கிட்டத்தட்ட இருபது கோடிக்கும் மேற்ப்ட்ட தொழிலாளர்கள் இன்று நடைபெறும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வேலை நிறுத்தம் முதலில் 20.05.2025 அன்று நடைபெறுவதாக இருந்தது.
மோடியின் உளவுத்துறை கோட்டை விட்டதாலோ அல்லது அரசு அலட்சியம் செய்ததாலோ நிகழ்ந்த பஹல்காம் படுகொலைகள், அதற்கு பிந்தைய நிகழ்வுகள் காரணமாக 20.05.2025 க்கு பதிலாக 09.07.2025 என்று மாற்றி வைக்கப்பட்டது. தேதி மாறியதால் தனிப்பட்ட முறையில் மிகவும் மகிழ்ந்தேன். ஏன் என்பதை பின்னொரு நாளில் எழுதுகிறேன்.
20.05.2025 அன்று நடைபெறுவதாக இருந்த வேலை நிறுத்தத்தை முன்னிட்டு "காப்பீட்டு ஊழியர்" இதழிற்காக எழுதிய தலையங்கத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்,
இந்த தேதிகளையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மாலையில் எழுதுகிறேன்.
அகில இந்திய வேலை
நிறுத்தத்திற்கு தயாராகும் உழைப்பாளி வர்க்கம்
மூன்றாவது
முறையாக ஆட்சிக்கு வந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தனது கார்ப்பரேட் ஆதரவு செயல்திட்டத்தை
வேகமாக அமலாக்க முயற்சிக்கிறது. இதனை முறியடிக்க இந்திய உழைப்பாளி வர்க்கமும் கடுமையான
போராட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.
விரிவான போராட்ட வியூகத்தை வடிவமைக்க 18.03.2025 அன்று புதுடெல்லியில் “தொழிலாளர்களின்
தேசிய மாநாடு” நடைபெற்றது. மத்தியத் தொழிற்சங்கங்கள், துறைவாரி அகில இந்திய சங்கங்கள், கூட்டமைப்புக்கள் என இந்திய தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும்
அமைப்புக்கள் பங்கேற்றனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வழிகாட்டுதலில் செயல்படும் பாரதீய
மஸ்தூர் சங் (BMS) மட்டும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அகில இந்திய
இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பாக தலைவர் தோழர் வி.ரமேஷ், பொதுச்செயலாளர் தோழர்
ஸ்ரீகாந்த் மிஸ்ரா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றன்ர்.
இம்மாநாட்டில்
நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மிகவும் முக்கியமானது. இது இந்திய நிலைமையையும் தொழிலாளர்கள்
சந்திக்கும் சவால்களையும் ஆட்சியாளர்களின் அராஜகப் போக்கையும் விரிவாக எடுத்துரைத்திருந்தது.
2017-2018 லிருந்த ஊதியங்கள் 2023-2024 ல் குறைந்துள்ளது. ஆண் தினக்கூலி ஊழியரின் ஊதியம்
ரூபாய் 203 லிருந்து 242 ரூபாயாகவும் பெண் ஊழியரின் ஊதியம் ரூபாய் 128 லிருந்து ரூபாய்
159 ஆகவும் உள்ளது. அதே நேரம் கார்ப்பரேட்டுகளின் லாபமோ 22.3 % உயர்வை கண்டுள்ளது. இந்திய மக்கட்தொகையில் 5 % பேரிடம் 70 % செல்வம்
குவிந்துள்ள நிலையில் மக்கட்தொகையின் அடிமட்டத்தில் உள்ள 50 % பேரிடமோ வெறும் 3 % செல்வமே
உள்ளது. ஐரோப்பிய கோடீஸ்வர்களை விட பெரிய செல்வந்தர்களாக இந்திய கோடீஸ்வரர்கள் உள்ளனர். இந்திய ஏழைகளில் 90 சதவிகிதத்தினர் சர்வதேச அளவில்
வரையறை செய்யப்பட்டதை விடவும் வறுமையான நிலையில் உள்ளனர்.
