Wednesday, June 30, 2021

'மேதகு" - படைப்பும் படைப்பாளியின் வக்கிரமும்

 


“மேதகு” என்று ஓ.டி.,டி. தளத்தில் புதிதாக வெளியிடப்பட்டுள்ள திரைப்படம் நன்றாக இருப்பதாக சொன்னார்கள்.

 பார்க்கலாம் என்று நினைத்திருந்தேன்.

 ஆனால் முகநூலில் படு கேவலமான விஷயங்களை அந்த படத்தின் இயக்குனர் பகிர்ந்துள்ளார். அதை பகிர்ந்து கொள்ள என் மனம் இடம் கொடுக்கவில்லை. ஆனால் கண்டிப்பாகச் சொல்வேன். நாலாந்தர சிந்தனையின் ஆபாச வெளிப்பாடுதான் அவையெல்லாம்.

 படைப்பாளியின் தனிப்பட்ட செயல்பாடு, சித்தாந்தம் என்பதெல்லாம் முக்கியமில்லை, படைப்பை மட்டும்தான் பார்க்க வேண்டும் என்ற வழக்கமாக ஜெயமோகனுக்கு பாடும் பல்லவியை இப்போதும் அந்த தி.கிட்டுவுக்கும் பாடத் தொடங்கி விட்டனர்.

 பாலியல் குற்றவாளியாய், பெண் பித்தனாய், பொறுக்கியாய் ஒருவன் தனிப்பட்ட வாழ்வில் இருந்து கொண்டு பெண்களை போற்றும் காவியத்தை எழுதினால் அவனை ஒதுக்கி விட்டு அந்த படைப்பை போற்ற வேண்டும் என்றால் முடியுமா?

 படைப்பாளியிடமிருந்து படைப்பை ஒதுக்கி வைத்து பார்க்க வேண்டும் என்பதெல்லாம் குற்றவாளிக்கு வக்காலத்து வாங்கும் கீழ்த்தரமான செயல் அன்றி வேறொன்றுமில்லை.

 மோசமானவனின் படைப்பு எவ்வளவு உயர்தரமாக இருப்பினும் அவனைப் போலவே அதுவும் ஒதுக்கத்தக்கதே!

 

ஐய்யோ! எலக்சன் வந்துருச்சே

 



சத்யராஜ், கவுண்டமணி, மணிவண்ணன் நடித்த “தாய் மாமன்” என்ற படத்தில் ஒரு காட்சி வரும்.

 தெரிவில் சாலை போட ஜல்லிக் கற்கள் கொட்டப்படும்,ரோடு ரோலரும் வந்து சாலை போடப்படும்.  காற்று வந்து கொண்டிருந்த வீதியில் உள்ள குழாய்களில் தண்ணீர் கொட்ட ஆரம்பிக்கும். “நம்ம ஊருக்கு எலக்சன் வந்துருச்சுடோய்” என்று மக்கள் உற்சாகக்குரல் கொடுப்பார்கள்.  

 அது காமெடி. ஆனால் இந்த பதிவு என் கவலையை வெளிப்படுத்த . . .

 

ஆம்.

 ஜம்முவில் ட்ரோன் மூலம் நடந்துள்ள வெடிகுண்டு தாக்குதல் உபியில் வரப் போகும் தேர்தலுக்கான முன்னோட்டமோ என்ற அச்சம் வருகிறது.

 அங்கே ஏற்கனவே உட்கட்சி மோதல் வேறு. மொட்டைச் சாமியாருக்கும் நல்ல பெயர் கிடையாது. அதனால் இப்படி ஏதாவது உசுப்பேத்தும் உணர்ச்சிகரமான சம்பவங்களை அரங்கேற்றித்தான் ஆட்சியை தக்க வைக்க முடியும்..

 ட்ரோன் மூலம்தான் தாக்குதல் நடந்ததாக ராணுவம் சொல்ல, அப்படி ட்ரோனின் சிதைவு எதுவும் கிடைக்கவில்லை என்று தேசிய புலனாய்வு முகவை சொல்கிறது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.

தேர்தல் வெற்றிக்காக எந்த அளவும் கீழே இறங்கக் கூடியவர்கள் சங்கிகள். 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக முசாபர்நகரில் கலவரத்தை நடத்தி “கலவரங்கள் தொடர்ந்தால் எங்கள் வெற்றிகள் தொடரும்” என்று அமித்ஷா கொக்கரித்ததை மறக்க முடியுமா!

 உபி தேர்தலுக்கு முன்பு காலாவதியாகிப் போன தண்டவாளங்களால் ஏற்பட்ட ரயில் விபத்தை “அன்னிய நாட்டு சதி” என்று மோடி பரப்புரை செய்த அயோக்கியத்தனத்தைத்தான் மன்னிக்க முடியுமா!

 இல்லை

 உளவுத்துறை எச்சரிக்கைகளை அலட்சியப்படுத்தி மத்திய பாதுகாப்புப் படை வீரர்களை பலி வாங்கிய புல்வாமா துயரம் என்ன மறக்கக் கூடிய கொடுமையா!

 


அய்யா மோடி வகையறாக்களே, உங்கள் தேர்தல் ஆதாயத்திற்காக, தயவு செய்து இந்திய மக்களின், வீரர்களின் உயிர்களோடு இம்முறையாவது விளையாட வேண்டாம். வழக்கம் போல கட்டுக்கதைகளை, போலி வாக்குறுதிகளை அள்ளி விடுங்கள்.

 உபி காரர்கள் ஒன்றும் தமிழர்கள் அளவிற்கு அரசியல் விழிப்புணர்வு பெற்றவர்கள் அல்லவே!

 

Tuesday, June 29, 2021

உருண்டைகள் ஓய்வதில்லை.

 


 

பொட்டுக்கடலை கொண்டு செய்த மாலாடு குறித்த பதிவை சில நாட்கள் முன்பாக எழுதியிருந்தேன். நெய் விளங்காய் என்று இதற்கு நெல்லையில் பெயர் என்றும் சொல்லியிருந்தேன்.

