தாக மரணங்கள் நிகழ்ந்ததும் சடலங்களை எரிக்க சுடுகாடுகள் போதவில்லை என்பதும் நினைவில் உள்ளதா? 50,000 பேர் கலந்து கொண்ட சத்சங்கம் எத்தனை பேரின் மரணத்திற்கு காரணமாக இருந்ததோ!

ஏன் இந்த சாமியார் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை?

அதெப்படி முடியும்!

மாநில முதல்வர் மொட்டைச்சாமியாரே ஒரு கொலைகார சாமியார்தானே!

ஒரு போலிச்சாமியாரால் எப்படி இன்னொரு போலிச்சாமியார் மீது நடவடிக்கை எடுக்க முடியும்!

இருவரும் ஒரே இனம் அல்லவா! 

Friday, July 5, 2024

இங்கிலாந்தில வட போச்சே!

 


பாவம் சங்கிகள்,  சோகத்தில் மூழ்கி விட்டார்கள்

"எங்காளு ஒத்தரு நம்மை ஆண்ட இங்கிலாந்தையே ஆளுகிறாரு பார்த்தாயா" என்று யாரை வைத்து வெட்டி உதார் விட்டுக் கொண்டிருந்தார்களோ, அந்த ரிஷி சுனக் தோற்றுப் போய் விட்டார். அவரும் தோற்று அவர் கட்சியையும் தோற்க வைத்து விட்டார்.

தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று விட்டது என்றும் மகிழ்ச்சியடைய முடியாது. ஏனென்றால் கட்சியின் பெயரில்தான் தொழிலாளர் உள்ளதே தவிர, தொழிலாளர் ஆதரவு கொள்கைகள் எல்லாம் எப்போதோ காணாமல் போய் விட்டது.

அக்கட்சியின் முற்போக்கு முகமாக இருந்த ஜெர்மி கோர்பின் சுயேட்சையாக வெற்றி பெற்றதுதான் ஆறுதல். 

ரிஷி சுனக், அவரது மனைவி, வாரம் முழுதும் வேலை பார்த்து கம்பெனிக்காகவே சாகனும் என்று சொன்ன அவர் மாமனார் ஆகியோரைக் கொண்ட பீற்றல் பதிவுகள் வராது என்பது மகிழ்ச்சி.  

அற்புத உரையும் ஆட்டுக்காரனுக்கு பதிலடியும்

 


நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் ஆற்றிய அற்புத உரை கீழே உள்ளது. 