இப்படிப்பட்ட
சூழலில் மத்தியரசு தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளான பணி நேரம், கூட்டு பேர உரிமை,
குறைந்த பட்ச ஊதியம், சங்கம் அமைக்கும் உரிமை, வேலை நிறுத்த உரிமை உள்ளிட்ட போராட்ட
வடிவங்கள் அனைத்தையும் பறிக்க முயல்கிறது. அரசியல் சாசனம் அளித்திட்ட கருத்துரிமை உள்ளிட்ட
அடிப்படை ஜனநாயக உரிமைகளை கார்ப்பரேட் நலனுக்காக UAPA, PMLA, புதிதாக மாற்றப்பட்ட குற்றவியல்
சட்டம் BNS ஆகியவை மூலமாக ஒடுக்குவதன் நீட்சியாகவே தொழிலாளர் சட்ட தொகுப்புக்களையும்
அமல்படுத்த அரசு முயல்கிறது.
தொழிலாளர்கள்
கூட்டாகவோ, தங்கள் தொழிற்சங்கங்கள் மூலமாகவோ தங்களின் குறைகளை பதிவு செய்வது கூட புதிய
குற்றவியல் சட்டம் பாரதீய நியாய சன்ஹிதாவின்
111 ம் பிரிவின் படி குற்றச்செயலாக கருதப்பட்டு காவல்துறை நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுகிறது.
பிணையில் வெளி வர இயலாத படி தொழிலாளர்களையும் தொழிற்சங்கத் தலைவர்களையும் ஒடுக்க முயல்கின்றனர்.
தொழிலாளர்கள் வாயிற்கூட்டம் நடத்துவது, பிரசுரங்களை அளிப்பது போன்ற நடவடிக்கைகளை கார்ப்பரேட்
நிறுவனங்கள் மட்டுமல்லாது அரசுத்துறைகளும் கூட எடுக்கத் துவங்கியுள்ளது. இப்படிப்பட்ட
நிலைமையை எந்த ஒரு தொழிலாளியாலோ தொழிற்சங்கத்தாலோ ஏற்றுக் கொள்ள முடியாது.
விதி
மீறலுக்காக சிறைத் தண்டனை அளிக்க வேண்டிய நடவடிக்கைகளில் 180 மீறல்களுக்கு இரண்டாண்டுகள்
முன்பாகவே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இப்போது அந்த பட்டியலில் இன்னும் 100 நீக்கப்பட்டுள்ளது.
“இடையூறின்றி தொழில் செய்ய உதவுவது” என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளுக்கு கருணை மழை பொழியும் அரசுதான் தொழிலாளர்களை மட்டும் ஒடுக்க முயல்கிறது.
இப்படிப்பட்ட
சூழலில்தான் டெல்லியில் நடைபெற்ற தேசிய மாநாடு ஜாதி, மத, இனம், மொழி கடந்து உழைக்கும்
மக்களுடைய ஒற்றுமையை கட்டுவதும் அதை பாதுகாப்பதும் மிகவும் முக்கியம் என்ற புரிதலோடு பல கோரிக்கைகளை வடிவமைத்து அவற்றை வென்றெடுக்க போராட்ட
வியூகங்களையும் வகுத்துள்ளது.
இன்சூரன்ஸ்,
வங்கி, துறைமுகம், ரயில்வே, அஞ்சல், ராணுவ தளவாட உற்பத்தி, போன்ற அனைத்துத் துறைகளிலும்
தனியார்மயம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும், இன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை
100 % உயர்த்துவதை கைவிட வேண்டும், பாலிசிகள், முகவாண்மையை வேறு நிறுவனத்திற்கு மாற்றும்
முயற்சி நிறுத்தப்பட வேண்டும், தேசிய பணமயமாக்கல் திட்டம் கைவிடப் பட வேண்டும் என்பது
மிக முக்கியமான கோரிக்கை.
குறைந்த
பட்ச ஊதியம் ரூபாய் 26,000 ஆக உயர்த்தப்பட்டு விலைவாசி புள்ளியுடன் இணைக்கப்பட வேண்டும்,
குறிப்பிட்ட கால வேலைத் திட்டம் (Fixed Term Employment Scheme), அக்னிபாத் திட்டம்
ஆகியவை நிறுத்தப்பட்டு ஒப்பந்த முறை தொழிலாளர் திட்டம் அகற்றப்பட வேண்டும், சம வேலைக்கு
சம ஊதியம் வழங்கப்பட வேண்டும், தேசிய பென்ஷன் திட்டம், ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம்
ஆகியவை கைவிடப்பட்டு வரையறுக்கப்பட்ட பலனை உறுதி செய்யும் பழைய பென்ஷன் திட்டம் மீண்டும்
கொண்டு வரப்பட வேண்டும். குறைந்த பட்ச பென்ஷன் ரூபாய் 9,000 வழங்கப்பட வேண்டும்.
