Sunday, December 31, 2023

சந்திரனுக்கு டிமோ போனால் . . .


டிமோ சந்திரனுக்குப் போனால் எப்படி இருக்கும் என்றொரு கற்பனையில் ஒரு நாடகம் எழுதினேன். செப்டம்பர் மாதம் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற எங்கள் கோட்ட மாநாட்டின் ஒரு பகுதியாக பொது வெளியில் நடைபெற்ற மக்கள் ஒற்றுமை கலை விழாவில் நாடகத்தை அரங்கேற்றினோம்.

 ஒரே ஒரு நாள் ஒத்திகையின் போது மட்டுமே என்னால் இருக்க முடிந்தது. அதன் பின் தோழர்களே பயிற்சி எடுத்துக் கொண்டு சில வசனங்களை மெருகேற்றி சிறப்பாக நடித்து மக்களின் கைத்தட்டுக்களை அள்ளிக் கொண்டார்கள்.  

 அந்த நாடகத்தின் எழுத்து வடிவம் உங்களுக்காக.

 மகாராஜாவாக தோழர் சி.சோமசுந்தரம்,

மந்திரி 1  ஆக தோழர் ஜி.ரவி



மந்திரி 2 ஆக  தோழர் கே.அத்தாவூர் ரஹ்மான்

விஞ்ஞானியாக  தோழர் பி.எஸ்.பாலாஜி

புகைப்படக்காரராக  தோழர் சி.கணேசன்

 





 

சந்திரனில் மகாராஜா

 

பின்னணிக் குரல் : நிலவுக்கு சந்திராயன் மூன்றை அனுப்பி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர் நம் விஞ்ஞானிகள். அவர்களுக்கு நம் வாழ்த்துக்கள். கரையான் புற்றெடுக்க கருநாகம் புகுந்த கதையாய் அந்த மகத்தான சாதனையை சம்பந்தமே இல்லாதவர்கள் களவாடினால் என்ன நடக்கும்?

 “ ராஜா, ராஜாதி ராஜன் இந்த ராஜா”ஒலிக்க மகாராஜா அரசவைக்கு வருகிறார். வந்து நின்று  ஸ்டைலாக பார்க்கிறார், எல்லா பக்கமும் திரும்பி நிற்கிறார். அவரை போட்டோகிராபர் புகைப்படங்கள் எடுக்கிறார். பிறகு அரியணையில் அமர்கிறார்.

 மந்திரிகள் இருவர் பக்கத்தில் வந்து நிற்கிறார்.

 மகாராஜா: நாட்டில என்னய்யா நடக்குது?

 மந்திரி 1 ;: ;மகாராஜா பணப்பூரில் பயங்கரப் பிரச்சினை. மக்கள் அடித்துக் கொண்டு சாகிறார்கள். நாம் படையை அனுப்பி அமைதியை ஏற்படுத்த வேண்டும்.

 மந்திரி 2 : யோவ் மங்குனி மந்திரி, அந்த சண்டையே நாம ஏற்பாடு செஞ்சதுதான். சண்டை நடந்துகிட்டே இருந்தாதான் எவனும் நம்ம கிட்ட வர மாட்டேன்.

 மந்திரி 1 : மகாராஜா, விலைவாசி ஏறிக்கிட்டே இருக்குது, வேலையில்லா திண்டாட்டம் அதிகமாயிடுச்சு, ஜனங்க ரொம்ப கஷ்டப்படறாங்க.

 மகாராஜா : ஏன்யா எப்ப பாரு நொய் நொய்யுன்னு ஏதாவது பிரச்சினையை சொல்லிக்கிட்டே இருக்க? இதுக்குத்தான்யா நான் அரசவைக்கே வரதுல்ல. என் நாட்டில எனக்கு பிடிக்காத ஒரே இடம் இதுதான்யா.

 மந்திரி 2 :  மகாராஜா சந்தோஷப்படற மாதிரி, அவரு பெருமையா பேசற மாதிரி ஏதாவது விஷயம் இருந்தா சொல்லுய்யா.

 மந்திரி 1 : இருந்தா சொல்ல மாட்டேனா? ஏன் நீயும் மந்திரிதானே! நீ என்ன கிழிக்கற?

 மகாராஜா : ஏய், அப்டில்லாம் பேசக் கூடாது. இவன் என் மன சாட்சி, மனதின் குரல். என் மனசுல இருக்கறத செஞ்சு முடிக்கறவன். பணப்பூர் சண்டைக்கே இவந்தான் மெயின்.

 மந்திரி 1 : மகாராஜா, அந்த காலத்துல சந்திரனுக்கு போக ராக்கெட் கண்டு பிடிக்க ஆரம்பிச்சாங்க. அந்த வேலை இப்போ முடிஞ்சு நம்ம சைன்டிஸ்டுங்க எல்லாம் இப்போ ரெடியா இருக்காங்க. நீங்க கையெழுத்து போட்டா அவங்க கிளம்பிடுவாங்க.  நீங்களும் அவங்கள பெருமையா வழி அனுப்பி வைக்கலாம். போட்டோ எடுத்து போடலாம்.

 மகாராஜா : சரி கூப்பிடு அந்த ஆளுங்களை.

 சைன்டிஸ்ட் வருகிறார் : வணக்கம் மகாராஜா

 மகாராஜா :  நமஸ்தே ன்னு சொல்லுய்யா.

