Friday, April 30, 2021

அமெரிக்காவில் ஆர்.எஸ்.எஸ் ஹாஸ்பிடல் ?????

 


ஆமாம். இதுதான் குஜராத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நாற்பதாயிரம் படுக்கைகளோடு கட்டிய பிரம்மாண்டமான மருத்துவமனை.

 எந்த நகரத்தில் என்று கேட்கிறீர்களா?

 அதில்தான் ஒரு சின்ன சிக்கல் இருக்கிறது.

 ஆர்.எஸ்.எஸ் இந்த குஜராத் மருத்துவமனையை அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் கட்டியது.  அமெரிக்காவில் இந்தியர்கள் இவ்வளவு பெரிய மருத்துவமனையை கட்டுவதா என்ற பொறாமையில் அமெரிக்கா அதனை ஆக்கிரமித்து “பென்டகன்” என்று பெயர் சூட்டி தன் ராணுவ தலைமையகமாக மாற்றிக் கொண்டு விட்டது.

பிகு :இது போல இன்னும்  இரண்டு விஷயங்கள் உள்ளது. அவை நாளை

காலைப் பொழுது அச்சமூட்டுகிறது.

 

ஒவ்வொரு நாள் காலையும் துயரச் செய்தியுடனே விடிகிறது,


எங்கள் அகில இந்திய துணைத்தலைவரும் தென் மத்திய மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் தலைவருமான தோழர் கே.வேணுகோபால் ராவ் இன்று காலை காலமானார். 

மாநாடுகளில் சர்வதேச நிலைமையயும் பொருளாதார நிலைமைகளையும் எளிமையான ஆங்கிலத்தில் பேசக் கூடிய தோழர்.



செவ்வணக்கம் தோழர் வேணுகோபால்ராவ்.


அடுத்த துயரச்செய்தியாக இயக்குனர் ஒளிப்பதிவாளர் திரு கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவுச் செய்தி வருகிறது. சுவாரஸ்யமான சில படங்களை அளித்தவர்.



ஆழ்ந்த இரங்கல் திரு கே.வி.ஆனந்த்

Thursday, April 29, 2021

நேற்று யுவன். இன்று சித்தார்த்

 


குரானிலிருந்து ஒரு வாசகத்தை தன் பக்கத்தில் பகிர்ந்து கொண்டதற்காக நேற்று முழுதும் சங்கிகள் யுவன் சங்கர் ராஜாவை வசை பாடிக் கொண்டிருந்தார்கள். “நான் உன் ரசிகர் பக்கத்தை விட்டே வெளியேறுவேன் என்ற ஒரு சங்கிக்கு தாராளமா போயிடு என்று சூடாக பதிலளித்தார். அது மட்டுமல்லாமல் வசை பாடிய பல சங்கிகளும் அவரிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார்கள்.

 இன்று நடிகர் சித்தார்த்தின் முறை. எவ்வளவு ஆபாசமாக மிரட்டினாலும் என்னை உங்களால் அடக்க முடியாது என்று உறுதியாக பதிலளித்து விட்டார்.


 
பாவம் சங்கிகள். அசிங்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

இவருக்கு புரிந்தது. மோடிக்கு?

 



 மத வெறியின் மகாராஷ்டிர முகம் சிவ சேனா. இன வாத அமைப்பாக துவங்கி தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி பின் மத வாத அமைப்பாக உருவெடுத்து இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்களாக பரிணாம வளர்ச்சி அடைந்தது. அப்படிப்பட்ட பாரம்பரியத்தைச் சேர்ந்த உத்தவ் தாக்கரே இப்படி சொல்லியிருப்பது வரவேற்கத்தக்க முன்னேற்றம்.

 இவருக்கு புரிந்த உண்மைகள் மோடிக்கு எப்போதுதான் புரியுமோ?

பொறுப்பில்லா ஆட்சியை கலைப்பீரா மோடி?

 


ஏற்கனவே கும்பமேளா நடத்தி கொரோனா இரண்டாம் அலையை வேகப்படுத்திய பாஜகவின் உத்தர்கண்ட் அரசு அடுத்த பேரழிவிற்கு அடித்தளம் போடுகிறது.

இது சன் நியூஸ் பரப்பும் வதந்தி என்று சங்கிகள் "ஜஸ்ட் லைக் தட்" திசை திருப்புவார்கள் என்பதால் அந்த மாநில அரசின் இணைய தளத்திற்கே சென்று வந்தேன்.


இதோ நிகழ்ச்சி நிரலையே போட்டு விட்டார்கள். 

பொறுப்பு என்பது கொஞ்சமும் இல்லாத உங்கள் கட்சியின் ஆட்சியை என்ன செய்யப் போகிறீர்கள் மோடி?

ஆட்சியைக் கலைப்பீர்களா?

அல்லது

நீங்களும் அங்கே சென்று மாறு வேடப் போட்டி போல வித்தியாச உடை அணிந்து போட்டோ ஷூட் நடத்துவீர்களா?

இரண்டாவதுக்கான வாய்ப்பே அதிகம்.

உங்கள் பொறுப்புணர்வுதானே உங்கள் கட்சி முதல்வர்களுக்கும் இருக்கும்.

Wednesday, April 28, 2021

பொதுத்துறை பணமே! மோடியின் முகமே!

 



அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் கொரோனா விழிப்புணர்வு பேனர்களை வைக்க வேண்டும் என்று மத்தியரசு அறிவுறுத்தி உள்ளது. அதற்கான மாதிரி பேனர்களையும் அவர்களே வடிவமைத்து அனுப்பி உள்ளனர்.

 அனைத்திலும் முகமுடி அணிந்த மோடியின் புகைப்படம் இருக்கிறது.

 “பொதுத்துறை நிறுவனங்கள் இறப்பதற்காகவே உருவானது, யாருக்கோ செல்லப்பிள்ளை என்பதால் நாங்கள் வளர்க்க முடியுமா” என்று சொன்னவர் மோடி.

 பொதுத்துறை நிறுவனங்கள் ஒரு சுமை என்று சொன்னவர் நிர்மலா அம்மையார்.

 தடுப்பூசி தயாரிப்புக்கு பொதுத்துறை நிறுவனங்களை பயன்படுத்த வேண்டும் என்ற குரலை உதாசீனம் செய்பவர்கள் இவர்கள்.

 ஆனால் இவர்களுக்கு ஓசி விளம்பரம் செய்ய மட்டும் பொதுத்துறை நிறுவனங்கள் வேண்டுமா?

 அம்பானி, அதானியிடம் போய் சொல்லுங்களேன். உதை விழும். அவர்களுக்கு தேவை என்றால் மட்டும் பயன்படுத்திக் கொள்வார்களே தவிர உங்களின் தேவைக்கு அவர்கள் எதுவும் செய்ய மாட்டார்கள்.

 பிகு: இந்த பேனர்கள் குறித்து நாங்கள் பேசுகையில் எங்கள் பொதுச்செயலாளர் தோழர் குணாளன் ஒரு கேள்வி எழுப்பினார். தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ்களில் மோடியின் புகைப்படம் அச்சடித்துத் தருகிறார்கள். கொரோனா காரணமாக இறந்து போகின்றவர்களுக்கு தரும் இறப்புச் சான்றிதழிலும் மோடியின் புகைப்படம் போட்டு அச்சடித்து தருவார்களா?

