Tuesday, October 28, 2025

தெரு நாய்கள் -உச்ச நீதிமன்றம் - மாநில அரசுகள்

 


"தெரு நாய்கள் பிரச்சினை தொடர்பாக நாங்கள் அளித்த வழிகாட்டுதல்களை அமலாக்கியது தொடர்பாக ஒவ்வொரு மாநில அரசும் பிரமாண வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று நாங்கள் உத்தரவிட்டும் எட்டு வார அவகாசம் அளித்தும் மேற்கு வங்கம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைத் தவிர வேறெந்த மாநிலங்களும் தாங்கள் எடுத்த நடவடிக்கைகள் குறித்து பிரமாண வாக்குமூலம் அளிக்கவில்லை. டெல்லி மாநகராட்சி கொடுத்த பிரமாண வாக்குமூலம் என்பது போதுமானதல்ல. நாங்கள் மாநில அரசைத்தான் கேட்டோம்.

எனவே வரும் 03.11.2025 அன்று மேற்கு வங்கம், ஆந்திரா தவிர மற்ற அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களும் காலை பத்து மணிக்கு எங்கள் முன்பாக ஆஜராக வேண்டும்."

இது நேற்று உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளின் அமர்வு பிறப்பித்த உத்தரவாகும்.

ஆக இந்த உத்தரவு தெளிவுபடுத்துவது ஒரு விஷயத்தைத்தான். 

தெரு நாய்கள் கடித்து எத்தனை பேர் இறந்தாலும் எங்களுக்குக் கவலை இல்லை. உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டாலும் அதனை எச்.ராசாவின் உயர் நீதிமன்றமாக கருதி அலட்சியப்படுத்துவோம் என்று மாநில அரசுகள் இருக்கின்றன. 

முதன் முதலில் தெருநாய்ப் பிரச்சினை வந்த போதே எழுத நினைத்தேன். ஆனால் அப்போது ஏனோ இயலவில்லை. 

இன்று நிகழ்ந்த ஒரு சம்பவம் எழுத வைக்கிறது. அது பற்றி தனியாக எழுதுகிறேன்.

தெருநாய் பிரச்சினை என்பது பல்வேறு வருடங்களாக பல்கி பெருகியுள்ளது. ஏதாவது பெரு நகரத்தில் இறப்பு நேர்கிற போது பெரிய சர்ச்சையாக வருகிறதே தவிர மற்ற சமயங்களில் பேசு பொருளாக இருப்பதில்லை.

வேலூரில் ஒவ்வொரு தெருவிலும் குறைந்த பட்சம் பத்து நாய்களுக்கு மேல் இருக்கும். இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களும் பாதசாரிகளும் உயிரை கையில் பிடித்த படி அச்சத்துடனே பயணிக்க வேண்டியுள்ளது. அவர்கள் துரத்துவதால் ஏற்படும் விபத்துக்களுக்கு அளவே இல்லை. சில மாதங்களுக்கு முன்பு கூட எங்கள் நிறுவன அதிகாரி ஒருவர் வண்டியில் இருந்து கீழே விழுந்து எலும்பு முறிந்து அறுவை சிகிச்சை செய்து கொண்டார். சில வாரங்களுக்கு முன்பாக எங்கள் வீட்டை புதுப்பித்த பொறியாளர் கூட நாய் குறுக்கே வந்ததால் ப்ரேக் போட்டு கீழே விழுந்து முழங்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை நடந்து இன்னும் நடக்க முடியாமல் தவிக்கிறார். ஒவ்வொருவருக்கும் ஒரு அனுபவம் இருக்கும். நானெல்லாம் பல வருடங்களாக இரவு பத்து மணிக்கு மேல் இரு சக்கர வாகனத்தை தொடவே மாட்டேன்.

நாய்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வது எதிர்காலத்தில் தெரு நாய்ப் பெருக்கத்தை தவிர்க்கலாம். ஆனால் இப்போது உள்ளவற்றை, அதனால் வரும் பிரச்சினைகளை எப்படி சமாளிக்கப் போகிறோம்?

குடும்பக் கட்டுப்பாடு செய்வதால் அவற்றின் வெறித்தனமும் போவோர் வருவோரை துரத்துவதும் மாறிப் போய் விடப் போகிறதா என்ன?

முன்பு போல தெரு நாய்களை பிடித்து கொல்வது வேண்டுமானால் கொடூரமானதாக இருக்கலாம். ஆனால் அவற்றை பிடித்து தனியானதொரு இடத்தில் அடைக்கலாமே! அது செலவுதான். ஆனால் அத்தியாவசியமான செலவுதான். மக்களின் பாதுகாப்புக்கான செலவுதான். தெருநாய் புரவலர்கள் இதை எதிர்த்தால் அவர்கள் வீட்டில் வைத்து பராமரிக்கட்டும்.