மக்களவைத் தேர்தலில், பாஜக-வின் பாசிச அரசியலுக்கு எதிராக மக்கள் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியிருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.
மோடி அரசால் தில்லி வீதிகளில் தடுக்கப்பட்ட விவசாயிகளின் டிராக்டர், அந்த தடைகளை உடைத்து, தற்போது நாடாளுமன்றத்திற்கு உள்ளேயே வந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களவையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பங்கேற்று சு. வெங்கடேசன் எம்.பி. இதுதொடர்பாக மேலும் பேசியிருப்பதாவது:
மதுரைத் தொகுதி மக்களுக்கு நன்றி
அவைத் தலைவர் அவர்களுக்கு வணக்கம்,
18-ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச அரசியலுக்கு எதிராக வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கும், மதுரை நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கும் எனது அன்பான வணக்கத்தையும், நன்றியையும் முதலிலே தெரிவித்துக் கொள்கிறேன்.
அவைத் தலைவர் அவர்களே, இந்த நாடாளுமன்றத் தேர்தலின் தீர்ப்பை உள் வாங்கிக் கொண்டதாக இந்த அரசினுடைய உரை அமையவில்லை. குறிப்பாகச் சொல்வ தாக இருந்தால் இந்தத் தீர்ப்பு ஆளுங்கட்சி யினுடைய 63 எம்.பி.க்களை குறைத்திரு க்கிறது. அவர்களது கார்ப்பரேட் நண்பர்கள் கட்டமைத்த- தேர்தலுக்குப் பிந்தைய (Exit Poll) கற்பனைகளைத் தகர்த்திருக்கிறது.
எடுபடாத தெய்வக் குழந்தையின் கதைகள்
இன்னும் சொல்லப் போனால் தெய்வக் குழந்தை சொன்ன பல கதைகளை மக்கள் பொய்யென நிரூபித்திருக்கிறார்கள். இவ்வளவு நல்ல ஒரு தீர்ப்பை 18-ஆவது நாடாளுமன்றத்தில் மக்கள் வழங்கியிருக் கிறார்கள். அதைவிட முக்கியம் உங்கள் கைகளில் பெரும்பான்மையைக் கொடுத் தால் எங்கள் கைகளில் வாக்களிக்கும் உரிமை கூட இருக்காது என்கிற அச்சத்தை இந்திய மக்கள் வெளிப்படுத்தி இருப்பது தான் இந்தத் தேர்தலினுடைய தீர்ப்பு.
டிராக்டரில் வந்து பதவியேற்ற தோழர் அம்ரா ராம்
நண்பர்களே 17-ஆவது நாடாளுமன்றத் தினுடைய கடைசி நாளில் பிரதமர் இந்த அவையில் பேசிய பேச்சை நான் நினைவு படுத்த வேண்டுமென்று நினைக்கிறேன். ‘தேர்தலுக்குப் பிறகு இந்த அவையில் எதிர்க்கட்சிகளுக்கு இடமில்லை; பார்வை யாளர் மாடத்தில் தான் எதிர்க்கட்சிகளுக்கு இடம்’ என்று பேசினார். ஆனால், இன்றை க்கு எதிர்கட்சித் தலைவரின் உரையை இரண்டு மணி நேரம் உட்கார்ந்து கேட்க வைத்திருக்கிற பெருமையை இந்திய வாக்கா ளர்கள் நிலைநிறுத்தி இருக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல எந்த விவசாயிகளுடைய டிராக்டர்கள் தில்லிக்குள் வரக்கூடாது என்று இந்த அரசு உத்தரவு போட்டதோ, இன்றைக்கு அதே விவசாயப் போராட்டத்தின் தலைவர் எங்கள் அன்புத் தோழர் அம்ரா ராம் டிராக்ட ரிலே நாடாளுமன்றம் வந்து பதவிப் பிரமா ணத்தை எடுத்திருக்கிறார் என்பதை இங்கே நான் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன்.
அயோத்தி மக்களின் அழகான தீர்ப்பு- அவதேஷ் பிரசாத்