 மிகச் சரியான கேள்வி இது. மோடி வகையறாக்கள் ஆவன செய்வார்களா?

 பிகு 2 : பேனரில் இருந்த மோடி புகைப்படத்தை, நாமும் எதற்கு ஓசி விளம்பரம் தர வேண்டும் என்பதால் மறைத்து விட்டேன்.

கொள்ளி வைத்த பெண் கொலை

 சமீபத்தில் எழுத்தாளர் வித்யா சுப்ரமணியன் அவர்களின் பதிவை பகிர்ந்து கொண்டிருந்தேன். தந்தைக்கு கொள்ளி வைக்க    அனுமதிக்கப் படாமல் அவர் மகள் அவமானப்படுத்தப்பட்டது குறித்த பதிவு அது.

அப்போதுதான் ஆறு வருடங்களுக்கு முன்பு இதே ஏப்ரல் மாதம் எழுதிய பதிவு நினைவுக்கு வந்து அதனை பகிர்ந்து கொண்டுள்ளேன்.

 

 

Monday, April 6, 2015

தாய்க்கு கொள்ளி வைத்த மகள் கொலை

 

 


 

இந்த அராஜகம் நிகழ்ந்தது சட்டிஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள மொஹ்டா என்ற கிராமத்தில்.

 சூர்ஜூபாய் என்ற 85 வயது மூதாட்டியை மகன் சந்தோஷ் இரண்டு வருடங்கள் முன்பே வீட்டை விட்டு விரட்டி விட்டான். அந்த மூதாட்டிக்கு அடைக்கலம் கொடுத்த மகள் கீதா ப்ரஹலாத்தே தான் இறந்த பின்பு தனக்கு இறுதிக்கடன் செய்ய வேண்டும் என்பது அந்த மூதாட்டியின் விருப்பம்.

 அது போலவே சூர்ஜுபாய் இறந்ததும் அவருக்கு கொள்ளி வைக்கிறார் கீதா ப்ரஹலாத். அதனால் கடுப்பாகிற சந்தோஷும் அவன் மகன் பியூஷும்  கீதாவை கொன்று விடுகிறார்கள்.

 என்ன ஒரு கொடுமையான செயல் இது?

 தன் பொறுப்பை நிறைவேற்ற முன்வராத சந்தோஷிற்கு கொள்ளி வைக்கும் உரிமை மட்டும் எங்கிருந்து வருகிறது?

 இன்று உலகமே அப்படித்தான் சென்று கொண்டிருக்கிறது.

 இதிலே கீதா ப்ரஹலாத் அந்த கிராமத்து தலைவராக சமீபத்தில்தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பெண்கள் ஓரடி முன்னே நகர்ந்தால் ஈரடி பின்னே இழுக்கத்தான் எத்தனை சதிகள் நடக்கிறது! அவற்றில் இதுவும் ஒன்று. 

 ஆண்டுகள் உருண்டோடினாலும் நிலைமையில் பெரிய மாறுதல் இல்லை. மத்யமர் குழுவின் பின்னூட்டங்கள் அதனை உணர்த்தின. சம்பிரதாயங்கள் என்ற பெயரில் பிற்போக்கு சிந்தனையை கெட்டிப் படுத்தவே சங்கிகள் முயல்கின்றனர்.

 அதே நேரம் சம்பிரதாயக் காவலர்கள் எப்படி செயல்படுகின்றனர் என்பதற்கு எனக்கு இரண்டு மயான அனுபவங்கள் இருக்கின்றன. அவற்றை நாளை பகிர்ந்து கொள்கிறேன்.

Tuesday, April 27, 2021

கோயம்பேடுலயே இல்லையே ஆஜானே!

 


ஞாயிறு லாக் டவுனின் போதுதான் ஆனந்த விகடனில் தோழர் இரா.முருகவேள் அவர்களின் பேட்டியை படித்தேன்.

 அதில் ஆஜான் சம்பந்தப்பட்ட கேள்வியும் பதிலும் கீழே.

 


“ஆஜான் மாதிரி தரிசனக் கனிகளை பிழிந்து ஜூஸ் போட எனக்கு தெரியாது” என்று தோழர் முருகவேள் சொல்கிறார்.

அது என்ன தரிசனக் கனி  என்று கோயம்பேடு மார்க்கெட்டில் தேடினால் அப்படி ஒன்று கிடையாது என்று சொல்கிறார்கள்.

 ஆஜானே, நீங்களாவது சொல்லுங்க,

 தரிசனக் கனி எங்கே கிடைக்கும்?

ட்விட்டர் நீக்கம் - உண்மை என்பதால்தான்

 கொரோனா பாதிப்பு, ஆக்சிஜன் பற்றாக்குறை, மயான ஓலங்கள் குறித்த பல ட்விட்டர் பதிவுகளை மத்தியரசு நீக்க வைத்துள்ளது.

 ஏன்?

அவை வதந்தியா இல்லை தவறான தகவல்களா?

 


பல ஆண்டுகளுக்கு முன்பாக ஆர்.கே.லட்சுமண் கார்ட்டூனாகவே போட்டு விட்டார். “வதந்தியைப் பரப்பியதற்காக நீ கைது செய்யப்படவில்லை. அவை உண்மை என்பதற்காகவேதான்”

சரியான கேள்வி - பதில்????

 


கார்ப்பரேட்டுகளின் லாபத்தை பெருக்குவதையே இலட்சியமாகக் கொண்டுள்ள ஆட்சியாளர்களோ, அவர்களின் குரலை எதிரொலிப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ள நீதி மன்றம் உள்ளிட்ட அமைப்புக்களோ, மோடி சொன்னா சரிதான் என்று ஜால்ரா தட்டும் ஆட்டு மந்தைக் கூட்டமோ, இந்த நியாயமான கேள்விக்கு பதில் தராது என்பது மட்டுமல்ல, காதிலேயே விழாதது போல கடந்து போய் விடும். 

Monday, April 26, 2021

ஸ்டெரிலைட் - வஞ்சத்தில் வீழ்ந்தார்களா?

 


ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெரிலைட் ஆலையை திறக்கலாமா என்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் "ஆக்சிஜன் தயாரிக்க மட்டும் அனுமதிக்கலாம்" என்ற எதிர்க்கட்சிகள் நிலை ஸ்டெரிலைட் விரித்த வஞ்சக வலைக்கு இரையாகி விட்டார்களோ என்றுதான் கவலை வருகிறது.

நாளை தமிழகத்தில் நிலைமை மோசமானால் பழி வந்து சேருமோ என்ற அச்சத்தின் வெளிப்பாடு.

மார்க்சிஸ்ட் கட்சி சொன்னது போல குறைந்த பட்சம் ஆலையை கையகப் படுத்தி அரசின் கட்டுப்பாட்டுக்குள் வருவதையாவது உறுதி செய்து கொள்ளுங்கள்.


