Wednesday, August 31, 2011

எலேய், எங்களோடயே விளையாடறியா?



இந்தியாவின் பல விளையாட்டு  அமைப்புக்களை 
முறைப்படுத்துவதற்கான   ஒரு மசோதா விளையாட்டுத்துறை
அமைச்சர் அஜய் மக்கானால் முன்வைக்கப்பட்டு  மத்திய
அமைச்சரவையால்   நிராகரிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வாரியம், ஹாக்கி அமைப்பு, ஒலிம்பிக் சங்கம்
உட்பட எத்தனையோ விளையாட்டு அமைப்புக்கள் 
இருந்தபோதும் அவை அனைத்தும் ஊழல்களாலும்
நிர்வாக சீர்கேடுகளாலும் அதிகார துஷ்பிரயோகங்களாலும்
நாசமாய் போய் விட்டன.

 விளையாட்டுக்களை, விளையாட்டு    வீரர்களை
ஊக்குவிப்பதைத்தவிர  மற்ற அனைத்தையும் மட்டுமே
இந்த அமைப்புக்கள்   செய்து வருகின்றன.

இவற்றை முறைப்படுத்துவது, முறையாக தேர்தல்
நடத்துவது, தலைவர்களின் வயது வரம்பை  எழுபது
என நிர்ணயிப்பது போன்ற பல்வேறு அம்சங்களை
உள்ளடக்கிய மசோதாவை விளையாட்டுத்துறை 
அமைச்சகம் தயார் செய்ய அது அமைச்சரவையிலேயே
நிராகரிக்கப்பட்டுவிட்டது. 

மசோதாவை   அறிமுகம்  செய்த உடனேயே  பழம் 
தின்று கொட்டை போட்ட அமைச்சர்கள்  பொங்கி
எழுந்து விட்டனர். சர்வதேச கிரிக்கெட்  கவுன்சில்
 தலைவர் சரத் பவார், கால்பந்து சங்க தலைவர் 
 பிரபுல் படேல், காஷ்மீர் கிரிக்கெட்  சங்க தலைவர்
பரூக் அப்துல்லா, இவர்களோடு காங்கிரஸ் கட்சி 
 அமைச்சர்கள்  சி.பி.ஜோஷியும்  கமல்நாத்தும் 
கடுமையாக எதிர்க்க மசோதா நிராகரிக்கப்பட்டு
விட்டது. 
 அனைத்து விளையாட்டு   அமைப்புக்களையும் 
இன்று கட்டுப்படுத்துவது அரசியல்வாதிகள்தான். 
 அவற்றை முறைப்படுத்துவது  என்பது அவர்களின்
ஆதாயத்தை வெட்டுவது தான். 
எனவேதான் அவர்கள்  
எலேய், எங்களோடயே  விளையாடறியா? 
என்று  அமைச்சரவைக்கு ஆட்டம் காண்பித்து
விட்டார்கள். 
ஒன்று மட்டும் நிச்சயம் சொல்ல முடியும்.

 இந்தியாவில் விளையாட்டு
இனி மெல்லச் சாகும்....

Tuesday, August 30, 2011

சோனியா காந்தி, மன்மோகன்சிங் கவனத்திற்கு

 எங்கள் சங்க மாத இதழ் சங்கசுடருக்காக  எழுதியது

 


நூல்  அறிமுகம்

நூல்     :  நேரு  வழக்குகள்

ஆசிரியர் : ஞாலன் சுப்பிரமணியன்,

வெளியீடு : பாரதி புத்தகாலயம்
                      சென்னை - 18

விலை : ரூபாய்  90.00

இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த பண்டித ஜவஹர்லால் நேரு
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது ஒன்பது முறை கைது
செய்யப்பட்டு  எட்டு வருடங்களுக்கு  மேல் சிறைவாசம்
அனுபவித்துள்ளார்.

எந்தெந்த வழக்குகளில் அவர் ஏன் கைது செய்யப்பட்டார்
என்ற விவரங்களை தெரிவிக்கும் நூல் இது. அந்த
காலகட்டத்தை அறிந்து கொள்ள உதவவும் வழிவகை
செய்கின்ற நூல் இது.

குறைந்த பட்சம் 12 நாட்கள் முதல் அதிகபட்சம் 1040 நாட்கள்
வரை மொத்தம் 3262 நாட்கள் அவர் சிறையில் இருந்துள்ளார்.
பிரசுரம் வினியோகம் செய்தது தொடங்கி, சட்டங்களை
மீறியது, தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குச் சென்றது,
உணர்வுகளை தூண்டும் விதங்களில் கூட்டங்களில்
பேசியது போன்ற காரணங்களுக்காக அவர் கைது செய்யப்
பட்டுள்ளார்.

எந்த ஒரு வழக்கிலும் அவர் தனது விடுதலைக்காக
சொந்தமாகவோ அல்லது வேறு வழக்கறிஞர் கொண்டோ
வாதாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சில வழக்குகளில்
சட்டப்பிரிவுகள் தவறாக இருந்த போதிலும் கூட அதனை
தனது விடுதலைக்காக பயன்படுத்த விரும்பவில்லை.
மாறாக தனது நிலைப்பாட்டை, சுதந்திரப் போராட்டத்தை
நியாயப்படுத்தும் அறிக்கைகளை முன் வைக்கவே நேரு
நீதிமன்றங்களை பயன்படுத்திக் கொண்டார் என்று
பார்க்கிற போது அவர் மீதான மதிப்பு உயர்கின்றது.

அவர் நீதிமன்றத்தில் அளித்த ஒரு அறிக்கை பின்வருமாறு
அமைந்துள்ளது.

 "தன் மீது கொடுங்கோன்மை செலுத்தி
நசுக்கும் எந்த ஒரு அரசாங்கத்தையும் கவிழ்க்கும் உரிமை
மக்களுக்கு உண்டு. இந்த உரிமையைத்தான்  அன்று
இந்திய மக்கள் அன்று பிரகடனப்படுத்தினர். அந்த சபதம்
எடுத்த நாளிலிருந்து பிரிட்டிஷ் அதிகாரத்திற்கு எந்த
இந்தியனும் மனப்பூர்வமாக பணிய மாட்டான். அந்த
ஆட்சியை அங்கீகரிக்க மாட்டான். இப்போராட்டம்
நடக்கும் போது  எங்களில் சிலர் எதிரியுடன் கூடிப்
பேசினால் அது அடிக்கும் கோலை முத்தமிடுவதாகும்.
தம்மைப் பிணைக்கும் சங்கிலிகளை ஆரத் தழுவதாகும்.