 மந்திரி 2 : மகாராஜாவுக்கு என்ன சொன்னா பிடிக்கும்னு கூட தெரியாம நீயெல்லாம் என்னய்யா ஆராய்ச்சி செஞ்ச?

 சைன்டிஸ்ட் : மகாராஜா, எங்க தாத்தா மகாராஜா சந்திரனுக்கு போக ஒரு ராக்கெட்டு கண்டுபிடிக்க ஆரம்பிச்சாரு. அது இப்போ தயாரா இருக்கு! நீங்க இதுல்ல கையெழுத்து போட்டா கஜானாவில இருந்து பணத்தை வாங்கிட்டு மத்த ஏற்பாட்டை செய்வோம்.

 மகாராஜா ஃபைலை கையில் வாங்குகிறார். இடது கையில் பச்சை குத்தப்பட்டுள்ள தன் பெயரைப் பார்த்து கையெழுத்து போடுகிறார்.

 சைன்டிஸ்ட் நன்றி சொல்லி விட்டு கிளம்புகிறார்.

 மந்திரி 2 : இரு இரு எங்க கிளம்பிட்டே. கொஞ்சம் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிட்டு போ.

 சைன்டிஸ்ட் : என்ன மந்திரியாரே?

 மந்திரி 2 : சந்திரனுக்கு யார் போகப் போறாங்க?

 சைன்டிஸ்ட் : நாந்தான் மந்திரியாரே

 மந்திரி 2 :  அங்கே போய் என்ன செய்யப் போற?

 சைன்டிஸ்ட் : அங்க தண்ணி இருக்கான்னு கண்டு பிடிப்பேன். அங்கே இருக்கிற கல்லையையும் மண்ணையும் கொண்டு வந்து இங்கே ஆராய்ச்சி செய்வேன்.

 மந்திரி 2 : தண்ணி இருக்கான்னு பார்க்கவும் கல்லையும் மண்ணையும் கொண்டு வர நீ எதுக்கய்யா? அரசாங்கம் செலவு செய்யும்.  உனக்கு பேரும் புகழுமா?

 மந்திரி 1 : அப்போ என்ன நீ போகப் போறியா?

 மந்திரி 2 : நான் எதுக்குய்யா போகனும்?  நம்ம நாட்டுக்கே தலைவர் மகாராஜா. அவர் போனாதான் நாட்டுக்கே பெருமை. சந்திரனுக்குப் போற முதல் மகாராஜா நம்ம மகாராஜாவாதான் இருக்கனும்.

 மகாராஜா : இது நல்ல ஐடியாவா இருக்கே! நானே சந்திரனுக்குப் போறேன்.;

 சைன்டிஸ்டும் ம;ந்;திரி 1 ம் அதிர்ச்சியாகப் பார்க்கிறார்கள்.

 சைன்டிஸ்ட் : மகாராஜா, அது கொஞ்சம் ரிஸ்க். நான் அதுக்காகவே படிச்சவன்,

 மந்திரி 2 : மகாராஜா படிக்காதவருன்னு சொல்றியா? உலகத்துல யாருமே படிக்காத படிப்பை அவரு மட்டுமே படிச்சதுக்கான சர்டிபிகேட் இருக்கு, பார்க்கறியா?

 மந்திரி 1 (மெதுவாக) : நாட்டுல அத்தனை பேரும் அதை கேட்டாலும் தர மாட்டீங்க, அப்படி ஒன்னு இருந்தா காண்பிக்க மாட்டீங்களா?

 மகாராஜா : இங்கே பார், நல்ல நாள் பார்த்து நான் கிளம்பனும். அதுக்கு ஏற்பாடு செய். யோவ் சைன்டிஸ்ட், நான் என்ன செய்யனும்னு நீதான் எனக்கு புரியற மாதிரி சொல்லிக் கொடுக்கனும்.

 

காட்சி 2

 

விண்வெளிக்கூடம்


சைன்டிஸ்ட் : மகாராஜா, இதுதான் சந்திரனுக்கு போகும் இயந்திரம். இதுக்குள்ள உட்கார்ந்து முதலில்  காற்று அளவை சோதிக்கனும். புவியீர்ப்பு விசையை கவனிக்கனும். அப்பறமா …

 மகாராஜா : அதெல்லாம் நீங்க செஞ்சு வச்சிருங்க. நான் உள்ள போய் உட்கார்ந்து ஏதாவது மந்திரத்தை சொல்வேன். மிஷின் கிளம்பிரனும்.

 சைன்டிஸ்ட் : இயந்திரத்திற்குள் நுழைந்து ஏதோ செய்து விட்டு வருகிறார்.

        

சைன்டிஸ்ட் :  மகாராஜா இந்த மந்திரத்தை ஞாபகம் வச்சுக்குங்க

 மகாராஜா: என்ன மந்திரம் அது?

 சைன்டிஸ்ட் :  அண்டா காகசம், அபுகா ஹுகும் புறப்படு சீசேம்.

 மந்திரி 2 : யோவ்! இது கொள்ளைக் கூட்டத்தோட மந்திரம்தானே!

 மந்திரி 1 : பொருத்தமாத்தானே இருக்கு!

 சைன்டிஸ்ட்  மகாராஜா இதை போட்டுக்குங்க என்று விண்வெளி உடையைத் தருகிறார்.

