Sunday, August 22, 2010

எதற்காக இவர்களுக்கு ஊதிய உயர்வு? மைக் உடைக்கவா?

நாடாளுமன்ற நடவடிக்கைகளை அவ்வப்போது
முடக்கி வைக்கின்றனர், மகளிர் மசோதாவை
நிறைவேற்ற முடியாமல் தடுத்துக் கொண்டுள்ளனர்.
முக்கியமான பிரச்சினைகளில் அரசுக்கு எதிராக
உறுதியாக செயல்பட வேண்டிய நேரத்தில் பேரம்
பேசி சமரசம் செய்து கொண்டு வருகின்றனர்.
லாலுவிற்கும், முலாயத்திற்கும், பாரதீய ஜனதா
கட்சிக்கும் ஊதிய உயர்வு கேட்க என்ன அருகதை
உள்ளது? முன்னூறு கோடீஸ்வரர்கள் கொண்ட இந்த
அவையின் உறுப்பினர்களில் இடதுசாரி கட்சி
உறுப்பினர்களைத் தவிர வேறு யாருக்கும் ஊதிய
உயர்விற்கான அவசியம் உள்ளது? வலது கையாலும்
இடது கையாலும் மாறி மாறி வாங்குகிற பணம்
பல தலைமுறைகளுக்கே  வரும் என்கிற போது
மக்களின் வரிப்பணத்தை வேறு ஏன் விரயம்
செய்ய வேண்டும்?

அதே நேரம் இவர்கள் எல்லாமே மத்திய, மாநில
ஆட்சிப்பொறுப்பில் இருந்த போது எத்தனை
ஊதிய உயர்வுகே கோரிக்கைகளை நிராகரித்து
போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு
அடக்கியுள்ளார்கள்?

குறைந்தபட்சம் வாங்குகிற ஊதியத்திற்கு
மக்களுக்கான கடைமையை செய்யப்போவதில்லை.
நாடாளுமன்றத்திற்கு ஒழுங்காக செல்லபபோவதும்
இல்லை, பிரச்சினைகள் குறித்து பேசப்போவதும்
இல்லை, பின் ஏன் ஐநூறு சதவிகித உயர்வு?

Friday, August 20, 2010

கைதியாய் என் தாய்

அந்தணர் மந்திரம் உரக்க ஒலிக்க,
அட்சதை தூவ கைகள் எழுந்திட,
ஆர்வ மிகுதியில் அனைவருமே
மேடையை நோக்க,
மங்கள நாணை மணமகன் எடுக்க,
சட்டென்று இருள் சூழ
சின்னத்திரையும் கூட
காணாமல் போனது,
" அடப்பாவம், சகுனத்தடை
என்ன ஆகுமோ அவர்கள் எதிர்காலம்"
வேதனையில் தவித்தார்,
தொடரின் பிடியில் 
கைதியாய் என் தாய்

Thursday, August 12, 2010

குடியாத்தத்தில் இன்று அரங்கேறிய அரசு அராஜகம்

குடியாத்தம் நகரில் அரசு இடத்தில் 36 குடும்பங்கள் பல
தலைமுறையாய் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் இடத்திற்கு
பக்கத்தில் உள்ள ஒரு இடத்தை ஒரு ரியல் எஸ்டேட் தாதா
வாங்குகிறார். தன்னுடைய இடத்திற்கு நல்ல மதிப்பு கிடைக்க 
இந்த வீடுகள் தடையாக இருக்கும் என்பதால் அவர்களை 
அப்புறப்படுத்த முயல்கிறார். ஆசை வார்த்தையில் சிலர் மயங்கி 
மாற்று இடம் செல்கின்றனர். பலர் மறுத்து அங்கேயே தொடர்கின்றனர்.
எனவே அந்த வீடுகளை இடிக்க அவர் முடிவெடுக்கிறார். அதற்கு
முன்பு அவர் முக்கியமான ஒரு செயல்கிறார். பா.ம.க கட்சியிலிருந்து 
அமைச்சர் துரைமுருகன் முன்னிலையில் திமுகவில் இணைகிறார். 
ஆதி திராவிட, அருந்ததிய, இஸ்லாமிய மக்கள் வாழ்ந்த அந்த 
வீடுகளை அண்ணல் அம்பேத்காரின் பிறந்த நாளான ஏபரல் 14 அன்று 
புல்டோசர் கொண்டு இடித்து தள்ளுகிறார்.

நடுத்தெருவில் தவிக்கும் அம்மக்களின் பிரச்சினையை தமிழ்நாடு 
தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையிலெடுக்கிறது. ஆர்ப்பாட்டம் நடத்தி
பலமுறை மாவட்ட ஆட்சியரை சந்தித்தும் எந்த பலனும் இல்லாததால் 
குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் இன்று குடியேறும் போராட்டம் 
நடத்துவதாக முடிவெடுக்கிறது. 

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத்தலைவர் தோழர்  சம்பத்,
பொதுச்செயலாளர் தோழர் சாமுவேல் ராஜ், குடியாத்தம் எம்.எல்.ஏ 
தோழர் லதா ஆகியோர் தலைமையில் போராட்டம் நடத்துவதே 
திட்டம். காலையிலிருந்தே குடியாத்தம் தாலுகா அலுவலகம் செல்லும்
அனைத்து சாலைகளும் அடைக்கப்பட்டு காவல்துறையினர் 
குவிக்கப்பட்டிருந்தனர்.  நானூறுக்கும் மேற்பட்ட தோழர்கள்
 குவிந்தனர். பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று தலைவர்களை
 அழைத்து சென்றனர்.

