Saturday, June 30, 2012

இவை இந்தியாவில்தான் சாத்தியம். எல்லாமே காமெடியா? பாருங்களேன்

இவையெல்லாம் இந்தியாவில்தான் சாத்தியம்தான் என்ற
வரிசையில் மேலும் சில படங்கள். இதிலே முதல்
படத்தை மட்டும் நான் நகைச்சுவையாக கருதவில்லை.

இந்தியப் பெண்கள் எவ்வளவு கடுமையான உழைப்பாளிகள்
என்பதற்கான அடையாளமாகவும் ஆதாரமாகவும் நான்
இப்படத்தைப் பார்க்கிறேன். நீங்கள்?

அதே போல எத்தனை தோஷ நிவர்த்தி பூஜை நடத்தினாலும்
இந்திய விமானத் துறை நிமிராது!















Thursday, June 28, 2012

சென்னை பேருந்து விபத்து - மறைக்கப்படும் உண்மைகள். நிர்வாகத்தின் அலட்சியத்திற்கு ஓட்டுனர் பலிகடாவா?


 

 சென்னை பேருந்து விபத்து தொடர்பாக நிர்வாகம், காவல்துறை,
ஊடகங்கள் உட்பட அனைவரும் ஓட்டுனரை குற்றவாளியாக்கி
தீர்ப்பு வழங்கி விட்டனர். தண்டனை அளிக்காதது மட்டும்தான்
பாக்கி.


விபத்திற்குள்ளான பேருந்து பற்றிய லட்சணம், இன்றைய 
தீக்கதிர் நாளிதழில் வந்துள்ளது. அரசுப் பேருந்துகள் எந்த
அளவிற்கு மோசமாக பராமரிக்கப்படுகின்றது என்பது அனைவரும்
அறிந்ததே. 


பல சமயங்களில் உதிரிப்பாகங்களை ஓட்டுனரே தனது சொந்தப்
பணத்தில் மாற்றுவது என்பது வழக்கமான நடைமுறையாகி 
விட்டது. பல அல்ட்ரா டீலக்ஸ் பஸ்கள் அவஸ்தை பஸ்களாகத்தான்
உள்ளது.


சாதாரணப் பேருந்துகள் எவ்வளவு மோசம் என்பது என்னைப் போல
அடிக்கடி பயணம் செய்பவர்களுக்குத்தான் நன்றாகத் தெரியும்.


போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாக சீர்கேட்டிற்கும்
 அலட்சியத்திற்கும்   உதாரணமாக ஒரு அதிர்ச்சியளிக்கும் உண்மை
ஒன்று உண்டு. அது நாளை.


இப்போது தீக்கதிர் செய்தியை படியுங்கள். மற்ற நாளிதழ்களும்
மறைத்த உண்மை இது.



சென்னை, ஜூன் 27 -
சென்னை அண்ணா மேம்பாலத்திலிருந்து மாந கர பேருந்து கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளா னதில் 40பேர் காயமடைந் தனர். உயிரிழப்பு ஏதுமில்லை.பாரிமுனையில் இருந்து வடபழனி நோக்கி 17எம் பேருந்து சென்று கொண் டிருந்தது. அந்த பேருந்தை ஓட்டுநர் பிரசாந்த் இயக்கி னார். மதியம் 1.45மணி அள வில் அண்ணா மேம்பாலத் திலிருந்து கோடம்பாக்கம் சாலைக்கு செல்ல கீழே இறங்கும் போது, பேருந்து பாலத்தின் பக்கவாட்டுச் சுவற்றில் உரசியது. பின்னர் பேருந்து ஓட்டுநரின் கட்டுப் பாட்டை இழந்து பாலத் தின் தடுப்பு சுவற்றை உடைத் துக் கொண்டு கீழே உருண்டு விழுந்தது. சுமார் 10 அடி உயரத்தில் இருந்து விழுந்த பேருந்தினுள் இருந்த ஓட்டுநர், நடத்து நர், பயணிகள் என சுமார் 40பேர் காயமடைந்தனர்.


விபத்து நிகழ்ந்த பகு திக்கு அருகிலேயே இருந்த தீயணைப்பு நிலையத்திலி ருந்து வந்த தீயணைப்பு படையினர் விபத்தில் சிக்கி யவர்களை மீட்டு மருத்துவ மனைகளுக்கு அனுப்பி வைத்தனர். மீட்பு பணியின் போது தீயணைப்பு படை வீரர் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது. அவரும் மருத் துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.இந்த விபத்து நடந்ததற் கான உண்மையான கார ணத்தை போக்குவரத்து கழக நிர்வாகம் மூடிமறைக் கிறது. இருச்சக்கர வாகனங் கள் கூட வேகமாக செல்ல முடியாத அந்த வளைவில், ஓட்டுநர் வேகமாக பேருந்தை இயக்கியதால் தான் விபத்து நிகழ்ந்துள் ளது என்று நிர்வாகம் கூறு கிறது.சிறுகாயம் கூட ஏற் படாத ஒருவர் பயணி என்ற போர்வையில், ஓட்டுநர் செல்போனில் பேசிக் கொண்டு பேருந்தை இயக் கினார் என்றார். மற்றொரு முறை கூறும் போது, ஓட் டுநர் செல்போனை கையில் வைத்திருந்ததை பார்த்தேன் என்றார். இப்படி முன்னுக்கு பின் முரணான தகவல் களை அவர் கூறினார்.விபத்துக்கு காரணம் என்ன?இது தொடர்பாக வட பழனி பணிமனையில் பணி யாற்றும் ஓட்டுநர் ஒருவர் கூறியது வருமாறு:வடபழனி பேருந்து நிலையத்திற்குட்பட்ட இந்த பேருந்தின் (விபிஐ-0615, டிஎன்-01, என்-4680) ஃபாடி கோணலாக இருந் தது. வேறொரு பேருந்தினு டைய பேனட் பெட்டியின் மூடியை எடுத்து இந்த பேருந்தின் பேனட்டை மூடி வைத்திருந்தனர். ஓட்டுநரின் இருக்கை பாதி உடைந்து இருந்தது. 


கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பராமரிப்பின்றி அந்த பேருந்து இருந்துள்ளது.பேருந்தின் டயர் பயன் படுத்த முடியாத நிலையில் இருந்தது. அதனை மாற்ற வேண்டுமென்பதற்கு அடை யாள குறியீடும் இடப்பட் டிருந்தது. இந்த பேருந்தை இயக்குமாறு ஓட்டுநர்களை பணிமனை நிர்வாகம் நிர் பந்தித்து வந்தது. ஓட்டுநர்க ளும் அந்த பேருந்தை இயக்க மறுத்துவந்தனர். இருப்பி னும் தொடர்ந்து நிர்வாகம் அளித்த நிர்பந்தம் காரண மாக வேறுவழியின்றி அந்த பேருந்தை ஓட்டுநர் பிர சாந்த் இயக்கினார்.அண்ணா மேம்பால வளைவில் அவர் பேருந்தை ஓட்டிச் செல்லும் போது கோணலாக இருந்த பாடி பக்கவாட்டுச் சுவறின் மீது உரசியது. இருப்பினும் ஓட்டுநர் பேருந்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர கடுமையாக முயற்சித்துள்ளார். அப்போது அவர் அமர்ந்திருந்த இருக்கை முற்றிலுமாக உடைந்தது. இதனால் ஓட்டு நர் நிலைதடுமாறினார். பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சுவற்றை உடைத் துக் கொண்டு கவிழ்ந்தது. இந்த விபத்திற்கு நிர்வாகம் தான் முழு பொறுப்பு. இனி யேனும் நிர்வாகம் பயணி கள் உயிரோடு விளையா டாமல் தகுதி வாய்ந்த பேருந் துகளை இயக்கவேண்டும்.இவ்வாறு அவர் கூறி னார்.

Wednesday, June 27, 2012

சபாஷ் ஜெயலலிதா




இன்று தமிழக அரசு எடுத்துள்ள ஒரு முடிவு நிஜமாகவே பாராட்டத் தக்கது. பாலியல் கொடுமைகளில் ஈடுபடுகின்ற ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வது, அவர்களது சான்றிதழ்களை ரத்து செய்வது ஆகிய முடிவுகளை அரசு எடுத்துள்ளது.

பாலியல் கொடுமைகளில் ஆசிரியர்கள் ஈடுபடுவது பற்றிய புகார்கள் சமீப காலத்தில் அதிகரித்து வருகின்றது. மதுரை மாவட்டம் பொதும்புவில் ஆரோக்கியசாமி என்ற தலைமை ஆசிரியர் பல ஆண்டுகளாக  ஏராளமான சின்னஞ்சிறு மாணவிகளை சீரழித்துள்ளான். ஆனால் அவன் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு மார்க்சிஸ்ட் கட்சித்தலைவர் தோழர் பிருந்தா காரத் அங்கே வரவேண்டியிருந்தது. உயர்நீதி மன்றம் கடுமையாக குட்டியாக பின்பும் காவல்துறை அசையவில்லை.

ஐந்து வயது, ஆறு வயது சிறுமிகளிடம் கூட தவறாக நடந்து கொண்ட சம்பவங்கள் கூட உண்டு. தெய்வத்திற்கு சமமாக மதிக்கப்பட்டும் ஆசிரியர் இனத்தில் இப்படி கேடு கெட்ட புல்லுருவிகளும் உண்டு. பல சமயம் எவ்வித நடவடிக்கையும் கிடையாது, சில சமயம் மாறுதல் என்பது மட்டுமே தண்டனையாக இருக்கும்.

இப்படிப்பட்ட சூழல் நிலவும் நேரத்தில் ஆசிரியர் இனத்தையே களங்கப் படுத்தும்  அற்பப் பதர்களுக்கு  கடுமையான தண்டனை என்பது மிக மிக அவசியமான ஒன்று.

இது முறையாக அமுலானால்  பல தவறுகள் குறையலாம். எனவே தமிழக முதல்வரை மனமாற பாராட்டுகிறேன்.

என்ன, ஜெ எப்போதாவதுதான், அரிதாகத்தான் நல்ல முடிவுகளை எடுக்கிறார். பெரும்பாலான நேரங்களில் மக்கள் நலனுக்கு எதிராகத்தான் செயல் பட்டுக்கொண்டிருக்கிறார்...

Tuesday, June 26, 2012

ஜனாதிபதி தேர்தலில் சிபிஎம் அணுகுமுறை பற்றி தோழர் பிரகாஷ் காரத்



ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு வேட்பாளர்கள் போட்டி யிடுகிறார்கள். ஐக்கிய முற்போக் குக் கூட்டணியின் சார்பில் பிர ணாப் முகர்ஜியும், பாஜக ஆதர வுடன் பி.ஏ.சங்மாவும் (ஏற்கனவே அஇஅதிமுக, பிஜூ ஜனதா தளம் ஆதரவைப் பெற்றிருந்த) போட்டி யிடுகின்றனர். இந்தத் தேர்தல் இரண்டு வேட்பாளர்களுக்கிடை யில் நடக்கும் போட்டியாக மட்டும் அமையவில்லை. இதையொட்டி எழுந்துள்ள அரசியல் சூழலில், மறு அரசியல் அணிச்சேர்க்கை யை மனதில் கொண்டு, குட்டை யைக் குழப்பி ஆதாயம் பெற முய லும் வேலைகளும் நடைபெறு கின்றன.காலாவதியான கொள்கை களால் பொருளாதார நிலைமை மோசமடைந்துள்ளது உள்ளிட்ட சிக்கலான பின்னணியில் தான் ஜனாதிபதித் தேர்தலை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சந் திக்கிறது.