 மகாராஜா : இதைப் போட்டுக்கிட்டா என் கம்பீரமே போய்டுமேய்யா?

 மந்திரி 1 : இதை போடலைன்னா உங்க உயிரே போயிடுமே!

 மகாராஜா தயாராக வருகிறார். அவர் கூடவே போட்டோகிராபரும் வருகிறார்.

 சைன்டிஸ்ட் : மகாராஜா, இவரு எதுக்கு?

 மகாராஜா : இவரு இல்லைன்னா என்னை சந்திரனில யாரு போட்டோ எடுப்பா?

 சைன்டிஸ்ட் : ஒருத்தர்தான் உட்கார முடியும். கவலைப்படாதீங்க மகாராஜா, நம்ம மிஷினே உங்களை போட்டோ எடுக்கும்.

 மகாராஜா மிஷினுக்கு அருகில் போய் விட்டு மீண்டும் வருகிறார்.

 மகாராஜா : யோவ் சைன்டிஸ்ட், பஞ்சாங்கத்தை ஒழுங்கா பாத்த இல்ல? இன்னிக்கு அமாவாசை கிடையாதே? நான் பாட்டுக்கு சந்திரனை தேடிக்கிட்டு இருக்கப் போறேன்.

 சைன்டிஸ்ட்: ராஜா, நீங்க சந்திரனில இறங்கின உடனே இதே மந்திரத்தை கொஞ்சம் மாத்தி சொல்லனும்

 மகாராஜா:. நீ வாயை மூடு. அதெல்லாம் எனக்கு தெரியும்.

 மகாராஜா சந்திரனுக்கு புறப்படுகிறார்.

 சைன்டிஸ்ட் கையில் உள்ள கம்ப்யூட்டரையே பார்த்துக் கொண்டு இருக்கிறார். கொஞ்ச நேரம் கழித்து

 சைன்டிஸ்ட் : மகாராஜா சந்திரனுக்கு போயிட்டார்

 சந்திரனில் இறங்கியதும்

 மகாராஜா : அண்டா பிரியாணி, அப்பா வச்ச பேரு, டைகர் கா ஹுகும்.

 சைன்டிஸ்ட்  தலையில் கை வைத்துக் கொள்கிறார்.

 மந்திரி 1 : என்னாச்சு சைன்டிஸ்டு?

 சைன்டிஸ்ட் : இப்படியெல்லாம் சொதப்புவார்னு நான் நெனச்சேன்.

 மந்திரி 2: என்னாச்சுய்யா?

 சைன்டிஸ்ட் :மகாராஜா மிஷினில இருந்து இறங்கிய உடனே  சொல்ல வேண்டிய மந்திரத்தை மாத்தி சொல்லிட்டாரு.

 மந்திரி 1 : அதனால என்ன?

 சைன்டிஸ்ட் : மிஷின் நிற்காம சுத்திக்கிட்டே இருக்கும்.

 மந்திரி 1 : அப்போ மகாராஜா?

 சைன்டிஸ்ட் : அவரு இனிமே  அதை துரத்திக்கிட்டே இருக்கனும்.

 ராக்கெட் போய்க் கொண்டே இருக்கிறது, அதன் பின்னால் மகாராஜாவும் ஓடிக் கொண்டே இருக்கிறார்.

 அடுத்தவர் உழைப்பை களவாட நினைப்பவர், மக்களைப் பற்றிக் கவலையில்லாமல் சுய நலமாய் வாழ்பவர் நிச்சயம் ஒரு நாள் தெருவில் நிற்பார். அந்த நாள் சீக்கிரம் வரும்.

 


பிகு: ஒரு ஆட்டோவின் நான்கு பக்கங்களிலும் விண்கலனின் படத்தை ஒட்டி அதை சந்திராயனாக மாற்றி இருந்தோம். சந்திராயன் மேலே செல்வதற்குப் பதிலாக சாலையில் சென்றது.

 

 

 

  

சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹால்

 


பாரதிராஜா இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான "தாஜ் மஹால்" படத்தின் "சொட்ட சொட்ட நனையுது தாஜ் மஹால்" பாடலின் வயலின் வடிவம், என் மகனின் முயற்சியில் . . .

யூட்யூப்  இணைப்பு இங்கே . . .

Saturday, December 30, 2023

அப்பாடக்கரா தமிழ்ம்யூசிக் அம்மையார்?

 

கீழே உள்ள படத்துக்கு எதிர்வினை மேலே உள்ள படம்.


நிர்மலா அம்மையாரின் அதே ஆணவ உடல் மொழி தமிழிசை அம்மையாரிடமும்.

சங்கி சங்கிதான்.

நிர்மலா அம்மையாரே, திருப்பதியில் சொல்லுங்க

 


கோயில் உண்டியலில் பணம் போடாதீர்கள், அப்படி பணம் போடாவிட்டால் இந்து அறநிலையத் துறையை இழுத்து மூடி விடுவார்கள் என்பது கோயில் சொத்துக்களை கொள்ளையடிக்க ஆசைப்படும் சில்லறை சங்கிகள் செய்து வருகின்ற பிரச்சாரம். அந்த சில்லறை சங்கிகள் சொல்வதை தன் வாடிக்கையான ஆணவமான உடல் மொழியில் சொல்லியுள்ளார் நிர்மலா அம்மையார்.