தெருநாய் புரவலர்கள் தெரு நாய்களுக்கு பொது வெளியில் உணவளித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவும் உதாசீனம் செய்யப்படுகிறது. இதனை அமலாக்கினாலே கொஞ்சம் பிரச்சினை தீரும்.

எங்கள் வீட்டு வாசலில் ஒரு ஒரவலன் இரண்டு ஐந்து ரூபாய் டைகர் பிஸ்கெட் வாங்கி அதை உடைத்து உடைத்து போட்டுக் கொண்டிருப்பான், அவனிடம் ஒரு முறை சண்டை போட்டேன். "இது என்ன உங்கப்பன் வீட்டு ரோடா? " என்று அவன் கேட்க, "தெரு நாய்க்கு பிஸ்கெட் போட இது உங்கப்பன் வீட்டு ரோடா?" என்று திருப்பி கேட்டதற்கு பின்னே அடங்கினான். இப்போதும் அவன் சைக்கிளில் செல்லும் போது அவன் பின்னே பத்து நாய்களாவது துரத்திக் கொண்டே ஓடும். அவை ஒரு நாள் அவனை கடித்தால்தான் புத்தி வரும். இது எல்லா தெரு நாய் புரவலர்களுக்கும்தான். 

தெரு நாய்களை அரசு தெருக்களில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.  அதனை மாநில அரசுகள் செய்வதை உச்ச நீதிமன்றம்தான் உறுதி செய்ய வேண்டும்.


பிகு: மேலே உள்ள படம் 05.10.2025 அன்று காலை 04.47 மணிக்கு என் வீட்டு வாசலில் எடுத்தது. அன்று ஒரு வேளையாக சென்னை செல்லப் புறப்பட்டு கதவை திறக்கும் வேளையில் இத்தனை தெரு நாய்கள். கூடவே மாடுகளும்.


Monday, October 27, 2025

தோழர் ஏகாம்பரம் - மிகச் சிறந்த வழிகாட்டி

 


நேற்றைய இரவு துயரமான இரவாக முடிந்தது.

எங்கள் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், வேலூர் கோட்டத்தின் முன்னாள் தலைவர் தோழர் என்.ஏகாம்பரம் நேற்று இரவு இயற்கை எய்தினார்.  அவருடனான நினைவுகள் மனதில் அலை அலையாய் மோதிக் கொண்டிருந்தது.

அவரை நான் முதன் முதலில் அறிந்தது 12.06.1988 அன்று நடைபெற்ற வேலூர் கோட்டத்தின் அமைப்பு மாநாட்டில்தான்.

வேலூர் கோட்டத்தின் இணைச்செயலாளராக அந்த மாநாட்டில்தான் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகே அவருடனான பரிச்சயம் தொடங்கி பின்னாளில் வேலூர் கோட்ட அலுவலகத்திற்கு மாறுதலில் வந்த பிறகு அது நெருக்கமாக மாறியது.

எனக்கு திருமணம் நிச்சயமான சூழலில் அப்போது நான் பணியாற்றிக் கொண்டிருந்த நெய்வேலிக்கு  கும்பகோணம் கிளையில் பணியாற்றிக் கொண்டிருந்த என் மனைவிக்கு மாறுதல் கிடைக்காது என்ற நிலையில் என்ன செய்வது என்று குழம்பிக் கொண்டிருந்த எனக்கு "வேலூருக்கு இருவரும் வாருங்கள்" என்ற ஆலோசனையை அவர்தான் வழங்கினார்.

தோழர் ஏகாம்பரம், எல்.ஐ.சி நிறுவனம் உருவான பின்பு முதலில் பணி நியமனம் செய்யப்பட்ட உதவியாளர்களில் ஒருவர். பணியில் சேர்ந்த போதே சங்கத்திலும் சேர்ந்தவர். சங்கத்தின் உறுப்பினர்களை, தலைவர்களை நிர்வாகம் வேட்டையாடிக் கொண்டிருந்த நேரம் அது. எந்த அச்சமும் இல்லாமல்  சங்கத்தில் இணைந்தது மட்டுமன்றி செயற்பாட்டாளராகவும் திகழ்ந்தவர்.

பணியில் சேர்ந்து பல வருடங்களுக்குப் பிறகுதான் பயிற்சி வகுப்பே நடத்தினார்கள் என்பார். அந்த பயிற்சி வகுப்பில் அவரோடு பங்கேற்றவர் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மகத்தான தலைவர் தோழர் என்.எம்.சுந்தரம். அப்போதே தென் மண்டல இணைச்செயலாளராக இருந்த தோழர் என்.எம்.எஸ், பயிற்சி வகுப்பின் தேநீர் இடைவேளையின் போதும் மதிய உணவு இடைவேளையின் போதும் மாநாட்டு அறிக்கையை எழுதிக் கொண்டிருப்பார், அவர் மிகப் பெரிய உயரத்துக்குச் செல்வார் என்று அப்போதே தெரிந்தது என தோழர் என்.எம்.எஸ் அவர்களைப் பற்றி தோழர் ஏகாம்பரம் அடிக்கடி பேசிக் கொண்டிருப்பார். 