ஸ்டெரிலைட் -சூழ்ச்சிக்கு இரையாகாதீர்

 


பெருந்தொற்று சூழலையும் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டையும் பயன்படுத்திக் கொண்டு தன் விஷத் தொழிற்சாலையை மீண்டும் திறக்க தயாராகிறது வேதாந்தா நிறுவனம்.

வாங்கிய பணத்துக்கு விசுவாசமாக மத்தியரசு செயல்படுகிறது. அதன் கடைக்கண் பார்வை படியே செயல்படும் எடுபிடி அரசு இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியுள்ளது. எத்தனையோ தலை போகிற பிரச்சினைகள் போதெல்லாம் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை உதாசீனம் செய்த எடுபிடி இன்று அவசரம் காட்டுவது ஏன்?

ஏன் ஸ்டெரிலைட்டை திறக்கக் கூடாது?

ஆபத்தான நச்சுப் பொருட்கள் தயாரித்த தொழிற்சாலைதான் அது. ஆக்ஸிஜன் தயாரித்த தொழிற்சாலை அல்ல. அதன் உபகரணங்கள் உயிர் குடிக்க உதவுமே தவிர, உயிர் காக்க அல்ல.

விசாகப்பட்டிணத்தில் முதல் ஊரடங்கு காலத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை நினைவு படுத்திக் கொள்ளவும். 

மூடிக்கிடந்த ஒரு ரசாயன ஆலையை பராமரிப்புக்காக என்று திறந்த போது பல நாட்கள் பயன்படாத ஒரு ரசாயன வாயு கசிந்து சுமார் பத்து பேர் இறந்தார்கள். பல்லாயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். அப்படிப்பட்ட ஒரு நிலை தூத்துக்குடிக்கு வர வேண்டுமா?

கூடாரத்தில் நுழைந்த ஒட்டகம் போல ஆக்ஸிஜன் தயாரிக்க என்று உள்ளே நுழையும் ஸ்டெரிலைட் இதர உற்பத்திகளை தொடங்க மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?

விதிகளை எல்லாம் மிதிப்பதில் ஸ்டெரிலைட்டின் கடந்த காலம் ஊரறிந்த ரகசியம்.

தமிழக அரசே, எப்படிப்பட்ட அழுத்தம் எங்கிருந்து வந்தாலும் ஸ்டெரிலைட்டை திறக்காதே! மேலும் வாக்குப் பதிவு முடிந்து இன்னும் சில தினங்களில் வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ளதால் உனக்கு அதற்கான அதிகாரம் கிடையாது.

ஸ்டெரிலைட்டை மூடுவதற்கான போராட்டத்தில் உயிர் நீத்த மக்களின் தியாகத்தை அர்த்தமிழக்கச் செய்யாதே!


Sunday, April 25, 2021

லாக் டவுன் மாலன் ஸ்பெஷல்

 


லாக் டவுனை முன்னிட்டு வீட்டு புத்தக அலமாரியில் படித்த புத்தகங்களை அடுக்கி வைக்கும் முன்பு புரட்டியதில் கண்ணில் இரண்டு விஷயங்கள் பட்டது.

அதில் ஒன்று மாலன் ஸ்பெஷல்.

அண்ணன் குமுதத்தில் எழுதியதைப் படியுங்கள்.



மிஸ்டர் மாலன், மோடியே ஒரு தரங்கெட்ட, ஆபாசப் பேச்சாளர்தானய்யா! இதில அவருக்கு அறச்சீற்றம் வந்ததுன்னு எரிச்சல் வர மாதிரி காமெடி செய்யறீங்களே!

வாங்கின துட்டுக்கு விசுவாசமா எழுதறீர்யா!

பிகு : லாக்டவுன் ஸ்பெஷல் அடுத்தது யாருக்கு என்று நான் தனியாக சொல்ல வேண்டுமா என்ன?

யெஸ்

நாரோயில் ஆஜான் தான்


போலி முகநூல் கணக்கு -எச்சரிக்கை

 




போன மாதம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் எஸ்.ஏ.பெருமாள் அவர்களின் முக நூல் கணக்கைப் போல ஒரு போலி கணக்கு துவக்கப்பட்டு அந்த கணக்கிலிருந்து சிலருக்கு பண உதவி வேண்டும் என்று இன் பாக்ஸில் மெசேஜ் போயுள்ளது. கிட்டத்தட்ட அதே நேரத்தில் எங்கள் அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு அலுவலர் பெயரிலும் ஒரு போலி கணக்கு துவக்கப்பட்டு பணம் வேண்டும் என்ற செய்தி சென்றது.

இரண்டு நாட்களுக்கு முன்பாக எங்கள் கோட்டத்தின் உயரதிகாரி ஒருவர் பெயரில் ஒரு நட்பழைப்பு வந்தது. அவருக்குத்தான் ஏற்கனவே முகநூல் கணக்கு உள்ளதே! இப்போது ஏன் புதிதாக? பழைய கணக்கின் பாஸ்வேர்ட் மறந்திருக்குமா அல்லது போலிக் கணக்கா? என்று பேசிக் கொண்டோம். நேரில் பார்க்கும் போது கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.  அதற்கெல்லாம் அவசியமில்லாமல் என் பெயரில் யாராவது பணம் கேட்டால் தர வேண்டாம் என்று அவரே தெளிவாக அவரது ஒரிஜினல் முகநூல் கணக்கிலிருந்து விளக்கமளித்து விட்டார்.

இப்போது இதுதான் புதிய சதுரங்க வேட்டை போல் உள்ளது.

சரி முக நூல் நிர்வாகம் என்ன செய்கிறது?

மேலே குறிப்பிட்ட மூன்று சம்பவங்களிலும் அவை போலிக் கணக்கு என்று ரிப்போர்ட் செய்தேன். 


அவர்கள் கம்யூனிட்டி ஸ்டாண்டர்ட் படி அது சரியான அக்கவுண்ட்தான். வேண்டுமானால் நீ ப்ளாக் செய்து கொள் என்று சொல்லி விட்டது முகநூல். என்னை எப்படி அனாமதேயம் என்று சொன்னது என்பதும் புரியவில்லை

ஆகவே போலிக் கணக்குகள் அதிகமாக உலா வருகிறது. எச்சரிக்கையாக இருப்பீர்.

என்னிடமிருந்து ஏதாவது புதிய முக நூல் கணக்கின் பெயரால் நட்பழைப்பு வந்தால் ஏற்க வேண்டாம்.

பொதுவாகவே நான் யாரிடமும் எனக்காக பணம் கேட்க மாட்டேன். நான் சார்ந்த இயக்கத்திற்காக கேட்டால் கூட நேரடியாக கேட்பேனே தவிர, நிச்சயமாக இன் பாக்ஸ் மூலமாக கேட்க மாட்டேன். அப்படி கேட்டால் அது போலி என்று உணர்க. பணம் எதுவும் அனுப்ப வேண்டாம். 

Saturday, April 24, 2021

என்னவளே, அடி என்னவளே

 


காதலன் திரைப்படத்தின் "என்னவளே, அடி என்னவளே" பாடலின் வயலின் வடிவம் என் மகனின் கை வண்ணத்தில்

யூட்யூப் இணைப்பு இங்கே

பாருங்கள். உங்கள் கருத்தை கூறுங்கள்

சங்கிகள் எனும் மனித குல எதிரிகள்.