உண்டியலில் பணம் போட வேண்டாம் என்று தமிழ்நாட்டு பக்தர்களிடம் சொல்லும் நிர்மலா அம்மையார், உண்டியல் வசூலில் உலக சாதனையை தக்க வைத்துக் கொண்டிருக்கிற திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்குச் செல்லும் பக்தர்களிடமும் சொல்வாரா?

அப்படி சொன்னால் திருப்பதி கோயில் முதலாளிகள் அவரை கோயிலுக்குள் அனுமதிப்பார்களா? ஏன்,  அம்மையாரை ஆந்திராவிற்குள்ளே கால் வைக்கக்கூட அனுமதிக்க மாட்டார்கள்.

 

Friday, December 29, 2023

சனாதன தர்மத்தை இதனால்தான் எதிர்த்திட வேண்டும்.

 



அஸ்ஸாம் முதலமைச்சர் ஹேமானந்த பிஸ்வாஸ் உதிர்த்த முத்து கீழே உள்ளது.



 அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா: விவசாயம், மாடு வளர்த்தல். வணிகம் ஆகியவை வைசியர்களின் இயற்கையான கடமைகள். பிராமணர், ஷத்திரியர் மற்றும் வைசியர்களுக்கு சேவகம் புரிவது சூத்திரர்களின் கடமை.

சனாதன தர்மம் என்பது இதுதான்.

 இதை எதிர்க்காமல், இதற்கு எதிராக பிரச்சாரம் செய்யாமல் ஆதரிக்கவா முடியும்!

 அஸ்ஸாம் முதல்வர் பேசியது சரிதான் என்று சொல்பவர்களும் எதிர்க்கப்பட வேண்டிய பிற்போக்குத்தனமானவர்களே!

 பிகு: இந்தாள் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஊழல் புகார்கள் வந்ததும் பாஜக வாஷிங் மிஷினில் டிமோ சலவைத்தூள் மூலம் உத்தமமானவன். பரம்பரை சங்கிகளை விட பஞ்சத்து சங்கிகள் கூடுதல் வெறி கொண்டவர்கள் என்பதற்கு இவனும் ஒரு உதாரணம்.

ஊழல் சின்னத்தை எப்போ தூக்குவாங்க?

 


தேர்தல் ஆணையம் அப்போதாவது அகற்றிடுமா?

சந்திராயனை ஏவிய விண்வெளி விஞ்ஞானி போல போஸ் கொடுக்கும் டிமோ உடன் செல்ஃபி எடுத்துக் கொள்வது போல ஒரு ஏற்பாட்டை காட்பாடி ரயில் நிலையத்தில் வைத்துள்ளார்கள் என்று முன்பே எழுதியிருந்தேன்.

கடந்த திங்கள் அன்று மகனை ரயிலேற்றி விட காட்பாடி ரயில் நிலையம் சென்றிருந்த போது “ராசுக்குட்டி” டிமோ டிஜிட்டல் விஞ்ஞானி  ஆக காட்சி அளித்தார்.

 


இந்த விளம்பர மோகம் குறித்து எழுதி எழுதி வெறுப்பாகி விட்டது.

 என் கேள்வி ஒன்றுதான்.

 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் நடத்தை விதிகள் அமலான பின்பாவது இந்த கருமத்தை எல்லாம் தேர்தல் ஆணையம் அகற்றிடுமா அல்லது டிமோவுக்கு இலவச விளம்பரத்தை தொடர்ந்து பெற்றுத்தருமா?

  

பிகு 1: பதிவை எழுதிய பின்புதான் ஒரு தகவல் கிடைத்தது. ஒரு செல்ஃபி பாய்ண்ட் அமைக்க ஆறே கால் லட்ச ரூபாயாம்.  அவ்வளவு ரூபாய் செலவு பிடிக்கும் விஷயமா இது? பார்த்தாலே தெரிகிறது இது ஊழல் சின்னம் என்று. இதையெல்லாம் சி.பி.ஐ, அமலாக்கப்பிரிவு தோண்டாது.



 பிகு 2:  செப்டம்பர் மாதம் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கோட்டச் சங்க மாநாட்டின் ஒரு பகுதியான மக்கள் ஒற்றுமை கலை விழாவில் “சந்திரனில் மகாராஜா” என்ற நாடகத்தை நடத்தினோம். அந்த ஸ்க்ரிப்டை நாளை பகிர்ந்து கொள்கிறேன்.

பிகு 3 : படத்தில் கருப்பாக உள்ள இடத்தில்தான் டிமோவின் படம் இருந்தது. நாம் வேறு எதற்கு விளம்பரம் தர வேண்டும் என்று மை பூசி விட்டேன்.

 

Thursday, December 28, 2023

விடுதலை பெற்றார் விஜயகாந்த்

 



 திரைக்கலைஞர் விஜயகாந்த்திற்கு நெஞ்சார்ந்த அஞ்சலி.

 கருப்பாக இருப்பவர் கதாநாயகனாக முடியாது என்ற பிம்பத்தை உடைத்த இரண்டாமவர்.

 வணிகப்படங்களில் மட்டுமே நடித்தவர் என்றாலும் கூட புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், ரமணா, ஊமை விழிகள் போன்ற சுவாரஸ்யமான பல படங்களை அளித்தவர்.

 பல புதிய இயக்குனர்களை ஊக்குவித்தவர் என்பதும் நடிகர் சங்கத் தலைவராக சிறப்பாக பணியாற்றியவர் என்பதும் முக்கியமானது.