ஊழியர்கள் பலன் பற்றிய அனைத்து தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார். அவர் அலுவலகத்தில் செய்த பணியும் "ஓய்வுக்கால பலன்களை  பட்டுவாடா செய்தல், பதவி உயர்வு பெறுவோருக்கான ஊதிய விகிதத்தை நிர்ணயம் செய்தல்" ஊழியர்களுக்கு அதிகபட்ச பலன் கிடைப்பதையும் அவை உரிய காலத்தில் கிடைப்பதையும் உறுதி செய்தவர். 

ஊழியர்களுக்கான பணியிட மாறுதல்களின் போது அதிகபட்ச மாறுதல்கள் கிடைப்பதற்கான சூட்சுமங்கள் அறிந்தவர். அவர் உருவாக்கிய ராஜபாட்டை இன்றும் பல தோழர்களுக்கு பயனளித்துக் கொண்டிருக்கிறது. 

பணி ஓய்வு என்பது அவரது சங்க உணர்வுகளுக்குக் கிடையாது. நுகர்வோர் குறியீட்டு எண் என்ன என்பதை ஒவ்வொரு மாதமும் கண்டறிந்து ஒவ்வொரு மூன்று மாதமும் அகவிலைப்படி உயர்வு எவ்வளவு வரும் என்பதை கணக்கிட்டு தகவல் சொல்வார். அவர் எனக்கு இறுதியாக வாட்ஸப்பில் அனுப்பிய செய்தி கூட அகவிலைப்படி உயர்வு பற்றித்தான். 

அந்த ஆர்வம்தான் கடந்தாண்டு "அகவிலைப்படி- தோற்றமும் முன்னேற்றங்களும், ஒர் வரலாற்றுப் பார்வை" என்ற நூலை அவரது 86 வது வயதில் எழுத வைத்தது. அந்த நூல் வெறும் அகவிலைப்படியோடு நிற்கவில்லை. ஆட்சியாளர்களின் கொள்கைகள் உழைக்கும் மக்களை எப்படித்தாக்கும் என்பதை விளக்கும் நூலாகவும் இருந்தது.  திண்டிவனத்தில் நடைபெற்ற கோட்டச்சங்க மாநாட்டில் அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா வெளியிட்டார்.

அவர் நிஜமாகவே "எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்"தான். கர்னாடக இசையில் ஆர்வம் உள்ளவர்கள். ராகங்களின் அழகை விளக்கக் கூடியவர். ஆபேரி ராகத்தின் அழகை "நகுமோ" கீர்த்தனையில்தான் உணர முடியும் என்பார். பல கர்னாடக இசை காணொளிகளை அனுப்பி அந்த ராகங்களின் சிறப்பையும் சேர்த்து சொல்வார்.

மார்க்சியத்தின் மீதும் மதச்சார்பின்மை கொள்கையின் மீதும் அசையாத நம்பிக்கை கொண்டவர். மத உணர்வுகளை அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்பவர்களை அம்பலப்படுத்த தயங்காதவர். இன்றைய ஆட்சியாளர்கள் பற்றி அவர்களை ஆதரிக்கும் உறவினர்களுக்கு இவர் அனுப்பிய சில செய்திகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார். கொள்கைக்காக யாரிடமும் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் கறாராக இருப்பவர் என்பதை அந்த செய்திகளே சொல்லும்.

வயது வித்தியாசம் இல்லாமல் பழகக் கூடியவர்.  அனைவரிடமும் தோழமை உணர்வை வெளிப்படுத்துபவர். 

பல சந்தர்ப்பங்களில் நான் அவருடைய ஆலோசனையை கேட்டுப் பெற்றுள்ளேன். பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்க வேண்டுமென எங்கள் கோட்டத்தின் முதல் பொதுச்செயலாளர் தோழர் ஆர்.ஜகதீசன் முன்மொழிந்த போது அந்த பொறுப்பை ஏற்று நம்மால் செயல்பட முடியுமா என்று மலைப்பு ஏற்பட்ட போது அவரிடம் ஆலோசித்தேன். நம்பிக்கையும் தைரியமும் உற்சாகமும் கொடுத்தார். 

பணி ஓய்வு பெற்று 27 ஆண்டுகள் ஆன பின்பும் சங்கத்தின் தகவல்களை கேட்டு தெரிந்து கொள்வார், எல்.ஐ.சி நிறுவனத்தின் சுற்றறிக்கைகளை அனுப்பச் சொல்லி தன்னை புதுப்பித்துக் கொண்டே இருப்பார். 

அவர் என்னை செல்லமாக கடிந்து கொண்ட ஒரு நிகழ்வும் உண்டு. 