 ஆனால் ஓய்வு பெற்ற மூத்த அதிகாரி திரு இசக்கிராஜன், சிறு பருப்பில் செய்வதற்குப் பெயர்தான் மாலாடு, நெய் விளங்காய், ஆகவே இது செல்லாது செல்லாது என்று சொல்லி விட்டார்.

 சிறு பருப்பில் அதாவது பாசிப் பருப்பில் அதாவது பயத்தம்பருப்பில் செய்வதுதான் மாலாடு எனும் போது பொட்டுக்கடலை வைத்து செய்ததால் எங்கே நள தோஷம் வந்து விடுமோ என்ற அச்சத்தில் பாசிப்பருப்பைக் கொண்டும் செய்து விட்டேன்.

 பாசிப்பறுப்பை வறுத்து, பொடி செய்து, அதை சலித்து பின் அதே அளவு சர்க்கரைக்குப் பதிலாக  வெல்லத்தையும் சேர்த்து மிக்ஸியில் ஓட விட்டு அந்த கலவை மீது வறுத்த முந்திரியையும் வறுக்க பயன்படுத்திய நெய்யோடு கொட்டி உருண்டை பிடித்தால் சுவையோ சுவை.

 


இந்த உருண்டையை திவசத்தன்று மட்டும்தான் செய்வார்கள் என்று நீண்ட காலம் நம்பியிருந்தேன் என்பது வேறு விஷயம். வெல்லம் போட்ட கோதுமை அல்வாவும் கூட.

 பிகு : மாலை வேளை காபிக்கு முன்பே ஒரு உருண்டை சாப்பிடுவது என்பது வழக்கமாகி விட்டதால் செய்தது என்பதுதான் நிஜம். உண்மை.

 

குற்றவாளிக் கூண்டிலேறிய முதல் பிரதமர்.

 எங்கள் கோட்டச் சங்கத்தின் மாத இதழ் சங்கச்சுடர் இதழில் “ஊழல்களின் ஊர்வலம்” என்ற தலைப்பில் இந்தியாவை உலுக்கிய பல ஊழல்கள் குறித்து ஒரு தொடர் எழுதியிருந்தேன்.

 அதிலே நரசிம்மராவ் பற்றி எழுதிய பகுதி கீழே.



 ஊறுகாய் வியாபாரி அளித்த ஒரு லட்சம் டாலர்கள்

 சுதந்திர இந்தியா எத்தனையோ ஊழல்களைக் கண்டிருக்கிறது. நீதிமன்றத்தின் படிக்கட்டுக்களில் சில முதல்வர்கள் ஏறியுள்ளனர். சிலர் சிறைவாசம் கண்டுள்ளனர். சிலர் வாய்தாக்களிலேயே வாழ்வை நகர்த்திக் கொண்டுள்ளனர். ஆனால் ஊழல் குற்றச்சாட்டிற்காக கூண்டில் ஏறிய ஒரே ஒரு பிரதம மந்திரி பி.வி.நரசிம்மராவ் மட்டுமே.

 ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் அவர் உள்துறை அமைச்சராக இருந்த போது காகிதக் கூழ் ( Paper Pulp )  சப்ளை செய்வதற்கான  காண்டிராக்ட் பெற்றுத் தருவதாக பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டதாக அவர் பிரதமரான பின்பு குற்றச்சாட்டு எழுந்தது.

 இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த பிரபலமான ஊறுகாய் வியாபாரி லக்குபாய் பதக், நரசிம்ம ராவ் மீது குற்றம் சுமத்தினார். காகிதக் கூழ் சப்ளை  செய்யும் ஒப்பந்ததிற்காக நரசிம்மராவிற்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கியதாக அவர் குற்றம் சாட்டினார். சர்ச்சை சாமியார் சந்திரா சாமியும் அவரது உதவியாளர் மாமாஜியும்  நரசிம்மராவுடனான  சந்திப்பிற்கு ஏற்பாடு செய்ததாக அவர் குற்றம் சுமத்தினார். இதற்காக சந்திராசாமிக்கு முப்பதாயிரம் டாலர்கள் அளித்ததாகவும் அவர் குற்றச்சாட்டு கூறினார். சி.பி.ஐ இக்குற்றச்சாட்டின் மீது  வழக்கு பதிவு செய்தது.

 நரசிம்மராவின் பதவிக்காலத்தின் இறுதிக் கட்டத்தில் எழுந்த இக்குற்றச்சாட்டு பாஜகவிற்கு ஆதாயமாக  பயன்பட்டது. அடுத்து வந்த தேர்தலில் காங்கிரஸ் தோற்றுப் போய் முதலில் வாஜ்பாயின் பதிமூன்று நாள் ஆட்சியும் பிறகு தேவேகௌடா ஆட்சியும் வந்தது. இந்த காலகட்டத்தில் இந்த ஊழல் வழக்கிற்காக நரசிம்மராவ் நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வேண்டியிருந்தது.

 இதையே  சாக்காக  வைத்து  காங்கிரஸ்  கட்சித் தலைவர்  பதவியிலிருந்து அவரை நீக்கி சீதாராம் கேஸரி காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரானார். ஆனால் வழக்கு  நீண்ட இடைவெளிக்கு பிறகு பதிவு செய்யப்பட்டது, போதுமான சாட்சியங்கள் இல்லை என்று சொல்லி நீதிமன்றம் அவரை விடுவித்து விட்டது. ஊழலுக்காக  தண்டனை  பெற்ற முதல் பிரதமர் என்ற அவப்பெயரிலிருந்தும் அவர் தப்பித்தார். இறந்து போனாலும் கூட ஊறுகாய் வியாபாரியிடம் பணம் பெற்ற பிரதமர் என்பது இன்னமும் கூட ஒட்டிக் கொண்டே உள்ளது – 14 ஜூலை, 2012 அன்று பகிர்ந்து கொண்டது.