 திமுக, அதிமுக வுக்கான மாற்று அரசியல் சக்தியாவேன் என்ற முழக்கத்தோடு அரசியல் புகுந்தவர், அடுத்த தேர்தலிலேயே அதிமுக கூட்டணியில் இணைந்ததும் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததும் பின்பு எந்த கூட்டணியில் இணைவது என்று இரு கட்சிகளோடும் பேச்சு வார்த்தை நடத்தியதும் அவரின் அரசியல் தடுமாற்றத்துக்கு உதாரணம்.

 மக்கள் நலக் கூட்டணியோடு இணைந்து சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டார். அதன் தோல்வி காரணமாக அவரது அரசியல் நிலைப்பாடும் சரிவை நோக்கி செல்லத் தொடங்கி விட்டது.

 அவரது இறுதிக்காலம் துயரமானது. அவரது மோசமான உடல்நிலையைக் கூட பொருட்படுத்தாமல் அவரை காட்சிப் படுத்திய மோசமான நிகழ்வெல்லாம் கூட அவரது குடும்பத்தாராலேயே செய்யப்பட்டது.

  வலி மிகுந்த நோய்களிலிருந்தும் தன்னை ஒரு வணிகப் பொருளாக மட்டும் நடத்திய குடும்பத்தாரிடமிருந்தும் அவர் விடுதலை பெற்றுள்ளார் என்பதுதான் உண்மை.

 

Wednesday, December 27, 2023

ஜனாதிபதியை கூப்டீங்களா டிமோ?


 சில கேலிக்கூத்துக்கள் டிமோவால் மட்டுமே சாத்தியம்.

 ஜனநாயகத்தின் இருப்பிடம் என்று நம்பப்பட்ட நாடாளுமன்றத்துக்கான புதிய கட்டிடத்தின் திறப்பு விழாவிற்கு சாமியார்களை அழைத்து அதனை ஒரு மத விழாவாக நடத்தினார்  டிமோ.

 இப்போதோ அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை அரசியல் நிகழ்வாக நடத்துகிறார். திருமதி சோனியா காந்தி, தோழர் சீத்தாராம் யெச்சூரி, தோழர் டி.ராஜா  ஆகியோருக்கு அழைப்பனுப்பி வரச் சொல்கிறார். அவர்களும் செல்லப் போவதில்லை  என்று அறிவித்து விட்டனர். அவர்கள் வர மாட்டார்கள் என்று தெரிந்தே அனுப்பப்பட்டது. அப்போதுதானே ஆவர்களை இந்து விரோதிகள் என்று பிரச்சாரம் செய்ய் முடியும்!

 எதிர்க்கட்சிகளுக்கெல்லாம் அழைப்பிதழ் அனுப்பிய டிமோ, இந்தியாவின் முதல் பெண்மணிக்கு அழைப்பிதழ் அனுப்பினாரா?

 அப்படி அவர்களை அழைத்ததாக இதுவரையில் தகவல் இல்லை. எல்.கே.அத்வானிக்கும் முரளி மனோகர் ஜோஷிக்குமே தடை போட்ட டிமோ, புரோட்டாகால் படி தன்னை விட இரண்டு படி உயர்வாக இருக்கிற ஜனாதிபதிக்கு  அழைப்பிதழ் அனுப்ப இனியும் வாய்ப்பில்லை.

 ஏன்?

 காரணம் எளிது.

 நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கு அழைக்கப்படாத அதே காரணம்தான்.

 அவர், திருமதி திரவுபதி முர்மு

 பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒரு கைம்பெண்.

 சகுனம் பார்க்கும் சங்கிகள் அவரை நாடாளுமன்றத்துக்குள்ளோ, அயோத்தி ராமர் கோயிலுக்குள்ளோ எப்படி அனுமதிப்பார்கள்????

 சோனியா காந்திக்கு அழைப்பு அனுப்பப்பட்டதே, அவரும் கைம்பெண்தானே என்று சில சங்கிகள் தங்களை புத்திசாலிகள் என்று நினைத்துகேள்வி கேட்பார்கள்.

 சோனியா காந்தி நிச்சயம் வர மாட்டார் என்பது திட்டவட்டமாக தெரியும் என்பதால் அழைப்பிதழ் போனது.

 ஜனாதிபதி நிச்சயம் வருவார் என்பது திட்டவட்டமாக தெரியும் என்பதால் அழைப்பிதழ் செல்லவில்லை.

 அவ்வளவுதான் . . . 

இறந்தவர் வருவார் முகநூலில், பணம் கேட்க

 



 

தோழர் சுப்பராயன், நெய்வேலியில் பணியில் சேர்ந்த என்னை தொழிற்சங்க இயக்கத்திற்கு கொண்டு வந்தவர். பின்பு அதிகாரியாக எங்கள் வேலூர் கோட்டத்திற்கே முதுநிலை கோட்ட மேலாளராக வந்தவர். 

 


கடந்த ஆண்டு இறந்து போன அவரது பெயரில் முகநூல் நட்பழைப்பு வந்தது. உள் பெட்டியில் உரையாடலும் தொடங்கியது.