1990ல் தென் மண்டல மாநாடு ஹைதராபாத் நகரில் நடக்கிறது. நான்கு நாட்கள் தென் மண்டல மாநாடு நடந்தது. ஐந்தாவது நாள் தென் மத்திய மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் அமைப்பு மாநாடு. மாநாட்டு அறிக்கையில் ஒரு வார்த்தை சொல்ல வந்த முக்கியக் கருத்தை எவ்வாறு சிதைக்கிறது என்று எங்கள் கோட்ட பிரதிநிதிகள் விவாதிக்கையில் சுட்டிக்காட்டினார். அவர் சொன்ன கருத்தை அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்கையில் தோழர் ஜகதீசன் சுட்டிக் காண்பிக்க அதனை அறிக்கை மீதான விவாதத்திற்கு தொகுப்புரை வழங்குகையில் அந்த வார்த்தையை மாற்றுவதாக அன்றைய தென் மண்டலப் பொதுச்செயலாளர் தோழர் எஸ்.ராஜப்பா குறிப்பிட்டார். 

தென் மண்டல மாநாடு முடிந்த நாளன்று ஏதாவது தெலுங்குப் படம் பார்ப்போம் என்று கிளம்பினோம். அவரையும் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றோம். எதுவும் தெரியாமல் ஒரு திரை அரங்கில் நுழைந்தோம். கடைசியில் அந்த படம் மிக மோசமான முறையில் சொதப்பலாக எடுக்கப் பட்டிருந்த 16 வது வயதினிலே படத்தின் ரீமேக், "என் தூக்கத்தை கெடுத்து இப்படி ஒரு படத்துக்கு போய் கூட்டிட்டு  போனீங்களே" எறு கேட்டதுதான் அந்த நிகழ்வு.

கதவடைப்புப் போராட்டத்தின் ஐம்பதாவது ஆண்டை முன்னிட்டு ஒரு சிறு பிரசுரத்தை வெளியிட்டோம். அந்த நூலிற்கு ஒரு வாழ்த்துச் செய்தி அனுப்புமாறு கேட்டுக் கொண்டோம். மகிழ்வோடு இசைந்து உடனடியாக அனுப்பி வைத்தார். அச்சிடும் பணியின் இறுதிக்கட்டத்தில் தொலைபேசி செய்து வேலூர் கிளையின் அனுபவத்தைப் பற்றி ஒரு சிறிய கட்டுரை எழுத விரும்புகிறேன். உங்களால் அதனை இணைக்க முடியுமா என்று கேட்க அது எங்களுக்கான நல்வாய்ப்பு என்று சொல்ல மறுநாளே அருமையான ஆங்கிலத்தில் அனுப்பி வைத்தார். அவரின் சங்க உணர்வுக்கு அது ஒரு சான்று. 

கடந்த ஜூலை இறுதியில் 70 பக்கங்களுக்கு மேல் எழுதப்பட்ட ஒரு நோட்டை கொடுத்தனுப்பியிருந்தார். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முக்கியப் போராட்டங்கள் பற்றி எழுதியிருந்தார். அதனை ஒரு நூலாக்கும் பணிகள் துவங்கும் முன்பே அவர் மறைந்து விட்டார். அந்த பணியை முடித்து உரிய காலத்தில் வெளியிட வேண்டும்.

இறுதி மூச்சு வரை சங்கத்தின் மீது கொண்ட பற்று மாறாமல் தான் அறிந்தவற்றை மற்றவர்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று உழைத்தவர் தோழர் ஏகாம்பரம். அவர் வாழ்வே மற்றவருக்கான உதாரணம். 

நீங்கள் உயர்த்திப்பிடித்த தீபத்தை தொடர்ந்து பாதுகாப்போம் என்று உறுதியேற்று  செயல்படுவதே அவருக்கான சிறந்த அஞ்சலி.

செவ்வணக்கம் தோழர் ஏகாம்பரம்

சில முக்கிய நிகழ்வுகளின் புகைப்படங்கள் கீழே . . .




அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் வைரவிழாவை முன்னிட்டு வேலூர் கோட்டம் வெளியிட்ட நூலின் முதல் பிரதியை பெற்றுக் கொண்டு பேசிய போது எடுக்கப்பட்ட படங்கள்.



வேலூர் கோட்டத்தின் வெள்ளிவிழா ஆண்டு துவக்க விழாவின் போது தோழர் என்.எம்.சுந்தரம் அவர்களை கௌரவித்த போது.


வேலூர் கோட்ட வெள்ளி விழா ஆண்டு மாநாட்டின் போது அகில இந்தியத் தலைவர் தோழர் அமானுல்லா கான், தோழர் ஏகாம்பரம் அவர்களை கௌரவித்த போது . . .



வேலூர் கோட்ட வெள்ளி விழா ஆண்டு மாநாட்டின் போது வெளியிடப்பட்ட வேலூர் கோட்ட 25 ஆண்டுகள் வரலாறு நூலின் முதல் பிரதியை பெற்ற போது. 



அவர் எழுதிய "அகவிலைப்படி, தோற்றமும் முன்னேற்றங்களும், ஓர் வரலாற்றுப் பார்வை" நூலை, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா வெளியிட்ட போது . . .