கூட்டணிக்கட்சிகளி டையே ஒத்திசைவு இன்மை மற் றும் அரசியல் மற்றும் கொள்கை முடிவுகளை எடுக்க திறனற்ற தன்மை உள்ளிட்ட பிரச்சனை களையும் இந்த அரசு சந்திக்க வேண்டியுள்ளது. விலைவாசி உயர்வு, ஊழல் ஆகியவை காங் கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆதரவு தளத் தை வெகுவாக அரித்துள்ளன.இந்த தேர்தலில் பாஜகவின் நம்பகத்தன்மையும் சிதைந் துள்ளது. மும்பையில் நடை பெற்ற அக்கட்சியின் தேசிய செயற் குழுக்கூட்டத்தில், தலைவர்களின் கோஷ்டிப் பூசல் பகிரங்கமாக வெடித்ததோடு அரசியலில் நரேந்திரமோடிக்கு எதிரான அதிருப்தியும் அதிகரித்து வரு கிறது. பாஜகவில் ஆர்எஸ்எஸ்-இன் தலையீடு அறிந்த ஒன்று தான். தற்போதைய நிகழ்ச்சிப் போக்குகள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் குள்ளும் கொந்த ளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐக் கிய ஜனதாதளம் தனது நிலைபாட் டில் உறுதியாக உள்ளது. சங் மாவையோ, பாஜகவின் ஆதரவு பெற்ற வேட்பாளர் யாரையுமோ ஆதரிப்பதில்லை என அக்கட்சி தெளிவாகக் கூறிவிட்டது. ஜனாதிபதி தேர்தல் என்பது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலவீனத்தை வெளிப்படுத்துவ தாக அமைந்துவிட்டது.ஐக்கிய முற்போக்குக் கூட் டணியைப் பொறுத்தவரை வேட் பாளரை முன்மொழிவது தொடர் பாக திரிணாமுல் காங்கிரஸ் மற் றும் காங்கிரஸ் கட்சிக்கிடையே விரிசல் ஏற்பட்டது. இதை தனித் துப் பார்க்கக் கூடாது. ஐக்கிய முற் போக்குக் கூட்டணி அரசுடன் பல் வேறு விஷயங்களில் திரிணாமுல் காங்கிரஸ் ஏற்கனவே முறைத்துக் கொண்டுள்ளது. மேற்குவங்கத்தில் காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் ஆதரவுத்தளத்தை சிதைப்பதில் திரிணாமுல் காங்கிரஸ் முனைப் பாக உள்ளது. இந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள ஆயுத ரீதியிலான தாக்குதலைக் கூட திரிணாமுல் பயன்படுத்திக் கொள் கிறது.


தேசிய ஜனநாயகக் கூட்டணி யை விரிவுபடுத்த பாஜக விரும்பு கிறது. ஆனால் நடைமுறையில் அந்தக் கூட்டணி சுருங்கிக் கொண்டே வருகிறது. ஜனாதிபதித் தேர்தல் பிரச்சனையில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சிவசேனை ஆகிய கட்சிகள் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க முடிவு செய்துள்ளன.காங்கிரஸ் மற்றும் பாஜக-வுக்கு மாற்றாக பிராந்திய அளவிலான கட்சிகள் ஆதாயம் அடைந்துள் ளன. இந்தக் கட்சிகள் காங்கிரஸ் மற்றும் பாஜகவை முற்றாகச் சார்ந் திருக்க விரும்பவில்லை. மாறாக தங்களது நலன் அடிப்படையில், சில சமயங்களில் சந்தர்ப்பவாத அடிப்படையிலும் முடிவெடுத் துள்ளன. எனினும் அந்தக் கட்சி கள் எடுத்துள்ள பொதுவான நிலைபாடு கூட்டாட்சிக் கோட்பாட்டை உறு திப்படுத்துவதாக அமைந்துள்ளது என்பது சாதகமான போக்காகும்.


நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலின் பின்னணி இதுதான். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யைப் பொறுத்தவரை, ஜனாதிபதித் தேர்தல் என்பது ஒரு அரசியல் பிரச்சனை என்ற முறையில் அணுகி அரசியல் ரீதியான நிலை பாட்டையே எப்போதும் எடுத்து வந்துள்ளது. அண்மையில் நடை பெற்ற கட்சியின் 20வது அகில இந் திய மாநாடு காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்குக் கூட் டணி அரசையும் அதன் பொருளா தாரக் கொள்கைகளையும் எதிர்த் துப்போராட அழைப்பு விடுத்தது. அதே நேரத்தில் பாஜக மற்றும் அதன் மதவெறி நிகழ்ச்சி நிரலை எதிர்ப்பது என்றும் கட்சி முடிவு செய்தது. நவீன தாராளமயமாக்கல் கொள்கை, வகுப்புவாதம் மற்றும் அதிகரித்து வரும் ஏகாதிபத்திய சார்பு நிலை ஆகியவற்றை எதிர்த்து கட்சி போராடும். மக்கள் பிரச்சனைகளில், காங்கிரஸ் அல் லாத மதச்சார்பற்ற கட்சிகளின் ஆதரவைப் பெற்று கூட்டு இயக் கங்கள் மற்றும் போராட்டங்களை கட்சி நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இடது ஜனநாயக மாற்றை உருவாக்க கட்சி பணியாற் றும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி சக்திகளைப் பலப்படுத்த வேண்டுமானால் மேற்கு வங்கத்தில் கடுமையான தாக்குத லுக்கு உள்ளாகியுள்ள கட்சி மற்றும் இடதுசாரி இயக்கத்தை பாதுகாப்பது அவசியமாகும்.இத்தகைய புரிதலின் அடிப்ப டையில்தான் ஜனாதிபதித் தேர்த லில் கட்சி தனது அணுகுமுறையை வடி வமைத்தது. ஜனாதிபதி தேர் தலில் பிரணாப்முகர்ஜியை ஆத ரிப்பது என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு முடிவு செய்தது. இந்த முடிவு எடுக்கப்பட்டதற்கான அடிப்படைகளை விளக்கியாக வேண்டும்.