 

“இப்போது எங்கே இருக்கிறீர்கள்? சொர்க்கத்திலா? நரகத்திலா? “  என்று நான் கேட்க

 

மோசடிப் பேர்வழியோ

 

“நான் நலம், நீங்கள் நலமா?

 

என்று நலம் விசாரிக்க

 

அடுத்த கேள்வியை இன்னும் காட்டமாக

 

“போன வருடம்தான் இறந்து போனீர்கள். எப்படி மறுபடியும் வந்தீர்கள்?” என்று கேட்க

 

அந்தாளோ தன் பணிதான் முக்கியம் என்பது போல

 

“கூகிள் பே இருக்கிறதா?”

 

என்று கேட்க

 

“ஹ்லோ ஃபிராடு”

 

என்று அழைத்த பின்பு ப்ளாக்கி விட்டு போய் விட்டான்.

 

இப்படி ஃபேக் அக்கவுண்ட் தொடங்கி  யாராவது ஏமாறுவார்களா என்பதையே வேலையாகக் கொண்டு அலைகிறார்கள் போல.

 

இந்த மாதம் மட்டும் இது போல நான்கு போலிக் கணக்குகளின் அழைப்பு.

 

நம்ம பெயரில் என்றைக்கு ஃபேக் அக்கவுண்ட் ஆரம்பிக்கப் போகிறானோ தெரியவில்லை.

 

அப்படி யாராவது பணம் கேட்டால் தராதீர்கள். எனக்கு தேவையென்றால் நானே நேரடியாக தொலை பேசியில் அழைத்து கேட்பேன்.

 

 

டிமோ சலவைத் தூளால் 😄😄😄



கீழேயுள்ள படத்தை பாருங்கள்.

அதில் சுழிக்கப்பட்டுள்ள படத்தையும் பெயரையும் கவனியுங்கள். 



இந்திய மருத்துவ கவுன்சிலின் தலைவராக பல்வேறு முறைகேடுகள் செய்து பல நூறு கோடி ரூபாயை ரொக்கமாகவும் பல கிலோ தங்கமாகவும் வைத்திருந்து கைது செய்யப்பட்ட நபர், டிமோ பிரதமரானதும் டிமோ சலவைத்தூளால் புனிதனாகி உலக மருத்துவ கவுன்சிலுக்கே தலைவனாகி, இப்போது பொறுப்பில் இல்லாவிட்டாலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு விளம்பரத்தில் வருகின்றார் என்றால் டிமோ சலவைத் தூளின் சக்தியை உணருங்கள். 

சங்கி எவனாது மற்ற கட்சிகள் ஊழல், நாங்கதான் யோக்கியம் என்று வந்தால் அவனை உங்கள் பாதக்குறடுகளால் எல்லாம் அடிக்க வேண்டாம். இந்த தகவலை மட்டும் சொல்லி கழுத்தில் மாட்டிக் கொள்ள கயிறு வாங்கிக் கொடுங்கள். 

Tuesday, December 26, 2023

காஷ்மீரில் மீண்டும் துவங்கிய அராஜகம்

 



 மூன்று  நாட்கள் முன்பே எழுத நினைத்த பதிவு. வெண்மணி சென்றதால் தாமதமாகி விட்டது.

 சமூக ஊடகங்களில் கூட இச்சம்பவம் பற்றி யாரும் எதுவும் எழுதாத போது காட்சி ஊடகங்களும் அச்சு ஊடகங்களும் அடக்கி வாசித்ததில் அதிசயம் ஏதுமில்லை.

 தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் ஆறு வாலிபர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கின் பூஞ்ச் பகுதியிலிருந்து ராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்.

 அவர்களில் மூவரின் சடலங்கள் சாலையோரம் கிடந்துள்ளது. , மீதமுள்ள மூவரின் நிலை தெரியவில்லை. இறந்து போனவர்கள் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்க்ப்பட்டுள்ளனர். அவர்களின் உடல் உறுப்புக்களில் மிளகாய் பொடி திணிக்கப்பட்டுள்ளது.

 ராணுவத்தால் கூட்டிச் செல்லப்படும் வாலிபர்கள் ஒன்று சடலமாக திரும்புகிறார்கள் அல்லது காணாமல் போனவர்களாகி விடுகிறார்கள். கணவனை, சகோதரனை, மகனை தேடிக் கொண்டே இருக்கும் பெண்களின் எண்ணிக்கை பல்லாயிரக் கணக்கில் இருக்கும்.

 பதவி உயர்வுக்காக, பதக்கங்களுக்காக போலி எண்கவுண்டர்களில் கொல்லப்பட்ட அப்பாவி வாலிபர்களும் ஏராளம். பாலியல் கொடுமைகளுக்கு உள்ளான பெண்களும் அதிகம். அப்பாவி மக்களை கொன்ற ராணுவத்தினர் மீது எப்போதும் நடவடிக்கை எடுக்கப்படாது.

 ஆமாம்.

 அவர்களுக்கென்று ஒரு பாதுகாப்பு அரண் உள்ளது.

 ARMED FORCES (SPECIAL POWERS) ACT என்ற அரண். இந்த பாதுகாப்புப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் எந்தெந்த பகுதிகளில் அமலில் உள்ளதோ,  அங்கே எல்லாம் ராணுவத்தினரின் நடவடிக்கைகளை யாரும் கேள்வி கேட்க முடியாது.

 நேரடியாக ராணுவத்துடன் மோத முடியாத கோபம்தான் கல்லெறிதலாக மாறியது.