Saturday, October 25, 2025

மாட்டுக்கார வேலனும் ஆட்டுக்காரனும்


 
ஆட்டுக்காரன் நேற்று ஒரு காணொளி வெளியிட்டுள்ளான். கிராமத்தில் ஒரு நாள் என்று மாட்டை குளிப்பாட்டுவது, சாணி அள்ளுவது, மண்வெட்டியை பிடித்து வேலை செய்வது  போல பல சீன்கள் அதில் உண்டு.


முழு காணோளியை போட்டு ஆட்டுக்காரனுக்கு விளம்பரம் கொடுக்க விரும்பவில்லை. அதுவும் அந்த இந்து தமிழ் திசை வெளியிட்ட காணொளியில் பகிரப்பட்ட எஸ்.பி.பி பாட்டு ஆட்டுக்காரனுக்கு ஓவர் ஹைப் கொடுப்பதால் உருவான எரிச்சலாலும் அதனை பகிரவில்லை.

மாட்டைக் குளிப்பாட்டுவதும் சாணி அள்ளுவதும் இழிவானதா என்று சில அனாமதேயங்கள் அறிவுபூர்வமாக கேட்பதாக நினைத்து அபத்தமாக கேட்பார்கள்.

எந்த ஒரு வேலையும் இழிவானதே இல்லை. கண்டிப்பாக இல்லை.

ஆனால் ஆட்டுக்காரன் போடுவது சீன். நாடகம். மாட்டுக்கார வேலன் படத்தில் எம்.ஜி.ஆரின் பட்டு வேட்டி பட்டு சட்டை கசங்காமல் இருப்பது போல ஆட்டுக்காரனின் சட்டையும் எப்படி கசங்காமல் இருக்கிறது?

சேற்றில் வேலை செய்தும் கால்களும் கைகளும் எப்படி சுத்தமாக இருக்கிறது?

ஆனால் ஒன்று.

மோடியே பொறாமைப்படும் அளவிற்கு மிகச் சிறந்த நடிகன் ஆட்டுக்க்காரன். 

Thursday, October 23, 2025

சங்கிகளோடு போட்டியிடும் விஜயினர்


 சங்கிகள்தான் இந்தியாவிலேயே மிகப் பெரும் மூடர்கள் என்று நினைத்திருந்தேன்

அந்த பட்டத்தை தட்டிச் செல்ல விஜய் கட்சியினர் மிகக் கடுமையாக முயற்சி செய்கின்றனர். 

கீழே உள்ள ஒரு ட்விட்டர் பதிவிற்கு தவெக வீரன் ஒருவர் போட்டுள்ள பதிலை பாருங்கள்.



சட்ட மன்றத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர்களை மூடர்கள் என்று சொல்லாமல் வேறென்ன சொல்வது!

பிகு: இதை விட இன்னொரு ஸ்பெஷல் ஐட்டம் உள்ளது. அது மாலையில் . . .

காக்க வைத்த எம்.ஜி.ஆர்

 


கரூர் நெரிசல் மரணங்கள்   எழுத வைத்த இன்னொரு ஒரு அனுபவப் பதிவு.

எட்டாவது வரை காரைக்குடியில் படித்துக் கொண்டிருந்த  நான் ஒன்பதாவது  முதல் பனிரெண்டாவது வரை தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள சர் சிவசாமி ஐயர் மேல் நிலைப்பள்ளியில் படித்தேன். எட்டாம் வகுப்பில்  பார்டரில் பாஸ் செய்ததால் என் அக்கா ஆசிரியராக வேலை பார்த்த பள்ளியில் அவரது கண்காணிப்பில் படித்தாலாவது தேறுவேன் என்ற நம்பிக்கையில் அங்கே வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கப்பட்டேன் என்பதுதான் அக்மார்க் உண்மை. 

1978 ல் திருக்காட்டுப்பள்ளி வாசம் தொடங்கியது. ஒன்பதாவது முழுப் பரிட்சை முடிந்து விடுமுறைக்கு காரைக்குடி (என் பெற்றோர் அப்போது அங்கேதான் இருந்தார்கள் ) சென்று பத்தாவது வகுப்பு பள்ளி திறக்கும் நாளில் திருக்காட்டுப்பள்ளி வந்தால் ஊரே பரபரப்பாக இருந்தது. 

ஆம்.

திருக்காட்டுப்பள்ளி, இடைத்தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருந்தது.

ஆம்.

1979 ஜூன் மாதம், தஞ்சை மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது.

எம்.பி யாக தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.டி.சோமசுந்தரம் (பின்னாளில் உதிர்ந்த ரோமம் என்று புகழ் பெற்றவர்) தமிழக அமைச்சரானதால் ராஜினாமா செய்ய இடைத்தேர்தல் வந்தது.