இரண்டு மணி நேரத்திற்கு மேல் பேச்சு வார்த்தை நீடித்தது. அதே நேரம்
தோழர்கள் தாலுகா அலுவலகத்திற்கு வெளியே அமைதி
காத்தனர்,  ஒரு   நியாயமான  தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு. 
திடிரென காவல்துறையின் அணுகுமுறையில்
 ஒரு முரட்டுத்தனம் தென்பட்டது. வலுக்கட்டாயமாக ஒரு
தகராறை உருவாக்க முயற்சிஎடுத்தார்கள். 

பேச்சுவார்த்தையில் பங்கேற்ற தலைவர்கள் வெளியே
வந்ததும்தான்  உண்மை  தெரிந்தது.
 பேச்சுவார்த்தையில் ஒரு தீர்வை நோக்கி முன்னேறி 
ஒரு உடன்பாடும் கையெழுத்தாகும் நேரத்தில்
ஆர்.டி.ஒ விற்கு ஒரு தொலைபேசி வருகின்றது. அவர்
அங்கிருந்து வெளியேறுகிறார். போராட்டத்தில் 
ஈடுபட்டவர்களை  கைது செய்து 
காவலில் வைப்பது என்ற முடிவு 
எடுக்கப்படுகின்றது. நூறுக்கும் மேற்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பதற்கு
 கொண்டு வரப்பட்டுள்ளனர்.

உடன்பாடு கையெழுத்தாகும் நேரம்
அதனை முறித்தது யார்?  யாருடைய 
தொலைபேசி நிலைமையை சிக்கலாக்கியது? 
யாருடைய நிர்ப்பந்தத்திற்கு 
அரசு அடிபணிந்து நியாயமான
 கோரிக்கைக்காக போராடியவர்களை கைது 
செய்துள்ளது? காவல்துறை மக்களுக்காகவா
 அல்லது ரியல் எஸ்டேட் 
தாதாக்களின் நலனை பாதுகாக்கவா? 
மாவட்ட நிர்வாகம் இந்நடவடிக்கை 
மூலம் மக்களுக்கு உணர்த்தியுள்ள செய்தி என்ன? 

பாதிக்கப்பட்ட மக்களையே கைது செய்வது என்ற 
அராஜகத்தை தமிழக அரசு   என்றுதான் நிறுத்துமோ? தலித் மக்களின் பாதுகாவலன் என்று 
பீற்றிக்கொள்வதையாவது கலைஞர் நிறுத்திக் கொள்ளட்டும்.

ஆனாலும் போராட்டம் ஓயாது. தொடரும்,
நியாயம் கிடைக்கும் வரை
உரிமைக்குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

( குடியாத்தம் எம்.எல்.ஏ தோழர் லதா இருபது லட்சம் பணம் 
கேட்டு மிரட்டினார் என்று அந்த தாதா  நேற்று ஒரு பொய்ப்புகார் 
அளித்ததும் அதற்கு முதலாளித்துவ ஊடகங்கள் அதீத 
முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்ட கூத்தும் வேறு 
நடந்தது.)   

Tuesday, August 3, 2010

சதத்தை கடந்தது அமெரிக்கா!! ஆனாலும் சோகமாக! ஏன்?

எல்லோரும் ஜோராக ஒரு முறை கை தட்டுங்கள் பார்ப்போம்.
 உலகமயத்தின்    தோல்வி மிகத் தெளிவாக கண்ணுக்குத்
 தெரிகிறது. மறுக்க முடியாத சாட்சியாமாக அமெரிக்க
 வங்கித்துறையின் வீழ்ச்சி விளங்கிக்கொண்டிருக்கிறது, 
 ஜூலை மாதம்   முப்பதாம் தேதி வரையில் இவ்வாண்டு
திவாலான அமெரிக்க வங்கிகளின்  எண்ணிக்கை 111 .

 அமெரிக்க மக்களின் நெற்றியில் அமெரிக்க முதலாளிகள்
போட்ட நாமம் போல இந்த எண்ணிக்கை உள்ளதல்லவா?
சென்ற ஆண்டு   முழுவதும் திவாலான வங்கிகளின்
 எண்ணிக்கை 140  என்றால் இவ்வாண்டின்   எண்ணிக்கை
அதனை தாண்டி அதிகரிக்கும் என்பது நிச்சயம். ஜூலை
 மாதம்  மட்டும் திவாலான வங்கிகள் இருபத்தி இரண்டு.
அரசின் கட்டுப்பாடு இல்லாததுதான்  அத்தனை
 பிரச்சினைகளுக்கும் காரணம் என்று அமெரிக்க
 பொருளாதார நிபுணர்கள்  கூறத்தொடங்கியுள்ளனர்.

ஆனால் இது எல்லாம் இந்திய அரசின் பொருளாதார
மேதைகளுக்கு மட்டும் ஏன் புலப்படவில்லை என்பது
 புரியவில்லை. மன்மோகன், சிதம்பரம், அலுவாலியா,
பிரணாப் போன்றவர்கள் இந்தியாவின்
அவமானச்சின்னங்கள்.  அதானால்தான் அவர்கள்
 ஸ்டேட் வங்கியின் அரசு  பங்குவிகிதத்தை 55  % லிருந்து
  51 %  ஆக குறைத்து விட்டனர். இப்படிப்பட்ட 
துரோகிகள் ஆட்சி செய்யும் தேசம் உருப்படுமா?