 சமீபத்தில் ஓரிரு வருடங்களில் ராணுவத்தின் அத்து மீறல் பற்றி பெரிதாக தகவல் இல்லை.

 இதோ, இப்போது . . .

 காஷ்மீருக்கான அரசியல் சாசனப்பிரிவு 370 நீக்கப்பட்டது சரியென்று

 உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பின் புலத்தில் ராணுவத்தின் அராஜகம் தொடங்கியுள்ளது.

 மூன்று வாலிபர்களோடு கொலைகள் நின்றிடுமா?

 ராணுவத்தின் கடந்த கால வரலாறு அப்படிப்பட்ட நம்பிக்கையை அளிக்கவில்லை என்பதுதான் யதார்த்தம்.

 

எப்போதும் அவர் வழியில்

இன்று எங்கள் மகத்தான தலைவர் தோழர் என்.எம்.சுந்தரம் அவர்களின் நினைவு நாள். எல்.ஐ.சி யை பாதுகாக்க அவர் காட்டிய வழியில் பயணிப்போம் என்று உறுதியோடு அவர் மறைந்த போது எழுதியதை மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன்



இன்று எங்களை தாக்கிய சுனாமி



26 டிசம்பர் மீண்டும் ஒரு முறை துயரம் தோய்ந்த நாளாய் அமைந்து விட்டது. எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மகத்தான தலைவரும், மிகச் சிறந்த பொருளாதார அறிஞரும் உழைக்கும் வர்க்கத்தின் வழிகாட்டியுமான தோழர் என்.எம்.சுந்தரம் அவர்கள் இன்று மறைந்தார் என்ற செய்தி சுனாமியாய் எங்களை தாக்கியது.

ஊழியர்களின் உரிமைகளை வென்றெடுப்பதில் எப்படி சமரசம் இன்றி உறுதியாக இருப்பாரோ, அது போலவே ஊழியர்கள் அலுவலகப் பணியை செய்ய வேண்டும் என்பதிலும் சமரசம் இல்லாமல் கண்டிப்பாக இருப்பார்.

உலகமயத்தின் தீமைகளைப் பற்றியும் சர்வதேச நிதி மூலதனத்தின் லீலைகளைப் பற்றியும் மிகவும் நுணக்கமாக ஆராய்ந்து அவர் எழுதியுள்ள பல்வேறு கட்டுரைகள் உழைக்கும் மக்களுக்கு அவர் வழங்கிய சக்தி மிக்க ஆயுதங்கள்.

1986 ல் எல்.ஐ.சி பணியில் இணைந்தாலும் அவரைப் பார்க்கிற, அவர் உரையைக் கேட்கிற வாய்ப்பு என்பது 1988 ல் தான் கிடைத்தது. அவர் என்னை அறிந்து கொள்ளும் வாய்ப்பு என்பது 1989 ல் நான் அடியாட்களால் தாக்கப்பட்ட பிறகே கிடைத்தது. அந்த சம்பவத்திற்குப் பிறகு  ஒரு முறை சென்னை சென்ற போது அப்போதைய தென் மண்டல இணைச்செயலாளர் தோழர் கே.நடராஜன் அறிமுகப் படுத்தி வைத்தார். கைகளைப் பற்றிக் கொண்டு "Be Brave and Bold. You can face any challenge" என்று சொன்னதை வாழ்நாளில் மறக்கவே முடியாது. இன்றளவும் அந்த வார்த்தைகள்தான் எதையும் சந்திக்கும் தைரியத்தை அளித்து வருகிறது. சோர்வுற்ற வேறொரு நாளில் அவரோடு தொலைபேசியில் நிகழ்த்திய உரையாடலும் உற்சாகம் அளிக்கும் டானிக் 

எங்கள் கோட்டத்தின் வெள்ளி விழா ஆண்டு துவக்க நிகழ்வில் அவர் பங்கேற்று உரையாற்றிய புகைப்படத்தைத்தான் அந்த நாள் முதல் முக நூலில் Cover Photo வாக பெருமிதத்துடன் வைத்துள்ளேன்.  அந்த புகைப்படத்தை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.



தன் வாழ்நாள் முழுதையும் இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கும் இந்தியாவின் தொழிலாளி வர்க்கத்திற்கும் அர்ப்பணித்த தோழர் என்.எம்.சுந்தரம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வெளியிட்ட சுற்றறிக்கையை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன். 


இன்சூரன்ஸ் ஊழியர்களின்  இமயம் சரிந்தது.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மாபெரும் தலைவர் தோழர் என்.எம்.சுந்தரம் அவர்கள் இன்று காலை சென்னையில் இயற்கை எய்தினார் என்பதை பெருந்துயரத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

அறுபதுகளின் துவக்கத்தில் எல்.ஐ,சி நிறுவனத்தில் பணியில் சேர்ந்த சில மாதங்களிலேயே தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் இணைச்செயலாளராக ஒரு மிகப் பெரிய பொறுப்பை தன் இளந்தோள்களில் ஏற்றவர் தோழர் என்.எம்.எஸ்.  இரண்டாண்டுகளிலேயே இருபத்தி ஐந்து வயதில் தென் மண்டலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் என்.எம்.எஸ் தன் உழைப்பாலும் அறிவாற்றலாலும் உழைப்பாளி மக்களின் மீதான நேசத்தாலும் நாடறிந்த தலைவராக மாறினார்.