 


தோழர் சீதாராம் யெச்சூரி அவர்களுக்கு இரங்கல் செய்தியை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடலாம் என்று சென்ற போது பார்த்த நான்கு பின்னூட்டங்களை மட்டும் கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

 


மேற்கு வங்கத் தேர்தலில் அனுதாப ஓட்டு வாங்குவதற்காக இந்த செய்தியை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டாயா என்று கேட்கும் இந்த நபர் ஒரு வேளை ஏதோ அரசியல் சாரா அரசியல் கோஷ்டியோ என முதலில் நினைத்தேன். மோடி, அமித்து, ரவிசங்கர் பிரசாத், நட்டா உள்ளிட்ட சீனியர் சங்கிகளை பின்பற்றும் சங்கி என்பது அந்தாளின் ட்விட்டர் பக்கத்திற்கு போன பின்பே புரிந்தது.

 மற்றவர்களும் லேசுப்பட்டவர்கள் அல்ல என்பதை அவர்களின் ட்வீட்டுகளை பார்த்தாலே தெரியும்.

 




ஒரு மரணத்தின் போது கூட  இவர்கள் அநாகரீகமாக நடந்து கொள்கிறார்கள் என்பது எனக்கு அதிர்ச்சியோ ஆச்சர்யமோ இல்லை.

 

மகாத்மா காந்தியை திட்டம் போட்டு கொன்று விட்டு இனிப்பு கொடுத்து கொண்டாடிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வளர்ப்புக்கள் வேறெப்படி இருப்பார்கள்!

இன்றுதான் பாதுகாப்பு என்பதால் !!!!

 


 உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி போப்டே இன்று பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார். அவரது சில 'சாதனைகளை' மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் ஆங்க்கில இந்துவின் நடுப்பக்கக் கட்டுரையில் பட்டியலிட்டிருக்கிறார். போப்டே நவம்பர் 2019இல் பதவியேற்றார்.

1. காஷ்மீர் வழக்கு: காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தினை ரத்து செய்த மத்திய அரசின் முடிவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட 100க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரிக்கப் படாமல் இருக்கின்றன.

2. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்தும், சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள், அவற்றை அடக்குவதற்காக ஏவப்பட்ட அரச வன்முறை தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. ஹாத்ராஸ் சம்பவத்தின் போது கைது செய்யப் பட்ட கேரளப் பத்திரிக்கையாளரின் ஹேபியஸ் கார்ப்பஸ் மனு விசாரணை மீண்டும் மீண்டும் தள்ளிப் போடப் பட்டுக் கொண்டிருக்கிறது.

3. அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நிதியை பத்திரங்கள் மூலம் வழங்கலாம் என நிறைவேற்றப் பட்ட சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்து விட்டார். ஏற்கெனவே அத்தகைய பத்திரங்கள் இருப்பதால் பிஜேபி அரசு கொண்டு வந்த புதிய சட்டத் திருத்தத்தை தடை செய்ய வேண்டியதில்லை என்று சொல்லி விட்டார்.

4. ரோஹிங்க்யா அகதிகளுக்குப் பாதுகாப்பு கோரும் மனு கிடப்பில் போடப்பட்டுள்ளது.

5. ஹேபியஸ் கார்பஸ் எனப்படும் ஆட்கொணர்வு மனுக்கள் பல மாதங்களுக்கு விசாரிக்கப் படாமல் நிராகரிக்கப் பட்டுவிட்டன. அல்லது உயர் நீதிமன்றங்களிடம் தள்ளி விடப்பட்டனர்.

6. கோவிட் காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளிகளுக்கு நிவாரணம் அளிக்க அரசுக்கு உத்தரவிட முடியாது என்று கூறிவிட்டார். 'அவர்களுக்கு உணவு கொடுக்கும் பட்சத்தில் எதற்கு பணம் கொடுக்க வேண்டும்?" என்றும் சொல்லி விட்டார்.

7. டெல்லியின் எல்லையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் நடக்கும் போராட்டம் தொடர்பான வழக்கில், பிரச்சினைகளை விசாரித்து மத்தியஸ்தம் செய்ய ஒரு குழுவை அமைத்தார். வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாகப் பேசிய வல்லுனர்களை அதில் உறுப்பினராக்கினார்.

8. நீதிபதிகள் நியமனஙக்ளும் தேக்க நிலையில் இருக்கிறது.
மிக்க நன்றி நியாயம்மாரே....

ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் நேற்றே பகிர்ந்து கொண்ட பதிவு.

 பணியில் இருக்கும் நீதிபதியை விமர்சித்த காரணத்திற்காக அவதூறு வழக்கு பாய்ந்து ஒரு ரூபாய் அபராதம் கட்டுவதிலிருந்து தப்பிக்கலாமே என்ற எச்சரிக்கை உணர்வுதான் இன்று பகிர்ந்து கொள்ள  காரணம்.

 பிரஷாந்த் பூஷண் பட்டியலைத் தாண்டி எனக்கு வேறு சிலவும் நினைவுக்கு வந்தது. பூரி ஜகன்னாதர் கோயில் தேர்த்திருவிழாவிற்கு  அனுமதி மறுத்த போது “இந்த பெருந்தொற்று காலத்தில் அனுமதி கொடுத்து மக்களை அங்கே வர வைத்தால் ஜகன்னாதரே என்னை மன்னிக்க மாட்டார்” என்று சொன்னவர் இரண்டு நாட்களிலேயே தீர்ப்பை மாற்றி விட்டு எங்களுக்கு மிரட்டல் வருகிறது என்றும் சொன்னார்.

 பாலியல் கொடுமை புரிந்த ஒருவனை நீ அந்த பெண்ணை திருமணம் செய்ய சம்மதித்தால் உன் தண்டனையை மாற்றுவதைப் பற்றி பரிசீலிக்கிறேன் என்று உச்ச நீதிமன்றத்தை ஆலமரத்தடி சொம்பு பஞ்சாயத்தாக மாற்றியவர்.

 இவருக்கு அடுத்த நிலையில் உள்ள நீதிபதி மீது ஆந்திர முதல்வர் ஜெகன் ரெட்டி கொடுத்த புகார் பட்டியலை ஜஸ்ட் லைக் தட் நிராகரித்து அவர் இன்று தலைமை நீதிபதியாக வழி வகுத்தவர்.

 இதோ நேற்று கூட வேதாந்தாவின் பிரச்சாரகராக ஸ்டெரிலைட்டை திறக்கச் சொல்லி சாமி ஆடியுள்ளார்.

கடந்த வருடம் ஜனவரியில் விசாகப்பட்டிணத்தில் நடைபெற்ற  எங்கள் அகில இந்திய மாநாட்டை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு கோபால கௌடா துவக்கி வைத்தார். ஜம்மு காஷ்மீர் மற்றும் குடியுரிமை மசோதா தொடர்பான வழக்குகளை விசாரிக்காமல் காலம் தாழ்த்தும் போக்கை கண்டித்த அவர் “இப்போதைய உச்ச நீதிமன்றத்தில் நான் அங்கம் வகிக்கவில்லை என்று மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்” என்று குறிப்பிட்டார்.