ஆனால் நாடு வேறு வழியைத்தான் தேர்ந்தெடுத்துள்ளது.
வெற்றி கிட்டும் வரை அப்பாதையிலேயே  தொடர்ந்து
செல்லும். சுதந்திரத்திற்கும் அடிமைத்தனத்திற்கும்
இடையே சமரசம் இருக்க முடியாது. உண்மைக்கும்
பொய்மைக்கும்  இடையே சமரசம் இருக்க முடியாது.
சுதந்திரத்தின் விலை உதிரமும் தியாகமும் தான்
என்பதை  நாங்கள் உணர்ந்திருக்கிறோம்."

இப்படிப்பட்ட தலைவர்களால் வழி நடத்தப்பட்ட
காங்கிரஸ் கட்சி இன்று எவ்வளவு பெரிய வீழ்ச்சியை
அடைந்துள்ளது. சுதந்திரத்தை  அமெரிக்காவின்
காலடியில் சமர்ப்பித்துள்ளது என்ற கோபத்தை
இந்த நூல்  உருவாக்குகின்றது.

நாம் மட்டுமல்ல, சோனியா, மன்மோகன்சிங்
வகையறாக்களும் படிக்க வேண்டிய  ஒரு
வரலாற்று ஆவணம்  இந்த நூல்.



பிரதமரின் குரலால் பறி போன அறுபது லட்ச ரூபாய்.

 எங்கள் மாத இதழ் சங்கச்சுடரில்  வரும் "ஊழல்களின் ஊர்வலம் "
தொடருக்காக  எழுதப்பட்டது.


24 மே 1971, புது டெல்லியின்  பரபரப்பான  ஸ்டேட் வங்கியின் 
பிரதான கிளையின் பிரதான காசாளர் வேத் பிரகாஷ் மல்ஹோத்ராவிற்கு
காலையில்  ஒரு தொலைபேசி வருகின்றது. மறு முனையில் அன்றைய
பாரதப் பிரதமர் திரு இந்திரா காந்தி. வங்க தேசத்தைச் சேர்ந்த  ஒருவர்
வருவார், அவரிடம் அறுபது  லட்ச ரூபாய்  கொடுத்தனுப்பவும்  என
அவர் கூறுகின்றார்.

அப்படியே  ஒரு நபர் வருகின்றார். 60 லட்ச ரூபாய் கைமாறுகின்றது.
மாலை வரை காசோலையோ  அல்லது பணம்  பெற்றதற்கான
அத்தாட்சியோ  வராததால் பிரதமரின்  வீட்டிற்குப் போகின்ற
வி.பி.மல்ஹோத்ரா வை  பிரதமர் யாரிடமும் பணம் கொடுக்கச்
சொல்லி  தொலைபேசியில் பேசவில்லை  என்று  பிரதமரின்
முதன்மை  உதவியாளர்  பி.என்.ஹக்சர்  அனுப்பி விடுகின்றார்.

காவல்துறையில்  புகார் கொடுத்ததும்  பணம்  பெற்றுச்  சென்ற
அந்த நபரை  கண்டு பிடித்து கைது செய்து விடுகின்றனர். உளவுத்
துறையான "ரா' அமைப்பைச்  சார்ந்த  நகர்வாலா  என்ற  அந்த
நபர்  இந்திரா காந்தி போல  மாற்றுக் குரலில்  பேசி  பணத்தை
மோசடி  செய்தார்  என வழக்கு பதிவு செய்து சிறையில் 
அடைக்கிறார்கள்.  அந்தப்பணம்  இந்திரா காந்தியின்  சொந்தப்பணம்
என்று எதிர்கட்சிகள்  குற்றம் சுமத்தின.  ஆனால்  அவற்றுக்கெல்லாம்
அவர் பதில் சொல்லவில்லை.

இந்த வழக்கில் பல மர்ம முடிச்சுக்கள் உண்டு. நான்கு ஆண்டு
சிறைத்தண்டனை பெற்ற நகர்வாலா  சிறையிலேயே  மன நிலை
பாதிக்கப்பட்டு  இறந்து போனார். வழக்கை விசாரணை செய்த
காஷ்யப்  என்ற  காவல்துறை அதிகாரி மர்மமான சாலை விபத்தில்
கொல்லப்பட்டார். 

எவ்வித அத்தாட்சியும் பெறாமல்  60 லட்ச ரூபாயை அள்ளித்
தந்த வி.பி.மல்ஹோத்ரா மீது  ஸ்டேட் வங்கி எவ்வித நடவடிக்கையும்
எடுக்கவில்லை. சஞ்சய் காந்தி துவங்கிய மாருதி உத்யோக் கார்
கம்பெனியின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக  நியமிக்கப்பட்ட
அவருக்கு புது டெல்லியில்  பல்வேறு பேருந்துகளை இயக்க அனுமதி
வழங்கப்பட்டது.

பின்னாளில் சி.பி.ஐ யின் இணை இயக்குனர் மாதவன் இவ்வழக்கின்
கோப்புகளை ஆராய அப்பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார்.

பிரதமர் இந்திரா காந்தியின் மர்மங்களில் ஒன்றாகவே  நகர்வாலா
வழக்கு  இன்னும் நீடிக்கிறது.

Monday, August 29, 2011

தனியார் காப்பீட்டு நிறுவனங்களில் பறி போகும் பணிகள்



கடந்த ஒரு நிதியாண்டில் மட்டும் வெறும்  ஆறு தனியார் காப்பீட்டு
நிறுவனங்களில்  மட்டும்  உள்ள பணியிடங்கள் 89607  லிருந்து 
65615    ஆக குறைந்துள்ளது. ஓர் ஆண்டில் மட்டும் 23,992 பேர்
வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.  விபரங்கள் கீழே
தரப்பட்டுள்ளது.