1977 பொதுத்தேர்தலில் உ.பி மாநிலம் ரேபரேலி தொகுதியில் தோற்றுப் போன திருமதி இந்திரா காந்தி மீண்டும் மக்களவைக்குச் செல்ல தஞ்சை இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பினார். அவர் போட்டியிடப் போகிறார் என்றுதான் பத்திரிக்கைக்கள் எழுதின. அவர் போட்டியிட்டால் அவரை எதிர்த்து கலைஞர் போட்டியிடுவார் என்றும் எழுதினர். ஆனால் இவை இரண்டுமே நடக்கவில்லை. இந்திரா போட்டியிட அதிமுக ஆதரவு தரக்கூடாது என்று அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய் மிரட்டியதால்தான் எம்.ஜி.ஆர் பின் வாங்கினார் என்றும் பத்திரிக்கைகள் எழுதின. ஆனால் எம்.ஜி.ஆர் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு அளித்தார். 

காங்கிரஸ் சார்பில் சிங்கார வடிவேலு என்பவரும் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கமும் (இந்நாள் கல்வி அமைச்சர் அன்பில் மஹேஷ் பொய்யாமொழியின் தாத்தா) போட்டியிட்டனர்.

நான் விடுமுறை முடிந்து திருக்காட்டுப்பள்ளி வரும் முன்பே அந்த சிறு ஊருக்கு மூன்று முக்கியத் தலைவர்கள் வந்து போயிருந்தனர். 

அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் அன்றைய முன்னாள் முதல்வர் கலைஞர் ஆகியோருடைய கூட்டங்கள் காவிரியில் ( நதியில் தண்ணீர் இல்லை) நடந்திருந்தது. 

அதற்குப் பிறகு நடந்த கூட்டம் நடிகர் திலகம் சிவாஜி கணெசனின் கூட்டம். அந்த கூட்டம் தினசரி மார்க்கெட்டை ஒட்டிய ஒரு திடலில் நடந்தது. தஞ்சாவூர் தொகுதிக்கு திமுக சம்பந்தமே இல்லாத  திருச்சிக்காரரை நிறுத்தியுள்ளது என்று  அவர் குற்றம் சுமத்தினார். ஒரு வேளை இந்திரா அம்மையார் நின்றிருந்தால் ????

தேர்தல் நாளுக்கு  ஒரு நான்கு நாட்கள் முன்பாக எம்.ஜி.ஆர் திருக்காட்டுப்பள்ளி வரப் போவதாக  காரில் மைக் கட்டி கிராமம் கிராமமாக அறிவித்துக் கொண்டிருந்தார்கள். இரவு எட்டு மணிக்கு அவர் வருவார் என்று சொல்லப்பட்டது. 

எந்த மைதானத்திலோ, காவிரியிலோ எம்.ஜி.ஆர் பேசவில்லை. மூன்று சாலைகள் சந்திக்கும் ஒரு முனையில் அவர் ஜீப்பில் நின்றபடியே பேசுவார் என்று சொல்லப்பட்டது. ஆறு மணிக்கெல்லாம் அந்த இடம் நிரம்பி வழிந்தது. பக்கத்தில் இருந்த ஒரு பள்ளி நண்பனின் கடையில் பாதுகாப்பாக இடம் பிடித்திருந்தேன்.

நேரம் ஓடிக்கொண்டே இருந்தது. தலைவர் வந்து கொண்டே இருக்கிறார் என்று அறிவித்துக் கொண்டே இருந்தார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் வருவதாகத் தெரியவில்லை. பதினோரு மணி வாக்கில் அறிவிப்பு வந்தது. வரும் வழியில் ஒவ்வொரு இடத்திலும் தலைவரை மக்கள் சூழ்ந்து கொண்டு பேசச் சொல்வதால் தாமதமாகிறது. அதனால் வேறு வழியில்லாமல் இன்றைய கூட்டம் ரத்து செய்யப்படுகிறது, நாளை எட்டு மணிக்கு இதே இடத்தில் மீண்டும் கூட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர். மக்களும் அமைதியாகக் கலைந்தனர். 

மறு நாளும் ஆறு ,மணிக்கெல்லாம் மக்கள் குவிந்து விட்டனர். ஆனால் இந்த முறை எட்டரை மணிக்கெல்லாம் எம்.ஜி.ஆர் வந்து விட்டார். அவர் பேசியதை எல்லாம் எங்கே மக்கள் கேட்டார்கள்! ஒரே ஆரவாரம்தான், பார்த்தாலே பரவசமடைந்த மக்கள் அவரிடம் காண்பித்த பிரியமே தேர்தல் திசை வழியை சொன்னது.

முதல் நாள் வராமல் காக்க வைத்தமைக்கு அவர் வருத்தம் தெரிவித்தார் என்பது எனக்கு இன்னும் நினைவில் உள்ளது. "தலைவா, தலைவா" என்று அப்போது மக்கள் எழுப்பிய ஆரவாரமே அவர் வருத்தமெல்லாம் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று மக்கள் சொல்லாமல் சொன்னார்கள் என்பதன் அர்த்தம். 