1992க்குப் பிறகு பின்பற்றப்பட்ட அணுகுமுறை


1991 மக்களவைத் தேர்தலுக் குப் பிறகு பாஜக ஆதரவு பெற்ற வேட்பாளரை ஆதரிக்கும் பேச் சுக்கே இடமில்லை என்பதுதான் கட்சி எடுத்த நிலையாகும். ஏனென் றால் பாஜக தனது வலிமையை பெருக்கிக் கொண்டுள்ள நிலை யில் அரசியல் சாசன தலைமைப் பொறுப்பை அக்கட்சி கைப்பற்ற முயல் வதை தடுப்பது பிரதான அரசியல் கடமையாக அமைந்தது. இந்துத் துவா சக்திகளின் செல்வாக்கு ஜனா திபதி பதவி வரை செல்வது என் பது அரசியல் சாசனத்தின் மதச் சார்பற்ற ஜனநாயக நெறிமுறை களுக்கு தீங்கிழைப்பதாக அமையும்.இத்தகைய மதிப்பீட்டின் அடிப் படையில்தான் 1992 ஜனாதிபதித் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான சங்கர் தயாள் சர் மாவை ஆதரிப்பதென கட்சி முடிவு செய்தது. 1992 முதல் தற் போது வரை நரசிம்மராவ் அர சினால் அறிமுகப்படுத்தப்பட்டு, பின் வந்த அரசுகளாலும் பின்பற் றப்பட்ட நவீன தாராளமயமாக்கல் கொள்கையை எதிர்த்து கட்சி தொடர்ச்சியாகப் போராடி வந்துள் ளது. அதே நேரத்தில் அரசியல் சாசனத்தின் மதச் சார்பற்ற தன்மை பாது காக்கப்பட வேண்டும் என்பதற்கு முன்னு ரிமை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இத்தகைய புரிதலின் அடிப்படை யில்தான் சங்கர்தயாள் சர்மா, கே.ஆர்.நாராயணன், பிரதீபா பாட்டீல் ஆகியோரை ஜனாதிபதி தேர்தலில் கட்சி ஆதரித்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருந்த 2002 தேர்தல் மட்டுமே ஒரே ஒரு விதிவிலக் காகும். ஏ.பி.ஜெ.அப்துல்கலாமை பாஜக தேர்தலில் வேட்பாளராக நிறுத்தியது. காங்கிரசும் அவரை ஆதரிப்பதாக அறிவித்தது. பாஜக அல்லாத கட்சிகளிடையே வேறு யாரும் நம்பகமான வேட்பாளரை நிறுத்தாத நிலையில் இடதுசாரிக் கட்சிகள் தனது சொந்த வேட்பாளரை நிறுத்தின.தற்போதைய ஜனாதிபதி தேர் தலில் பிரணாப் முகர்ஜி வேட்பா ளராக நிறுத்தப்பட்டுள்ளதால், காங் கிரசுக்கும் திரிணாமுல் காங்கிர சுக்குமான விரிசல் மேலும் ஆழ மாகியுள்ளது. டாக்டர் கலாமை வேட்பாளராக நிறுத்த திரிணாமுல் காங்கிரஸ் முயற்சித்தது. பாஜக வின் முழு ஆதரவையும் பெற லாம் என்பதே இதற்குக் காரண மாகும். இந்த முயற்சி தோல்விய டைந்ததால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிக்கலாம்.


அல்லது தனது நிலையை மாற்றிக்கொண்டு பிர ணாப்முகர்ஜியை ஆதரிக்கலாம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது நிலைபாட்டை எடுப்பதற்கு முன்பு ஆளும் கூட்டணியில் ஏற் பட்டுள்ள விரிசலையும் கவனத் தில் கொள்ள வேண்டியது அவ சியமாகும்.ஐக்கிய முற்போக்குக் கூட்டணி யில் இடம்பெறாத பல்வேறு கட்சி களும் கூட பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவனத் தில் எடுத்துக்கொண்டது. சமாஜ் வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் பிர ணாப்முகர்ஜிக்கு ஆதரவு தெரி வித்துள்ளன. வேறு மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் ஆதரிக்க முன்வந் தால் தான் வேறு வேட்பாளரை நிறுத்துவதற்கான சாத்தியக்கூறு களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பரிசீலிக்க முடியும். ஆனால் அதிமுக மற்றும் பிஜூ ஜனதா தளம் கட்சிகளைத் தவிர ஏனைய மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஐ.மு.கூ. வேட்பா ளரை ஆதரிப்பதென முடிவு செய்துவிட்டன. அதிமுக மற்றும் பிஜூ ஜனதா தளம் ஆதரவு பெற்ற வேட்பாளரான சங்மாவை ஆதரிப்பதென பாஜகவும் தற் போது முடிவு செய்துவிட்டது. பிர ணாப் முகர்ஜி பரவலான ஒப்பு தலைப் பெற்ற ஒரு வேட்பாளராக உருவெடுத்துள்ளார். பாஜக மற்றும் மம்தா பானர்ஜி, டாக்டர் கலாமை போட்டியிட வைப்பதற்கான முயற் சிகளில் தீவிரமாக ஈடுபட்ட தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 2002 தேர்தலில் சமாஜ் வாதி கட்சியின் தேர்வு அப்துல் கலாமாக இருந்தபோதும் கூட தற்போது முயற்சிக்குப் பின்னால் செல்ல முலாயம் சிங் மற்றும் சமாஜ் வாதி கட்சி மறுத்துவிட்டது குறிப் பிடத்தக்க ஒன்றாகும்.ஐ.மு.கூட்டணி வேட்பாளரை பல கட்சிகள் ஆதரிப்பதால் அந் தக் கூட்டணி ஒன்றும் பல மடைந்துவிடப் போவதில்லை. மாறாக, தனது சொந்த வேட் பாளரை வெற்றி பெற செய்வதற்கு கூட கூட்டணிக்கு வெளியில் உள்ள கட்சிகளை காங்கிரஸ் கட்சி சார்ந்திருக்க வேண்டியுள்ளது என் பதே வெளிப்பட்டுள்ளது. மேலும், இந்த சக்திகள் காங்கிரஸ் கட்சியை சமமான நிலையில் வைத்து நடத்த முயலும். காங்கிரஸ் கட்சி இவர் களை புறந்தள்ளிவிட முடியாது.