 எவ்வளவு வலி மிகுந்த வார்த்தைகள்!

 இப்படி பேச வைத்ததும் நம்ம பொப்டேதான்.

 ஆனாலும் சார், பாஜக பிரமுகரின் விலை உயர்ந்த பிரம்மாண்டமான பைக்கில் நீங்கள் கம்பீரமாக அமர்ந்த காட்சி சூப்பர்.

 சரி, உங்க அடுத்த போஸ்டிங் என்ன?

 கவர்னரா, வெளி நாட்டு தூதரா?  எம்.பி யா?

 

Friday, April 23, 2021

ரஜினியின் திடீர் பல்டி

 


“தூத்துக்குடி  ஸ்டெரிலைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்தனர். அவர்கள்தான் பஸ்ஸை கொளுத்தி கலவரத்தை தூண்டினார்கள். அதனால்தான் துப்பாக்கிச் சூடு நடந்தது”

 இந்த வீர வசனத்தை பேசி பரபரப்பை உண்டாக்கிய ரஜினிகாந்த், விசாரணைக் கமிஷனுக்கு வர வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியதுமே பயந்து பம்மி பதுங்கி விட்டார்.

 நான் வந்தால் ரசிகர்கள் திரண்டு சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும் என்றும் கொரோனாவை காரணம்  காட்டியும் விசாரணைக்குச் செல்லாமல் தப்பித்துக் கொண்டிருந்தார்.

 “தூத்துக்குடி ஸ்டெரிலைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுறுவி விட்டனர்” என்று நான் சொன்னதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று ரஜினி இப்போது விசாரணைக் கமிஷனுக்கு பிரமாண வாக்குமூலம் அனுப்பி உள்ளார்.

 எந்த ஆதாரமும் இல்லாத போது போராட்டக்காரர்களை கொச்சைப் படுத்தி பேச வேண்டிய தேவை என்ன?

 ரஜினி யாரோ எழுதிக் கொடுத்த வசனத்தை பேசுவதை சினிமாவோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால் இப்படித்தான் அசிங்கப்பட வேண்டும்.

 அதிலும் அந்த விஷ மூர்த்தி பேச்சை கேட்டால் மேலே உள்ள படத்தில் இருப்பதுபோல  ரத்தக் களறி ஆகி விடும்.

இனிமேலாவது கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள். 

 

வாசிப்பு ராட்சனின் வசீகர வார்த்தைகள்

 


வாசிப்பை நேசிக்கிற அனைவருக்கும் உலக புத்தக தின வாழ்த்துக்கள். இன்று காலையில் நான் படித்த ஒரு முகநூல் பதிவு உடனடியாக என்னை பகிர்ந்து கொள்ள தூண்டியது.

முதலில் பதிவை படியுங்கள்.

எழுதியது யார் என்பதை பிறகு சொல்கிறேன்.

பிரான்சிஸ் டேயும், ஆண்ட்ரூ கோகனும் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் சார்பாக சென்னப்ப நாயக்கரிடம் 1639ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி சென்னப் பட்டினத்தை வாங்கியபோது, அந்தப் பத்திரத்தில் சாட்சிக் கையெழுத்திட்டவன் நானல்ல.

திருவாவடுதுறை சைவ ஆதீனத்தில் தமிழ் படித்துக் கொண்டிருந்த உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் குமாரர் வேங்கடராமனுக்கு அவனது குருநாதர் மஹாவித்வான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சுவாமிநாதன் என்று பெயரை மாற்றிய போது, அவருக்கு அருகில் விசிறியால் வீசிக் கொண்டிருந்த சிஷ்யப் பிள்ளை நானாக இருந்திருக்கவில்லை.

1893 ஜீன் மாதம் ஏழாம் தேதி இரவு, பெரிடோரியாவிற்குப் போய்க் கொண்டிருந்த ரயிலின் முதல் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்த அந்த குஜராத்தி வழக்கறிஞரை இனவெறி பயணச்சீட்டுப் பரிசோதகன் பீட்டர்மார்டிஸ்பர்க் ஸ்டேஷனில் ரயிலிலிருந்து தள்ளி விட்டபோது, உதவிக்கு ஓடிவந்த கறுப்பினச் சிறுவனாக நான் இருக்க வாய்ப்பே இல்லை.

இந்தியாவில் பல்லாண்டுகள் பயணித்தபின், கிபி 645ல் 657 அரிய புத்தகங்களை 520 பெட்டிகளில் வைத்து, அவற்றை 20 குதிரைகளில் ஏற்றிக் கொண்டு யுவாங் சுவாங் சீனநாட்டிற்குத் திரும்பிய போது, அந்தக் குதிரையோட்டிகளில் ஒருவனாக நான் இருந்திருக்க முடியுமா?

கொலம்பஸின் கடற்சாகசப் பயணத்திற்கு ஸ்பெயின் தேசத்து அரசர் ஃபெர்ட்டினாண்டும், அரசி இஸபெல்லாவும் நிதியுதவி அளிப்பதற்கான சாசனத்தைத் தயாரித்த எழுத்தன் நானாக எப்படி இருக்க முடியும்?

ஷாஜஹானின் மூத்த புதல்வன் தாரா ஷிகோ பெரும் பண்டிதர்களான ஜகந்நாத மிஸ்ரா, பன்வாலிதாஸ், கவீந்தாச்சார்யா ஆகியோருடன் விவாதித்து. பகவத்கீதையையும், உபநிஷதங்களையும் பாரசீக மொழியில் மொழிபெயர்த்த போது, அவருக்கு அருகில் இருந்து மதுவை ஊற்றிக் கொடுத்த அடிமைப் பெண்ணாக நான் ஒருவேளை இருந்திருப்பேனா?

அலெக்சாண்டர் கிரஹாம் பெல் 1876 மார்ச் மாதம் 10ம் தேதி தான் புதிதாய் கண்டுபிடித்திருந்த தொலைபேசி என்ற கருவியின் வழியாக, ‘மிஸ்டர் வாட்சன், இங்கே வாருங்கள், உங்களைச் சந்திக்க விரும்புகிறேன்,‘ என்றதையும், வாட்சன் அதே கருவியில் ‘இதோ வந்துவிட்டேன்‘ என்று பதில் கூறியதையும் யாருமே நேரில் பார்த்திருக்கவில்லைதான்.

1904ம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணியின் சிவில் பொறியாளர் சி.ஓ.ஓர்டெல் காசிக்கு அருகே உள்ள சாரநாத்தில் அகழ்வாராய்ச்சி செய்த போது கிடைத்த நான்கு சிங்கங்கள் கொண்ட அசோகச் சின்னம் பிற்காலத்தில் சுதந்திர இந்தியாவின் தேசியச் சின்னமாக ஆகப் போகிறது என்பதை அறியாமலேயே அவர் அதை பத்திரமாகப் பாதுகாத்த போது, அந்த நினைவுச் சின்னத்தைச் சுமந்து சென்ற கூலியாட்களில் ஒருவனா நான்? இருக்க முடியாது.

