கடந்த மாத
இறுதியில் ஓய்வு பெற்ற ஒரு தோழரின் மகனின் திருமணத்திற்காக சென்றிருந்தேன். வேலூரின்
ஒரு கோடியில் உள்ள மண்டபம் அது.
பல முறை சென்ற
மண்டபம் என்றாலும் இரண்டு நிகழ்வுகள் நினைவுக்கு வந்தது.
ஒரு தோழரின்
மகளின் திருமணம். ஒரு எட்டு மணி அளவில் மண்டபத்திற்கு சென்றால் திருமண வீட்டிற்கான
சுவடே தெரியவில்லை. எங்கள் தோழரையும் காணவில்லை. அங்கங்கே சிலர் அமர்ந்திருந்தாலும்
யாருக்கும் எதுவும் தெரியவில்லை. மணமக்கள் சில நிமிடங்களில் வந்து விடுவார்கள் என்று
மட்டும் சொன்னார்கள்.
அப்படியே
வந்தார்கள். இருவர் முகத்திலும் உற்சாகமில்லை. மண மகள் கண்களெல்லாம் கலங்கி இருந்தது.
எங்கள் தோழரை காணவில்லை. அவரது மனைவி சில மாதங்கள் முன்புதான் இறந்து போயிருந்தார்.
சரி ஏதோ திருமணத்தில் ஏதோ பிரச்சினை வந்து முடிந்திருக்கும் போல என்று நினைத்துக் கொண்டு
பரிசுப் பொருளை கொடுத்து விட்டு வீட்டுக்கு வந்து விட்டோம்.
மறு நாள்
காலையில்தான் விஷயம் தெரிந்தது. எங்கள் தோழரின் தம்பி, மணப்பெண்ணின் சித்தப்பா, மாலை
நான்கு மணி அளவில் திருமணத்திற்கான பொருள் எதையோ வாங்க இரு சக்கர வாகனத்தில் சென்றவர்
மீது லாரி ஒன்று மோத, அவர் சம்பவ இடத்திலேயே இறந்து போய் விட்டார்.
அந்த துயர
வேளையிலும் மண மகன் வீட்டினர் ஒரு நல்ல முடிவு எடுத்துள்ளனர். இவ்வளவு செலவு செய்து திருமண ஏற்பாட்டை செய்து விட்டு
திருமணத்தை நிறுத்த வேண்டாம். நாங்களே பெண் வீடு, மாப்பிள்ளை வீடு இரண்டுமாக இருந்து
திருமணத்தை நடத்திக் கொள்கிறோம் என்று சொல்லி விட்டனர்.
கெட்ட சகுனம்
என்று சொல்லி திருமணத்தையே ரத்து செய்கிற காலத்தில் யதார்த்தமாக முடிவெடுத்த அந்த நிகழ்வு
எப்போதுமே நினைவில் இருக்கும்.
அதே போல இன்னொரு
நிகழ்வும் மறக்க முடியாதது.
2010 ம் ஆண்டில்
ஏப்ரல் மாதத்தில் குடியாத்தத்தில் எங்கள் கோட்டச் சங்க மாநாடு நடந்தது.
ஒரு ஞாயிறு,
திங்கள் இரு நாட்களில் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்தது. வியாழன், வெள்ளி இரு நாட்கள்
விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில மாநாடு வேலூரில். மாநாட்டு வரவேற்புக்குழுவின்
சார்பில் ஏராளமான வேலைகள். மாநாட்டுக்கு வந்த இரண்டு தலைவர்கள் தோழர் பட்டூர் ராமையா
எனும் ஆந்திர மாநில முன்னாள் எம்.பி, தோழர் சுனீத் சோப்ரா என்ற டெல்லித் தோழர். இருவரையும்
கவனித்துக் கொள்ளும் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டிருந்தது.
மாநாட்டை
முன்னிட்டு நடந்த பொதுக்கூட்டத்தில் தோழர் யெச்சூரி பேசினார். எங்கள் அலுவலகத்திற்கு அருகில் இருந்த ஆவணா இன்
ஹோட்டலில்தான் அவர் தங்குவதற்கு ஏற்பாடு. எங்கள் தோழர்கள் பலரோடு அவருக்கு ஒரு சிறப்பான
வரவேற்பு கொடுத்தோம். அன்றைய கூட்டம் கூட மிகச் சிறப்பாக இருந்தது. பாஜக கூட்டம் போல
காலி நாற்காலி கூட்டம் அல்ல.
மனம் நிறைவாக
இருந்தது. ஞாயிறு அன்று ஒரு தோழர் திருமணம். சனிக்கிழமை வரவேற்பில் மனைவியுடன் கலந்து
கொண்டு மறுநாள் முகூர்த்தத்தில் சந்திப்போம் என்று சொல்லி வீட்டிற்கு திரும்பி வருகையில்தான்
இன்னொரு இரு சக்கர வாகனம் ராங் சைடில் ஓவர் டேக் செய்ய, அந்த வாகனத்தின் பின்னே கட்டப்பட்டிருந்த
இரண்டு கறுப்பு கேன்கள் (அனேகமாக அது கள்ளச்சாராய கேனாக இருக்க வாய்ப்புண்டு. ஏனென்றால்
நாங்கள் கீழே விழுவதைப் பார்த்தும் நிற்காமல் அதி வேகத்தில் பறந்து விட்டார்கள்) இடிக்க,
பேலன்ஸ் தவறி கீழே விழுந்து விட்டோம். வண்டி எங்கள் மேலே விழுந்து விட்டது.
சாலையில்
இருந்தவர்கள் வந்து எழுப்பி விட்டார்கள். எழுந்து கொள்ளவே முடியவில்லை. கால் துண்டானது
போன்ற உணர்வு. அந்த விபத்து, அதன் பின் விளைவு, கால் வலி, இப்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றம்
இவை பற்றியெல்லாம் ஏற்கனவே எழுதியுள்ளதால் மீண்டும் எழுதி உங்களை எல்லாம் போரடிக்க
விரும்பவில்லை.
அந்த மண்டபத்திற்கு
சென்றதும் அந்த விபத்தின் நினைவு வந்ததை தவிர்க்க இயலவில்லை. அது போலவே அந்த விபத்தின்
காரணமாக ஏற்பட்ட ஊனத்தை சில நல்லவர்கள் நக்கலடித்ததும் நினைவுக்கு வந்து விட்டது. முகமுடிகளையே முகங்கள் என நினைக்கிற உலகமிது என்பது கூட . . .
வாழ்க்கையில்
எல்லாவற்றையும் மறப்பதும் மன்னிப்பதும் முடியாது அல்லவா !