சமதூரம் இல்லை


காங்கிரஸ் மற்றும் பாஜகவை எதிர்த்து போராடுவது என்ற கட்சி யின் அரசியல் நிலைபாட்டின் பொருள், அனைத்துப் பிரச்சனை களிலும் இந்த இரு கட்சிகளையும் சமதூரத்தில் வைத்து பார்க்க வேண்டுமென்பது அல்ல. உதார ணமாக, ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரை பெரும்பாலான முதலாளித்துவ கட்சிகளின் ஆதர வுடன்தான் ஜனாதிபதி தேர்வு செய்யப்படுகிறார். அதே நேரத் தில், அரசியல் சாசனத்தின் தலை மைப் பொறுப்பில் உள்ளவர் மதச் சார்பின்மை விஷயத்தில் உறுதி யான நிலை எடுப்பவராக இருக்க வேண்டும். பாஜகவின் செல்வாக் கிற்கு வழிவகுப்பவராக இருக்கக் கூடாது. எனவேதான் பாஜக ஆத ரவு பெற்ற வேட்பாளரை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கிறது.பொருளாதாரக் கொள்கை களை எதிர்த்த போராட்டத்தை பொறுத்தவரை காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அர சுக்கு எதிராக அழுத்தம் தரப்பட வேண்டும். ஜனாதிபதி தேர்தல் பிரச்சனையில் காங்கிரஸ் தலை மையிலான அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிப்பதாக குற்றம்சாட்டும் சமதூரத்தை பின் பற்ற வேண்டும் என்போர், காங் கிரஸ் கட்சிக்கு எதிராக, விலை வாசி உயர்வு மற்றும் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதி ரான போராட்டங்கள் மற்றும் வெகு ஜன போராட்டங்கள் உருவாகும் போது பாஜகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கைகோர்ப்ப தாக குற்றம்சாட்டுகின்றனர்.


இத் தகைய பாணியில் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைபாட்டை வியாக்கியானம் செய்யக் கூடாது.மத்திய அமைச்சரவை மற்றும் நிதியமைச்சர் பொறுப்பிலிருந்து பிரணாப் முகர்ஜியை அகற்றுவ தால் மத்திய அரசின் பொருளா தாரக் கொள்கை எதுவும் மாறிவிட போவதில்லை. ப.சிதம்பரமாக இருந்தாலும் சரி, பிரணாப் முகர்ஜி யாக இருந்தாலும் சரி அல்லது அமைச்சர் பொறுப்பில் இருக்கும் யாராக இருந்தாலும், ஆளும் வர்க்கத்தின் கொள்கையை காங் கிரஸ் கட்சி முன்னெடுத்துச் செல் வதால் அந்தக் கொள்கைகள் தொடரவே செய்யும். உண்மையில் நவீன தாராளமயமாக்கல் கொள் கையை மென்மேலும் தீவிரமாக அமல்படுத்துமாறு சர்வதேச நிதி மூலதனம் நிர்ப்பந்தித்து வருவது அப்பட்டமாக தெரியவருகிறது.சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது குறித்த பிரச்சனையும் இந்த சர்ச்சையின் போது விவாதிக்கப்படுகிறது. 4 கோடி மக்களின் வாழ்வாதாரம் சம் பந்தப்பட்ட மிக முக்கியமான பிரச் சனை இது. இந்த முயற்சி எதிர்க் கப்பட வேண்டும்; முறியடிக்கப்பட வேண்டும். ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு வெளியில் உள்ள கட் சிகள் அனைத்தையும் அணி திரட்டுவதன் மூலமே இதை செய்ய முடியும். ஐக்கிய முற் போக்குகூட்டணியை ஆதரிக்கும் கட்சிகள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளும் கூட இந்த அணிவகுப் பில் இணைய வேண்டியிருக்கும். வால்மார்ட் நுழைவை எதிர்த்து வலுவான வெகுஜன இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது. மேலும் இத்தகைய நிறுவனங்கள் இந்தியாவில் கடை கள் திறப்பதையும் எதிர்த்து போராடியது. அனைத்து எதிர்க்கட் சிகளும் இந்தப் பிரச்சனையை ஒன்றுபட்டு எதிர்த்தன. நவீன தாராளமயமாக்கல் கொள்கைக்கு எதிரான போராட்டத்தை முன்னெ டுத்துச் செல்வது குறித்த உத்தியை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட் பாளர் தேர்வுடன் முடிச்சுப்போடு வது தேவையற்ற குழப்பத்தையே ஏற்படுத்தும்.


புறக்கணிப்பது குறித்து...