41 பேர் இறந்ததற்கு தான் தாமதமாக வந்ததுதான் முக்கியக் காரணம் என்பதை இன்னமும் ஒப்புக் கொள்ளாமல் சதிக் கோட்பாடு எழுதும் விஜய் தன்னை எம்.ஜி.ஆர் என்று நினைத்துக் கொள்வதெல்லாம் ரொம்பவே ஓவர்.  

பிகு: அந்த தஞ்சாவூர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சிங்காரவடிவேலுதான் வெற்றி பெற்றார். வாக்கு வித்தியாசம் ஒரு லட்சத்திற்கும் மேல் இருந்தது. 


மோடி, ட்ரம்ப் பொய்யன் யார்?

 



கடந்த செவ்வாயன்று ட்ரம்ப் மோடியை தொலைபேசியில் அழைத்து தீபாவளி வாழ்த்து சொல்லியுள்ளார். 

அந்த தொலைபேசி பேச்சு பற்றி ட்ரம்ப் சொன்னது 

"நாங்கள் இருவரும் ஏராளமான விஷயங்கள் பற்றி பேசினோம். ஏராளமான விஷயங்களைப் பற்றி பேசினாலும் கூட வர்த்தக பேரங்களில்தான் அவர் அதிக கவனம் செலுத்தினார். ரஷ்யாவிலிருந்தான எண்ணெய் இறக்குமதியை குறைப்பது, பாகிஸ்தானுடன் போர் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வது ஆகியவை குறித்து விரிவாக பேசினோம்"

இது ட்ரம்ப் கூறியது.

அதுவும் எங்கே? யாரிடம்?

வெள்ளை மாளிகையில் அமெரிக்க வாழ் இந்திய கோடீஸ்வரர்களுக்கு அளித்த தீபாவளி விருந்தின் போது.

ரஷ்யாவிலிருந்தான எண்ணெய் இறக்குமதியை இந்தியா குறைத்துக் கொண்டு விட்டது என்று இந்த வாரத்தில் மட்டும் நான்கு முறை ட்ரம்ப் கூறினாலும் இந்தியா அது பற்றி வாய் திறக்கவேயில்லை என்று ஆங்கில இந்து நாளிதழ் சொல்கிறது.

மோடி என்ன சொல்கிறார்?

தீபங்களின் திருவிழாவான இன்று நம் இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளும் உலகெங்கும் நம்பிக்கை தீபம் ஏற்றுவதை தொடர்ந்து அனைத்து வடிவிலுமான தீவிரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட்டு நிற்போம்" 

இதிலே  யார் சொல்வது உண்மை? யார் சொல்வது பொய்?

இரண்டு பேர் சொல்வதும் உண்மையாக இருக்கலாம். இரண்டு பேர் சொல்வதும் பொய்யாகவும் இருக்கலாம்.

ஏனென்றால் அடிப்படையில் இருவருமே பொய்யர்கள், கிறுக்கர்கள், முட்டாள்கள், சந்தர்ப்பவாதிகள், மோசடிப்பேர்வழிகள்.

இரண்டு நாட்டு மக்களைக் குழப்ப இருவருமே பேசி வைத்துக் கொண்டு கூட பொய் சொல்லியிருக்கலாம்.

ட்ரம்ப் சொல்வதெல்லாம் பொய் என்று சொல்லும் தைரியம் மோடிக்கு வராத வரை ட்ரம்ப் சொல்வதுதான் உண்மை என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

சரி அப்படி மோடி சொல்லி விட்டால், மோடி உண்மையை பேசுகிறார் என்று ஒப்புக் கொள்வீர்களா என யாராவது அனாமதேயம் கேட்கலாம்.

அப்படி மோடி தைரியமாக சொல்லட்டும்.

அதற்குப் பிறகு நீங்கள் பார்ப்பீர்கள் "பேய்க்கும் பேய்க்கும் சண்டை"





Tuesday, October 21, 2025

ராஜீவ் கூட்ட்டத்தில் சுருண்ட கதை . . .



 விஜயின் கரூர் கூட்டத்தில் நெரிசல் மரணங்கள் நிகழ்ந்த நாள் முதல் எழுத நினைத்த என் சொந்த அனுபவம் இது.

1984 ல் இந்திரா காந்தி கொல்லப்பட்டு ராஜீவ் காந்தி பிரதமராகிறார். தன் தாயின் மரணத்தால் உருவான அனுதாபத்தை அறுவடை செய்ய மக்களவையை கலைத்து விட்டு தேர்தலை சந்திக்கிறார்.

அத்தேர்தலுக்காக நாடெங்கிலும் பிரச்சாரம் செய்கிறார். அப்போது நாங்கள் நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் இருந்தோம். சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கான பிரச்சாரத்திற்காக நெய்வேலி வருகிறார். முதல் நாள் மாலையில்தான் ஆட்டோவில் அறிவிப்பு செய்கிறார்கள். 