ஐ.சி.ஐ.சி.ஐ புருடென்ஷியல்        7000
பஜாஜ் அல்லயன்ஸ்              5062
மாக்ஸ் நியூயார்க்                   3454
டாடா ஏ.ஐ.ஜி                              2700
ஹெச்.டி.ஃஎப்.சி லைப்          2300
ரிலையன்ஸ் லைப்               3473

ஆட்குறைப்பு  செய்து லாபத்தை  பெருக்குவது  என்ற
உலகமய சித்தாந்ததிற்கு  தனியார் காப்பீட்டு  நிறுவனங்கள்
மட்டும்  விதி விலக்கா  என்ன?

லோக்பாலையும் தாண்டி


அண்ணா ஹசாராவின் 12 நாள் உண்ணாவிரதம் நாடாளுமன்றம் அளித்த
உறுதி மொழியை அடுத்து முடிந்திருக்கிறது. லோக்பால் மசோதா குறித்து
நாடாளுமன்ற நிலைக்குழு  அண்ணா ஹசாரே  தெரிவித்த கருத்துக்களை
விவாதிக்கும். அதிகார மட்டத்தில் கீழே உள்ளவர்களையும் லோக்பால்
வரம்பிற்குள் கொண்டு வருவது, மக்கள் சாசனத்தை பரிசீலிப்பது,
மாநிலங்களில் லோக் ஆயுக்தா கொண்டு வருவது போன்ற அம்சங்கள்
ஏற்றுக் கொள்ளப்பட்டது. முக்கியக் கோரிக்கையாக இருந்த பிரதமர்
மற்றும் உயர் நீதித்துறையை கொண்டு வருவது என்பது பற்றி
ஏன் இப்போது யாருமே பேசவில்லை என்பது மர்மமாக உள்ளது.

ஊழல்களில் நிறுவனங்களின் பற்றி அண்ணா ஹசாரே  எதுவுமே
சொல்லாதது என்பது அவர் மீதான விமர்சனம் என்ற போதிலும்
ஊழலுக்கு எதிரான ஒரு பரந்த கருத்தோட்டத்தை உருவாக்குவதில்
அவரது பங்கு மகத்தானது.

லோக்பால் சட்டம் மட்டுமே ஊழலை கட்டுக்குள் கொண்டு வரும்
என்ற பிரமை யாருக்கும் தேவையில்லை. தேர்தல் சீர்திருத்தம்,
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள  சில
உரிமைகளை கட்டுப்படுத்துதல், கருப்புப் பணத்தை கைப்பற்ற
உறுதியான சட்டங்கள், நடவடிக்கைகள், நீதித்துறை செயல்பாடுகளை
கண்காணிக்க தேசிய நீதித்துறை ஆணையம், அதிகார வர்க்கத்திற்கும்
முதலாளிகளுக்கும் இடையேயான தொடர்புகளை கண்காணித்தல்,
மக்கள் முன்வைக்கும் குறைபாடுகளை களைய உறுதியான
ஏற்பாடுகள். ஊழல்களை அம்பலப்படுத்துவோரை பாதுகாத்தல்
ஆகியவை  அவசியம் தேவைப்படுகின்ற நடவடிக்கைகள்.

அப்போதுதான் ஊழலை கட்டுப்படுத்துவது என்ற திசைவழியில்
முன்னேற முடியும்.

Sunday, August 28, 2011

இவர்களை நம்பி யாரும் கொலை செய்ய வேண்டாம்.

நீதிபதியாக தகுதி பெறாத வழக்கறிஞர்கள்


சில தினங்கள் முன்பு நாளிதழில் படித்த செய்தி இது.
கர்நாடக மாநிலத்தில்  மாவட்ட நீதிபதி பதவிக்காக
நடைபெற்ற எழுத்து தேர்வில் பங்கேற்ற   518   
வழக்கறிஞர்களில்  ஒருவர்  மட்டுமே  தேர்ச்சி 
பெற்றுள்ளார். மற்ற அனைவரும்  தோல்வி 
அடைந்துள்ளனர். 


 சிவில் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம்
 ஆகிய இரு பிரிவுகளில்  ஒவ்வொன்றிலும் 
ஐம்பது மதிப்பெண் எடுக்க வேண்டும். சிவில்
  சட்டத்தில் எட்டு பேர் ஐம்பது   மதிப்பெண் 
 பெற்றுள்ளனர். ஆனால் ஒருவர்  மட்டுமே 
 குற்றவியல்  சட்டத்தில்   ஐம்பது   மதிப்பெண்
.பெற்றுள்ளார்



ஏழு ஆண்டுகள் பணி செய்தவர்கள்  மட்டுமே
.விண்ணப்பிக்க முடியும்  என்பது  அதிர்ச்சி செய்தி
வழக்கறிஞர்   தொழில் செய்பவர்கள்  சட்டங்களை
முறையாக  மனதில் கொள்ளவில்லை என்பதையே
 இது  காண்பிக்கிறது. 


அல்லது சிறப்பான வழக்கறிஞர்களை  நீதிபதி
 பதவி ஈர்க்கவில்லை. இது   எதுவுமே 
நீதிததுறைக்கோ  அல்லது   வழக்கு பதிவு
செய்தவர்களுக்கோ  நல்லதில்லை.


ஆக இவர்களை நம்பி யாரும் கொலை செய்யக்கூடாது.


   

Saturday, August 27, 2011

மாறு வேடப் போட்டிகளில் தலைவர்கள்



புதுவை முதல்வர் ரங்கசாமி பிறந்த நாளில் போது
வைக்கப்பட்ட  பல வித பேனர்கள் பற்றி முன்பே
எழுதியிருந்தேன்.

இரு தினங்கள் முன்பு  காஞ்சிபுரம் சென்றிருந்தேன்.
அங்கு போராளி சீருடை, இஸ்லாமியராக, முறுக்கிய
மீசை முண்டாசோடு, திப்பு சுல்தானாக பல
பேனர்கள் தொல்.திருமா விற்கு வைக்கப்பட்டிருந்தது.

அதே போல் விஜயகாந்திற்கும் பல வித
கெட் அப் பேனர்கள் ஆற்காட்டில்.