ஜனாதிபதி தேர்தலை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏன் புறக் கணிக்கவில்லை என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் பாஜக ஆதரவு வேட்பாளருக்கு வாக்களிப்பதற்கு பதிலாக, யாருக் கும் வாக்களிக்காமல் இருந்து விட்டால் என்ன என்று வினவப் படுகிறது.ஜனாதிபதி தேர்தலை புறக் கணிப்பது என்பது மேற்குவங்கத் தில் மம்தா பானர்ஜி மற்றும் திரி ணாமுல் காங்கிரஸ் எடுத்துள்ள அதே நிலைபாட்டை எடுப்பதாக அமையும். இந்த நிலைபாடு அர சியல் ரீதியாக பலவீனமானது; ஏற் றுக் கொள்ள இயலாதது. இதே திரி ணாமுல் காங்கிரஸ் தான் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதி ராக பயங்கரவாத வன்செயல் களை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு கட்சி மற்றும் இடது முன்னணியின் ஊழியர்கள், ஆதரவாளர்கள் 68 பேர் படுகொலை செய்யப்பட் டுள்ளனர். ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் அனைத்து முனை களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள் ளது. காங்கிரஸ் கட்சியும் கூட தப்ப முடியவில்லை. திரிணாமுல் காங் கிரஸ் எடுத்துள்ள அதே நிலையை கட்சியும் எடுப்பது என்பது மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளின் நல னுக்கு தீங்கிழைக்கும். அந்த மாநி லத்தில் திரிணாமுல் காங்கிரசை எதிர்த்து நடத்திவரும் போராட் டத்தை பலவீனப்படுத்தும். மேற்கு வங்கத்தில் கடுமையான தாக்குத லுக்குள்ளாகியுள்ள இடதுசாரி இயக்கம் மற்றும் உழைக்கும் மக்க ளின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய கடமை மிகப்பெரிய இடதுசாரிக் கட்சி என்ற முறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உண்டு.


இடதுசாரிகளின் வலுவான தளத்தில் கட்சியை பாதுகாப்பது என்பது தேசிய அளவில் இடது சாரி இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல உதவும்.மேலும், இது மேற்குவங்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனை மட்டு மல்ல; தேசிய அளவில் தேர்தலை புறக்கணிப்பது என்பது களத்தி லிருந்து கட்சி விலகிக் கொள்வது என்றே பொருள்படும். அரசியல் நிகழ்ச்சிப் போக்குகளில் கட்சியின் தலையீட்டிற்கு இது ஏதுவாக அமையாது.2009ம் ஆண்டிலிருந்தே இடது சாரி கட்சிகளை தனிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற் றும் இடதுசாரி கட்சிகளை பல வீனப்படுத்த ஆளும் வர்க்கம் திட்டமிட்ட முறையில் தாக்குதல் நடத்தி வருகிறது. நவீன தாராள மயமாக்கல் கொள்கைகளுக்கு எதிராக போராடிவரும் இடதுசாரி சக்திகளை பலவீனப்படுத்த வேண் டும் என்ற ஆளும் வர்க்கத்தின் முயற்சிகளை மனதில்கொண்டு, எந்தவிதமான மாயைகளுக்கும் இடம் தராமல் ஆளும் கூட்டணி யில் உள்ள முதலாளித்துவ கட்சி களிடையே ஏற்பட்டுள்ள விரி சலை பயன்படுத்திக் கொள்ள கட்சி முயல்வதே சரியாக இருக் கும். இந்த தருணத்தில் தேர்தல் புறக்கணிப்பு என்பது இந்த நோக் கத்திற்கு உதவுவதாக அமையாது.


இடதுசாரிக் கட்சிகளின் நிலை


ஜனாதிபதி தேர்தலை பொறுத்த வரை இடதுசாரிக் கட்சிகளால் ஒன்றுபட்ட நிலையை எடுக்க முடியவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் அகில இந் திய பார்வர்டு பிளாக் ஆகிய கட்சி கள் பிரணாப் முகர்ஜியை ஆதரிப் பது என்று முடிவெடுத்துள்ளன. சிபிஐ மற்றும் ஆர்எஸ்பி ஆகிய கட்சிகள் தேர்தலை புறக்கணிக்க முடிவெடுத்துள்ளன. கடந்த காலத் திலும் கூட ஜனாதிபதி தேர்தலில் 4 இடதுசாரி கட்சிகளும் ஒன்று பட்ட நிலை எடுக்க இயலாமல் போயுள்ளது. உதாரணமாக 1992 தேர்தல் முதலே காங்கிரஸ் வேட் பாளரை ஆதரிக்க மறுத்து ஆர் எஸ்பி புறக்கணித்து வந்துள்ளது.ஜனாதிபதி தேர்தல் பிரச்சனை யில் இடதுசாரி கட்சிகள் மாறுபட்ட நிலைபாட்டை எடுத்துள்ளதால் இடதுசாரி கட்சிகளின் ஒற்றுமை பாதிக்கப்பட்டுவிடாது. பெரும் பாலான அரசியல் மற்றும் பொரு ளாதார பிரச்சனைகளை பொறுத்த வரை இடதுசாரிக் கட்சிகளுக்கு பொதுவான ஒன்றுபட்ட நிலைபாடு உள்ளது. இந்த அடிப்படையில் தான் உணவுப் பாதுகாப்பை வலி யுறுத்தியும், ஒருங்கிணைந்த பொதுவிநியோக முறையை உறுதி செய்யக் கோரியும் இடதுசாரிக் கட் சிகள் ஒன்றுபட்ட பிரச்சாரம் மற்றும் இயக்கத்திற்கு அழைப்பு விடுத் துள்ளன. ஜூலை 1ம்தேதி முதல் இந்தப் பிரச்சார இயக்கம் ஒன்று பட்ட முறையில் துவங்கிடவுள்ளது.

Monday, June 25, 2012

ஏன்யா, இது ஒரு தலை போற செய்தியா?

இன்று முக நூலில் பல பேர் ஒரு புகைப்படத்தை
பகிர்ந்து கொண்டதைப் பார்த்து நொந்து போனேன்.

தனுஷும் சிம்புவும் விமானத்தில் அருகருகே
அமர்ந்து போஸ் கொடுத்த புகைப்படம் அது.

சண்டையிடும் இரு நாடுகளின் தலைவர்கள்
சமாதான உடன்படிக்கை உருவாக்கிக் கொண்டது
போல முக்கியத்துவம் கொடுத்திருந்தார்கள்.

அதனால்தான் கேட்கிறேன்.

ஏன்யா, இது ஒரு தலை போற செய்தியா?

