Tuesday, April 30, 2019

தடியடி, தோட்டா, தூக்கு . . .


இன்று மே தினம்.



உலகெங்கிலும் உள்ள உழைப்பாளி மக்கள் உணர்வுபூர்வமாக கொண்டாடும் ஒரு திருநாள். 

தியாகிகளை என்றும் மறக்காத ஒரே வர்க்கம் உழைப்பாளி வர்க்கம்தான்.

எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர உறக்கம், எட்டு மணி நேர ஓய்வு என்ற முழக்கத்தை முன்வைத்து ஆளும் வர்க்கத்தின் தடியடி, தோட்டாக்கள் மற்றும் தூக்குத்தண்டனை பரிசு பெற்ற சிக்காகோ நகரத்து தியாகிகளை ஒரு நூற்றாண்டு கடந்த பின்பும் உழைப்பாளி மக்கள் மறக்கவில்லை. உலகின் எந்த பகுதியிலும் மறக்கவில்லை.

முன்னெப்போதையும் விட மே தினத்திற்கான தேவை இப்போதுதான் அதிகமாக தேவைப்படுகிறது.

ஆம்

சுரண்டல்கள் அதிகமாகி உள்ளது மட்டுமல்ல அவை புதிய புதிய வடிவங்களையும் அடைந்துள்ளது.

எட்டு மணி நேர வேலை என்பது பல இடங்களில் எட்டாக் கனவாகவே மாறி வருகிறது.

இருக்கும் வேலைகளைப் பறித்து விட்டு  அந்த இன்னலைக் கண்டு மகிழ்ச்சியடைகிற சேடிஸ்ட் முதலாளிகள் அதிகமாகி வரும் நாள் இது.

வேலையைப் பறிக்க முடியாவிட்டாலும் பெற்ற உரிமைகளை பறிக்க முயல்கிற முதலாளிகள், அவர்களுக்கு வால் பிடிக்கும் ஆட்சியாளர்கள் அதிகரித்துள்ள காலம் இது.

உலகெங்கும் இப்படிப்பட்ட நிலைமைகளை பார்க்க முடிகிறது. இந்தியாவிலும் கூட காண முடிகிறது.

ஆனால் இதையெல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்கிற அடிமைகளின் கூட்டமாக உழைப்பாளி வர்க்கம் இல்லை.

“தொழிலாளி கோடிக் கால் பூதமடா, கோபத்தின் ரூபமடா” என்ற ஜீவாவின் வாசகங்களுக்கு ஏற்ப போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

தங்களின் மீதான அடக்குமுறைக்கு எதிராக, தாக்குதல்களை தகர்த்திட உலகெங்கும் உழைப்பாளி மக்களின் போராட்டம் நடந்து கொண்டே இருக்கிறது.

அந்த போராட்டங்கள் என்றைக்கும் வீண் போகாது. தியாகங்கள் அர்த்தம் இழக்காது.

மே தினம் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல உழைப்பாளி மக்களுக்கு எழுச்சியும் உற்சாகமும் அளிக்கிற நாள்.

நீண்ட நெடிய போராட்டத்தின் இறுதியில் வெற்றி என்றைக்கும் உழைப்பாளி மக்களுக்கே!

அனைவருக்கும்  புரட்சிகர  மே தின வாழ்த்துக்கள்.

பேய்களின் புரோக்கர் மோடி


மொத்தமாவே கொன்னுடுங்கடா !!!!



கீழேயுள்ள கடிதத்தை படிக்கையில் மிகவும் எரிச்சல் வந்தது.

என்ன அரசு இது!

சாதாரண செங்கல் தயாரிக்கும் வேலையைக் கூட அம்பானி, அதானி போன்ற பெரும் பணக்காரர்கள்தான் செய்ய வேண்டுமா? பணப் பசியோடு அலைகிற பேய்களுக்கு தீனி போடும் புரோக்கர் வேலையைச் செய்வது மட்டுமே மோடி அரசின் ஒரே தொழிலாகப் போய் விட்டது.  

இப்படி  கொஞ்சம் கொஞ்சமாக சாதாரண மக்களின் வாழ்வைப் பறித்து அவர்களை இறப்பின் விளிம்பில் தள்ளுவதற்குப் பதிலாக அவர்களை ஒட்டு மொத்தமாக கொன்று விடலாமே!