சிஸ்டைன் தேவாலயத்தின் விதானங்களில் ஓவியங்கள் வரைய போப்பாண்டவர் இரண்டாம் ஜீலியஸின் உத்தரவின் பேரில் வேலையை ஆரம்பித்த மைக்கேலேஞ்சலோ செலவிற்குப் பணம் கேட்டு, கைகட்டி நிற்க, சர்ச்சிற்கு வாங்கித் தான் பழக்கம், கொடுத்துப் பழக்கமில்லையே என்று பொக்கிஷதார் ஏளனம் பேசியபோது, தலைகுனிந்தவாறு சர்ச் தரையைக் கூட்டிக்கொண்டிருந்த துப்புரவுத் தொழிலாளி நானல்ல.

நீருமா என்னைக் கைவிட்டுப் போய்விட எண்ணுகிறீர்? என்கிறாள் குந்தவை. பழையாறையின் சிறையில் அடைபட்டிருக்கும் வந்தியத்தேவன், நான் எப்படித் தங்களைக் கைவிட முடியும்? இராஜாதி ராஜாக்கள் தங்களுடைய மணிப் பொற்கரத்தைக் கைப்பற்றத் தவம் கிடக்கிறார்கள். நானோ குற்றவேல் செய்ய வந்தவன்….என்கிறான். இளையபிராட்டி இப்போது தன்னுடைய திருக்கரத்தை நீட்டினாள். இது கனவா, நனவா எனற தயக்கத்துடன் வந்தியத்தேவன் அந்த மலர்க்கரத்தைத் தன் இரு கைகளாலும் பற்றிக் கண்களில் ஒற்றிக் கொண்டான். அப்போது அதைப் பார்க்காதது போல முகத்தைத் திருப்பிக் கொண்ட காவலாளி சத்தியமாக நானல்லன்.

1493 செப்டம்பர் 25ம் தேதி, நீண்ட யோசனைக்குப் பின் போப் ஆறாம் அலெக்ஸாண்டர் உலக வரைபடத்தில் அட்லாண்டிக்கிற்கு குறுக்கே வடக்கு தெற்காக ஒரு கோட்டைக் கிழித்து, உலகை போர்ச்சுக்கலுக்கும், ஸ்பெயினுக்கும் பங்கிட்டுத் தந்த வேளையில் அவரருகே நின்றிருந்த மெய்க்காப்பாளனாக நான் இருந்திருக்க முடியுமா என்ன?

பாழடைந்து போன மாமல்லபுரத்தின் அரைகுறை சிற்பங்களுக்கு நடுவில், அந்த நள்ளிரவில், தீவட்டியின் மங்கலான ஒளியில், அந்த சிற்ப நகரம் பற்றி, ஆயனச் சிற்பி பற்றி, சிவகாமியின் நடனம் பற்றி, அவள் அழகு பற்றி, அவள் மீதான தனது காதல் பற்றி, புலிகேசியின் படையெடுப்பால் அத்தனையும் தகர்ந்தது பற்றி துயரத்தோடு சிவனடியார் வேடத்தில் இருந்த நரசிம்ம பல்லவன் சொன்ன வரலாற்றை சோழ இளவரசன் விக்கிரமனையும், அவனது குதிரையையும் தவிர வேறு எவரும் கேட்டிருக்க முடியாது.

இவை மட்டுமா? இன்னும் எத்தனை எத்தனையோ, நான் நேரில் பார்த்திருக்க முடியாத சம்பவங்கள், …வரலாறுகள்…. டைனாஸோர்களின் காலத்தில் நான் பிறந்திருக்கவில்லை. பெர்லின் சுவர் கட்டப்பட்ட போதும், பின்னர் தகர்க்கப்பட்ட போதும், புத்தபிரானுக்கு சுஜாதை முதன்முதலாக பிட்ஷை அளித்த போதும், மார்க்ஸ் ஜென்னி இருவரும் உயிருக்குயிராய்க் காதலித்த போதும், மார்க்கோ போலோ மதுரையின் வீதிகளில் திரிந்த போதும், பென்னி குக் பெரியார் அணையைக் கட்டியபோதும் கூட நான் இருந்திருக்கவில்லை. ஆனால் இவையனைத்தும் நேரில் பார்த்ததைப் போல் நான் அறிவேன்.

காலம் ஒரு நதி…. புத்தகங்கள் அதில் படகுகள். பல படகுகள் அதில் பயணித்தாலும் நதியின் வேகம் தாங்காது பல நொறுங்கிப் போகின்றன. ஒருசில, மிக ஒருசில மட்டுமே காலத்தின் வேகத்தைத் தாங்கி, நம்மை ஆசீர்வதிக்க. இன்று நம் காலம் வரை தொடர்ந்து பயணித்துள்ளன.

அப்படிப் பயணித்து வந்த புத்தகங்கள் எனக்குக் காட்டிய வரலாறுகள், கதைகள், புதிய வெளிச்சங்கள்தான் மேலே கூறப்பட்ட அனைத்தும். அவை இல்லையெனில் நான் இல்லை. எங்கெங்கோ நடந்த சம்பவங்கள், நாம் பார்த்தறியாத மனிதர்கள், இடங்கள், கட்டிடங்கள், உண்மை, கற்பனைச் சம்பவங்கள் எல்லாவற்றையும் நமக்கு காட்டித் தருவது புத்தகங்கள்தான்.

அனைவருக்கும் உலக புத்தக தின
வாழ்த்துகள் !

வாசிப்புலகிற்கு உங்களை கை பிடித்து கூட்டிச் செல்லும் இந்த வசீகர எழுத்துக்களுக்குச் சொந்தக் காரர் எழுத்தாளரும் எங்கள் மதுரைக் கோட்டத் தோழருமான தோழர் ச.சுப்பாராவ்.

வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்திய ஒரு முக்கியமான உரையை இங்கே மீள் பதிவு செய்கிறேன். எங்கள் மகத்தான தலைவர் தோழர் சரோஜ் சவுத்ரி அவர்கள் இறுதியாக பங்கேற்ற அகில இந்திய மாநாட்டில் ஆற்றிய உரை. நேரில் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது எனது பாக்கியம்.

தாகூர் பற்றி நான் குறிப்பிட விரும்புகிறேன். அவர் தனது எண்பதாவது பிறந்த நாளின் போது விடுத்த செய்தியை சொல்ல விரும்புகிறேன். அதற்கடுத்த சில மாதங்களில் அவர் இறந்து விட்டார். “ மனிதனின் மீது நம்பிக்கை இழப்பது மிகப்பெரிய பாவம் “ என்கிறார் அவர். எவ்வளவு மகத்தான செய்தி இது! தாகூரால் மட்டுமே இப்படி சொல்ல முடியும். “முறையற்ற வழிகள் மூலம் நீங்கள் செய்கிற செயல்கள் உங்களுக்கு தற்காலிகமாக பயனளிக்கலாம். ஆனால் நீங்கள் தரைமட்டத்திற்குச் சென்று விடுவீர்கள்” என உபனிஷத்திலிருந்து அவர் மேற்கோள் காண்பிக்கிறார். அவர் யாருக்கு ஆதரவாக உள்ளார்? யாரை தட்டி எழுப்புகிறார்?