பிரதமருடைய அன்றையப் பேச்சு முழுக்க முழுக்க அயோத்தியைப் பற்றி இருந்தது. ஆனால் இன்றைக்கு குடியரசுத் தலைவரின் உரையில் அயோத்தி என்ற சொல்லே இல்லை. உங்களுக்கு வாக்களிக்காவிட்டால் அயோத்தியையும் கைவிடுவீர்கள், ஆண்டவனையும் கைவிடு வீர்கள் என்பது தான் குடியரசுத் தலைவர் உரையின் மூலம் இந்த நாட்டு மக்களுக்கு சொல்லியுள்ள செய்தி.
இன்றைக்குத் தான் அயோத்தியைப்பேச வேண்டும். ஒரு பொதுத் தொகுதியில் பட்டியல் சமூகத்தைச் சார்ந்த அவதேஷ் பிரசாத் என்ற நாடாளுமன்ற உறுப்பினரை மக்கள் தேர்வு செய்திருக்கிறார்கள். எவ்வளவு அழகான ஒரு ஜனநாயகத்தின் தீர்ப்பு.
கோயில்கள் வாக்குச்சாவடி வாசல் அல்ல!
கோயில்களை வாக்குச் சாவடியின் வாசலாக பாஜக பார்க்கிறது. கோயில்கள் வாக்குச் சாவடி களின் வாசல்கள் அல்ல, அது ஆன்மீகத்தின் உறைவிடம் என்பதை உங்களுக்கு சொல்லி யிருக்கிறார்கள் அயோத்தி மக்கள்.
அதுமட்டுமல்ல நண்பர்களே, அயோத்தியினு டைய ராமர் உங்களை கைவிட்டார். எனவே தான் நீங்கள் ராமரைக் கைவிட்டு விசுவநாதரிடம் போனீர்கள்; வாரணாசியிலே காசி விசுவநாதர் முதல் மூன்று சுற்று உங்களை தவிக்கவிட்டார். ‘தெய்வத்தின் குழந்தை’ என நீங்கள் சொல்லியதை மனிதர்களான எங்களாலேயே தாங்கிக் கொள்ள முடியவில்லை. தெய்வங்களால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும்? விசுவநாதரிடமிருந்து இன்றைக்கு ஜெகன்நாதரிடம் போயிருக்கிறீர்கள். விரைவில் ஜெகன்நாதர் உங்களுக்கு நல்ல அருளைப் பாவிப்பார்.
செங்கோல்- பெண்ணடிமைத் தனத்தின் அடையாளம்
இங்கே அமைச்சர்கள் எல்லாம் பேசினார்கள். மீண்டும் செங்கோலோடு எங்களது பிரதமர் மோடி நாடாளுமன்ற அவைக்குள் நுழைந்திருக்கிறார் என்று. செங்கோல், மணிமுடி, சிம்மாசனம் இதை யெல்லாம் தகர்த்து விட்டுத் தான் இந்திய ஜனநாயகம் இந்த அவையிலே கால் ஊன்றியது. மன்னராட்சி எப்பொழுது ஒழிந்ததோ, அப்பொ ழுதே செங்கோலின் மகிமையும் ஒழிந்து விட்டது.
செத்துப் போன சிங்கத்தின் தோலை போர்த்திக் கொண்டு காட்டுக்கு ராஜா நான் தான் என்று நீங்கள் கதையடித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்குத் தெரியுமா? இந்த செங்கோலை வைத்திருந்த ஒவ்வொரு மன்னனும் தனது அந்தப்புரத்திலே எத்தனை பெண்களை அடிமையாக வைத்திருந்தான் என்று?
சாவர்க்கர் உள்ளே, காந்தி - அம்பேத்கர் வெளியேவா..?
இந்த செங்கோலைக் கொண்டு வந்து இந்த இடத்திலே வைத்ததன் மூலம் இந்த நாட்டுப் பெண்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? வேதனையாக இருக்கிறது. இந்த இடத்திலே நாங்கள் மீண்டும் பதிவு செய்ய விரும்புகின்றோம். நாடாளுமன்றத்தினுடைய நுழைவு வாசலில் தேசத் தந்தை காந்தியின் சிலை இருந்தது. நாடாளுமன்றத்தின் முன்புறம் அண்ணல் அம்பேத்கரின் சிலை இருந்தது. இன்றைக்கு அவைகளெல்லாம் காணவில்லை. நாடாளுமன்றத்தின் பின்புற வாச லிலே காந்தியைக் கொண்டு போய் வைத்திருக் கிறீர்கள். அம்பேத்கரைக் கொண்டு போய் வைத்தி ருக்கிறீர்கள். ஆனால் சாணக்கியரையும், சாவர்க்க ரையும் செங்கோலையும் நாடாளுமன்றத்திற்கு உள்ளே வைத்திருக்கிறீர்கள்.