எல்லா  தலைவர்களும் ஏதோ மாறு வேடப்
போட்டிகளில் பங்கு பெறுவது போல
விதம் விதமாக  இப்போது காட்சியளிக்கிறார்கள்.

ராசுக்குட்டி படத்தில் வரும் பாக்யராஜெல்லாம்
இவர்கள் பக்கம் நெருங்கவே முடியாது.

இந்த மாறு வேட பேனர்களால் மக்கள்
அத்தலைவர்களை வெறும் காமெடி பீஸாகவே
பார்க்கிறார்கள்  என்பது ஏன் தொண்டர்களுக்கு
புரிவதேயில்லை?

அர்த்தமற்ற சர்ச்சைகளில் நேரத்தை விரயமாக்கும் ஜெயலலிதா



முகமது பின் துக்ளக்  ஆட்சிக்காலத்தில்  வாழும்  உணர்வை
ஜெயலலிதா  அவ்வப்போது  உருவாக்கிக் கொண்டுள்ளார்.

கலைஞர் ஆட்சிக்கால முடிவுகளை எல்லாம்  மாற்றிக் கொண்டே
இருப்பது அவரது வாடிக்கையாகி விட்டது.

தமிழ் வருடம் மீண்டும்  சித்திரை  முதல் நாள்  என்ற  மாற்றம்
அவசியமற்றது. பண்டிகைகள் கொண்டாடுவது அவரவர் விருப்பம்.
அவரவர்களுக்கு  உள்ள வசதி, மரபு  இவற்றைப் பொருத்தது.
பண்டிகை கொண்டாடு அல்லது  கொண்டாதே  என்று  அரசு
உத்தரவு போட்டு  அமுலாக்குகின்ற விஷயங்களா  என்ன?

சித்திரை முதல் நாளன்று வருடப்பிறப்பு கொண்டாடியவர்கள்
கலைஞர்  உத்தரவு போட்டதும்  உடனே  தை முதல் நாளன்று
மாறி விட்டார்களா? அல்லது தை முதல் நாளன்று
கொண்டாடியவர்கள்  இனிமேல் சித்திரை முதல் நாளன்று
கொண்டாடப் போகின்றார்களா?

அரசு  உத்தரவிற்கு மாறாக வேறு தினத்தில்  கொண்டாடினால்
அரசால் என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?

உருப்படியான விஷ்யங்களை விட்டு  அர்த்தமற்ற
சர்ச்சைகளில் நேரத்தை  விரயமாக்க  தமிழகத்தினுடைய
அரசியல்வாதிகளால்  மட்டுமே  முடியும்.

ஜெயலலிதா கலைஞர்  ஆட்சிக்காலத்தை  விட்டு  வெளியேறி
தனது ஆட்சியை நடத்தட்டும்.

Thursday, August 25, 2011

சூப்பர் காமெடி









மின்னஞ்சல்  மூலம்  கிடைக்கப்பெற்ற கார்ட்டூன்களை
பதிவு செய்துள்ளேன். பாருங்கள், ரசியுங்கள், அவசியம் 
சிந்தியுங்கள்.
 

Wednesday, August 24, 2011

" நீ வீணாக்கிய சோற்றில் எழுதப்பட்டிருந்தது அது கிடைக்காமல் பட்டினியால் செத்தவனின் பேர் "

இது எனக்கு வந்த மின்னஞ்சல். 
மனதைத் தைத்தது.
ஆகவே இங்கே. 
 
 
உலகின் மக்கள்தொகையில் 500 மில்லியன் மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கிறார்களாம் .
ஒரு வருடத்தில் பட்டினியால் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை
15 மில்லியன்
.
 Join Only-for-tamil

உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் , உலகின் மூன்றில் ஒருபங்கு மக்கள் மிதமிஞ்சிய ஊட்டமுள்ளவர்கள் என்றும் , மற்றுமோர் பிரிவினர் நிறைவு பெற்றவர்கள் என்றும் மூன்றாம் பிரிவினர் பட்டினியால் உயிரிழந்து கொண்டிருப்பவர்கள் என்றும் தெரிவிக்கிறது.
நீங்கள் இதைப்படித்து முடிப்பதற்குள்
200 பேர் பட்டினியால் செத்திருப்பர்.

 Join Only-for-tamil
4 மில்லியன் இது இந்த வருட முடிவிற்குள் நிகழப்போகும் பட்டினிச்சாவுகளின் எண்ணிக்கை .இதில் கொடுமையான விஷயம் இவர்களில் மூன்றில் ஒன்று 5 வயதிற்குட்பட்ட  குழந்தை ..
 
உலகின் உணவுப்பற்றாக்குறை சதவீதத்தில் 50 % பேர் இந்திய துணைக்கண்டத்தில் வசிப்பவர்கள்.
40%பேர்  ஆப்பிரிக்காவிலும் ஆசியாவின் மற்ற பகுதிகளிலும் வசிப்பவர்கள்.
 
ஒவ்வொரு 3.5 வினாடிக்கும் ஒரு உயிர் போகிறது பட்டினியால் .
 
உலகின் ஆபத்தான பணிகளிலும் மனிதன் ஈடுபடுவது ..ஒருவேளை சோற்றுக்காக.
 கதிர்வீச்சு அபாயமிக்க சுரங்கப்பணிகளிலும் , உயிருக்கு உத்தரவாதமில்லாத சூழ்நிலைகளிலும்  பணியாற்றுவது சோற்றுக்காக.
முன் சொன்னது போல் , கரைக்கு வந்தால் மீன் பிணம் , வராவிட்டால் மீனவன் பிணம்..தெரிந்தும் போகிறானே எதற்கு ?
எல்லாம் ஒருவேளை சோற்றுக்கு.
இதில் வரும் அனைத்தும் வெறும்எண்கள் மட்டுமா ? எண்ணிப்பாருங்கள் ..அத்தனையும் உயிர்கள்.!!
 
"தனியொருவனுக்கு உணவில்லையேல் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் " என்றான் பாரதி .
நாங்கள் அழிக்கக்கேட்கவில்லை ...ஆக்கம் வேண்டுகிறோம்.
 
"இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடு ..ஆயினும் பட்டினிச்சாவுகள் அதிகம் ஏன் ?
உள்ளவர்களுக்கு ஒன்றும்  , இல்லாதவர்களுக்கு வேறொன்றும் என இரண்டு இந்தியாவா ?"
இதை நான் கேட்கவில்லை..இந்திய உயர்நீதிமன்றம் அரசைப்பார்த்துக்கேட்டது.

 
பணம் படைத்தவன் கொலைகாரனோ..கொள்ளைக்காரனோ..சிறையிலடைபட்டாலும் ..சுடச்சுடக் கிடைக்கும் இட்டிலியும் சாம்பாரும் !!
இல்லாதவன் பாடு..எப்போதும் போல..அம்மா தாயே..
இதையெல்லாம் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுச் செல்வோருக்கு ஒரு வேண்டுகோள்..
தினமும் நீங்கள் உண்டதுபோக மீதமாக்கிக் குப்பையிலழிக்கும் உணவு பசியால் வாடும் ஒரு உயிரைப் பிடித்து நிறுத்தும் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா ?
 
ஒரு கவளம் சோற்றைக் கையிலெடுத்ததும் இதயமுள்ள எந்த மனிதனுக்கும் இந்த நினைவு வராமலா போய்விடும் ? 
 
கொடுப்பது அடுத்த விடயம் , அதற்கு முன்
வீணாதலைத் தடுப்போம் என்பதே என் கருத்து.
 
Join Only-for-tamil

 
"அளவறிந்து சமைத்து அளவோடு உண்போம் " என உறுதிகொள்வோம் .   ஒவ்வொரு பருக்கையிலும் அது போய்ச் சேரவேண்டியவனது   பேர் எழுதப்பட்டிருக்கும் என்று சொல்வார்கள்  , அத்தோடு இதையும் சொல்லலாம்..
 
  
உணவு  உண்பதில் பொறுப்போடு  இருப்போம்,
எஞ்சியிருக்கும் தானியத்தை இல்லாதவருக்கு அளிப்போம்

இந்திய கிரிக்கெட் அணி - இங்கிலாந்து அணி பற்றி லொல்லு சபா நண்பேண்டா கமெண்ட்




இது   என் மகனுக்கு வந்த  குறுஞ்செய்தி

 பேட்டிங் பிடிக்க வருவோரையும் பௌலிங்
 செய்ய  வந்தவரையும் லோலோலோவென்று
 லொங்கலிக்கும்  இங்கிலாந்து டீமிற்கு வணக்கம். 
ஸ்டிராஸ் சொன்னாரு எனக்கு இந்த நம்பர் ஒன
ராங்கில எல்லாம்  இஷ்டம் இல்லன்னு. அப்புறம்
எதுக்காக  நீ விளையாட வந்த? ஒன்றைக்கு ஒன்றை 
கிரௌன்டில  ஒரு சீரிஸ் ஜெயிச்ச உனக்கே 
அவ்வளவு  அதுப்புனா, வருஷம்  ஃபுல்லா 
 வோர்ல்ட் கப்பு, ட்வென்டி ட்வென்டி
 ஐபிஎல்  ஜெயிச்ச  எங்களுக்கு எவ்வளவு 
  அதுப்பு இருக்கும். நீ  என்ன அவ்வளவு
பெரிய அப்படக்கரா? இந்தியாவுக்கு வா,
உன் மூஞ்சியில பூரான் விடறோம். 

சீரிஸில்  வேண்டுமானால்  இந்திய அணி 
தோற்றுப் போயிருக்கலாம். ஆனால் 
ரசிகர்களின்  நகைச்சுவை உணர்வு 
அப்படியே உள்ளதல்லவா?

Tuesday, August 23, 2011

மன்மோகன் சிங்கை கல்லால் அடிக்கலாமா? கட்டி வைத்து உதைக்கலாமா?

மன்மோகன்சிங் கையாலாகாதவர் ஆனால் நேர்மையானவர்,
 எதையும் செய்ய துப்பில்லாதவர் ஆனால்  நாணயமானவர்,
அமெரிக்க அடிமை ஆனாலும் இந்தியர்தான் 
என்று நல்லபடியாக நினைக்கும் இந்திய மக்களே,


 அவர் யோக்கியரில்லை, நாணயமானவர்  இல்லை, 
  அமெரிக்காவிற்கும்
. சோனியா ராகுலுக்கும் மட்டும் அடிமை  இல்லை.


 கொல்கத்தாவில்  அவர்  மம்தாவை புகழ்ந்துள்ளார்.


கிழக்கிலே  உதித்த  புதிய சூரியன் என்று .


அது ஒரு அழிவு சக்தி என்றும் நாட்டின் அச்சுறுத்தல்
என அவராலும் அவரது உள்துறையாலும் சொல்லப்பட்ட
  அழிவு சக்திகளோடு  கள்ள அல்ல அல்ல   
நேரடி உறவே வைத்துள்ளார்  என்பது கூட
இந்த புடலங்காய்க்கு தெரியாதா?


இவர் இப்போது மம்தாவிற்கும் அடிமை .  
இந்த  புதிய சூரியன்  இல்லை இல்லை
வெறும் வைக்கற்போர்  கொளுத்தும்
 தீப்பந்தம் இவரையும் ஒரு நாள் 
கொளுத்தப்போகின்றது. 




 இப்போது  சொல்லுங்கள் மனசாட்சியே
இல்லாமல்  விஷ(ம)த்தனமாக பேசும் 
 மன்மோகன்சிங்கை  கல்லால் அடிப்போமா?
  கட்டி  வைத்து   உதைப்போமா? 

ஓவர் நக்கலப்பா

இன்று  காலையில்  வந்த  குறுஞ்செய்தி 

" மதிப்பிற்குரிய  அண்ணா ஹசாரேஜி,
கிரிக்கெட் தொடர் தோல்வியிலிருந்து  மக்கள் கவனத்தை
திசை திருப்பியதற்கு மனமார்ந்த நன்றி 
இப்படிக்கு

மகேந்திர சிங் தோனி "
விலைவாசி உயர்வு, லாரி ஸ்ட்ரைக், போன்ற 
பிரச்சினைகளிலிருந்து   மக்கள்  கவனத்தை
திசை  திருப்பியதற்கு  மன்மோகன்சிங்  கூட
 நன்றி  சொல்லலாம்.