இத்துடன் சேர்க்க வேண்டிய இன்னொரு செய்தி கூட உள்ளது.

லக்குபாய் பதக் மட்டுமல்ல, பங்குச்சந்தை மோசடிப் பேர்வழி ஹர்ஷத் மேத்தா கூட நரசிம்மராவிற்கு ஒரு கோடி ரூபாய் கொடுததாக குற்றம் சொன்னது மட்டுமல்ல, ஒரு சூட்கேஸில் எப்படி ஒரு கோடி ரூபாயை அடுக்கி வைத்தோம் என்று ஒரு காட்சியே நடத்திக் காட்டிய பெருமையும் பி.வி.என்னுக்கு உண்டு.

ஆனால் இவர் ஊழல் மட்டும் பாஜக கண்ணுக்கு தெரியவில்லை.

 

 

Monday, June 28, 2021

படேல், ராவ் – ஒரே குட்டை மட்டைதான்.

 


 

செத்துப் போன சில காங்கிரஸ்காரர்களை மட்டும் செலக்டிவ்வாக சங்கிகள் தத்தெடுத்துக் கொள்கிறார்கள். முன்பு வல்லபாய் படேல், இப்போது நரசிம்மராவ்.

 


இருவரும் நேரு குடும்பத்துக்கு அவ்வளவாக வேண்டாதவர்கள் என்பது மட்டுமல்ல காரணம், இரண்டு பேருமே சாஃப்ட் சங்கிகள் என்பதும் கூட முக்கியக் காரணம். மகாத்மா காந்தி படுகொலைக்குப் பின்பு வேறு வழியில்லாமல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தடை செய்தாலும் பிறகு அந்த அந்த தடையை நீக்கியவர் படேல்தான். அதனால்தான் அவருக்காக “ஸ்டேட்டுகே ஓப்பி  யூனிட்டி” உருவாக்கினார்கள்.

 நரசிம்மராவிற்கு பதிலாக வி.பி.சிங் போல வேறு யாராவது பொறுப்பானவர்கள் பிரதமராக இருந்திருந்தால் பாபர் மசூதியை இடித்திருக்க முடியாதல்லவா! அயோத்தி பிரச்சினையில் ராணுவத்தை கையில் வைத்துக் கொண்டு எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்த்த உத்தமனல்லவா அவர்!

 அந்த நன்றியை இப்படித்தான் வேறு பல காரணங்களை முன்வைத்து சொல்ல வேண்டும். இந்தியப் பொருளாதாரத்தை ஒரு மோசமான நிலைமைக்கு இட்டுப் போனவர்தான் நரசிம்மராவ் என்பதுதான்  அவரை நினைத்தால் நினைவுக்கு வரும் இரண்டாவது விஷயம்.

 இன்னொரு விஷயமும் உள்ளது.

 பிகு: நரசிம்மராவ் குறித்து சிலிர்த்து போய் சிலாகித்து இன்னொரு கட்சியின் தலைவரும் எழுதியுள்ளார்.



 ஆமாம். அவர் மய்யத்தார்.

 

இந்தியாவின் சிரிக்கா மனிதன் பற்றி நினைவுக்கு வரும் மூன்றாவது விஷயம் கூட ஒன்றுள்ளது.

 

அது நாளை. . .

ஒன்றியமென்றால் பொங்கிய சங்கிகளே

 


சமீப காலத்தில் சங்கிகளை உறக்கமிழக்க வைத்த வார்த்தை "ஒன்றியம்". ஒன்றியம் என்று சொல்பவர்களுக்கெல்லாம் அவர்கள் பாணியில் தேச விரோதி பட்டம் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்.

இதோ அவர்களின் தானைத்தலைவி தமிழிசை பதவிப் பிரமாணம் எப்படி எடுத்து வைக்கிறார் என்று பாருங்கள்.



இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஆட்சிப்பரப்பு என்று சொன்ன தமிழிசை மீதும் சங்கிகள் பொங்குவார்களா?

அவரை ஆளுனர் பதவியிலிருந்து நீக்கச் சொல்வார்களா?

I am waiting

Sunday, June 27, 2021

அவர் உண்மையான அறிவுஜீவி . . .

 


உண்மையான அறிவுஜீவி.... (மைதிலி சிவராமன்)

Saturday, June 26, 2021

அறுபட்ட ஆறாவது விரல்.

 என்னுடைய ஆறாவது விரல் அறுபட்டு இன்றோடு ஐம்பது நாட்கள் நிறைவடைவதை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்ளவே இப்பதிவு.

 2010 ம் முதல்  வலைப்பக்கத்தில் தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கிறேன். இது ஆறாயிரமாவது பதிவும் கூட. இந்த பதிவில் மகிழ்ச்சியான செய்தியை பகிர்வதிலும் ஒரு மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது.

 ஆறாவது விரல் அறுபட்டால் மகிழ்ச்சியா?

 முப்பது ஆண்டுகளாக ஆறாவது விரலாக இருந்த சிகரெட்டை பிடிப்பதை நிறுத்தியதைத்தான் சொல்கிறேன்.

 


கொரோனாவிற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். தனிமைப் படுத்தல் அதனை சாத்தியமாக்கியது.

 பள்ளியிலோ, கல்லூரியிலோ ஏற்படாத பழக்கம், எல்.ஐ.சி பணியில்  சேர்ந்த பின்பு புகை பிடிக்கும் நண்பர்கள் பரிச்சயம் ஆனாலும் கூட அந்த பழக்கம் பரிச்சயமாகவில்லை.