 

மனதை பாதித்த மழலை மரணங்கள்




இதயத்தை பாதித்த இரு மழலைகளின் மரணம் பற்றிய பதிவு இது. ஒன்று அனைவரும் அறிந்த ஹரியானா குழந்தை மாஹி. பிறந்த நாள் கொண்டாடிய அந்த சிறு மலர், ஆழ்துளைக் கிணறில் விழுந்து சடலமாகவே வெளியில் வந்தது. ராணுவ வீரர்களின் கடுமையான போராட்டத்திற்கு பலனில்லாமல் போனது.

ஆழ்துளைக் கிணறுகளில் இப்படி குழந்தைகள் சிக்கிக் கொள்வதும், மிகக் கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு அவர்கள் உயிரோடோ அல்லது சடலமாகவோ மீட்கப்படுவது என்ற செய்தியை அவ்வப்போது படிக்கிறோம். இந்த நிகழ்வுகள் எல்லாமே பொறுப்பற்ற தன்மையினால் மட்டுமே விளைவது.

ஆழ்துளைக் கிணறு தோண்டி அதிலே தண்ணீர் வரவில்லை என்றால் அதை அப்படியே விட்டு விட்டு போவதால்தான் அதிலே சிக்கிக் கொள்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை கொட்டி போர் போட முடிகின்றவர்களால், அதற்கு மேலே ஒரு மூடியைப் போட்டு மூட ஒரு இருநூறு, முன்னூறு ரூபாய் செலவிட முடியாதா?

இப்படி பொறுப்பில்லாமல் செயல்படுபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

இன்னொரு மழலையின் மரணம் இன்னும் வெகுவாக பாதித்தது. சென்னையில் பணியாற்றும் ஒரு ஊழியருக்கு தெரிந்த ஒருவரின் குழந்தை ப்ளட் கான்ஸருக்காக வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது. ரத்தம் தேவை என்று அந்த ஊழியர் எனக்கு தெரிந்த ஒரு அதிகாரி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

இரண்டு பாட்டில் ரத்தம் இந்த வாரம் தேவை என்றார்கள். வெள்ளிக் கிழமையன்று நான் ரத்த தானம் செய்து விட்டேன். இன்று காலை எங்கள் இணைச்செயலாளர் தோழர் பட்டாபி அளிப்பதாக ஏற்பாடு. காலை பத்து மணிக்கு அந்த சென்னை தோழரிடமிருந்து தொலைபேசி வருகின்றது.

ரத்த தானம் பற்றி நினைவு படுத்தத்தான் தொலைபேசி செய்கின்றார்கள் என்று நினைத்து, அவர் பேசுவதற்கு முன்பாகவே அவசரம் அவசரமாக இன்னும் அரை மணி நேரத்திற்குள் தோழர் பட்டாபி ரத்த வங்கி சென்று விடுவார் என்றேன். அவரோ, அதற்கு அவசியமில்லை, நேற்று இரவு அந்த குழந்தை இறந்து விட்டது. என்று தழுதழுத்த குரலில் சொன்னார். எனக்கு பதில் பேசும் தெம்பு இல்லை. ரத்த தானம் செய்ய சென்று கொண்டிருந்த அந்த தோழருக்கும் தகவல் அளித்தேன். அவரும் மிகவும் வருத்தமுற்றார்.

நான் அந்த குழந்தையை, ஏன் அதன் பெற்றோரைக் கூடப் பார்த்ததில்லை. ஆனாலும் மனதை என்னவோ செய்கிறது அந்த மார்வான் என்ற பெயருடைய அந்த மழலையின் மரணம்.




Sunday, June 24, 2012

ஒரே ஒரு ராஜ்யசபா சீட்டும் ஜனாதிபதி தேர்தல் புறக்கணிப்பும்





இது ஒரு சாமானியனின் சந்தேகம். ஒரு வேளை இப்படி இருக்குமோ என்ற கேள்விக்கு  பதில் நாடி இந்த பதிவு.

அரசியல் விற்பன்னர்கள் எனது சந்தேகத்திற்கு விளக்கம் அளியுங்களேன்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கிறது. அதற்கு காரணம் எதுவும் சொல்லவில்லை. தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற புதுக்கோட்டை தேர்தலிலிருந்து ஒதுங்கி நின்ற கட்சி இது. தா.பாண்டியன் மாநிலங்களவை உறுப்பினராக அம்மாவின் கடைக்கண் பார்வைக்காக அவர் காத்திருப்பதாக ஏற்கனவே காற்றில் தகவல்கள் கசிந்து வந்தன.

அதனால்தான் இந்த சாமானியனுக்கு ஒரு சந்தேகம்.

பாஜக ஆதரிப்பதால் சங்மாவை ஆதரிக்க முடியாது. பிரணாப்பை ஆதரித்தால் அம்மாவிற்கு கோபம் வரும். அம்மாவிற்கு கோபம் வந்தால் ராஜ்ய சபா சீட் பறி போகும். எதற்கு வம்பு, ஜனாதிபதி தேர்தலை விட தமிழகத்திலிருந்து கிடைக்கும் ஒரு ராஜ்யசபா சீட் மிகவும் முக்கியம் என்பதால் சி.பி.ஐ புறக்கணிப்பு முடிவை எடுத்திருக்குமோ?

இந்த சாமானியனின் சந்தேகத்தை யாராவது தீர்த்து வையுங்களேன் ...


Saturday, June 23, 2012

மனசாட்சி உள்ளவர்களின் சிந்தனைக்கு


முக நூலில் நான் பார்த்த படம்.
கொஞ்சம் நாம் சிந்திப்போமே!
























Friday, June 22, 2012

குழப்பங்களின் உச்சத்தில் ஜனாதிபதி தேர்தல் . இனிதான் உள்ளது சுவாரஸ்யம் ....



ஜனாதிபதி தேர்தல் அனைத்து அரசியல் அணிகளின் ஒற்றுமையையும்
குலைத்து விட்டது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி முடிவை திரிணாமுல் ஏற்கவில்லை.
யு.பி.ஏ வின் ஒரு அங்கமான தேசியவாத காங்கிரஸின் நிறுவனர்களில்
ஒருவரான சங்மா அக்கட்சியிலிருந்து விலகி விட்டார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவை சிவசேனாவும் ஐக்கிய ஜனதா
தளமும் ஏற்கவில்லை.