சுரண்டலுக்கு உட்படுத்தப்பட்ட,  கொடுமைக்குள்ளான மக்களின் குருதியால் ஆதிக்கவாதிகளால், வெற்றி பெற்றவர்களால் சேறாக்கப்பட்ட வரலாற்றின் சாலைக்கு, வரலாற்றுச் சக்கரத்தை எடுத்து வந்த சாமானிய அடிமை மனிதனுக்கு அவர் வேகம் அளிக்கிறார்.  வரலாற்றுச்சக்கரம் முன்னோக்கி எடுத்துச் செல்லப்பட வேண்டும் என அவர் பேசுகிறார். நாகரீக உலகின் அனைத்து வளங்களையும் உருவாக்கியது மனிதன். உலகெங்கும் நாம் பார்க்கிற அனைத்து அற்புதங்களும்  பிரம்மாண்டங்களும் மனிதனின் அபாரமான படைப்புக்கள். அறிவியல், தொழில் நுட்ப முன்னேற்றங்களுக்கு பின்னணியில் இருப்பது மனிதன்தான். தாகூர் இதை நன்கறிந்தவர். அதனால்தான் அவர் சாமானிய மனிதனுக்கு எழுச்சியூட்டுகிறார். ஏனென்றால் நாளைய உலகை வெல்லப்போவது அவன்தான். இதுதான் இன்றைய நிலையும் கூட. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அவர்கள் நம் நம்பிக்கையை கொள்ளையடிக்கப் பார்க்கிறார்கள், நம் எதிர்காலத்தை பறிக்க விழைகிறார்கள். நம்முடைய உறுதியை சிதைக்க எண்ணுகிறார்கள். நம்முடைய வளங்களை சூறையாட நம்மிடமிருந்து அனைதையும் பறிக்கப்பார்க்கிறார்கள். எனவே தோழர்களே, மாநாட்டிலிருந்து நாம் செல்கையில் நம்முடைய உறுதியை தக்க வைக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். எதிர்காலத்தின் மீது நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். நமக்கு எதிரான நடவடிக்கைகள் திட்டமிட்டு செயல்படுத்தப்படுகின்றன. எனவே அனைத்து தோழர்களையும் அதிலும் குறிப்பாக இளைய தோழர்களை, உலகம் எத்திசை வழியில் செல்கிறது என்பதை அறிந்து கொள்ள மேலும் மேலும் படியுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

 
வியட்னாமின் வரலாற்று நாயகரை நான் நினைவு கொள்கிறேன். யார் அவர்?

(அரங்கிலிருந்து ஹோசிமீன் “ என்று குரல்கள்), ஆம் ஹோசிமீன், அவரது பெயர் இன்னும் நினைவில் உள்ளது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. வியட்னாமின் விவசாயிகள் தங்களின் மிக்ச்சாதாரண ஆயுதங்களோடு மிக உயர்தர, நவீன ஆயுதங்களை உடைய அமெரிக்கர்களோடு வாழ்வா- சாவா என்று யுத்தம் நடத்திக் கொண்டிருந்தார்கள். தோழர் ஹோசிமீன் எப்போதெல்லாம் போர் முனைக்கு தனது வீரர்களை சந்திக்க செல்கின்றாரோ, அப்போதெல்லாம் அவர் அவர்கள் மத்தியில் உரையாடுவார். அப்படிப்பட்ட சில உரைகளைப் படித்து நான் ஆச்சரியப்பட்டுள்ளேன்.

அதிகமான படைகளையும் அதி நவீன ஆயுதங்களும் கொண்ட அமெரிக்கப் படையோடு அற்பமான ஆயுதங்களைக் கொண்டு போரிடும் வீரர்கள் மத்தியில் அவர் பேசுவார்.”  தோழர்களே  நாம் மிகவும் நன்றாக போரிடுகின்றோம். இந்த நாடு உங்கள் அனைவரையும் மிகவும் பாராட்டுகின்றது, போற்றுகிறது. ஏனென்றால் நீங்கள் உங்கள் உயிர்களை தியாகம் செய்கின்றீர்கள். இந்த தேசத்தின் சுதந்திரத்திற்காக, ஜனநாயகத்திற்காக நீங்கள் உங்கள் உயிரையே பலி கொடுக்க துணிந்துள்ளீர்கள். எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் படியுங்கள். கடவுளுக்கு அடுத்தபடியாக உங்களிடம் உள்ள மிக முக்கியமான ஆயுதம் புத்தகம்தான்” என்பார்.

அதிகம் படியுங்கள். மனித குல வரலாறு எப்படி முன்னேறுகிறது என்பதை படியுங்கள். தயவு செய்து மேலும் மேலும் படியுங்கள்.





Thursday, April 22, 2021

துணை நிற்போம் தோழா

 



இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் பொதுச்செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரி அவர்களின் மூத்த மகன் ஆசிஷ் யெச்சூரி இன்று காலை கொரோனாவில் பலியான செய்தி மிகவும் துயரமளித்தது.

 எப்போதும் கம்பீரமாகவும் உற்சாகமாகவும் புன் முறுவலோடும் காட்சியளிக்கும் தோழர் யெச்சூரியை இடிந்து போய் அமர்ந்திருந்த புகைப்படம் அந்த துயரத்தை அதிகப்படுத்தியது.

 


எப்படிப்பட்ட வலியை அவர் தாங்கிக் கொண்டிருந்த நேரத்தில் அவரை இத்துயரம் தாக்கியுள்ளது என்பதை மதுரை மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அவர்களின் பதிவு உணர்த்தி உருவாக்கிய சோகத்தை எழுத போதுமான வார்த்தைகள் என்னிடம் இல்லை.

 எங்கள் துயரங்கள் சொல்லிமாளாதவை!

சட்டமன்றத் தேர்தல் பணிகளுக்காக மேற்குவங்கம் சென்றபோது ஏற்பட்ட சிறுவிபத்தால் தோழர் யெச்சூரிக்கு முதுக்குத்தண்டில் அடிபட்டது. அதற்காகத் தொடர்ந்து சிகிச்சைபெற்று ஓய்வில் இருக்க வேண்டியது அவசியமாகியது.

ஆனால் அகில இந்தியப் பொதுச்செயலாளர் என்ற முறையில் ஐந்து மாநில சட்டமன்றப்பணிகளுக்காகத் தொடர்பயணத்தில் இருக்க வேண்டிய தேவையிருந்தது. ஒரு வார ஓய்வுக்குப்பின் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தார்.

அடுத்த வாரம் தமிழகத்தில் கோவை, திருப்பூர், சேலம் ஆகிய இடங்களில் பிரச்சாரத்தை முடித்து, சென்னைக்கு வந்து கட்சியின் மாநிலக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். கூட்டத்தினூடேயே பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்றுவந்தார்.

கூட்டம் முடிந்ததும் டில்லி புறப்பட்டார். சென்னையிலிருந்து டில்லிக்குச் சென்ற விமானப்பயணத்தில் தோழர் யெச்சூரியுடன் நானும் சென்றேன்.