அனைத்து
முறைசாரா தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு திட்டங்கள் அமலாக்கப்பட வேண்டும், மகாத்மா
காந்தி வேலை உறுதிச்சட்டத்தின் படி வேலை நாட்கள் ஆண்டுக்கு 200 நாட்களாக உயர்த்தப்பட
வேண்டும். அதற்கான நிதி ஒதுக்கீடு முறையாக செய்யப்பட வேண்டும்.
விவசாயிகளின்
வீரஞ்செறிந்த போராட்டத்தால் திரும்பப் பெற விவசாயிகள் சட்டத்தை வேறு பெயரில் வேறு வடிவில்
திணிக்கும் முயற்சி நிறுத்தப்பட வேண்டும், விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு குறைந்த
பட்ச ஆதார விலை எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி நிர்ணயிக்கப்பட வேண்டும்.
ஆண்டாண்டு
காலமாக தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளை, அடிப்படை ஜனநாயக உரிமைகளை கார்ப்பரேட்
முதலாளிகளின் லாப வெறிக்காக பறிக்க கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் நலச்சட்டங்களின்
தொகுப்பை அமலாக்கக் கூடாது.
இந்த
கோரிக்கைகளை முன் வைத்து வரும் 20.05.2025 அன்று நாடு தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தம்
நடத்துவது என்றும் தேசிய மாநாடு முடிவெடுத்தது.
20.05.2025
ஒரு நாள் வேலை நிறுத்தத்தினை வெற்றி பெறச் செய்ய, மாவட்ட, மாநில கருத்தரங்குகள் நடத்துவது,
மக்களிடத்தில் விழிப்புணர்வை உருவாக்க பிரசுரங்களை அளிப்பது, வாயிற்கூட்டங்கள் நடத்துவது,
பிரச்சார இயக்கங்களை மேற்கொள்வது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை மேற்கொள்வது என்றும் மாநாடு
முடிவு செய்துள்ளது.
தொழிலாளி
வர்க்கத்தின் மீது கார்ப்பரேட் முதலாளிகளும் கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காகவே
தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள மத்தியரசும் எண்ணற்ற தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
"தாக்குண்டால் புழுக்கள் கூட தரை விட்டுத்துள்ளும்! கழுகு தூக்கிடும் குஞ்சு காக்க துடித்தெழும் கோழி, சிங்கம் மூர்க்கமாய் தாக்கும் போது முயல் கூட எதிர்த்து நிற்கும்.சாக்கடை கொசுக்களா நாம்? சரித்திரத்தின் சக்கரங்கள்”
என்ற தணிகைச் செல்வன் கவிதை வரிகளுக்கேற்ப
தாக்குதல்களை முறியடிக்க உழைப்பாளி மக்கள் களம் காண வேண்டிய தருணம் இது. மத்தியரசின் தாக்குதல்களை சந்திக்க உழைப்பாளி மக்கள்
தயாராகி விட்டார்கள் என்ற எச்சரிக்கை மணியை ஒலிக்கும் தருணம்தான் 20, மே, 2025 ஒரு
நாள் வேலை நிறுத்தம்.
“கோடிக்கால்
பூதமடா, தொழிலாளி கோபத்தின் ரூபமடா” என்பதை அரசும் முதலாளிகளும் புரிந்து கொள்ளும்
வண்ணம் 20.05.2025 ஒரு நாள் வேலை நிறுத்தம் அமையட்டும், பங்கேற்ற அனைத்து தொழிற்சங்கங்கள்
காண்பித்துள்ள உறுதி சிறப்பானது. நல்லதொரு மாற்றத்திற்கான துவக்கமாக, தொழிலாளர் வர்க்க
ஒற்றுமையின் வெளிப்பாடாக, 20.05.2025 ஒரு நாள் வேலை நிறுத்தம் வெற்றி பெற அர்ப்பணிப்பு
உணர்வோடு செயலாற்றுவோம்.