மக்களை கொன்று அவர்களை புதைக்கிற, எரிக்கிற வேலைகளுக்கான ஒப்பந்தத்தைக் கூட அதானி, அம்பானிக்கு கொடுத்து விடலாம்.


செங்கல் சூலைகளுக்குத் தடையா?
சிஐடியு கண்டனம்

புதுதில்லி, ஏப். 28-
செங்கல் சூலைகளுக்குத் தடை விதித்துவிட்டுஅதற்குப் பதிலாக அதானி மற்றும் அம்பானி ஆகியோரின் நிறுவனங்கள் தயாரித்திடும் நிலக்கரிச் சாம்பல் கற்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள மத்திய அரசின்  நடவடிக்கைக்கு சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் வெப்பநிலை மாற்றம் ஆகியவற்றின் அமைச்சகத்தின் செயலாளர் சந்திர கிஷோர் மிஷ்ராவிற்கு தபன் சென் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

17ஆவது மக்களவைத் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கக்கூடிய நிலையில், செங்கல் சூலைகளைத் தடை செய்துவிட்டு, அதற்குப் பதிலாக அதானி மற்றும் அம்பானி ஆகியோரின் நிறுவனங்கள் உற்பத்தி செய்திடும் நிலக்கரிச் சாம்பல் மூலம் உருவாக்கப்படும் கற்களைத்தான் வீடுகள், கட்டிடங்கள் கட்ட பயன்படுத்துவது தொடர்பாக மக்கள் கருத்தைக் கோருவதாகக் கூறி ஒரு சுற்றறிக்கை தங்கள் துறை மூலம் வெளிவந்திருப்பதற்கு கடும் ஆட்சேபணையைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டபின்பு இத்தகையதோர் அறிவிக்கையை வெளியிடுவதற்கு இந்த அரசாங்கத்திற்கு எந்த உரிமையும் கிடையாது என்பதையும் இதனை புதிதாக பொறுப்பேற்கும் அரசாங்கம்தான் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கடிதத்தின் நகலை தேர்தல் ஆணையத்திற்கும் அனுப்பியிருக்கிறேன். இது தொடர்பாக தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களையும் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

தேர்தல் நடத்தை விதி மீறல்கள் அமலுக்கு வந்தபின், அதனை முற்றிலுமாகப் புறந்தள்ளிவிட்டு, செங்கல் சூலைகளைத் தடை செய்துவிட்டு, அதானி மற்றும்  அம்பானி ஆகியோருக்குச் சொந்தமான தனியார் நிறுவனங்கள் தயாரித்திடும் நிலக்கரி மற்றும் பழுப்புநிலக்கரி அடிப்படையிலான சாம்பல் கற்களையே பயன்படுத்த வேண்டும் என்பதற்காக மத்திய அரசாங்கம் இந்த அறிவிக்கையை வெளியிட்டிருப்பதாக நான் சந்தேகிக்கிறேன்.

அரசின் இந்நடவடிக்கை மூலமாக செங்கல் சூலைகளில் வேலைபார்த்திடும் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பார்கள். இது நம் பொருளாதாரத்திலும் கடும் பாதிப்பினை ஏற்படுத்திடும்.

செங்கல் சூலைத் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் இந்த மோசமான நடவடிக்கையை இது தொடர்பாக இதற்கு முன் பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணைகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டும், நாடாளுமன்றத்தில் சட்டமுடிவு எதுவும் கொண்டுவராமல்நிர்வாக ஆணை மூலமாகவே இதனைக் கொண்டுவர அரசாங்கம் முயற்சித்து வருவதற்கும் கடும் ஆட்சேபணைகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு மாநில அரசுகளுக்கும் அங்குள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கும் உண்டு. எனினும் இதுதொடர்பாக அவர்களிடம் எவ்விதமான ஆலோசனைகளையும் கேட்காமலும், அவர்களின் கவனத்திற்கே கொண்டுவராமலும் இதனை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது.

எனவே இந்த அறிவிப்பை எவ்விதத்திலும் நடைமுறைப்படுத்தக் கூடாது என்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தபன்சென் அக்கடிதத்தில் கோரியுள்ளார்.