Monday, August 22, 2011

அண்ணா ஹசாராவிற்கும் சர்ச்சை சாமியார் ரவிசங்கருக்கும் என்ன தொடர்பு?



உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும்  அண்ணா   ஹசாரேவுடன்
பேச்சுவார்த்தை நடத்த  சர்ச்சை சாமியாரும்  பிஜேபி சித்தாந்தங்களை
அவ்வப்போது  தனது உபதேசங்களில் அள்ளித் தெளிக்கும் 
ரவிசங்கரது  உதவியை மத்திய  அரசு நாடியுள்ளது. அவரும் விரைவில்
நல்ல செய்தி வரும் என்று  அருள் வாக்கு கூறியுள்ளார்.


அண்ணா ஹசாரே வின் சகாக்கள்  எல்லாமே  சாமியார்கள்  என்ற
பெயரில் பிழைப்பு  நடத்துபவர்கள்தான் போலும். 


ஊழல்களின் ஊற்றுக்கண்ணாக விளங்கும்  பெரும் வணிக 
நிறுவனங்கள்  அளிக்கும் நிதி கொண்டு போராட்டம்  
நடத்தும்   அண்ணா  ஹசாரே   மீது  எனக்கு பெரிய மதிப்பு
கிடையாது. 
சாமியார்கள்   மோசடி பற்றியும் அவர் பேச மாட்டார் 
என்பது  உறுதி. 
அவரது போராட்டத்தின்  பின் ஏதோ  ஒரு மர்மம் 
ஒளிந்திருப்பதாகவே  தோன்றுகின்றது. அதுவும் 
ஒரு  நாள்  நிச்சயம்  வெளி வரும்.


பிம்பங்கள் உடைபட்ட எத்தனையோ புனிதர்களை
பார்த்த தேசம்  இது! இவரது பிம்பம்  தகரும் 
நாளையும்  விரைவில்   எதிர்பார்க்கலாம்
  

சாவே வராத குப்புசாமி - பக்தர்கள் அனாமதேயங்களாக மாறி திட்ட இன்னொரு வாய்ப்பு

கொஞ்சம் மெனக்கெட்டு கீழே   உள்ளதை  
zoom  செய்து படித்து விடுங்கள் .
வழக்கம் போல  பக்தர்கள் அனாமதேயங்களாக மாறி   திட்டலாம். 

 

Saturday, August 20, 2011

மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவமனை நல்லதுதான். ஆனால்?



கலைஞர் கட்டிய தலைமைச் செயலகத்தை மல்டி
ஸ்பெஷாலிடி மருத்துவமனையாகவும் மருத்துவக்
கல்லூரியாகவும் மாற்ற தமிழக  அரசு முடிவெடுத்துள்ளது
நல்லதுதான் . 


கோடிகளை  கொட்டி உருவாக்கப்பட்ட ஒரு கட்டிடம்
பாழும் கட்டிடமாக மாறி சமூக விரோதிகளின் 
புகலிடமாக மாறி  விடுமோ  என்ற அச்சம் இருந்தது.
அக்கட்டிடம் பயன்படுத்தப்பட வேண்டும்  என்ற 
மக்களின் உணர்வுகளை ஏற்க வேண்டிய கட்டாயம்
ஜெயலலிதாவிற்கு  வந்ததும் நல்லதுதான் .

இல்லையென்றால்  எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் 
வீராணம் குழாய்கள்  காட்டுமன்னார் கோயில் 
தொடங்கி  விக்கிரவாண்டி வரையில்  சாலையில்
கிடந்து குடியிருப்பாய்  மாறியது போல ஏதாவது
நிகழ்ந்திருக்கும். கலைஞர் செய்த ஊழலை நினைவு
படுத்தவே   அவ்வாறு  அங்கிருந்து அகற்றாமல் 
வைத்திருந்தார்கள் என நினைக்கிறேன். சரி, அந்த
குழாய்கள் இப்போது எங்கே? 


மூன்று நாட்கள் முன்பு நடந்த சம்பவம்  இது. 
திருப்பத்தூரில்  அலுவலகத்திற்கு  வந்த எங்கள்
தோழருக்கு  மாரடைப்பு வர அங்கே ஒரு 
மருத்துவமனைக்கு  எடுத்து செல்கின்றனர்.
அவர்கள் ஆம்பூரில் உள்ள மருத்துவமனையில்
காண்பித்து விட்டு வேலூர் சி.எம்.சி  போகச்
சொல்லி விட்டனர்.  ஆம்பூர் மருத்துவமனையும்
கை விரித்து விட்டது.


மாரடைப்பு   வந்து  கிட்டத்தட்ட மூன்று
மணி நேரத்திற்குப் பிறகே  அவர்களால் சிஎம்சி
வர முடிந்தது. மிகவும் தாமதம் உயிர் பிழைக்க 
 மிக மிக  வாய்ப்பு குறைவு என்று  சொல்லியே 
உள்ளே அனுமதித்தார்கள். 


செயற்கை சுவாசம் உள்ளிட்ட எந்த சிகிச்சையும்
பலனளிக்கவில்லை.  அவர் உயிர்  பிரிந்து விட்டது.


உடனடி சிகிச்சைக்கு வாய்ப்பிருந்தால்  ஒரு வேளை
அவர்  பிழைத்திருக்கலாம்.
மாநகரங்களில்  பிரம்மாண்டமான மருத்துவமனை 
கட்டுவதை விட  சிறிய ஊர்களில்  அனைத்து அடிப்படை
வசதிகளுடன்  தரமான மருத்துவமனைகள் அமைப்பதே
அவசியமான ஒன்று.


ஜெயலலிதா இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.  

மகத்தான தலைவனுக்கு அஞ்சலி



சி.ஐ.டி.யு  சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளரும் 
மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு 
உறுப்பினருமான  தோழர் எம்.கே.பாந்தே  இன்று 
காலமானார் என்ற செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. 
சிறந்த தொழிற்சங்கவாதி, பொருளாதார அறிஞரான 
தோழர் பாந்தேவின் மறைவு  உழைக்கும் மக்களுக்கு
மிகப் பெரும் இழப்பு. 