1988 ல் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பதிமூன்றாவது அகில இந்திய மாநாட்டில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளராக தோழர் என்.எம்.எஸ் சுந்தரம் தேர்ந்தெடுக்கப்பட்டார். சங்கத்தின் தலைமையக்கம் கல்கத்தாவிலிருந்து சென்னைக்கு மாறியது. மிகுந்த சவால்கள் நிரம்பிய காலகட்டத்தில் அவர் அகில இந்தியப் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார்.

உலகமயமாக்கலின் கோர விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை துல்லியமாக கணக்கிட்டு அதற்கெதிரான போராட்டங்களுக்கு ஊழியர்களை தத்துவார்த்த அடிப்படையில் தயார்படுத்திய பெருமை அவருக்குண்டு. 1990 களின் அமெரிக்கச் சட்டம் சூப்பர் 301, இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்ற விழிப்புணர்வை  உருவாக்க புது டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டின் மூலம் ஒரு மிகப் பெரிய போராட்டத்தின் துவக்கப் புள்ளியாய் இருந்தது தோழர் என்.எம்.சுந்தரம் திகழ்ந்தார்.

இன்சூரன்ஸ்துறையில் தனியாரை அனுமதிக்க வேண்டும், எல்.ஐ.சி யின் பங்குகளில் 50 % ஐ விற்க வேண்டும் என்ற மல்ஹோத்ரா குழு அறிக்கை அளித்த போது அவை எப்படி தேசத்திற்கும் மக்களுக்கும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று அவர் எழுதிய இரண்டு புத்தகங்கள், நம்முடைய போராட்டங்களின் சக்தி மிக்க ஆயுதங்கள்.

“எல்.ஐ.சி யை  பாதுகாப்பதற்கான நம் போராட்டம், பாலிசிதாரர்களுக்கு சிறப்பான சேவையை செய்வதன் மூலமாக நம்முடைய மேஜையிலிருந்துதான் துவங்குகிறது” என்று நம்மை தொடர்ந்து வலியுறுத்துபவர். அதனை கடைபிடிப்பதால்தான் நம்மால் இந்நாள் வரை மக்களிடம் தைரியமாக செல்ல முடிகிறது. எல்.ஐ.சி நிறுவனமும் இன்று வரை முழுமையான பொதுத்துறை நிறுவனமாக நீடிக்கிறது.  வங்கி ஊழியர் தொழிற்சங்கங்களை இணைத்து கூட்டு போராட்டக்குழு அமைத்து பென்ஷனை வென்றெடுத்ததில் தோழர் என்.எம்.எஸ் அவர்களின் பங்களிப்பு மகத்தானது. இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கு எவ்வித பாதிப்பும் எதிர்காலத்தில் நேரக்கூடாது என்று அவர் காண்பித்த உறுதியை வார்த்தைகளில் விவரிப்பது கடினம்.

“இன்சூரன்ஸ் வொர்க்கர்” இதழின் ஆசிரியராக பல்லாண்டு காலம் செயல்பட்ட தோழர் என்.எம்.எஸ் எழுதிய “Let us play Politics” கட்டுரைத் தொடர், நமக்கெல்லாம் அவர் எடுத்த பாடங்கள். தொழிற்சங்கத் தலைவர் என்பதைத் தாண்டி மிகப் பெரிய பொருளாதார நிபுணராகவும் திகழ்ந்தார். சுரண்டலற்ற சோஷலிச சமுதாயமே நம்முடைய இலக்காக இருக்க வேண்டும் என்பதையும் அதற்கான பயணத்தில் நாம் முன்னேற வேண்டும் என்பதை எப்போதும் வலியுறுத்துபவர்.

2002 ம் ஆண்டு ராய்ப்பூரில் நடைபெற்ற பத்தொன்பதவாது மாநாட்டில் அகில இந்தியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் என்.எம்.எஸ் 2007ல் நாக்பூரில் நடைபெற்ற இருபத்தி ஒன்றாவது மாநாடு வரை அப்பொறுப்பில் தொடர்ந்தார்.  இந்த ஆண்டு துவக்கத்தில் எர்ணாகுளத்தில் நடைபெற்ற இருபத்தி நான்காவது மாநாட்டிலும் அவர் கலந்து கொண்டு வழி காட்டினார்.

1988 ல் வேலூர் கோட்டத்தை அவர் துவக்கி வைத்தார். வெள்ளி விழா கொண்டாட்டங்களை அவர்தான் துவக்கி வைக்க வேண்டும் என்று நாம் அழைத்த போது தன் உடல் நலனையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டு சிறப்பித்தார். 1994ல் மல்ஹோத்ரா குழு அறிக்கைக்கு எதிரான சிறப்பு மாநாட்டில் மூன்று மணி நேரம் அவர் உரையாற்றியதை யாரால் மறக்க இயலும்!

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தை தத்துவார்த்தப்பாதையில் அழைத்துச் சென்ற மகத்தான தலைவர் மறைந்துள்ளார். அவரது லட்சியங்களை உயர்த்திப் பிடிப்பதே நாம் அவருக்குச் செய்யும் உண்மையான அஞ்சலி.

தோழர் என்.எம்.எஸ் அவர்களுக்கு செவ்வணக்கம்

காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்,

வேலூர் கோட்டம்