அவரால், தான் கொண்டுவந்த சூட்கேஸைத் தூக்கி மேலே வைக்க முடியவில்லை. இரண்டு வரிசைக்கு அப்பால் இருந்த நான் உடனே வந்து உதவிசெய்தேன். அவருக்கு அருகில் இருந்த பயணியிடம் பேசி, எனது இருக்கைக்கு மாற்றி உட்கார்ச்சொல்லி நான் அவர் அருகில் உட்கார்ந்துகொண்டேன்.

விமானம் ஓடுபாதையில் ஓடத்தொடங்கிய போது அந்த அதிர்வால் முதுகுத்தண்டில் ஏற்படும் வலிதாங்க முடியாமல் மனிதர் துடித்துப் போனார். அப்பொழுதுதான் அவரது முதுகுத்தண்டில் போடப்பட்டிருந்த கட்டினை தொட்டுப்பார்த்தேன்.

அதற்குப்பின் இரண்டரை மணிநேரப் பயணம். வலிபொறுக்க முடியாமல் அவரையும் மீறி முனகலோசை வெளிவந்துகொண்டே இருந்தது. தனது கைப்பையில் சிறு தலையணை ஒன்றைக் கொண்டுவந்திருந்தார். ஆனால் அது மட்டும் போதுமானதாக இல்லை. நான் விமானப்பணிப்பெண்ணிடம் பேசி மெதுவான போர்வையை வாங்கித் தந்தேன். இரண்டையும் முதுகுப்புறமாக வைத்து வலியைச் சற்றே குறைக்க முயன்றார். ஆனால் அதற்கெல்லாம் பலன் இருந்தது போல் தெரியவில்லை.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக முதுகுவலிப் பிரச்சனைகொண்டவன். இரு சக்கர வாகனப் பயணத்தை கைவிட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. தொலைதூர சாலைப்பயணத்தை மிகக்குறைத்துக் கொண்டேன். புகைவண்டிப் பயணம் மட்டுமே. முதுகுதண்டு உமிழ்நீரைப்போல வலியை விடாது சுரக்குங்தன்மை கொண்டது. தோழர் யெச்சூரியின் அந்த முனகல் ஓசை எனது உடம்புக்குள் வலியாகவே பரவிக் கொண்டிருந்தது. முழுப்பயணத்தையும் நரகவேதனையை அந்த மனிதர் அனுபவித்துக் கொண்டிருந்தார். எதுவும் செய்ய முடியாமல் அருகில் இருந்தேன் நான்.

எனது எண்ணம் முழுக்க விமானம் ஓடுபாதையில் இறங்கும் பொழுது ஏற்படும் அதிர்வால் உருவாகும் வலியை எப்படி பொருத்துக்கொள்ளப்போகிறார் என்பதைப் பற்றியே இருந்தது. இதை எழுதும்போதும் கண்களில் நீர்பெருகுகிறது.

நம்மை வசீகரித்த, நம்மை ஆட்கொண்ட தலைவர்களின் கண்களில் நீர்பெருகுவதைப் பார்க்கக் கிடைக்காதவனே பாக்கியவான். நான் அந்தப் பாக்கியமற்றவன்.

டில்லி விமானநிலையதில் இறங்கினோம். அவரது உடமைகளை அவரின் வாகனம் வரை கொண்டுசென்று வைத்து, அவரை ஏற்றி அனுப்பிவைத்தேன்.

உடன் வந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சொன்னார், “இது போன்ற உதவிகளை இடதுசாரிகள் செய்யமாட்டீர்கள், உங்கள் தலைவர்கள் செய்யவும் அனுமதிக்க மாட்டார்களே? இப்பொழுது எப்படி....?” என்றார். நான் தோழர் யெச்சூரியின் உடல்நிலையைப் பற்றிச் சொன்னேன். அவருக்கு அருகில் இருந்த தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் சொன்னார் “இந்தத் தியாகந்தான் தன்னலமற்ற தலைவர்களாக கம்யூனிஸ்டுகளை என்றைக்கும் வணங்க வைக்கிறது”.

நான் எனது வாகனத்தில் ஏறியவுடன், முதலில் தொலைபேசியில் அழைத்தது மாநிலச்செயலாளர் தோழர் கே. பாலகிருஷ்ணன் அவர்களை. “இவ்வளவு மோசமான முதுகுவலியோடு இருக்கும் தோழரை, கோவை- திருப்பூர்- சேலம் - சென்னை என்று ஏன் பயணப்பட வைக்க வேண்டும்” என்று எனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினேன்.

15 நாள்கள் கூட ஆகவில்லை. திண்டுக்கல் தொகுதி பிரச்சாரத்துக்கு மீண்டும் தோழர் யெச்சூரி வந்தார். முதுகுத்தண்டு வலி 15 நாள்களில் சரியாகும் ஒன்றன்று. இன்னும் சொல்லப்போனால் முதுகில் போடப்பட்ட கட்டினைக்கூட பிரித்திருக்க மாட்டார்கள். ஆனால் அதற்குள் நெடும்பயணம், வலி அந்த மனிதரை என்ன பாடுபடுத்தும் என்பதை நினைத்து உள்ளுக்குள் பதட்டத்தில் இருந்தேன்.

இம்முறை அவருக்கு உதவியாக அவரது மகன் வந்திருக்கிறார் என்று தோழர்கள் சொன்னார்கள். மனதுக்கு சற்று ஆறுதலாக இருந்தது. அதே நேரத்தில் வலியை அவர் எவ்வளவு உணர்ந்துகொண்டிருக்கிறார் என்பதும் புரிந்தது.

ஆனால் இன்று காலை வந்த செய்தி நிலைகுலைய வைத்துவிட்டது. டில்லியில் கொரனோ - சிக்கிச்சையில் இருந்த அவரது மூத்த மகன் ஆசிஷ் இறந்துவிட்டார் என்று.
என்ன சொல்வது, என்ன எழுதுவதென்று தெரியவில்லை.

தன் மகனுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு நன்றி சொல்லிப்பதிவிட்டிருக்கிறார் தோழர் யெச்சூரி.
அவரின் கைகளை இறுகப் பற்றிக்கொள்கிறேன்.

முதுகிலும் இதயத்திலும் ஆரா ரணம் இருந்தாலும் கடந்து பயணிப்பீர்கள் தோழர்.
உங்களிடம் நாங்கள் கற்றது அதனைத்தான்.

அன்பார்ந்த தோழர் சீதாராம் யெச்சூரி, உங்களுக்கு வார்த்தைகளால் ஆறுதல் சொல்ல இயலாது. உங்களிடம் சொல்ல ஒன்றுதான் உள்ளது.

 யாருக்காக உங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டுள்ளீர்களோ, அந்த உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த நாங்கள் உங்களோடு கரம் கோர்த்து உங்கள் துயரத்தை எங்கள் வீட்டு துயரமாக உங்கள் சோகத்தை பகிர்ந்து கொள்வோம், மகனாக, மகளாக, சகோதரனாக, சகோதரியாக, மிக முக்கியமாக தோழராக. . . .