அழிக்க நினைத்தால், உயர்த்திப்பிடிப்போம்!
ஆளுங்கட்சிக்காரர்களுக்கு நாங்கள் சொல்லிக் கொள்வோம். நாங்கள் அரசியல் சாசனத்தை கையிலே ஏந்தியபடி பதவி ஏற்றுக் கொண்டோம். ஏன் தெரியுமா? உங்களால் எது அழிக்கப்பட இருக்கிறதோ- அதை உயர்த்திப் பிடிக்கத் தான், மக்கள் எங்களுக்கு வாக்களித்தி ருக்கிறார்கள். நீங்கள் எதை அழிக்க நினைக் கிறீர்களோ நாங்கள் அதை உயர்த்திப் பிடிப்போம். அதேபோல செங்கோல் இரண்டு செய்தியின் குறியீடு.
ஒன்று மன்னராட்சியின் குறியீடு. அதேபோல இரண்டாவது குறியீடு அறம். இது நேர்மையின் குறியீடு. ஆனால், உங்களுக்கும் நேர்மைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. தமிழ்நாட்டுத் தேர்த லுக்கு எட்டு முறை பிரதமர் வந்தார். தமிழ்நாட்டின் பெருமையை, தமிழ்மொழியின் பெருமையை, தமிழ்ப் பண்பாட்டின் பெருமையைப் பேசினார்.
மோடி அளவிற்கு தமிழர்களை இழிவுபடுத்தியது யாருமில்லை
தேர்தல் முடிந்ததும் உத்தரப் பிரதேசத்திலே போய் தமிழர்களைப் பற்றி நீங்கள் என்ன பேசினீர்கள்? பீகாரிலே என்ன பேசினீர்கள்? ஒடிசாவிலே என்ன பேசினீர்கள்? உங்களுக்கு அந்த அரசியல் அறமும், நேர்மையும் இருந்திருந் தால் நீங்கள் அதைத் தமிழ்நாட்டில் பேசியிருக்க வேண்டும். எந்த ஆட்சியாளரும் இவ்வளவு இழிவாகத் தமிழர்களை பேசியதில்லை.
அதேபோல சிறுபான்மை மக்களை ஊடுரு வல்காரர்கள் என்று, அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்கிறவர்கள் என்று செல்வத்தை அபகரிக்கிற வர்கள் என்று நீங்கள் பேசுகிறீர்கள். தொடர்ந்து இதையெல்லாம் தேர்தல் ஆணையம் பார்த்துக் கொண்டிருந்தது.
பதிலளிக்காமல் தப்பி ஓடும் ஒன்றிய அமைச்சர்கள்
அதேபோல இன்றைக்குத் தேர்தலுக்குப் பிறகு ‘நீட்’ தேர்வு பிரச்சனை . ஏறக்குறைய ‘கோச்சிங் மாபியாக்கள்’ தேர்தல் முகமைகளை தங்கள் கை களிலே வைத்திருக்கிறார்களோ என்று மக்கள் அஞ்சுகிறார்கள். அதைப்பற்றி கல்வி அமைச்சர் பேச மறுக்கிறார். ரயில் விபத்தைப் பற்றி ரயில்வே அமைச்சர் பேச மறுக்கிறார். மணிப்பூர் வன்முறைகளைப் பற்றி உள்துறை அமைச்சர் பேச மறுக்கிறார். ஆனால் அதற்குப் பதிலாக தேர்த லுக்குப் பிறகு இந்தியாவின் பல இடங்களில் சிறு பான்மை மக்கள் மீதான தாக்குதல் கட்டவிழ்த்து விடப்படுகிறது. அதேபோல பல இடங்களிலே- எழுத்தாளர் அருந்ததிராய் துவங்கி அரவிந்த் கெஜ்ரி வால் வரை அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவை நிறுத்தப்பட வேண்டும்.
பாஜக-வின் சரிவு ஆரம்பமாகிவிட்டது
இந்தத் தேர்தலின் மூலம் உங்களது சரிவு ஆரம்பமாகி விட்டது. 63 இடங்களை மக்கள் பறித்தார்கள் என்பது மட்டுமல்ல, உங்கள் தோழமைக் கட்சிகளையே நீங்கள் மதிக்கப் பழகி விட்டீர்கள். 12 எம்.பி.க்கள் கொண்ட கட்சிக்கு பிரதமர் எழுந்து நின்று வணக்கம் சொல்கிறார். அது இந்த நாட்டின் தலைப்புச் செய்தியாக மாறுகிறது.
ஜனநாயகத்தின் குரல், சமூகநீதியின் குரல், பொருளாதார நீதியின் குரல் தான் இந்தியாவின் குரல் என்பதை மக்கள் மீண்டும் மீண்டும் நிரூபிப்பார்கள் என்று சொல்லி முடிக்கிறேன்.