 நேற்று முன் தினம் கவியரசர்-மெல்லிசை மன்னர் பற்றிய பதிவில் “தேடினேன் வந்தது” பாடலை பகிர்ந்து கொண்டிருந்தேன். அதன் ரகசியத்தை பிறகு சொல்கிறேன் என்றும் எழுதியிருந்தேன். ரஜினிகாந்த் சிகரெட் பிடிக்கும் ஸ்டைல் எல்லாம் எப்போதும் என்னை ஈர்த்ததில்லை. ஆனால் இந்த பாடலிலும் “யாரந்த நிலவு” பாடலிலும் நடிகர் திலகம் சிகரெட் பிடிக்கும் ஸ்டைல் மிகவும் பிடிக்கும். ஆனாலும் அந்த பழக்கம் வர அதெல்லாம் காரணமில்லை.

 பின் எப்படி? எப்போது?

 1988 ம் வருட ஜனவரியில் கோவாவிற்கு சுற்றுலா சென்ற போது நண்பர்கள் 555 மலிவாக கிடைக்கிறது என்று வாங்கினார்கள். அப்போது அதை வாங்கி பிடித்தது என்பது அந்த பயணத்தோடு நின்று விட்டது.

 அதன் பின்பு எப்போதாவது பயணத்தின் போது மட்டும் பிடிக்கும் பழக்கமாக இருந்தது,

 14.12.1988

 அன்று அலுவலகத்தில் ஒரு பிரச்சினையில் சமூக விரோதிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து விட்டார்கள்.  தொலைபேசி வசதிகள் பெருமளவு இல்லாத காரணத்தால் கோட்டத்திற்கு தந்தி மூலம் தகவல் தெரிவிக்க நானும் இன்னொரு தோழரும் எதிரிலிருந்த தபால் அலுவலகம் சென்றோம். தந்தி கொடுத்து விட்டு வெளியே வந்தால் அந்த சமூக விரோதக் கும்பல் கூடுதலான கும்பலோடு சைக்கிள் செயின், குண்டாந்தடிகளோடு தபால் அலுவலகத்தை சூழ்ந்து கொண்டார்கள். போஸ்ட் மாஸ்டர் போலீஸிற்கு தகவல் சொல்ல, போலீஸ் பாதுகாப்போடு அலுவலகம் வந்தோம்.

 அலுவலகம் வந்தாலும் கைகளில் நடுக்கம் குறையவில்லை, இதயம் பக்பக்கென்று அடித்துக் கொண்டே இருந்தது. அப்போது ஒரு தோழர் ஒரு சிகரெட்டைக் கொடுக்க அப்போதுதான் அது ஆறாவது விரலாக ஒட்டிக் கொண்டது.

 அந்த கால லிம்கா விளம்பரம் போல ஒரு சுற்றறிக்கையோ, கட்டுரையோ எழுதுகையிலோ, தமிழாக்கம் செய்கையிலேயே வார்த்தைகள் தடுமாறினாலோ அல்லது அவை நிறைவாக வந்தாலும் ஆறாவது விரலுக்கு உயிர் வரும். காரசார விவாதமோ அல்லது கையிலெடுத்த பிரச்சினைக்கு வெற்றிகரமான தீர்வோ அப்போதும்தான். மாநாடுகளில் அறிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளிக்க தயாராகும் போது கண்டிப்பாக தேவை. பயணங்களின் போதும்தான். இன்னும் கூட பல்வேறு அனுபவங்களை எழுதலாம். இந்த பதிவில் அவசியமில்லை.

 இந்த பழக்கத்தை விடக் கூடாதா என்று கேட்பவர்களிடமெல்லாம் “அதுதான் என்னை விட மாட்டேங்குது” என்று பதில் சொல்லியுள்ளேனே தவிர விட முயற்சி எடுக்கவில்லை என்பதை சுய விமர்சனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். என் பெரிய அக்கா ஒவ்வொரு முறை தொலைபேசியில் பேசும் போது “அதை மட்டும் விட்டுத் தொலைக்கக்கூடாதாடா?” என்ற கேள்விக்கு என்றைக்கும் பதில் சொன்னதே இல்லை.

 அலுவலகத்தில் கூட ஒரு மூன்று தோழர்கள் பெயர்களை சொல்வது அவசியம் என்று நினைக்கிறேன். இப்போது திருத்துறைப்பூண்டியில் இருக்கும் தோழர் காந்தி,  கோட்ட அலுவலகக் கிளையின் தலைவர் தோழர் கங்காதரன் இருவரும் சிகரெட்டை பற்ற வைக்கையில் ஊதி தீக்குச்சியை அணைத்து விடுவார்கள். அதற்காக அவர்களுக்கு சாபமெல்லாம் கொடுத்திருக்கிறேன். எங்கள் துணைப் பொருளாளர் தோழர் பி.எஸ்.பாலாஜி, பின்பக்கமாக வந்து பிடித்துக் கொண்டிருக்கும் சிகரெட்டை தட்டி விடுவார். கொஞ்சம் அசந்தால் பாக்கெட்டையும் சுட்டு எங்காவது தூக்கிப் போட்டு விடுவார்.

 அவரு சிகரெட்டை நிறுத்தினால் எல்லோருக்கும் நான் பிரியாணி வாங்கித் தருகிறேன் என்று மூன்று மாதங்களுக்கு முன்பு தோழர் கங்காதரன் சொன்ன போது “உனக்கு செலவு வைக்க மாட்டேன் கங்கா” என்று கூறினேன்.

 திருமணமான காலத்தில் விரைவில் விட்டுவிடுகிறேன் என்று மனைவிக்கு சொன்ன உறுதிமொழியை காப்பாற்ற 29 ஆண்டுகள் ஆகி இருக்கிறது. கொரோனா வந்த போது அவர் மிகவும் கவலைப்பட்டது புகை பிடிக்கும் பழக்கம் இருந்ததால்தான். அவரும் மகனும் இது பற்றி பேசும் போதெல்லாம் பதிலே சொல்லாமல்தான் இருந்திருக்கிறேன்.

 இப்போது கொரோனா தொற்று ஏற்பட்டு வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டு இருந்ததால் சிகரெட் பிடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. அதை இப்போது அப்படியே தொடர்கிறேன். வீட்டை விட்டு வெளியே செல்லும் போது சபலம் வராமலும் உறுதியாக இருக்கிறேன்.