தெளிந்த நீரோடை போன்று  ஆணித்தரமாக தனது
கருத்துக்களை முன் வைப்பவர் தோழர்  பாந்தே.


 சி.ஐ.டியு   சங்கத்தின்   தமிழ் மாநில மாநாடு 
சென்ற ஆண்டு கடலூரில் நடைபெற்றபோது  அதிலே
அவர் பங்கேற்றார். அதற்கு முன்பாக ஏலகிரி 
வந்த அவரோடு,  கடலூர் வரை செல்லும்  நல்ல 
வாய்ப்பை எனக்கு அளித்தார்கள். 


 அந்த ஏழு மணி நேர பயணம் மிகச் சிறந்த
 அனுபவம்.  பல கேள்விகளை  கேட்டேன். 
 சிக்கலான அரசியல்  கேள்விகளும் உண்டு.
அத்தனைக்கும்  தெளிவான முறையில்  
விளக்கமளித்து  வந்தார். 


மிகப்பெரிய பொறுப்பில் உள்ள நாம் 
சாதாரண ஊழியனுக்கு  பதிலளிப்பதா என
 அவர்  தயங்கவே இல்லை. 


 அற்புதமான தோழமை உணர்வை  
நான் அன்று அனுபவித்தேன். 
மகத்தான  தலைவனுக்கு
மனமார்ந்த அஞ்சலி

Friday, August 19, 2011

தமிழில் இதற்கு என்ன அர்த்தம்? யாரால் சொல்ல முடியும்?



நேற்று  ஒரு தோழரின்  இறுதிச் சடங்கில்  பங்கேற்க 
திருப்பத்தூர் சென்றிருந்தேன்.  அப்போது  கண்ணில் 
பட்ட விளம்பரம் இது. 


விஜயகாந்தின் பிறந்த நாளுக்காக  அவரது கட்சி 
ஆட்கள் வைத்திருந்த பிரம்மாண்ட விளம்பர 
பதாகையின்  வாசகம் கீழே கொடுத்துள்ளேன்.
" தமிழகத்தின் 
திண்டாமைத் தலைவா! " 


 நானும் யோசித்து யோசித்து
பார்த்து விட்டேன்,  பலரையும்  
கேட்டு விட்டேன்


யாருக்கும்  தெரியவில்லை.
தெரிந்தவர்கள் யாராவது சொல்லுங்களேன்.

Thursday, August 18, 2011

தமிழர்கள் பற்றி அமெரிக்க அதிகாரியின் கொழுப்பெடுத்த நையாண்டி - இன்னமும் நீடிக்கும் நிற வெறி!



அமெரிக்க தூதரக துணை அதிகாரி மௌரீன் சோ 
என்ற அம்மையார்  எஸ்.ஆர்.எம் பலகலைக் 
கழகத்தில் பேசுகிற போது  தமிழர்களை நக்கல் 
செய்து   பேசியுள்ளார். 


அவர் இந்தியாவில் 72  மணி நேரம் ரயிலில்
 பயணம் செய்து     இறங்கும் போது  அவர்
தமிழர்கள்  போல அசிங்கமாகவும்  கறுப்பாகவும்
இருந்தாராம்.


என்ன ஒரு கொழுப்பெடுத்த பேச்சு?


தாங்கள்தான் உயர்வானவர்கள், மற்றவர்கள்
கேவலமானவர்கள்  என்ற  வக்கிரமான 
 நிறவெறியின்  வெளிபாடல்லவா இது!


இதிலே  வட இந்திய மாணவர்கள் 
கைதட்டி விசிலடித்து  கொண்டாடினார்களாம்!


 நினைக்கவே  எரிச்சலாக உள்ளது. ஒரு
மாநில மக்களை இழிவு படுத்துவதை  
வரவேற்கும்  மாணவர்கள்  எங்கே 
இந்திய  ஒருமைப்பாட்டை  பாதுகாக்கப்
போகின்றார்கள்?


அவர்  நகைச்சுவையாகத்தான் பேசினார் 
என எஸ்.ஆர்.எம்  பல்கலைக்கழகம்  
சப்பைக்கட்டுவது  அவர்களிடம்  
ஊறிப்போயுள்ள  அடிமைப்புத்தியையே 
உணர்த்துகின்றது.


அமெரிக்க  தூதரகம்  இப்போது  மன்னிப்பு
கேட்டுள்ளது. தமிழர்களை  இழிவு  படுத்திய
அந்த அதிகாரியை  தமிழ் மண்ணிலிருந்தே 
அப்புறப்படுத்த வேண்டும்.

தமிழ்  அமைப்புக்கள் இப்பிரச்சினையை 
கையிலெடுக்க வேண்டும்
 

Wednesday, August 17, 2011

அமெரிக்காவில் அடிமைகள்




எங்கள் கோட்டச்சங்க  மாத இதழான  சங்கச்சுடர்  ஜுலை  மாத  
இதழிற்காக  எழுதியது.


நூல்  அறிமுகம்

நூல்  ;                          அமெரிக்க  கறுப்பு  அடிமையின்  சுயசரிதை



 


ஆசிரியர்  ;                பிரெடரிக்   ட்க்ளஸ்

 

தமிழில்    :                 இரா. நடராஜன், கடலூர்

 

வெளியீடு :                 பாரதி  புத்தகாலயம்
                                        சென்னை - 18

 

விலை     :                   ரூபாய்  50 /-

 

அமெரிக்க  வரலாற்றின்  இருண்ட  பக்கங்க்ளாக  
அங்கே  நிலவி  வந்த  அடிமை  முறையை
சொல்ல வேண்டும். ஆப்பிரிக்க  நாட்டின்  

சிறுவர்கள்  சிறை பிடிக்கப்பட்டு  அமெரிக்கா
கொண்டு வரப்பட்டு  அங்கே  விவசாயப் 

பண்ணைகளில்  மிகப் பெரிய உழைப்புச்
சுரண்டலுக்கு  உட்படுத்தப்பட்டனர்.  அப்படி

அடிமைகளாய் கொண்டு வரப்பட்ட பெண்கள்
பாலியல் கொடுமைகளுக்கு  உட்படுத்தப்பட்டு  

பிறக்கும்  குழந்தைகளும்  அடிமைகளாக
கொடுமைகளுக்கு  ஆளாக வேண்டும்.