---------------------------------------------------------------------------------------------------

இந்த உரையைக் கண்டித்து ஆட்டுக்காரன் வழக்கம் போல அபத்தமாக உளற, அதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் தோழர் சு.வெ.

அந்த பதிலடி கீழே

--------------------------------------------------------------------------------------------------------------

திருவாளர் அண்ணாமலை அவர்களே,
குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றிதெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான எனது உரை குறித்து நீங்கள் கருத்துத் தெரிவித்துள்ளீர்கள்.
“செங்கோல் என்பது ஒன்று மன்ன ராட்சியின் குறியீடு. இரண்டாவது நேர்மை யின் குறியீடு. நேர்மைக்கும் பாஜகவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? தமிழ்நாடு தேர்தல் முடியும் வரை தமிழர்களைப் பாராட்டிப் பேசிவிட்டு, தேர்தல் முடிந்த வுடன் உ. பி.யிலும் ஒடிசாவிலும் தமிழர் களை அவமானப்படுத்தியவர்கள் தானே நீங்கள்” என்று பேசினேன்.
ஆனால் நீங்களோ, “செங்கோல் அறத் தின், நேர்மையின் குறியீடு” என்று நான் சொன்னதை வசதியாக மறைத்துவிட்டு மன்னராட்சியின் குறியீடு என்பதையும் மன்னர்கள் தங்களது அந்தப்புரத்தில் பெண்களை அடிமையாக வைத்திருந்த னர் என்பதையும் மட்டும் விமர்சித்திருக் கிறீர்கள்.
‘செங்கோல்’ என்றால் என்ன?
‘செங்கோல் அறத்தின், நேர்மையின் குறியீடு’ என்பதைப் பற்றிப் பேசாமல் தவிர்த்ததன் மூலம் பாஜகவின் நேர்மை யின்மையை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளீர்கள்.
அதிகாரத்தில் இருப்பவர்களை அற வழிப்படுத்துவதும் நீதியின்பால் ஆட்சி செய்ய வைப்பதும்தான் காலங்காலமாக இருந்துவரும் பெரும்பிரச்சனை. அத னால்தான் அறத்தின் குறியீடாக செங்கோ லைத் தமிழ் இலக்கியங்கள் பேசின. “வம்ப வேந்தர்களாகவும், பிறர் மண் உண்ணும் செம்மல்களாகவும்” மன்னர்கள் தான்தோன்றித்தனமாக ஆட்சி நடத்திய போது அவர்களை கொடுங்கோல் ஆட்சி நடத்தாதீர்கள் என இலக்கியங்கள் இடித்துரைத்தன. நீதி மற்றும் அறத்தின் குறியீடாக “செங்கோல்” என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.
மன்னராட்சிக் காலம் முடிந்துவிட்டது. ஜனநாயகக் காலத்திற்கு வந்துவிட்டோம். நமக்கான நீதியின் அடையாளமாகவும் அடிப்படையாகவும் நமக்கு நாமே உரு வாக்கிக்கொண்டதுதான் இந்திய அரசியல் சாசனம்.
உங்களை வழிநடத்துவது எது?
நாடாளுமன்ற வாசலில் இருந்த தேசத்தந்தை காந்தியின் சிலையையும் அண்ணல் அம்பேத்கரின் சிலையை யும் அகற்றிவிட்டு, எங்கோ ஓர் அருங்காட்சி யகத்திலிருந்த செங்கோலை எடுத்து வந்து அவையின் மையத்தில் நிறுவுகிறீர்கள்.
நாடாளுமன்றத்தில் நாற்பதடி உய ரத்திற்கு சாணக்கியனின் உருவத்தைப் பொறிப்பதும் நாடாளுமன்றத்தின் ஆறு வாசலுக்கும் சமஸ்கிருதத்தில் பெயர் சூட்டுவதும் தற்செயலல்ல. உங்களது இந்துத்துவா மதவெறித்தத்துவம் உங்க ளை வழிநடத்துகிறது. அதற்குத் தடை யாக இருக்கும் அரசியல் சாசனத்தை நீங்கள் அகற்ற நினைக்கிறீர்கள்.
இந்திய மக்கள் அனைவருக்குமான சட்டங்கள் இயற்றப்படும் மாமன்றத்தில் நமது அரசியல் சாசனமும் அது சார்ந்த அடையாளங்களுமே கோலோச்ச வேண்டும். அங்கே மன்னராட்சிக்கால அடையாளத்தைக் கொண்டுவந்து நிறுவுவது நமது ஜனநாயக அமைப்பின் மீதான திட்டமிட்ட கருத்தியல் தாக்குதல் ஆகும்.