இடது முன்னணியிலும் சி.பி.ஐ, ஆர்.எஸ்.பி தனிப்பாதை கண்டு விட்டன.

அரசியல் அணி மாற்றங்களுக்கான அச்சாரமாக ஜனாதிபதி தேர்தல்
அமையுமா?

இத்தேர்தலிலேயே மாற்றி ஓட்டுப் போடுவது, மனசாட்சிப்படி
ஓட்டுப் போடுவது போன்ற குழப்பக் கூத்துக்களும் நடக்கப்
போகின்றது.. 

இனி வரும் காலம் சுவாரஸ்யமாகவே இருக்கப் போகிறது ... 
மக்களுக்கு ????????????

Thursday, June 21, 2012

கட்டிடங்களை வேண்டுமானால் இடித்து விடலாம்? ஆனால்




வேலூர் நகரத்தின் தோற்றம் கடந்த சில ஆண்டுகளாக மாறிக் கொண்டே இருக்கிறது என்பதை முந்தைய ஒரு பதிவில் எழுதியிருந்தேன். பழைய பல கட்டிடங்கள், திரை அரங்குகள், சிறு வீடுகள் இடிக்கப்பட்டு அந்த இடங்களில் பிரம்மாண்ட வணிக மையங்கள் வந்துள்ளன,  வந்து கொண்டிருக்கின்றன, தற்போது இடிக்கப்பட்டு வரும் இரண்டு கட்டிடங்கள் பற்றியே இப்பதிவு.

ஒரு கட்டிடம் சி.எம்.சி மருத்துவமனைக்கு அருகாமையில் எங்கள் அலுவலகத்திற்கு எதிரில் உள்ள கிரவுன் தியேட்டர். மிகவும் பழைய தியேட்டர். ஒரு முறை கூட உள்ளே நுழைந்ததில்லை. காரணம் அது பலான படங்கள் மட்டுமே திரையிடும்  பாரம்பரியம் கொண்டது. ஆகவே அப்படிப்பட்ட படம் பார்ப்பவர்களுக்கு மட்டுமே வருத்தம் ஏற்படுத்தும் செய்தி இது. பலான படம் மட்டுமே போட்டாலும் லாபகரமாக  இயங்கக் கூடிய தொழிலாக திரை அரங்கத் தொழில் இல்லை என்ற செய்தியும் இதோடு ஒட்டி இருக்கிறது.

எனது கவலை வேறு. இந்த கிரவுன் தியேட்டரை ஒட்டிய தெருவில்தான் எங்கள் சங்க அலுவலகம் சரோஜ் இல்லம் உள்ளது. சரோஜ் இல்லத்திற்கு வழி கேட்பவர்களுக்கு அடையாளமாக கிரவுன் தியேட்டரை சொல்லி, அங்கிருந்து வாருங்கள் என்போம். அதிகாலை மூன்று மணிக்கு ஹௌரா எக்ஸ்பிரஸில் இறங்கி அரைகுறை ஆங்கிலத்தில் வழி கேட்பவர்களுக்கு நான் தூக்க கலக்கத்தில் இனி எப்படி பதில் சொல்வது, எப்படி புரிய வைப்பது என்பதுதான் என் கவலை.

ஏராளமான நினைவுகளை தாங்கிய இன்னொரு கட்டிடமும் இடிபட்டுக் கொண்டிருக்கிறது. அது சொந்தக் கட்டிடத்திற்கு வரும் முன் எல்.ஐ.சி வேலூர் கோட்ட அலுவலகம் செயல்பட்டுக் கொண்டு இருந்த கட்டிடம். 20, ஆபீஸர்ஸ் லைன் என்ற முகவரியில் முதலில் எல்.ஐ.சி வேலூர் கிளை இருந்தது. பிறகு அங்கு வேலூர் கோட்ட அலுவலகத்தின் பல பிரிவுகள் செயல்பட்டன. வேறு சில கட்டிடங்களில் வேறு பல பிரிவுகள் செயல்பட்டாலும் இதுதான் பிரதான அலுவலகமாக இருந்தது. 1988 முதல் 1996 வரை சங்கம் செயல்பட்டதும் இங்கிருந்துதான்.

பல முக்கியமான கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் இங்கே நடந்திருக்கிறது. அதிலே அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முக்கியமான தலைவர் தோழர் சரோஜ் சவுத்ரி ஒரு கருத்தரங்கில் உரையாற்றியுள்ளார். அக்கருத்தரங்கம் தொடங்கும் முன்னர் ஒரு இரண்டு மணி நேரம் கிளைச் செயலாளர்களோடு அவர் கலந்துரையாடினார். வானத்திற்குக் கீழே எதைப் பற்றி வேண்டுமானாலும் கேட்கலாம் என்ற அறிமுகத்தோடு நடந்த அந்த விவாதம், வார்த்தைகளில் விவரிக்க முடியாத பரவசம்.

பல்வேறு பிரச்சினைகள் அங்கே நடந்திருக்கின்றன. அதற்கான தீர்வுகளும் பிறந்திருக்கின்றன. முக்கியமான நிகழ்வுகளுக்கான சாட்சியமாக அந்த கட்டிடம் இருந்திருக்கிறது. எப்போது அந்த வழியாக சென்றாலும் ஒரு நொடி அந்த கட்டிடத்தை பார்ப்பது வழக்கம். அந்த நொடியில் எத்தனையோ நினைவில் வந்து அலை மோதி விட்டுச் செல்லும்.

அஞ்சல் நிலையத்தோடு தன் பயணத்தை துவக்கிய அந்தக் கட்டிடம் இனி இருக்காது. ஆனால் நினைவுகள் இருக்குமல்லவா!



சரோஜ் இல்லத் திறப்பு விழா அன்று