 இதற்கு முன்பு நிறுத்த முயன்றதில்லையா?

 1989 ஜூலை மாதம் அடியாட்களால் தாக்கப்பட்டு பல் உடைந்து உதடு கிழிந்து உதட்டில் ஐந்து தையல் போட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில் வாயைத் திறக்க முடியாமல் ஸ்ட்ரா போட்டு ஜூஸ் மட்டுமே குடித்துக் கொண்டிருந்த ஒரு வார காலத்திற்குப் பிறகு மீண்டும் புகை சூழ் உலகிற்கே திரும்பி விட்டேன்.

 1990 வருடம் மே மாதம் ஒரு கல்லூரி நண்பனின் திருமணம் எர்ணாகுளத்தில். நெய்வேலியிலிருந்து திருவள்ளுவர் பேருந்து உண்டு.  திருமணம் முடிந்து மூன்று நாட்கள் கேரளாவை சுற்றிப் பார்க்க எல்லாம் நண்பர்கள் திட்டமிட்டு பட்ஜெட்டெல்லாம் அனுப்பி இருந்தார்கள். கோட்டப் பொறுப்பிற்கு வருவதற்கு முந்தைய காலகட்டம் என்பதால் தற்செயல் விடுப்பும் நிரம்பி வழிந்தது. ஆனாலும் கையில் பணம் இல்லாததால் செல்ல முடியவில்லை. ஏன் என்று சிந்தித்த போது போதி மரம் இல்லாமலேயே “சிகரெட் பிடிப்பதால்தான் கையில் பணம் இல்லை” என்ற ஞானோதயம் வந்து இனி அதன் முகத்திலேயே முழிக்கக் கூடாது என்று முடிவு செய்தேன்.

 அடுத்த பதினைந்து நாட்களில் ஹைதராபாத்திற்கு தென் மண்டல மாநாட்டிற்கு செல்ல பயணித்த போது ஒரு தோழர் சிகரெட்டை நீட்ட, வாங்க மறுத்தேன். “ட்ரெயின் பேரே சார்மினார் எக்ஸ்பிரஸ், நீ என்ன சிகரெட்டை வேண்டாம்னு சொல்றே” என்று நீட்ட மீண்டும் ஆறாவது விரல் முளைத்தது.  என்னுடைய பிராண்ட் அதுவல்ல என்பது வேறு விஷயம். ஆனால் சார்மினார் என்றால் மனதில் என்ன தோன்றுகிறது பாருங்கள்!

 புவனேஸ்வர், கொல்கத்தாவிற்கு விடுமுறை பயணச்சலுகையில் சென்ற போது மனைவியும் மகனும் கொடுத்த நெருக்கடி காரணமாக  01.01.2005 புத்தாண்டு அன்று விடியற்காலையில் புவனேஸ்வரிலிருந்து கொல்கத்தாவிற்கு சதாப்தி ரயிலை பிடிக்க ஆட்டோவில் சென்ற போது “இன்றோடு நிறுத்தி விட்டேன்” என்று பிரகடனமே பிறப்பித்தேன். அந்த பிரகடனம் வேலூருக்கு திரும்பி அலுவலகம் சென்ற  ஆறாம் தேதியே காலாவதியாகி விட்டது. 

 ஒன்றரை வருடங்களுக்கு முன்பு சர்க்கரை எட்டிப்பார்த்த போது ஒரு நாளைக்கு இரண்டு என்று  எண்ணிக்கையை குறைத்தேனே தவிர நிறுத்தவில்லை. எண்ணிக்கை கட்டுப்பாடும் பிறகு நீர்த்துப் போய் விட்டது என்பது வேறு விஷயம்,

 அதனால்தான் இந்த முறை சற்று காலமெடுத்துக் கொண்டு வீட்டிற்கு வெளியே வரத் தொடங்கி  முப்பது நாட்களுக்கு மேல் கடந்த பின்னரே இன்று அறிவிக்கிறேன்.

 சிகரெட்டோடு அதன் வாசம் அவ்வளவாக வெளியே வராமல் இருக்க பயன்படுத்தும் சாக்லேட், கடலை மிட்டாய் ஆகியவை தேவைப்படாததால் சர்க்கரை அளவு கட்டுக்குள்ளேயே இருக்கிறது. ஆனால் ஒன்று சிகரெட்டிற்கு மாறாக பாக்கு, சாக்லேட் என்றெல்லாம் போகவில்லை. அலுவலக நேரத்தில் குடிக்கும் இரண்டு காபிகளையும் நிறுத்தி விட்டேன்.

 வீட்டில் தொலைக்காட்சி பார்க்கையில் திரைப்படத்திற்கு முன்பு வரும் விழிப்புணர்வு விளம்பரத்தை மற்றவர்கள் காண விடாமல் அவசரம் அவசரமாக சேனலை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.

 ஒரு காலத்தில் ஆனந்த விகடன், குமுதம், குங்குமம், கல்கி, ஜீனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர் என்று வாங்கிக் கொண்டிருந்தேன். ஒவ்வொன்றாக நிறுத்தி கடைசியில் ஆனந்த விகடனும் குமுதமும் மட்டும் வாங்கினேன். மாலன் கட்டுரைகளால் எரிச்சலுற்று குமுதத்தை நிறுத்தினேன். தனிமைப் படுத்தல் காலத்தில் வெளியே செல்ல முடியாததால் விகடனும் வாங்கவில்லை. அதனால் ஒன்றும் குறைந்து போனதாகவும் தெரியவில்லை. பத்திரிக்கைகளும் சிகரெட்டும் வாங்கும் அந்த கடையின் ஓனர் பையன் இப்போது அந்த வழியாக செல்கையில் “ஏன் இந்த ஆளு இப்போது நம் கடைக்கு வருவதில்லை” என்று வெறித்துப் பார்க்கிறான்.