 

அப்படி  ஒரு ஆப்பிரிக்க அடிமைக்கும்  அமெரிக்க 
முதலாளிக்கும்  பிறந்து  அடிமையாய்  வாழ்ந்து  
விடுதலையின்  தாகத்தில்  தப்பி வந்து   
பிற்காலத்தின்  அடிமைகளுக்காக  குரல் கொடுத்த  
பிரெடரிக் டக்ளஸ்  என்பவரின்  அடிமை கால 
வாழ்வு  பற்றியதுதான்
இந்த  நூல்.

 

கையில் எடுத்தால் முடிக்கும் வரை கீழே  வைக்க
முடியாத நூல்களில்  இதுவும் ஒன்று.
அடிமை முறையின்  அராஜகத்தை  கண் முன்னே

 நிறுத்தும் நூல் இது. சவுக்கடிகள் சாதாரணம், 
உணவு  என்பது  அரை வயிற்றுக்குத்தான், கல்வி 
கூடாது, சவுக்கடியில் இறந்தாலும்  கேள்வி கேட்க
முடியாது., கடவுள் புகழை பரப்புபவர்கள்  அடிமை முறை  
தொடர்வது, கடவுளுக்கான தொண்டு  என்று  
ஏமாற்றுவது, பெண்களை  தங்களின் பாலியல் 
வக்கிரங்களுக்கு  பயன்படுத்துவது, வயதான பெண்களை
காட்டின்   நடுவே  சாகட்டும்  என தனியே கொண்டு 

விடுவது  போல  தான் பார்த்த  அனுபவித்த  பல 
கொடுமைகளை  ட்க்ளஸ்  விவரித்துள்ளார்.

 

முதலாளி  இறக்கும் போது மற்ற சொத்துக்களை  
வாரிசுகளுக்கு  பங்கிடுவது போலவே  அடிமைகளையும்  
பங்கிடுவது  என்ற முறையை  படிக்கும் போது
அமெரிக்கர்கள்  மற்றவர்களை  என்றுமே  

மனிதர்களாக  கருதியதில்லை  போலும்
என்ற கோபம்தான்  எழுகின்றது.

 

தொடர்ந்து  தாக்கும்  முதலாளியை  ட்க்ளஸ்  திருப்பி  
அடிக்கும் போது  அவன்  பின்வாங்க, இவருக்கு  
விடுதலை  வேட்கை  அதிகரிக்கிறது. அவர்  எப்படி
தப்பினார்  என்பதை  மற்றும்  விவரிக்கவில்லை. 

அது மற்ற  அடிமைகளுக்கு  சிக்கலாகும்  என்பதே  
அத்தயக்கத்தின்  காரணம்.

 

1840ல்  வெளி வந்த இந்த நூல் அன்று  அமெரிக்காவில்
 மிகவும்  அதிகமாக  விற்பனையான  ஒரு புத்தகம். 
இந்த நூலை உலக அடிமை முறை  பற்றிய  மிக
முக்கியமானதொரு  ஆவணம்  எனறே  

சொல்லலாம்  என மிகச்சரியாக  நெல்சன் 
மாண்டேலா குறிப்பிட்டுள்ளார்.  மிகச்சிறப்பான  
முறையில்  தமிழாக்கம் செய்துள்ள  இரா.நடராஜன்
 பாராட்டுக்குரியவர்.

அலெக்ஸ் ஹேவியின் " ஏழு தலைமுறைகள் " 
படித்த போது  ஏற்பட்ட தாக்கம் , கோபம், எல்லாமே
இப்புத்தகத்தை படித்து முடித்த போதும் உருவானது.


Tuesday, August 16, 2011

இதுதான் உண்மையான இந்தியா

ஒரு தோழர் அனுப்பிய சுதந்திரதின 
வாழ்த்துச்செய்தி  கீழே உள்ள 
புகைப்படம்.


 இதுதான்  இந்தியாவின்  உண்மையான
நிலையை, பெரும்பான்மையினரின் 
அவலத்தை சித்தரிப்பதாக 
கருதுகின்றேன்.
உங்கள் கருத்து என்ன?
 

பூமியைப் படைத்தது கடவுள் கிடையாது


















தென் பசிபிக் கடலில்  பாய்மரப் படகில் 08.11.2006
அன்று  பயணித்த  ஒரு  குழுவிற்கு  கிடைத்த 
அற்புத  அனுபவம்  இது.

கடலின்  நடுவே  மணற் பரப்பு  உருவாகிறது.
கடலுக்கடியே  எரிமலை  வெடிக்கிறது.
புகையும்  சாம்பலும்  தொடர்ந்து  பரவ
புதிதாய்  ஒரு  தீவு  அங்கே 
அவர்களின்  கண்  எதிரே
தோன்றுகிறது.

இயற்கையின்  விளையாட்டாய்
அங்கே  ஒரு புதிய தீவு  உருவாவதை
அவர்கள்  பார்க்கிறார்கள்.
புகைப்படம்  எடுக்கிறார்கள்.
அவைதான் மேலே உள்ள படங்கள்.

தேடித் தேடி  பார்க்கிறேன்.
நான் முகன் பிரம்மனோ,
தலையில்  சந்திரனைத் தாங்கிய
பரமசிவனோ.
பாற்கடலின்  அதிபதி
மகா விஷ்ணுவோ
இல்லை  ஏ.பி.நாகராஜன்
சொன்னபடி
இவர்களுக்கெல்லாம்
மேலான
ஆதி பராசக்தியோ

ஓளி வட்டத்தோடோ,
கைகளில்  மின்னல் போன்ற
ஒளிப் பாய்ச்சலோ
இல்லாமல்தான்  அந்தத் தீவு
அங்கே உருவாகி  உள்ளது.

இனியும் சொல்ல வேண்டாமே!
பூமியைப் படைத்தது
கடவுள்  என்று.....