மதுரையில் படித்துக் கொண்டிருந்தாலும் ஐந்தாவது செமஸ்டர் தேர்வுகள் முடிந்து விடுமுறைக்காக வீட்டிற்கு வந்திருந்தேன். 

ராஜீவ் காந்தி கூட்டத்திற்கு புறப்பட்டேன். ராஜீவ் காந்தி மீது பெரிய நாட்டம் எல்லாம் ஒன்றும் கிடையாது. அந்த காலகட்டத்தில் பிடித்த தலைவர் ராமகிருஷ்ண ஹெக்டேதான்.  இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், சரண்சிங் ( நான் பார்த்த போது அவர் பிரதமர் இல்லை) ஆகிய மூன்று பிரதமர்களை பார்த்துள்ளேன். அந்த பட்டியலில் ஒன்று கூடுவதை வைத்து கல்லூரியில் பீற்றிக் கொள்வதுதான் நோக்கம்.

மந்தாரகுப்பம் சுரேஷ்குமார் பேலஸ் தியேட்டர் (பெயர் சரியாக நினைவில் இல்லை, சந்தோஷ்குமார் பேலஸாகக் கூட இருந்திருக்கலாம்)  பக்கத்தில் கூட்டம்  என்று சொன்னார்கள். சைக்கிளில் போனால் அங்கே கூட்டம் நடப்பதற்கான  எந்த சுவடும் இல்லை. இன்னும் கொஞ்ச தூரம் போனால் கூட்டம் நடக்கும் இடம் வரும் என்றார்கள். 

காலை பத்தரை மணி இருக்கும். மிகக் கடுமையான வெய்யில். சைக்கிளை மிதிக்கிறேன், மிதிக்கிறேன், மிதித்துக் கொண்டே இருக்கிறேன். வானில் ஹெலிகாப்டர் செல்லும் சப்தம். சைக்கிளை மிதிக்கும் வேகம் அதிகரிக்கிறது.

கிட்டத்தட்ட ஏழெட்டு கிலோ மீட்டர் சென்ற பின்பு கூட்டம் நடக்கும் இடம் வந்தது. அந்த ஹெலிகாப்டரில் வந்தது ராஜீவ் காந்தி இல்லை. அந்த பொட்டல் மைதானம் சென்றதும் சைக்கிளை நிறுத்தி விட்டு அப்படியே கட்டாந்தரையில் சுருண்டேன். படபடவென்று நெஞ்சு அடித்துக் கொண்டது. தொண்டை தாகத்தில் வரண்டது. ஆனாலும் எழுந்திருக்க முடியவில்லை. ஒரு பத்து நிமிடங்கள் சோர்வில் படுத்துக் கொண்டே இருந்தேன். 

அதன் பிறகு எழுந்து பார்த்தால் பக்கத்தில் ஒரு தண்ணீர் தொட்டி இருந்தது. கைகளில் தண்ணீரை பிடித்து குடித்தேன். கொஞ்சம் தெம்பு வந்தது. நீண்ட நேரம் காக்க வைக்காமல் ராஜீவ் காந்தியும் வந்து விட்டார். அவருடைய பேச்சு அவ்வளவு சுகமில்லை. தமிழாக்கம் செய்த ப.சிதம்பரம் தன் சொந்த சரக்கையும் சேர்த்து சமாளித்தார் என்பது வேறு கதை.

மீண்டும் அதே வெய்யிலில் சைக்கிளை மிதித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.  அப்படியே ஒரு பெஞ்சில் படுத்தேன். மதியம் சாப்பிடக் கூட எழுந்திருக்கவில்லை. மாலையில் உடல் கேஸ் அடுப்பு போல கொதித்தது.  மந்தாரக்குப்பத்தில் உள்ள மருத்துவரிடம் இரண்டு மூன்று நாள் சென்றும் எந்த முன்னேற்றமும் இல்லாததால் அவர் என்.எல்.சி பொது மருத்துவமனையில் சேர்க்கச் சொல்லி விட்டார். 

அங்கே டைபாய்டு என்று கண்டறிந்து உள் நோயாளியாக சேர்ந்து ஒரு வாரம் இருந்தேன். கடைசி செமஸ்டரில் இப்படியாகி விட்டதே என்று என் அப்பா திட்டினாரே தவிர, எதற்காக ராஜீவ் காந்தி கூட்டத்திற்கு போனாய் என்று அவர் திட்டவேயில்லை. இந்திரா காந்தி, எம்,ஜி.ஆர், கலைஞர், மொரார்ஜி தேசாய், சோ ஆகியோருடைய கூட்டங்களுக்கு 1977 ல் அழைத்துச் சென்றவரே அவர்தானே. அரசியலை பின்பற்றத் தொடங்கியது அந்த காலகட்டத்திலிருந்தேதான். 

அதனால்தான் , அந்த நாற்பத்தி எட்டு வருட அனுபவத்திலிருந்து சொல்ல முடிகிறது. த.வெ,க  போன்ற பொறுப்பற்ற கட்சி எதுவுமில்லை.