 தகவல் சொல்ல நான் கடைக்கு நான் வர, அனிச்சை செயலாய் நீயும் எடுத்துத் தர, அனிச்சை செயலாய் நான் பிடித்தால் என்ன செய்வது என்ற அச்சத்தால்தான் என்று எப்படி அவனிடம் நான் சொல்வது!

 இன்று முடிந்திருப்பதை கொரோனா வருவதற்கு முன்பே கூட முயற்சித்திருக்கலாம் என்று இப்பொது தோன்றுகிறது.

 படிப்பவர்களில் புகைப்பவர்கள் இருப்பின் நீங்களும் முயற்சிக்கலாமே!

 

அரசு அலுவலகத்தில் அலைய விடுகிறார்களா?

 


ஓர் சமீபத்திய அனுபவம்

  நான்கு நாட்கள் முன்பு எழுதிய  என்ற மத்யமர் சங்கிகள் - மெடிக்கல் மிராக்கிள் பதிவின் தொடர்ச்சிதான் இது. பொதுத்துறை வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்களையும் அரசு ஊழியர்களையும் வசை பாடுவது என்றால் பலருக்கு மிகவும் மகிழ்ச்சியூட்டும் ஒன்றாக இருக்கிறது. ஒரு சிலருக்கு கசப்பான அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் பலருக்கோ தங்களுக்கு பணியாற்ற வாய்ப்பு கிடைக்காததாலும் அங்கே இட ஒதுக்கீடு அமலாக்கப்படுவதால் ஏற்படும் காழ்ப்புணர்வும் முக்கிய காரணமாக இருக்கிறது.

 என்னுடைய அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்வது அவசியம்.

 நவம்பர் 2019 ல் என் மாமனார் இறந்து போனார். ஆசிரியராக பணியாற்றி ஓய்வூதியம் பெற்று வந்ததால் என் மாமியாருக்கு குடும்ப ஓய்வூதியம் விண்ணப்பிக்க வேண்டியிருந்தது.

 முதலில் இறப்புச் சான்றிதழ் வாங்க சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் மாநகராட்சியின் அலுவலகத்திற்கு சென்றிருந்தேன். சி.எம்.சி மருத்துவ மனையில் அவர் இறந்து போயிருந்ததால் அவர்கள் கொடுத்த சான்றிதழும்  மயானத்தில் கொடுத்த சான்றிதழையும் எடுத்துப் போயிருந்தேன். சி.எம்.சி மருத்துவமனையிலிருந்து வந்த பட்டியலை சரி பார்த்து விட்டு அழைக்கிறோம். ஐந்து நிமிடங்கள் காத்திருங்கள் என்றார்கள். மூன்றாவது நிமிடத்திலேயே அழைத்து ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தரச் சொன்னார்கள். அடுத்த பத்தாவது நிமிடம் ஒரே ஒரு பிரதி இறப்பு சான்றிதழைக் கொடுத்து சரி பார்க்க சொன்னார்கள், சரியாக உள்ளது என்று சொன்னதும் எனக்கு தேவைப்பட்ட ஏழு பிரதிகளுக்கான கட்டணத்தை கட்டச் சொன்னார்கள்.  கட்டணத்தை கவுண்டரில் கட்டி முடித்த நேரம் ஏழு பிரதிகளும் தயாராக இருந்தது. வெறும் நாற்பத்தி ஐந்து நிமிடங்களில் எந்த ஒரு கூடுதல் செலவும் இல்லாமல் வேலை முடிந்தது.

 அடுத்து குடும்ப ஓய்வூதியம் விண்ணப்பிக்க மாவட்ட கருவூல அலுவலகம் சென்றால் அங்கே ஒரு சின்ன பிரச்சினை. என் மாமனாரின் இறப்பு குறித்த தகவலை பென்ஷனை இறுதி செய்யும் முன்பு தெரிவிக்காததால் நவம்பர் மாதத்திற்கான பென்ஷன் அவரது வங்கிக் கணக்கிற்கு சென்றிருந்தது. அந்த தொகையை ஸ்டேட் வங்கியில் அரசு கணக்கில் கட்டி விட்டு வாருங்கள். விண்ணப்பம் தருகிறோம் என்றார்கள். அதன் பின்பு சென்ற போது விண்ணப்பத்தை அளித்து அத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்களின் பட்டியலையும் அளித்தார்கள். அது வரை என் மாமியாருக்கு PAN CARD இல்லாததால் அதை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அது கைக்கு கிடைத்ததும் குடும்ப ஓய்வூதியத்திற்கான விண்ணப்பம் கொடுத்தோம்.

 ஏற்கனவே ஐந்து விண்ணப்பங்கள் கையில் உள்ளது. அவற்றை முடித்து விட்டு பிறகு எடுப்போம். ஒரு மாத காலத்திற்குள் முடித்து விட்டு அழைக்கிறோம் என்று சொல்லி தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டார்கள். முப்பத்தி ஐந்து நாட்களுக்குப் பிறகு அழைப்பு வந்தது. கரூவூல அலுவலகம் சென்று என் மாமியார் கையெழுத்து போட்ட பிறகு மறு நாள் அவர் வங்கிக் கணக்கில் பணம் வந்து சேர்ந்தது.

 மாநகராட்சிப் பணிக்கோ அல்லது குடும்ப ஓய்வூதியம் பெற கரூவூல அலுவலகத்திலோ, வங்கிப் பணிகளுக்கோ எனது தொழிற்சங்க தொடர்புகளை நான் கொஞ்சம் கூட பயன்படுத்தவில்லை. ஏன் அவ்வாறு அறிமுகம் கூட செய்து கொள்ளவில்லை.  இத்தனைக்கும் திருவண்ணாமலை மாவட்ட கருவூல அதிகாரி என்னுடைய நெருங்கிய தோழர். கருவூலத்துறை ஊழியர் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளராக இருந்தவர். அதற்கெல்லாம் அவசியமே இல்லாமல் குறித்த காலத்தில் பணிகள் முடிந்தது என்பதை பதிவு செய்தே ஆக வேண்டும். இரண்டு ஓய்வூதியர்களின் சாட்சிக் கையெழுத்து தேவைப்பட்டது. தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர்  சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் பி.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவர் சொன்ன இன்னொரு தோழர் ஆகியோரிடம் கையெழுத்து பெற்றதை வேண்டுமானால் சொல்லலாம்.