எனவேதான் நாங்கள் அரசியல் சாசனத்தைக் கைகளில் ஏந்தி 18ஆவது நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தோம். அதனை உயர்த்திப்பிடித்துப் பதவி யேற்றுக்கொண்டோம். “நீங்கள் அழிக்க நினைப்பதை காப்பாற்றத்தான் மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர்” என்று நாடாளுமன்றத்தில் முழங்கினோம்.
மதுரைக்கு வந்து பாருங்கள்
திரு.அண்ணாமலை அவர்களே,
மதுரை மாநகராட்சி மேயர் பொறுப் பேற்ற பொழுது அவரிடம் கொடுக்கப் பட்டது குடியாட்சியின் குறியீடான இந்திய அரசுச் சின்னம் பொறிக்கப்பட்ட செங்கோல்; நாடாளுமன்றத்தில் உள்ள தைப் போன்று மத அடையாளங்கொண்ட செங்கோல் அல்ல.
நீங்கள் நாளையே மதுரை மாநகராட்சி யின் கூட்ட அரங்கிற்கு செல்லுங்கள். அங்கு அச்செங்கோல் இருக்காது. அது கருவூல அறையில் வைக்கப்பட்டிருக்கும். செங்கோலைக் குறியீடாக பயன்படுத்து வதற்கும் அதனை அரசியல் அதிகாரத்தின் அடையாளமாக நிலைநிறுத்துவதற்கும் வேறுபாடு உண்டு.
பெரியோரை வணங்குதல் என்பது வேறு. மக்களவையில் எல்லோரையும் விடப் பெரியவர் அவைத் தலைவர்தான் என்பதை ஏற்றுக் கொள்ள மறுப்பது என்பது வேறு. பண்பாட்டின் பெயரைச் சொல்லி சட்ட விதிகளை நிராகரிக்கும் உரிமையை ஒவ்வொருவரும் கையிலெடுத் தால் இந்த நாட்டின் நிலைஎன்னவாகும்?
எல்லாவற்றையும் விட உயர்ந்தது அரசியல் சாசனமும், அது உருவாக்கி யுள்ள ஜனநாயக விதிகளும் தான் என்பதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் சாணக்கியனின் மூலமும், செங்கோலின் மூலமும் தாக்குதலை நடத்துகிறார்கள்.
அந்தத் தாக்குதலை எதிர்கொள்ளும் வல்லமையும் முதிர்ச்சியும் இந்திய ஜனநா யகத்திற்கு உண்டு. அதன் வெளிப்பாட்டில் ஒன்றுதான் நடந்து முடிந்த நாடாளு மன்றத் தேர்தல் முடிவு.
மன்னராக உணர்கிற தெய்வப்பிறவி
ஆனால் இந்த 1 8 ஆவது நாடாளுமன்றத் திற்கு வரலாற்றில் இதுவரை இல்லாத புதிய பிரச்சனை வந்து நிற்கிறது. தெய்வப் பிறவி என்று தன்னை கருதிக்கொள்ளும் ஒருவர், மன்னராட்சிக்கால அடையாளத் தை கொண்டுவந்து வைத்துக்கொண்டு ஜனநாயக நாட்டின் பிரதமராக வீற்றிருக் கிறார்.
ஒரே நேரத்தில் தன்னைத் தெய்வப்பிற வியாக நம்பி, மன்னராகவும் உணர்கிற ஒரு பிரதமரிடம் இந்த நாடு போராடிக் கொண்டிருக்கிறது. எங்கள் போராட்டத் தின் உண்மையையும் நேர்மையையும் மக்கள் அறிவார்கள்.
நீங்கள் எனது எழுத்தின் வாசகர் என்று கூறியுள்ளீர்கள். மகிழ்ச்சி. எனது இரண்டு நாவல்களிலும் காலம்தான் கதாநாயகன்.
“அதிகாரத்தின் உச்சத்தில் அமர்ந்து கொண்டு நான் தான் எல்லாமுமாக இருக் கிறேன் என உலகுக்கு அறிவித்துக் கொண்டவர்களை எல்லாம் காலநதி ஒரு கூழாங்கல்லைப் போல உருட்டி எங்கோ கொண்டு சென்றுள்ளது”.
வரலாற்றுச் சக்கரம் எப்போதும் முன்னோக்கியே நகரும். காலத்தை பின்னுக்கிழுக்க நினைப்பவர்களின் அகந்தை நிலைக்காது. இது சாணக்கிய நீதிக் காலம் அல்ல; சமூகநீதியின் காலம், சமத்துவத்தின் காலம்.
“அதிகாரத்தின் உச்சத்தில் அமர்ந்து கொண்டு
நான் தான் எல்லாமுமாக இருக்கிறேன் என
உலகுக்கு அறிவித்துக் கொண்டவர்களை எல்லாம் காலநதி ஒரு கூழாங்கல்லைப் போல உருட்டி எங்கோ கொண்டுசென்றுள்ளது”
--------------------------------------------------------------------------
யானை மாலை போட்டு பிச்சைக்காரி அரசியான "சரஸ்வதி சபதம்" கதை போல மாநிலத் தலைவரான நீயெல்லாம் தோழர் சு.வெ வுடன் மோதலாமா? இப்படி அசிங்கப்படலாமா?

வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை உள்ளவரென்றால் ஒரு முழம் கயிற்றைத் தேடி போயிருப்பார்கள். உனக்குத்தான் அதெல்லாம் கிடையாதே!