 குடும்ப நல தொகையாக தரப்படும் ஐம்பதாயிரம் ரூபாய் வர ஆறு மாதம் ஆகும் என்று சொன்னார்கள். அது தாமதமானது. தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் பி.கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் சொன்ன போது அரசின் நிதி ஒதுக்கீடு வராததால் கால தாமதம் ஆகிறது என்றும் மாநிலம் முழுதும் இப்பிரச்சினை உள்ளதால் நிதித்துறை செயலாளரிடம் பேசியுள்ளோம். விரைவில் வந்து விடும் என்றார். அதன் படி வங்கிக் கணக்கில் வரவும் வைக்கப்பட்டது.

 என் மாமனாருக்கு மூன்று வங்கிக் கணக்குகள் இருந்தது. இந்தியன் வங்கியில் இருந்த கணக்கில் நாமினேஷன் இருந்ததால் அவரது பென்ஷன் கணக்கில் இருந்த தொகை கருவூலத்தின் தடையில்லா சான்றிதழ் கொடுத்த உடனேயே என் மாமியாரின் வங்கிக் கணக்கிற்கு  மாற்றப்பட்டது.

 சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் இருந்தது ஜாயிண்ட் அக்கவுண்ட்.  என் மாமனாரோடு என் மனைவியின் தங்கையும் இணைந்திருந்த அக்கவுண்ட் அது. லாக்கர் இருந்த கணக்கு அது. லாக்கரில் புதிதாக ஒருவரை இணைக்க வேண்டும் என்று கேட்டோம். ஐந்து மணிக்குப் பிறகு வரச் சொன்னார்கள். படிவங்களை நிரப்பிக் கொடுத்து ஆறு மணிக்கெல்லாம் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து விட்டோம்.

 அரசு கருவூலத்திலும் பொதுத்துறை வங்கிகளிலும் எந்த சிக்கலும் இல்லை. அலைய வேண்டிய அவசியம் கொஞ்சமும் ஏற்படவில்லை.

 ஆனால் ஒரு தனியார் வங்கியில்தான். வேண்டாம் அதை நினைத்தாலே ரத்த அழுத்தம் உயர்கிறது. அந்த அளவிற்கு பொறுப்பற்றவர்கள்!

 பொதுவாக நான் பார்த்த அளவில், கேட்ட அளவில் யாருமே இப்போதெல்லாம் அரசு அலுவலகங்களில் அலைக்கழிக்கப்படுவதில்லை. பொதுவாக அணுகுமுறையும்  People Friendly  ஆகத்தான்  உள்ளது.

 ஆனால் இன்னும் பலர் பழங்கதையை பேசிக் கொண்டு தங்கள் வன்மத்தை வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

 கலகலப்பு படத்தில் சந்தானம் சொல்வார் அல்லவா! “நம்பினாத்தான் சோறுன்னாங்க, நம்பிட்டேன் என்று” அந்த  ரீதியில் அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் மோசம் என்று சிலர் சொல்கிறார்கள். அவர்கள் நட்பு வட்டத்தில் உள்ள பலரும் பதில் லைக் மரியாதைக்காக நம்புகிறார்கள்.

Friday, June 25, 2021

சங்கிங்க பிரச்சினையே இதுதான் . . .

 முதலமைச்சர் என்று அழைக்காமல், ஆளுனருக்கு ஆலோசனை சொல்லும் குழுவின் தலைவர்  என்றுதான் சொல்ல வேண்டும் என்ற அபத்தமான ஒரு பதிவைப் பற்றித்தான் காலையில் எழுதியிருந்தேன். கற்பனை உலகில் வாழும் சங்கிகள் நிஜ உலகிற்கு வருகையில் உண்மையை சகிக்க முடியாமல் புலம்பித் தள்ளுகின்றனர். திமுகவின் வெற்றிக்குப் பிறகு தமிழகத்தில் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.  மு.க.ஸ்டாலின் முதல்வரானதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என்ன இந்த சங்கிகளுக்கு எல்லாம் இதயம் என்பதே கிடையாததால் யாரும் இதய வலி வந்து இறந்து போகவில்லை.

 நேற்று நடந்த காஷ்மீர் பேச்சுவார்த்தை பற்றி ஒரு பதிவை பார்த்தேன்.



 காஷ்மீர் நிலைமை பற்றிய புரிதல் பூஜ்ஜிய அளவு கூட இல்லாதவர்கள் என்பது படிக்கும் போதே தெரிகிறது. மோடி ஒரு வெத்து வேட்டு என்பதை புரிந்து கொள்ளும் அறிவற்ற மூடர்கள்.

 இந்த கார்ட்டூன் நிலைமையை அப்பட்டமாக சொல்கிறது.

 


பேச்சுவார்த்தைக்கு அழைத்தது மோடிதான்.

 மோடி சொன்ன எதையும் அவர்கள் ஏற்கவில்லை.

அரசியல் சாசனப்பிரிவு 370 ன்ன் மூலம் கிடைத்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அது நீதிமன்றத்தில் இருப்பதால் மோடியோடு அது பற்றி பேச முடியாது.

பழையபடி மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்.

 

இதுதான் பேச்சுவார்த்தையில் நடைபெற்றது. அங்கே யாரும் மோடியைக் கண்டு அஞ்சவோ, நடுங்கவோ இல்லை.

 

மோடிதான் காஷ்மீர் கட்சிகளை கண்டு நடுங்குகிறார்.

 அது மட்டுமல்ல இப்போது காஷ்மீர் பற்றி மோடி இக்காலகட்டத்தில் விவாதிக்க வேண்டிய அவசியம் என்ன.

 இந்து நாளிதழில் திரு சுரேந்திரா வரைந்த கார்ட்டூன் சொல்கிறது காரணத்தை.

 


காஷ்மீரைக் காண்பிப்பது   என்பது   மற்ற பிரச்சினைகளிலிருந்து  மக்களின் கவனத்தை  திசை திருப்ப மட்டுமமே மோடிக்கு உதவும்.

 


உலகின் எல்லா . . . . . . . .

 


உலகின் எல்லா  . . . . . . . . . . . . .(அறிவாளிகள்/மூடர்கள்) ஒரே இடத்தில் பார்க்க வேண்டுமென்றால் அது மத்யமர் முகநூல் குழுவில் மட்டுமே சாத்தியம்.

இந்த பதிவை பாருங்கள்.




முதலமைச்சர் என்பது தெளிவாக சொல்லப்பட்டிருந்தாலும் இந்த பதிவர், அவரே ஒன்றை சொல்லிக் கொள்கிறார். அதுதான் சரி என்று நம்புகிறார். அதை இதர சங்கிகளும் நம்புகிறார்கள்.

இதுதான் சங்கிகளின் உலகம்.
மூடர்களின் உலகம்.

ஒன்றியம் என்ற வார்த்தை சங்கிகளை கதற வைத்துள்ளது என்பது மட்டும் நன்றாக புரிகிறது. 

Thursday, June 24, 2021

நிரந்தரமானவர்கள், அழிவென்பதே இல்லை.

 


தமிழ்த் திரை இசையுலகில் நீண்ட காலம் ஒன்றாக பயணித்த கவியரசருக்கும் மெல்லிசை மன்னருக்கும் இன்று  பிறந்த நாள் என்பது அவர்கள் நட்பைப் போலவே சிறப்பானது.

கவியரசர் மறைந்து கிட்டத்தட்ட நாற்பதாண்டுகளாகப் போகிறது. மெல்லிசை மன்னர் மறைந்தும் ஆறாண்டுகள் கடந்து விட்டது.

"நான் நிரந்தரமானவன், எந்த நிலையிலும் எனக்கு அழிவு இல்லை" என்று கவியரசு பாடியது போல இருவரும் தங்கள் படைப்புக்கள் மூலம் வாழ்கிறார்கள், நிரந்தரமாக, தலைமுறைகள் தாண்டியும்.

அவர்கள் நினைவைப் போற்ற அவர்கள் கூட்டணியில் உருவான பத்து பாடல்களை பகிர்ந்து கொள்கிறேன்.

கவியரசு தேசிய விருது பெற்ற "தேவன் வந்தான், தேவன் வந்தான், குழந்தை வடிவிலே"



பி.சுசிலா தேசிய விருது பெற்ற "பால் போலவே வான் மீதிலே'




பி.சுசீலா தேசிய விருது பெற்ற "சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு"




வாணி ஜெயராம் தேசிய விருது பெற்ற "ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்"



எம்.ஜி.ஆரின்  "விழியே கதை எழுது"




சிவாஜியின் "தேடினேன் வந்தது" (இந்த பாடல் எனக்கு ஏன் பிடிக்கும் என்ற ரகசியம் இரண்டு நாட்களுக்குப்பிறகு எழுதுகிறேன்)




கமலின் "காத்திருந்தேன், காத்திருந்தேன்"




ரஜினிக்கு எம்.எஸ்,வி யின் குரலிலேயே "சம்போ, சிவ சம்போ"




கவியரசு திரையில் தோன்றிய "பரமசிவன் கழுத்திலிருந்த பாம்பு"




இருவரின் கூட்டணியில் இறுதியாய் உருவான "மேகம் திரளுதடி"






இந்த பாடல்களை பதிவிட்ட பிற்குதான் நினைவுக்கு வந்த பாடல் ஒன்று. மெல்லிசை மன்னர் தன் இறுதி நாள் வரை கவியரசரின் நினைவாக ஒவ்வொரு மேடையிலும் பாடும் முதல் பாட்டு

"புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே"




குஷ்பு சுந்தர் கிச்சனிலிருந்து உப்புமா . . .

 


ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் அவர்களின் படு நக்கலான ஒரு முகநூல் பதிவு. 

மு.க.ஸ்டாலினுக்கு வகுப்பெடுத்த குஷ்பு அம்மையாருக்கு அவர் அளித்த பதில். மாநிலங்கள், ஒன்றியம் பற்றி புரியாமல் குழப்பிக் கொண்டிருக்கும் பல மூடச் சங்கிகளுக்கும்.



பிகு 1 : சமையல் குறிப்பில் கூட பயங்கரமான நக்கல் ஒன்று ஒளிந்து கொண்டிருக்கிறது. கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.

பிகு 2 : உப்புமா அல்லது கிச்சடி என்பது இந்தியாவின் முக்கியமான உணவு. ஆனால் அது இந்தியா முழுதும் ஒரே மாதிரியாக செய்யப்படுவதில்லை, இடத்திற்கு இடம் மாறும் என்பதை மெலே உள்ள படம் சொல்லும். இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு இதுவும் ஒரு உதாரணம். ஆனால் மூடச்சங்கிகளுக்கு இதெல்லாம் புரியவே புரியாது.

Wednesday, June 23, 2021

எச்.ராசா மீது எச்.ராசா . . .

 



எச்.ராசா மீது அவர் கட்சியின் காரைக்குடி நகர தலைவர் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது அவர்களின் உட்கட்சி விவகாரம். அவர்கள் என்ன எழவோ செய்து கொள்ளட்டும்.

இதோ அந்த கடிதம். அதிலே எனக்கு சிரிப்பு சிரிப்பாக வர என்ன காரணம் தெரியுமா?




எச்.ராசா படம் பெரிதாக, பிரதானமாக அச்சிடப்பட்ட லெட்டர் ஹெட்டிலேயே எச்.ராசா மீது குற்றச்சாட்டு.